மகாசக்தி மனிதர்கள்-35
யோகானந்தருக்கு படிப்பில் சிறிதும் ஆர்வம்
இருக்கவில்லை. ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஒரு பட்டப்படிப்பு அவசியம் என்று
வலியுறுத்தி படிப்பை யோகானந்தர் நிறுத்தி விடாமல் பார்த்துக் கொண்டார். கல்லூரிப்
படிப்பு ஆன்மிகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் அப்படிப்பு வேம்பாக
யோகானந்தருக்கு கசந்த போதிலும் குருவின் வற்புறுத்தலுக்காகக் கல்லூரிக்குப் போய்
வந்தார்.
யோகானந்தர் அடிக்கடி குரு
தங்குமிடத்திற்குப் போய் ஒருசில நாட்கள் தங்கி சேவை செய்து விட்டு வருவார். ஒரு முறை
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் ஆசிரமத்தில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும்
வந்திருந்தார்கள். அதிகாலை ஆரம்பித்து இரவு வரை பஜனை, ஆன்மிகச் சொற்பொழிவு,
சங்கீதம் முதலான நிகழ்ச்சிகள் இருந்தன. அதில் எல்லோரும் உற்சாகமாகக் கலந்து
கொண்டார்கள்.
அத்தனை பேருக்கும் சமையல், பரிமாறுதல்,
உபசரிப்பு வேலைகள் எல்லாம் யோகானந்தருக்கும்,
மற்ற சீடர்களுக்கும் இருந்தன. சமையலும், பாத்திரங்கள் கழுவுவதுமாகவே முழு நாள்
வேலை இருந்ததால் யோகானந்தரால் அந்த நிகழ்ச்சிகளில் கூடக் கலந்து கொள்ள
முடியவில்லை. ஆனாலும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையை யோகானந்தர்
மகிழ்ச்சியாகவே செய்தார்.
வெளியூரில் இருந்து வந்தவர்கள் எல்லாம்
தங்கள் ஊருக்கு பஸ்களிலும் ரயில்களிலும் செல்லக் கிளம்பிய பிறகு களைத்துப் போய்
யோகானந்தர் படுக்கச் சென்றார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் படுத்து விட்டார். ஆனால்
சில நிமிடங்களிலேயே அவர் எழுந்து விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட யோகானந்தர்
“ஏன் எழுந்து விட்டீர்கள் குருவே?” என்று கேட்டார்.
”இன்று வந்த நண்பர்களில் சிலர் ரயிலைத் தவற விட்டு
விட்டார்கள். அவர்கள் பசியோடு வருவார்கள். அவர்களுக்காக சமைக்க வேண்டும். அதனால்
தான் எழுந்தேன்” என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
சொன்னார். யோகானந்தருக்கு அந்த நண்பர்கள் ரயிலைத் தவற விட்டாலும் திரும்பவும் அந்த
நள்ளிரவு நேரத்தில் ஆசிரமத்திற்கு வருவார்கள் என்று தோன்றவில்லை. அதை வெளிப்படையாக
அவர் குருவிடம் சொன்னார்.
“அவர்கள் வருவார்கள். நீ இன்று நிறைய
வேலைகள் செய்து களைத்துப் போயிருக்கிறாய். அதனால் உறங்கு. நான் சமைக்கிறேன்” என்று சொல்லி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சமையலறைக்குச்
சென்றார். களைத்துப் படுத்திருந்த மற்ற சீடர்களையும் அவர் எழுப்ப விரும்பவில்லை.
என்னவொரு உயர்ந்த உள்ளம் பாருங்கள்!
தன் குரு வேலை செய்யும் போது படுத்திருக்க
மனம் வராமல் யோகானந்தரும் சமையலறைக்குச் சென்றார். இருவரும் சேர்ந்து எளிய உணவு
சமைத்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது போலவே அந்த அன்பர்கள் ரயிலைத் தவற
விட்டு சிறிது நேரத்தில் ஆசிரமத்திற்கே திரும்பி வந்தார்கள்.
அவர்களை வரவேற்க விரைந்த யோகானந்தரிடம்
அவர்கள் “தொந்திரவுக்கு மன்னியுங்கள் அன்பரே. ரயிலைத் தவற விட்டு விட்டோம். ரயில்
நேரம் பற்றி நாங்கள் குறித்துக் கொண்டது தவறாக இருந்திருக்கிறது” என்று சொன்னார்கள்.
“பரவாயில்லை
வாருங்கள். நீங்கள் பசியோடு வருவீர்கள் என்று நம் குருநாதர் உங்களுக்காக சமைத்தும்
வைத்திருக்கிறார். வாருங்கள். பசியாறுங்கள்” என்று
சொன்ன போது அந்த அன்பர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பசியோடு இருந்த அவர்கள்
குரு சமைத்த ருசியான உணவை உண்டு மகிழ்ந்தார்கள்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்
சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் கூடச் சேவை செய்யும் குருவின் அருகிலேயே
இருப்பதில் ஆர்வம் கொண்டிருந்த யோகானந்தருக்கு பரிட்சை நெருங்கும் போது தான் அது
குறித்த பயம் வந்தது.
பரிட்சைக்கு ஐந்தே நாட்கள் இருந்த போது அவர்
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் சென்று இந்த முறை பரிட்சை எழுதப் போவதில்லை என்று
தெரிவித்தார். ஏன் என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கேட்ட போது “நான் ஒன்றுமே
படிக்கவில்லை. இனி படிக்க ஐந்து நாட்கள் போதவே போதாது” என்று யோகானந்தர்
தெரிவித்தார்.
