அந்த உறையில் இருந்து ஈஸ்வர் எடுத்த தாள் ஏதோ ஒரு பழைய ஆங்கிலப்
புத்தகத்தில் இருந்து கிழித்ததாக இருந்தது. அதில் ஒருசிறிய பத்தியையும், அடுத்த பெரிய
பத்தியையும் பக்கவாட்டில் யாரோ கோடிட்டிருந்தார்கள். ஈஸ்வர் பரபரப்புடன் படிக்க ஆரம்பித்தான்.
“இந்தியாவின் சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் பற்றி
மிக விரிவாகப் பார்த்து விட்டோம். அந்த சிவலிங்கங்கள் கால காலமாய் பக்தர்களைத்
தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. பழமை வாய்ந்த அந்த சிவலிங்கங்களைத்
தரிசித்த பின், இமயமலையிலிருந்து கன்யாகுமரி வரை பரந்து கிடக்கும் பாரதம் எத்தனை
சக்தி மையங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது என்று என்னால்
ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தரிசிக்க முடிந்த நானும் எத்தனை பாக்கியவான்
என்று பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை.”
”ஆனாலும் என் மனதில் சிறியதொரு ஏக்கம் இருக்கத்தான்
செய்கிறது. நான் காண ஆசைப்பட்ட இரண்டு சிவலிங்கங்களைக் காணும் பாக்கியம் எனக்குக்
கிடைக்கவில்லை. இரண்டும் சித்தர்கள் சம்பந்தப்பட்டது. இந்தியாவின் உண்மையான
சித்தர்கள் இன்றைய போலி சாமியார்கள் மற்றும் தங்களையே சித்தர்கள் என்று சுய
அறிமுகம் செய்து கொள்ளும் ஆசாமிகள் போல நம் கண்ணில் தென்படுவதில்லை. ஏதாவது ஒரு
காரணம் இருந்தால் ஒழிய, அவர்களே காணப்பட வேண்டும் என்று எண்ணினால் ஒழிய எப்போதும்
மறைவாகவே இருப்பார்கள். சில சமயங்களில் வேறு சாதாரண ஆட்கள் போல பார்வைக்குத்
தென்படுவதுண்டு. சரி சித்தர்களை விட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்.
சித்தர்கள் உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட இரண்டு சிவலிங்கங்களை எவ்வளவோ முயன்றும்
என்னால் பார்க்க முடியவில்லை. முதலாவது இமயமலையில் சித்தர்கள் வைத்து பூஜிப்பதாய்
சொல்லப்பட்ட நவபாஷாண லிங்கம். எத்தகைய கொடிய வியாதி இருந்தாலும் அந்த நவபாஷாண
லிங்கத்தைப் பூஜிப்பவர்கள் அந்த வியாதியிலிருந்து விடுதலை பெற்று விடுவார்கள்
என்று சொன்னார்கள். ஏதோ ஒரு குகையில் இருப்பதாக அடையாளம் சொன்னார்கள். அவர்கள்
சொன்ன இடத்திற்குப் போய்ப் பார்த்தால் அப்படி ஒரு குகையே இல்லை. இன்னொரு
சிவலிங்கம் தமிழகத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட ஒரு விசேஷ மானஸலிங்கம். மானஸலிங்கம்
என்ற பெயரில் வேறு சில சிவலிங்கங்கள் இருந்தாலும் இது அவற்றைப் போல அல்ல. சித்தர்களால்
உருவாக்கப்பட்டு ரகசியமாய் பூஜிக்கப்பட்டு வந்த இந்த சிவலிங்கம் பொதுவான ஆகம
விதிக்களின் படி உருவாக்கப்பட்டதோ, பூஜிக்கப்பட்டதோ அல்ல என்கிறார்கள். ரகசிய
