சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 13, 2012

பரம(ன்) ரகசியம் – 22




ந்த மனிதன் ஜோதிடரின் தம்பியை ஆலோசனையுடன் பார்த்தான். பின் என்ன எல்லாம் தெரியும்?என்று சந்தேகத்துடன் கேட்டான்.

ஜோதிடரின் தம்பி சிறிது தயங்கி விட்டுச் சொன்னான். “நீங்க அண்ணா கிட்ட பேசறப்ப ஏதாவது தகவல் சொன்னா நல்ல விலை தர்றதா சொன்னீங்க

அந்த சிவலிங்கம் சம்பந்தமான வேறெதாவது ஓலைச்சுவடி இருந்தா அதுக்கு நல்ல விலை தர்றதா சொன்னேன்... உங்க கிட்ட அப்படி எதுவும் ஓலைச்சுவடி இருக்கா?

ஜோதிடர் தம்பி முகத்தில் இருந்த உற்சாகம் உடனடியாக வழிந்தது. என் கிட்ட ஓலைச்சுவடி எதுவும் இல்லை. ஆனா அந்த ஒளிரும் சிவலிங்கம் பத்தி என் அண்ணாவும், அவரோட குருநாதரும் பேசிகிட்ட நிறைய விஷயங்கள் தெரியும்.... நீங்க பணம் தர்றதா இருந்தா சொல்றேன்

உங்க பேர் என்ன?

“என் பேர் சரவணன்.

“சரவணன் நீங்க சொல்ற விஷயம் எங்களுக்கு புதுசாகவும், பயன்படற மாதிரியாகவும் இருந்தால் பணம் தர்றேன். முதல்ல எந்த மாதிரி தகவல் உங்க கிட்ட இருக்குன்னு சொல்லுங்க. பணம் தரக்கூடியதா இல்லையான்னு நான் சொல்றேன்....

சரவணன் எதைச் சொன்னால் பணம் கிடைக்கும் என்று யோசித்தான். தன்னிடம் உள்ள தகவல்கள் பணம் சம்பாதிக்கக் கூடியவையா இல்லையா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. சிறிது யோசித்தான்.

அவன் யோசிப்பதைப் பார்த்த அந்த மனிதன் கேட்டான். “அந்த சிவலிங்கம் இப்ப எங்கே இருக்குன்னு அவங்க பேசிகிட்டதுண்டா? அந்த சிவலிங்கத்தோட தன்மைகளைப் பத்தி அவங்க பேசிகிட்டதுண்டா? எந்த விதத்துல உங்க அண்ணாவோட குருநாதரும் அந்த சிவலிங்கமும் சம்பந்தப்படறாங்கன்னாவது சொல்ல முடியுமா?

“உங்க மூணாவது கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும்

அடுத்த ஐந்தாம் நிமிடம் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பூங்கா ஒன்றின் சிமெண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த மனிதன் சரவணனிடம் சொன்னான். “சரி சொல்லுங்க

சொல்வதை எல்லாம் கேட்டு விட்டு இவன் காசு தராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று சரவணன் யோசித்தான். அதைப் புரிந்து கொண்ட அந்த மனிதன் ஒரு ஆயிர ரூபாய் நோட்டை எடுத்து சரவணனின் சட்டைப் பையில் திணித்தான்.நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க.... அந்த தகவல்கள் எனக்கு உபயோகப்பட்டுதுன்னா இன்னும் தர்றேன்......

