சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 19, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 73


புதிய ஆள் அந்தக் கிராமத்திற்கு இந்த இரண்டு நாட்களில் வந்திருந்தான் என்கிற செய்தி வாங் சாவொவை உஷார்ப்படுத்தியது. ஆட்டிடையன் என்ற கூடுதல் அடையாளம் அவனது எச்சரிக்கை உணர்வைக் குறைக்கவில்லை. அந்தப் பாதுகாவலன் எந்த வேடத்தையும் அனாயாசமாகப் போட முடிந்தவன். அதனால் கிழவரைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டான். “எப்போது?

“இன்று தான். சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னால். ஆடு வாங்க வந்திருந்தான்

“எங்கிருந்து வந்தவனாம்?

கிழவர் அக்‌ஷய் சொல்லி இருந்த கிராமத்தின் பெயரைச் சொன்னார்.

வாங் சாவொவின் சந்தேகம் குறையவில்லை. “ஆடு நிஜமாகவே வாங்கினானா? இல்லை விலை விசாரித்து மட்டும் போனானா?

இரண்டு ஆடுகள் வாங்கினான்

“அவனுடன் சிறுவன் யாராவது இருந்தானா?

“இல்லை ஐயா. அவன் தனியாகத் தான் வந்திருந்தான்.

வாங் சாவொவின் சந்தேகம் தீர்ந்தது. அந்த ஆளுடன் சிறுவன் இல்லாததும், அந்த ஆள் உண்மையாகவே ஆடு வாங்கிப் போனதும், வந்தவன் பாதுகாவலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தியது.  அவர்களே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழ்நிலையில் ஆடுகளையும் வாங்கிக் கொண்டு போவார்களா என்ன!

வாங் சாவொ கேட்டான். அந்தக் குகைக்கோயில், மலையில் எந்தப்பகுதியில் பார்த்ததாக உங்கள் மகன் சொல்லிக் கொண்டிருந்தார்?

கிழவர் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்பது போல பார்த்தார். வாங் சாவொ எரிச்சலுடன் விளக்கினான். “மலையில் அந்தக் குகைக்கோயிலை உச்சியில் பார்த்தாரா? மத்தியில் பார்த்தாரா? கால்வாசிப் பகுதியிலேயே பார்த்தாரா?

“கால்வாசிப்பகுதியிலேயே தான் பார்த்ததாய் சொல்லிக் கொண்டிருந்தான்....  சிறு வயதில் நான் எத்தனையோ முறை மலை ஏறி இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை....என்றவர் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு குரலடைக்கச் சொன்னார். “சாகும் காலம் நெருங்கி விட்டதால் மட்டுமே அவன் கண்ணில் அந்தக் குகைக் கோயில் பட்டதோ என்னவோ!

வாங் சாவொவுக்கு அந்த பீஜிங் இளைஞன் நினைவுக்கு வந்தான். அவன் கண்ணிலும் அந்த சைத்தான் கோயில் பட்டு அதுவே அவனுடைய அகால மரணத்திற்குக் காரணமானதும் நினைவுக்கு வந்தது....

வாங் சாவொ கேட்டான். உண்மையாகவே உங்கள் மகன் அந்த ரகசியக் கும்பலால் கொல்லப்பட்டிருந்தார் என்றால் அதற்குப் பழி வாங்க வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா?அப்படி இருந்தால் இந்த ஆளை எதாவது விதத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணமாய் இருந்தது.

கிழவர் முகம் சோகத்தில் ஆழ்ந்தாலும் கூடவே வறண்ட சிரிப்பொன்று அவரிடம் எழுந்தது. “கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாம் என்னை விட்டுப் போய் பல காலம் ஆகி விட்டது ஐயா. விதியுடன் போராட திராணி இல்லை.... இருக்கும் பிள்ளைகளாவது நல்லபடியாக இருந்தால் போதும் என்று மட்டுமே இறைவனிடமே வேண்டுகிறேன்.....

