சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 25, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 26


க்‌ஷய் நாளை காலை திபெத்திற்கு கிளம்புகிறான். எல்லா விதங்களிலும் தன்னை அவன் தயார்ப்படுத்திக் கொண்டாகி விட்டது. கண்களை மூடி அமைதியாகத் தன் அறையில் அவன் உட்கார்ந்திருக்கையில் வருண் நுழைந்தான். கண்களைத் திறந்த அக்‌ஷய் புன்னகைத்தான். “வா.... உட்கார்.....

அக்‌ஷயை ஓட்டியபடி உட்கார்ந்தான் வருண். சின்ன வயதில் இருந்தே அக்‌ஷயுடன் அவ்வளவு நெருக்கமாய் உட்கார்ந்தால் தான் அவனுக்கு திருப்தி. நாளை போனால் இனி எப்போது வருவான் என்று தெரியாது, ஏன் திரும்ப வருவானா என்றே தெரியாது என்றெல்லாம் வருணின் மனம் நினைக்க ஆரம்பித்திருந்ததால் இன்று பாசம் மேலும் கூடி இருந்தது.

“அப்பா, அம்மா சொல்கிறாள் நான் உங்களை நிறையவே இம்சிக்கிறேனாம்... அப்படி நினைக்கிறீர்களாப்பா?

வருண் தோளில் தோழமையுடன் கையைப் போட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டு அக்‌ஷய் சொன்னான். “அவளுக்கு என்ன தெரியும்? அவள் சொல்வதை எல்லாம் கண்டு கொள்ளாதே...”  பின் அவன் கண்களைப் பார்த்து ஆத்மார்த்தமாய் சொன்னான். “இது வரை நீ எனக்கு எப்போதுமே இம்சையாய் இருந்ததில்லை. இனி மேலும் அப்படி இருக்க மாட்டாய்...

வருணுக்கு அவன் மடியில் படுத்து அழத் தோன்றியது. அழுதான். அக்‌ஷய் அவன் தலையைக் கோதிக் கொண்டே சொன்னான். “என்ன சின்னக்குழந்தை மாதிரி?

உடனடியாகப் பதில் சொல்லாத வருண் மெள்ள எழுந்து தேம்பலை நிறுத்தி கண்களைத் துடைத்துக் கொண்டான். நான் உங்களைப் பொருத்த வரை எப்போதுமே சின்னக் குழந்தை தான். இல்லையாப்பாஎன்று கண்களின் ஈரம் காயாமல் சிரிக்க முயல அக்‌ஷய் மனம் நெகிழ்ந்து போனான். “ஆமாம்என்றான்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாய் இருந்தார்கள். சேர்ந்து அமர்ந்திருக்கையில் மௌனமும் ஒரு விதத்தில் நிறைவாகவே இருந்தது. பின் மெல்ல வருண் சொன்னான். “அப்பா நான் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் முதலில் உங்களிடம் தான் சொல்லி இருக்கிறேன்.... நீங்கள் போவதற்கு முன்னால் சொல்ல புதிதாய் ஒன்றிருக்கிறது....

“சொல்

“நான்.... நான் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்.....

அக்‌ஷய் முகத்தில் குறும்பு கலந்த மகிழ்ச்சி பொங்கியது. “ஏய்... இப்போது தான் சொன்னாய்... உங்களைப் பொருத்த வரை நான் சின்னக்குழந்தை என்று... குழந்தை திடீரென்று இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டதா என்ன?

வருண் வெட்கப்பட்டான். “உங்களுக்கு தான் குழந்தை. மற்றவர்களுக்கு அல்ல..என்று சொன்ன போது அக்‌ஷய் வாய் விட்டுச் சிரித்தான்.

“அந்தப் பெண்ணைப் பற்றி சொல்

“பெயர் வந்தனா. கூடப்படிக்கிறாள். நல்ல மாதிரி..... பார்க்க அழகாயிருப்பாள்

“அவளும் உன்னைக் காதலிக்கிறாளா?

“அப்படித்தான் நினைக்கிறேன். நானும் அவளிடம் என் காதலை இன்னும் சொல்லவில்லை.... முதலில் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்....

அக்‌ஷய் பேச்சிழந்து போனான். காதலைக் கூட முதலில் அவனிடம் வந்து தெரிவிக்க நினைக்கும் ஆழமான அன்பை அவன் வேறெங்கு காண முடியும்? மனம் என்னவோ செய்தது.

வருண் தொடர்ந்தான். “அவள் நம் எதிர் வீட்டுக்கு தான் குடி வரப் போகிறாள். அவர்கள் வீடு மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம் எதிர் வீடு காலியாக இருக்கிறது என்று சொன்னேன். வந்து பார்த்து விட்டு பிடித்திருந்ததால் அடுத்த வாரம் குடிவரப் போகிறார்கள்....

சிரித்துக் கொண்டே அக்‌ஷய் அவன் வயிற்றில் நட்பாக குத்தியபடி சொன்னான். “நல்ல விவரமாய் தான் இருக்கிறாய். காதல் என்று வந்து விட்டாலே மூளை இரண்டு மடங்கு வேலை செய்யும் போல இருக்கிறது...

அக்‌ஷயின் கைகளைப் பிடித்துக் கொண்டு சிரித்த வருண் சிரிப்பதை விட்டு சீரியஸாக சொன்னான். “நீங்கள் திரும்பி வரும் போது அவள் நம் எதிர் வீட்டில் இருப்பாள். நீங்கள் கண்டிப்பாய் திரும்பி வர வேண்டும்.... அந்த மைத்ரேயனைக் காப்பாற்றுகிறீர்களோ இல்லையோ உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..... நாங்கள் எல்லாரும் உங்களுக்காக காத்துக் கொண்டே இருப்போம்....

பல வருடங்களுக்கு முன்பு வருணை விட்டுக் கிளம்புவதாய் அக்‌ஷய் சொன்ன போது இருந்த அதே துக்கம், அதே வேண்டுதல் இப்போதும் தெரிந்தது. வருண் சொன்னது பொய்யில்லை. ஆண்டுகள் நகர்ந்து சிறுவன் வளர்ந்து இளைஞனான பின்னும் அவனைப் பொருத்த வரை குழந்தையாகத் தானிருக்கிறான்... 

அக்‌ஷயின் மனம் கனமானது. எது மனிதனின் கையில் இருக்கிறது. எதையும் தீர்மானிப்பது இறைவனே அல்லவா? அந்த அன்பு மகனின் திருப்திக்காக அவன் சரியென தலையசைத்தான்.சேடாங் (Tsedang) நகரம் அதிகாலையில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. நகர வாசிகளில் சிலர் மெள்ள எழுந்து வீடுகளில் இருந்து வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். அந்த ஏழை  நடுத்தர வயதுப் பெண்மணி வாசலில் ஏதோ வேலையாக இருந்தாள். தெருமுனையில் ஒரு புத்த பிக்கு வருவதை அவள் கவனித்தாலும் அந்த புத்த பிக்கு தன் வீட்டுக்கு தான் வந்து கொண்டிருக்கிறார் என்பதை சற்றும்  அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. காரணம் அவள் குடும்பத்தினர் புத்தமதத்தினர் தான் என்ற போதும் அடிக்கடி மடாலயங்களுக்குப் போய் வணங்கும் வழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் போய் வணங்கி விட்டு வருவார்கள். அதுவும் ஒரு சம்பிரதாயமான சிறிது நேர சமாச்சாரமாக மட்டுமே இருக்குமே ஒழிய ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக இருந்ததில்லை. அதனால் புத்த பிக்குவும் அவர்கள் வீட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று அவள் நினைத்தாள்  ஆனாலும் புத்த பிக்கு அவளை நோக்கி தான் வந்தார்...

அருகே வந்த பிக்குவை அவள் வணங்கி நின்றாள். அவளுக்கு ஆசி வழங்கிய பிக்கு “காலை பத்து மணிக்கு கண்டிப்பாக மடாலயத்திற்கு வர மூத்தவர் உங்களை அழைத்திருக்கிறார்என்று சொல்லி விட்டு அடுத்த கணமே அந்தப் பெண்மணியைத் திரும்பிக்கூட பாராமல் அங்கிருந்து நகர்ந்தார். அந்தப் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பிக்கு சீக்கிரமாகவே அவள் பார்வையில் இருந்து மறைந்து போனார்.

