தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, August 6, 2010
தொலைக்காட்சியால் தொலைப்பவை
இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் புதைந்து கொண்டு இருக்கின்றன. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அதன் முன்னால் தங்களுடைய பெரும்பாலான நேரங்களைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நடுவே யார் வந்தாலும் அவர்களைத் தொந்திரவாகவே நினைக்கும் மனோபாவம் பெருகி வருகிறது. முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிற சமயங்களில் உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பே வேண்டா வெறுப்பாகத் தான் இருக்கும். தொலைக்காட்சியை அணைத்து விடாமல், வருபவர்களை உட்காரச் சொல்லி விட்டு அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தொடர்வார்கள். விளம்பர இடைவேளையில் தான் வந்தவர்களிடம் உண்மையான விசாரிப்பு இருக்கும். மீண்டும் நிகழ்ச்சி தொடரும் போது கவனம் தொலைக்காட்சிக்குத் திரும்பும். வந்தவர்களும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள். அடுத்த விளம்பர இடைவேளையில் காபி அல்லது டீ கிடைக்கலாம்.
பெரும்பாலான தொடர் நிகழ்ச்சிகளை சில நாட்கள் பார்க்காமல் பின்னொரு நாள் பார்த்தாலும் பெரிதாக எதுவும் விட்டுப் போயிருக்காது என்றாலும் ஒரு நாள் நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகப் போய் விடுவது வேதனைக்குரிய விஷயமே.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. வீட்டிற்குள் ஆட்கள் நிறைய இருந்தார்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள நிறைய ஆட்களும், வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் இன்று தனிக்குடும்பங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் வீட்டில் நான்கைந்து நபர்களே இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் மனம் விட்டு பேசுதலும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதலும் இல்லாமல் போக தொலைக்காட்சி ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அன்னியராக இருக்கும் அவலம் இன்று அதிகமாகி வருகிறது. ஓய்வு நேரங்களில் இருப்பது தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் தான். சாப்பிடுவதும் கூட தொலைக்காட்சியின் முன்னால் தான். எனவே அடுத்தவரைப் பற்றிக் கேட்கவும் நமக்கு நேரமில்லை. நம்மைப் பற்றி சொல்லவும் நமக்கு நேரமில்லை. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது என்பது குடும்பங்களில் அபூர்வமாகி வருகிறது.
வீட்டுக்குள்ளேயே இந்த நிலை என்றால் அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருக்கும் உறவு பற்றிக் கேட்கவே வேண்டாம். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தீவிரவாதியே பக்கத்து வீட்டில் குடியிருந்தால் கூட தெரியாமல் போகிறதெல்லாம் இப்படித்தான்.
ஓடியாடி விளையாடும் குழந்தைகள் குறைந்து வரும் அவலம் இன்று சிறிது சிறிதாக அரங்கேறி வருகிறது. இன்றைய கல்விமுறையும், தொலைக்காட்சிப் பெட்டியும் கூட்டணி சேர்ந்து விளையாட்டே இல்லை என்கிற கொடுமைக்கு குழந்தைகளை ஆளாக்கி வருகின்றன. நல்ல திறமைகள் உள்ளவர்களுக்கு அந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு குறைவதற்கும் இந்த தொலைக்காட்சிப் பழக்கம் காரணமாகி விடுகிறது. புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் குறைந்து விடுகிறது. வீட்டில் ஆக வேண்டிய வேலைகள் பல ஆகாமல் தேக்கமடையவும் இதுவே காரணமாக இருக்கிறது. நன்றாக சமைக்கத் தெரிந்த திறமையுள்ள குடும்பத்தலைவிகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காணத் தயாராவதற்காக அவசர அவசரமாக எதையோ எப்படியோ சமைத்து விட்டு விரைவது இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.
மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால் தான் பலர் வீட்டை விட்டே வெளியே வருகிறார்கள். அக்கம் பக்கம் பார்க்கிறார்கள். சுத்தம் செய்வது போன்ற சில விருப்பமற்ற வேலைகள் சிறிதாவது ஆவது அந்த நேரங்களில் தான்.