வாங் சாவொ கிளம்பினான். அப்படி ஒரு குகைக்கோயில் இருந்தால்  நாங்கள் அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டோம்....என்று அவன் கிழவரிடம் கடைசியாகத் தெரிவித்த போது கிழவர் ‘அட பைத்தியக்காராஎன்பது போல் பார்த்தார். வாங் சாவொ அதை ரசிக்கவில்லை. அவன் வேகமாக நகர்ந்தான்.

அவன் ஜீப் அருகே வந்த போது உள்ளூர் போலீஸ்காரன் அவன் முகபாவனையைப் படிக்க முயன்றான். கண்டிப்பாக மலையேறச் சொல்வானா என்ற பயம் அவனுக்கு இருந்தது. நீலக்கரடிகள் அதிகம் இருக்கும் அந்த சைத்தான் மலையில் ஏற அவனுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் வாங் சாவொவின் முகம் கல்லைப் போல இருந்தது.

“அடுத்தது என்ன சார்?என்று மெல்ல போலீஸ்காரன் கேட்டான்.

“மலை ஏறலாம். அந்த ரகசிய குகை இருப்பது உண்மை என்றால் அதைக் கண்டு பிடிக்காமல் இன்று திரும்பப் போவதில்லை.....

உள்ளூர் போலீஸ்காரன் மனம் நொந்தான். “நீலக்கரடிகள் அதிகம் இருக்கிற மலை சார் இது....என்று மெல்ல இழுத்தான்.

வாங் சாவொ பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னான். “மலையின் மேல் பகுதியில் தான் நீலக்கரடிகள் பகலில் இருக்கின்றன. நாம் அந்த அளவுக்குப் போகப் போவதில்லை. அப்படி ஒன்றிரண்டு நீலக்கரடிகள் கீழே வந்தால் நம் ஆறு பேரிடமும் துப்பாக்கி இருக்கிறது. இதில் பயப்பட என்ன இருக்கிறது?

உள்ளூர் போலீஸ்காரன் தலையை அசைத்தான். அவன் அந்த மலையைப் பற்றி எத்தனையோ வதந்திகள் கேள்விப்பட்டிருக்கிறான்.  நீலக்கரடிகள் பற்றி வெளிப்படையாகச் சொன்னது போல அதை எல்லாம் வாங் சாவொவிடம் சொல்ல முடியாது. சீனாவில் இருந்து வந்த வாங் சாவொவுக்கு திபெத்தின் ஆபத்தான சில விஷயங்களைச் சொன்னாலும் புரியாது. கூட இருக்கும் மற்ற நான்கு ஆட்களும் உள்ளூர் ஆட்கள் அல்ல. அவர்களுக்கும் புரியாது. விதி வலிது, நடக்கிற படி நடக்கட்டும் என்று அவன் நினைத்தான்.

அவர்கள் ஜீப்பில் மலையடிவாரத்திற்குக் கிளம்பினார்கள்.


மாராவின் போன் இசைத்தது. உடனடியாகப் பேசினான். “ஹலோ

“நான் போவதற்கு முன்பே அங்கே வாங் சாவொ தன் ஆட்களுடன் இருக்கிறான்.....

மாரா ஆச்சரியப்பட்டான். மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் அங்கிருப்பதை வாங் சாவொவும் கண்டுபிடித்து விட்டானா?...

வாங் சாவொ அங்கே மைத்ரேயனைத் தேடி வரவில்லை. அந்த மலையில் இருக்கும் ரகசியக் குகையைக் கண்டு பிடிக்க வந்திருக்கிறான்.....

மாரா சாதாரணமாக எதற்கும் அசந்து போகிறவன் அல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அவன் அசந்து போனான். லீ க்யாங்கின் வேகம் அவனைப் பிரமிக்க வைத்தது. எத்தனை வேகமாக நெருங்கி விட்டான்....

