தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, August 30, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-44
பகிராத எண்ணத்தை உணர முடியுமா?
தியானத்தைப் பற்றி இது வரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.
நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.
ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.
அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.
அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.
அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.
சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.
அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.
ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.
புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?
மேலும் பயணிப்போம்....
தொடரும்
என்.கணேசன்
நன்றி: விகடன்
Wednesday, August 25, 2010
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்!
வாழ்க்கையில் ஒரு முறையாவது சிலரை சந்தித்து விட வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படி சந்திக்க விரும்பும் நபர்கள் அவரவர் தன்மையைப் பொருத்து இருக்கும். சிலர் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகையரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் விளையாட்டு வீரர்களை சந்திக்க ஆசைப்படுவார்கள். சிலர் மகான்களையும், சிலர் பிரபலங்களையும் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நபரை மட்டும் சந்திக்க யாரிடமும் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் எல்லோராலும் எப்போதும் தவிர்க்கவே படுகிறார். ஒருவேளை அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வருமானால் அச்சமயங்களில் உடனே வேகமாக விலகி ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு நபரே இல்லை என்பது போல வேறு யாரையாவது பார்க்க விரைகிறார்கள். அந்த ஒருவரை சந்திப்பதைப் போல மிகக் கசப்பான அனுபவம் இல்லை என்கிற அளவு தப்பியோட பல வழிகளைத் தேடுகிறார்கள். வெகு சொற்பமான விதிவிலக்குகளைத் தவிர இது நம் எல்லோராலும் செய்யப்படுவது தான். அந்த நபரை நாமும் பார்ப்பதில்லை. அவரை மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை.
யாரந்த நபர்? நீங்கள் சந்தித்தே ஆக வேண்டியிருந்தாலும் எப்போதும் உங்களால் தவிர்க்கப்படும் அந்த நபர் யார்? அது வேறு யாருமல்ல நீங்கள் தான்! வெளிப்புறத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் அல்ல அது. யாராலும் முழுவதுமாகக் காண முடியாத உள்ளே இருக்கும் உண்மையான நீங்கள்!
வெளியே இப்படித் தெரிய வேண்டும், அப்படித் தெரிந்தால் தான் அழகு, மதிப்பு எல்லாம் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் மனிதன் தன் சுயரூபத்தை கூடுமான அளவு அடுத்தவரிடமிருந்து மறைத்துக் கொள்ளப் பார்க்கிறான். நாளடைவில் அந்தத் தோற்றமே அவனுக்கு மிக முக்கியமானதாக மாறி விடுகிறது. உலகமும் அந்தத் தோற்றத்தையே பார்க்கிறது, விமர்சிக்கிறது, மதிப்பிடுகிறது. உள்ளே உள்ள நிஜம் கற்பனையால் கூட ஊகிக்க முடியாத அளவு ஆழமாக அமுக்கப்படுகிறது.
காலப்போக்கில் மனிதன் அந்தத் தோற்றத்தையே பிரதானப்படுத்துகிறான். அதையே வளர்த்துகிறான். அதையே மெருகூட்டுகிறான். அடுத்தவர்களை அதையே நிஜம் என்று நம்ப வைக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். கடைசியில் தானும் அதையே நிஜம் என்று நம்ப முயற்சிக்கிறான். ஓரளவு வெற்றியும் பெறுகிறான். ஆனால் உள்ளே உள்ள நிஜத்திற்கும் வெளியே உள்ள தோற்றத்திற்கும் இடையே உள்ள தூரம் நீண்டு கொண்டே போகின்றது.
பல நேரங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை என்னுமளவு வித்தியாசப்படுகிறது.
வெளியே புனித நூல்களை உதாரணம் காட்டி ஆன்மீகக் கடலில் ஆழ்த்தும் சில நபர்கள் உள்ளே சாக்கடையில் ஊறிக் கிடக்கிறார்கள். வெளியே அன்பையும், கருணையையும் போதிக்கும் சிலர் உள்ளே கொடூரமாக இருக்கிறார்கள். நாகரிகத்தின் அடையாளமாக காணப்படும் எத்தனையோ பேர் உள்ளே அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லா விட்டாலும் ஒருசில அபூர்வ விதிவிலக்குகள் தவிர எல்லாருமே ஓரளவாவது வெளித்தோற்றத்திற்கு எதிர்மறையான சிலவற்றையாவது உள்ளே மறைத்து வாழ்கிறார்கள்.
