தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Thursday, May 28, 2009
விதியை வென்ற விடாமுயற்சி
படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை.
அந்தக் கனவை அவரும் அவர் தந்தையும் சேர்ந்து கண்டிருந்தார்கள். நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட இருவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள்.
பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள்.
சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார்.
மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி முதல் வேலையாக வாஷிங்டன் ரோப்ளினின் வீட்டுக்குச் சென்று அவருடைய கைகளைக் குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
இதற்குப் பெயரல்லவோ விடாமுயற்சி. ஒரு சாதாரண மனிதன் தன் முயற்சியை முடியாது என்ற வல்லுனர்களின் கருத்திலேயே நிறுத்தியிருப்பான். சற்று மன உறுதி படைத்த மனிதனோ தந்தையின் மரணத்தில் அந்த நம்பிக்கையை இழந்திருப்பான். மேலும் அதிக மன உறுதி படைத்தவன் தனக்கும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த வேலையையே விட்டொழித்திருப்பான். ஆரம்பத்திலிருந்தே அபசகுனங்கள் வந்தும் நாம் முயற்சி செய்தது மகா முட்டாள்தனம் என்று நினைத்திருப்பான்.
முடக்க நிலையில் படுக்க நேர்ந்தாலோ எத்தனை மன உறுதியும் உபயோகப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. மரணம் மட்டுமே எதிர்பார்க்கத்தக்க பெரிய விடுதலையாக நினைக்கத் தோன்றியிருக்கும். ஆனால் இதெல்லாம் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நடக்கக் கூடிய நிகழ்வுகள். மாமனிதர்களோ விதிகளை உருவாக்குபவர்கள். பொதுவான விதிக்கு அடங்குபவர்கள் அல்லர்.
மனதிற்குள் ஒன்று சரியெனப்படுகையில், தலைக்கனமோ, முட்டாள்தனமோ துளியும் இல்லாமல் ஒன்றை முடியும் என உணர்கையில், உலகமே முடியாது என்று மறுத்தாலும், விதி தன் முழு சக்தியையும் பிரயோகித்து முடங்கிக் கிடக்க வைத்தாலும் மாமனிதன் நினைத்ததை நடத்தியே முடிக்கிறான். சுற்றிலும் இருள் சூழ்ந்த போதிலும் தன் ஆத்மவிளக்கால் போகும் வழியைக் காண்கிறான். தன் ஆத்மபலத்தால் இலக்கைச் சென்றடைகிறான்.
நண்பர்களே, தொடங்கிய நல்ல காரியங்களுக்குத் தடங்கல் வரும் போதெல்லாம் செயலற்று நின்று விடாதீர்கள். வாஷிங்டன் ரோப்ளினை நினைத்துப் பாருங்கள். அவர் கண்டது எத்தனை தடங்கல்கள், எத்தனை துன்பங்கள். கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மோசமான சூழ்நிலைகள் சூழ்ந்த போதும் மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் அவர் அவற்றிலிருந்து விடுபட்டு செயல்படவில்லையா? கடைசியில் மிஞ்சியது ஒரு கனவும், ஒரு விரலும் மட்டுமே என்றாலும் அவர் அதை வைத்துக் கொண்டே சரித்திரம் படைக்கவில்லையா? அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயலுங்கள்.
உங்கள் கனவுகளுக்கு நீங்களே பிரம்மாக்கள். அவற்றிற்கு நீங்கள் உயிர் கொடுக்கவில்லையென்றால் அவை உருவாகப் போவதில்லை. நீங்கள் கனவாக மட்டுமே விட்டு வைத்த உயர்ந்த விஷயங்கள் எத்தனை? அவை உருவாக ப்ரூக்ளின் பாலத்திற்காக வாஷிங்டன் ரோப்ளின் செய்த முயற்சிகளின் அளவில் சிறிதாவது செய்திருக்கிறீர்களா? சிந்தியுங்கள். உங்கள் சிந்தனை உங்களைச் செயல்புரிய வைக்கட்டும்.
- என்.கணேசன்
நன்றி: விகடன்
Monday, May 25, 2009
தாய் மனம்
"என்ன கார்த்திக், ஆபிசுக்கு கிளம்பலையா?" என்று சாரதா சாவகாசமாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகனைக் கேட்டாள்.
"இல்லை. நான் அந்த வேலையை விட்டுட்டேன்"
"ஏன்?"
"அந்த மேனேஜர் என்னை என்னவோ விலைக்கே வாங்கிட்ட மாதிரி பேசறான். போடா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு வந்துட்டேன்"
படிப்பு முடிந்து இந்த ஒரு வருட காலத்தில் இது அவன் விட்ட நான்காவது வேலை. இந்த வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. முதல் வேலைக்குப் பத்து நாள் போயிருப்பான். 'வேலை ரொம்ப அதிகம். கசக்கிப் பிழிகிறார்கள்' என்று விட்டான். முதல் வேலையை விட்டு மூன்று மாதம் கழித்து இரண்டாவது வேலைக்கு ஐந்து நாள் போனான். 'வேலை ரொம்ப போர். என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இதைக் கொஞ்ச நாளைக்கு செஞ்சா எனக்கு படிச்சதெல்லாம் மறந்து போயிடும்' என்று போவதை நிறுத்தினான். பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்றாவது வேலைக்கு ரெண்டு வாரம் போனான். அவர்களே நிறுத்தி விட்டார்கள். 'மூணு நாலு நாள் போக லேட்டாயிடுச்சு. அதை எதோ க்ரைம் மாதிரி சொல்லி இனி வர வேண்டான்னு சொல்லிட்டாங்க. இந்த ஒரு வேலை இல்லாட்டி வேற நூறு வேலை'. பிறகு நாலு மாதம் கழித்துப் போன இந்த நான்காவது வேலையையும் இப்போது விட்டு விட்டான். இனி அடுத்த வேலை கிடைக்கும் வரை காலை பதினோரு மணி வரை உறக்கம், மாலை வரை டிவி, பின் வெளியே போனால் இரவு பன்னிரண்டு வரை நண்பர்களுடன் கும்மாளம் என்று இருப்பான்.
