சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 27, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 60



லாரிக்காரன் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பரிசோதனைச் சாவடியில் லாரியை நிறுத்தியது ஒடிசல் இளைஞனை ஆச்சரியப்படுத்தியது. என்ன நடக்கிறது என்பதை ஜீப்பைப் பின்னால் நெருக்கமாகவே நிறுத்த வைத்து கவனிக்க ஆரம்பித்தான்.

பரிசோதனை அதிகாரிகளைப் பார்த்து மிகுந்த மரியாதையுடன்  சல்யூட் அடித்தபடியே லாரியை நிறுத்திய டிரைவர் கதவைத் திறந்து அவர்கள் முன் கீழே குதிக்கவும் செய்தான்.

“வணக்கம் சார்... நான் தான்....

பரிசோதனைச் சாவடி அதிகாரி அவனை உற்றுப் பார்த்தார். அவருக்கு அவனை  இப்போது அடையாளம் தெரிந்தது. சில மணி நேரங்களுக்கு முன் சம்யே மடாலயம் போன லாரிக்காரன்...

“என்னப்பா சம்யே போய் வந்து விட்டாயா?

“ஆமாம் சார்

“வழியில் இவர்களை எங்காவது பார்த்தாயா?

அவர் அக்‌ஷய், மைத்ரேயன் புகைப்படங்களை மறுபடியும் காட்டினார்.

“இல்லை சார்....

பரிசோதனைச் சாவடி ஆட்களில் ஒருவன் லாரியின் முன்புறம் ஏறி எட்டிப் பார்த்தான். லாரி டிரைவரின் உடன் இருந்தவன் அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான்.

இரண்டு ஆட்கள் லாரியின் பின் பக்கம் போய் கதவைத் திறந்து பார்த்தார்கள். உள்ளே பெட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஆனால் ஏறும் இடத்திலும் பெட்டிகள் இல்லாத காலி பகுதிகளிலும் எண்ணை முழுவதுமாகச் சிந்தியிருந்தது.  

பின்பக்கம் வந்த பரிசோதனைச் சாவடி அதிகாரியும் அதைப் பார்த்தார். “என்ன இது....

லாரி டிரைவர் சொன்னான். “மடாலயத்துக்குக் கொண்டு போன தீப எண்ணெய் பாக்கெட்டுகளில் இரண்டு ஓட்டையாகி இப்படிக் கொட்டி இருக்கிறது. அந்த லட்சணத்தில் எண்ணெய் தயாரிப்பாளர்களின் ‘பேக்கிங்இருக்கிறதா இல்லை, நாங்கள் போகும் போது உங்கள் ஆட்கள் பரிசோதனை செய்தார்களே அப்போது அந்தப் பாக்கெட்கள் ஓட்டையாகி விட்டதா என்று தெரியவில்லை சார்..... பொருள்களை எல்லாம் மடாலயத்திற்குள் இறக்கி வைப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு தடவை வழுக்கி விழுந்து விட்டேன்.... என் ஆள் மூன்று தடவை விழுந்தான்.....

தாங்களும் வழுக்கி விழப் பிரியப்படாத பரிசோதனை ஆட்கள் அதிகாரியைப் பார்த்தார்கள். “சிறிது முன்பு தானே முழுவதாய் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தோம். மறுபடி பார்க்க என்ன இருக்கிறதுஎன்று சொன்ன அதிகாரியின் கவனம் லாரிக்குப் பின்னால் இருந்த ஜீப் மீது போய் விட்டது.

பரிசோதனை ஆட்கள் லாரியின் பின் கதவை மூடினார்கள். அதிகாரி லாரி டிரைவரிடம் “போகலாம்என்று சைகை காட்டி விட்டு பின்னால் இருந்த ஜீப்புக்கு வந்தார். பார்த்துக் கொண்டே இருந்த ஒடிசல் இளைஞனுக்கு இக்கட்டான நிலைமையை எதிரிகள் சமாளித்திருக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் புத்திசாலித்தனம் மைத்ரேயனுடைய பாதுகாவலனுடையதாக இருக்க வேண்டும்!

