அது பழைய காலத்து நூலகம். உள்பரப்பே சுமார் 4700 சதுர அடிகள் இருந்தது.
அடுத்த வருடம் 85ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அங்கு மிகப் பழைய அபூர்வ
புத்தகங்களும் கிடைக்கும், இரண்டு நாள்
முன்பு வெளியான பிரபல புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் வயதானவர்கள், இளைஞர்கள்,
அறிவு ஜீவிகள், பொழுது போக்கு புத்தகங்கள் படிப்பவர்கள் என்று எல்லா தரப்பு
உறுப்பினர்களையும் கொண்டது. பார்த்தசாரதி நூலகம் திறக்கப்படுவதற்காக வெளியே
காத்திருந்தார். அவரை இந்த நூலகம் வரை வர வைத்தது ஒரு மனக்கணக்கு தான்.
விசேஷ மானஸ லிங்கம்
பற்றிய தகவல்கள் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பே எழுதப்பட்ட புத்தகத்தில்
இருந்திருக்கிறது. அது அடிக்கடி திடீர் என்று ஒளிரும் தன்மை கொண்டிருக்கிறது என்ற
தகவலும் அதில் இருக்கிறது. ஆனால் பசுபதி பூஜித்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ
லிங்கம் என்பது வெளியுலகம் இத்தனை காலமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் பசுபதி
பூஜித்து வந்த சிவலிங்கமும் அடிக்கடி ஒளிர்வதை ஒருசிலர் பார்த்து இருக்கிறார்கள்.
அந்தத் தகவலும் இந்தத் தகவலும் யாரோ சிலருக்கு சமீபத்தில் தெரியவர, பசுபதி பூஜை
செய்து வந்த சிவலிங்கம் தான் விசேஷ மானஸ லிங்கமாக இருக்க வேண்டும் என்று
அனுமானித்திருக்கலாம் என்ற சந்தேகம் பார்த்தசாரதிக்கு வந்தது.
அதனால் சமீப காலமாக
யார் எல்லாம் அந்தப் புத்தகம் படித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்தால் ஏதாவது
துப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று எண்ணினார். அதைப் படித்த ஆட்கள்,
பசுபதியின் சிவலிங்கம் பற்றியும் தெரிந்த ஆட்களாய் இருந்தால் அதை வைத்து ஏதாவது
துப்பு துலக்கலாம் என்று தோன்றியது. இதில் ஒரு துப்பும் கிடைக்காமலும் போகலாம்,
இந்தக் கணக்கே தப்பாக இருக்கலாம் என்றாலும் இப்படிப்பட்ட கணக்குகளில் தான் அவர் பல
வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்திருக்கிறார். நீலகண்ட சாஸ்திரியின் மகன்
தன்னிடமுள்ள புத்தகத்தை பத்து வருடங்களுக்கு மேலாக யாரிடமும் தரவில்லை என்று
உறுதியாகச் சொன்னார். அதைப் பற்றி யாரிடமாவது பேசி அதற்கும் அதிக காலமாகி விட்டது
என்று சொன்னார். அதனால் அவர் மூலமாக இந்தச் செய்தி பரவி இருக்க வாய்ப்பில்லை...
நேற்று காலையில் நீலகண்ட சாஸ்திரி எழுதிய ”ஆன்மிக பாரதம்” என்ற பழைய காலத்துப் புத்தகம் நகரத்தில் எந்தெந்த
நூலகங்களில் இருக்கின்றன என்பதை விசாரிக்க ஆரம்பித்தார். மாலையில் தான் இரண்டு
நூலகங்களில் அந்தப் புத்தகம் ஒவ்வொரு பிரதி இருப்பது தெரிய வந்தது. மாவட்ட மைய
நூலகத்திலும், இந்த நூலகத்திலும் இருப்பது தெரிந்ததும் முதலில் மாவட்ட மைய
நூலகத்திற்குச் சென்றார்.
நீலகண்ட சாஸ்திரியின்
”ஆன்மிக பாரதம்” தூசி, சிலந்தி வலையுடன் ஆன்மிகப் பிரிவு அலமாரி ஒன்றில்
இருந்தது. வருடக்கணக்கில் அந்த நூல் படிக்கப்படவில்லை என்பது அதைப் பிரிக்கும்
போதே தெரிந்தது. பிரித்து 178வது பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டு வைத்தார்.
