கனகதுர்காவிற்கு விஷாலியை மிகவும் பிடித்திருந்தது. ஈஸ்வர் மதிக்கக்
கூடிய நிறைய குணங்கள் அந்தப் பெண்ணிடம் இருப்பதை அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்
போது கனகதுர்கா கண்டு பிடித்தாள். ஏதோ ஒரு எல்லையில்லாத சோகத்தில் மூழ்கி
இருந்ததைத் தவிர குறையாகச் சொல்லக் கூடிய எந்த அம்சமும் அந்தப் பெண்ணிடம் இல்லை.
அந்தச் சோகம் கூட ஈஸ்வருக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் ஊடலால் இருக்கலாம்.
ஈஸ்வரிடம் நிறைய நேரம் பேச கனகதுர்காவுக்கு
நேரம் கிடைத்திருக்கவில்லை. அவன் பார்த்தசாரதியைப் பார்க்கப் போனவன் இன்னும் வரவில்லை.
அவனிடம் பேச நேரம் கிடைத்தால் கூட இதைப் பற்றி நாசுக்காகத் தான் பேச வேண்டும்.
ஆனந்தவல்லி சொல்வது போல அவசரப்பட முடியாது.
நாசுக்காகப் பேசினால் கூடக் கண்டுபிடித்துக் கொள்ளக் கூடிய புத்திசாலி அவன்.
தாயை அவன் அதிகம் நேசிப்பவன் என்றாலும்
அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவன் அவளுக்குத் தந்து விட மாட்டான்.
அனாவசியமாக அவன் தனிப்பட்ட விஷயங்களில் அவள் மூக்கை நுழைப்பதை அவன் விரும்பவும்
மாட்டான். ஆனால் அதையெல்லாம் ஆனந்தவல்லிக்கு அவளால் புரிய வைக்க முடியவில்லை.
ஆனந்தவல்லிக்குப் புரியவில்லை என்பதை விட அவள் புரிந்து கொள்ள விரும்பவில்லை
என்பதே உண்மையாக இருந்தது. வேறு வழியில்லாமல் அவனிடம் பேசிப் பார்க்கிறேன் என்று
கனகதுர்கா சொல்லி அப்போதைக்குத் தப்பித்தாள்.
விஷாலியைப் பற்றி மீனாட்சியிடமும்
கனகதுர்கா விசாரித்தாள். மீனாட்சி விஷாலியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாள். அவள்
புகழ்ந்தது மிகை அல்ல என்பது விஷாலியிடம் பேசும் போது கனகதுர்காவுக்கும்
புரிந்தது. அவள் விஷாலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஈஸ்வர் வந்தான்.
அவன் மிகவும் களைப்பாக இருந்தான். அவனை
அத்தனை சோர்வாய் கனகதுர்கா பார்த்ததே இல்லை என்பதால் அவனைப் பார்த்தவுடன்
கவலையுடன் கேட்டாள். “என்னடா என்னவோ மாதிரி இருக்கே”
அவனுக்கு விஷாலி முன்னால் அம்மாவிடம்
அதிகம் பேசப் பிடிக்கவில்லை. ”ஒன்னுமில்லைம்மா” என்றவன் தனதறைக்குப் போய் விட்டான். விஷாலி
முகத்தில் அவனைப் பார்த்தவுடன் தெரிந்த சோகம் அவனை என்னவோ செய்தது. அவள் இங்கு
வந்ததில் இருந்தே இப்படி சோகமாய் இருந்தே கொல்கிறாள். இப்போது அவள் அவன்
ஆரம்பத்தில் பார்த்த விஷாலியே அல்ல. அந்த விஷாலியின் உருவம் மட்டும் இப்போது இருக்கிறதே
ஒழிய அந்த ஒளியும், உயிரோட்டமும் இல்லை. அவள் மீது இருந்த கோபத்தை அவனால்
முழுமையாகத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. கையில் இறுகப் பிடித்திருந்த மணல்
விரலிடுக்கில் சிறிது சிறிதாக வெளிப்பட்டுக் குறைந்து கொண்டே வருவது போல கோபமும்
குறைந்து கொண்டே வந்தது. அதை அதிகப்படுத்திக் கொள்ள அவன் மறுபடி மறுபடி அன்று அவள் நிர்த்தாட்சணியமாய் பேசிய கடூர
வார்த்தைகளை நினைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது
கனகதுர்கா விஷாலியைப்
பார்த்து தலையசைத்து விட்டு மகனைப் பின் தொடர்ந்தாள். ஈஸ்வர் கண்களை மூடிக் கொண்டு
படுக்கையில் சரிந்திருந்தான்.