சாரதாவின் கணவர் இறந்த போது கார்த்திக்கிற்கு ஐந்து வயது. அவருடைய அரசாங்க வேலை கருணை அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே மகனுக்குத் தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்று அவள் அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாள். அவன் மிக நன்றாகப் படித்தாலும் சோம்பலும், பொறுப்பின்மையும் அவன் வளரும் நாட்களில் தெரிந்தன. ஆனால் சின்னவன் தானே, பெரியவனானால் சரியாகி விடும் என்று அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த பின்னும் அது தொடர்ந்தது. ஒவ்வொரு முறை வேலை விட்ட போதும் அடுத்ததில் சரியாகி விடுவான் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால் இத்தனை நாட்கள் இவன் தானாக சரியாவான் என்று இருந்த நம்பிக்கை இப்போது முழுவதுமாக கரைய சாரதா ரௌத்திரமானாள்.
"அப்படின்னா பழையபடி தண்டச்சோறாய் இந்த வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதா உத்தேசமா?"
தாயின் திடீர் கோபம் அவனைத் திகைப்படைய வைத்தது. "என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி பேசறாய்?"
"அப்புறம் என்னடா. காலம் பூரா உனக்கு உழைச்சுக் கொட்டற மெஷினா நான். படிக்க வைக்கிறது என்னோட கடமை. வேணும்கிற அளவு செலவு செஞ்சு படிக்க வச்சுட்டேன். அப்புறமா வேலைக்குப் போய் சம்பாதிச்சு பிழைக்கிறது தாண்டா ஒரு ஆண் பிள்ளைக்கு அழகு"
"அப்படின்னா அந்த மேனேஜர் என்னை அடிமை மாதிரி நடத்துனாலும் நான் பொறுத்துட்டு போகணும்."
"சம்பளம் தர்றவன் வேலை வாங்கத் தாண்டா செய்வான். அதை அடிமை மாதிரின்னு ஏண்டா நினைக்கிறாய்"
கார்த்திக் எரிச்சலடைந்தான். "இப்ப கடைசியா என்ன சொல்கிறாய்?"
"சம்பாதிச்சு காசு கொண்டு வர்றதாயிருந்தா வீட்டுல இரு. இல்லாட்டி வீட்டை விட்டுப் போன்னு சொல்றேன்"
அந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ச்சியடைந்தான். கோபத்தோடு கேட்டான். "அப்ப பெத்த பிள்ளைய விட உனக்கு காசு தான் முக்கியம்"
"ஆமா. அப்படியே வச்சுக்கோ"
"போயிட்டா நீ கெஞ்சிக் கூப்பிடாலும் நான் வர மாட்டேன்."
"நல்லது" சாரதா உறுதியாக நின்றாள்.
"நீ செத்தா கொள்ளி போடக் கூட ஆளில்லை. ஞாபகம் வச்சுக்கோ"
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான். நீ கிளம்பு"
கார்த்திக் கோபத்துடன் எழுந்து தன் துணிமணிகளை சூட்கேஸிலும், இன்னொரு பையிலும் நிரப்பிக் கொண்டான். "நான் இங்கிருந்து போயிட்டா பட்டினி கிடப்பேன்னு மட்டும் நினைக்காதே எனக்கு ·ப்ரண்ட்ஸ் இருக்காங்க."
"யார் எத்தனை நாள் பார்த்துக்குறாங்கன்னு நானும் பார்க்கறேன்"
"என் ·ப்ரண்ட்ஸ் எனக்காக உயிரையும் கொடுப்பாங்க"
"சரி போய் அவங்க உயிரை எடு. என்னை விடு"
அவன் கோபமாக வெளியேறிப் போகும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் போன பிறகு அருவியாய் சாரதா கண்களில் இருந்து கிளம்பியது.
அங்கு இல்லாத மகனிடம் சாரதா அழுகையினூடே வாய் விட்டு சொன்னாள். "அம்மாவுக்கு இப்ப எல்லாம் உடம்புக்கு முடியறதில்லைடா. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை. உன்னை தப்பா வளர்த்துட்டேன். அதை சரி செய்யாமல் போனா செத்தாலும் என் ஆத்மா சாந்தியடையாதுடா. செத்துட்டா கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான்னு சொன்னேன். சாகாம உடம்புக்கு முடியாம படுத்துகிட்டா அவன் கூட பார்க்க வர மாட்டான்னு எனக்கு தெரியும்டா. எனக்கு உன்னை விட்டா நாதி எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை அனுப்பிச்சிருக்கேன்னா நீ நல்லாகணும்னு தாண்டா. நீ இங்கே இருக்கிற வரைக்கும் நல்லாக மாட்டேடா. அதுக்குத் தான் உன்னை அனுப்பிச்சிருக்கேன். அம்மா மேல உனக்கு கோபம் கடைசி வரைக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அம்மாவைப் பார்க்க நீ கடைசி வரைக்கும் வராட்டி கூட பரவாயில்லை. நீ திருந்தி ஒரு நல்ல வேலையில இருக்காய்னு நான் சாகறதுக்குள்ளே கேள்விப்பட்டா எனக்கு அது போதும்டா."
- என்.கணேசன்
"இல்லை. நான் அந்த வேலையை விட்டுட்டேன்"
"ஏன்?"