எல்லா அந்தரங்கங்களையும் அனைவருக்குமே அறிவித்து விட வேண்டியதில்லை தான். அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள அவசியமில்லை தான். மற்றவரை பாதிக்காத தனது அந்தரங்கங்களைப் பிறரிடமிருந்து மறைப்பது அவரவர் உரிமை என்றே சொல்லலாம். ஆனால் உள்ளே உள்ள நிஜமான உங்களை நீங்களே அறியாமல் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
வெளித் தோற்றங்களால் இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் பிறரை நம்ப வைப்பது மிக சுலபம். ஆரம்பத்தில் பிறரை நம்ப வைக்க முயற்சிக்கும் ஒரு மனிதன் பின் தானே அதை நம்ப ஆரம்பிக்கும் போது உண்மையான மகிழ்ச்சியையும், மன நிறைவையும் இழக்க ஆரம்பிக்கிறான். ஏனென்றால் உண்மையான மகிழ்ச்சியும், மனநிறைவும் தன்னைத் தானே காண மறுக்கும் ஒரு மனிதனுக்கு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்கு ஒரு போதும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு வெற்றிடத்தை அவனுக்குள் அவன் உணர ஆரம்பிப்பது அப்போது தான்.
பலர் அந்த வெற்றிடத்தைப் பணத்தால் நிரப்பப் பார்க்கிறார்கள், புகழால் நிரப்பப் பார்க்கிறார்கள், போதையால் நிரப்பப் பார்க்கிறார்கள், அடுத்துவர்களை முந்துவதால் நிரப்பப்பார்க்கிறார்கள். ஆனால் அவ்வப்போது நிரம்புவது போல் தோன்றும் அந்த வெற்றிடம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றிடமாகவே மாறி நிற்கும்.
எனவே உங்களுக்குள் இருக்கும் அந்த நிஜமான ‘உங்களை’ அடிக்கடி சந்திக்க மறுக்காதீர்கள். அந்த சந்திப்பு எவ்வளவு கசப்பான அனுபவமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். உள்ளதை உள்ளபடி காண்பதில் உறுதியாய் இருங்கள். அங்கே ஏராளமான பலவீனங்கள் இருக்கலாம். பெருமைப்பட முடியாத பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் தயங்காமல் கவனியுங்கள். இருப்பதை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனிருக்கிறது, எப்படி உருவாயிற்று, அதை எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் ஆழமாகச் சிந்தியுங்கள். உள்ளதென்று உணர்வதை நம்மால் எப்போதுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆழமான, நேர்மையான சுய பரிசோதனையால் எதையும் அறியவும் முடியும். அறிய முடியுமானால் அந்த அறிவு மாறுவது எப்படி என்ற வழியும் தெரியும். ஆனால் இல்லை என்று நினைத்து விட்டால் மாறுதல் என்றுமே சாத்தியமில்லை.
வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான். உண்மையான மன நிறைவை உணர ஆரம்பிக்கின்றான். நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும் போது அவன் உணரும் அமைதியே அலாதியானது. ஆனால் இதற்கெல்லாம் உள்ளே உள்ள நிஜம் அடிக்கடி சந்திக்கப்பட வேண்டும், சிந்திக்கப்பட வேண்டும். அதை மறுப்பதும், தவிர்ப்பதும், மறப்பதும் வாழ்க்கையை என்றும் அதிருப்தியாகவும், துக்ககரமாகவுமே வைத்திருக்கும்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Friday, August 20, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-43
தியானம்-சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்
பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது. பயிற்சி முறைகளை அறிந்து கொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்கிற்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.
எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).
உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.
இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்விற்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்திற்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் சிலர் ”நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன்” என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.
மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.
ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.
தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.
ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.
ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.
இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்....
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்
Monday, August 16, 2010
இயற்கையும் மனிதனும்
ஒரு சராசரி மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. அவனுடைய ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல்கள் பயணம் செய்கிறது. அவன் 70,00,000 மூளை செல்களைப் பயிற்றுவிக்கிறான். 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறான். 23,000 தடவை சுவாசிக்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். ஒன்றரைக் கிலோ உணவை உட்கொள்கிறான். ஆனால் இத்தனையையும் செய்வதில் அவனுக்குக் களைப்போ, தளர்ச்சியோ ஏற்படுவதில்லை. காரணம் இவை எல்லாம் அவன் முயற்சியில் நடப்பதில்லை. தன்னிச்சையாகவே நிகழ்கின்றன.
