சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, November 26, 2011

கடைசி சாமுராய் (The Last Samurai)





ஜப்பானின் சாமுராய்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவர்கள். பல நூற்றாண்டுகளாய் ஜப்பானிய மன்னர்களின் பாதுகாவலர்களாய் இருந்தவர்கள். தன்மானத்திற்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் போனவர்கள். ஈட்டி, வில், சிறிய கத்திகள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை தங்கள் வாளைப் பூஜிப்பவர்களாகவும், அதற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தவர்கள். அப்படிப்பட்ட சாமுராய்களின் பெருமையை உணர்ச்சிபூர்வமாகவும் கவிதையாகவும் சொல்ல முயன்றதில் வெற்றி பெற்ற ஆங்கிலத் திரைப்படம் கடைசி சாமுராய். (The Last Samurai). முன்னமே ஒரு முறை பார்த்து ரசித்திருந்தாலும் சமீபத்தில் தொலைக்காட்சியில் இன்னொரு முறை பார்த்த போதும் சலிக்கவில்லை. அதுவே என்னை இதை எழுதத் தூண்டியது...

திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே கதை சொல்பவர் இப்படிச் சொல்வதாகப் போடுகிறார்கள்: “எல்லோரும் சொல்கிறார்கள் ஜப்பான் வாளால் உருவாக்கப்பட்டது என்று. ... நான் சொல்கிறேன் ஜப்பான் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில மாவீரர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒன்றிற்காக தங்கள் உயிரையும் தரத் தயாராக இருந்தவர்கள். அது தான்- தன்மானம்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் மேற்கத்திய வழிமுறைகளையும், போர்முறைகளையும் கொண்டு வந்து விட சக்கரவர்த்தியின் பிரதான ஆலோசகர் ஓமுரா (நடிகர்-Masato Harada) துடிக்கிறார். இளம் சக்கரவர்த்தியும் அதற்கு இசைகிறார். தங்கள் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரான மாற்றங்களை ஜப்பானில் கொண்டு வர கட்ஸுமோடோ (நடிகர்-Ken Watanabe) என்பவர் தலைமையில் உள்ள சாமுராய்கள் எதிர்க்கின்றனர். அவர்கள் எதிர்ப்பை அடக்க ஓமுரா ஜப்பானிய தேசியப்படையினருக்கு மேற்கத்திய சண்டைப் பயிற்சியும், துப்பாக்கிப் பயிற்சியும் தர அமெரிக்க வீரர்களின் உதவியை நாடுகிறார். அப்படி வரும் குழுவில் ஒரு கேப்டன் தான் படத்தின் கதாநாயகன் நாதன் அல்க்ரென் (நடிகர்- Tom Cruise).

அல்க்ரென் அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு பல அப்பாவி பழங்குடியினரைக் கொன்று குவித்து அதன் பின் எழுந்த மனசாட்சியின் குற்றச்சாட்டின் உறுத்தலில் இருப்பவர். அதை மறக்க குடியை நாடும் அவருக்கு ஜப்பானிய சக்கரவர்த்தி தர ஒத்துக் கொண்ட பெரிய வெகுமதித் தொகை தான் சம்மதிக்க வைக்கிறது. வந்தவர் துப்பாக்கியைப் பற்றி சிறிதும் அறியாத ஜப்பானிய தேசியப் படையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி தரத் துவங்குகிறார். அந்த சமயமாகப் பார்த்து சாமுராய்களின் தாக்குதல் ஓரிடத்தில் ஆரம்பிக்க ஜப்பானியப் படையினர் அதை முறியடிக்கப் போக, அவர்களுடன் சில அமெரிக்க வீரர்களும் போக நேரிடுகிறது. அவர்களில் அல்க்ரென்னும் ஒருவன்.

சாமுராய்களின் எண்ணிக்கையை விட பல மடங்காக ஜப்பானியப் படையினர் இருந்த போதும் சாமுராய்களின் திறமைக்கும் வேகத்திற்கும் முன் ஈடுகொடுக்க முடியாமல் தோற்கின்றனர். அல்க்ரென் முடிந்த வரை வீரத்துடன் போராடி சாமுராய்களின் முக்கியமான ஒரு தலைவனை(கட்ஸுமோடோவின் தங்கையின் கணவனை)க் கொன்று காயப்பட்ட போதிலும் பலனில்லாமல் போகிறது.  அல்க்ரெனைக் கொல்ல சாமுராய்களில் சிலர் முயன்ற போது அல்க்ரெனின் வீரத்தைக் கண்டு மெச்சிய கட்ஸுமோடோ அவனைக் கொல்லாமல் பிணைக்கைதியாக சிறைபிடித்துச் செல்கிறார்.

அல்க்ரெனை அவர்கள் தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவன் காயங்களைக் கழுவி சிகிச்சை செய்யும் பொறுப்பு கட்ஸுமோடோவின் சகோதரி டாகா (நடிகை-Koyuki)விற்குக் கிடைக்கிறது. கணவனைக் கொன்றவன் என்ற வெறுப்பு ஆரம்பத்தில் அவளுக்கு இருந்தாலும் பின் சிறிது சிறிதாக மறைகிறது. அல்க்ரென் சாமுராய்களின் வழிமுறைகள், பாரம்பரியம், ஒழுக்கம், தியாக உணர்வு ஆகியவற்றால் சிறிது சிறிதாகக் கவரப்படுகிறான். டாகாவிடம் ஈர்க்கப்படுகிறான். டாகாவிடமும், அவள் குழந்தைகளிடமும் அவன் பழக நேரிடும் போது அவனுக்கு ஏற்படும் ஆரம்ப தர்மசங்கடங்களும், குற்ற உணர்வும் மிக அழகாக காட்டப்படுகின்றன.


