அமானுஷ்யன் ஃபைலைப் படித்து முடித்த பின் பிரதமர் முகத்தில் தெரிந்த
பிரமிப்பைக் கண்டு இந்திய உளவுத்துறை தலைமை அதிகாரி சோம்நாத் ஆச்சரியப்படவில்லை.
அமானுஷ்யனைப் பற்றியும், அவனது திறமைகளைப் பற்றியும் முதல் முறையாக அறிய நேரும்
போது பிரமிக்காமல் இருந்தால் அது தான் ஆச்சரியம். பிரதமர் அந்த ஃபைலைப்
படிக்கையில் எதிரில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்த சோம்நாத்தை
ஆச்சரியப்படுத்தியது அமானுஷ்யனைப் பற்றி முன் அறிந்திராத பிரதமர் இப்போது திடீர்
என்று ஆர்வம் காட்டியது தான். அமானுஷ்யனைப் பற்றி பிரதமருக்கு யார்
தெரிவித்திருப்பார்கள்? பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அந்த ஃபைல் இப்போது
திறக்கப்படக் காரணம் என்ன?
ஃபைலைப் படித்து முடித்த பின் உடனடியாக
எதுவும் சொல்லாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்த பிரதமர் இன்னும் சந்தேகம் தெளியாதவராய்
கேட்டார். “இதில் எதுவும் கற்பனை இல்லையே?”
சோம்நாத் புன்னகையுடன் சொன்னார். “கற்பனை
இல்லை. நிஜம் தான்”
”பின் ஏன் இப்படிப்பட்ட மனிதனை நாம் பிறகு
பயன்படுத்திக் கொள்ளவில்லை?”
“அதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். அவன்
சம்மதிக்கவில்லை. அவன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினான். பொதுவாக எல்லோரும்
ஆசைப்படும் பணம், புகழ், அதிகாரம் எல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு
பொருட்டாகவே இருக்கவில்லை.....”
பணம், புகழ், அதிகாரம் என்ற மூன்றின்
பின்னால் ஓடுபவன் என்றும் அமைதியைக் காண முடியாது என்று புரிந்து கொண்டு அவற்றை
அலட்சியப்படுத்தி, அதனால் அவன் அமைதியாக வாழ்கிறான் என்று சோம்நாத் சொல்ல
வருகிறாரா என்ற சந்தேகம் பிரதமருக்கு வந்தது. அப்படி சொல்லி இருந்தாலும் அது தப்பில்லை
என்ற எண்ணம் உடனடியாக வந்தது. இந்த மூன்றும் மனிதனை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கின்றன,
என்னவெல்லாம் செய்ய வைக்கின்றன என்று பலநிலைகளில் பார்த்து வந்த அனுபவஸ்தர் அவர்.
திறமைகளில் மட்டுமல்ல, பக்குவத்திலும் அவன் அமானுஷ்யனே!...
பிரதமர் அபிப்பிராயத்தில் அவன் உயர்ந்து
போனது அவர் முகபாவனையில் இருந்து சோம்நாத்திற்குப் புரிந்தது. ஒரு நிமிட
மௌனத்திற்குப் பிறகு பிரதமர் அவரிடம் ஆதங்கத்துடன் சொன்னார். ”இப்படிப்பட்ட திறமைகள் இருப்பவன் ஒதுங்கி வாழ்வது உண்மையில்
நாட்டிற்கு நஷ்டம் தான். நான் சினிமாக்களில் மட்டும் தான் இப்படிப்பட்ட திறமையுள்ள
ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.”
”உண்மை தான். அவனைச் செயலில் பார்க்காதவர்கள் நம்ப
முடியாது. அவனுடைய வித்தைகள் எல்லாம் திபெத்தில்
கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்......”
பிரதமர் விதியின் விளையாட்டை எண்ணி ஒரு
கணம் வியந்தார். ”.... அந்த திபெத் இப்போது அவனுடைய உதவியை
எதிர்பார்க்கிறது....” என்று சொன்னார்.
சோம்நாத் புரியாமல் விழித்தார். பிரதமர்
தலாய் லாமாவின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தார். சோம்நாத் யோசனையுடன் சொன்னார். “இந்த
விஷயத்தில் அவர்களுக்கு அமானுஷ்யன் உதவ முடிந்தவன் தான். சொல்லப் போனால் இந்த
வேலைக்கு அவனைத் தவிர பொருத்தமான வேறு ஒரு ஆள் அவர்களுக்குக் கிடைக்க முடியாது.
ஆனால்....”
பிரதமர் அவர் வாக்கியத்தை முடிக்க
காத்திருந்தார். ஆனால் சோம்நாத் தொடரவில்லை.