சூட்சும வித்தைகள் பலவற்றிலும் தேர்ச்சி அடைந்திருந்த சித்தர்கள் தங்கள் சக்திகளை
எல்லாம் ஆவாகனம் செய்து உருவாக்கி இருந்த அந்த சிவலிங்கத்தின் சக்தி எல்லை
இல்லாதது என்கிறார்கள். அதை வைத்து ஒரு கோயில் கட்ட முதலாம் ராஜேந்திரச் சோழனின்
மகன் ஆசைப்பட்டு அதைத் தர சித்தர்களை வற்புறுத்த அவன் விரைவிலேயே ஒரு போரில்
மாண்டு போனதாகச் சொல்கிறார்கள். பல நூறு வருடங்களாக சித்தர்களிடமும், சித்தர்கள்
தேர்ந்தெடுக்கும் ஆட்களிடமும் இருந்து வரும் அந்த சிவலிங்கம் பிரமிக்கத் தக்க
சக்திகளை அளிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள். அந்த விசேஷ மானஸ லிங்கத்தை
சித்தர்களிடமிருந்து தங்கள் வசம் எடுத்துக் கொள்ள ஒருசிலர் செய்த முயற்சிகளும்
மரணத்திலோ, பைத்தியம் பிடிப்பதிலோ தான் முடிந்தன என்றும் சொல்கிறார்கள். திடீர் என்று சில வினாடிகள் ஒளிரக் கூடியதாகசவும்
சொல்லப்படும் அந்த சிவலிங்கத்தை ஒருமுறை தரிசிக்கவும் நான் ஆசைப்பட்டேன். ஆனால்
அது தற்போது இருக்கும் இடத்தை என்னால் அறிய முடியவில்லை. நவபாஷாண லிங்கமும், விசேஷ
மானஸ லிங்கமும் நிஜமாகவே இருக்கின்றனவா இல்லை சிலரின் கட்டுக்கதையா என்று இன்று
வரை எனக்கு புரியவே இல்லை”
ஈஸ்வர் அதை இரண்டு முறை படித்தான். முதல்
முறை அவசர அவசரமாகவும் இரண்டாவது முறை நிதானமாகவும் படித்தான். அந்தப்
புத்தகத்தாளின் மேலே ஆன்மிக பாரதம் என்று எழுதி இருந்தது அந்தப் புத்தகப் பெயராக
இருக்க வேண்டும் என்று அனுமானித்தான். கீழே நீலகண்ட சாஸ்திரி என்று எழுதியவர்
பெயரும் இருந்தது. பக்க எண் 178 என்று இருந்தது. தாளின் பின்புறம் ஒரு
சிவலிங்கத்தை மூன்று சித்தர்கள் பூஜிப்பது போல படம் வரையப் பட்டிருந்தது. அந்தப்
படம் இருந்திரா விட்டால் அந்தப் பக்கத்தில் என்ன எழுதியிருந்தது என்று
தெரிந்திருக்கும்....
அந்த விசேஷ மானஸ
லிங்கம் தான் பசுபதி பூஜித்து வந்தது என்பதில் இப்போது ஈஸ்வருக்கு சந்தேகமே இல்லை.
அதைப் பார்க்காமலேயே கேள்விப்பட்டதில் இருந்து நீலகண்ட சாஸ்திரி என்பவர் எத்தனையோ
வருடங்களுக்கு முன் தன் புத்தகத்தில் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அந்தப்
புத்தகத்தில் இருந்து குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை மட்டும் கிழித்து அந்த
சிவலிங்கத்தின் புகைப்படத்தின் பின் ஃபிரேமிற்குள் வைத்தது அவனுடைய கொள்ளுத்
தாத்தாவாகத் தான் இருக்க வேண்டும். எந்த நோக்கத்தில் வைத்தார் என்று சரியாக அவனால்
யூகிக்க முடியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வைத்தாரா, இல்லை ஒரு நாள் இது
தேவைப்படலாம் என்று வைத்தாரா, இல்லை வேறு காரணம் இருக்குமா என்று தெரியவில்லை.