குணமான அவன் சாமுராய்களின் தலைவனான கட்ஸுமோடோவிற்கு நெருங்கிய நண்பனாகிறான். அவர்களது வாழ்க்கை முறையில் இருக்கும் அமைதி அவனுடைய புண்பட்ட மனதிற்கு மருந்தாக அமைகிறது. டாகாவின் கணவனைத் தான் கொன்றதற்காக ஒரு முறை அவன் வருத்தப்படுகிறான். அதற்கு கட்ஸுமோடோ சொல்கிறார். “அவன் மரணம் நல்ல மரணம்”. சாமுராய்கள் இறந்ததற்காக வருத்தப்படுவதில்லை. எப்படி இறப்பது என்பது முக்கியம் என்றே கருதுகிறார்கள் என்பதை ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் சாமுராய் பிள்ளைகளிடம் வாட்பயிற்சி பெறும் அல்க்ரென் பின் பெரியவர்களிடமும் பயிற்சி பெற்று நல்ல தேர்ச்சியும் பெறுகிறான். ஓமுராவால் கஸுமோடோவைக் கொல்ல அனுப்பப்படும் நபர்களை எதிர்த்து கட்ஸுமோடோ போரிடுகையில் அவருக்கு பக்க பலமாக அல்க்ரெனும் நின்று போரிட்டு வந்தவர்களைத் தோற்கடிக்கிறான்.

கட்ஸுமோடோ சக்ரவர்த்தியிடம் நேரடியாகச் சென்று தங்கள் பக்க நியாயங்களையும், ஜப்பானின் பாரம்பரியம் காக்க மேலை நாட்டினரிடம் விலை போகக்கூடாது என்பதையும் விளக்குகிறார். ஆனால் ஓமுராவின் தவறான ஆலோசனைகளில் மயங்கிப் போயிருந்த பலவீனமான சக்ரவர்த்தி அப்போதும் அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஓமுரா கட்ஸுமோடோவை சிறைப்படுத்தி விடுகிறார். அல்க்ரென் உதவியாலும், தன் மகன் உதவியாலும் கட்ஸுமோடோ தப்பித்தாலும் மகன் கொல்லப்படுகிறான்.
 
கடைசியில் ஓமுரா சாமுராய்களை அழிக்க இரண்டு பெரிய போர்ப்படைகளை அனுப்புகிறார். கட்ஸுமோடோவும் சாமுராய்களும் அத்தனை பெரிய படைகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுக்கு எதிராக தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் போரிடத் தயாராகிறார்கள். அல்க்ரெனும் அவர்களுடன் போரிடத் தயாராகிறான். அவனுக்கு டாகாவின் கணவனின் போர்க்கவசம் தரப்படுகிறது. யாரைக் கொன்றிருந்தானோ அவனுடைய போர்க்கவசத்தையே அணிந்து கொண்டு அவன் எந்த இலட்சியத்திற்காகப் போராடினானோ அதே இலட்சியத்திற்காகப் போரிட அல்க்ரென் தயாராகிறான்.

போரில் சாமுராய்கள் மேற்கத்திய போர் உபகரணங்கள் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். சரணடைந்தால் உயிர்ப்பிச்சை தருவதாக எதிரிகள் கூறியதை ஏற்காமல் மேற்கொண்டு போரிட்டு துப்பாக்கி சூட்டிற்குப் பலியாகிறார்கள். கட்ஸுமோடோ காயமடைந்து எதிரிகளிடம் பிடிபட விரும்பாமல் அல்க்ரென் உதவியுடன் தன்னையே மாய்த்துக் கொள்கிறார். அதைக் கண்ட எதிரிப்படை வீரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொப்பிகளை எடுத்து மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறார்கள். அந்த காட்சி மிகவும் உருக்கமாக படமாக்கப்பட்டுள்ளது.

கடைசியில் கட்ஸுமோடோவின் வாளுடன் அல்க்ரென் சக்கரவர்த்தியை சந்திக்கச் செல்கிறான். அந்த நேரத்தில் தான் அமெரிக்கர்களுடன் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட சக்கரவர்த்தி தயாராக இருக்கிறார். அவரிடம் கடைசி சாமுராய் கட்ஸுமோடோவின் வீரவாளை ஒப்படைக்கிறான் அல்க்ரென். இதை அவர் உங்களிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதை வைத்திருந்த அவருடைய முன்னோர்களும் எதற்காக இறந்தார்கள் என்பதை இதைக் கையில் கிடைக்கும் போதாவது நீங்கள் நினைத்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை அவரது கடைசி மூச்சு போகும் நேரத்தில் இருந்தது. சாமுராய்கள் இல்லா விட்டாலும் அவர்கள் சக்தி உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்
 
அல்க்ரென் என்ற அமெரிக்கன் ஒரு ஜப்பானிய சாமுராயுடன் சேர்ந்து போரிட்டதும், அந்த வாளைக் கொண்டு வந்து அப்படிச் சொன்னதும் சக்ரவர்த்தியைப் பெரிதும் பாதித்தது. அனைத்தையும் அறிந்த பிறகு அவர் மனம் மாறுகிறார். ஓமுரா சக்ரவர்த்தியிடம் ஏதோ சொல்ல முன் வந்த போது அவரை அலட்சியப்படுத்திய சக்ரவர்த்தி அமெரிக்கர்களுடனான ஒப்பந்தத்திற்குக் கையெழுத்து போட மறுத்து விடுகிறார்.