இந்தச் செயல்கள் ஒவ்வொன்றையும் மனிதன் தானாக பிரக்ஞையோடு செய்ய வேண்டுமென்றால் மனிதன் ஒரு நாள் கூட வாழ முடிவது சந்தேகமே. அவனுக்குள்ளே இயற்கையாகவே இருக்கும் ஒரு கிரியா சக்தி இவை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது. அனைத்தையும் சீராகவும், ஒழுங்கு முறையுடனும், தொடர்ந்தும் இவை நடக்கும்படியே அவன் படைக்கப்பட்டு இருக்கிறான்.
இயற்கையாக நடக்கும் இந்த செயல்களில் குளறுபடி இல்லாமல் போக இன்னொரு முக்கிய காரணம், இயற்கை தன் செயல்களை அடுத்தவருக்காகவோ, சாதனை புரிந்து காட்டுவதற்காகவோ, போட்டிக்காகவோ செய்வதில்லை. எதெல்லாம் அவசியமோ அதை மட்டுமே சீராக இயற்கை செய்கிறது. இன்னொரு இதயம் நூறு முறை அதிகம் துடிக்கிறது, நானா சளைத்தவன் இதோ இருநூறு முறை அதிகம் துடித்துக் காட்டுகிறேன் என்று எந்த இதயமும் போட்டி போட்டு துடிப்பதில்லை. அடுத்த மனிதனுடைய ரத்த ஓட்டத்தை விட ஆயிரம் மைல் அதிகம் நான் ஓடிக் காட்டுவேன் எந்த மனிதனுடைய ரத்த ஓட்டமும் வேகம் அதிகரித்துக் காட்டுவதில்லை.
இன்னொரு முக்கிய காரணம், தன் செயல்களை இயற்கை பெரிதாக நினைப்பதோ, அதனால் சலிப்படைவதோ இல்லை. தொடர்ந்து நூறு நாள் துடித்தாயிற்று, நான் என்ன எந்திரமா?, இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இதயம் இயங்க முரண்டு பிடிப்பதில்லை. அது சக்தியுள்ள காலம் வரை தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடிவது அதனாலேயே.
இயற்கை மனித உடல் இயக்கத்தில் இத்தனை சாதனைகளை சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்கிறது. அவனாக அவன் பழக்க வழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் அந்த உடலைப் படாதபாடு படுத்துகிறான். அந்த உடலுக்குத் தேவையானதைத் தராமல், தேவையில்லாததைத் திணித்து அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறான். அத்தனையையும் சமாளித்துக் கொண்டு அது முடிந்தவரை ஒழுங்காக இயங்கப் பாடுபடுகிறது.
மனிதன் தன் உடல் இயக்கத்தில் இருந்தே ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஒழுங்குமுறை, சலிப்பின்மை, எல்லாத் தடைகளையும் மீறி சிறப்பாகச் செயல்படுதல் போன்றவை அந்தப் பாடங்களில் அடங்கும். இயற்கையின் செயலில் அவசரமில்லை. அதே நேரத்தில் தேக்கமும் இல்லை. தேவையானதை தேவையான வேகத்தில் செய்கிறது. இதுவும் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம். மனிதன் இயற்கையைப் பின்பற்றுவது முடியாத காரியம் அல்ல. ஏனென்றால் அவனும் இயற்கையின் படைப்பே. இயற்கையோடு ஒட்டியும் தன் இயல்பை உணர்ந்தும் செயல்பட்டால் அவன் அடைய முடியாத சிறப்பில்லை.
இயற்கை இது வரை படைத்த பல்லாயிரக் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர் போல் இன்னொருவரைப் படைத்ததில்லை. இது பிரமிப்பூட்டும் உண்மை. சமூகம் தான் சில சமயங்களில் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டு மனிதர்களைக் குழப்புகிறதே ஒழிய இயற்கை அந்த முட்டாள்தனத்தை இது வரை செய்ததில்லை. இயற்கையின் தனிப்பட்ட முத்திரை தனித்தன்மையே. இயற்கை மனித உடல் இயக்கங்களை ஒரே போல் உருவாக்கி இருந்தாலும் மற்ற விஷயங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தே அனுப்புகிறது.
ஒவ்வொரு மனிதனும் இயங்கத் தேவையான நுண்ணறிவை அவன் உடலுக்குத் தன்னிச்சையாக ஏற்படுத்தி உலகிற்கு அனுப்பி இயற்கை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து விடுகிறது. இங்கு வந்த பின் வாழ வேண்டிய தன் பங்கை மனிதன் அதே கச்சிதத்துடன் செய்ய ஆறறிவையும் தந்து உதவியிருக்கிறது. அவனுக்குள்ளே தனித் திறமைகளையும் ஏற்படுத்தி அவன் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. மனிதன் பிரகாசிப்பதும், மங்கிப் போவதும் அவன் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி வாழும் விதத்தில் தான் தீர்மானமாகிறது.
