சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 6, 2012

பரம(ன்) ரகசியம்! – 8




பார்த்தசாரதி அவரது கேள்வி அவனிடம் ஏற்படுத்திய மாற்றத்தைக் கூர்மையாகக் கவனித்தார். அப்படியானால் அவர் கேள்விப்பட்டும் நம்பாத அந்த ஆவி சமாச்சாரம் வெறும் வதந்தி அல்ல. ஏதோ ஒரு புரியாத விஷயம் அந்த வதந்தியில் இருக்கிறது....

அந்தத் தோட்ட வீட்டின் இரு புறங்களிலும் உள்ள காலி நிலங்கள் ஒரே நபருக்குச் சொந்தமானவை. நான்கு ஏக்கரும், ஆறரை ஏக்கருமான அந்த இரு நிலங்களும் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளதால் பல ஆண்டுகளாக வேலி மட்டும் போடப்பட்டுக் கிடக்கின்றன. அந்தத் தெரு வலப்பக்கத்தில் உள்ள ஆறரை ஏக்கர் நிலத்தோடு முடிந்து விடுகிறது. இடப்பக்கத்திலும் ஒரு பர்லாங் தூரத்திற்குப் பின் தான் கடைகள், வீடுகள் ஆரம்பமாகின்றன.  அதனால் அந்தத் தோட்ட வீட்டைப் பற்றி அந்தப் பகுதி மக்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கவில்லை.

தோட்ட வீட்டின் எதிரில் உள்ள பெரிய தென்னந்தோப்பிலும் வேலையாட்களும், நகரத்தின் மையத்தில் வசிக்கும் தென்னந்தோப்பின் உரிமையாளரும் பகலில் தான் வந்து போகிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டிற்கு வந்து போகும் முனுசாமியைத் தெரிந்திருந்தது. ஆனால் யாருக்கும் வீட்டில் குடியிருக்கும் பசுபதியைத் தெரிந்திருக்கவில்லை. பார்த்தசாரதி அந்தத் தென்னந்தோப்புக்கு வேலைக்கு வரும் ஆட்கள் பலரை விசாரித்தும் ஒரு உபயோகமான தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

கேள்விகள் கேட்டு கிட்டத்தட்ட சலித்துப் போன சமயத்தில் தான் பல வருடங்களாக அங்கே வேலை செய்யும் ஒருவன் அந்தத் தோட்ட வீட்டில் முன்பொரு சமயம் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதாகச் சொன்னான். யார் அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்று கேட்ட போது ஐந்தாறு வருடங்களுக்கு முன் பின்புறம் இருக்கும் சேரிமக்களில் சிலர் பேசிக் கொண்டது காதில் விழுந்ததாகவும், குறிப்பாக அப்படிப் பேசியவர்கள் யார் என்று நினைவில்லை என்றும், அதற்குப் பின் அந்தப் பேச்சு அப்படியே அமுங்கி விட்டதாகவும் அவன் சொன்னான்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பேய் நடமாட்டம் இருப்பதாகப் பலரும் நம்புவது இயற்கை என்றே அதை பார்த்தசாரதி எடுத்துக் கொண்டார். முனுசாமியிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும் வரை அவர் அந்த வதந்தியில் சாரம் இருப்பதாக நினைக்கவில்லை. ஆனால் இப்போதோ....

அவர் தன் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைவுக்கு வர முனுசாமிக்கு சிறிது நேரமாகியது. ஏதோ ஒரு பழைய நினைவில் ஒரு வித திகிலுடன் தங்கி விட்டவன் பின் சுதாரித்துக் கொண்டவனாகச் சொன்னான். “அதெல்லாம் சும்மா வதந்திங்கய்யா

நெருப்பில்லாம புகையுமா முனுசாமி?

“இந்த இடம் ஒரு கோயில் மாதிரிங்கய்யா. இந்த இடத்துல ஆவியும் பேயும் இருக்க முடியாதுங்கய்யா. சிறிதும் சந்தேகமில்லாமல் உறுதியாக முனுசாமி சொன்னான். சற்று முன் தெரிந்த பயத்திற்கு எதிர்மாறாக அவனுடைய இந்தப் பேச்சு இருந்தது.