அந்த சிவலிங்கத்தைத்
திருட நினைத்தவர்கள் இறந்திருக்கிறார்கள், பைத்தியமாகி இருக்கிறார்கள் என்றெல்லாம்
சொன்னதும் வெறும் கற்பனை அல்ல என்பது இப்போது நடந்த முயற்சியில் பிணமாகிக் கிடந்த
ஒருவனை நினைக்கும் போது தெரிகிறது. ஆனாலும் அதையும் மீறி சிவலிங்கம் களவு
போயிருப்பது ஈஸ்வரை நிறைய யோசிக்க வைத்தது. திருடிய சிவலிங்கம் இப்போது எங்கே
இருக்கிறது. திருட்டில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் என்ன ஆனார்கள்?
”ஏண்டா தூங்கிட்டியா?” ஆனந்தவல்லியின் சத்தம்
கேட்ட்து.
“இதோ வந்துட்டேன்
பாட்டி” என்று ஈஸ்வர் சத்தமாகச் சொன்னான்.
அவன் வாயால்
கூப்பிடும் போது பாட்டி என்கிற சொல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று
நினைத்தவளாக ஆனந்தவல்லி புன்னகை செய்தாள்.
அந்த சிவலிங்கத்தின்
புகைப்படத்தைத் திரும்பவும் அந்த ஃபிரேமிற்குள் வைத்து பழைய நிலைமையிலேயே வைத்து
விட்டு, அந்தத் தாளை மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ஈஸ்வர்
பெட்டியை மூடி வைத்து விட்டுக் கீழே இறங்கினான்.
“எல்லாம்
பார்த்தியாடா?” ஆனந்தவல்லி கேட்டாள்.
“ம்”
“அந்தப் பெட்டில இருக்கிற பட்டு வேட்டி,
சட்டை, அங்கவஸ்திரம் எல்லாம் அவர் கடைசியா போட்டுகிட்டிருந்தது. அவர் அதைப் போட்டுகிட்டு
சபைல நடந்தா அத்தனை பேரும் எழுந்திருச்சு நிப்பாங்க” ஆனந்தவல்லி
பெருமையாகச் சொன்னாள்.
”கேள்விப்பட்டேன். உங்களைத் தவிர எல்லாரும் அவரை
மரியாதையா தான் நடத்தினாங்கன்னு சொன்னாங்க” அவன்
குறும்பாகச் சொல்ல ஆனந்தவல்லி பக்கத்தில் தடி எதாவது இருக்கிறதா என்று சுற்றும்
முற்றும் பார்த்தாள். அவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடினான். ஆனந்தவல்லி தன்
கணவரின் படத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். “உங்க கொள்ளுப் பேரனைப்
பார்த்தீங்களா? பார்க்க உங்க மாதிரின்னாலும் கோபத்திலயும் பிடிவாதத்துலயும் என்னை
மாதிரி....”
ஈஸ்வர் தனதறைக்குள் நுழைந்தவுடன்
பின்னாலேயே மகேஷ் நுழைந்தான். அவன் ஈஸ்வர் கையில் வேறெதாவது வைத்திருக்கிறானா
என்று பார்த்தான். பின் மெல்லக் கேட்டான்.
“கிழவி கிட்ட இருந்து ஏதாவது துப்பு கிடைச்சுதா?”
ஈஸ்வர் கேட்டான். “எது சம்பந்தமா?”
மகேஷுக்கு திடீர் என்று என்ன சொல்வது என்று
தெரியவில்லை. பின் சொன்னான். “அந்த சிவலிங்கம் சம்பந்தமாவோ, பெரிய தாத்தா இறந்தது சம்பந்தமாவோ
தான்...”