அந்த ஊரில் இருந்த சிறிய புத்த மடாலயத்தில் இருந்த தலைமை பிக்குவை அனைவரும் மூத்தவர் என்றே அழைத்தார்கள். அப்படி அழைக்க என்ன காரணம் என்று அவளுக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவளுக்கு இருந்ததில்லை. தலாய் லாமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அவரைப்பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறாள். வேறு ஊர்களிலிருந்து வந்து அவரை பல பிக்குகள் வணங்கிச் செல்வதை அவள் பார்த்திருக்கிறாள். அவருடைய சொற்பொழிவுகள் குறித்தும் அறிவாளிகள் என அவள் நினைத்திருக்கும் பலரும் மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு அவர் பேசியது எதுவும் அதிகம் புரிந்ததில்லை.

அப்படிப்பட்ட உயரிய நிலையில் இருக்கும் மூத்தவருக்கு அவளிடம் பேச என்ன இருக்க முடியும். அறிவிலோ, பக்தியிலோ, செல்வத்திலோ அவர் கவனத்திற்கு வரும் நிலையில் அவள் இல்லை.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. வேறு யாரையோ கூப்பிடுவதற்குப் பதிலாக, தவறாக, அவளை அழைத்து விட்டுப் போயிருக்கிறார் அந்த பிக்கு. அப்படித்தான் இருக்க வேண்டும். பத்து மணிக்குப் போனால் அவர் புரிந்து கொள்வார். மடாலயத்திற்குப் போய் வணங்கி பல மாதங்கள் ஆகின்றன. அவளை ஒரு முறை வரவழைக்க போதிசத்துவர் செய்யும் லீலை தானோ இது.

பத்து மணிக்கு மடாலயத்தில் அவள் இருந்தாள். அவளைப் பார்த்ததுமே காலையில் வந்து தகவல் சொன்ன பிக்கு விரைந்து வந்தார். “மூத்தவர் உள்ளே காத்திருக்கிறார்என்று சொன்னார்.

இன்னும் ஆள் மாறாட்டத் தவறு இந்த பிக்குவுக்கு உறைக்கவில்லை என்று நினைத்த அவள் உள்ளே சென்றாள். மூத்தவர் மகாபுத்தர் சிலை முன் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். தானும் வணங்கினாள். நல்லது என் வாழ்க்கையில் நடந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது புத்தரே. அடிக்கடி வந்து வணங்கவில்லை என்பதற்கு ஒரேயடியாக எங்களைப் புறக்கணித்து விடாதீர்கள். அருள் புரியுங்கள்

எழுந்து விட்டாள். அதற்கு மேல் புத்தரிடம் சொல்ல வேறு எதுவும் இல்லை.

ஆனால் மூத்தவர் வணங்கி முடிக்க சிறிது நேரம் ஆனது. அவள் காத்திருந்தாள். திரும்பியவர் மிகுந்த மரியாதையுடன் அவளை அமரச் சொன்னார். அந்த பிக்கு தவறான ஆளை அழைத்து விட்டு வந்தது இவருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டபடி ஒடுங்கிப் போய் அமர்ந்தாள்.

“உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?அவர் அதே மரியாதையுடன் கேட்டார்.

மூன்று மகன்களைப் பெற்றிருந்த அந்த தாய்க்கு அவர் எந்த மகனைக் கேட்கிறார் என்று புரியவில்லை. அவர் இத்தனை மரியாதை தந்து கேட்கக்கூடிய அளவு வயதிலோ, வேறெந்த தகுதியிலோ அவளுடைய மகன்கள் இருக்கவில்லை. “நீங்கள் என் எந்த மகனை விசாரிக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை ஐயாஎன்று அவள் சொன்னாள்.

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்த மூத்தவர் “உங்கள் கடைசி மகனைத் தான் கேட்கிறேன் அம்மாஎன்றார்.