“அப்புறம் ஏன் இந்த மாதிரி பேசிக்கிறாங்க முனுசாமி?

“அதெல்லாம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி பேசிகிட்டது ஐயா. இப்ப அந்த மாதிரி யாரும் பேசிக்கிறது இல்லை

ஆனா இதைப் பத்திக் கேட்டப்ப நீயே கொஞ்சம் பயந்த மாதிரி தெரிஞ்சுதே முனுசாமி

முனுசாமி தர்மசங்கடத்துடன் நெளிந்தான். அவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவன் பின் மெல்ல சொல்ல ஆரம்பித்தான். “சாமி கும்பிடறதத் தவிர வேற எதுவும் தெரியாத பசுபதி ஐயா இந்த இடத்தக் கோயில் மாதிரி வச்சிருந்தாருங்கய்யா. மனசுல எத்தனை பிரச்சனை இருந்தாலும் இந்த இடத்துல கால் வைக்கறப்ப அதெல்லாம் குறைஞ்சுடறத நானே பார்த்திருக்கேன் ஐயா. அந்த அளவு இங்கே ஒரு சக்தி இருக்குங்கய்யா. அதனால சுத்த பத்தமா இல்லாம இங்கே நான் வர்றதில்லை.... ஏழு வருஷத்துக்கு முன்னால ஒரு நாள் இங்கே சாயங்காலம் வரைக்கும் வேலை இருந்துச்சு. முடிச்சுட்டு போறப்ப என்னோட செல் போனை விட்டுட்டு போயிட்டேன். இங்க இருந்து போறப்ப உடம்பெல்லாம் வலிங்கய்யா. அதனால ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு அப்படியே வீட்டுக்குப் போயிட்டேன். வீட்டுக்குப் போன பிறகு தான் செல் போனை இங்கயே வச்சுட்டு போனது ஞாபகம் வந்துச்சு. அதை எடுத்துட்டு போக இங்கே வந்தப்ப மணி எட்டிருக்குங்கய்யா. நான் தண்ணியடிச்சுட்டு சுத்தமில்லாம வந்ததால என்னையும் பயமுறுத்தற மாதிரி ஒரு காட்சி தெரிஞ்சுச்சு. பயந்து போய் செல்லை எடுத்துட்டு ஓடினவன் வீட்டுக்குப் போயி தான் நின்னேன். ரெண்டு நாளா நல்லா காய்ச்சல்ல படுத்துகிட்டேன். முதல்ல நானும் பார்த்தது பேயின்னு தான் நினைச்சேன். ஆனா நல்லா யோசிச்சப்ப புரிஞ்சுது. சுத்த பத்தமா போறப்ப அங்க நிம்மதி கிடைக்கற மாதிரி அப்படி இல்லாம போறப்ப தண்டனையா பீதியும் கிளம்பும்னு பாடம் கத்துக்கிட்டேன்யா. அப்பறம் என் சம்சாரம் போய் பசுபதி ஐயாவ பார்த்து நான் எதையோ பார்த்து பயந்திருக்கேன்னும், காய்ச்சலா படுத்திருக்கேன்னும் சொன்னா. அவர் கொஞ்சம் விபூதி குடுத்தனுப்பிச்சார். அதை பூசிகிட்டவுடனே காய்ச்சல் குறைய ஆரம்பிச்சுதுங்கய்யா.....

பார்த்தசாரதி கேட்டார். “அங்கே பயமுறுத்தற மாதிரி என்ன பார்த்தாய் முனுசாமி?