அல்க்ரென் அந்த ஜப்பானிய கிராமத்திற்கே திரும்புகிறான். டாகா, மற்றும் அவள் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். கடைசியில் கதை சொல்பவரின் குரல் இப்படி சொல்லி படத்தை முடிக்கிறது. “சாமுராய்களின் நாட்கள் இப்படியாக முடிந்து போயின. நாடுகளும் மனிதர்களைப் போல ஒரு விதிக்கு உட்பட்டவையே அல்லவா. அந்த அமெரிக்க கேப்டனைப் பொறுத்த வரை சிலர் போரில் கிடைத்த காயத்தின் மூலமாகவே இறந்தான் என்கிறார்கள். சிலர் தன் நாட்டிற்கே திரும்பினான் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் தேடி வெகு சிலருக்கே கிடைக்கும் மன அமைதியை அவன் கடைசியில் கண்டு கொண்டான் என்றே நம்ப ஆசைப்படுகிறேன்

திரைப்படம் முடிந்த பிறகும் மனம் என்னவோ செய்கிறது. கதாபாத்திரங்கள் மனதில் தங்கி விடுகின்றனர்.

பல விருதுகளைப் பெற்ற இந்த திரைப்படத்தின் கதை ஜான் லோகன் என்பவரால் எழுதப்பட்டது. திரைப்படத்தை இயக்கியவர் எட்வர்டு ஸ்விக். 2003ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கடைசி சாமுராய் கட்ஸுமோடோவாக நடித்த கென் வாடனபே நடிப்பு மிக அருமையாக இருக்கிறது. அந்த நபராகவே திரைப்படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார் மனிதர். அல்க்ரென்னாக நடித்த டாம் க்ரூயிஸும், டாகாவாக நடித்த கொயுகியும் கூட மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். போர்க்காட்சிகளின் பிரம்மாண்டமும், ஜப்பானிய கலாச்சாரத்தை அழகாகச் சொல்லும் கிராமத்துக் காட்சிகளும் கண்களையும், மனத்தையும் கவர்கின்றன.

காலம் வென்று நிற்கக்கூடிய இந்தத் திரைப்படத்தை சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.

- என்.கணேசன்

Tuesday, November 22, 2011

வயதில்லா உடலும், காலமறியா மனமும்




உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலைகள்என்றும், “மனம் அனைத்து துன்பங்களிற்கும் உற்பத்திக்கூடம்என்றும் சொல்வார்கள். அதிலும் வாழ்க்கை இளமையிலிருந்து விலகி முதுமையை நோக்கிச் செல்லச் செல்ல உடலும் மனமும் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலோருடைய கருத்தும், அனுபவமும் இப்படி இருக்கையில் அதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை Ageless Body and Timeless Mind (வயதில்லா உடலும் காலமில்லா மனமும்) என்ற தன் நூலில் ஆதாரபூர்வமாய், அழுத்தம் திருத்தமாய் சொல்கிறார் தீபக் சோப்ரா.

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறிய தீபக் சோப்ரா மருத்துவப் படிப்பில் M.D பட்டம் பெற்றவர். உடல்-உள்ளம் சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டியவர். அவர் எழுதிய சுமார் 65 புத்தகங்களில் 19 புத்தகங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அதிக விற்பனையான மற்றும் பிரபலமான புத்தகங்கள் பட்டியலில் இடம் பிடித்தவை. அதிலும் வயதில்லா உடலும், காலமில்லா மனமும் என்ற இந்தப் புத்தகம் அந்தப் பட்டியலில் தொடர்ந்து பல வாரங்கள் தங்கிய புத்தகம். இதில் அவர் அலசி இருக்கும் விஷயங்களும், சொல்லியிருக்கும் உண்மைகளும் மிக மிக சுவாரசியமானவை மட்டுமல்ல மிகவும் உபயோகமானதும் கூட. அவற்றைப் பார்ப்போம்...

உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள தொடர்பு நெருக்கமானது என்பதை விட இரண்டும் பின்னிப் பிணைந்தவை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களால் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவை என்கிறார் சோப்ரா. செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுவதும், வேகம் குறைவதும், அப்படியே நின்று போவதும், ஏன் தலைகீழாய் பின்னுக்குச் செல்வதும் கூட மனதின் எண்ணங்களைப் பொறுத்து சாத்தியமாகின்றன என்கிறார் அவர்.

செல்களின் சுமார் 90% சக்தி உடலை ரிப்பேர் செய்வதிலும், உடலுக்குத் தேவையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்துவதிலும், சீரமைப்பதிலும் செலவாகிறது. ஆனால் மனம் எதைப் பற்றியாவது கவலை கொண்டாலோ, பயம் கொண்டாலோ, ஏதோ ஆபத்தை உணர்ந்தாலோ செல்கள் அந்த வேலை செய்வதை விட்டு விட்டு மனம் சொல்லும் விஷயங்களில் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. இது எப்போதாவது ஒரு முறை நடந்தால் பெரிய பாதகம் இல்லை. ஆனால் இது எப்போதுமே நடந்து கொண்டிருந்தால் உடல் பாதுகாப்பும் சீரமைப்பும் கைவிடப்பட்டு மனதின் கற்பனை அவசரங்களில் செல்களின் சக்தி வீணாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களின் உடல்கள் சீக்கிரமாகவே முதுமையடைகின்றன, சீக்கிரமாகவே நோய்வாய்ப்படுகின்றன என்கிறார் சோப்ரா. கான்சர், பக்கவாதம் போன்ற நோய்கள் அதிகமாக துக்க காலத்தில் தான் உடலைத் தாக்குவதில் வெற்றியடைகின்றன என்று ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி அவர் கூறுகிறார்.

நமது உடற்கூறின் அடிப்படையான DNA மாறுவதில்லை என்ற போதிலும் அதன் நகலானதும், வேலையாளுமான  RNA நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளிற்கும் ஏற்ப தூண்டப்பட்டு அடிக்கடி தன் வேலையை மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் உடல் கட்டமைப்பையும் அதன் சக்தியையும் நிர்ணயிக்கும் சக்தியையும் பெற்றுள்ள  RNA நமது தவறான எண்ணப்போக்கால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. சீக்கிரமே சக்தி இழக்கும் உடல் நோயால் விரைவாகவே பாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
இதற்கு பல ஆதாரங்களுடன் கூடிய விரிவான விளக்கத்தையும் தருகிறார் தீபக் சோப்ரா.