ஈஸ்வர் சொன்னான். “அந்த சிவலிங்கத்தோட
போட்டோ மட்டும் தான் அங்கே இருந்துச்சு. போட்டோ வச்சுகிட்டு என்ன செய்ய? நீ அந்த
சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறியில்ல... நீ அந்த சிவலிங்கத்தைப் பத்தி என்ன
நினைக்கிறாய்?”
“அது சாதாரண சிவலிங்கம் மாதிரி தான் இருந்துச்சு... ஏன் நீயும் அது சக்தி வாய்ந்த சிவலிங்கம்னு நம்பறியா?”
“ஆமா.... அப்படி இல்லாட்டி அதைப் போய்
யாராவது கடத்துவாங்களா? அதுவும்
ஒரு கொலைய செஞ்சுட்டு”
மகேஷ் ஒன்றுமே சொல்லாமல் அவனையே
பார்த்தான். பின் சொன்னான். “அதுக்கு ரொம்ப சக்தி இருக்கறதா ஆரம்பத்துல சொன்னது
உன் அப்பா தானாம். அது மின்னுது அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லி பெருசு
பண்ணிட்டார்.”
உள்ளே எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டவனாய்
ஈஸ்வர் சொன்னான். ”ஆனா அவர் சொன்னதை அப்ப யாரும் பெரிசுபடுத்தல. அப்ப
எதுவும் நடந்துடவுமில்லை. கிட்டத்தட்ட 40 வருஷம் கழிச்சு கொலை நடக்குது, சிலை கடத்தப்பட்டிருக்குன்னா
வேற யாரோ கூட அதே மாதிரி வித்தியாசமா எதாவது பார்த்திருக்கலாம்னு தோணுது. அதுவும்
சமீப காலத்துல பார்த்திருக்கலாம்...”
மகேஷ் சற்று தயங்கி விட்டுச் சொன்னான்.
“இருக்கலாம். கிழவிக்கு ஏதாவது தெரியுமா?”
“பெருசா எதுவும் தெரிஞ்ச மாதிரி இல்ல.
இன்னும் உன் தாத்தா கிட்ட தான் இன்னைக்கு ராத்திரி பேசணும். அவர் தான் அடிக்கடி
தோட்ட வீட்டுக்குப் போனவர்....”
அதற்கு மகேஷ் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால்
அன்றிரவு ஈஸ்வர் பரமேஸ்வரனைப் பார்த்துப் பேசிய போது அவனும் அருகில் கண்கொத்திப்
பாம்பு போல் கவனித்துக் கொண்டிருந்தான். மீனாட்சியும், ஆனந்தவல்லியும் கூட
அங்கிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் அவனும் பரமேஸ்வரனும் எப்படி பேசிக்
கொள்கிறார்கள் என்று பார்க்க ஆசை. இருவருக்கும் இடையே சுமுகமான அன்பு வந்து விடாதா
என்ற நப்பாசை. இருவருக்குமிடையே சண்டை ஏதாவது வந்து விடக்கூடாதே என்ற பயம்...
ஆனால் ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் பனிப்பார்வை
காட்டவில்லை. கோபம் காட்டவில்லை. குத்தல் பேசவில்லை. அது பரமேஸ்வரனுக்குப் பெரிய ஆசுவாசத்தைத்
தந்தது. ஆனால் அதே நேரத்தில் அவன் அவரைத் தாத்தா என்று அழைக்கவும் இல்லை. ஒரு
பேட்டியாளனாகத் தான் அவரிடம் அவன் கேள்விகள் கேட்டான். பார்த்தசாரதிக்கும்
இவனுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை அவரால் பார்க்க முடியாதது ஒரு உறுத்தலாக
இருந்தது.
ஈஸ்வர் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவை பார்த்தசாரதியும்
மற்ற போலீஸ்காரர்களும் கேட்ட கேள்வியாக இருந்தது. ஒருசில கேள்விகள் மட்டும் வித்தியாசமாகக்
கேட்டான்...