’கண்களை மட்டும் திறந்து வைத்திரு. போதும்’ என்று தொலைக்காட்சி சொல்கிறது. மூளைக்கும் வேலையில்லை. உடலுக்கும் வேலையில்லை. நம் முயற்சியோ எதுவுமில்லை. இப்படி விளையாட்டில்லை, முக்கியமான வேலைகள் ஆவதில்லை, திறமைகள் வளர்த்தப்படுவதில்லை, மனம் விட்டுப் பேசும் நிலை இல்லை, மனிதர்கள் கூடி மகிழ்வதில்லை என்றெல்லாம் இருக்கிற நிலையை அமைத்து விடும் தொலைக்காட்சி அடிமைத்தனத்திற்கு உள்ளாவது அபாயமானது.
தொலைக்காட்சிகளிலேயே மூழ்கிக் கிடக்கும் குடும்பங்களில் இருப்போரின் மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் வாழ்க்கையை சந்திக்கப் போதுமான அளவில் இருப்பதில்லை. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் அதிகமாக தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடப்பவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று கண்டிருக்கிறார்கள்.
எனவே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி உங்கள் வாழ்க்கையில் அருமையான விஷயங்களைத் தொலைக்க வைக்கும் எதிரியாக மாற அனுமதித்து விடாதீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக நல்ல நிகழ்ச்சி அல்லது பயனுள்ள நிகழ்ச்சி என்று நீங்கள் நினைக்கும் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து மீதி நேரங்களில் அதை அணைத்து வையுங்கள். உங்கள் பொழுதைப் போக்க அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் பொழுதைத் திருட அதை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் குடும்பத்தினருடன் பேசி மகிழவும், ஒருவரை ஒருவர் அறியவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே உள்ள திறமைகளைக் கூர்மையாக்கவும், வெளிப்படுத்தவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளை வெளியே சென்றோ, விட்டினுள்ளேயோ விளையாட நேரம் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை எல்லாம் மிக முக்கியம். இத்தனைக்கும் பிறகு நேரமிருந்தால் மட்டுமே தொலைக்காட்சிக்கு, அதுவும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே தொலைக்காட்சியால் பல நன்மைகளை நீங்கள் தொலைத்து விடாமல் இருக்க முடியும்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
மிகப்பொருத்தமான விளக்கும்.
ReplyDeleteபாஸ்ட் பூட் , சினிமா, கேளிக்கைகள், ஊர் சுற்றுதல். வீட்டிற்கு போனால் டீ.வி. இதுதான்
இன்றுள்ள வாழ்க்கைமுறை. பின்னாளில் உண்டாகும் பொறுப்புகளை பற்றி கொஞ்சமும் எண்ணமோ செயலோ இல்லாத ஒரு புதிய தலைமுறை வருகிறது. நெருக்கடிகளில் இவர்களின் தீர்வாக தற்கொலைகளே!
கிடைத்த அருமையான நேரங்களை இது போன்ற அர்த்தமற்ற கேளிக்கைகளில் செலவிடுவோர்ற்கு அது ஒன்றுதான் தெரியும்.
sir, well analyzed article.
ReplyDeleteNice Thoughts
ReplyDeleteஅவசியமான பதிவு. இதை முகப்புத்தகத்தில் இடலாமா..? அனுமதி தேவை..?
ReplyDeleteதாத்தா ! உனக்கு டி.வி.சீரியலைப் புடிக்கலேன்னா ஒதுங்கிப்போயேன். !
ReplyDeleteஅந்தக் குழந்தைங்க எத்தனை நேரம் தான் படிப்பு, படிப்பு அப்படின்னு இருக்கும் ?
அப்படி நினைக்கும் பெற்றோர் இக்காலத்தில்..
நாமோ அந்தக்காலத்தில்..!
எடுத்துச்சொல்பவன் பைத்தியக்காரன் ஆகிறான்.
குழந்தைகளோட கொஞ்ச நேரம் இரு... அவர்களோட கொஞ்ச நேரம் பேசு ! என்றால் அதற்கெல்லாம்
எனக்கு நேரம் கிடையாது என்று சொல்லும் இன்றைய காலத்து இள வட்ட பெற்றோர் அவர்களது விபரீத
போக்கின் பலனை அவர்கள் தாத்தா ஆகும்பொழுது தான் உணர்வார்களோ என்னவோ !!
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
சூர்யா, முகப்புத்தகத்தில் இதை வலை முகவரியுடன் இட்டுக் கொள்ளலாம்.
ReplyDeleteமுற்றிலும் உண்மைதான். நல்ல இடுகை.
ReplyDeletehttp://sganeshram.blogspot.com/