சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 19, 2010

ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம்
ஆன்மீகம் என்றால் என்ன, ஒரு உண்மையான ஆன்மீக ஞானி எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஆன்மீகத்திற்கும், ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். சுமார் நூறாண்டுகள் வாழ்ந்த அவரது வாழ்க்கையில் சின்னக் களங்கம் கூட இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசர்கள், மந்திரிகள், வெளிநாட்டு உள்நாட்டு மேதைகள் எல்லாம் அவர் இருக்கும் இடம் தேடி வந்து வணங்குவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனிதர் அது போன்ற பக்தர்கள் தனக்கிருப்பதில் எள்ளளவும் பெருமிதம் கொண்டதோ, அகங்காரம் அடைந்ததோ இல்லை. அவர் தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட மகான்.

மகாசுவாமிகள் எளிமையே உருவானவர். காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பட்டத்திற்குரிய எல்லா வசதிகளும் அவருக்கு இருந்தன. தரிக்க கிரீடம், அமர சிம்மாசனம், அமர்ந்து செல்ல சிவிகை,புடைசூழ்ந்து வர யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அவருக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. தன் யாத்திரைகளை கால்நடையாகவே அவர் நடந்து செல்வார். தயிரிலோ, பாலிலோ ஊற வைக்கப்பட்ட நெற்பொறியை ஓரிரு கவளம் சாப்பிடுவது தான் அவரது பகல் உணவு. இரவில் சிறிது பால் மட்டுமே சாப்பிடுவார். பொதுமக்களுக்கு தரிசனம் தரும் வேளைகளில் தான் அவர் நாற்காலி அல்லது மனையில் அமர்வார். மற்ற வேளைகளில் சாதாரண கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.

பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பல துறைகளில் நல்ல ஞானமும், ஆர்வமும் இருந்தது. பல நூல்களைப் படித்த அவர் சம்பந்தப்பட்ட துறையாளர்களிடமும் எதையும் நுட்பமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். விஞ்ஞானம், கணிதம், வானவியல், வரலாறு, பூகோளம், சமூக இயல் போன்ற துறைகளில் அவருக்கு இருந்த அறிவு அபாரமானது. புகைப்படக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிலும் எதையும் நுட்பமாக ஆராய்ந்து விளக்குவார். பல மொழிகளை அறிந்திருந்தார். இந்த அபார அறிவும் அவருக்கு துளியும் கர்வத்தை ஏற்படுத்தியதில்லை.

தமிழகத்தின் முன்னால் கவர்னராக இருந்த டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை பரமாச்சாரிய சுவாமிகளை தரிசிக்கச் சென்றார். ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அரசர்களும் தொழும் மகா சுவாமிகள் அவரது குடிலில் கோணிச் சாக்கை விரித்து அமர்ந்திருந்ததைக் கண்ட அலெக்சாண்டருக்கு வியப்பு தாளவில்லை. இப்படி ஒரு எளிமையையும், பணிவையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அலெக்சாண்டரும் அவர் எதிரே பாயில் காலை மடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

பேசும் போது அலெக்சாண்டர் எதில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை
மகா சுவாமிகள் கேட்டார். அலெக்சாண்டர் தான் ஒரு சிரியன் கிறிஸ்துவர் என்றும் சிரியன் கிறிஸ்துவர்கள் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் சொன்னார். உடனே பேச்சு சிரியன் கிறிஸ்துவர்களைப் பற்றி எழுந்தது. அலெக்சாண்டர் ஆராய்ச்சி செய்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக மகா சுவாமிகள் சிரியன் கிறிஸ்துவர்களுடைய சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் வேரூன்றிய சரித்திரம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார். கவர்னர் அலெக்சாண்டர் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. வேறொரு மதத்தின் ஒரு சிறு பிரிவைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் அறிந்து வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