”நீங்க போறப்ப எல்லாம் உங்கண்ணா சிவலிங்கம் பக்கத்துல
தான் இருந்தாரா. இல்லை வெளியவும் இருந்தாரா?”
“அண்ணா பெரும்பாலும் ஹால்ல தான் இருப்பார்.
ஏதோ சில நேரங்கள்ல மட்டும் சிவலிங்கம் பக்கத்துலயோ, இல்லை தோட்டத்துல ஏதாவது வேலை
செஞ்சுகிட்டோ இருப்பார்”
“சிவலிங்கம் பக்கத்துல இருந்தப்ப என்ன
செஞ்சுகிட்டிருந்தார். தியானம் மாதிரி ஏதாவது செய்துட்டு இருப்பாரா, இல்லை ஸ்தோத்திரம்
ஏதாவது படிச்சிகிட்டு இருப்பாரா, இல்லை அபிஷேக பூஜை மாதிரி ஏதாவது
செஞ்சுகிட்டிருப்பாரா?”
பரமேஸ்வரன் யோசித்தபடி சொன்னார். ”சிவலிங்கம் பக்கத்துல இருக்கறப்ப அவர் பெரும்பாலும் தியானத்துல தான்
இருப்பார். என்னைப் பார்த்த பிறகு வெளியே வருவார். அபூர்வமா ரெண்டு மூணு தடவை நான்
அங்கு போனது தெரியாமல் கூட அவர் தியானத்திலேயே இருந்ததும் உண்டு....”
“அப்ப நீங்க என்ன செய்வீங்க?”
“அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம்
அவரைப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்து விட்டு வந்துடுவேன்”
“தியானத்துல இருந்து அவரை எழுப்ப
மாட்டீங்களா?”
“இல்லை. அண்ணா தியானத்துல இருக்கற விதமே
ரொம்ப அழகாயிருக்கும். சின்னக் குழந்தையோட ஆழமான தூக்கம் மாதிரி. அவன் வேற ஏதோ ஒரு
லோகத்துல இருக்கற மாதிரி... அவரைப் பார்த்துட்டே இருந்தா நாமளும் அந்த அமைதியை உணர்ந்துடலாம்...
நல்ல அனுபவம் அது...”
”நீங்க போனது கூட தெரியாமல் தியானத்துல இருக்கறது
உங்களுக்கு வருத்தமாவோ, கோபமாவோ இருக்காதா?”
“சேச்சே அப்படி
எல்லாம் இருக்காது. எங்கண்ணா ஸ்படிகம் மாதிரி. மனசு அவ்வளவு சுத்தம். யாரையும்
குறைச்சு நினைக்கவோ, அவமதிக்கவோ அவரால முடியாது....” சொல்லும் போது
அவர் குரல் கரகரத்தது.
“உங்க கிட்ட பேசிகிட்டிருக்கறப்ப அவர் எதைப்பத்தி
பேசுவார்...”
“அவரா எதைப் பத்தியும் பேசினதா எனக்கு
ஞாபகம் இல்லை. அவரா பேசினது கடைசி ரெண்டு சந்திப்புல தான். ஒரு தடவை அம்மாவைக்
கூட்டிகிட்டு வரச் சொன்னார். இன்னொரு தடவை தான் சிவலிங்கம் பத்தியும் உன்னைப்
பத்தியும் சொன்னார். நான் அதைப் பத்தி தான் உன் கிட்ட ஏற்கெனவே சொல்லி இருக்கேனே”
“நீங்க அவர் கிட்ட எதைப் பத்தி பேசுவீங்க?”