முதுமை தவிர்க்க முடியாதது என்ற கூற்றை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார். உலகில் ஒரு செல் அமீபா, அல்கே, ப்ரோடோசோவா போன்ற சில உயிரினங்கள் முதுமை அடைவதில்லை என்கிறார். நம் அறிவுத் திறன், உணர்வுகள், தனித்தன்மைகள் முதுமையடைவதில்லை என்கிற அவர் நமது DNAவின் பெரும்பகுதி கூட வயதிற்கேற்ப மாறுவதில்லை என்கிறார்.

தேனீக்களின் வாழ்க்கையை விஞ்ஞானிகள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கண்ட அதிசயங்களை விவரித்து தன் வாதத்திற்கு வலுவூட்டுகிறார் அவர். தேன்கூட்டிற்குள் தங்கி முட்டைகளைப் பாதுகாப்பதும், அப்போது தான் பிறந்த புதிய தேனீக்களின் உணவுத் தேவைகளைக் கவனிப்பதும் இளம் தேனீக்களின் வேலை. மூன்று வாரங்கள் வளர்ந்த பிறகு தேன் சேகரிக்க வெளியே சென்று விடும் மூத்த தேனீக்களாக அவை மாறி விடும். இது தான் அவற்றின் இயற்கையான செயல்பாடு. ஆனால் அவசர காலங்களில் அவற்றின் வயதும் வேலையும் ஹார்மோன்களின் உதவியுடன் விரைவுபடுத்தப்படுவதையும், தலைகீழாய் திரும்புவதையும் கண்டு விஞ்ஞானிகள் அசந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூட்டுக்குள் தேவைக்கும் அதிகமான தேனீக்கள் இருந்து வெளியே சென்று தேன் சேகரிக்கும் தேனீக்கள் குறைந்தால் கூட்டில் உள்ள இளம் தேனீக்களின் வயது தானாக ஹார்மோன்கள் இயக்கத்தால் மூன்று வாரமாகக் கூடி தேன் சேகரிக்கக் கிளம்பி விடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதே போல் கூட்டிற்குள் வேலை செய்யும் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வெளியே செல்லும் முதிய தேனீக்கள் எண்ணைக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு முதிய தேனீக்கள் தங்கள் ஹார்மோன்கள் வேலைப்பாட்டால் இளமையாகி கூட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனவாம்.

தேனீக்கள் மாறும் அளவிற்கு மனிதன் மாற முடியா விட்டாலும் மனித உடலிலும் மூளை தேவைக்குத் தகுந்தபடி பல அற்புதங்களைச் செய்வதை உதாரணமாக தீபக் சோப்ரா சுட்டிக் காட்டுகிறார். மூளையின் வழித்தடங்கள் முதிய வயதிலும் நீள்வதையும், சில நியூரான்கள் சுருங்கும் போது குறுக்குத் தடங்கள் உருவாகி செயல்பாடுகளில் குறைவில்லாமல் மூளை இயல்பாகவே பார்த்துக் கொள்ள முயல்வதையும் விவரிக்கிறார்.

ஆனால் உடல் தன் வேலையை இயல்பாகச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு இடையூறுகளையும் தடைகளையும் நாமாக நம் தவறான வாழ்க்கை முறையாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். அதற்கு பொருள் பொதிந்த அறிவுரைகள் சிலவற்றை மிக விரிவாக இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

நாம் உடலைப் பொருத்த வரை எந்திரமாக இயங்கப் பழகி விட்டோம். இயற்கையாக நடக்கும் உடலின் செயல்களுக்கு நாம் கவனம் தருவதில்லை. அது ஏதாவது வேலையைச் சரிவர செய்யாமல் போனால் அது மட்டும் தான் கவனத்திற்கு வருகிறது. அந்த சமயத்தில் அது பெரும்பாலும் மருந்தில்லாமல் குணமாகாத நிலைக்கு சென்று விட்டிருக்கும். உடலின் ஒவ்வொரு பகுதியையும், அது செய்யும் வேலையையும் விழிப்புணர்வோடு நம்மை அவ்வப்போது கவனிக்கச் சொல்கிறார். அனிச்சையாக நடக்கும் செயலுக்கு நம் கவனத்தையும் தருவது அப்பகுதியையும், அதன் செயலையும் சீராக்கும் என்று அவர் சொல்கிறார்.

பயன்படுத்தாத எதுவும் பலமிழந்து போகும் என்பது உடலியலிலும், மனவியலிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உடலுறுப்பும் சரி, நம் திறமைகளும் சரி பயன்படுத்தத் தவறும் போது பலமிழந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் பயன்படுத்த முடியாததாகவே மாறி விடுகிறது. ஒவ்வொரு தகவலையும் உடல் அவ்வப்போது நமக்கு நுணுக்கமாகத் தெரிவிக்கிறது. ஆனால் எந்திரத்தனமாக செயல்படும் நாம் மற்ற எத்தனையோ விஷயங்களில் மும்முரமாக இருந்து அது சொல்லும் செய்திகளைக் கேட்கத் தவறி விடுவதால் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்கிறார் அவர்.

வாழும் விதத்திலும் சிந்திக்கும் விதத்திலும் நாம் செய்யும் சின்ன திருத்தமும் நம்மை மிகப் பெரிய விதத்தில் மாற்றும் வலிமை கொண்டது என்கிறார். ஒரு சிஷ்யன் குருவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான். நாம் இருவரும் ஒரே மாதிரி தானே இந்த உலகில் வாழ்கிறோம். பின் எது நம் இருவரையும் வித்தியாசப்படுத்துகிறது?