மெல்ல மாரா கேட்டான். “அங்கே நடப்பதை ஒன்று விடாமல் சொல்...

“வாங் சாவொ அந்தக் கிராமத்துக் கிழவன் ஒருவனிடம் தனியாக விசாரித்து விட்டு இப்போது அந்த மலையில் ஏறப் போய்க் கொண்டிருக்கிறான். அவனுடன் உள்ளூர் போலீஸ்காரனும், வேறு நான்கு ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் அதிரடிப்படை ஆட்கள் போல் தெரிகிறார்கள். மலைஏற்றத்திலும் நல்ல தேர்ச்சி உடையவர்கள் என்பது பார்த்தாலே தெரிகிறது..... “

“உன்னை அவர்கள் யாராவது பார்த்தார்களா?

இல்லை, நான் அவர்கள் கண்ணில் படவில்லை....

“நல்லது. உடனடியாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடு. மலைக்குப் போக வேண்டாம். அந்தக் கிராம எல்லையில் மறைவாய் இரு. வாங் சாவொவும் அவன் ஆட்களும் எப்போது அங்கிருந்து போகிறார்கள் என்பதைத் தெரிவி... 

பேசி முடித்து மாரா யோசித்தான். அந்த மலையும், குகைக் கோயிலும் லீ க்யாங் கவனத்துக்கு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் கூட மைத்ரேயன் இருக்கும் இடத்திற்கு வாங் சாவொ போய்க் கொண்டிருப்பது ஒரு நல்ல செய்தியாகத் தான் தோன்றியது. நீலக்கரடிகள் ஒரு பக்கம், வாங் சாவொ இன்னொரு பக்கம் நெருங்கும் போது அந்த மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் என்ன செய்வார்கள் என்று யோசிக்கையில் சின்னதாய் புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்தது.


வாங் சாவொவின் வரவை அக்‌ஷய் விரைவிலேயே உணர்ந்தான். வந்திருப்பது வாங் சாவொவும், அவன் ஆட்களும் தான் என்பது ஆரம்பத்தில் அக்‌ஷய்க்குத் தெரியவில்லை. மலையில் தங்களைத் தவிர வேறு ஆட்கள் பிரவேசித்து விட்டார்கள் என்பதை சிறு சிறு சத்தங்களால் அவன் அறிந்தான். அந்த சமயத்தில் மைத்ரேயன் ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்‌ஷய் உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கச் சொல்லி அவனை எச்சரித்தான். அந்தக் கணமே மைத்ரேயன் விளையாட்டை நிறுத்தி விட்டு அவன் அருகே வந்து நின்றான். அவன் பின்னாலேயே அந்த ஆட்டுக்குட்டிகளும் வந்தன.

விளையாட்டை அப்படி உடனடியாக நிறுத்த முடிந்த சிறுவர்களை அக்‌ஷய் அது வரை கண்டதில்லை. கௌதம் விளையாட்டை நிறுத்த குறைந்த பட்சம் மூன்று தடவையாவது சொல்ல வேண்டி இருக்கும்.... அக்‌ஷய் தன் பள்ளியிலும் எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்திருக்கிறான். அவர்களும் அப்படித்தான். சொன்ன கணமே ஒன்றை விட்டு விலகி வருவது பெரியவர்களுக்கே கூட சுலபமல்ல. வியப்புடன் மைத்ரேயனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடனேயே நெருங்கி வருமாறு சைகையால் தெரிவித்து விட்டு அக்‌ஷய் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கி வர ஆரம்பித்தான். மைத்ரேயனும் பின்தொடர்ந்தான். ஆடுகளும் மைத்ரேயனுடனேயே சத்தமில்லாமல் வந்தன.