நூலக கம்ப்யூட்டரில் அந்தப் புத்தகத்தை கடைசியாகப் படிக்க எடுத்துச் சென்றது ஏழு
ஆண்டுகள் நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்கு முன்பு என்று குறிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து இந்த நூலகத்திற்கு நேற்று மாலையே வருவதாக இருந்தார். ஆனால் நூலகம்
மூடப்படும் நேரமாகி விட்டிருந்தபடியால் காலையில் வந்திருக்கிறார்.
நூலகம்
திறக்கப்பட்டவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பார்த்தசாரதி நூலக அதிகாரி
உதவியுடன் அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்துப் பார்த்தார். புத்தகத்தில் தூசி,
சிலந்தி வலை இல்லை. தனியார் நூலகம் என்பதால் அடிக்கடி தூசி தட்டி துடைத்து
வைக்கும் பழக்கம் இருக்கிறதோ என்று எண்ணியவராக புத்தகத்தைத் திறந்து பார்த்தார். புத்தகத்தின்
உள்ளே முதல் பக்கத்தில் ஒட்டி இருக்கும் நூலகக் குறிப்புக் காகிதம் இல்லை. நூலக
உறுப்பினர் எண், புத்தகம் திருப்பித் தர வேண்டிய தேதி ஆகியவை எழுதி வைக்கப்படும்
தாள் கிழிக்கப்பட்டிருந்தது. பார்த்தசாரதி அதைக் காண்பித்து விட்டுச் சொன்னார்.
“இந்தப் புத்தகத்தை இந்த ஒரு வருஷ காலத்தில் யாரெல்லாம் படிச்சிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டி இருந்தது. அந்தப் பக்கத்தையே கிழிச்சிட்டாங்களே”
ஆச்சரியப்பட்ட நூலக
அதிகாரி சொன்னார். “கொண்டு போகிற புத்தகத்தைப் பத்திரமாய் வைக்கிற பழக்கம் பல பேர்
கிட்ட கிடையாது. குழந்தைகள் கைல கிடைக்கிற மாதிரி புத்தகத்தை வச்சிடறாங்க.
குழந்தைகள் கிழிச்சிடறாங்க... பரவாயில்லை. இந்தத் தகவல் எங்க கம்ப்யூட்டர்ல
இருக்கும். வாங்க பார்த்துச் சொல்றேன்”.
அவர்
பார்த்தசாரதியைத் தனதறைக்கு அழைத்துச் சென்றார். கம்ப்யூட்டரில் தேடிய அதிகாரி
முகத்தில் திகைப்பு பெரிய அளவில் தெரிந்தது.
பார்த்தசாரதி
கேட்டார். “என்ன ஆச்சு?”
“ஏதோ வைரஸ் அட்டேக் போல இருக்கு. எந்தப்
புத்தகம் எடுத்ததற்கும் ரிகார்டு இங்கே இல்லை. எல்லாம் அழிஞ்சு போயிருக்கு... நேற்றைக்கு வரைக்கும்
சரியாய் தானே இருந்துச்சு...”
பார்த்தசாரதியின் சந்தேகம் உறுதிப்பட்டது.
புத்தகத்தில் ஒட்டி இருக்கும் தாளும் கிழிந்து போய் கம்ப்யூட்டரில் உள்ள
ரிகார்டுகளும் அழிந்து போய் இருப்பது இயல்பாக இல்லை. அவர் நேற்று போட்ட மனக்கணக்கை
யாரோ தெரிந்து கொண்டு வேகமாக இயங்கி இருக்கிறார்கள்.....
“இப்படி ஆகிறது உண்டா?” பார்த்தசாரதி கேட்டார்.
“என் சர்வீஸ்ல இப்படி
ஆனதில்லை சார்”
“நான் இந்தப் புத்தகம் பற்றிக் கேட்டதை
நீங்கள் யார் கிட்டயாவது சொன்னீங்களா?”
“இல்லையே சார். நானே தான் கம்ப்யூட்டரில்
தேடிப்பார்த்து இருக்கிறதைக் கண்டு பிடிச்சு சொன்னேன்....”