குரு சொன்னார். “நீ இந்த உலகில் உன்னைப் பார்க்கிறாய். நான் என்னில் இந்த உலகத்தைப் பார்க்கிறேன்

சின்னதாய் பார்க்கும் விதம் மாறினாலும் உலகமும், வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் மாறி விடுகிறது. வெளியுலகில் நடக்கும் சம்பவங்களுக்கு உண்மையில் நம்மை மாற்றும் சக்தி இல்லை என்கிறார் அவர். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தே நம் வாழ்க்கை அமைகிறது என்று சொல்கிறார்.


உடல் மீது இவ்வளவு ஆதிக்கம் செய்ய முடிந்த மனதைக் கட்டுப்படுத்துவதில் இக்கால மனிதர்கள் வெற்றி பெறாததே அவர்களது மன உளைச்சலுக்கும், துன்பங்களுக்கும் காரணம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கை முறையில் எளிமை இல்லாததும், பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக அவர் சொல்கிறார்.

ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும் போது நம்மைப் பொறுத்த வரை காலம் நின்று போகிறது, அல்லது மறக்கப்படுகிறது. அதில் நாம் களைப்படைவதும் இல்லை. ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்திலும் களைத்தல்லவா போகிறார்கள். இதையும் மிக அழகாகத் தன் நூலில் கையாண்டிருக்கும் தீபக் சோப்ரா எல்லாவற்றையும் மாற்றி உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியையும், சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தப் புத்தகத்தில் சில தியான முறைகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும், பயிற்சிகளையும் விளக்கி இருக்கிறார். எல்லாமே அறிவுபூர்வமாகவும், எளிமையாகவும் இருப்பது தான் இந்த நூலின் தனிச்சிறப்பு. 

342 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதிலும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் விரிவாகவே அலசப்படுகிறது. இரண்டையும் அழகாக இணைத்து தெளிவான முடிவுகளைத் தந்திருப்பதிலும், மாற்றத்திற்கான வழிமுறைகளைக் காட்டி இருப்பதிலும் தீபக் சோப்ரா வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இழந்து விட்ட தனிச்சிறப்புகளை மீண்டும் மீட்டெடுக்க இன்றைய மனிதனுக்கு இந்த நூல் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

- என்.கணேசன்


Friday, November 18, 2011

உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!



வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 14
உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!

நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களில் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம். சில நேரங்களில் தவறுகளால் வாழ்க்கையில் அடிபட்டு போதுமடா சாமி இனி கண்டிப்பாய் இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தும் இருக்கிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் ஒருசில நாட்களிலேயே பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறோம். இது தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நியதியாக இருக்கிறது.

உண்மையாகத் தானே அப்படி ஆசைப்பட்டோம். நம் நன்மையை எண்ணித் தானே அதை செயல்படுத்த முனைந்தோம். ஆரம்பித்த நேரத்தில் மிகவும் உறுதியாகத் தானே இருந்தோம். பின் எங்கே ஏமாந்தோம்? அந்த உறுதி எப்போது தளர்ந்து போனது? ஏன் பழைய நிலைக்கே மாறி விட்டோம் என்ற கேள்விகள் ஆத்மார்த்தமாய் நமக்கு எழாமல் இருக்க முடியாது. அந்தக் கேள்விகளுக்கு பதிலை நாம் வெளியே தேடினால் கிடைக்காது. பதிலை நமக்குள்ளேயே தான் தேட வேண்டும்.  

எல்லா மாற்றங்களும் உள்ளத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது. மாறுவதற்கு வெளியே இருந்து எத்தனையோ உதவிகள் கிடைக்கலாம். மாறுவதற்கு எத்தனையோ சாதகமான சூழ்நிலைகள் வெளியே இருக்கலாம். ஆனால் மனம் நூறு சதவீதம் ஆசைப்பட்டால் ஒழிய எந்த நிரந்தர மாற்றமும் நம்மிடம் ஏற்படாது. இது மிகப்பெரிய மாற்றங்களுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல. மிகச்சிறிய மாற்றங்களுக்கும் இதே விதி தான்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வீட்டை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடியவர். அவர் மகளோ அவருக்கு நேர்மாறானவர். வீட்டில் எல்லாம் அங்குமிங்கும் இரைந்து கிடக்கும். வேண்டியது வேண்டாதது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாம் கண்டபடி விழுந்து கிடக்கும். தாய் மகள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது தலை சுற்றி விழாத குறை தான். மிகுந்த சிரமம் எடுத்து தாய் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியதோடு நிற்காமல் அதை அப்படியே தொடர்ந்து ஒழுங்காகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்.

தாய் முயற்சியால் வீடு மிக அழகானதைப் பார்த்த மகள் “இது என் வீடு தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறதுஎன்று வியந்து போனார். ஒவ்வொன்றையும் தேடியே நான் இது வரை நிறைய சலித்து விட்டேன்.என்றார். இனி இதே அழகுடன் வீட்டைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதாக தாயிடம் உறுதிமொழியும் தந்தார். ஆனால் தாய் போன பிறகு மூன்றே நாளில் வீடு பழைய நிலைக்கு மாறியது.

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். மருமகன் ஏகப்பட்ட கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த மாமனார், தன் மகளும் பாதிக்கப்படுவதை சகிக்க முடியாமல் மருமகனுக்கு உதவ முன் வந்தார். மகளின் அத்தனை நகைகளும் அடகு வைக்கப்பட்டு வெறும் தாலிச்சரடுடன் இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மருமகனின் வருமானம் முழுவதுமே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது என்பதை அறிந்த அவர் யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற கணக்கெடுத்து அத்தனையும் தந்து மருமகனைக் கடன் தொல்லையில் இருந்து முழுவதுமாக மீட்டார். மகளின் நகைகளையும் மீட்டுத் தந்தார்.