பார்த்ததும், பார்க்க வெச்சதும் போதைங்கய்யா. அதைப் போய் நீங்க ஒரு விஷயமா கேட்கறீங்களே

“பரவாயில்ல சொல்லு

முனுசாமி எச்சிலை முழுங்கினான். அவர் விடுவதாக இல்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது. வேறு வழியில்லாமல் சொன்னான். “நான் செல் எடுக்க வந்தப்ப வீட்டுக்குள்ளே ஒரு வித்தியாசமான லைட்டு தெரிஞ்சுதுங்கய்யா. அது விளக்கு வெளிச்சமுமில்ல, டியூப் லைட் வெளிச்சமும் இல்ல. மப்போட பசுபதி ஐயாவப் பார்க்கற எண்ணமே எனக்கு இருக்கலைங்கய்யா. செல் போனை எடுத்துட்டு அப்படியே போயிடணும்னு தான் நான் நினைச்சுட்டு வந்தேன். ஆனா அந்த வித்தியாசமான வெளிச்சத்த வீட்டுல பார்த்தவுடனே அது என்னன்னு ஜன்னல் வழியா பார்க்கப் போனேனுங்கய்யா.....
.
அவன் நிறுத்தி விட்டு மற்படி எச்சிலை விழுங்கினான். பின் தொடர்ந்தான். “உள்ளே பசுபதி ஐயா சிவலிங்கம் முன்னாடி உட்கார்ந்திருந்தாருங்கய்யா. அவர் பக்கத்துல இன்னொரு ஆள் உட்கார்ந்திருந்த மாதிரி என்னோட போதையில எனக்கு தெரிஞ்சுது. பசுபதி ஐயா என்னை பார்க்கல. ஆனா அந்த ஆள் ஜன்னல் பக்கமா பார்த்தாரு. அவர் கண்ணு ரெண்டு நெருப்பா ஜொலிச்சுட்டு இருந்துச்சுங்கய்யா. உடம்பெல்லாம் சூடாகற மாதிரி எனக்கு தோண ஆரம்பிச்சுது.....சொல்லும் போதே அவன் உடல் லேசாக நடுங்கியது. மறுபடி ஒரு முறை அந்தக் காட்சியை மனக்கண்ணில் பார்த்தது போல இருந்தது. “உடனே அங்க இருந்து ஓடி வந்துட்டேங்கய்யா.”

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இது போன்ற சம்பவத்தை அவன் போதையின் பிரமையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் அதை ஒரேயடியாக அவரால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. பயமே அறியாத ஒரு கொலைக் குற்றவாளி பயத்திலேயே செத்துப் போயிருக்க வேண்டும் என்று  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லி இருக்கும் இந்த நேரத்தில் பேய் பிசாசு அல்லாத ஏதோ ஒரு புதிர் இந்த சம்பவங்களில் இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. என்ன அது?

முனுசாமி. இது உன் அனுபவம். பக்கத்துல இருக்கிற சேரிக்காரங்களும் அப்படியே சொல்ல என்ன காரணம்? நீ அவங்க கிட்ட போய் ஏதாவது சொல்லி இருந்தாயோ?

நான் ஏன் ஐயா அதைச் சொல்லி கோமாளியாகப் போறேன். நான் அதை யாரு கிட்டயும் சொல்லலைங்கய்யா. ஆறு வருஷத்துக்கு முன்னாடி அந்தச் சேரியில இருந்து ஒரு சில்லறைத் திருடனும் ராத்திரி சுவரேறி குதிச்சு திருட வந்திருக்கான். அவனும் ஏதோ பார்த்து பயந்து போயிருக்கான்..அவனுக்கும் பயத்துல என்னை மாதிரியே காய்ச்சல் வந்திருக்கு. என்ன மருந்து சாப்பிட்டாலும் காய்ச்சல் குறையல. அவனோட சம்சாரம் என்னோட சம்சாரத்துக்குத் தெரிஞ்சவ. வந்து இதைச் சொல்லி அழுதிருக்கா. என்னோட அனுபவத்த பார்த்திருந்த என் சம்சாரம் பசுபதி ஐயா கிட்ட விபூதி வாங்கிகிட்டு போய் குடுத்து, “இதைப் பூசு சரியாயிடும். ஆனா இனியொரு தடவை அந்த வீட்டுக்கு மறந்தும் போயிட வேண்டாம்னு சொல்லுன்னு புத்தி சொல்லி இருக்கா. அந்த திருட்டுப் பயலுக்கும் அதை பூசி சரியாயிடுச்சு. ஆனா அந்த பொம்பள ஒரு ஓட்டை வாயிங்கய்யா. அந்த சேரி முழுசும் இந்த வீட்டுல ராத்திரில பேய் நடமாட்டம் அதிகம்னு சொல்லி இருந்திருக்கா. எல்லாரும் என் கிட்ட வந்து கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. கேட்டவங்க கிட்ட எல்லாம் எனக்கு பேயும் இல்லை பிசாசும் இல்லைன்னு சொல்லியே சலிச்சுடுச்சுங்கய்யா. அப்புறம் தானா இந்த வதந்தி அடங்கிடுச்சு....