பார்த்தசாரதிக்கு அவர் சொல்வது உண்மையாக
இருக்கும் என்றே தோன்றியது. அப்படியானால் அவருடைய ஆபிசில் இருந்து தான் தகவல்
கசிந்திருக்க வேண்டும். சென்ற முறை சீர்காழியில் அந்த இளைஞனைத் தேடிப் போன போதும்
இதே தான் நிகழ்ந்திருக்கிறது....
பார்த்தசாரதி கேட்டார். “புத்தகங்களை
எடுத்துப் படிச்சவங்க பத்தின தகவல்கள் மட்டும் அழிஞ்சிருக்கா? இல்லை உங்க
உறுப்பினர்கள் பத்தின தகவல்கள் எல்லாம் சேர்ந்து அழிஞ்சு போயிருக்கா?”
“புத்தகங்களை எடுத்துப் போனதும்,
திருப்பித் தந்ததுமான தகவல்கள் மட்டும் அழிஞ்சு போயிருக்கு சார். உறுப்பினர் பத்தின தகவல்கள் எல்லாம் அப்படியே
இருக்கு”
“எத்தனை உறுப்பினர்கள் இருக்காங்க?”
“இன்றைய தேதியில் 18365 பேர் இருக்காங்க
சார். இதில் 12000 பேர் ரெகுலரா வந்து போறவங்க”
பரமேஸ்வரன் வீட்டு விலாசத்தைத் தந்த பார்த்தசாரதி
”இந்த
விலாசத்துல ஏதாவது உறுப்பினர் இருக்காங்களான்னு பாருங்கள்”.
அந்த நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார். ”மீனாட்சிங்கறவங்க பேர் இருக்கு. இது தொழிலதிபர் பரமேஸ்வரன் ஐயா பொண்ணு.
அவங்க அடிக்கடி இங்கே வர்றவங்க. அவங்க நல்ல மாதிரி ...”
பார்த்தசாரதி தலையாட்டினார். ”அவங்க இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிப்பாங்களா?”
”அவங்க அதிகம் நாவல்கள் தான் படிப்பாங்க. எப்பவாவது பக்திக்
கதைகளும் படிப்பாங்க. இந்த மாதிரி சீரியஸான புத்தகங்கள் எல்லாம் எடுத்துகிட்டு
போனதாய் எனக்கு நினைவில்லை....”
வேறு யாரெல்லாம் இதைப் படித்திருக்கலாம்
என்று தெரியவில்லையே என்று பார்த்தசாரதி யோசித்தார். புத்தகத்தை எடுத்துப் போய்
தான் படித்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இங்கேயே படிக்கிற ஆள்களும்
உண்டு. அப்படி யாராவது படித்திருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.
பார்த்தசாரதி எழுந்து கடிகாரத்தைப்
பார்த்தார். தென்னரசுவைப் பார்க்கப் போக வேண்டும்.... திடீர் என்று நூலக
அதிகாரியிடம் கேட்டார். “உங்க உறுப்பினர்கள்ல தென்னரசுங்கற பேர் இருக்கான்னு
பாருங்கள்”
நூலக அதிகாரி பார்த்துச் சொன்னார்.
“இருக்கு சார். அந்தம்மா அளவுக்கு இல்லைன்னாலும் இவரும் அடிக்கடி வர்றவர் தான்”
“இவர் எந்த
மாதிரியான புத்தகங்கள் படிப்பார்?”
நூலகர் சிறிது
யோசித்து விட்டுச் சொன்னார். “இவர் கொஞ்சம் சீரியஸ் ரீடிங் தான். அதிலும் இலக்கியம் அதிகம்
படிப்பார்.”
“இவர் இந்த
ஆன்மிக பாரதம் புத்தகத்தைப் படித்திருக்கலாமா?”
நூலகருக்கு உறுதியாகச்
சொல்லத் தெரியவில்லை.
பார்த்தசாரதி
அவருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார். ஈஸ்வரின் தந்தையுடன் சேர்ந்து சிறிய
வயதிலேயே சிவலிங்கம் ஒளிர்வதைப் பார்த்த நபர் தென்னரசு...... பரமேஸ்வரன்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்....
