புதுடெல்லியில் தலாய் லாமா இறங்கிய கணம் முதல் தலாய் லாமாவைக்
கண்காணிக்க ஆரம்பித்த லீ க்யாங்கின் ஆட்கள் அவனுக்கு தொடர்ந்து தகவல்கள்,
புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். லீ க்யாங்
தன் முழுக்கவனத்தையும் அவற்றில் செலுத்தி கவனித்து வந்தான். இடையிடையே
தொலைக்காட்சிகளில் தலாய் லாமாவின் புதுடெல்லி விஜயம் குறித்து வந்து கொண்டிருக்கும்
செய்தி ஒளிபரப்பையும் கூட அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
தலாய் லாமாவிடம் புதுடெல்லி வந்த காரணத்தை
நிருபர்கள் கேட்ட போது புதிய பிரதமரை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்து வாழ்த்த
வந்தேன் என்றார். யாருக்கும் அதில் சந்தேகம் தோன்றவில்லை. அடைக்கலம் புகுந்த
நாட்டின் புதிய பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துவது இயல்பு தானே. ஆனால் கடந்த வாரம்
வாழ்த்துச் செய்தி அனுப்பியவர் இந்த வாரமே நேரில் சந்திக்க வந்த பின்னணி அறிந்த லீ
க்யாங் சீனாவில் இருந்த போதும் நேரில் பார்ப்பது போல் அவரது ஒவ்வொரு
நடவடிக்கையையும் கூர்மையாகப் பார்த்தான். ஏதாவது ஒரு சின்னத் தகவல் கிடைத்தாலும்
புத்திசாலித்தனமாக முயன்றால் அதிலிருந்து முழு உண்மை நிலவரத்தையும் கூட பெற்று விட
முடியும்....
இப்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும்
வீடியோ புதுடெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கிய பின் எடுத்தது. அரசின் தரப்பில்
இருந்து வந்திருந்த ஒரு மந்திரி அவரை வரவேற்று முடித்த பின் அவரை இந்தியாவில்
வாழும் திபெத்தியர் கூட்டம் வணங்கி வரவேற்றது. அதை அடுத்து வேறு சில
பார்வையாளர்களும் அவரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். எல்லோரிடமும் புன்சிரிப்புடன்
ஒருசில வார்த்தைகள் பேசியபடி தலாய் லாமா நகர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது தான் சுமார் ஐம்பத்தைந்து வயது
மதிக்கத்தக்க ஒரு வழுக்கை மனிதர் தலாய் லாமாவை நெருங்கினார். அவர் தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டது போல் இருந்தது. தலாய் லாமா புன்சிரிப்புடன் அவர்
கைகளைக் குலுக்கி விட்டு எதோ கேட்டார். அந்த மனிதர் எதோ பதில் சொன்னார். தலாய்
லாமாவின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு அப்படியே உறைந்தது....
அதை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த லீ
க்யாங் நிமிர்ந்து உட்கார்ந்து முழுக்கவனமானான்.
அந்த மனிதர் தலாய் லாமாவிடம் மேலும் என்னவோ
சொன்னார். தலாய் லாமா முகத்தில் இப்போது அதிர்ச்சி தெளிவாகவே தெரிந்தது. தலையை
மட்டும் லேசாக அசைத்தார். அந்த நபர் அவரைக் கைகூப்பி வணங்கி விட்டு நகர்ந்தார்.
அதன் பின் வேறு சிலர் தலாய் லாமாவை வணங்கி விட்டு ஒருசில வார்த்தைகள் பேசினார்கள்.
ஆனால் அவர்கள் பேசியதில் தலாய் லாமாவின் கவனம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
எந்திரத்தனமாய் புன்னகைத்து ஓரிரு வார்த்தைகள் பேசினார். பின் அவர் திரும்பி
யாரையோ பார்த்தார். அவர் பார்த்தது பெரும்பாலும் அந்த வழுக்கைத் தலையரையாகத் தான் இருக்க
வேண்டும் என்று லீ க்யாங் நினைத்தான். வந்திருந்த மற்றவர்களுடன் சம்பிரதாயமாகப்
பேசிவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது தலாய் லாமா நிறையவே
பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தலாய் லாமா காரில் ஏறியவுடன் அந்த வீடியோ
முடிந்தது. அந்த வீடியோவில் அவர் அந்த வழுக்கை ஆசாமியுடன் பேசிக் கொண்டிருந்த
காட்சியை மட்டும் லீ க்யாங் பரபரப்புடன் பல முறை பார்த்தான். அந்த வழுக்கை ஆசாமி
அதற்கு முன் தலாய் லாமாவுடன் அறிமுகமில்லாதவர் என்பதை லீ க்யாங் யூகித்தான். அவர்
அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னது தலாய் லாமாவின் கவனத்தை ஈர்த்தது என்பதும் அவர்
முகபாவனையில் இருந்து தெரிந்தது. அடுத்ததாய் தலாய் லாமா அந்த வழுக்கை மனிதரிடம்
ஏதோ கேட்டதிலும் ஒரு ஆர்வம் தெரிந்தது. அதன் பின் வந்த பதில் தான் தலாய்
லாமாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. கேட்ட கேள்விக்கு வந்த பதில் அவர் சற்றும்
எதிர்பாராதது மட்டுமல்ல தூக்கிவாரிப்போட்ட பதிலாகவும் இருந்திருக்கிறது. வழுக்கை
மனிதர் அவரிடம் பேசிய பேச்சு மைத்ரேய புத்தரைப் பற்றியதாக இருந்திருக்கலாமோ?
