சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 74


க்‌ஷயின் சந்தேகப்பார்வையை மைத்ரேயன் பார்க்கவில்லை. அவன் அமைதியாக தூரத்தில் தெரிந்த பனிபடர்ந்த மலைமுகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் என்ன பார்க்கிறான், கீழே ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகள் எல்லாம் அது போன்றதொரு சூழ்நிலையில் இயல்பாக ஒருவன் மனதில் எழ வேண்டியவை. அவை எதுவும் மைத்ரேயன் மனதில் எழுந்ததாகத் தெரியவில்லை.

அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். சம்யே மடாலயத்தில் உன்னைத் தேடி வந்தவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்...

அந்தத் தகவல் மைத்ரேயனைத் திடுக்கிட வைக்கவில்லை. எங்கேயோ மழை பெய்கிறது என்று அக்‌ஷய் சொல்லி இருந்தால் எப்படிப் பார்த்திருப்பானோ அப்படித்தான் பார்த்தான்.

அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “ஆனால் இந்தத் தடவை உன்னைத் தேடுவது போல தெரியவில்லை. ஏதோ குகையைத் தேடுவது போல் இருக்கிறது.. நான் எனக்குத் தெரிந்ததாய் அப்போது சொன்னேனே அந்தக் குகையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது....

மைத்ரேயன் முகத்தில் சலனமேயில்லை.  ஒரு பெருமூச்சு விட்ட அக்‌ஷய் மறுபடி அந்த பைனாகுலர் மூலம் வாங் சாவொ கோஷ்டியைக் கவனிக்க ஆரம்பித்தான். அவர்கள் மும்முரமாக சந்தேகப்படும் இடங்களை எல்லாம் சோதித்துப் பார்த்திக் கொண்டிருந்தார்கள்.

அக்‌ஷய்க்கு ஒரு இடத்தை ஒரு முறை பார்த்தால், அதுவும் முக்கிய அனுபவம் ஏற்பட்ட இடமாக அது இருந்தால் அந்த இடத்தின் அமைப்பும், அதன் சூழ்நிலைகளும் அவன் மனதில் நன்றாகவே பதிந்து விடும். அந்த வகையில் அவன் குகையைப் பார்த்த இடம் வாங் சாவொ குழு சோதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் ஐநூறு அடிகள் மேலே இருந்தது. இப்போதும் அந்த இடத்தில் குகை எதுவும் தெரியா விட்டாலும் அந்த இடம் எது என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.

அவர்கள் அந்த இடத்தைச் சோதிக்கும் போது அவர்களுக்கு குகை அகப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள்ளே எழுந்தது. ஆனால் லேசாக இருட்டிக் கொண்டு வரவே என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் மலை மேல் இருந்து நீலக்கரடிகளின் வரவு நிகழ்ந்து விடுவோமா என்று பயந்தான். அவற்றுக்காக சில தற்காப்பு சாதனங்கள் முன்பே கொண்டு வந்திருந்தான் என்றாலும் வாங் சாவொவும் அவன் குழுவும் அந்த மலையில் இருக்கும் வரை, அவற்றை உபயோகப்படுத்துகிற சூழ்நிலை இல்லை. அக்‌ஷய் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

நல்ல வேளையாக வாங் சாவொவும் நீலக்கரடிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டி முன்பே தயாராக வந்திருந்தான். அதே போல் இரவு நேர சோதனைக்காகவும் தயாராகவே வந்திருந்தான். இருட்ட ஆரம்பித்தவுடன் தாங்கள் கொண்டு வந்திருந்த சில ஒளிவிளக்குகளை அவர்கள் பிரகாசிக்க விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஒரு பெரிய மூட்டையுடன் மேலே வர ஆரம்பித்தான். அக்‌ஷய் மைத்ரேயனைத் தொட்டு ஜாக்கிரதை என்று சைகை செய்ய மைத்ரேயன் அக்‌ஷயை ஓட்டி ஒளிந்து நின்று கொண்டான். ஆடுகள் அதையும் அவன் விளையாட்டாய் எண்ணி அவனை ஓட்டிக் கொண்டன.

அக்‌ஷயும் மைத்ரேயனும் இருக்கும் இடத்தையும் தாண்டி முன்னேறி சுமார் இருபது அடிகள் போன அந்த நபர் மூட்டையை அவிழ்த்து நன்றாக உலர்ந்த  மரக்கட்டைகளைக் கொட்டினான். அவற்றை நான்கு பிரிவுகளாய் பிரித்து சில அடிகள் இடைவெளியில் வைத்து அவற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்தான். பெரும் நெருப்பு ஜுவாலைகள் எரிய ஆரம்பித்தன. நீலக்கரடிகள் நெருப்பு இருக்கும் இடங்களுக்கு அருகில் வருவதில்லை.... அக்‌ஷய் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மறுபடி கீழே இறங்கிப் போய் அந்த ஆள் தன் சகாக்களுடன் சேர்ந்து கொள்ள சோதனைகள் தொடர்ந்தன. அக்‌ஷய் குகை பார்த்த இடத்திற்கு அவர்கள் வந்து சேர மேலும் ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது.  அவர்கள் நெருங்க நெருங்க அக்‌ஷய் ஆவல் அதிகரித்தது. என்ன ஆகும்? அவர்கள் குகையைக் கண்டுபிடிப்பார்களா, மாட்டார்களா?