சரவணன் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்தான். எங்கண்ணாவோட குருநாதர் சாகறதுக்கு சில மாசம் முன்னாடி தன் கிட்ட இருக்கற சில ஓலைகளை எல்லாம் அண்ணா கிட்ட கொண்டு வந்து தந்தார். அதுல ஒண்ணு தான் உங்க கிட்ட கிடைச்ச ஓலை. மத்த எல்லா ஓலைச்சுவடிகளும் ஜோதிட சம்பந்தமானவை. அந்த ஓலையைப் படிச்சு அண்ணா ஆச்சரியத்தோட அதெல்லாம் உண்மையான்னு கேட்டார். ஆமான்னு குருநாதர் சொன்னார். அண்ணா அந்த சிவலிங்கத்தை நீங்க பார்த்திருக்கீங்களான்னு கேட்டதுக்கு அவர் பார்த்திருக்கேன்னு சொன்னார். ஆனா அந்த சிவலிங்கம் எங்கே இருக்குன்னு அண்ணா கேட்டப்ப அவர் பதில் சொல்லலை.  அவர் சொல்ல வேண்டான்னு தீர்மானிச்சுட்டா அவர் வாயில இருந்து அப்புறம் எதுவும் வராது. அதனால் அண்ணா அந்த சிவலிங்கம் பத்தின ஓலை உங்க கைக்கு எப்படி வந்ததுன்னு கேட்டார். அதற்கு அவரோட குருநாதர் தந்ததுன்னு சொன்ன  குருநாதர் அப்போதைக்கு எதையும் சொல்லலைன்னாலும் இன்னொரு நாள் சிவலிங்கம் பத்தி பேசறப்ப ஒரு முக்கியமான தகவல் சொன்னார். அதையும் ரொம்ப ரகசியமா சொன்னார்.....

சரவணன்  ஒரு கணம் நிறுத்தி அந்த மனிதனைப் பார்த்து பெருமையாகப் புன்னகைத்தபடி சொன்னான். “பகவான் கிருபைல எனக்கு காது நல்ல கூர்மை. அதனால தான் அவர் சொன்னதை என்னால கேட்க முடிஞ்சுது

அவன் காது கூர்மை அந்த மனிதனை வியக்க வைக்கவில்லை. “அவர் என்ன சொன்னார்?என்ற கேள்வியை வறண்ட குரலில் அவன் கேட்டான்.

சரவணன் அந்த குருநாதரைப் போலவே குரலைக் குறைத்துக் கொண்டு சொன்னான். “அந்த சிவலிங்கத்தை பாதுகாத்து பராமரிக்க மூணு மார்க்கத்துல மூணு பேர் இருக்காங்களாம். அதுல ஒருத்தர் தான் சிவலிங்கத்துக்கு பூஜை செய்யறதுன்னாலும் சில விசேஷ நாள்கள்ல மூணு பேரும் சேர்ந்து சிவலிங்கத்தை வணங்குவாங்களாம். அந்த மூணு பேர்ல அண்ணாவோட குருநாதரும் ஒருத்தராம்...அந்த சிவலிங்கம் சம்பந்தமான ஓலை சிவலிங்கம் முதலாம் ராஜாதிராஜன் காலத்துல எழுதப்பட்டதாம்... சிவலிங்கத்தோட தன்மைகளையும் அந்த ஓலை விரிவாய் சொன்னதால அந்த மூணு பேர்ல ஒருத்தர் கைல ஒரு புனித ரெகார்டாய் அந்த காலம் முதல் இருந்து வந்துச்சாம்... அவருக்கும் முதல்ல அவரோட குருநாதரும் அதை வச்சிருந்தாராம்....

பசுபதியின் தாய் கேள்விப்பட்டது இந்த மூவர் குழுவையாக இருக்குமோ என்று அந்த மனிதனுக்கு சந்தேகம் வந்தது. சரவணனை அவன் இடைமறித்துக் கேட்டான். “மூணு மார்க்கத்துல மூணு பேருன்னா என்ன அர்த்தம்?

சரவணன் விழித்தான். பின் தயக்கத்துடன் உண்மையைச் சொன்னான். “எனக்கு காது கூர்மையா இருக்கற அளவுக்கு அறிவு கூர்மை பத்தாது. அவர் சொன்னதை அப்படியே சொன்னேனே ஒழிய எனக்கும் அது புரியலை...

பரவாயில்லை.... அவர் உங்கண்ணாவுக்கு அந்த ஓலைச்சுவடியை தந்ததால இப்ப இருக்கற மூவர்ல உங்க அண்ணனும் ஒண்ணுன்னு எடுத்துக்கலாமா?