ஒடிசல் இளைஞன் கண்கள் லாரி மீதே பதிந்திருந்தது. பரிசோதனை அதிகாரிக்குப் பதில் சொல்லும் பொறுப்பை அவன் முன்பே ஜீப் டிரைவரிடம் ஒப்படைத்திருந்தான்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?அதிகாரி கேட்டார்.

தன் ஊரின் பெயரையே ஜீப் டிரைவர் சொன்னான்.

“எங்கே போகிறீர்கள்?

சுமார் இருபது மைல் தூரத்தில் இருக்கும் ஊரைச் சொன்னான்.

“ஏன் இந்த நேரத்தில் பயணிக்கிறீர்கள்

“அந்த ஊரில் என் மாமாவுக்குப் பக்கவாதம் வந்து விட்டது. எங்கள் ஊரில் ஒரு கைராசிக்கார வைத்தியர் இருக்கிறார். 24 மணி நேரத்தில் இந்த மருந்தைத் தந்தால் அவர் குணமடைந்து விடுவார் என்று சொன்னார். அதனால் தான் நேரம் பார்க்காமல் என் நண்பனுடன் கிளம்பி விட்டேன்...என்று ஒரு பாட்டில் மருந்தையும் காண்பித்தான். முன்பே அவர்களும் தயாராகி இருந்தார்கள்.

லாரி கிளம்பி விட்டது. ஒடிசல் இளைஞன் உள்ளுக்குள் பதறினான். இவர்கள் எப்போது விடுவார்கள்?

பரிசோதனை ஆட்கள் ஜீப்பின் பின் புற இருக்கைகளின் அடியில் கம்பை விட்டுப் பார்த்தார்கள். எல்லாம் காலியாகவே இருந்தன. வேறு பொருள்கள் எதுவும் ஜீப்பினுள் இருக்கவில்லை.

அதிகாரி அவர்களிடமும் இரண்டு புகைப்படங்களைக் காண்பித்தார். “இவர்களை வழியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

டிரைவர் பார்க்கும் போது ஒடிசல் இளைஞன் தானும் சேர்ந்து கூர்ந்து பார்த்தான். இல்லா விட்டால் அவனிடம் தனியாகக் கேட்பார்கள். அதற்குக் கூடுதல் நேரம் ஆகும்..

இருவரும் சேர்ந்து “இல்லைஎன்றார்கள். அதிகாரி போகலாம்என்று தலையசைத்தார். அதற்குள் லாரி அவர்கள் பார்வையிலிருந்து மறைந்திருந்தது.

சாதாரண வேகத்தில் ஜீப்பைக் கிளப்பிய டிரைவர் பரிசோதனைச் சாவடி கண் பார்வையில் இருந்து மறைந்தவுடன் வேகத்தைப் பல மடங்காய் கூட்டினான். எதிரில் ஒரே சாலையாக இருந்ததால் ஐந்தே நிமிடங்களில் லாரிக்குப் பின்னால் வந்து விட்டார்கள்.

இந்த ஐந்து நிமிடங்களில் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் வழியில் எங்காவது இறங்கி விட்டிருப்பார்களா என்ற சந்தேகம் ஒடிசல் இளைஞனுக்கு வந்தது. பரிசோதனைச் சாவடியை அடுத்திருக்கும் பகுதியில் மைத்ரேயனின் பாதுகாவலன் இறங்கி விட்டிருக்க மாட்டான் என்று அறிவு சொன்னது. அவன் மகா புத்திசாலி. இந்தக் கடுங்குளிரில் இந்த வெட்ட வெளியில் அவன் இறங்கி இருந்தால் விரைவில் வாங் சாவொவின் ஆட்களின் கண்களில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதனால் இறங்கி விட்டிருக்க மாட்டான்.....'

ஆனாலும் மனம் அமைதி அடையாமல் அவன் இருபக்கமும் பார்த்தான். ஒருபக்கம் மலைப் பகுதி. இன்னொரு பக்கம் பள்ளத்தாக்கு.....