ஒருவழியாக அந்த இடத்தை அவர்கள் நெருங்கினார்கள். அந்த இடத்திலும் குகை இருந்த சரியான பகுதி எது? அக்‌ஷய் தன் முந்தைய அனுபவத்தை மனத்திரையில் மறுபடி ஓட விட்டான். அந்தக்குகை தெரிந்த இடத்திற்கு வலதுபுறம் சற்றே பழுப்பேறிய ஒரு பாறை இருந்ததும் இடது புறம் வித்தியாசமாய் வளைந்து போய் இருந்த மரம் இருந்ததும் மனத்திரையில் தெரிந்தது. இப்போது ஆர்வத்துடன் அந்தப் பாறையையும், வித்தியாசமாய் வளைந்த மரத்தையும் பார்த்தான். அவை அப்படியே தான் இருந்தன. ஆனால் இடையே வெற்றிடம் தான் தெரிந்தது.

வாங் சாவொ தான் அந்த இடத்தைச் சோதித்தவன். பழுப்பேறிய பாறையைத் தட்டிப் பார்த்தான். அதன் இடுக்கில் ஏதாவது துளை உள்ளதா என்று விளக்கின் ஒளியில் பரிசோதித்தான். வித்தியாசமாய் வளைந்த மரத்தின் வேரைக் கூட கையிலிருந்த இருப்புக்கழியால் தட்டினான். ஆனால் வெற்றிடத்தைத் தட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.... அவன் நகர்ந்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் அந்த மலையில் அவர்கள் இருந்தார்கள். அக்‌ஷய் மறைந்திருந்த பகுதி வரை கிட்டத்தட்ட வந்து விட்டார்கள்.  அந்த நேரத்தில் வாங் சாவொ தன் மனதில் தோல்வியை ஒப்புக் கொண்டான். அவன் முன்பே சேகரித்த தகவல்களின் படியும், கீழே கிராமத்துக் கிழவர் சொன்ன தகவலின் படியும் அந்த ரகசியக்குகை இந்த இடத்திற்கு முன்பாகவே அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இது வரை கிடைக்கவில்லை என்றால் இனி மேல் கிடைக்க வாய்ப்பில்லை.

வாங் சாவொ வறண்ட குரலில் சொன்னான். “போதும். போகலாம்

முதலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் உள்ளூர் போலீஸ்காரன் தான். அவன் தங்களில் ஓரிருவர் அல்லது அனைவரும் ஏதாவது விஷப்பாம்பு கடித்து சாகலாம் என்றும் அல்லது வேறெதாவது விபத்துக்குள்ளாகலாம் என்றும் எதிர்பார்த்திருந்தான். சைத்தான் மலை என்று சும்மாவா சொன்னார்கள். அதுவும் இவர்கள் சைத்தானின் குகைக் கோயிலையே தேடிப் போகிறார்கள் என்றால் சைத்தான் சும்மா இருக்குமா? இப்படியெல்லாம் பயந்து போனவன் ஓட்டமும் நடையுமாக அவர்களுக்கும் முன்பாக கீழிறங்க ஆரம்பித்தான்.      


வாங் சாவொவிடம் பேசி முடித்த பின் லீ க்யாங் அபூர்வமான களைப்பை உணர்ந்தான். அறிவுக்கும் எட்டாத சக்திகளிடம் எப்படி மோதுவது என்பது அவனுக்குப் புரியவில்லை. வாங் சாவொ போகாமல் வேறு ஆட்கள் அந்த மலைக்குப் போயிருந்தால் கூட, தேடிய விதம் சரியில்லை என்று அவன் எண்ணி இருப்பான்.  இப்போது அப்படி நினைக்கவும் வழியில்லை.  “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன்என்று உளவுத்துறையின் முந்தைய தலைவரிடம் சூளுரைத்தது நினைவுக்கு வந்தது. இடம் மாற வழி இல்லாத அந்தக் குகைக்கோயிலையே கண்டுபிடிக்க முடியவில்லை, பின் எப்படி எங்கிருக்கிறான் என்றே தெரியாத, எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிந்த என் அவதாரத்தைக் கண்டுபிடிப்பாய் என்று சைத்தான் சிரிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. புத்தரின் அவதாரமும், சைத்தானின் அவதாரமும் ஒரே சமயத்தில் மறைவாய் இருப்பதும், மறைந்திருந்தே இயங்குவதும் பெரிய சவாலாகவே அவனுக்கு இருந்தன.