மிக இறுக்கமான
சூழ்நிலைகளில் சின்னச் சின்னக் கேள்விகளைக் கூட அவன் விரும்புவதில்லை என்பதால்
மௌனமாக அவன் அருகே அமர்ந்து அவன் தலையைக் கோதி விட்டாள். அவனுக்கு அது மிகவும் பிடிக்கும்.....
ஈஸ்வரைத் தாயின்
விரல்கள் அமைதிப்படுத்தின. கண்களைத் திறக்காமல் அவன் ஆழ்ந்த சிந்தனையில்
இருந்தான். விஷாலியைக் கஷ்டப்பட்டு ஒதுக்கி வைத்து விட்டு விசேஷ மானஸ லிங்கத்தில்
கவனம் செலுத்த ஆரம்பித்தான். உலகத்தின் தலைவிதி அவனிடம் இருக்கிறதோ இல்லையோ
கணபதியின் தலைவிதி அவனிடம் இருக்கிறது. கள்ளங்கபடமில்லாத கணபதியின்
சிரிப்பு நினைவுக்கு வந்தது..... அவன் கண்டிப்பாக இயங்கியே ஆக வேண்டும். என்ன
செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவான முடிவை அவனால் எடுக்க
முடியவில்லை.
இந்த நேரத்தில் அப்பா
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. விசேஷ மானஸ
லிங்கத்தைப் பற்றி அவன் முதல் முதலில் கேள்விப்பட்டது அவரிடம் இருந்து தான். அதைப்
பற்றி அதிகம் அவனிடம் பேசியவரும் அவர் தான். மணிக்கணக்கில் ஒருகாலத்தில் அவர்கள்
பேசி இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக அவன் அவருடைய எத்தனையோ கேள்விகளுக்கு
விளக்கமாகப் பல அனுமானங்களைத் தந்துமிருக்கிறான். இந்த இக்கட்டான நிலையில் அவர் இருந்திருந்தால்
அவரிடம் அவன் மனம் விட்டுப் பேசி இருக்கலாம். பேசும் போதே அவனுக்கு ஒரு தெளிவு
பிறந்திருக்கும்.
இப்போது அவன் பார்த்தசாரதியிடம்
அதைப் பற்றிப் பேசுகிறான் என்றாலும் அவருக்கு அதில் புரிய முடிந்தது குறைவு தான். அவருக்கு அவன் மீது உள்ள நம்பிக்கை தான் விசேஷ
மானஸ லிங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட அதிகமாய் இருக்கிறது. அதனால் அவன்
ஏதாவது சொன்னால் தலை ஆட்டுவாரே ஒழிய ஆக்கபூர்வமான வேறு கருத்துகள் அவரிடம் இருந்து
வராது...
ஈஸ்வர் கண்களைத்
திறந்து தாயைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் கை விரல்களுக்கு பாசத்தோடு
முத்தமிட்டு விட்டு களைப்பு நீங்கியவனாக எழுந்தான். “எனக்கு கொஞ்சம் வேலை
இருக்கும்மா” என்றவன் தன் லாப்டாப்பைத் திறந்து அதில் அவன் சேமித்து
வைத்திருந்த ஆழ்மனசக்தி ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களில் மூழ்க ஆரம்பித்து
விட்டான். காலம், இடம், சூழல் அத்தனையும் மறந்து விட்டான்.