பிரதமர் சொன்னார். “தலாய் லாமா சொன்னதை
அவனிடம் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏற்றுக்
கொள்வதும், மறுப்பதும் அவன் இஷ்டம்...”
சோம்நாத் தலையசைத்தார்.
பிரதமர் சொன்னார். “ஒருவேளை அவன் ஏற்றுக்
கொண்டால் இந்த விஷயத்தில் நம் தரப்பில் இருந்து என்ன உதவி வேண்டுமானாலும்
மறைமுகமாகச் செய்து கொடுங்கள்...”
சோம்நாத் சரியென்றார்.
பிரதமர் கேட்டார். “இந்த விஷயம் எந்த
விதத்திலும் வெளியே கசியக்கூடாது. யாருக்கும் சந்தேகம் கூட வராதபடி பார்த்துக்
கொள்ளுங்கள்..... எப்படி அமானுஷ்யனுக்குத் தெரிவிக்கப் போகிறீர்கள்?.”
“சிபிஐயில் இருக்கும் அமானுஷ்யனின் அண்ணா ஆனந்த்
மூலம் தெரிவிக்கிறேன்....”
சோம்நாத் ஆனந்தைச் சந்தித்து தலாய் லாமாவின் கோரிக்கையைச் சொன்ன போது
ஆனந்த் அதிர்ந்து போனான். இப்படி ஒரு கோரிக்கையை அமானுஷ்யன் முன் வைப்பதே
அநியாயமாய் அவனுக்குத் தோன்றியது. அவன் அதை வாய் விட்டுச் சொன்னான்.
சோம்நாத் எத்தனையோ துப்பறிதல்களில்
ஆனந்திற்கு உதவியவர், உதவி வாங்கியவர். நேர்மையும், அறிவுகூர்மையும் கொண்ட ஆனந்த்
மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவன் அநியாயம் என்று சொன்னதை பெரிதாகப்
பொருட்படுத்தாமல் அவர் அமைதியாக இருந்தார்.
ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம்
சொன்னான். “அவன் மறைவில் இருந்து வெளியே வந்தால் கொன்று விட தலிபான் தீவிரவாதிகள் இப்போதும்
வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சார். அவனைக் கொல்பவர்களுக்கு ஒரு
மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு அப்போதே அவர்கள் ஆட்களிடம் ரகசியமாய் அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு
இப்போதும் அமலில் இருக்கிறது.”
சோம்நாத் அந்த அறிவிப்பை அறியாதவர் அல்ல. அமானுஷ்யனுக்கு
இருக்கும் ஆபத்தின் தன்மையையும் உணராதவர் அல்ல. அமானுஷ்யன் அவர் தம்பியாக
இருந்தால் அவரும் இப்படித்தான் பயப்படுவார்....
சோம்நாத் அமைதியாகச்
சொன்னார். ”அதனால் தான் பிரதமர் உன் தம்பியைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை ஆனந்த். தலாய் லாமா சொன்னதைத்
தெரிவிக்க மட்டும் தான் சொல்லி இருக்கிறார். முடிவெடுப்பது உன் தம்பி கையில்
இருக்கிறது. ஒருவேளை உன் தம்பி ஒத்துக் கொண்டால் எல்லா வகையிலும் எங்களை உதவி
செய்யச் சொல்லி இருக்கிறார். உன் தம்பி ஒத்துக் கொள்ளா விட்டால் தலாய் லாமாவிடம் அதை
பிரதமர் தலாய் லாமாவிடம் தெரிவித்து விடுவார். அவ்வளவு தான். முடிவு எதுவாக
இருந்தாலும் இரண்டே நாளில் சொன்னால் நன்றாக இருக்கும்....”
சோம்நாத் சென்ற பின் நீண்ட நேரம் ஆனந்த்
சிலை போல் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மனதிலோ பழைய நினைவுகள் கொந்தளித்துக்
கொண்டிருந்தன. தலிபான் தீவிரவாதிகளுடன், ஒரு சக்தி வாய்ந்த இந்திய அமைச்சரும்
கைகோர்த்துக் கொண்டு செய்த சதியிலிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்றும் முயற்சியில்
இறங்கிய போது எத்தனையோ முறை அவன் தம்பி மரணத்தை மயிரிழையில் உரசி இருக்கிறான். பெற்ற
தாய் கூட எதிரிகளிடம் பிணயக்கைதியாய் சிக்க வேண்டி வந்திருக்கிறது. அவனைத் தவிர
வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த சதி வலையில் இருந்து மீண்டு வந்திருக்க
முடியாது.