"அந்த மேனேஜர் என்னை என்னவோ விலைக்கே வாங்கிட்ட மாதிரி பேசறான். போடா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு வந்துட்டேன்"
படிப்பு முடிந்து இந்த ஒரு வருட காலத்தில் இது அவன் விட்ட நான்காவது வேலை. இந்த வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. முதல் வேலைக்குப் பத்து நாள் போயிருப்பான். 'வேலை ரொம்ப அதிகம். கசக்கிப் பிழிகிறார்கள்' என்று விட்டான். முதல் வேலையை விட்டு மூன்று மாதம் கழித்து இரண்டாவது வேலைக்கு ஐந்து நாள் போனான். 'வேலை ரொம்ப போர். என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இதைக் கொஞ்ச நாளைக்கு செஞ்சா எனக்கு படிச்சதெல்லாம் மறந்து போயிடும்' என்று போவதை நிறுத்தினான். பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்றாவது வேலைக்கு ரெண்டு வாரம் போனான். அவர்களே நிறுத்தி விட்டார்கள். 'மூணு நாலு நாள் போக லேட்டாயிடுச்சு. அதை எதோ க்ரைம் மாதிரி சொல்லி இனி வர வேண்டான்னு சொல்லிட்டாங்க. இந்த ஒரு வேலை இல்லாட்டி வேற நூறு வேலை'. பிறகு நாலு மாதம் கழித்துப் போன இந்த நான்காவது வேலையையும் இப்போது விட்டு விட்டான். இனி அடுத்த வேலை கிடைக்கும் வரை காலை பதினோரு மணி வரை உறக்கம், மாலை வரை டிவி, பின் வெளியே போனால் இரவு பன்னிரண்டு வரை நண்பர்களுடன் கும்மாளம் என்று இருப்பான்.
சாரதாவின் கணவர் இறந்த போது கார்த்திக்கிற்கு ஐந்து வயது. அவருடைய அரசாங்க வேலை கருணை அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே மகனுக்குத் தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்று அவள் அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாள். அவன் மிக நன்றாகப் படித்தாலும் சோம்பலும், பொறுப்பின்மையும் அவன் வளரும் நாட்களில் தெரிந்தன. ஆனால் சின்னவன் தானே, பெரியவனானால் சரியாகி விடும் என்று அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த பின்னும் அது தொடர்ந்தது. ஒவ்வொரு முறை வேலை விட்ட போதும் அடுத்ததில் சரியாகி விடுவான் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால் இத்தனை நாட்கள் இவன் தானாக சரியாவான் என்று இருந்த நம்பிக்கை இப்போது முழுவதுமாக கரைய சாரதா ரௌத்திரமானாள்.
"அப்படின்னா பழையபடி தண்டச்சோறாய் இந்த வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதா உத்தேசமா?"
தாயின் திடீர் கோபம் அவனைத் திகைப்படைய வைத்தது. "என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி பேசறாய்?"
"அப்புறம் என்னடா. காலம் பூரா உனக்கு உழைச்சுக் கொட்டற மெஷினா நான். படிக்க வைக்கிறது என்னோட கடமை. வேணும்கிற அளவு செலவு செஞ்சு படிக்க வச்சுட்டேன். அப்புறமா வேலைக்குப் போய் சம்பாதிச்சு பிழைக்கிறது தாண்டா ஒரு ஆண் பிள்ளைக்கு அழகு"
"அப்படின்னா அந்த மேனேஜர் என்னை அடிமை மாதிரி நடத்துனாலும் நான் பொறுத்துட்டு போகணும்."
"சம்பளம் தர்றவன் வேலை வாங்கத் தாண்டா செய்வான். அதை அடிமை மாதிரின்னு ஏண்டா நினைக்கிறாய்"
கார்த்திக் எரிச்சலடைந்தான். "இப்ப கடைசியா என்ன சொல்கிறாய்?"
"சம்பாதிச்சு காசு கொண்டு வர்றதாயிருந்தா வீட்டுல இரு. இல்லாட்டி வீட்டை விட்டுப் போன்னு சொல்றேன்"
அந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ச்சியடைந்தான். கோபத்தோடு கேட்டான். "அப்ப பெத்த பிள்ளைய விட உனக்கு காசு தான் முக்கியம்"
"ஆமா. அப்படியே வச்சுக்கோ"
"போயிட்டா நீ கெஞ்சிக் கூப்பிடாலும் நான் வர மாட்டேன்."
"நல்லது" சாரதா உறுதியாக நின்றாள்.
"நீ செத்தா கொள்ளி போடக் கூட ஆளில்லை. ஞாபகம் வச்சுக்கோ"
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான். நீ கிளம்பு"
கார்த்திக் கோபத்துடன் எழுந்து தன் துணிமணிகளை சூட்கேஸிலும், இன்னொரு பையிலும் நிரப்பிக் கொண்டான். "நான் இங்கிருந்து போயிட்டா பட்டினி கிடப்பேன்னு மட்டும் நினைக்காதே எனக்கு ·ப்ரண்ட்ஸ் இருக்காங்க."
"யார் எத்தனை நாள் பார்த்துக்குறாங்கன்னு நானும் பார்க்கறேன்"
"என் ·ப்ரண்ட்ஸ் எனக்காக உயிரையும் கொடுப்பாங்க"
"சரி போய் அவங்க உயிரை எடு. என்னை விடு"
அவன் கோபமாக வெளியேறிப் போகும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் போன பிறகு அருவியாய் சாரதா கண்களில் இருந்து கிளம்பியது.
அங்கு இல்லாத மகனிடம் சாரதா அழுகையினூடே வாய் விட்டு சொன்னாள். "அம்மாவுக்கு இப்ப எல்லாம் உடம்புக்கு முடியறதில்லைடா. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை. உன்னை தப்பா வளர்த்துட்டேன். அதை சரி செய்யாமல் போனா செத்தாலும் என் ஆத்மா சாந்தியடையாதுடா. செத்துட்டா கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான்னு சொன்னேன். சாகாம உடம்புக்கு முடியாம படுத்துகிட்டா அவன் கூட பார்க்க வர மாட்டான்னு எனக்கு தெரியும்டா. எனக்கு உன்னை விட்டா நாதி எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை அனுப்பிச்சிருக்கேன்னா நீ நல்லாகணும்னு தாண்டா. நீ இங்கே இருக்கிற வரைக்கும் நல்லாக மாட்டேடா. அதுக்குத் தான் உன்னை அனுப்பிச்சிருக்கேன். அம்மா மேல உனக்கு கோபம் கடைசி வரைக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அம்மாவைப் பார்க்க நீ கடைசி வரைக்கும் வராட்டி கூட பரவாயில்லை. நீ திருந்தி ஒரு நல்ல வேலையில இருக்காய்னு நான் சாகறதுக்குள்ளே கேள்விப்பட்டா எனக்கு அது போதும்டா."