மகனையே பார்த்துக்
கொண்டிருந்த கனகதுர்கா பின் வெளியே வந்து ஹாலில் மற்றவர்களுடன் பேசிக்
கொண்டிருந்தாள். மூன்று மணி நேரம் கழித்து ஈஸ்வர் வெளியே வந்தான். ஒரு ஓரமாக
அமர்ந்திருந்த விஷாலியை அலட்சியம் செய்தபடி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்து
விட்டு கடைசியில் சொன்னான்.
“நான் நாளைக்கு காலைல
தோட்ட வீட்டுக்குப் போறேன்... சில நாள் அங்கேயே இருக்க வேண்டி வரும்னு
நினைக்கிறேன்”
மற்றவர்கள் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார்கள்
என்றால் இடி விழுந்தது போல உணர்ந்தவள் ஆனந்தவல்லி தான். அவளுடைய மூத்த மகன் அங்கு
போனவன் பின்பு அவள் மகனாகத் திரும்பி வரவேயில்லை.... இப்போது இவன் போகிறேன்
என்கிறான்.... அவள் உள்மனம் அபாயச்சங்கு ஊதியது.
“எதுக்குடா அங்கே தங்கப் போறே?” பரமேஸ்வரன் திகைப்புடன் கேட்டார்.
“எனக்கு கொஞ்சம்
அங்கே ஆராய்ச்சிகள் பண்ண வேண்டி இருக்கு தாத்தா...” கணபதியையும் சிவலிங்கத்தையும் கண்டு
பிடிக்கப் போகிற அவன் முயற்சிகள் ஒரு விதத்தில் ஆராய்ச்சிகள் தானே?
“என்ன ஆராய்ச்சி?”
“எத்தனையோ வருஷங்களாய் அந்த இடத்துல அந்த
சிவலிங்கத்துக்கு, பெரிய தாத்தா பூஜை செய்துகிட்டு இருந்திருக்கார். அங்கே நிறைய
சக்தி அலைகள் இருக்கும் தாத்தா. அதை நானே உணர்ந்திருக்கேன். என் சப்ஜெக்டுக்கு
இந்த ஆராய்ச்சிகள் உதவும் தாத்தா....”. ஈஸ்வர் சமாளித்தான்.
பரமேஸ்வரன் திருப்தி அடைந்தார். ”அங்கே வசதிகள் போதுமாடா. அண்ணன் ஒரு சன்னியாசி மாதிரி இருந்தவர்... எந்த
வசதியும் தேவை இல்லைன்னு ஒதுக்கி வச்சவர்.... உனக்கு கஷ்டமா இருக்காதாடா?”
“அது ஒன்னும் பிரச்சினை இல்லை தாத்தா....”
அதற்குப் பின் மற்றவர்கள் அதைப்
பெரிதுபடுத்தாமல் வேறு பேச்சுக்கு நகர்ந்தார்கள். ஆனந்தவல்லி மட்டும் சிலையாக
அமர்ந்திருந்தாள். பின் ஈஸ்வரும் கனகதுர்காவும் தங்கள் அறைக்குப் போக மீனாட்சியும்
விஷாலியும் கூட அங்கிருந்து நகர்ந்தார்கள்.
பேயறைந்தது போல் அமர்ந்திருந்த தாயிடம் பரமேஸ்வரன்
கேட்டார். “என்னம்மா ஆச்சு உனக்கு?”
“எனக்கு ஈஸ்வர் அந்த தோட்ட வீட்டுக்குப்
போறது பிடிக்கலைடா. பயமாயிருக்கு”
“பயமா? என்னத்துக்குப் பயம்?”
“உங்கண்ணன் அங்கே போனவன் சன்னியாசியாவே
மாறிட்டாண்டா. அங்கே அதிகம் தங்கி இருந்தவங்க எல்லாம் சிவனாண்டிகள் தான்... இவனும்
இப்ப போறேன்கிறான்.... உங்கண்ணன் சாகறதுக்கு முன்னாடி இவனை நியமிச்ச மாதிரி
சொல்லிட்டு வேற போயிருக்கிறான்..” ஆனந்தவல்லி குரலடைக்கச் சொன்னாள்.