அவருடைய அறிவு ஞானம் இப்படி பல மதங்கள், பல நாடுகள் என்று விரிந்து இருந்தது. ஆன்மீகத்தில் அவர் அடைந்திருந்த ஞானம் அளப்பரியது. இதையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” படித்தவர்கள் நன்றாக உணரலாம். அவர் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் விவரிக்காமல் மனித தர்மத்தைப் பற்றியும், ஞான மேன்மைக்கான வழிகளைப் பற்றியும் பேசியது அதிகம். பாமரனுக்கும் புரியும் படியாக பெரிய பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி யோகிகளைத் தேடி இந்தியா வந்த போது பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்ததை விளக்கமாக எழுதியுள்ளார். பரமாச்சாரிய சுவாமிகளின் ஞானத்தால் அவர் வெகுவாகவே கவரப்பட்டார். தான் இந்தியா வந்த காரணத்தை அவர் சொன்ன போது பரமாச்சாரிய சுவாமிகள் நீ தேடி வந்த யோகி நான் தான் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக் கொள்ளவில்லை. (இப்போதைய ஆன்மீகக் குருக்கள் பலர் கண்டிப்பாக அதைச் செய்திருக்கக் கூடியவர்களே). ’நீங்கள் காண வந்த யோகியை நிச்சயம் காண்பீர்கள். மேலும் பயணியுங்கள்” என்றே சொன்னார். அது போலவே பின்னர் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் தன் தேடலை முடித்தார்.

உபதேசங்கள் செய்வது சுலபம். அந்த உபதேசங்கள் படி வாழ்ந்து ஒரு உதாரணமாய் திகழ்வது கஷ்டம். பரமாச்சாரியார் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவருடைய கனகாபிஷேக நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நேபாள மன்னர், இந்திய ஜனாதிபதி முதற்கொண்டு பல பெரிய மனிதர்கள் கைகூப்பி நிற்க பரமாச்சாரியருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் செய்தார்கள். மற்றவர்களின் கட்டாயத்திற்கு அமர்ந்திருந்த அவர் சிறு சலனம் கூட இல்லாமல், எதிலும் பாதிக்கப்படாமல், பற்றற்ற நிலையில் கடவுளை தியானித்தவராய் கரம் குவித்து அமர்ந்திருந்தார். “ஏதோ சிறியவர்கள் ஆசைப்படுகிறார்கள், செய்கிறார்கள், செய்து விட்டுப் போகட்டும்” என்பது போல் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு புண்ணியாத்மாவை அன்று என்னால் பார்க்க முடிந்தது.

வாழ்ந்த நாட்களில் அவர் விளம்பரம் தேடியதில்லை. அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபட்டதில்லை. நடித்ததில்லை. நல்ல அறிவைப் பெறுவதும், ஞான வழிகளில் ஆழமான நாட்டமும், அறிந்ததையும், உணர்ந்ததையும் போதிப்பதுவுமே அவர் வாழ்க்கையாக இருந்தது.

அவர் 1994 ஜனவரி எட்டாம் நாள் மறைந்த போது அவருடைய பக்தர்கள் மட்டுமல்ல மற்ற மதத்தலைவர்களும், நாத்திகர்களும் கூட அவரை மனதாரப் பாராட்டியது அவர் வாழ்ந்த களங்கமில்லாத வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான ஞானி, ஆன்மீகத் தலைவர் என்ற சொற்களுக்கெல்லாம் இனி வரும் சந்ததியருக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தயக்கம் சிறிதும் இல்லாமல் பரமாச்சாரிய சுவாமிகளை நாம் காட்டலாம்.

-என்.கணேசன்


நன்றி:ஈழநேசன்

14 comments:

 1. நாளை நீங்கள் வலைச்சரத்திற்கு வர வேண்டும்.

  ReplyDelete
 2. சூரியனை அடையாளம் காட்ட அகல் விளக்கா ? !!

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 3. The Guru mentioned in this post is identical to Nithyananda before the sexual scandal allegations!!

  ReplyDelete
 4. பால், நெற்பொரி மட்டுமே உணவு, சாக்கிலே தான் பொதுவாக அமர்ந்திருப்பார், கால்நடையாகவே எங்கும் பயணம், ஒரு பாயில் தான் உறக்கம் என்று கடைசி வரை எளிமையாக வாழ்ந்த பரமாச்சார்யாரை எந்தக் காலத்திலும் நித்தியானந்தா போன்ற நபருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறு.

  ReplyDelete
 5. எளிமையாக வாழ்ந்துகொண்டு கெட்ட செயலை ஒரு மனிதன் செய்ய மாட்டானா? பரமாச்சாரியார் துயவர் அல்ல என்று நிரூபிக்க எம்மிடம் சான்றுகள் இல்லாததால் அவரை தூயவர் என்று சொல்வது சரியா? (யாரையும் குற்றம் சொல்வது எனது நோக்கமல்ல, மனித குலம் வெட்கி தலை குனியும் செயல்கள் தினமும் நிகழும் இந்த உலகில் ஒரு விடையத்தை பல கோணங்களில் சிந்திக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்)

  ReplyDelete
 6. Hey Anonymous,

  Dont think even in dream to compare Paramacharya with others. It means you are literally in-matured guy to comment about Paramacharya.