மருமகன் கண்கலங்க மாமனாருக்கு நன்றி சொன்னான். கடன் தொல்லை இல்லாததால், வட்டி கட்டும் தேவையும் இல்லாததால் இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வோம் என்று உறுதியளித்தான். மாமனாரும் நிம்மதியாக வீடு திரும்பினார். ஆனால் ஆறே மாதங்களில் அந்த மருமகன் பழைய நிலைக்கே வந்து விட்டான். பல இடங்களில் கடன் வாங்கி வட்டி கூடத் தர முடியாமல் திண்டாட ஆரம்பித்து விட்டான். மனைவியின் நகைகள் அத்தனையும் அடகுக்கடைக்கு போய் விட்டன.

இந்த இரண்டு உதாரணங்களும் அபூர்வமானதல்ல. ஒவ்வொருவரும் தினசரி காண முடிந்தவையே. மாற வேண்டும் என்கிற ஆசையும் அந்த உள்ளத்தில் தானே தோன்றியது. மாறா விட்டால் இருக்கும் சிரமங்களையும் அவர்கள் உணர்ந்தவர்கள் தானே. பின் ஏன் அவர்கள் மாறவில்லை? திரும்பத் திரும்ப பழைய நிலைக்கே அவர்களை இழுத்துச் செல்வது எது?

மனிதன் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்கள் அந்த நேரத்தில் பலம் வாய்ந்தவை அல்ல. அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டு, அதனுடன் அதற்கான முக்கியத்துவமும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போது தான் அவை பலம் பெற ஆரம்பிக்கின்றன. அப்போது தான் அவை ஆழ்மனதில் பதிகின்றன. உண்மையிலேயே மாற விரும்புபவன் அந்த எண்ணங்கள் வேரூன்றும் வரை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். சில முறை நினைத்தால், திடீர் உற்சாக தருணங்களில் நினைத்தால் போதாது. அதே நேரத்தில் அந்த எண்ணங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை, எதிரான மனோ பாவத்தை அறவே நீக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே செய்தால் மட்டுமே உண்மையில் உள்ளம் மாறும். அதன்படி எல்லாம் மாறும்.

மாற முடியாதவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு இந்த இரண்டையும் தொடர்ந்து செய்யாமல் இருப்பது தான். மேலே சொன்ன இரண்டு உதாரணங்களிலும் ஏற்பட்ட தவறுகளைப் பார்ப்போம்.

வீட்டை தாய் சுத்தப்படுத்தி விட்டு போன பிறகு அந்த மகள் முதல் நாள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டது உண்மை. ஆனால் இரண்டாம் நாள் அந்த எண்ணம் வலுவிழந்தது. மூன்றாம் நாள் அது மிக பலவீனமாகவே உணரப்பட்டது. தொடர்ந்த நாட்களில் அந்த எண்ணம் சமாதியாக்கப்பட்டது. அதனால் தாயிடம் உறுதியளித்த படி ஒவ்வொன்றையும் அந்தந்த இடத்திலேயே வைப்பதும், அவ்வப்போதே உபயோகித்த இடங்களை சுத்தப்படுத்துவதும் செய்ய முடியாமல் போனது. அந்த சில்லரை சிரமங்களைக் கூட எடுக்கவிடாமல் முன்பே பழகி இருந்த ஒழுங்கீனம் பழையபடி அவர் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொள்ள காரணம் அதுவே.

அந்த மருமகனும் கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது இதிலிருந்து ஒரு முறை தப்பித்தால் போதும், பின் எப்போதும் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று உறுதியாக நினைத்தது உண்மை தான். ஆனால் அவனிடம் காணும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம் இருந்தது. அது தேவையோ, தேவை இல்லையோ, யாரிடமாவது பார்த்தால் தானும் வாங்கி விடுவான். தன்னிடம் இருக்கும் பொருளை அடிமாட்டு விலைக்கு விற்று அதிலேயே புதிய மாடலை கடன் வாங்கியாவது வாங்கிக் கொள்வான். இந்தக் குணம் தான் அவனை பெரும் கடனில் ஆரம்பத்தில் தள்ளியது. மாற ஆசைப்பட்டவன் மாறுதலுக்கு எதிரான, கண்ட பொருள்களை எல்லாம் வாங்கும் பழக்கத்தை விடுவதற்குத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. முதல் பொருளை வாங்கும் போது இப்போது தான் பழைய கஷ்டம் இல்லையே இதை வாங்குவதால் என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று நினைத்தான். அதாவது மாமனாரிடம் சொன்ன போது இருந்த உறுதிக்கு எதிராக சின்ன செயல் செய்தார். அந்த மன உறுதியை தொடர்ந்து காப்பாற்றி இருந்தால் அந்த சின்ன விலகலைக் கூட அவன்  அனுமதிக்காமல் இருந்திருப்பான். ஒரு விலகல் இன்னொரு விலகலுக்கு வழி ஏற்படுத்த, பின் ஏற்பட்ட சின்ன சின்ன விலகல்கள் சிறிது சிறிதாக ஆரம்ப உறுதியைத் தகர்த்து விட முன்பே பலமாயிருந்த அந்தப் பழக்கம் மீண்டும் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.

எனவே மாற விரும்புவர்கள் உள்ளத்தை மாற்றுங்கள். மாற்ற விரும்பும் ஆசையில் முழுமையாக இருங்கள். அடிக்கடி அதை உறுதிப்படுத்துங்கள்.  உள்ளத்தில் அதற்கு முரணாக உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் தீர்மானம் உறுதிப்படும் வரை சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். பழைய ஆசைகளும், எண்ணங்களும் வேரோடு பிடுங்கப்படும் வரை ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் மட்டுமே விரும்பும் மாற்றங்கள் சாத்தியப்படும்.