பரமேஸ்வரன் வாய்
விட்டுச் சிரித்தார். “ஆராய்ச்சி பண்ணப் போகிறவனைப் போய் ஆண்டியாயிடுவானோன்னு
பயப்படறியே. என்னாச்சும்மா உனக்கு?”
ஆனந்தவல்லி மகனுக்குப் பதில் அளிக்கவில்லை.
பரமேஸ்வரன் தனதறைக்குப் போன பின்பும் அப்படியே ஆழ்ந்த சிந்தனையுடன் அவள்
அமர்ந்திருந்தாள். ஈஸ்வரை துறவியாகாமல் திரும்ப வரவழைக்கும் சக்தி விஷாலி ஒருத்திக்குத்
தான் உண்டு... அவன் அங்கு போவதற்கு முன்னால் அவர்கள் இருவரும் மனம் விட்டுப்
பேசிப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டால் பின் அவன் கண்டிப்பாகத் திரும்பி வருவான்,
கவலைப்பட வேண்டியதில்லை என்று தோன்றியது. விஷாலி என்ற துருப்புச் சீட்டைப்
பயன்படுத்தா விட்டால் பின் என்றென்றைக்கும் கொள்ளுப்பேரனை அந்த சிவலிங்கத்திடம்
இழந்து விட வேண்டி இருக்கும்.... ஆனந்தவல்லி அதை அனுமதிக்க மாட்டாள்... இனி
கனகதுர்காவையும் நம்பி பயனில்லை... அவளே எதாவது செய்தாக வேண்டும்....
ஒரு தீர்மானத்துடன் எழுந்த ஆனந்தவல்லி
ஈஸ்வரின் அறைக்குப் போனாள். ஈஸ்வர் தாயிடம் ஏதோ பேசிக் கொண்டே மறுநாள் போகும் போது
எடுத்துக் கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
ஆனந்தவல்லி ஈஸ்வரிடம்
சீரியஸாகக் கேட்டாள். “ஏண்டா, செத்துப் போகணும்னு போல இருக்குன்னு சொல்றவங்க
அப்படியே தற்கொலை ஏதாவது செய்துக்குவாங்களா, இல்லை பேச்சுக்குச் சொல்றது தானா அது”
“அது சொல்ற ஆளைப் பொருத்தது. ஏன் பாட்டி
யார் சொன்னாங்க”
ஆனந்தவல்லி அதற்குப் பதில் சொல்லவில்லை.
“சும்மா ஒரு பேச்சுக்குக் கூட சொல்லியிருக்கலாம் இல்லை” என்று கேட்டாள்.
“யார் சொன்னாங்கன்னு
முதல்ல சொல்லுங்க”
ஆனந்தவல்லி கூசாமல் பொய் சொன்னாள். “விஷாலி
தான்... செல் போன்ல யார் கிட்டயோ பேசிகிட்டு இருந்தா. செத்துப் போயிடணும் போல இருக்குன்னு அவ சொன்னது
காதுல விழுந்துச்சு”
ஈஸ்வர் கையில் இருந்த
ப்ளாஸ்க் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது. அதிர்ச்சியின் எல்லைக்கே போன அவன்
பலவீனமாய் கேட்டான். “என்ன சொல்றீங்க?”
”யாரோ
ஃப்ரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தா போல இருக்கு. பாதி அழுகையோட அவ சொன்னது என்
காதுல விழுந்துச்சு...”