இயற்கையை ஒட்டி மனிதன் வாழும் போது, தெளிவாக ஆழ்ந்து சிந்திக்கும் போது தனக்குள்ளே இருக்கும் தனிச்சிறப்புகளை மனிதன் உண்மையாக உணர்கிறான். அப்படி உணரும் போது அதை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முற்படுகிறான். விதைக்குள் இருக்கும் செடி வெளியே வராமல் வேறெங்கு போகும்? அவனாகவே அலட்சியப்படுத்தி அழிக்காத வரை எந்த திறமையும் அழிந்து போவதில்லை.
சரி இயற்கையை ஒட்டியோ, பின்பற்றியோ வாழ்கிற விதம் தான் என்ன? அதற்கு அடையாளங்கள் தான் என்ன? உங்கள் லட்சியங்கள் உங்கள் இயற்கையான இயல்பை ஒத்து இருப்பது, அவற்றில் ஈடுபடும் போது சலிப்பு தோன்றாமல் இருப்பது, அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதை விட இதை நான் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் பிரதானமாக இருப்பது, சில்லறை அசௌகரியங்களைப் பெரிது படுத்தி குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதை விட அதிகமாக அவற்றை நீக்கும் வழிகளை ஆராய்வது, அடுத்தவர்கள் சாதனைகளில் வயிறெரியாமல் இருப்பது, தன்னைப் போலவே அடுத்தவர்களையும் மதிப்பது, அடிக்கடி மனநிறைவை உணர்வது, விடாமுயற்சியுடன் உற்சாகமாக உழைப்பது இதெல்லாம் சில அடையாளங்கள்.
இயற்கையிடம் இருந்து கற்றுக் கொண்டு நாமும் இயற்கையாக சிறப்பாக வாழ்வோமா?
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Wednesday, August 11, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-42
ஜென் தியானம்
தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.
அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.
”தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும்” என்று சொல்கிறார் ஓஷோ.
ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.
முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள் நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.
அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.
ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.
ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.
இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்
3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.
4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.
5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.
6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.
7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.
8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.
9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.
மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
மேலும் பயணிப்போம்......
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்
Friday, August 6, 2010
தொலைக்காட்சியால் தொலைப்பவை
இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் புதைந்து கொண்டு இருக்கின்றன. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அதன் முன்னால் தங்களுடைய பெரும்பாலான நேரங்களைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நடுவே யார் வந்தாலும் அவர்களைத் தொந்திரவாகவே நினைக்கும் மனோபாவம் பெருகி வருகிறது. முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிற சமயங்களில் உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பே வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். தொலைக்காட்சியை அணைத்து விடாமல், வருபவர்களை உட்காரச் சொல்லி விட்டு அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தொடர்வார்கள். விளம்பர இடைவேளையில் தான் வந்தவர்களிடம் உண்மையான விசாரிப்பு இருக்கும். மீண்டும் நிகழ்ச்சி தொடரும் போது கவனம் தொலைக்காட்சிக்குத் திரும்பும். வந்தவர்களும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள். அடுத்த விளம்பர இடைவேளையில் காபி அல்லது டீ கிடைக்கலாம்.
பெரும்பாலான தொடர் நிகழ்ச்சிகளை சில நாட்கள் பார்க்காமல் பின்னொரு நாள் பார்த்தாலும் பெரிதாக எதுவும் விட்டுப் போயிருக்காது என்றாலும் ஒரு நாள் நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகப் போய் விடுவது வேதனைக்குரிய விஷயமே.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. வீட்டிற்குள் ஆட்கள் நிறைய இருந்தார்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள நிறைய ஆட்களும், வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் இன்று தனிக்குடும்பங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் வீட்டில் நான்கைந்து நபர்களே இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் மனம் விட்டு பேசுதலும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதலும் இல்லாமல் போக தொலைக்காட்சி ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அன்னியராக இருக்கும் அவலம் இன்று அதிகமாகி வருகிறது. ஓய்வு நேரங்களில் இருப்பது தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் தான். சாப்பிடுவதும் கூட தொலைக்காட்சியின் முன்னால் தான். எனவே அடுத்தவரைப் பற்றிக் கேட்கவும் நமக்கு நேரமில்லை. நம்மைப் பற்றி சொல்லவும் நமக்கு நேரமில்லை. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது குடும்பங்களில் அபூர்வமாகி வருகிறது.