மேலும் படிப்போம்.

-என்.கணேசன்
நன்றி: வல்லமை





Monday, November 14, 2011

தர்மம் நிலைநாட்டப்படும் விதம்


கீதை காட்டும் பாதை 14
தர்மம் நிலைநாட்டப்படும் விதம்

இது வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல அர்ஜுனனிற்கு சந்தேகம் வருகிறது. “நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே உபதேசித்திருக்க முடியும்என்று கேட்கிறான்.

கீதையின் மிகப் பெரிய சிறப்பு நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ கேட்டுக் கொண்டே வாஎன்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான். எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணரிடம் எழுப்பவில்லை.

ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும் ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.

பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல. எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனிற்கு அவை குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.

கீழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள் அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான நான் என்பதை அவன் உணரும் முன் எத்தனையோ பொய்யான நான்களை அந்தப் பிறவிகளில் பாவித்து பின் அதெல்லாம் ‘நான்அல்ல என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் அனுபவிக்க மீதி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி தேவைப்படுகிறது.

இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன் இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும் அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால் இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக் கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகக் கூறுகிறார்.

தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால் இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட-தர்மத்தைக் கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும் நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன் தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல் உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.

அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும். அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி கர்வத்துடன் அதர்மம் அத்துமீற ஆரம்பிக்கும் போது நல்லதிற்குக் காலமில்லைஎன்ற விரக்தியையும் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவதுண்டு.

அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன் தோன்றுவதாக கீதை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன் தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர் மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.
அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீறிய சக்தி அவர்களை உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது. ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம் எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும் காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புறையோடிப் போயிருக்கையில், ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்.

இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு  மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.

பிறவாமை வேண்டும்என்று காரைக்கால் அம்மையாரும்,  இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் காஎன்று பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப் பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

பாதை நீளும்....

என்.கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, November 9, 2011

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13
உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். ஐன்ஸ்டீன் போன்ற மாமேதைகளே தங்கள் மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் வரை தான் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவதும் எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து மரிக்கிறான். இதில் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப் படைக்கின்றது.

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. இறைவன் என்னவெல்லாம் தரவில்லை என்பதை என்னேரமும் மறக்காமல் குமுறும் நாம் அவன் தந்ததை எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், பயன்படுத்தி எந்த அளவு முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறோம் என்பதை எல்லாம் சிந்தித்து உணர பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

செவிடு, குருடு, ஊமை என்ற மூன்று குறைபாடுகளையும் சிறிய வயதிலேயே கொண்டிருந்த ஹெலன் கெல்லரை (1880-1968) நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.  இந்தக் குறைபாடுகள் அவரை முடங்கி இருக்கச் செய்து விடவில்லை. செவிட்டுத் தன்மையையும், குருட்டுத் தன்மையையும் மாற்ற முடியா விட்டாலும் ஊமைத் தன்மையை தன் கடும் முயற்சியால் வெற்றி கொண்டார் அவர். பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்கினார். பல உலக நாடுகளுக்கு பயணித்து சொற்பொழிவாற்றினார். பன்னிரண்டு புத்தகங்கள் எழுதினார். பார்வையிழந்தோருக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்காக வாழ்நாளெல்லாம் உழைத்தார். அவரைப் பற்றிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஊமைப்படத்தில் நடித்தும் இருக்கிறார். இத்தனையும் நிகழ முக்கிய காரணம் ஹெலன் கெல்லர் தன்னைக் குறைத்துக் கொள்ளாதது தான். செவிடு, ஊமை, குருடு என்ற மூன்று மிகப்பெரிய குறைகள் உள்ள தன்னால் என்ன முடியும் என்று சுய பச்சாதாபத்தில் தங்கி விடாதது தான்.

அதே போல் இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic). 1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பிறந்த இவருக்குப் பிறந்த போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான் செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். அவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால் அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால் இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க வைக்கும் உண்மை.

அவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன்றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம். பள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரக வாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. 13 வயது வரை அவர் சதா தற்கொலைச் சிந்தனைகளிலேயே இருந்தார். ஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.

அவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தார். படிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது. அந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. தளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டர் இயக்குவது வரை, டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்ட தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் நிகழ்த்தி வரும் இவர் உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.
  
ஹெலன் கெல்லரும், நிக்கும் உறுப்புகளில் குறையுடன் பிறந்திருந்தாலும் அந்தக் குறைகளை தங்களின் விதியைத் தீர்மானித்து விட அனுமதிக்கவில்லை. தங்களை அந்தக் குறைகள் வரையறுத்து விடவும் அனுமதிக்கவில்லை. தங்களைக் குறைத்துக் கொள்ளாத அவர்கள் மாறாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்கள். எப்படி எங்களால் முடியும் என்று நியாயமான கேள்விகளைக் கூட எழுப்பி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கும் நிஜத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து உயர முழு உற்சாகத்தோடு முயன்று இமயம் என உயர்ந்து நிற்கிறார்கள்.

சென்ற நூற்றாண்டு மனிதர்கள் நினைத்துப் பார்க்காத எத்தனையோ அற்புதங்கள் இன்று நமக்கு சர்வ சாதாரணமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்த விஷயங்கள் இன்று நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் அளவு மலிந்து விட்டன. அதை சாதித்த மனிதர்கள் அனைவர்களும் தங்களைக் குறைத்துக் கொள்ளாமல் தங்கள் திறமைகளால் உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் உயரும் போது அவர்களுடன் மனித சமூகமே உயர்ந்தது என்பது தான் அவர்கள் கண்ட உண்மையான சிறப்பு.