அப்படியில்லை போல இருக்கு. எங்கண்ணா கேட்டார். சிவலிங்கத்தைப் பராமரிக்கற மூணு பேர்ல ஒரு ஆளுக்குப் போக வேண்டிய அந்த ஓலையை என் கிட்ட கொடுத்திருக்கீங்களே, ஏன்”.  அதுக்கு குருநாதர் சொன்னார். “இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை... அடுத்த ஆளை நான் நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. அதனால் உன் கிட்டயே இருக்கட்டும்”. அண்ணா தனக்கும் வயசாயிட்டதால இந்த ஓலைச்சுவடியை இனி என்ன செய்யறதுன்னு கேட்டதுக்கு மற்ற ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதோட சேர்த்து இதையும் அப்படியே செய்னு சொல்லிட்டார். தஞ்சாவூர் பலகலைக்கழகத்துல தமிழாராய்ச்சிக்கு பழைய ஓலைகள் இருந்தால் தந்து உதவணும்னு அறிவிப்பு வந்தவுடனே எங்கண்ணா எல்லாத்தையும் கொடுக்கறப்ப இதையும் தந்துட்டார்...

அந்த மனிதன் சரவணனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தி அவங்க சொன்னதைக் கவனமா கேட்டு ஞாபகம் வைச்சுக்க உங்களுக்கு எப்படித் தோணுச்சு... உங்கண்ணாவோட குருநாதர் இறந்தே ஆறு வருஷம் ஆச்சுன்னு உங்கண்ணா சொன்னாரே

அந்த சிவலிங்கத்தோட சக்தி எல்லை இல்லாதது. அதை வச்சு வணங்கறவன் அடையற சக்தியும் எல்லை இல்லாததுன்னு குருநாதர் ஒரு தடவை அண்ணன் கிட்ட சொன்னார். அதனாலேயே அதுல எனக்கு ஆவல் அதிகமா இருந்துச்சு. அதனாலேயே அதைப் பத்தி அவங்க பேசினா காது தானா கூர்மையாயிச்சு.

தன் சட்டைப் பையில் இருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதில் இரண்டு தாள்களை சரவணனுக்கு நீட்டினான் அந்த மனிதன். சரவணன் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட அவன் அந்த மனிதன் கையில் வைத்திருந்த ரூபாய்களை ஏக்கத்துடன் பார்த்தான்.

அந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “வேறெதாவது தகவல் நினைவு இருக்கா?

சரவணன் அந்த ரூபாய்களைப் பார்த்தபடியே மூளையை கசக்கிக் கொண்டான். பின் மெல்ல சொன்னான். “அவங்க அந்த சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்பவே இந்த வருஷம் 2012ஐ பத்தியும் பேசினாங்க. குருநாதர் மாயன் கேலண்டர் ஐயாயிரத்து சொச்ச வருஷங்கள் முடியற வருஷம் இது.. ரொம்ப முக்கியமான கட்டம்னு எல்லாம் சொன்னார்...

அந்த மனிதன் சரவணனைக் கேட்டான். “உலகம் அழியறதைப் பத்தி பேசினாங்களோ?

உலகம் அழியாது, ஆனா மாற்றங்கள் நிறைய வரும்... பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும்னு சொன்னார்....

நல்லா யோசிச்சு சொல்லுங்க... சிவலிங்கத்தைப் பத்தி பேசினப்ப ஏன் இந்த மாற்றங்களைப் பத்தி அவங்க பேசினாங்க

சரவணன் யோசித்து விட்டு சொன்னான். “ஏன்னு சரியா சொல்ல முடியலை. ஆனா ஜோதிடத்தைப் பத்தியும் பேசினாங்க... கிரகங்களைப் பத்தி பேசினாங்க... 2012, 2013 வருஷங்கள் முக்கியமானதா இருக்கும்னு குருநாதர் சொன்னார்.... சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும்கிற மாதிரி அவர் பேசினார்

அந்த மனிதன் சிறிது நேரம் சிலை போல அமர்ந்திருந்தான். சிவலிங்கம் மாற்றத்தை சந்திக்கும் என்று தோராயமாக அந்த குருநாதர் சொல்லி விட்டுப் போயிருந்தது அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. பின் இன்னொரு ஆயிரத்தை சரவணனிடம் நீட்ட சரவணன் வாயெல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டான்.

அந்த மனிதன் கேட்டான். “இந்த சிவலிங்கம் பத்தின ஓலைச்சுவடி வேற எதுவும் இல்லைங்கறது உறுதியா தெரியுமா?

அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலை.

“அந்த குருநாதருக்கு வேற யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களா?

அந்த ஆள் ஒரு நாடோடி. சதா சஞ்சாரத்துலயே இருப்பார். எப்பவாவது தான் வருவார். போகிற இடங்கள்ல யாராவது சிஷ்யர்கள் இருக்காங்களான்னு தெரியலை...

