சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 27, 2015

தியான அலைகளில் யோக சக்தி!


21. மகாசக்தி மனிதர்கள்
 
மெரிக்காவில் இருந்து வெளிவரும் Probe-the unknown பத்திரிக்கை 1973 ஜூன் மாத இதழில் அட்டைப்படத்தில் சுவாமி ராமாவைப் போட்டு அவர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் செய்து காட்டிய சில அற்புதங்களையும் அவர் பேட்டியையும் பிரசுரித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பத்திரிக்கையாளர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலில் அவரைச் சந்திக்கச் சென்ற போது சுவாமி ராமா பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். 1970 ஆம் ஆண்டு மென்னிங்கர் ஃபவுண்டேஷனில் அவர் செய்து காட்டிய அற்புதங்களால் அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு வாக்கில் அவர் பிரபலமாகி இருந்தார். ஆகவே பத்திரிக்கையாளர்களுக்கு அவர் செய்து காட்ட முடிந்த அற்புதங்களை நேரில் காண ஆர்வமாக இருந்தது.

ஒரு தியான நிலையில் ஆழ்ந்து தனது ஒரு காலில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து அந்தக் காலை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறத்திற்குக் கொண்டு வந்து மற்ற காலில் இயல்பான நிறத்தை இருக்க வைத்து பத்திரிக்கையாளர்களை வியக்க வைத்தார் சுவாமி ராமா. அடுத்ததாக இன்னொரு தியான நிலைக்குப் போய் மணிக்கட்டில் சில வினாடிகளில் ஒரேயடியாய் நாடித்துடிப்பை நிறுத்தியும் காட்டினார். இந்த இரண்டு இயற்கைக்கு மீறிய சக்திகளையும் கண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் அதிசயித்தார்கள்.

பிறகு ஒரு பெரிய டவலை எடுத்து பல மடிப்பாக மடித்து அவர் சுவாமி ராமா தன்  கண்களை மறைத்துக் கட்டச்சொன்னார். பத்திரிக்கையாளர்கள் அவர் சொன்னபடியே கட்டி அவர் பார்க்கவே முடியாது என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு யாராவது ஒரு வாக்கியத்தை ஒரு தாளில் எழுதுங்கள் என்று சொல்ல ஒரு பத்திரிக்கையாளர் ஒரு வாக்கியத்தை எழுத, கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே அதை சிறிய மாறுதலோடு படித்துக் காட்டினார். அந்தச் சிறிய மாறுதலும் கூட தொலைவில் இருந்து பார்க்கும் போது அப்படித் தெரியும்படி எழுதியிருந்த விதமே என்பதைப் பின்னர் பத்திரிக்கையாளர்கள் பரிசோதித்துத் தெரிந்து கொண்டனர்.  

இங்கு வந்திருப்பவர்களில் யாராவது ஏதாவது புத்தகத்தை வைத்திருந்தார்களேயானால் அதையும் என்னால் திறக்காமலேயே படித்துக் காட்ட முடியும்என்று சுவாமி ராமா கூறிய போது வந்திருந்தவர்கள் யாரும் எந்தப் புத்தகத்தையும் கொண்டு வந்திருக்கவில்லை. முன்பே மென்னிங்கர் ஃபவுண்டேஷனில் அவர் செய்து காட்டிய அற்புதங்களைப் படித்திருந்ததும்,  கண் முன்னேயே அப்போது கண்ட மூன்று நிகழ்வுகளும் அவரை நம்ப அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அவர்கள் அவருடைய யோகசக்தி எப்படி அற்புதங்களைச் செய்ய வல்லமை கொண்டதாக இருக்கிறது என்பதையும், அந்த யோகசக்தியை அடைவது எப்படி என்பதையும் அறிய ஆவலாய் இருந்தார்கள்.

“உண்மையில் எத்தனையோ சக்திகள் நம்முள்ளே புதைந்து கிடந்தாலும் மேற்பரப்பில் உள்ள சில்லறை சக்திகளை மட்டும் லேசாக சுரண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்என்றார் சுவாமி ராமா. உண்மையான புதையல் ஆழத்தில் இருக்கிறது. தியானம் செய்வதன் மூலம் ஆழத்தில் இருக்கும் சக்திகளை ஒருவரால் அடையாளம் காணவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆனால் இயற்கைக்கு எதிராக அல்லாமல் இயற்கைக்கு இசைந்தபடி முயற்சித்தால் மட்டுமே அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், எதிராக முயற்சிக்க முனைந்தால் அது அழிவுக்கு அடிகோலும் என்றும் அவர் கூறினார். 

கதோபநிஷத் குறித்து அவர் எழுதியுள்ள The Book of Wisdom என்ற நூலில் தியானம் செய்யும் முறைகளை படிப்படியாக விளக்கியுள்ளார். மனம், மூளை, மூச்சு விடுதல் மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கமாகக் கூறும் அவர் மூச்சைக் கட்டுப்படுத்தினால் மூளையின் செயல்பாட்டிலும், மனதின் செயல்பட்டிலும் ஒருவர் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றார்.