- என்.கணேசன்
Tuesday, May 19, 2009
உண்மையான மகான் எப்படி இருப்பார்?
இந்த தேசத்தில் மனித தெய்வங்கள் அதிகம். அதிலும் சமீப காலங்களில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனித தெய்வங்களை நாம் மேலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்றார். அது முக்கியமல்ல என்பது அவர் கருத்து. ஆனால் பார்க்க மற்ற மனிதர்களைப் போலவே தோற்றம் இருந்தால் அவர்கள் வந்து வணங்குவார்களா? எனவே மழித்தல், நீட்டல், ஆசிரமம் வைத்தல், மேஜிக் காட்டுதல், கூட்டம் சேர்த்தல் என்று பல வழிகளிலும் முயன்று கோடிக்கணக்கில் இந்த தெய்வங்கள் காசு பார்க்கின்றன. புகழ் தேடுகின்றன.
அடுத்ததாக மகான்கள். கடவுள் என்று சொல்லிக் கொள்வது "ரொம்பவும் ஓவர்" என்று தீர்மானித்து அதற்கு அடுத்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் இது. இவர்கள் பல சித்திகள், மகாசக்திகள் தங்களுக்கு இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு மேலே சொன்ன தெய்வங்களைப் போலவே தாங்களும் 'உழைத்து' கோடிக் கணக்கில் செல்வம் சேர்க்கின்றன.
ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்த பிரகடனமும் செய்வதில்லை. நம்முடைய அங்கீகாரமோ, அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்த பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.
போலிகளையே அதிகம் கண்டு பழக்கப்பட்ட நமக்கு உண்மை எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் காட்ட ரமண மகரிஷி இருந்திருக்கிறார்.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விட தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.
திருச்சுழியில் வெங்கடரமணனாகப் பிறந்த ரமண மகரிஷி ஆன்மீகத் தேடலில் திருவண்ணாமலைக்கு இளம் வயதிலேயே வந்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசாமல் மோன நிலையில் அமர்ந்திருக்கும் ரமணர் பால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரிடம் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். அவருடைய ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வர வைத்தது. ·ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் வந்து ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி மகரிஷியிடம் உபதேசம் பெற்று அதை எழுதி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் வர ஆரம்பித்தனர்.
ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார். ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.
இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து "இதுவும் என்னை விட உயரத்துல தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன, தாழ்வென்ன" என்று சொன்னார்.
தன்னை அவர் என்றுமே உயர்த்திக் கொண்டதில்லை. தன்னை முன்னிலைப் படுத்த அவர் முயன்றதுமில்லை. ஒரு முறை அவர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த அன்பர்கள் அவரிடம் அனுமதி கேட்டனர். "பிறந்த நாள் தெரிந்தால் தானே கொண்டாடறதுக்கு" என்று ரமணர் மறுத்து விட திருச்சுழியில் அவர் பிறந்த நாளை அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டனர். ரமணர் சிரித்தபடி சொன்னார். "இது இந்தப் பிறவி. முதல் பிறவி எப்ப ஆரம்பிச்சது என்று தெரிந்து கொண்டாடுவது தானே நியாயம். அது தானே உண்மையான பிறந்த நாள்"
சமையலுக்காக காய்கறிகளை சுத்தம் செய்து அரிந்து தருவது, பக்தர்களின் ஆன்மீகப் படைப்புகளைப் பிழை திருத்துவது என்று எந்த வேலையானாலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் செய்யக் கூடியவராக ரமணர் விளங்கினார். வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை விடப் பெரிய வித்தியாசம் இல்லா விட்டாலும் அவர் கண்களில் ஞான தீட்சண்யமும், அவரைச் சுற்றி சக்தி அலைகளும் இருந்ததாக சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.
பல சமயங்களில் அவரைக் காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். எண்ண அலைகளாலேயே அவற்றைப் பெற முடிந்தவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி அவருக்கு இருந்ததாக உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் கூறுகின்றனர். இதை பால் பிரண்டன் (Paul Brunton) என்ற மேலை நாட்டு தத்துவஞானியும் ரமணரிடம் தன் அனுபவமாக ஒரு நூலில் (A search in secret India) எழுதினார்.
அந்த நூலில் ரமண மகரிஷியின் பக்தர்களுள் ஒருவரான யோகி ராமையா என்பவருடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பால் பிரண்டன் குறிப்பிட்டுள்ளார். கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று பால் பிரண்டன் அறையில் வந்து விட பலரும் அதை அடிக்க கம்புகளை எடுக்க விரைந்த போது ராமையா அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பாம்பை தன் கைகளால் மெல்ல எடுத்து அதைத் தடவிக் கொடுக்க அதுவும் சீற்றத்தை அடக்கி சாந்தமாகி விட ராமையா அதைக் கீழே இறக்கி விட்டதாகவும், அந்த பாம்பு அங்கிருந்து யாருக்கும் எந்தத் தொந்திரவும் செய்யாமல் போய் விட்டதாகவும் பால் பிரண்டன் குறிப்பிடுகிறார்.
பால் பிரண்டன் பிறகு பயமாக இருக்கவில்லையா என்று ராமையாவிடம் கேட்டாராம். நான் அதை அன்புடன் அணுகுகையில் அது என்னை ஏன் துன்புறுத்தப் போகிறது என்று ராமையா சொன்னாராம். அந்த அளவு பண்பட்ட யோகிகளும், ஞானிகளும் கூட ரமணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்றால் ரமணரைப் பற்றி இனி என்ன சொல்ல?