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அண்ணனுக்கு மட்டும் அந்த குருநாதர் ரகசியமா இந்த சிவலிங்கம் பத்தி சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கா?

“அவங்க எதையும் ரகசியமா பேசிக்கற வழக்கம் இருந்ததில்லை... ஆனா குருநாதர் சாகறதுக்கு ஒரு வாரம் முன்னால் என்னை ஓசில என் நண்பன் ஒருத்தன் கொடைக்கானல் கூட்டிகிட்டுப் போனான். நான் ஒரு வாரம் இருக்கலை. அப்படிப் போனப்ப அவர் எதாவது அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாம்..

“அப்படி சொல்லி இருந்தா உங்கண்ணா அதை யார் கிட்டயாவது சொல்லி இருப்பாரா?

அவர் சொல்லக்கூடிய ஆளில்லை. அவர் ஒரே தம்பி நான் தான். எனக்கு குடும்பம் குட்டி இல்லை... அவர் கூடவே தான் ஒண்டி இருக்கேன். என் கிட்டயே அளந்து தான் பேசுவார்.

“உங்கண்ணாவுக்கு குழந்தைகள்?

“மகள் கும்பகோணத்துல இருக்கா. மகன் கனடாவுல இருக்கான். அவங்க கிட்ட கூட அவர் குடும்ப விஷயங்கள் மட்டும் தான் பேசுவார். இந்த சிவலிங்கம் பத்தி அவர் யார் கிட்டயும் பேசி நான் பார்த்ததில்லை. அவர் கிட்டயும் உங்களைத் தவிர யாரும் சிவலிங்கம் பத்தி பேசினதில்லை...

“உங்களுக்கு அந்த சிவலிங்கம் மேல ஆர்வம் இருந்ததுன்னு சொன்னீங்களே, அதைப் பார்க்கவோ, அதிகமா தெரிஞ்சுக்கவோ தனிப்பட்ட முறையில் முயற்சி செய்திருக்கீங்களா?

ஒரே ஒரு தடவை குருநாதர் கிட்ட நேரடியா கேட்டிருக்கேன். அந்த சிவலிங்கத்தை ஒரு தடவை தரிசிக்கணும்னு ஆசைன்னு சொல்லி இருக்கேன். எடுத்த எடுப்புல அந்த ஆள் பார்க்காமல் இருக்கறது தான் உனக்கு நல்லதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டார். அதுக்கு என்ன அர்த்தமோ எனக்கு விளங்கலை. ஆனா அந்த ஆள் என்னைப் பார்த்த பார்வைல அது நல்ல அர்த்தமா இருக்க வாய்ப்பில்லை...

எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த மனிதன் எழுந்தான். இனியொரு ஆயிரம் ரூபாயையும், ஒரு துண்டு சீட்டில் தன் மொபைல் எண்ணையும் அவனிடம் தந்து விட்டு சொன்னான். “எப்பவாவது கூடுதல் தகவல் எதாவது கிடைச்சா எனக்கு போன் செய்யுங்க. உங்களை நான் ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்

“கண்டிப்பா  செய்யறேன் சார் என்று சரவணன் நன்றியுடன் சொன்னான். மொத்தத்தில் ஐந்தாயிரம் ரூபாயை அரை மணி நேரத்தில் சம்பாதித்த திருப்தி அவனுக்கு இருந்தது. அவனைப் பொருத்த வரை அது பெரிய தொகை...!

அந்த மனிதன் விடை பெற்றான். பயணத்தைத் தொடர்ந்த போது மனதில் மட்டும் சரவணன் சொன்ன விஷயங்களே திரும்பத் திரும்ப வந்தன. அந்த சிவலிங்கத்தின் பராமரிப்பு மூவர், அவர்கள் மூன்று மார்க்கத்தை சேர்ந்தவர்கள், அந்த சிவலிங்கத்தை வைத்து வணங்குபவன் பெறும் சக்தி எல்லையில்லாதது, மாயன் கேலண்டர், சிவலிங்கமும் இந்தக் காலக்கட்டத்தில் மாற்றம் பெறும்..... இந்த தடவை எதுவும் நேர் வழியில் நடக்க வாய்ப்பில்லை...