எத்தனையோ விஷயங்களைத் தவறாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதையே சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படித் தவறாக கற்றுக் கொண்டதை விட்டொழித்தால் ஒழிய யோகசக்திகளை ஒருவரால் சரியாகக் கற்றுக் கொள்வதும், பயன்படுத்துவதும் இயலாத காரியம் என்று கூறும் சுவாமி ராமா இதையெல்லாம் செய்ய தியானம் மிக அவசியம் என்று சொன்னார்.

தியானம் நன்றாகக் கைகூடும் போது ஒரு மனிதனின் மூளை ஆல்ஃபா என்கிற அலைகளில் இயங்குகிறது. தியானம் ஆழமாக ஆழமாக அவன் மூளை தீட்டா மற்றும் டெல்டா என்கிற அலைகளில் இயங்குகிறது. இந்த இரண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் இருக்கும் போதும் கூட மூளையில் வெளிப்படுகின்றன. மூளை இந்த அலைகளில் இருக்கும் போது தான் உடல் தன் ரிப்பேர் வேலைகளையும், புதுப்பித்தல் வேலைகளையும் செய்து கொள்கிறது. மிக ஆழமான தியானத்திலோ, உறக்கத்திலோ மனிதன் இருக்கையில் டெல்டா அலைகள் வெளிப்படுகிறது என்றாலும் இரண்டிற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ஆழமான உறக்கத்தில் இருக்கும் போது மனிதனுக்குத் தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் ஆழமான தியானத்தில் இருக்கையில் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மனிதனால் துல்லியமாக அறிய முடியும். அதனால் அந்த மிக ஆழமான தியான நிலையை (கிட்டத்தட்ட சமாதி நிலை என்றே சொல்லலாம்) உறக்கமில்லா உறக்கம் என்று சுவாமி ராமா குறிப்பிட்டார்.

இந்த உறக்கமில்லா உறக்க நிலையில் சுவாமி ராமா சுமார் 25 நிமிடங்கள் வேறொரு முறை ஆராய்ச்சிக்கூடத்திலேயே இருந்து காட்டி இருக்கிறார். மூளை அலைகளை அளக்கும் கருவி (EEG) டெல்டா அலைகளைப் பதிவு செய்து காட்டியுமிருக்கிறது. அந்த தியானத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் அவரைச் சுற்றிலும் அந்த 25 நிமிட காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிவித்து சுவாமி ராமா ஆராய்ச்சியாளர்களை அசத்தியுள்ளார்.

இது போன்ற டெல்டா அலைகள் மூளை வெளிப்படுத்தும் சமயங்களில் நாம் தகுந்த மனக்காட்சிகளுடன் கூடிய கட்டளைகளைப் பிறப்பித்து நம் உடல் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்று சுவாமி ராமா கூறினார். மனித உடல் ஆழமான உறக்கத்தில் தான் தன் ரிப்பேர் வேலைகளைச் செய்து கொள்கிறது என்பது மருத்துவ விஞ்ஞான உண்மை என்பதால் அவர் கூறும் இக்கருத்து அறிவு சார்ந்ததாகவே இருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும் போது மேற்போக்காக அல்லாமல் தியானம் ஆழமாக நிகழும் போது அதிசயங்களும் நிகழ்த்த முடியும் என்பதை சுவாமி ராமா மெய்ப்பித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

சுவாமி ராமா செய்து காட்டிய அற்புதங்கள் World book Science Annual, 1974, 1973 Encyclopedia Britannica Yearbook of Science,  மற்றும் Time-Life 1973 Nature Science Annual ஆகிய விஞ்ஞான பத்திரிக்கைகளிலும் பதிவாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வரை வாழ்ந்த சுவாமி ராமா Himalayan Institute of Yoga Science and Philosophy  என்ற  அமைப்பை அமெரிக்காவில் பெனிசில்வேனியாவில் நிறுவி அதன் கிளைகளை ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியுள்ளார். மேலும் Himalayan Institute Hospital Trust என்ற தொண்டு நிறுவனத்தை இமயமலைப் பகுதியில் ஏற்படுத்தி 750 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை, 400 மாணவர்கள் படிக்கக் கூடிய மருத்துவக்கல்லூரி, 300 பேர் படிக்கக்கூடிய நர்சிங் கல்லூரி, ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை ஹரித்வார், ரிஷிகேஷ், டேராடூன் பகுதிகளில் சுவாமி ராமா இந்தியாவில் துவக்கியுள்ளார்.

யோகசக்தியால் என்னவெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதை நிரூபித்த சுவாமி ராமா அதை வைத்து விளம்பரம் செய்து புகழ் தேடுவதை இகழ்வாக நினைத்தார். 1974க்குப் பிறகு அவர் கவனம் அதிகமாக தியானத்தை கற்பிப்பதிலும், ஆன்மிக கருத்துகளைப் பரப்புவதிலும், சமூக சேவை செய்வதிலும் தான் இருந்தது.

இனி இன்னொரு சுவாரசியமான யோகியைப் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி தினத்தந்தி 6-2-2015

1 comment: