”பத்மசாம்பவாவின்
ஓலைச்சுவடியில் ஒரு பக்கத்தை லாமாக்கள் ஒளித்து வைத்து விட்டார்கள் என்று எதை
வைத்துச் சொல்கிறீர்கள்?” கவுரவ்
சந்திரகாந்த முகர்ஜியைக் கேட்டான்.
சந்திரகாந்த் முகர்ஜி
உடனடியாகப் பதில் சொல்லி விடாமல் கவுரவை மறுபடியும் பெருமையுடன் பார்த்தார். இது
வரை பெரிய ஆர்வம் காட்டாமல் மேலோட்டமாய் அவர் பேச்சை அவன் கேட்டுக் கொண்டிருந்தது
போலத் தான் அவருக்குத் தோன்றியிருந்தது. முதல் முறையாக அவன் ஆர்வத்தைக் கிளப்பி
விட முடிந்தது அவருக்குப் பெருமையாக இருந்தது. வெளியுலகம் இது வரை அறியாத ஒரு
ரகசியத்தைத் தன்னால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்பதை அவர் அவனுக்கு விளக்க
ஆரம்பித்தார்.
”பத்மசாம்பவா எதையும் அரைகுறையாய் செய்கிற ஆள் இல்லை. மற்றவர்கள்
அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொண்டு விட முடியாதபடி முடிச்சுப் போட்டு எழுதுவாரே
ஒழிய எழுத வேண்டியதை எழுதாமல் விட்டு விடும் ரகம் அல்ல. அதனால் மைத்ரேயர் தோற்றம்,
அவர் பிறக்கப் போகும் இடம் உட்பட எல்லாவற்றையும் பொதுவாக இல்லாமல் தெளிவாகவே சங்கேத
மொழியிலாவது விரிவாக எழுதி வைத்திருக்க வேண்டும் என்று தேடினேன். வேறுபல விவரங்கள்
இருந்தனவே தவிர மைத்ரேயரை அடையாளம் காட்டும் விவரங்கள் கிடைக்கவில்லை....”
கவுரவ் தனக்கு முழு சுதந்திரம் இருக்குமானால் அந்த ஆளை ஓங்கி
ஒரு அறை அறைந்து ’ஒரு
பக்கத்தை ஒளித்து வைத்தார்கள் என்பதை எப்படிக் கண்டுபிடித்தாய் என்பதை மட்டும்
சொல்லேனய்யா... எனக்கு நேரமாகிறது.... எவனாவது இங்கே வந்து தொலையப் போகிறான்’ என்று கேட்டிருப்பான். அவனுக்கு லீ க்யாங் அந்த சுதந்திரம் தந்திராததால்
சந்திரகாந்த் முகர்ஜி அறையிலிருந்து தப்பித்தார்.
“பத்மசாம்பவாவிடம் ஒரு
வழக்கம் இருந்தது. ஓலைச்சுவடியில் விரிவாக எழுதி இருந்ததன் முழு சாராம்சத்தையும்
சுருக்கமாக கடைசியில் சில வரிகளில் மர்ம முடிச்சுகளுடன் சொல்லி முடிப்பார். அவற்றைப்
புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதனால் மொழிபெயர்ப்பாளர்கள் கூட அந்தக் கடைசி
வரிகளை மட்டும் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து விட்டு விடுவார்கள்.
எனக்கு அந்தக் கடைசி வரிகளை மொழிபெயர்த்து மர்ம முடிச்சுகளை அவிழ்த்துப் புரிந்து
கொள்ள எவ்வளவு காலம் தேவைப்பட்டது தெரியுமா?”
கவுரவ் தன் பொறுமை எவ்வளவு நேரம் தாங்கும் என்று தான்
கவலைப்பட்டான். ”பத்து நாட்கள் ஆகியிருக்குமா?” என்று வாயிற்கு வந்த காலத்தைச் சொன்னான்.
சந்திரகாந்த் முகர்ஜியின் முகத்தில்
திகைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இவன் மந்தபுத்திக்காரனாக இருப்பான் போல்
இருக்கிறதே என்று நினைத்தார். மைத்ரேயர் விவகாரத்தில் இரண்டு வருடங்கள் வேறெந்த
நினைவும் இல்லாமல் உழைத்திருக்கிறார். அந்தக் கடைசி வரிகளைப் புரிந்து கொள்ள
மட்டும் அவருக்கு பதினோரு மாதங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதைப் பத்து நாட்கள்
ஆகியிருக்குமா என்று இந்த முட்டாள் கேட்கிறான்....