அவன் சந்தேகத்துடனேயே எதிரில் செல்லும் லாரியைப் பார்த்தான். லாரி முன்பு போலவே ஊர்ந்தும், பறந்தும், கண்டபடி வளைந்தும் போனது. கண்டிப்பாக மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் உள்ளேயே தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் லாரிக்காரன் இந்த அளவு வித்தை காண்பிக்க மாட்டான்.

இரு வாகனங்களும் ஒரே சீரான இடைவெளியில் பயணித்துக் கொண்டிருந்தன.



லீ க்யாங் திபெத்தில் இருந்து சீனா வந்து சேரும் வரை ஒற்றைக்கண் பிக்கு சொல்லி இருந்த தகவல்களை பல விதங்களில் அலசிக் கொண்டே வந்தான். மைத்ரேயன் அல்லாத ஒரு புதிய தலைவலி வந்து சேர்ந்திருப்பதை அவனால் ரசிக்க முடியவில்லை.

பீஜிங் விமான நிலையத்தில் வந்திறங்கியவன் தன் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ போகவில்லை. தன் காரில் பீஜிங்கின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் சீன உளவுத் துறையின் முந்தைய தலைவர் வீட்டுக்குச் சென்றான்.

அவன் மதிக்கும் மிகச்சில மனிதர்களில் சீன உளவுத் துறையின் அந்த முந்தைய தலைவரும் ஒருவர். மிக நேர்மையானவர், அதி புத்திசாலி, யாருக்கும் தலைவணங்காதவர், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான தேச பக்தர். இதெல்லாமே அவன் மிகவும் மதிக்கும் விஷயங்கள். உண்மையை உரத்துச் சொல்லத் தயங்காதவர், தலை வணங்காதவர் போன்ற அவருடைய குணங்கள் இன்றைய சீனத் தலைவர்களுக்கு பல சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் பதவிக்காலம் முடிந்தவுடன் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

பொதுவாக அவரைப் போன்ற அனுபவமும், கூர்மையான அறிவும் உள்ளவர்களுக்குப் பல முறை பதவி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்களாக விலக விரும்பும் வரை நிர்வாகம் விடுவதில்லை. ஆனால் அவரால் ஏற்படும் நன்மைகளை விடத் தலைவலிகள் அதிகம் என்பதால் அவர் செல்ல அனுமதித்ததை லீ க்யாங் நாட்டுக்கே ஏற்படும் நஷ்டம் என்று நினைத்தான். ஆனால் அவர் ஒரு முறை கூட யாரிடமும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. தாவோயிஸம், ஜென் பௌத்தம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளவரான அவர் அந்த வழிகளில் ஆழமாய் படித்துக் கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

லீ க்யாங் அவர் வீட்டு அழைப்பு மணியை அடித்தவுடன் கதவைத் திறந்த அவர் அவனைப் பார்த்து முகம் சுளித்தார்.

“ஒருவரைப் பார்க்கப் போவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீன உளவுத் துறையின் உபதலைவனுக்கு இல்லாமல் போனது வருத்தப்பட வேண்டிய விஷயம்கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் சொன்னார்.

போன் செய்து கேட்டிருப்பேன். இப்போது இரவு பத்தரை மணி ஆகி விட்டது, நாளைக்கு வா என்று சொல்லி இருப்பீர்கள். வர வேண்டாம் என்று சொன்ன பின் வந்தால் நன்றாக இருக்காது. அதனால் தான் கேட்காமல் விமான நிலையத்தில் இருந்து அப்படியே நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விட்டேன்.””’என்று லீ க்யாங் புன்னகையுடன் சொன்னான்.

அவரும் புன்னகைத்தார். “உள்ளே வா. உட்கார். விமான நிலையத்தில் இருந்து நேராக வருவதாகச் சொல்கிறாயே எங்கே போயிருந்தாய்?

“லாஸா....என்றபடியே லீ க்யாங் அமர்ந்தான்.

“சரி வந்த விஷயத்தைச் சொல். சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்பு. நான் உறங்க வேண்டும்என்று சொல்லியபடியே அவரும் அவன் எதிரில் அமர்ந்தார். அவனிடம் அவ்வளவு கறாராக சீனக் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் பேசியதில்லை.

அவன் அவருடைய கறார்ப் பேச்சுக்குப் பழக்கப்பட்டவன். அதனால் சற்றும் சங்கடப்படாமல் புன்னகையுடன் கேட்டான். “திபெத்தில் மாராவை வணங்கும் ரகசியக்குழு ஒன்று இருக்கிறது என்கிற வதந்தி உண்மையா?

அவரை அந்தக் கேள்வி ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. அவனைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டே சொன்னார். “உன் கேள்வியிலேயே முரண்பாடு உள்ளது. வதந்தி எப்போதும் உண்மையாக முடியாது. உண்மையானால் அது வதந்தியாக இருக்க முடியாது

“சரி முரண்பாட்டைத் தவிர்க்க வழி காட்டுங்கள். அது வதந்தியா, உண்மையா?

உடனடியாக அவர் அதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்த அவர் ஒரு நிமிடம் கழித்துச் சொன்னார். “அது வெறும் வதந்தி அல்ல

அப்படி ஒரு குழு இருந்தால் அது ஏன் நம் கவனத்துக்கு வரவில்லை... அது குறித்த எந்த ஆதாரபூர்வமான குறிப்புகளும் நம்மிடம் ஏன் இல்லை

“இது போன்ற ரகசிய குழுக்கள் பற்றி நமக்கு அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு அல்லவா? அவற்றில் நீயே சந்தேகப்பட்டது போல வதந்திகளே அதிகம். அவர்கள் ஏதாவது வகையில் நம் கவனத்தைக் கவரும் வகையில் இயங்கினால் ஒழிய அவர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நீயே அது இருக்கிறதா என்று சந்தேகத்தில் கேட்கிறாய் என்பதில் இருந்தே தெரிகிறது – அவர்கள் நேற்று வரை நம் கவனத்தைக் கவரும் வரை இயங்கவில்லை.

லீ க்யாங் கேட்டான். “அது என்ன நேற்று வரைஇயங்கவில்லை?”

“இன்று அவர்கள் உன் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இப்போது இயங்கி இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. சரி தானே!

லீ க்யாங் அசந்து போனான்.

(தொடரும்)

என்.கணேசன் 



9 comments:

  1. நீ நான் தாமிரபரணி புத்தகம் online கிடைக்குமா? எனில் லிங்க் கொடுக்கவும்

    ReplyDelete
    Replies
    1. ஆன் லைனில் கிடைக்க ஆரம்பிக்க சில நாட்கள் ஆகும். விவரங்களை அறிய பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

      Delete
    2. லக்‌ஷ்மிAugust 27, 2015 at 6:51 PM

      நீ நான் தாமிரபரணி நாவலை ஆரம்பித்த எனக்கு முடிக்காமல் கீழே வைக்க மனமில்லை. ஒன்றரை நாளில் படித்து முடித்தேன். மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். சுவாரசியம் குறைக்காமல் கடைசி வரை கொண்டு போயிருக்கிறீர்கள். பல இடங்களில் உங்களில் முத்திரை மின்னுகிறது. பாராட்டுக்கள்.

      Delete
  2. வரதராஜன்August 27, 2015 at 6:45 PM

    அமர்க்களம்.

    ReplyDelete
  3. அசந்நு போவது லீ க்யாங் மட்டுமல்ல...
    நாங்களும்தான்...

    ReplyDelete
    Replies
    1. அருமையான வசன தேர்வுகள்.
      தொடர்க

      Delete
  4. அருமையான கதை நகர்வுகள் . அற்புதமான பாத்திர படைப்புக்கள். தொடருங்கள் உங்கள் கைவண்ணத்தை.
    அருமையான கதை நகர்வுகள் . அற்புதமான பாத்திர படைப்புக்கள். தொடருங்கள் உங்கள் கைவண்ணத்தை.




    ReplyDelete
  5. (லீ க்யாங் அசந்து போனான்) நாங்களும் தான்
    நன்றி

    ReplyDelete
  6. கதை நகர்வு அருமை...
    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    ReplyDelete