லீ க்யாங் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
இந்தியத் தலைநகருக்கு தலாய் லாமா வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் 27 நிமிடம்
ஆகியிருந்தது. போனில் வாங் சாவொவிடம் பேசினான்.
“புதுடெல்லி விமான நிலையத்தில் எடுத்த
தலாய் லாமா வீடியோவில் 18.29 லிருந்து 19.47 வரை தலாய் லாமாவிடம் பேசுகிற ஆள் யார்
என்று உடனடியாக கண்டுபிடிக்கச் சொல். அங்கிருந்து அவன் எங்கே போனான் என்றும் கண்டுபிடிக்கச்
சொல்.... தலாய் லாமா இருக்கும் அறையிலிருந்து கொண்டு யாரிடம் எல்லாம் பேசினார்
என்றும் பார்க்கச் சொல்.... இதே போல மாலை பிரதமரை சந்திக்கப் போகும் போதும் நம்
ஆட்கள் பார்வை அவர் மேல் தொடர்ந்து இருக்க வேண்டும்.....”
லீ க்யாங் தொடர்ந்து செய்தி
தொலைக்காட்சிகளில் எங்காவது அந்த நபர் தெரிகிறாரா என்று பார்த்தான். எல்லா
செய்திகளும் மந்திரி வரவேற்பதையும், திபெத்தியர்கள் வரவேற்பதையும் மட்டுமே
திரும்பத் திரும்ப போட்டன. புகைப்படங்களைப் பார்த்தான். ஒரே ஒரு புகைப்படத்தில்
அந்த வழுக்கைத் தலையர் கையில் ஒரு சூட்கேஸோடு இருப்பது தெரிந்தது. ’அந்த ஆளும் ஒரு
பயணியாக இருக்கலாம். பயணம் செய்து விட்டு வந்தவனாகவோ, பயணம் போகப் போகிறவனாகவோ
இருக்கலாம். தலாய் லாமாவை விமான நிலையத்தில் பார்த்த பிறகு பேசி விட்டுப் போக
முடிவு செய்திருக்கலாம். யாரவன்?... என்ன பேசினான்?....’
அந்த வீடியோவில் தலாய் லாமா
திரும்பிப்பார்த்த காட்சியில் நிறுத்தி தலாய் லாமாவின் முகத்தில் தெரிந்த
உணர்ச்சிகளை மறுபடியும் அவன் கவனித்தான். இன்னும் அந்த முகத்தில் திகைப்பு
இருந்தது. ஏதோ நம்ப முடியாத காட்சியைப் பார்த்த ஒருவன் பார்த்தது நிஜம் தானா என்று
இன்னொரு முறை பார்த்து உறுதிப்படுத்துவது போல் இருந்தது அந்தப் பார்வை.
இன்னொரு முறை அந்த வீடியோவை 18.29 முதல் ஓட
விட்ட லீ க்யாங் இந்த முறை தலாய் லாமாவின் பின்னால் மிக அருகில் நின்று
கொண்டிருந்த இரண்டு புத்த பிக்குகளைக் கண்காணித்தான். ஒருவர் எங்கேயோ வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் தனக்கும் பின்னால் இருந்த இன்னொரு
பிக்குவிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் கவனம் கூட அந்த வழுக்கைத்
தலையர் தலாய் லாமாவிடம் பேசியதில் இருக்கவில்லை.
சிறிது நேரத்தில் வாங் சாவொ போன் செய்தான்.