“பதினோரு மாதங்கள் உழைத்துக்
கண்டுபிடித்திருக்கிறேன்....”
கவுரவ் அவர் எதிர்பார்த்த பிரமிப்பைத் தன் முகத்தில்
காட்டினான்.
இப்போதாவது இந்த மரமண்டைக்குப் புரிந்ததே என்று திருப்தி
அடைந்த சந்திரகாந்த் முகர்ஜி தொடர்ந்தார். “அந்தக் கடைசி வரிகளில் சுருக்கமாக
பத்மசாம்பவா சொல்லி இருக்கிறார் என்றால் அந்த ஓலைச்சுவடியில் முன்பே விரிவாக அவர்
சொல்லி இருக்கிறார் என்று தான் அர்த்தம். அது புரிந்த பிறகு மறுபடி அந்த
ஓலைச்சுவடிப் பக்கங்களை ஆராய்ந்தேன். அப்போது தான் ஒரு பக்கத்தில் மைத்ரேயர்
தோற்றம், தோன்றும் இடம் பற்றி விளக்க ஆரம்பித்திருந்த பத்மசாம்பவா அடுத்த பக்கத்தில்
அதைத் தொடராமல் மைத்ரேயர் தர்மத்தை எப்படி நிலை நாட்டுவார் என்று சொல்ல ஆரம்பித்ததைக்
கவனித்தேன். உண்மையான அடுத்த பக்கம் லாமாக்களால் அகற்றப்பட்டு இருக்கலாம் என்கிற
சந்தேகம் அப்போது உறுதிப்பட்டது”
கவுரவ் தன் நியாயமான சந்தேகத்தை எழுப்பினான். “அந்த ஒரு
பக்கம் அகற்றப்பட்டிருக்கிறது என்கிற சந்தேகம் ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை. இது
வரை எத்தனையோ மொழிபெயர்ப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் அந்த ஓலைச்சுவடியைப்
பார்த்திருப்பார்களே?”
“பத்மசாம்பவா சொன்னதே அவ்வளவு தான் என்று
நினைத்திருப்பார்கள். அவருடைய முடிவுப்பகுதியை என்னால் முழுமையாக விளக்கிக் கொள்ள
முடிந்ததால் தான் நான் முன்பே சொன்னது போல் எனக்கு சந்தேகம் வந்தது. மைத்ரேயர்
எங்கிருக்கலாம், அவர் தனி அடையாளங்கள் என்ன என்பதை அந்த கடைசி வரிகளில் இருந்து என்னால்
ஓரளவாவது கண்டுபிடிக்க முடித்தது”
”என்ன கண்டுபிடித்தீர்கள்?”
அவன்
குரலில் இது வரை இல்லாத ஒரு கூர்மை இருந்ததை சந்திரகாந்த் முகர்ஜி உணர்ந்தார். ஆனால்
அதை அவர் சட்டை செய்யவில்லை. ஒரு பெரிய மனித தோரணையுடன் சொன்னார். “அது
பரமரகசியம். சீக்கிரமே நான் வெளியிடப் போகும் என்னுடைய புத்தகத்தில் தான் முதல் முதலில்
அந்த ரகசியத்தை வெளியிடப் போகிறேன்.... உலகம் என்னிடம் இருந்து அப்போது தான்
அறியப் போகிறது”
கவுரவ் தன் இடுப்பில் மறைவாகச் சொருகி இருந்த
கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான்.....
லீ
க்யாங் என்னேரமும் கவுரவ் என்றழைக்கப்பட்டவனிடம் இருந்து தகவல் வரும் என்று
எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் கவுரவ் தொடர்பு கொள்ளத் தாமதமாகிக் கொண்டே
இருந்தது. ஏதோ பிரச்னை இருக்கிறது என்பது புரிந்தது. அவனுடைய எண்ணங்கள் தலாய் லாமா
உதவி கேட்ட அந்த மர்ம ஆசாமி நோக்கியே மறுபடியும் சென்றன. அவன் கண்டிப்பாக திபெத் வரப் போகிறான் என்பதில்
லீ க்யாங்குக்கு சந்தேகமே இல்லை. திபெத்துக்குள் தனியாக நுழையும் ஒவ்வொரு மனிதனின்
புகைப்படத்தையும் மற்ற விவரங்களையும் அவனுடைய ஆட்கள் அவனுக்கு அனுப்பி வைத்துக்
கொண்டே தான் இருந்தார்கள். யாரும் அவன் அல்ல.