யோசித்துப் பார்க்கையில் அவனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

15 comments:

  1. கிரகங்களைப் பத்தி பேசினாங்க... 2012, 2013 வருஷங்கள் முக்கியமானதா இருக்கும்னு குருநாதர் சொன்னார்.... சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும்கிற மாதிரி அவர் பேசினார்”

    2012, 2013 - தற்காலத்தில் கதையை கொண்டுவந்து இணைத்தது நிறைவாக இருக்கிறது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. சிவலிங்கம் படிக்கிறவங்க மனதைதான் தூக்கமில்லாமல் செய்யும்ன்னு பார்த்தா.......இப்ப மாயனையும், மற்ற கிரகங்களையும் கூட சும்மா விடாது போல........

    செம வேகத்தில் கதை நகர்கிறது கணேசன் சார்,.,,, வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்ல எழுது நடை
    விறுவிறுப்பாக உள்ளது
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. சுந்தர்December 13, 2012 at 8:13 PM

    2012-13, மாயன் கேலண்டர் முடிவு என்ற இக்காலத்திற்கும் ஆயிரம் வருடத்திற்கு முந்தைய சிவலிங்கத்துக்கும் போட்ட முடிச்சு பிரமாதம். நிஜமாகவே நடந்த, நடக்கிற மாதிரி சம்பவங்களை அமைச்சிருக்கீங்க. வியாழன் ஆனால் உங்கள் நாவலைப் படிக்க வராமல் இருக்க முடியவில்லை. சூப்பர்

    ReplyDelete
  5. I AM VERY MUCH IMPRESSED IN YOUR STORY AND EXPECT MORE...

    ReplyDelete
  6. Visual like narration, Excellent !!

    Can't laugh enough during Saravna's interaction with x :-)

    Wish time flies ..

    PK Pillai

    ReplyDelete
  7. First, let me openly wish the story, plot and its connection are too good and interesting to read and thrilling. However I have few doubts I would like to clarify...I don't see this as a story, I see this as one's belief in extraordinary things...

    I am not sure these kind of things possible to happen in reality, I am reading such incidents in your stories always referring to some extraordinary things...even in Amanushyan and other stories...Good to read but hard to believe...why are you so fascinated with such things...or you have some strong belief such things possible...I am not questioning your thoughts, but curious to know from learned scholars like you...

    Few days back I was watching Talaash movie about ghost, I could not believe Aamir Khan acted in such movies...

    I am visiting Coimbatore is it possible to meet you???, my email id is bsudhakarrao@yahoo.com, drop me an email if you are willing. I will be happy to meet in person if it is not disturbance to you.

    ReplyDelete
  8. A lot of experiments are being done in the field called para psychology even today which were explained in my aazmana sakthi thodar. Though the happenings in this novel are my imagination, many of the incidents are not improbable. In "Amaanushyan" I have explained his powerful moves which are actually known to Tibetan and hindu yogis. You are welcome to meet me. Please inform me beforehand.

    ReplyDelete
  9. வரதராஜன்December 14, 2012 at 9:07 PM

    முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையாக சின்னக் கதாபாத்திரம் கூட உங்கள் கைவண்ணத்தில் எங்கள் கண் முன் நிற்கிறது. சரவணன் கதாபாத்திரம் பேசுவதும், நடந்து கொள்வதும் நிஜமான ஆளை மனக்கண்ணில் நிறுத்துகிறது. ’சிவலிங்கத்தைப் பார்க்காமல் இருப்பது தான் உனக்கு நல்லது’ என்று குருநாதர் சொல்வதைச் சொல்லும் போது நானும் சிரித்து விட்டேன். பாராட்டுகள்

    ReplyDelete
  10. நல்ல எழுத்து நடை அண்ணா...

    அருமையா இருக்கு...
    தொடருங்க.

    ReplyDelete
  11. ரெம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  12. மிகவும் எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவைஃமிக்க நன்றி

    ReplyDelete
  13. அருமையாகச் செல்கிறது தொடர். அடுத்த வாரத்தை நோக்கி ஆவலுடன்...

    ReplyDelete
  14. BY JOHNMUKESH DECEMBER 19 ,2012
    மிகவும் நல்ல தகவல்லாக உள்ளது மிக்க நன்றீ

    ReplyDelete
  15. Dear Ganesan Sir,

    i feel that its a real story. Icound not believe as a story. Really impressed

    ReplyDelete