“என் மனசுல எது பாரமா இருந்தாலும் அது
பத்தி சொல்லுவேன். வியாபாரத்துல பிரச்சினை இருந்தால் அதைப் பத்தி சொல்லுவேன். உடம்புக்கு
முடியலைன்னா அதைப் பத்தி சொல்லுவேன். எதைப் பத்தி சொன்னாலும் கவனமா பொறுமையா அவர்
கேட்டுக்குவார். பதிலுக்கு “சரியாயிடும் கவலைப்படாதே”ங்கிற மாதிரி
சொல்வார். அவர் கிட்ட பேசிட்டு வெளியே வர்றப்ப மனசுல பாரம் குறைஞ்சிருக்கும். அவர்
கிட்ட சொன்ன பிரச்சினைகள் தானா கொஞ்ச நாள்ல சரியாயிருக்கும். அந்த சக்தி எங்கண்ணா
கிட்ட இருந்துச்சு....”
சொல்லும் போது பரமேஸ்வரன் குரலில் பெருமிதம்
தொனித்தது. ஆனந்தவல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அந்த சக்தி உங்க அண்ணா கிட்ட இருந்துச்சா.
இல்லை அந்த சிவலிங்கத்து கிட்ட இருந்துச்சா? அந்த சிவலிங்கமும் அங்கே இருந்துச்சு
இல்லையா அதனால கேட்டேன்”
“நான் அது எங்கண்ணானாலன்னு தான்
நினைக்கிறேன்” உறுதியாகச் சொன்னார் பரமேஸ்வரன்.
‘அண்ணன் மேல இருக்கற
இந்த பாசத்துல கால் வாசி கூட உங்களுக்கு உங்க மகன் மேல இல்லையே ஐயா’ன்னு கேட்க வேண்டும் போல் ஈஸ்வருக்குத் தோன்றினாலும் அவன் கேட்கவில்லை. முகத்தில்
அந்த எண்ணத்திற்கான அறிகுறியையும் காட்டவில்லை.
“நீங்க அந்த சிவலிங்கத்துக்குப் பக்கத்துல
போயிருக்கீங்களா?”
“இல்லை”
“அதுல இருந்து ஏதாவது வித்தியாசமான சக்தியை
எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா?”
“இல்லை”
“ஏதாவது வெளிச்சம் மாதிரி?”
“இல்லை”
“உங்க அண்ணா எப்பவாவது ஸ்தோத்திரம் அல்லது
தேவார திருவாசகம் எல்லாம்
சிவலிங்கத்துக்காகப் படிப்பாரா?”
“படிச்சதை நான் பார்த்தது இல்லை”
“நீங்கள் எப்பவும்
சாயங்கால வேளையில் தானே போவீங்க. ஒருவேளை காலையில அந்த அதையெல்லாம் படிப்பாரோ?”
யோசித்து விட்டு பரமேஸ்வரன் சொன்னார்.
“எங்கண்ணா அந்த மாதிரி எதுவுமே எப்பவுமே படிக்கிற ரகம் அல்ல?”
“அப்படின்னா அவரோட பூஜை ரூமில் இருந்த
தேவார திருவாசக ஸ்தோத்திர புஸ்தகம் எல்லாம் யார் படிக்கறதுக்காக வச்சிருந்தார்?”
பரமேஸ்வரனுக்கும் அந்தக் கேள்வி அப்போது
தான் உறைத்தது. அவருக்கு அதற்கான பதில் தெரியவில்லை.
”ஒருவேளை வெளியில் இருந்து எப்போதாவது வரும் யாராவது
ஒருவருக்காக இருக்குமோ?” ஈஸ்வர் அவரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
பரமேஸ்வரன் உட்பட
அனைவரும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.
(தொடரும்)
-
என்.கணேசன்
பரம(ன்) இரகசியம் நாவல் அச்சில் வெளி வந்தும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2016 ஜூன் மாதம் இரண்டாம் பதிப்பும் வெளியாகி விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்த நாவலை புத்தக வடிவில் கையில் வைத்து படித்து மகிழ விரும்புவோர் 9600123146 எண்ணில் அல்லது blakholemedia@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். - என்.கணேசன்