தலாய் லாமாவும் ஆசானும் பட்ட
அவசரத்தை எண்ணிப் பார்க்கையில் அந்த மர்ம ஆசாமி இன்னேரம் திபெத்துக்கு வந்திருக்க
வேண்டும். அவன் சாமர்த்தியசாலியும் கூட.... ஆனால் அவன் வந்திருந்தால் கண்டிப்பாகக்
கண்டுபிடிக்கப் பட்டிருப்பான். அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது.....
இது வரை பிடிபடவில்லை என்றால் அவன்
வந்திருக்கவில்லை என்று அர்த்தமா இல்லை அவன் வந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று
அர்த்தமா? இரண்டாவது நிகழ்ந்திருந்தால்.....?
லீ க்யாங்குக்கு அதற்கு மேல்
இருப்பு கொள்ளவில்லை. யோசித்து விட்டு லாஸா விமான நிலையத்தின் கடந்த இரண்டு
நாட்களின் வீடியோ பதிவுகளை வரவழைத்துப்
பார்க்க ஆரம்பித்தான். திபெத்தில் நுழையும் பெரும்பாலான மனிதர்கள்
யாத்திரிகர்கள்.... பல வகை யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே வந்தான்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெள்ளையர்களை அவன் அதிகம் கண்டு கொள்ளவில்லை. அவன்
கவனம் எல்லாம் ஆசியப் பயணிகள் மீதாக இருந்தது. குறிப்பாக இந்தியராக இருக்கக்
கூடும் என்ற சந்தேகத்தை எழுப்பக்கூடியவர்களை அதிகம் கூர்ந்து கவனித்தான்.
லாஸா விமான நிலையத்தில் வந்து
நிற்கும் விமானங்கள் பீஜிங்
போன்ற விமான நிலையங்களில் வரும் விமானங்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும்
குறைவு தான். எனவே ஒவ்வொரு விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளைக் கவனிப்பதில்
அதிக சிரமம் இருக்கவில்லை. எனவே லீ க்யாங்க் அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே
வந்தான். நான்கைந்து விமானங்களில் இருந்து இறங்கியவர்களைக் கவனித்து முடித்து
விட்டான்.... யார் மீதும் அவனுக்கு சந்தேகம்
வரவில்லை.... சலிக்காமல் அடுத்த
விமானத்தில் இருந்து இறங்கி வருபவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அது காத்மண்டுவில் இருந்து
வந்த விமானம். பல ரக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வந்து
கொண்டிருந்தார்கள். அவன் கவனத்தை முதலில்
ஈர்த்தது ஒரு புத்த பிக்குவின் பாதங்கள். ஒவ்வொரு அடியிலும் ஒரு அமைதி இருந்தது.
சாந்தம் இருந்தது. லீ க்யாங்குக்கு அந்த அமைதியான நடை பிடித்திருந்தது. அவருடன்
ஒரு புத்தபிக்கு சிறுவனும் வந்து கொண்டிருந்தான். அவருடைய சீடன் போலிருக்கிறது. அவர்
கையைப் பிடித்திருந்தாலும் கூட அவர் நடைக்கு எதிர்மாறாக இருந்தது அவன் நடை. குருவின்
சாந்தத்தை சீடன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது என்று நினைத்து லீ
க்யாங் புன்னகைத்தான்.
புத்த பிக்குவின் முகம்
தெரியவில்லை. அவர் தலை குனிந்தே இருந்தார். அவர் நடப்பதை நிறுத்தி சுற்றிலும் பார்த்தார்.
ஆனாலும் காமிராவில் அவர் முகம் தெளிவாகப் பதியவில்லை.... தங்களை அழைத்துப் போக வருபவர்களைத்
தேடுவது போல் இருந்தது அவர் தோரணை. அப்படித் தேடுவதிலும் ஒரு அழகான நிதானம் இருந்தது.