அந்தத் திருடன் பேர் என்ன முனுசாமி. இப்பவும் சேரில தான் இருக்கானா?

“அவன் பேரு கந்தனுங்க. அவன் நாலு வருஷத்துக்கு முன்னாடியே சேரில இருந்து போயிட்டானுங்கய்யா?

இப்ப அவன் எங்கே இருக்கான்?

“தெரியலைங்கய்யா

“அவன் இங்கே பார்த்ததும் நீ பார்த்தது தானா இல்லை வேறெதாவதா?

“தெரியலை. நான் கேட்கப்போகலைங்கய்யா

“அவன் சம்சாரம் உன் சம்சாரத்து கிட்ட சொல்லையோ?

“பயந்தான்னு மாத்திரம் சொல்லிச்சு. மத்த விவரம் ஒன்னும் சொல்லலைங்கய்யா... நானாவது எப்பவாவது தண்ணியடிப்பேன். அவன் எப்பவுமே தண்ணில தான் இருப்பான். என்னை மாதிரி அவனும் போதையில என்ன பார்த்தானோ!

முனுசாமி நிஜமாவே பசுபதி ஐயா கூட இன்னொரு ஆள் அந்த ராத்திரியில இந்த வீட்டுல இருந்திருக்கலாம் இல்லையா?

முனுசாமி அவரையே திகைப்புடன் பார்த்தான். அப்படி ஒரு சாத்தியமே அவன் அறிவுக்கு இது வரை எட்டி இருக்கவில்லை என்பது புரிந்தது. எப்பவுமே அவரைப் பார்க்க வர்ற அவரோட தம்பி கூட இங்கே ராத்திரி வரைக்கும் இருந்ததில்லைங்கய்யா.  குடும்பத்து ஆள்கள் தவிர வேற யாரும் வர்றதும் இல்லைங்க. அப்படி இருக்கறப்ப யாரும் இங்கே அந்த நேரத்துல அவர் கூட இருந்திருக்க வாய்ப்பே இல்லைங்களே. அவரோட தம்பி உள்பட யாருமே அந்த பூஜை ரூம்ல நுழைஞ்சதை நான் இது வரைக்கும் பார்த்ததில்லைங்கய்யா. வெளியே இருந்தே தான் கும்பிட்டுட்டு போவாங்க. ஆனா நான் பார்த்த ஆள் இருந்தது பூஜை ரூமுக்குள்ளேயே தானுங்கய்யா. அப்படி நான் பார்த்தது உண்மைன்னா என் சம்சாரம் சொல்ற மாதிரி கூட இருக்கலாம்....

உன் சம்சாரம் என்ன சொன்னா?

“அந்த சிவனே, பசுபதி ஐயா கூட இருந்திருந்திருப்பாருன்னு அவ சொல்றாளுங்கய்யா

இந்தப் பாமர மக்கள் எவ்வளவு சீக்கிரமாக இது போன்ற நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் பார்த்தசாரதிக்கு ஆச்சரியமாக இருந்தது. பகுத்தறிவு என்ற வார்த்தையே இவர்கள் அகராதியில் இல்லையோ?

நீ அந்த சம்பவத்துக்கு அப்புறம் மறுபடி வேலைக்கு வந்த பிறகு அவர் உன் கிட்ட இது பத்தி எதுவும் பேசலையா முனுசாமி

எதுவும் பேசலைங்கய்யா. நானும் எதுவும் சொல்லப் போகலை....

அந்தத் திருடனைப் பத்தியாவது ஏதாவது அப்புறமா பேசினாரா

இல்லைங்கய்யா.