உயர்த்திக் கொள்வது என்பது கர்வப்படுவது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல. அது தன்னைத் தானே உயர்வாகச் சொல்லிக் கொள்வதல்ல. நம் திறமைகளையும், சக்திகளையும் உயர்த்திக் கொள்வதே உண்மையான உயர்த்திக் கொள்ளல். நம் திறமைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே செல்வது தான் உயர்த்திக் கொள்ளல். எந்த சூழ்நிலையும் நம்மைக் குறைத்து விட அனுமதிக்காமல் நிமிர்ந்து நிற்பது தான் உயர்த்திக் கொள்ளல். அதெல்லாம் அபூர்வமான சிலருக்குத் தான் முடியும் என்று மட்டும் சொல்லி உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலன் கெல்லரும், நிக் வூயிசிச்சும் கூடத் தங்களைக் குறைத்து எண்ணி விடாமல் இருக்கையில் அவர்களைக் காட்டிலும் நல்ல நிலையில் பிறந்த நாம் நம்மைக் குறைத்துக் கொண்டால் அது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.

-          என்.கணேசன்
-          நன்றி:வல்லமை

Friday, November 4, 2011

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-11
அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

“இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்பு குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.

எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.

மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.

பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?

டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.

பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?

ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.

“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?

அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன

டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?

(தொடரும்)

- என்.கணேசன்


Tuesday, November 1, 2011

சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 12
சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்!

ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார்.

நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.

அவர் விக்கித்துப் போனார்.

சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக வரும் நாகேஷ் சொல்லும் வசனம் போல் “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சாதனைகளை இவர்களால் ரசிக்க முடியாது. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மனம் இவர்களுக்கு வராது. பலரும் பாராட்டினாலும் இவர்கள் வித்தியாசப்பட்டு விமரிசிப்பார்கள். அப்படி மாறுபடுவதாலேயே அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுவும் பிரபலங்களை விமர்சிப்பது என்றால் இவர்களுக்கு தனி உற்சாகம் வந்து விடும். அவர்களை விமரிசிப்பதாலேயே அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பில் இருப்பார்கள். தங்களை வித்தியாசமான அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ள நினைப்பார்கள்.

குறைகள் கண்டிப்பாக சுட்டிக் காட்டப்பட்டால் தான் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அப்படி திருத்திக் கொள்ளும் போது தான் மனிதன் முன்னேறுவதும், பக்குவம் அடைவதும் சாத்தியமும் கூட. ஆனால் நிறைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடுவது என்பது நேர்மையான விமரிசனத் தன்மை அல்ல. மாறாக அது விமரிசிப்பவனின் தரத்தின் சிறுமையை சுட்டிக் காட்டி விடும்.

வாழ்க்கைக் கனவுகளை நனவாக்க நாம் எடுத்து வைக்கும் ஆரம்ப அடிகள் மிக மென்மையானவை. நமக்கு நம் மீதே முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்காத காலமது. நம் ஆரம்ப முன்னேற்றங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அடுத்தவர் வாய்வழியாக சில சமயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில் இது போன்றவர்களின் கருத்தைக் கேட்கும் தவறைச் செய்து விடாதீர்கள். கேட்காமலேயே தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. அப்படி தெரிவித்தாலும் அதை அலட்சியப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவர்கள் கருத்து, விதைத்தவுடன் ஊற்றப்படும் வெந்நீராக அமைந்து விடும். அந்தக் கனவு விதைகளை ஆரம்பத்திலேயே அழித்து விடும்படியான அமிலமாக இவர்கள் விமரிசனம் அமைந்து விடலாம். மன உறுதி மட்டும் இல்லா விட்டால் உங்கள் தன்னம்பிக்கை அப்போதே காணாமல் போய் விடும்.

எத்தனையோ திறமைகள் முளையிலேயே இவர்களால் கிள்ளி விடப்பட்டிருக்கின்றன. அதிலும் இவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் மற்றவர்களின் உற்சாகத்தையும், துடிப்பையும் கண நேரத்தில் காணாமல் போகும்படி பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பேச்சுகள் எல்லாமே குறைகளையும், பலவீனங்களையும் சார்ந்ததாக இருக்கும்.  பேச்சுகள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற விதமும், சொல்கின்ற தோரணையும் கூட கிண்டல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அலட்சியப்படுத்தி தூர நகர்வதே புத்திசாலித்தனம். எப்பாடுபட்டாவது இவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று விடலாம் என்று நினைப்பது மலைக் கல்லில் கிணறு தோண்டுவதைப் போல் பலன் தரமுடியாத செயல்.  

அதே போல ஒன்றைப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களிடமும் அதைக் குறித்த பாராட்டை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அழகாகக் கூறுவார். “செவி பழுதுற்றவன் அருகில் சென்று சிதம்பரம் ஜெயராமன் என்ன அழகாய்ப் பாடினாலும் அவன் ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவர் வாய் ஏன் இப்படி கோணிக் கொள்கிறது என்றல்லவா நினைப்பான்?”.  நகைச்சுவையாகத் தோன்றினாலும் சில நேரங்களில் நாமும் அதே போன்ற முட்டாள்தனத்தைச் செய்து விடுகிறோம். எதையும் பாராட்டவும், விமரிசிக்கவும் கூட அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டுமே அந்த பாராட்டும், விமரிசனமும் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

எனவே பாராட்ட மனமில்லாதவனிடமிருந்தும், பாராட்ட  தகுதி இல்லாதவனிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். முன்னவன் பாராட்ட மாட்டான். பின்னவன் பாராட்டு பொருளில்லாதது. மாறாக உள்நோக்கம் இல்லாத ஒருவன், உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தவன், உங்களைப் பாராட்டாமல் விமரிசித்தாலும் கூட அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.


மேலும் படிப்போம்....

என்.கணேசன்

நன்றி: வல்லமை