அவர் நின்றாலும் அவர் சீடனான சிறுவன் நிற்பதாய் இல்லை... அவன் அவர் கையை விடுவித்துக் கொண்டு முன்னே செல்லப் பார்த்தான். ஆனாலும்
அவன் அவர் கையிலிருந்து விடுபடவில்லை. அவன் பின்னால் திரும்பி குருவைப்
பார்த்தான். அவன் முகத்தில் ஏதோ எதிர்பார்த்திராத பீதி தெரிந்தது. அப்படியே சிலை
போல நின்றான்....
பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங்குக்கு
இரத்தம் தலைக்கு ஜிவ்வென்று ஏறியது. அந்த புத்த பிக்கு தான் அந்த மர்ம ஆசாமி
என்பது மின்னல் வேகத்தில் அவனுக்குப் புரிந்தது. அது ஏன் எப்படி என்பதை எல்லாம்
பின்னர் அறிவு ஆராய்ச்சி செய்து சரிபார்த்துக் கொள்ளும். ஆனால் உள்ளுணர்வு முதலிலேயே
அவனுக்கு அறிவித்து விட்டது....
விரிந்த கண்களுடன் லீ க்யாங் அந்தக்
காட்சியைத் தொடர்ந்து கவனித்தான். அந்த பிக்குவும் சிறுவனும் பழையபடி நிதானமாக
நடந்து சென்றார்கள். அந்த பிக்கு சிறுவனிடம் எதோ கேட்டதும் சிறுவன் திகைப்புடன்
தலையசைத்ததும் தெரிந்தது.... அவர்களுடைய ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரி, கொண்டு
வந்திருந்த உடைமைகளைச் சோதித்த அதிகாரி
ஆகியோரிடம் சென்று வேலை முடிந்து அவர்களைக் கடந்து விமான நிலையத்தில் இருந்து
வெளியேறும் வரை அந்த புத்த பிக்கு நடையிலும், வேகத்திலும் எந்த மாற்றமுமில்லை.
அவசர அவசரமாக அந்த பிக்குவையும், அந்தச்
சிறுவனையும் படம் பிடித்திருந்த எல்லாக் காமிராப்பதிவுகளையும் லீ க்யாங் பார்த்தான்.
எந்த ஒரு காமிராவும் அந்த புத்த பிக்குவின் முகத்தை முழுமையாகப் பதிவு
செய்யவில்லை. எந்தக் காமிராவிலும் அந்த மர்ம மனிதன் தன் முகத்தைக் காட்டாமல்
தவிர்த்திருந்தான். ஒரு சில இடங்களில் அவன் முகத்தின் பக்கவாட்டுப்பகுதி மட்டும் தெரிந்தது. அதுவும் கூட மிகவும்
குறுகிய வினாடிகள் தான். மற்றபடி மொட்டைத் தலையின் மேற்பகுதி மட்டுமே தெளிவாகத்
தெரிந்தது. அது சாதாரண காரியம் இல்லை என்பதை லீ க்யாங் அறிவான். ஒவ்வொரு கணமும்
சுற்றிலும் நடக்கும் அனைத்தையும் அறிந்த ஒருவனால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய
காரியம் அது. இப்போதும் கூட அந்தச் சிறுவன் முகத்தில் பீதி தெரிந்திருக்கா
விட்டால் லீ க்யாங் அவனைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். அந்த புத்த பிக்குவிடம்
தெரிந்த சாந்தமும், பாதங்கள் அமைதியாய் தரையைத் தொட்ட விதமும் தான் ஆரம்பத்தில்
மனதைக் கவர்ந்ததே ஒழிய முதல் பார்வையில் அவனுக்கே சந்தேகம் வந்திருக்கவில்லையே!
லீ க்யாங்குக்கு தலாய் லாமா ஏன் அந்த மர்ம
மனிதனின் உதவியை நாடினார் என்பது புரிந்தது. தனக்கு ஒரு சவால் திபெத்தின் மண்ணிலேயே நுழைந்து
விட்டது என்று நினைத்தவன் லேசாகப் புன்னகைத்தான். இனி அந்த மர்ம ஆசாமி
எங்கிருக்கிறான் என்று வேறு இடங்களில் தேட வேண்டியதில்லை!
(தொடரும்)
என்.கணேசன்