  You can better stick with your Nithi.ok?

  ReplyDelete
 7. I ask my question once again, can anyone answer my question:
  எளிமையாக வாழ்ந்துகொண்டு கெட்ட செயலை ஒரு மனிதன் செய்ய மாட்டானா? பரமாச்சாரியார் தூயவர் அல்ல என்று நிரூபிக்க எம்மிடம் சான்றுகள் இல்லாததால் அவரை தூயவர் என்று சொல்வது சரியா?

  ReplyDelete
 8. எளிமை மட்டுமே பரமாச்சார்யாரின் தூய தன்மைக்கு அசைக்க முடியாத சான்று என்று சொல்லவில்லை. அவர் திறந்த புத்தகமாக வாழ்ந்தார் என்பது தான் உண்மையான அசைக்க முடியாத சான்று. கிணற்றடி அருகில் சிறிய குடிசையில் வசிப்பு, நெற்பொரி சில கவளங்கள் தான் உணவு, படுக்க பாய் அல்லது சாக்கு, தலை மாட்டில் ஒரு பலகை, ஆன்மிகம் மற்றும் சமூக விஷயங்களில் மட்டுமே அக்கறை, புகழில் பற்றற்ற நிலை இதெல்லாம் ஒருமித்து பாருங்கள்.

  நித்தியானந்தா போன்ற மனிதர்களின் வசிக்கும் இடங்கள், நடந்து கொள்ளும் விதங்கள், புகழ் மற்றும் பணத்திற்கு தரும் முக்கியத்துவம் இவற்றைப் பாருங்கள்.

  முக்கியமாக சில தவறான பழக்கங்கள் இருந்தால் சான்றுகள் இல்லா விட்டாலும், பிரபலங்களைப் பற்றி வதந்திகளாவது கண்டிப்பாக பரவும். பரமாச்சார்யாரைப் பற்றி ஒரு வதந்தி கூட தவறாக வந்ததில்லை.

  இதற்கும் மீறி சந்தேகம் வந்தால் அது அறிவு சார்ந்ததல்ல.

  ReplyDelete
 9. //ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்//

  இதற்கு முன் நீங்கள் பதிவிட்ட தியானம் சம்பந்தமான அனைத்து பதிவுகளையும் படித்தேன், எளிமையான விளக்கம், தொடர்ந்து படிப்பேன். இந்த பதிவில், ஆன்மீக ஞானி என்பது எளிமையாக வாழ்தல் என்று பொருள்படுகிறது. அப்படி எளிமையாக வாழ்ந்ததால் தான் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு ஞானம் கிடைத்ததா ? இல்லை வேறு எதாவுது சக்ரா தியானங்கள் மூலம் ஞானம் கிடைத்ததா ?

  அப்படி என்றால் அவரது சீடர்களில் எவர் அந்த தியான முறையை தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்கள் ? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மன்னிக்கவும் எனக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது.முடிந்தால் சற்று பெரிய பதிவாக ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றியும், காஞ்சி மடத்தின் வரலாறு பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
 10. பரமாச்சார்ய சுவாமிகள் தியான முறைகளில் எதை பின்பற்றினார் என்ற சரியான தகவல் தெரியவில்லை. ஆதிசங்கரரின் ஸ்தாபிதங்களில் ஒன்று காஞ்சி சங்கர மடம். அதன் பீடாதிபதிகளில் பரமாச்சாரியார் முக்கியமானவர். முடிந்தால் அவரது கருத்துகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” நூலை வாங்கிப் படியுங்கள். மிக மிக அருமையான நூல். அது ஞான சமுத்திரம் என்றே சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 11. For people who want to know about HH can visit the SriMatam which is open to all.There is a misconception that it is only for Brahmins.Their Holiness is common to all Hindus and scores of people from various walks of life,take their blessing whcih include Muslims,Christians as well as Jains etc

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. மிக்க நன்றி கணேசன்.
  மிகுந்த பயனுள்ள பதிவு.
  பரமாச்சார்யர் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் உதவியது.

  ReplyDelete
 14. jaya jaya sankara hara hara sankara
  kanchi sankara kamakoti sankara
  மிக்க நன்றி .

  ReplyDelete