இப்போது அவளுக்கு எல்லாம் விளங்கி விட்டது. அவளது மூன்றாவது மகன் பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பினாலும் சில நாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் சேடாங் நகரத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சில குகைகளில் போய் அமர்ந்து கொண்டு பொழுதைக் கழிப்பதுண்டு. இல்லா விட்டால் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திபெத்தின் முதல் புத்த மடாலயமான சம்யே மடாலய (Samye monastery)த்திற்குப் போய் விடுவதுண்டு... சில சமயம் அதற்கு அருகில் இருக்கும் புனித குளமான லாமோ லாட்சோ(Lhamo Latso) விற்குப் போய் விடுவதுண்டு. இவன் இப்படிப் போவது அங்கே போகும் புத்தபிக்குகளுக்கு ஏதாவது விதத்தில் தொந்தரவாக இருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் மூத்தவரிடம் புகார் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்கத் தான் அழைத்திருக்கிறார்.

“அவன் சின்னப் பையன். ஏதாவது தவறு செய்திருந்தால் அவனை மன்னிக்க வேண்டும் ஐயாஎன்று அவள் வேண்டிக் கொண்டாள்.

மூத்தவர் அவளைப் பார்த்து சின்னதாய் புன்னகைத்தார். தாயே. உங்களுக்கு உங்கள் மகன் யாரென்று தெரியுமா?

அவளுக்கு அந்தக் கேள்வி வினோதமாய்த் தோன்றியது. மகன் மகன் தான். இது என்ன கேள்வி? அவள் முகத்தில் தெரிந்த குழப்பம் அவர் புன்னகையை விரிவுபடுத்தியது.

அவர் சொன்னார். “போதிசத்துவ மகாபுத்தரின் அவதாரமான மைத்ரேயரே உங்கள் கடைசி மகன். அந்த அவதார புருஷரைப் பெற்றெடுத்த புனிதவதியான அன்னையை நான் வணங்குகிறேன்.

அவள் தடுப்பதற்குள் எண்பது வயதைக் கடந்தவரும் மகாஞானி என்று மற்றவர்களால் போற்றப்பட்டவருமான மூத்தவர் அவளைத் தாழ்ந்து வணங்கினார்.

அதிர்ச்சியில் சமைந்து போன அந்தப் பெண்மணிக்கு இந்த ஆள் மாறாட்டக் குழப்பத்தில் சிக்கியிருப்பது அவள் அல்ல அவளுடைய மகன் என்று மெள்ள புரிய ஆரம்பித்தது. அவர் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை. தாய் அறியாத சூல் இருக்க முடியுமா? அனிச்சையாய் இரண்டடி பின் வாங்கினாள்.

(தொடரும்)

என்.கணேசன்
6 comments:

 1. Varun and Akshay's relationship is explained touchingly. And the thoughts of illiterate mother of Maithreyan is told excellently. So real.

  ReplyDelete
 2. சுந்தர்December 25, 2014 at 5:42 PM

  அரை மணி நேரம் சீக்கிரமாய் அப்டேட் செய்தால் கூட மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த அளவு என்னை இந்த தொடர் ஆட்கொண்டு இருக்கிறது. பிரமாதமாய் போகிறது. அக்‌ஷய்க்கும், வருணுக்கும் இடையே இருக்கும் பாசத்தை படிக்கும் போது கண்கலங்கி விட்டேன். மைத்ரேயர் அந்தப் பையன் தானா இல்லை வேறு யாரோவா. தாய் அறியாத சூல் இல்லை என்று வேறு சொல்கிறீர்கள்.

  ReplyDelete
 3. பிரமாதமான தொடர்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சரோஜினிDecember 26, 2014 at 2:35 AM

  பரமன் ரகசியத்தின் விசேஷ மானஸ லிங்கத்தைப் போலவே மைத்ரேயரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். நன்றாக போகிறது

  ReplyDelete
 5. 'kaaththiruththal' kodumayanadhu enbadhu kaadhalil mattum alla, indha thodarin aduththa aththiyayaththai oru vaaram katththirundhu padikkavendum enbadhilum thaan. aanalum sugama ulladhu.....

  Sakthi

  ReplyDelete
 6. Thank you.
  It seems you have corrected that second line pronunciation mistake.

  ReplyDelete