கணபதி
அதிகாலையில் இருந்தே நிறைய யோசித்தான். அரக்கு வைத்து மூடிய உறையில் வந்த அந்த
பத்தாயிரம் ரூபாயை பிள்ளையாருக்கு எப்படி செலவழிப்பது என்கிற யோசனை தான் அது.
பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருந்தாலும் இந்த பத்தாயிரம் ரூபாயில்
அதிகபட்சமாய் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். பிள்ளையாருக்குச்
செலவு செய்யப் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்தான்.
நேற்று மீதி
வைத்திருந்த அம்மாவின் சீடைகளைச் சாப்பிட்டுக் கொண்டே பிள்ளையாரிடம்
பேசினான். “பிள்ளையாரே, நான் இங்கே
உங்கப்பாவுக்குப் பூஜை செய்ய வந்த பிறகு நம் ரெண்டு பேருக்குமே யோகம் அடிக்க
ஆரம்பிச்சிருக்குன்னு தான் சொல்லணும். எனக்கும் உனக்கும் பட்டுவேஷ்டி கிடைச்சுது.
எனக்கு நாள் ஒண்ணுக்கு ஐநூறு ரூபாய் குருஜி தர்றதா சொல்லி இருக்காரு. எனக்கு
கிடைக்கிற மாதிரி உனக்கும் மொத்தமா பணம் கிடைச்சிருக்கு பாரேன்...”
மணியைப்
பார்த்தான். மணி 8.55. ஐந்து நிமிடங்களில் ருத்ர ஜபம் செய்ய ஐந்து நிமிடங்களில்
வந்து விடுவார்கள் என்று நினைத்தவன் கை கால் கழுவிக் கொண்டு வந்து அந்த செக்கை
எடுத்து இன்னொரு தடவை மகிழ்ச்சியாகப் பார்த்து விட்டு அந்த செக்கை சிவலிங்கத்தின்
அடியில் வைத்து ”எல்லாம் உன் கிட்ட வந்த ராசி” என்று சொல்லி
சாஷ்டாங்கமாக வணங்கினான்.
கண்களை மூடி
வணங்கி எழுந்தவன் கண்களைத் திறந்த போது சிவலிங்கம் திடீர் என்று ஒரு கணம் ஜோதியாய்
ஒளிர்ந்தது. மறு கணம் பழைய நிலையிலேயே சிவலிங்கம் இருக்க கணபதிக்கு தான் கண்டது
பிரமையா உண்மையா என்கிற சந்தேகம் வந்தது. அவன் உடலில் இன்னும் மயிர்கூச்செறிந்து
கொண்டிருந்ததைப் பார்த்த போது பார்த்த காட்சி உண்மை போல இருந்தது. கணபதி
திகைப்போடு சிவலிங்கத்தைப் பார்த்தான். குருஜி இதைச் சக்தி வாய்ந்த சிவலிங்கம்
என்று சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.
அவன்
திகைப்பில் இருந்து மீள்வதற்குள் நான்கு வேதபாடசாலை மாணவர்கள் ருத்ர ஜபம் செய்ய
வந்து விட்டார்கள்.
வந்தவர்கள்
முதலில் கதவை மூடிப் பிறகு ஜன்னல்களை எல்லாம் மூடினார்கள். எந்தக் காரணத்தைக்
கொண்டும் கணபதி ஜன்னல் வழியாகக் கூட ஈஸ்வரைப் பார்த்து விடக்கூடாது, வெளியேயும்
வந்து விடக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தது.
“ஏன் கதவையும்
ஜன்னல்களையும் மூடறீங்க?” கணபதி குழப்பத்துடன் கேட்டான்.
”ருத்ர ஜபம் பண்றப்ப வேற எந்த சத்தமோ தொந்திரவோ வந்துடக்
கூடாதுன்னு குருஜி சொல்லி இருக்கார்.”
கணபதி தலையாட்டினான். அவர்கள் பூஜை அறையில் இருந்தே பத்தடி தள்ளி உட்கார
மறுபடி குழப்பம் அடைந்த கணபதி சொன்னான். “இது ஏன் இவ்வளவு தள்ளி உட்கார்ந்து ஜபம் செய்யறீங்க.