அந்த வழுக்கைத் தலையர் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று
சொன்னான். அந்த சமயத்தில் வந்து சேர்ந்திருந்த வேறு இரண்டு விமானங்களில் இருந்து
இறங்கி வந்து கொண்டிருந்த ஆட்களும், அடுத்து கிளம்பவுள்ள மூன்று விமானங்களுக்குப்
போகிற ஆட்களும் நிறையவே இருந்தார்கள் என்று வாங் சாவொ சொன்னான். அந்த வழுக்கைத்
தலையர் வந்த பயணியாகவோ, போன பயணியாகவோ இருக்கலாம் என்றான்.
லீ க்யாங் உடனடியாகச் சொன்னான்.
“விமானநிலைய காமிரா பதிவுகளில் முழு விவரமும் இருக்கும்.... அதை பார்க்கச்
சொல்.... ரகசியம் முக்கியம்...”
ரகசியம் என்பது உளவாளிகளின் உயிர்நாடி
என்பதை வாங் சாவொ போன்ற அனுபவஸ்தனிடம்
சொல்லத் தேவை இல்லை என்ற போதும் ரகசியம் முக்கியம் என்பதை லீ க்யாங் அழுத்திச்
சொன்ன விதம் இதில் மேலும் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதை வாங் சாவொ
புரிந்து கொண்டான்.
தலாய் லாமா தான் தங்கி இருந்த இடத்தில்
இருந்து மாலை 5.25 மணிக்கு பிரதமரைச் சந்திக்கக் கிளம்பினார். ஆறு மணிக்கு
பிரதமரைச் சந்தித்த அவர் 6.40 மணிக்கு சந்திப்பு முடிந்து வெளியே வந்தார். வரவேற்கவும்,
வழியனுப்பவும் பிரதமர் வெளியே வந்தது பிரதமர்
தலாய் லாமா மீது வைத்திருந்த மிகுந்த மரியாதையைக் காட்டியதாக தொலைக்காட்சி
செய்திகள் தெரிவித்தன.
முதலில் தொலைக்காட்சியிலும் பின்னர் தனக்கு
அனுப்பப்பட்ட வீடியோவிலும் லீ க்யாங் தலாய் லாமாவைக் கூர்ந்து கவனித்தான்.
காலையில் அந்த வழுக்கைத் தலையருடன் பேசி விட்டு ஏற்பட்ட அதிர்ச்சியை மாலைக்குள்
தலாய் லாமா ஜீரணித்திருந்ததாகத் தோன்றியது. ஆனாலும் ஒருவித கவலை அவரை ஆக்கிரமித்திருப்பது அவனது கூரிய
பார்வைக்குத் தப்பவில்லை....
தலாய் லாமா உண்மையிலேயே கவலையுடன் தான் இருந்தார். தியானம் செய்ய அமர்ந்திருந்த
அவருக்கு தியானம் கைகூடுவதாக இல்லை. எத்தனை தான் அறிந்திருந்தாலும் அந்த ஞானத்தை
மனம் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள ஏன் தான் மறுக்கிறதோ?...
அறைக்கு வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரி
மெல்ல கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். தலாய் லாமா என்ன என்று கேட்டார். பாதுகாப்பு
அதிகாரி தன் கைபேசியை அவரிடம் நீட்டினார். ஆசான்....!
அந்த பாதுகாப்பு அதிகாரியின் தந்தை தலாய்
லாமாவின் நெருங்கிய பக்தராக இருந்தவர். எனவே அந்த பாதுகாப்பு அதிகாரி தலாய்
லாமாவின் நம்பிக்கைக்கு மிகவும் உகந்தவராய் இருந்தார். அதனால் ஆசான் தர்மசாலா
வந்திருந்த போது அவசரத்திற்குப் போன் செய்ய அந்த பாதுகாப்பு அதிகாரியின் மொபைல்
எண்ணை ஆசானுக்குத் தந்திருந்தார்.
வாங்கிக் கொண்ட தலாய் லாமா பாதுகாப்பு
அதிகாரியைப் பார்த்து தலையசைக்க பாதுகாப்பு அதிகாரி வணங்கி விட்டு வெளியேறினார்.
“ஹலோ”
“டென்சின் இந்தியப்பிரதமர் என்ன
சொல்கிறார்?”
”அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை,
மறுக்கவும் இல்லை. அவர்களுடைய உளவுத்துறையிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாகச் சொல்லி
இருக்கிறார்.”
“நீ சொன்னாயா அவசரம் என்று?”
“சொன்னேன். இரண்டு நாளில் சொல்வதாகச்
சொல்லி இருக்கிறார்”
ஆசான் பெருமூச்சு விட்டார். “நிமிஷங்களே
யுகங்களாகப் போய்க் கொண்டு இருக்கிறது.... இரண்டு நாட்கள் இப்போதைக்கு நமக்கு
நீண்ட காலம் தான் டென்சின்... சரி பார்க்கலாம். இத்தனை நாள் இல்லாத ஆபத்து இனி
திடீரென்று வருவதற்கு இதுவரை காரணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சொன்னது மௌன
லாமாவானதால் தான் யோசனை....”