“நீ பரிட்சை
எழுதாவிட்டால் எனக்கும் சேர்த்து தான் கெட்ட பெயர் வந்து சேரும். உன் வீட்டார்
நான் தான் உன்னைப் படிக்க விடாமல் செய்து விட்டேன் என்று ஏசுவார்கள். அதனால்
கண்டிப்பாக பரிட்சை எழுது.” என்று ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரி சொன்னார்.
“எழுதி என்ன பயன்? நான் தான் ஒன்றும்
படிக்கவில்லையே. நான் எழுதுவதானால் எல்லா பரிட்சைகளிலும் உங்கள் அருமை பெருமைகளைப்
பற்றியும் உங்கள் உபதேசங்களைப் பற்றித் தான் எழுத வேண்டும்” என்றூ யோகானந்தர்
சொன்னார்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சிரித்துக் கொண்டே
“முடிந்த வரை படி. பரிட்சை முடிகிற வரை இங்கே வராதே. படிப்பில் கவனம் செலுத்து. நீ
சோம்பலால் படிக்காமல் இருந்து விடவில்லை. ஆன்மிக ஆர்வம் காரணமாகவே நீ படிக்க
முடியாமல் போயிருக்கிறது. அதனால் கவலைப்படாதே” என்று சொன்னார்.
யோகானந்தர்
சரியென்றார். ஒரு நிமிட மவுனத்திற்குப் பின் ”உன் வகுப்பில் மிக
நன்றாகப் படிக்கும் ரமேஷ் சந்திர தத்தின் உதவியை நாடு.” என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். ரமேஷ் சந்திர தத் அந்தக் கடைசி
நேரத்தில் போனால் உதவுவானா என்ற இயற்கையான சந்தேகம் வந்த போதும் சரியென்று சொல்லி
விட்டு யோகானந்தர் சென்றார்.
ரமேஷ் சந்திர தத் யோகானந்தரை வரவேற்றான்.
ஆனால் வருடம் முழுவதும் படிக்காமல் கடைசி ஐந்து நாட்களில் ஒரு சப்ஜெக்ட்
மட்டுமல்லாமல் அனைத்து சப்ஜெக்ட்களும் படிக்க உதவுவது என்பது அந்த மாணவனையும்
மலைக்கத் தான் வைத்தது. ஆனாலும் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் முக்கியமான கேள்விகளாகத்
தேர்ந்தெடுத்து யோகானந்தருக்கு முடிந்த வரை விளக்கினான்.
முதலிரண்டு சப்ஜெக்ட்களில் அவன்
தேர்ந்தெடுத்த முக்கியக் கேள்விகள் அந்தந்த பரிட்சைகளில் பாஸ் ஆகும் அளவு
வந்திருந்தன. யோகானந்தருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ரமேஷ் சந்திர தத் சொன்னதை
நினைவு வைத்துக் கொண்டிருந்ததை எழுதினார்.
ஆங்கில இலக்கியப் பரிட்சையில் அதே போல்
கேள்விகள் வந்திருந்த போதும் ஒரு பெரிய தவறை யோகானந்தர் செய்தார். அந்த
வினாத்தாளில் A அல்லது B,
C அல்லது D
கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இருந்தது. யோகானந்தர் அதைக் கவனிக்காமல்
ஏதோ இரண்டு எழுத வேண்டும் என்று எண்ணி A B இரண்டு வினாக்களையும் எழுதி விட்டு C
D இரண்டு வினாக்களையும் எழுதாமல் விட்டு விட்டார்.
அதை பரிட்சை முடிந்து வெளியே வந்த பிறகு தான் அவர் உணர்ந்தார்.
இந்தத் தவறால் அவருக்குப் பாஸாக குறைந்த பட்ச மதிப்பெண்களுக்கும் குறைவாகவே
கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தது. தன் குருவின் அருளால் தெரிந்த கேள்விகளே
வந்தும் கவனக்குறைவால் இப்படி தவறு இழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அவர்
குருவிடம் ஓடோடி வந்து நடந்ததைத் தெரிவித்தார்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “கவலைப்படாதே. நீ
இந்தப் பரிட்சையில் பாஸ் ஆவது உறுதி” என்று சொல்லி விட்டார்.
கடைசி பரிட்சையான
வங்காள மொழிப் பரிட்சையில் இரண்டு பெரிய கேள்விகளுக்குப் பக்கம் பக்கமாக பதில்
எழுத வேண்டும். எந்தக் கேள்வி கேட்பார்கள் என்று அனுமானிக்க முடியாத அளவு கேட்க
நிறைய விஷயங்கள் இருந்தன. ரமேஷ் சந்திர தத், விதயாசாகர் என்கிற வங்காள சமூகம்,
மற்று கல்வி சீர்திருத்தவாதி ஒருவரைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். மறு நாள்
பரிட்சையில் அவர் பற்றியே ஒரு கேள்வி இருந்தது. இரண்டாவது கேள்வி பொதுவானதாக
இருந்தது ”உன்னை மிகவும் கவர்ந்த ஒரு உயர்ந்த மனிதரின்
வாழ்க்கையைப் பற்றி எழுது”. முதல் கேள்விக்கு ரமேஷ் சந்திர தத் சொன்னதையும்,
இரண்டாவது கேள்விக்குத் தன் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரி பற்றியும் பக்கம் பக்கமாய் எழுதிய யோகானந்தருக்குத் தன் குருவிடம்
ஆரம்பத்தில் “உங்களைப் பற்றித் தான் எழுத வேண்டும்” என்று சொன்னதும்
பலித்தது குறித்து அவருக்குப் பரம சந்தோஷம்.
ஆங்கிலப் பாடத்தின்
குறைந்த பட்ச மதிப்பெண்ணை அந்த முறை அரசாங்கம் திடீரென்று குறைக்க யோகானந்தர் அது உட்பட எழுதிய அனைத்து பரிட்சைகளிலும் பாஸானார்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி- 17.04.2015