பார்த்தசாரதி ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு யோசித்தார். அந்தத் திருடன் என்ன பார்த்தான் என்று தெரிந்தால், முனுசாமி பார்த்ததையும் சேர்த்து ஒப்பிட்டு ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம். ஆனால் அவன் எங்கிருக்கிறானோ? பசுபதி-சிவலிங்க-அந்த வீடு என்ற இந்த முக்கோணத்தில் நிறைய ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகத் தோன்றியது. அந்த முக்கோணத்தில் பசுபதி இறந்து, சிவலிங்கம் காணாமல் போய் வீடு மட்டும் தான் இப்போது இருக்கிறது.

அவருக்கு தெய்வ நம்பிக்கை உண்டே ஒழிய மூட நம்பிக்கைகள் கிடையாது. ஆவி பேய் அல்லாத ஏதோ ஒரு அறியாத விஷயம் இதில் பலமாக இருக்கிறது என்று மட்டும் அவர் திடமாக நம்பினார். அது என்ன? என்று மூளையைக் கசக்கிக் கேட்டுக் கொண்டாலும் விடை கிடைக்கவில்லை. அப்போது தான் குருஜி நினைவு அவருக்கு வந்தது. ஒருவேளை குருஜியால் இதை விளக்க முடியுமோ!

(தொடரும்)

- என்.கணேசன்


7 comments:

  1. குருஜியின் விளக்கத்தை கேட்க காத்திருக்கிறோம்.....

    Saravanakumar.B
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete
  2. குருஜியின் விளக்கத்தை கேட்க காத்திருக்கிறோம்....

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    தொடருங்கள். நன்றி.

    ReplyDelete
  4. அடுத்த பகுதியைப் படிக்க ஆவல்...

    ReplyDelete
  5. அட ..அந்த குருஜி தான் லிங்கம் கொண்டு வர சொன்னவர்... ஒரு இன்ஸ்பெக்டர் உங்களை பார்க்க வந்து இருக்கார்னு சொல்வாங்களே..முந்தய அத்தியாயத்தை எல்லாம் படியுங்கள்

    ReplyDelete
  6. குருஜி என்ன சொல்லப்போகின்றார்

    ReplyDelete
  7. அட்டகாசம்.... விசாரணையில் முனுசாமி சொன்னது வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக பசுபதி பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த நெருப்பு ஜொலித்த கண்கள் சித்தராக தான் இருக்கவேண்டும் என்று எனக்கு தோன்றதுப்பா... அதோடு ஒரு திருடனும் எதையோ பார்த்து முனுசாமிப்போலவே பயந்திருக்கான்னு சொன்னதால பார்த்தசாரதியின் விசாரணை மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்கு செல்வது அறிய முடிகிறது... பார்த்தசாரதிக்கு தெய்வ பக்தி இருந்தாலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர்னு சொல்றார்... ஆனால் குருஜி கிட்ட போய் கேட்க நினைக்கிறாரே இது மூட நம்பிக்கையின் ஒரு பாகம் தானோப்பா? அது மட்டுமில்லாம பார்த்தசாரதி குருஜி கிட்ட போய் தன் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தையும் போய் சொன்னால் குருஜி கண்டிப்பாக உஷாராகிவிடுவார். பசுபதியின் கொலை, சிவலிங்கம் திருட்டுப்போனது இதுக்கெல்லாம் காரணமே குருஜி என்பதை பார்த்தசாரதி அறியவந்தால் அந்த வேலைக்காரியாவது பசுபதி அடுத்து இருந்தது சிவன் என்று தெய்வத்தின் பேரையாவது சொன்னாள்.. அதையே மூட நம்பிக்கை என்று சொன்ன இந்த பார்த்தசாரதி குருஜி தான் இத்தனைக்கும் காரணம் என்பதை அறிந்தால் அவர் அதன்பின் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று அறிய ஆவலாக இருக்கிறதுப்பா.. மிக மிக அற்புதம்பா கணேசா.. அன்பு நன்றிகள்.

    ReplyDelete