“மௌன லாமா சொன்னது எந்த நேரமும் நடக்கலாம்,
ஆசானே. ஆபத்து எந்த ரூபத்தில் வரப் போகிறது என்பதை போதிசத்துவர் இன்று காலையிலேயே
உணர்த்தி விட்டார்.”
ஆசான் குரல் பலவீனமாகக் கேட்டது.
“டென்சின்...”
தலாய் லாமா அன்று காலை அந்த வழுக்கைத்தலை
ஆசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றி விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்....
லீ
க்யாங் வாங் சாவொவிற்குப் போன் செய்தான்.
வாங் சாவோ சொன்னான். “நம் ஆள் இப்போது தான்
விமான நிலைய பாதுகாப்பு காமிரா பதிவுகளைப் பார்க்கப் போயிருக்கிறான். இரவுக்குள்
ஏதாவது தகவல் கிடைக்கும் சார். கிடைத்தவுடன் சொல்கிறேன்...”
“சரி. நாளை காலை டெல்லியில் இருக்கும் நம்
ஆள் ஒருவனை காலை ஏழு மணிக்கு லோடி கார்டனில் ஜாகிங் போகச் சொல். போகும் போது ரோஸ்
கலர் டீ ஷர்ட்டும் பேண்ட் பாக்கெட்டில் வெளியே தெரிகிற மாதிரி வெள்ளை கர்சீஃப்பும்
இருக்கட்டும்.... பிரதமர் அலுவலகத்து நிலவரத்தை ஒரு ஆள் அவனிடம் சொல்வான்.....”
லீ க்யாங்கின் செல்வாக்கும் தொடர்பும்
எங்கெல்லாம் இருக்கிறது என்று வாங் சாவொ வியந்தான்.
அன்றைய அனைத்து சந்திப்புகளும் முடிந்த பின்னும் இந்தியப் பிரதமருக்கு தலாய் லாமாவின் சந்திப்பின் தாக்கம் இருந்து கொண்டிருந்தது. தலாய் லாமா சொன்னதெல்லாம் ஒரு கதை போல் இருந்தது. ஆனால் அதை மிகவும் உணர்ச்சிபூர்வமாகச் சொன்ன தலாய் லாமா, அதை நூறு சதவீதம் நம்பியதாகத் தெரிந்தது.
எதுவாக இருந்தாலும் இது விஷயமாக நேரடியாக உதவி செய்து சீனாவுடன் மோதலுக்குத் தயாரில்லை என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவை நாடுவதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்ன போது தலாய் லாமா மறுக்கவில்லை. ஒரே ஒரு மனிதனை மட்டும் தங்கள் உதவிக்கு அனுப்ப தலாய் லாமா சொன்ன போது பிரதமருக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் என்று கேட்ட போது தலாய் லாமா ஒரு பெயரைச் சொன்னார்.
அன்றைய அனைத்து சந்திப்புகளும் முடிந்த பின்னும் இந்தியப் பிரதமருக்கு தலாய் லாமாவின் சந்திப்பின் தாக்கம் இருந்து கொண்டிருந்தது. தலாய் லாமா சொன்னதெல்லாம் ஒரு கதை போல் இருந்தது. ஆனால் அதை மிகவும் உணர்ச்சிபூர்வமாகச் சொன்ன தலாய் லாமா, அதை நூறு சதவீதம் நம்பியதாகத் தெரிந்தது.
எதுவாக இருந்தாலும் இது விஷயமாக நேரடியாக உதவி செய்து சீனாவுடன் மோதலுக்குத் தயாரில்லை என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவை நாடுவதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்ன போது தலாய் லாமா மறுக்கவில்லை. ஒரே ஒரு மனிதனை மட்டும் தங்கள் உதவிக்கு அனுப்ப தலாய் லாமா சொன்ன போது பிரதமருக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் என்று கேட்ட போது தலாய் லாமா ஒரு பெயரைச் சொன்னார்.
என்ன பெயர் என்று மறுபடியும் கேட்டு அந்தப்
பெயரை உறுதி செய்து கொண்ட பிரதமர் “யாரது?” என்று கேட்டார்.
“எனக்கும் அந்த
மனிதரைப் பற்றி அதிகம் தெரியாது. உங்கள் உளவுத் துறை என்னை விட அதிக விவரங்கள்
உங்களுக்குச் சொல்லக்கூடும்”
பிரதமரின் ஆர்வம் அதிகரித்தது.
(தொடரும்)
-
என்.கணேசன்