அப்போது இழந்த கௌரவத்தை தலிபான்
தீவிரவாதிகளால் இன்று வரை ஜீரணிக்க முடிந்ததில்லை. அவர்கள் அமானுஷ்யன் என்ற
எதிரிக்காக இன்றும் காத்திருக்கிறார்கள். அவன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான்
என்பதை அறிய அவர்கள் செய்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் அவனை கொல்பவர்களுக்கு ஒரு
மில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக தலிபான் தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்திலும், தங்கள் நட்பு இயக்கங்களிலும் அறிவித்தார்கள்.
அதனால் அமானுஷ்யனை அவர்களிடம் இருந்து மறைத்து
வைக்க ஆனந்த் பெரும்பாடு பட்டிருக்கிறான். ஆனந்த் உட்பட அவனுடன் சம்பந்தம்
வைத்திருந்த அத்தனை நெருக்கமானவர்களும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டி
வந்தது. ஏனென்றால் தலிபான் தீவிரவாதிகளின் விசுவாசிகள் அவர்கள் ஒவ்வொருவர்
பின்னாலும் பல காலம் நிழலாய் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவன் அமானுஷ்யனிடம்
தங்களைக் கொண்டு போய் விடுவான் என்று நம்பினார்கள். மூன்று வருடங்கள் கழித்து
அமானுஷ்யன் அமெரிக்காவில் ஒரு ரகசிய இடத்தில் செட்டில் ஆகி புது வாழ்க்கை வாழ
ஆரம்பித்து விட்டதாக ரகசிய வதந்தியை ஆனந்த் கிளப்பி விட்டான். பலரையும் பேச வைத்து
நம்ப வைத்தான். ஆனாலும் கூட தலிபான் தீவிரவாதிகளின் ஆட்கள் தங்கள் ரகசியப் பின்
தொடரலை நிறுத்தவில்லை. முக்கியமாக ஆனந்தை பெரும் நம்பிக்கையுடன் கண்காணித்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் தீவிரம் குறைந்து
போனது. ஆனாலும் முன்னெச்சரிக்கையின் காரணமாக ஆனந்த் தன் தம்பியை நேரில் சென்று
பார்ப்பதையோ, போனில் தொடர்பு கொள்வதையோ நீண்டகாலம் முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தான்.....
பாரதப் பிரதமரின் போன் அழைப்பு தலாய் லாமாவுக்கு வந்த போது தனதறையில்
இருந்து ரகசியமாய் சோடென்னும் ஒட்டுக் கேட்டான். பாரதப் பிரதமர் தலாய் லாமாவிடம்
ரத்தினச் சுருக்கமாய் சொன்னார்.
“நாங்கள் அவனுக்குத் தகவல் அனுப்பி
இருக்கிறோம். அவன் சம்மதித்தால் தொடர்பு கொள்வான்”
தலாய் லாமா தன் நன்றிகளை பாரத
பிரதமருக்குத் தெரிவித்தார். பிரதமர் தன் வணக்கங்களைத் தெரிவித்து விட்டு பேச்சை
முடித்துக் கொண்டார். தலாய் லாமா அமானுஷ்யனின் பதிலுக்காகக் காத்திருக்க
ஆரம்பித்தார். காத்திருப்பில் பிரார்த்தனையும் கலந்து கொண்டது. காத்திருப்பும்
பிரார்த்தனையும் நீள ஆரம்பித்தன....
சோடென் பாரதப் பிரதமர் தலாய் லாமாவிற்கு அனுப்பிய
செய்தியை அப்படியே வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான். வாங் சாவொ தலாய் லாமாவை கண்கொத்திப் பாம்பாய்
கண்காணிக்கச் சொன்னான். அவரை யார் எல்லாம் வந்து சந்திக்கிறார்கள், என்ன எல்லாம்
சொல்கிறார்கள் என்ற தகவல்கள் தனக்கு அவ்வப்போது உடனடியாக வந்து சேர வேண்டும் என்று
கட்டளை இட்டான். தலாய் லாமாவைச் சந்திக்க வரக்கூடும் என்று அவர்கள் நம்புகிற ஆள்
மிக முக்கியமான ஆள் என்பது சோடென்னுக்குப் புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து சோடென்
உடம்பெல்லாம் கண்ணும் காதுமானான்....
அதே நேரத்தில் புதுடெல்லியில் முழுத்தலையும் நரைத்த டாக்சி டிரைவர்களை எல்லாம்
தேடிப்பிடித்து க்வாங் சாவொவின் ஆட்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்கள்.
புதுடெல்லி விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களில் ஒருவர் கொண்டு
போய் விட்ட அந்த வழுக்கைத் தலையரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் மிக
மும்முரமாக இருந்தார்கள்...
(தொடரும்)
-என்.கணேசன்
(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)