ஆனால் அவன் கடக்க முடியாத தடைகள் உலகத்தில் இல்லை. எதுவும் தெரியாதென்று அவன் இது வரை வெட்கப்பட்டதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமாய் அவன் உணர்ந்ததை இது வரையில் எப்பாடு பட்டாவது அவன் தெரிந்து கொள்ளாமல் விட்டதில்லை. அது அவன் வாழ்வின் இறுதி மூச்சு உள்ள வரை நடக்கும். மனதில் உறுதியோடு அவன் நிமிர்ந்து உட்கார்ந்த போது அவன் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். “ஹலோ

“சார். ஆசான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்”.  இந்தியாவில் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆள் பரபரப்பாய் சொன்னான்.

லீ க்யாங் புன்னகைத்தான். சின்னதாய் அந்தச் செய்தி அப்போதைய மனநிலைக்கு ஆறுதல் தந்தது. “எங்கே இருக்கிறார்?

“கர்னாடகாவில் குடகு மலையில் இருக்கும் ஒரு புத்தமடாலயத்தில் இருக்கிறார்.

“நல்லது. அவர் உங்கள் பார்வையில் இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவரைச் சாதாரணமாக நினைத்து குறைவான ஆட்களை வைத்துக் கண்காணிக்காதே. தேவை என்று நினைப்பதற்கு இரண்டு மடங்கு ஆட்களை வைத்துக் கண்காணி. அவரை யார் சந்திக்கிறார்கள், யாரிடம் அவர் பேசுகிறார், என்ன பேசுகிறார், என்ன செய்கிறார், எங்கே போகிறார் என்கிற எல்லாத் தகவல்களும் நமக்கு வேண்டும். சொல்வது நினைவிருக்கட்டும். கிழவர் தானே என்று அலட்சியமாய் இருந்து விடாதே. அதிகமான ஆட்களை வைத்துக் கண்காணி

கட்டளையிட்டு விட்டு லீ க்யாங் யோசிக்க ஆரம்பித்தான். மைத்ரேயனுடன் அந்தப் பாதுகாவலன் திபெத்தைக் கடக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு அதிசயம் நடந்தாலும் பின் அவன் அந்தச் சிறுவனை ஆசானிடம் தான் ஒப்படைப்பான். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆசான் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் மைத்ரேயனைப் பிடிப்பது கஷடமான காரியம் அல்ல...  


திர் வீட்டை சலிப்பில்லாமல் கண்காணித்துக் கொண்டிருந்த சேகரின் அலைபேசி பாடியது. சேகர் அலைபேசியில் தெரிந்த எண்ணைப் பார்த்தான். பரிச்சயம் இல்லாத எண். எச்சரிக்கையுடன் எடுத்துப் பேசினான். “ஹலோ

“எஸ். நான் தான் பேசுகிறேன்பெயர் தெரிவிக்கா விட்டாலும் குரல் பேசுவது யார் என்று சொன்னது.

சேகர் நட்புடன் சொன்னான். “சொல்லுங்கள்

“எங்கிருக்கிறாய்?

“கோயமுத்தூரில்

“வேலையாகவா...

“இல்லை. இது என் தனிப்பட்ட வேலை. என்ன விஷயம் சொல்லுங்கள்?

“கர்னாடகாவில் மைசூர் அருகே ஒரு வேலை இருக்கிறது. வருகிறாயா என்று கேட்கத்தான் போன் செய்தேன்.....

“என்ன வேலை....

“ஒரு திபெத்தியக்கிழவரைக் கண்காணிக்கும் வேலை... பணம் நிறைய கிடைக்கும்....


“எப்போது வரை வேலை இருக்கும்?

“தெரியவில்லை.... குறைந்த பட்சம் இருபது நாளாவது இருக்கும் என்று தலைவர் சொல்கிறார்

“இங்கே என் வேலை ஒரு வாரத்திற்குள் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்..... அதன் பிறகு வரவா?

“சரி. ஒரு வாரம் கழித்து நானே உன்னைக் கூப்பிடுகிறேன்

அலைபேசியைக் கீழே வைத்த போது சேகருக்கு எதிர் வீட்டுக்கும், கர்னாடகாவில் இருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சத்தியமாய் தெரியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்



4 comments:

  1. ரொம்ப நல்லா போகுது சார். வருணின் அப்பாவை இப்படி வந்து கோர்த்து விடுவீங்கன்னு நான் நினைக்கல. நல்ல சுவாரசியம்.

    ReplyDelete
  2. அற்புதமான எபிசோட் இது.... லீகியாங், சேகர் செல்போன்களைப் போலவே எங்கள் இதயமும் ஏனோ இசைபாடுகிறது...

    ReplyDelete
  3. Very much gripping and interesting.

    ReplyDelete
  4. Good going sir. But sometimes I feel like, you are degrading Akshay like a normal human being unlike as in Amanushyan.

    ReplyDelete