அவருடைய இறுதிக் காலத்தில் இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. அதையும் கூட மகரிஷி பற்றில்லாமல் கவனிக்கலானார். மற்றவர்கள் துக்கப்பட்டபோது தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை என்றும் புன்னகையுடன் கூறினார். சிலர் மகரிஷி தன் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்ன ஸ்திதப்ரக்ஞனும், குணாதீனனும் இவரல்லவோ!
ரமண மகரிஷியின் அருளுரைகளில் சில -
* ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.
* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.
* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.
* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்துசெல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.
-என்.கணேசன்
நன்றி: விகடன்
Friday, May 15, 2009
முப்பகுதியையும் முழுதாய் வாழ்க
நம் முன்னோர் மனித வாழ்க்கையை நான்காய் பிரித்திருந்தார்கள். அவை
1) பிரம்மச்சரியம்
2) கிரஹஸ்தம்
3) வனப்ரஸ்தம்
4) சன்னியாசம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் இந்த வாழ்க்கை முறை இன்றைக்கும் அர்த்தமுள்ளதாகவே, பொருத்தமானதாகவே இருக்கிறது.
பிரம்மச்சரியம் முக்கியமாய் விளையாட்டு மற்றும் கல்வி கற்கும் பருவம்.
கிரஹஸ்தம் இல்லறம் மற்றும் பொருளீட்டும் பருவம்.
வனப்ரஸ்தம் வாழ்க்கையின் சந்தடிகளிலிருந்து விலகி காடுகளுக்கு தம்பதி சமேதராகச் சென்று இயற்கை சூழ்நிலைகளில் அமைதியாக வாழும் பருவம். அன்று போல் இன்றைக்கு காடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓய்வு பெற்று அமைதியாகக் கழிக்கும் காலமிது.
சன்னியாசம் துறவறம் பூணும் கடைசிநிலை. அன்றைய காலங்களில் கூட இது கட்டாயமாக்கப்படவில்லை. முதல் மூன்று நிலைகளையும் முறையாகக் கழித்த மனிதன் தானாக இந்த நிலையை அடைவான் என்று நம் முன்னோர் கருதினார்கள். பலர் இந்த சன்னியாச நிலையை அடையா விட்டாலும் அது குற்றமாகக் கருதப்படவில்லை. பூவாகி, காயாகி, கனியாகிப் பின் தானாக உதிரும் பழத்தின் தன்மையைப் போல தானாக ஏற்படக் கூடிய நிலை என்றே துறவு இருந்தது.
அந்தக் கடைசி நிலை கட்டாயமானதல்ல, இயல்பாய் தானாய் ஏற்படக்கூடியது என்பதால் இந்தக் காலத்திற்கும் அதை நாம் முக்கியமாகக் கருத வேண்டியதில்லை. மற்ற மூன்று பகுதிகளை மட்டும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வோம்.
இன்றைய காலக் கட்டத்தில் முதல் இரண்டு பகுதிகளே வாழப்படுகின்றன. அதுவும் அரைகுறையாகவே வாழப்படுகின்றன. முதல் பகுதியான விளையாட்டு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் விளையாட்டு பெருமளவு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின் இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டு மிகக் குறைந்து விடுகிறது. அதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் இன்றைய பெற்றோர்கள் சம்மர் க்ளாஸ், ஸ்பெஷல் க்ளாஸ் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். முதல் கட்டத்தில் கல்வியே பிரதான இடத்தைப் பிடித்து விடுகிறது.
இரண்டாவது கட்டம் இளமையின் சந்தோஷங்கள் முழுவதுமாக அனுபவிக்கப் பட வேண்டிய காலம். ஒருவன் நன்றாகப் பொருளீட்டும் காலம். இன்றைய காலத்தில் இரண்டையும் ஒருசேர மிகச் சரியாகச் செய்பவர்கள் குறைவு. அனுபவிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி உழைத்துப் பொருளீட்டுவதில் கோட்டை விடும் கூட்டம் இருக்கிறது. அதே போல் பொருளீட்டும் முனைப்பிலேயே இளமையை அனுபவிக்காமல் தொலைத்து விடும் கூட்டமும் இருக்கிறது. எல்லாமே ஒரு அவசரகதியில் நிகழ எந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்தித் தொலைக்கும் ஒரு அவலம் இன்றைய மக்களிடம் அதிகம் இருக்கிறது.
மூன்றாம் கட்டத்திற்குப் பெரும்பாலானோர் வருவதேயில்லை. ஓய்வு வேலையிலிருந்து கிடைத்தாலும், மனிதனின் பொருளீட்டும் ஆசையிலிருந்து கிடைப்பதில்லை. இன்னும் இன்னும் என்று தணியாத தாகத்தோடு தேடுகிறார்களே ஒழிய மனதார ஓய்வு பெறுபவர்கள் குறைவு. வியாபாரமும், அரசியலும் ஓய்வு பெற விடுவதில்லை. வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் வேறு ஏதோ வேலையைத் தேடிக் கொண்டு பலர் ஓடுகிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவர் கோடீசுவரர். அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் போது அவருக்குக் கை நிறையப் பணமும் கிடைத்தது. உட்கார்ந்து தின்றாலும் அவர் சொத்தை மூன்று தலைமுறைகளுக்கு அழிக்க முடியாது. ஆனால் ஓய்வு பெற்றவுடன் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக ஒரு வேலையை எடுத்துக் கொண்டு அவர் ஆட்களை இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைக்கப் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஓயாமல் அலைந்தபடியே இன்னும் இருக்கிறார். அவர் அமைதியான மூன்றாம் கட்ட வாழ்வை சுகிக்கப் போவதே இல்லை.