வீட்டுக்குள்ளேயே இந்த நிலை என்றால் அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருக்கும் உறவு பற்றிக் கேட்கவே வேண்டாம். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தீவிரவாதியே பக்கத்து வீட்டில் குடியிருந்தால் கூட தெரியாமல் போகிறதெல்லாம் இப்படித்தான்.
ஓடியாடி விளையாடும் குழந்தைகள் குறைந்து வரும் அவலம் இன்று சிறிது சிறிதாக அரங்கேறி வருகிறது. இன்றைய கல்விமுறையும், தொலைக்காட்சிப் பெட்டியும் கூட்டணி சேர்ந்து விளையாட்டே இல்லை என்கிற கொடுமைக்கு குழந்தைகளை ஆளாக்கி வருகின்றன. நல்ல திறமைகள் உள்ளவர்களுக்கு அந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு குறைவதற்கும் இந்த தொலைக்காட்சிப் பழக்கம் காரணமாகி விடுகிறது. புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் குறைந்து விடுகிறது. வீட்டில் ஆக வேண்டிய வேலைகள் பல ஆகாமல் தேக்கமடையவும் இதுவே காரணமாக இருக்கிறது. நன்றாக சமைக்கத் தெரிந்த திறமையுள்ள குடும்பத்தலைவிகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காணத் தயாராவதற்காக அவசர அவசரமாக எதையோ எப்படியோ சமைத்து விட்டு விரைவது இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.
மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால் தான் பலர் வீட்டை விட்டே வெளியே வருகிறார்கள். அக்கம் பக்கம் பார்க்கிறார்கள். சுத்தம் செய்வது போன்ற சில விருப்பமற்ற வேலைகள் சிறிதாவது ஆவது அந்த நேரங்களில் தான்.
’கண்களை மட்டும் திறந்து வைத்திரு. போதும்’ என்று தொலைக்காட்சி சொல்கிறது. மூளைக்கும் வேலையில்லை. உடலுக்கும் வேலையில்லை. நம் முயற்சியோ எதுவுமில்லை. இப்படி விளையாட்டில்லை, முக்கியமான வேலைகள் ஆவதில்லை, திறமைகள் வளர்த்தப்படுவதில்லை, மனம் விட்டுப் பேசும் நிலை இல்லை, மனிதர்கள் கூடி மகிழ்வதில்லை என்றெல்லாம் இருக்கிற நிலையை அமைத்து விடும் தொலைக்காட்சி அடிமைத்தனத்திற்கு உள்ளாவது அபாயமானது.
தொலைக்காட்சிகளிலேயே மூழ்கிக் கிடக்கும் குடும்பங்களில் இருப்போரின் மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் வாழ்க்கையை சந்திக்கப் போதுமான அளவில் இருப்பதில்லை. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிகமாக தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடப்பவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று கண்டிருக்கிறார்கள்.
எனவே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி உங்கள் வாழ்க்கையில் அருமையான விஷயங்களைத் தொலைக்க வைக்கும் எதிரியாக மாற அனுமதித்து விடாதீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக நல்ல நிகழ்ச்சி அல்லது பயனுள்ள நிகழ்ச்சி என்று நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து மீதி நேரங்களில் அதை அணைத்து வையுங்கள். உங்கள் பொழுதைப் போக்க அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் பொழுதைத் திருட அதை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் குடும்பத்தினருடன் பேசி மகிழவும், ஒருவரை ஒருவர் அறியவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே உள்ள திறமைகளைக் கூர்மையாக்கவும், வெளிப்படுத்தவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளை வெளியே சென்றோ, விட்டினுள்ளேயோ விளையாட நேரம் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை எல்லாம் மிக முக்கியம். இத்தனைக்கும் பிறகு நேரமிருந்தால் மட்டுமே தொலைக்காட்சிக்கு, அதுவும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே தொலைக்காட்சியால் பல நன்மைகளை நீங்கள் தொலைத்து விடாமல் இருக்க முடியும்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Monday, August 2, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-41
ஹாரா தியானம்
ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.
அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.
பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.
3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.
4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.
5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.
6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.
7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.
8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.
இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.
மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே!
மேலும் பயணிப்போம்....
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்
Subscribe to:
Posts (Atom)