பக்கத்துல வாங்களேன்”
இதற்குப் பதில்
உடனடியாக வரவில்லை. சிறிது கழித்து பலவீனமாய் அவர்களில் ஒருவன் சொன்னான்.
“பரவாயில்லை...”
அவர்கள்
ருத்ரஜபம் ஆரம்பிக்க கணபதி சிவலிங்கத்திற்கு அருகில் ஒரு ஸ்தோத்திர புத்தகத்தை
எடுத்து கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். ஆனால் மனம் ஸ்தோத்திரத்தில் இசையவில்லை.
சற்று முன் ஒளிர்ந்த சிவலிங்கம் பற்றியும், இப்போது தள்ளி உட்கார்ந்திருந்து ருத்ர
ஜபம் செய்யும் வேதபாடசாலை மாணவர்கள் பற்றியும் மனம் யோசித்தது.
‘இந்த
சிவலிங்கத்தின் சக்தி தெரிந்து தான் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் தள்ளி
பயபக்தியுடன் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது. இதன் சக்தி தெரியாமல் நான் தான் கொஞ்சம்
கூட பயபக்தி இல்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறேனோ’
அம்மா
தந்தனுப்பிய சீடையை நேற்றும் இன்றும் இறைவன் முன்னாலேயே கொறித்தது நினைவுக்கு வர
அவனுக்கு அவமானமாக இருந்தது. மேலும் ஏதோ கிழவி கதைப்பது போல தினமும் இந்த
சிவலிங்கம் முன்னால் உட்கார்ந்து கதைக்கிறோமே இது நியாயமா என்று மனசாட்சி கேட்க அவனுக்குப்
பெரியதாக குற்ற உணர்ச்சி பிறந்தது.
சிவனிடம்
மனதாரச் சொன்னான். ’சிவனே
என்னை மன்னிச்சுடு. எனக்கு படிப்பு மட்டுமல்ல, அறிவும் கிடையாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம்
எங்கம்மா, அக்காங்க, பிள்ளையார் இவங்க நாலு பேர் தான். சின்ன வட்டத்துலயே இருந்துட்டேன்.
இந்த மரியாதை, சுலோகம், ஜபம் இதெல்லாம் எனக்கு பிடிபட மாட்டேன்குது. இத்தனையும்
மீறி நீ எனக்கு இது வரைக்கும் நல்லதே செய்திருக்கிறாய். பெருந்தன்மையாய்
இருந்திருக்கிறாய். இனி மேல் நான் உன் கிட்ட ஒழுங்கா நடந்துக்கறேன். இது வரை
நடந்துகிட்டதைப் பொறுத்துக்கோ. முக்கியமாய் சீடையை உலகத்தில் முதல் தடவை பார்க்கிற
மாதிரி உன் முன்னாலேயே வாயில் போட்டுகிட்ட்து மகா தப்பு தான். ...பக்தியை விட
நாக்கு முந்திகிட்டது தப்பு தான் மன்னிச்சுக்கோ. அம்மா சீடையை நல்லா செய்வா. அதான்
அப்படி...”
சிவலிங்கத்திடம்
கணபதி பேசிக் கொண்டிருக்கையில் ஈஸ்வரின் கார் வேதபாடசாலைக்குள் நுழைந்தது. அவன்
வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த குருஜி ஜன்னல்
வழியாக மறைவில் நின்று ரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஈஸ்வர் காரை
விட்டு இறங்கப் போன போது காலடியில் சிவலிங்கம் தெரிய பதறி போய் காலை பின்னுக்கு
இழுத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அந்தரத்தில் தெரிந்த சிவலிங்கம் இன்று
வேதபாடசாலை மண்ணில் அவன் இறங்கப் போகும் இடத்தில் தெரிந்தது அவனுக்குத் திகைப்பாய்
இருந்தது. அவன் மறுபடி கீழே பார்த்தான். இப்போது சிவலிங்கம் காட்சி அளிக்கவில்லை.
ஆனாலும்
சிவலிங்கம் பார்த்த இடத்தில் காலை வைக்க ஈஸ்வருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு
கணம் யோசித்தவன் குனிந்து அந்த மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு இறங்கினான்.
(தொடரும்)
என்.கணேசன்