ஒவ்வொரு கால கட்டமும் மனித வாழ்க்கையில் முக்கியமானவை. அந்தந்த கட்டத்தின் சந்தோஷங்களை அந்தந்த கட்டத்திலேயே முழுமையாக அனுபவிப்பது புத்திசாலித்தனம். ஒரு கட்டத்தில் வாழாதவற்றை அவன் அடுத்த கட்டத்தில் பச்சாதாபத்துடன் நினைத்துப் பார்க்க முடியுமே தவிர அனுபவித்து ஆனந்தப்பட முடியாது. மேலும் முழுமையாக அனுபவித்து முடியாத கட்டத்தின் தாக்கம் மற்ற கட்டங்களிலும் வந்து அந்தக் கட்டத்தையும் முழுமையாக அனுபவிக்க விடாமல் தொந்திரவு செய்து கொண்டே இருக்கும் என்பது மனோதத்துவ அறிஞர்களின் உறுதியான கருத்து.
முறையாக முழுதாக விளையாட்டுப் பருவத்தைக் கழிக்காத எத்தனையோ பேர் மேலான நிலைகளுக்கு வந்த பின்னரும் கூட சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக மனவியல் அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். இல்லறத்தை மனதாரத் துறக்காமல் ஒரு அவசரத்தில் அல்லது கட்டாயத்தில் துறவியானவர்கள் காமக் களியாட்டங்களில் ஈடுபடும் தினசரி செய்திகளும் நமக்குப் புதிதல்ல.
ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக வாழ முடிந்தவர்கள், வாழ்ந்து முடித்தவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லப் பக்குவப்பட்டு விடுகிறார்கள். அரைகுறையாக எதையும் விட்டு வைக்காததால் அவர்கள் முதல் கட்டத்திற்குரிய மனக்கிலேசங்களை அடுத்த கட்டத்தில் அனுபவிப்பதில்லை. அவை அடுத்த கட்ட செயல்களைப் பாதிப்பதில்லை.
நம் முன்னோரின் வாழ்க்கை முறையில் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட உணர்வுகள் அதிகம் இடம் பெற்றதில்லை. இயற்கையை ஒத்து வாழ்ந்த அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையாக இருந்த உணர்வுகளை எளிதாகத் திருப்திபடுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ இயற்கையை விட செயற்கை அதிகம் வியாபித்திருப்பதால் அதைத் திருப்திப் படுத்திக் கொள்ள எல்லையில்லாமல் போராட வேண்டி இருக்கிறது. உதாரணத்திற்கு இயற்கையான காமத்தை எளிதாகத் திருப்திப் படுத்திக் கொண்டு அமைதியுற முடியும். கற்பனைகளுடன் கூடிய வக்கிரங்களும் சேர்ந்த காமம் எந்தக் காலத்திலும் திருப்தி அடைய முடியாத நோயாகவே தங்கி விடும். பொருளீட்டுவதும் அப்படியே. தேவையான அளவு பொருளை ஈட்டுவது திறமையும் உழைப்பும் உள்ள மனிதனுக்கு எளிதே. ஆனால் அடுத்தவர்களை விட அதிகம் வேண்டும் என்ற செயற்கையான உந்துதல் இருந்தால் எத்தனை பெற்றாலும் அது போதுமாவதில்லை.
நிறையவே பொருளீட்டிய பின்னும் இளைய தலைமுறைக்கு வழி விட்டு, நிறைவுடன் அடுத்த கட்டமான அமைதியான வாழ்வுக்கு நகர முடியாமை இன்னொரு வித வியாதி. சாகும் வரை அரங்கத்தை விட்டு வெளியே வர மாட்டேன் என்று அடம்பிடித்துப் போராடும் வியாதி. அந்தக் காலத்தில் சக்கரவர்த்திகள் கூட வாரிசுகளுக்கு ஆட்சியைத் தந்து விட்டு வனப்ரஸ்தம் செல்வது ஒரு இயல்பான விஷயமாக இருந்தது. மனதை அமைதிப்படுத்தும் உயர்ந்த சிந்தனைகளுடன் அகம்பாவத்திற்குத் தீனி போடாத இயற்கை சூழ்நிலைகளில் வாழ்வது வயதான காலத்தில் சிறப்பே அல்லவா? இன்றைய காலத்திற்குப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் எளிய வாழ்க்கை, அமைதியான சூழ்நிலை, பிடித்தமான பொழுது போக்குகள், ஆரவாரமோ அவசரமோ இல்லாத வாழ்க்கை ஓட்டம் என்று வாழ்வது முதுமைக்கு ஏற்ற சிறப்பான முறை அல்லவா? அது தரும் அமைதிக்கு இணை வேறெது இருக்க முடியும்?
இந்த வாழ்க்கை முறை அமைய முடியாத சிக்கல்கள் சிலருக்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறேன். விளையாட்டுப் பருவத்திலேயே வேலை பார்த்துப் பிழைக்க வேண்டியிருக்கும் குழந்தைகள், வயோதிக காலத்திலும் குடும்பத்தைக் காக்க உழைக்க வேண்டியிருக்கும் முதியவர்கள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் விதிவிலக்குகள்.
பொதுவான மற்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையாக வாழப்பாருங்கள். ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்தை சொருகப் பார்க்காதீர்கள். விளையாடுகையில் முழுமையாக விளையாடுங்கள். படிக்கையில் முழு மனதோடும் கவனத்தோடும் படியுங்கள். இல்லற சுகங்களை இயல்பாக ஆழமாக அனுபவியுங்கள். நன்றாக உழைத்து சம்பாதியுங்கள். கடைசி காலத்தை இயற்கையை ரசித்துக் கொண்டோ, இசையை ரசித்துக் கொண்டோ, மிகவும் பிடித்த நற்செயல்கள், பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கொண்டோ அமைதியாக நிறைவுடன் வாழ முயலுங்கள். அப்படிச் வாழ்ந்தீர்களேயானால் மரணத் தருவாயில் நீங்கள் பச்சாதாபம் கொள்ள எதுவும் இருக்காது. மனநிறைவுடன் இந்த உலகத்திலிருந்து நீங்கள் விடை பெற முடியும்.