சத்தம் வந்த இடத்தைப் பார்க்கும் வசதியான ஒரு பாறைக்குப் பின்னால் நின்று கொண்ட அக்‌ஷய் தன் தோல்பையில் இருந்து ஒரு உயர்தர பைனாகுலரை எடுத்துக் கொண்டு பாறை இடுக்கில் இருந்து பார்த்தான். வாங் சாவொவைப் பார்த்தவுடன் அவன் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. இவன் எப்படி அறிந்தான் என்ற திகைப்பு அவனுக்கு ஏற்பட்டது.   

ஆனால் வாங் சாவொவின் நடவடிக்கையை மேலே இருந்து கவனிக்க கவனிக்க அவனது திகைப்பு வேறு மாதிரியாக மாறியது. வாங் சாவொ அவர்களைத் தேடி வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏன் ஆட்களையே தேடுவதாகத் தெரியவில்லை. அங்கங்கே பாறைகளில் தட்டினார்கள். சில செடிகொடிகளை வெட்டினார்கள். அடர்த்தியாக தாவரங்கள் படர்ந்திருந்த பகுதிகளிலும் மறைவாய் இருக்கும் பகுதிகளிலும் மிகவும் கவனமாக அவர்கள் ஆராய்ந்தார்கள். என்ன தேடுகிறார்கள்? மைத்ரேயனைத் தேடுவதை விட்டு விட்டு வேறெதையோ தேடுகிறார்கள் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கேள்விப்பட்ட வரையில் லீ க்யாங்கின் கவனம் அப்படி எல்லாம் திசை திரும்பாதே என்று யோசித்தபடியே அக்‌ஷய் அவர்களைக் கண்காணித்தான்.

ஒரு இடத்தில் அடர்த்தியாக இருந்த தாவரங்களை வாங் சாவொவின் ஆட்கள் வெட்டிய போது ஒரு பள்ளம் தெரிய அவர்கள் சற்று தள்ளி வேறு பக்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்த வாங் சாவொவை அழைத்தார்கள். “சார் இங்கே பாருங்கள்

ஆர்வத்துடன் விரைந்து வந்த வாங் சாவொ அந்தப் பள்ளத்தை சந்தேகத்துடன் பார்த்து விட்டு “எதற்கும் இங்கே கொஞ்சம் தோண்டிப் பாருங்கள். குகையை மண் போட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்தாலும் இருக்கலாம்என்று சொல்ல அவர்கள் தோண்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திலேயே குகை அங்கே இல்லை என்பது தெரிந்து வேறு பக்கம் அவர்கள் நகர்ந்தார்கள்.

அக்‌ஷய்க்கு அவர்கள் மெல்ல பேசிக் கொண்டது காதில் விழவில்லை என்றாலும் கூட அவர்கள் தேடிய விதத்தைப் பார்க்கையில் அவர்கள் தேடுவது அவன் பார்வையில் ஒரு முறை பட்டு மறைந்த குகையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது. அப்படி இருக்குமானால் பார்த்த காட்சியில் பிழை இல்லையா?....

பைனாகுலரை கண்களிலிருந்து எடுத்து விட்டு சந்தேகத்தோடு அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 
5 comments:

 1. செம... செம.... செம....
  அக்ஷயைப் போலவே எங்கள் மனமும்... திக்... திக்.... திக்....

  ReplyDelete
 2. சுந்தர்November 19, 2015 at 6:28 PM

  வியாழன் மாலை ஆனால் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இந்த தொடர் நாவலை படிக்கும் பத்து நிமிடங்களும் இங்கே நாங்கள் இல்லை. எல்லாவற்றையும் மறந்து திபெத்தில் தான் இருக்கிறோம். அருமை கணேஷன்ஜீ.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள், ஒவ்வொரு வாரமும் சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது.

  ReplyDelete
 4. Fantastic. As some one also said we could not guess next what. Real thriller.

  ReplyDelete
 5. கதையின் கோர்வை அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. விறுவிறுப்பு, ஆன்மிகம், தத்துவம், உண்மை, கற்பனை அத்தனையும் கலந்த அழகான கதை.....

  ReplyDelete