ஆனந்தவல்லி சொன்னதை அவர்கள் இருவரும்
நம்பினார்கள். சில நாட்களாகவே விஷாலி சோகமாகத் தான் இருக்கிறாள்.... ஈஸ்வர் முகத்தில்
தெரிந்த வலி அளக்க முடியாததாக இருந்தது. கனகதுர்கா மகனிடம் சொன்னாள். “போய் என்னன்னு விசாரிடா”
ஆனந்தவல்லி அவசரமாய் சொன்னாள். “என் காதுல விழுந்த விஷயத்தை அவ கிட்ட
சொல்லாதே... முதல்ல என்ன பிரச்சினைன்னு கேளு.... அப்புறம் புத்தி சொல்லு”
ஈஸ்வர் அடுத்த நிமிடம் விஷாலியின் அறையில்
இருந்தான். விஷாலி உறங்க ஆயத்தமாகி இருந்தாள். திடுதிடுப்பென்று அறைக்குள் ஈஸ்வர்
வந்தது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கூடவே ஒரு சின்ன சந்தோஷத்தையும் அது
ஏற்படுத்தியது. அவனாக அவளைத் தேடி வந்திருக்கிறான்....
அவள் இன்னமும் எந்த முட்டாள்தனமும் செய்யாமல் நலமாக இருப்பது
அவனுக்குப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் தன்னைச் சில நிமிடங்கள் பெரிதாகப்
பயமுறுத்தி விட்ட அவள் மீது அவனுக்கு அளவு கடந்த கோபம் வந்தது. “உனக்கு என்ன
பிரச்சினை” கோபம் குறையாமல் கேட்டான்.
அவன் பன்மையில்
பேசாமல் ஒருமையில் பேசியது, அது கோபத்தினால் ஆனாலும் கூட, அவளுக்கு இதமாக இருந்தது.
அவன் திடீரென்று வந்து எந்தப் பிரச்சினையைக் கேட்கிறான் என்று அவள் புரியாமல்
விழித்தாள்.
ஈஸ்வர் சொன்னான்.
“கொஞ்ச நாளாவே ரொம்ப சோகமாய் இருக்கியே. அதுக்கு காரணம் கேட்டேன்”. அவன் குரலில் அனல் இருந்தது.
விஷாலிக்கு அவன் கோபத்திற்கும், இந்தக்
கேள்வியை இப்போது ஏன் கேட்கிறான் என்பதற்கும் காரணம் புரியவில்லை. அக்கறையோடு அவன்
கேட்ட போதும் அவன் முகத்தில் சினேகம் இல்லை. ”நான் ஒரு
சைக்காலஜிஸ்ட். உடம்போட பிரச்சினையை டாக்டர் கிட்ட சொல்ற மாதிரி மனசோட பிரச்சினையை
என் கிட்ட சொல்லலாம். முட்டாள்தனமாய் எதுவும் செய்துக்க வேண்டியதில்லை”
முட்டாள்தனமாக எதைச் செய்ய வேண்டாம்
என்கிறான் என்று விஷாலிக்குப் புரியவில்லை. ஆனால் சம்பந்தமில்லாத மனோதத்துவ
மருத்துவர் போல அவன் கேட்டாலும் மீண்டுமொரு மன்னிப்பு கேட்க இது நல்ல சந்தர்ப்பம்
என்று தோன்றியது. குறைந்தபட்சம் காது கொடுத்துக் கேட்கும் தயவாவது காட்டி
இருக்கிறானே என்று நினைத்தவளாக மனோதத்துவ மருத்துவரிடம் சொல்வது போலவே தலை
குனிந்து கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
“நான்... ஒரு நல்லவரைத் தப்பா
புரிஞ்சுகிட்டு என்னென்னவோ பேசிட்டேன்... தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவர்
கிட்ட மன்னிப்பும் கேட்டேன்.... ஆனா அவர் மன்னிக்கலை.... அது ரொம்பவே உறுத்தலா
இருக்கு”
”தப்பா புரிஞ்சுக்க என்ன காரணம்?” அவளையே கூர்ந்து
பார்த்தபடி ஈஸ்வர் கேட்டான்.
