சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 1, 2011

சலிப்படைந்தால் சாதனை இல்லை!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 9
சலிப்படைந்தால் சாதனை இல்லை!

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.

திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம்.  திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் 1% திறமையும் 99% உழைப்பும் வெற்றிக்குத் தேவை என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலக வரலாற்றில் இரண்டு துறைகளில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார். இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளில் 1903, 1911 ஆம் ஆண்டுகளில் அவர் நோபல் பரிசுகள் பெற்றார். வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது. பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார். கனிமத்தை அரைக்கும் எந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார். இப்படி ஒரு நாள், இரு நாளில்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.

இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கான முயற்சிகளில் பல சமயங்களில் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு சுவாரசியமானதாக இருப்பது மிக அபூர்வம். எடிசன் குறிப்பிட்ட 1% திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99% உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்த ஒரே மாதிரியான  உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருசில முயற்சிகளில் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்தியமில்லை.

தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சுரங்கத்தைத் தோண்டி வைரத்தை வெட்டி எடுக்கிறார்கள். பல டன் எடையுள்ள மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்தும் போது தான் அதில் சிறிய வைரத்துண்டு கிடைக்கிறது. தோண்டி எடுப்பதில் வைரத்தை விட மண் தான் அதிகமாகக் கிடைக்கிறது என்று சலிப்படைவதில் அர்த்தமில்லை. அப்படிக் கிடைப்பது தான் நியதி.
எனவே நாம் அதை எதிர்பார்த்தே அது போன்ற வேலையில் ஈடுபட வேண்டுமே ஒழிய நமக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்ற பேராசையில் முயற்சிகள் மேற்கொண்டால் பெருத்த ஏமாற்றத்தையே அடைய நேரிடும்.

பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை. ஆனால் பெரிய சாதனை புரிந்த அத்தனை பேரின் பயிற்சி நேரங்கள் சாதாரண மக்களின் கற்பனைக்கெட்டாத அளவில் இருக்கின்றன. பலரும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபட்டிருக்கையிலும், பலரும் உறங்கிக் கொண்டிருக்கையிலும் சாதிக்க நினைப்பவன் தன் சாதனைக்காக விடாமல் உழைக்க வேண்டி இருக்கிறது.

பல நேரங்களில் சாதனையாளர்கள் சாதனைகளைச் செய்வதைப் பார்க்கையில் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல், சிறிதும் கஷ்டப்படாமல், அனாயாசமாகச் செய்கிறது போல் தோன்றலாம். ஆனால் அந்த நிலையை அடைய அவர்கள் எந்த அளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.


ஃப்ரிட்ஸ் க்ரீஸ்லர் என்ற பிரபல வயலின் மேதை சிறிதும் பிசிறில்லாமல் மிக மிகச் சிறப்பாக ஒரு நிகழ்ச்சியில் வயலின் வாசிப்பதைக் கேட்டு பிரமித்துப் போன ஒரு இளைஞன் சொன்னான். இப்படி வாசிக்க வாழ்நாளையே தந்து விடலாம்”.  அந்த இசை மேதை அமைதியாகச் சொன்னார். “அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. அப்படிப்பட்ட ஒரு இசையைத் தர அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்.


ஒரு சாதனையைக் காண்கையில் புத்துணர்ச்சி பெற்று அப்படியே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. அந்த ஆரம்பப் புத்துணர்ச்சியைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்வது என்பது வெகுசிலராலேயே முடிகிறதுஅந்த வெகுசிலராலேயே சாதனை புரிய முடிகிறது.


எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வெளிக் கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும். சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும். அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. சலிப்பு வரும் போதெல்லாம் முடிவு நிலையின் பெருமையை எண்ணி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!

மேலும் படிப்போம்....


-என்.கணேசன்
நன்றி: வல்லமை


5 comments:

  1. //பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை.//
    //“அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. //

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. /

    அருமையான வழிகாட்டிப்ப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. Hi boss,
    Every sucess.. behind some one willbe there.
    I will tell In my everydays life and my sucess our boss N.Ganeshan is there.
    Some days before I thought I also want to write some blogs for me, family and friends....once I started reading N.ganeshan blog I have changed my ... No need to write blog, only reading NG blog is enough.........
    I was wondering this NG, how he is writing every week I was searching for NG updates...

    Some thing great...
    People normally they read holy books then they are happy,
    Me when ever I read NG blog .....no words to explain...

    Thalaivan-in padaippukal thodara Iraivanai vendum,
    G.Ganesh.Saudi arabia.

    (This is what I feel about Our Boss Mr.NG.)

    ReplyDelete
  5. Every sentence here is invaluable and highly true!
    Thanks for opening my eyes and encouraging me!
    The topic itself is a hammer punch for me!

    pls do write more articles like this...

    ReplyDelete