-என்.கணேசன்
Monday, May 11, 2009
இது நல்லதல்ல. நியாயமுமல்ல!
சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளா விட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.
"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"
"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்து விடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.
-என்.கணேசன்
நன்றி: விகடன்
Wednesday, May 6, 2009
வாக்காளர்களே சிந்திப்பீர்!
இப்போதெல்லாம் தேர்தலில் ஜெயிப்பது எந்தக் கட்சியென்றாலும் தோற்பது பொது மக்கள் தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. யாரிடம் தோற்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை தான் வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் உணராததால் தான் இந்த கவலைக்கிடமான நிலை. சுதந்திரத்திற்கு முன் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாரதி மனம் பதைத்துப் பாடிய வரிகள் சுதந்திரம் வாங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் மக்கள் விஷயத்தில் பொருத்தமாகவே இருக்கிறது.
தந்த பொருளைக் கொண்டே- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
என்று பாரதி பாடியது போல நம் வரிப்பணத்தை வைத்து தான் அரசாங்கமே நடக்கிறது. ஆனால் அதை உணராமல், அரசியல்வாதிகள் என்றால் வானளவு அதிகாரம் கொண்டவர்களாக நினைக்கும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் என்கிற உண்மை மறந்து தங்களை ஆளும் தலைவர்கள் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் தன்மை அடிமட்ட மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த பயத்திற்கு இணையாக ஞாபகமறதி என்னும் சாபக்கேடும் மக்களிடம் காணப்படுவதால் தான் மோசமான அரசியல்வாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் தாங்கள் பெற வேண்டிய எதையும் பெறாமல் தோல்வி அடைகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேர வேண்டிய எல்லாச் செல்வங்களையும் தங்கள் தனிப்பட்ட கஜானாக்களுக்கு கொண்டு சேர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
லஞ்சம், ஊழல், அராஜகம் எல்லாம் இன்று தலைவிரித்தாடும் போதும் பெரும்பாலான பொதுமக்கள் எல்லாம் விதியென்று அவற்றை விரக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். 'ரௌத்திரம் பழகு' என்றான் பாரதி. இந்த தேசத்தில் ஒன்றுமில்லாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் மக்களுக்கு இது போன்ற முக்கிய விஷயங்களுக்கு கோபம் கொஞ்சமும் வருவதில்லை. அதனால் தான் எதையும் செய்யலாம், நம்மை யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற அபார தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது.
’அவன் சம்பாதித்து விட்டுப் போகட்டும், நமக்கென்ன, நாமா தருகிறோம்’ என்கிற அளவில் தான் சாமானியனின் அறிவு வேலை செய்கிறது. ஐயா அவன் வசூல் செய்வதே உங்களைக் கொள்ளை அடிக்கும் பணத்தில் ஒரு பங்கு கமிஷன் தான். அவன் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பது கமிஷன் மட்டுமே என்றால் உங்களுக்கு வந்திருக்க வேண்டியிருந்தும் வராமல் கொள்ளை அடிக்கப்படும் பணம் எத்தனை லட்சம் கோடிகளாக இருக்கும் என்று சிந்திப்பீர். நாட்டில் தரித்திரவாசிகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இவர்கள் சம்பாத்தியமோ ஆயிரம், லட்சம் கோடிகளில் எகிறுகிறது. இதைப் பார்த்தும் சுரணை இல்லாமல் இருப்பது பெருங்குற்றம் அல்லவா? அடிமட்ட முட்டாள்தனம் அல்லவா?
இது தான் இன்றைய சூழ்நிலை வாக்காளப் பொது மக்களே!
தேர்தல் என்பது ஒன்று தான் நமக்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பம். அந்த ஒரு நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள். பின் வரும் ஐந்தாண்டு காலங்கள் நாம் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும். அப்படி ஓடித் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தைக் கோட்டை விடாமல் தெளிவாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.
நம் வீட்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுப்போம். "என்னமாய் பேசறான்" என்று பேச்சைப் பார்த்து தேர்ந்தெடுப்போமா, நன்றாக நமக்கு உழைப்பவனைத் தேர்ந்தெடுப்போமா? அவனுக்குத் தகுதி இருக்கிறதா, அவன் பழைய சரித்திரம் என்ன என்று பார்ப்போமா, பார்க்க மாட்டோமா? நம் வீட்டில் திருடியதில் ஒரு சில்லறைத் தொகையை நமக்கே இனாமாய் கொடுத்தால் சந்தோஷமாய் அவனை இருத்திக் கொள்வோமா? நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை? பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்?
வாக்காளர்களே, எங்கள் தாத்தா காலம் முதல் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் இனி நானும் இப்படித்தான் போடுவேன் என்றும் சொல்லும் பைத்தியக்காரத்தனம் உங்களிடம் இருந்தால் அதை முதலில் விட்டொழியுங்கள். இந்த அடிமை சாசனம் நல்லதல்ல.
நான் ஒருவன் ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். உங்களைப் போல் நினைத்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை பெரும்பாலான வெற்றி வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. உங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் எத்தனையோ தேர்தல்களில் நாட்டின் தலைவிதியையே மாற்றியிருக்கலாம்.
ஒரு ஆட்சியை மதிப்பிடுகையில் கடைசி சில மாதங்களை மட்டும் பார்க்காமல் ஆட்சிக்காலம் முழுவதையும் பரிசீலியுங்கள்.
இலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சைக் கொண்டோ, தேர்தல் அறிக்கைகள் கொண்டோ தீர்மானிக்காமல் அவர்களது முந்தைய செயல்பாடுகள், சாதனைகளை வைத்து தீர்மானியுங்கள். எல்லாருமே மோசமானவர்கள், இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் கூட இருப்பதில் குறைந்த மோசத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் மூலம் மோசமான விளைவுகளையும் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- என்.கணேசன்
Friday, May 1, 2009
அர்த்தமுள்ள அதிருப்தி
திருப்தியை விடச் சிறந்த செல்வம் இல்லை. அதிருப்தியை விடப் பெரிய வறுமையும் இல்லை. எத்தனை குறைவாகப் பெற்றிருந்தாலும் திருப்தியுடன் வாழ்கின்ற செல்வந்தர்கள் உண்டு. ஏராளமாக வைத்திருந்தாலும் அதிருப்தி கொண்டு வாழ்கின்ற ஏழைகள் உண்டு.
ஆனால் திருப்தியும், அதிருப்தியும் சிலநேரங்களில் எதிர்மறையான பலன்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அனுபவ உண்மை. எந்த ஒரு மாற்றத்திற்கும் விதை அதிருப்தியே. சரியில்லாத சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொண்டு திருப்தியுடன் இருக்கும் போது மாற்றம் நிகழ்வதில்லை. அதில் அதிருப்தி ஏற்படும் போது தான் இதை அகற்ற அல்லது மேம்படுத்த என்ன செய்வது என்று மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். அதனால் எந்தவொரு அர்த்தமுள்ள மாற்றத்திற்கும் காரணகர்த்தா அதிருப்தியே.
ஆதிமனிதன் வெட்ட வெளியிலும் மரநிழலிலும் வாழ்வதிலேயே திருப்தியடைந்திருந்தால் குடிசைகள் தோன்றியிருக்காது. குடிசைகளிலேயே மனிதன் திருப்தி அடைந்திருந்தால் வசதியான வீடுகள் தோன்றியிருக்காது. இப்படி எல்லா விதங்களிலும் இன்றைய அனைத்து உயர்வான நிலைகளுக்கும் முந்தைய மனிதர்கள் அன்றைய நிலைகளில் கண்ட அதிருப்தியே பிள்ளையார் சுழியாக இருந்திருக்கிறது. அதிருப்தியுடன் முணுமுணுப்பதிலும், புலம்புவதிலும் பலர் நின்று விட்டாலும், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஒரு படி அதிகம் எடுத்து வைத்த சிலருக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம். அந்த சிலருடைய அதிருப்தியே அர்த்தமுள்ளதாக இருந்திருக்கிறது. அதுவே இத்தனை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லாப் புரட்சிகளுக்கும் விதையாக இருந்தது இந்த அர்த்தமுள்ள அதிருப்தியே. பலரும் விதி என்று ஒத்துக் கொண்டு அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாலும், அப்படி அடிமைப்பட்டு வாழ்வதில் அதிருப்தியடைந்து இந்தத் தளைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்று சிலர் சிந்தித்து செயல்பட்டதால் மட்டுமே விடுதலையும், மறுமலர்ச்சியும் வரலாற்றுப் பக்கங்களில் சாத்தியமாகி இருக்கிறது. பிரஞ்சுப்புரட்சி ரஷ்யப்புரட்சி போன்ற பெரும்புரட்சிகளும் சரி, இந்தியாவைப் போன்ற பல நாடுகளின் விடுதலையும் சரி இதற்கு உதாரணங்கள்.
ராஜபோக வாழ்க்கையில் சித்தார்த்தன் திருப்தியடைந்திருந்தால் ஒரு கௌதமபுத்தர் இந்த உலகிற்குக் கிடைத்திருக்க மாட்டார். போதுமான சம்பளத்துடன் இருந்த வேலையில் நாராயணமூர்த்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு இன்·போசிஸ் நிறுவனம் பிறந்திருக்காது. தன் ஆரம்ப கால குணாதிசயங்களில் மோகந்தாஸ்கரம்சந்த் காந்தி திருப்தியடைந்திருந்தால் ஒரு மகாத்மாவைக் காணும் பாக்கியத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.
இப்படி தனிமனிதனானாலும் சரி சமுதாயமானாலும் சரி, நாடானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தி தான் அழகான மாற்றங்களை உலகில் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆன்மீகமானாலும் சரி, அரசியலானாலும் சரி, லௌகீகமானாலும் சரி அர்த்தமுள்ள அதிருப்தியே திருப்புமுனைகளாக இருந்திருக்கின்றன.
எனவே உங்களையும், உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் புதிய பார்வையோடு பாருங்கள். இருப்பதெல்லாம் சரி தானா? காண்கின்ற காட்சி உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறதா? இல்லையென்றால் அவற்றை மாற்ற வேண்டாமா?
முதலில் பாரதி சொன்னது போல்,
'தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே' -
வாழும் வாழ்க்கையில் அதிருப்தி கொள்ளுங்கள் நண்பர்களே. அது அர்த்தமில்லாத புலம்பலாக இருந்து விடாமல் அர்த்தமுள்ள அதிருப்தியாக உங்களை மாற்றக்கூடிய உந்துதலாக இருக்கட்டும். உங்கள் அதிருப்தி மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மாற ஆரம்பிப்பீர்கள். உங்கள் மாற்றம் உன்னதமாக இருந்தால் அது உங்களை சந்திப்பவர்களையெல்லாம் அலைகளாகத் தொடும். அவர்களில் பக்குவப்பட்டவர்கள் தாங்களும் மாற ஆரம்பிக்கலாம். அப்படியே தொடர்ந்து நீங்கள் ஆரம்பித்து வைத்த அலை பேரலையாக உங்கள் வீட்டையும், சமூகத்தையும், நாட்டையும் கூட மாற்றலாம். காரணம் எல்லா மாற்றங்களும் இப்படி எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பித்தவை தானே.
அப்படியொரு அலை உங்களிடமிருந்து ஆரம்பிக்குமா?
-என்.கணேசன்
நன்றி: விகடன்
Subscribe to:
Posts (Atom)