“சின்ன வயசுல இருந்தே
பழகின நண்பன்....” என்று ஆரம்பித்தவள் ’மகேஷ் சொன்னதை
நம்பி தவறாகப் புரிந்து கொண்டேன்’ என்று சொல்ல வந்தவள் அப்படியே அந்த வார்த்தைகளை
முழுங்கி விட்டாள். அந்த ஒரு பாதகத்தைச் செய்தது தவிர மகேஷ் அவளுக்கு எல்லா விதங்களிலும்
நல்ல நண்பனாகத் தான் இருந்திருக்கிறான். அவனைக் காட்டிக் கொடுக்க அவள் மனம் விரும்பவில்லை.
“... சின்ன வயசுல இருந்தே பழகின நண்பனாய்
இருந்திருந்தால் தேவையில்லாமல் சந்தேகம் வந்திருக்காது. அவர் புதியவரானதால நானா
ஏதோ பைத்தியக்காரத்தனமா கற்பனை செய்துகிட்டு தப்பா பேசிட்டேன்....”
ஆனால் அவள் சொல்ல வந்த விஷயத்தை அவன்
சரியாகப் புரிந்து கொண்டு விட்டான். அவள் அவனிடம் போனில் பேசியதற்கு சிறிது முன்பு
தான் மகேஷ் வீட்டில் இருந்து வெளியேறியதைப் பார்த்திருந்தது ஈஸ்வரின் நினைவுக்கு
வந்தது. இந்த அதிகாலையில் எங்கே போகிறான் என்று யோசித்ததும் நினைவுக்கு வந்தது.
மகேஷ் போய் இவளிடம் ஏதோ பொய்யைச் சொல்லி விட்டிருக்க வேண்டும்....
ஈஸ்வர் அமைதியாகக் கேட்டான். ”என்ன பைத்தியக்காரத்தனமான கற்பனை?”
குரல் நடுங்க பலவீனமாய் விஷாலி சொன்னாள்.
“என்னைத் தரக்குறைவா நினைச்சு தான் அவர் என் கிட்ட பழகினதாய் நினைச்சுகிட்டேன்....”
எந்த ஒரு கண்ணியமான பெண்ணானாலும் அந்த
சந்தேகம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தாங்கி இருக்க முடியாது தான் என்பது அவனுக்குப்
புரிந்தது. அவன் கேட்டான். “அப்படி நினைக்கிற மாதிரி அந்த ஆள் உன் கிட்ட
நடந்துகிட்டிருக்காரா”
“இல்லை.... ஆனா சந்தேகத்தோட பார்க்கறப்ப
சாதாரணமானது கூட மோசமாகத் தோணுமில்லையா... அப்படி தான் நினைச்சு ஏமாந்துட்டேன்....” அவள் குரல் கரகரத்தது.
ஈஸ்வருக்கு அவள்
கைவிரல் ஸ்பரிசம் இப்போதும் நினைவிருந்தது. அதைக் கூட அவனது தவறான கண்ணோட்டச்
செய்கையாய் அவள் நம்பி இருக்கலாம்....
“நினைச்சது தப்புன்னு
எப்ப புரிஞ்சுது?”
“அவரோட நண்பர்
ஒருத்தர் கிட்ட பேசினப்ப புரிஞ்சுது”
பாலாஜி!
ஈஸ்வர் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் நீர்
நிறைய சொன்னாள். “அவர் என்னை மன்னிச்சு என் கிட்ட சாதாரணமா பேசிகிட்டிருந்தார்னா
போதும்... அதுக்கு மேல நான் எதிர்பார்க்கலை.”
அவன் கேட்டான். “அது மட்டும் போதுமா?”
”போதும். அதுக்கு மேல எதிர்பார்க்க எனக்கு....
எனக்கு.... அருகதை இல்லைங்க” விசும்பலோடு வார்த்தைகள் வெளி வந்த போது ஈஸ்வரால்
அதற்கு மேல் தாங்க முடியவில்லை....
“விஷாலி” என்று உருகியவன் அவளைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான். “விஷாலி....!”
(தொடரும்)
என்.கணேசன்