கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பைகூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.
நமது புராணக்கதைகளில் இறைவன் ஹோமங்களில் பிரத்தியட்சமானதைக் காட்டிலும் அதிகமாக பக்தர்களின் பக்திக்கு மெச்சி காட்சியளித்த சம்பவங்கள் அதிகம். மனம் தூய்மையாக இருக்குமானால் இறைவன் அங்கு விரும்பிக் குடியேறுகிறான் என்று இறையருள் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயில் தோன்றிய கதை சுவாரசியமானது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பூசலார் என்ற சிவபக்தர் பரம ஏழை. ஆனால் அவருக்கு சிவபெருமானிற்கு பெரிய ஆலயம் ஒன்று கட்டும் பேராசை இருந்தது. தன்னுடைய அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு ஆலயம் கட்டுவது முடிகிற காரியமா?
வெளியே கட்ட முடியாத ஆலயத்தை அவர் மனதிலேயே கட்ட தீர்மானித்தார். ஒரு நல்ல நாளில் தன் மனதில் சிவாலயம் கட்ட ஆரம்பித்தார். மனதினுள் என்றாலும் ஆகம விதிப்படி கட்டும் பணி நடைபெற ஆரம்பித்தது. சிவாலயத்தைக் கட்டி முடித்த பூசலார் ஒரு நன்னாளைக் கும்பாபிஷேகம் செய்யத் தேர்ந்தெடுத்தார்.
அதே சமயத்தில் காஞ்சிபுரத்தில் மன்னன் ராஜசிம்ம பல்லவன் கைலாசநாதர் ஆலயத்தை மிகச்சிறப்பாகக் கட்டி முடித்து பூசலார் குறித்திருந்த அதே நாளில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நாளுக்கு முந்தைய தினம் இரவில் அவன் கனவில் வந்த சிவபெருமான் கும்பாபிஷேக நாளை இன்னொரு நாளுக்கு மாற்றும்படியும், மறுநாள் அவர் பக்தர் பூசலார் திருநின்றவூரில் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு தான் போக வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
விழித்துக் கொண்ட மன்னன் அமைச்சரையும், அதிகாரிகளையும் அழைத்து கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தவும், கும்பாபிஷேகத்திற்கு வேறு நாள் பார்க்கவும் கட்டளையிட்டான். இத்தனை சிறப்பாகவும், அழகாகவும் கட்டிய கோயிலை விட அந்த பக்தர் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டியிருக்க வேண்டும், இல்லையென்றால் இறைவன் இதை விட அதற்கு முதலிடம் தந்திருப்பாரா என்று எண்ணிய ராஜசிம்ம பல்லவன் அந்தக் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தானும் செல்லத் தீர்மானித்து இரவோடிரவாகப் புறப்பட்டான்.
மறுநாள் அதிகாலை திருநின்றவூரைச் சேர்ந்த மன்னன் அங்கு கோயிலையும் காணாமல் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளையும் காணாமல் திகைத்தான். விசாரித்த போது அங்கு கோயில் எதுவும் கட்டப்படவில்லை என்றும் பூசலார் என்ற சிவபக்தர் சிறுவீடு கூடக் கட்ட வசதியில்லாத பரம ஏழை என்றும் தெரிந்தது. ஆச்சரியப்பட்ட மன்னன் பூசலாரைச் சென்று தன் கனவைப் பற்றி சொல்ல பூசலார் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. தன் இதயத்தில் கட்டிய கோயிலைப் பற்றி அவர் சொன்னார். ராஜசிம்ம பல்லவனும் அவர் இறை பக்தியில் நெகிழ்ந்து போனான்.
பூசலாரின் இருதயக் கோயிலில் ஈசன் எழுந்தருளியதால் இருதயாலீசுவரர் என்ற பேர்சூட்டி பெரியதொரு கோயிலை திருநின்றவூரில் ராஜசிம்ம பல்லவன் கட்டிக் கொடுத்தான்.
இறைவன் எந்தத் திருக்கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் பார்த்தீர்களா? ஒவ்வொரு இதயமும் கோயிலாகலாம் அதில் தூய்மை இருந்தால். அதில் பக்தியும் நன்மைகளும் நிறைந்திருந்தால்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல் நீர பிற.
என்றார் திருவள்ளுவர். உண்மையான அறம் மனத்தினுள் மாசில்லாமல் இருப்பதே. மற்றதெல்லாம் வெறும் பகட்டே என்கிறார். அப்படி மாசில்லாமல் தூய்மையாக உள்ளம் மட்டுமே இறைவன் நுழையத் தகுதி வாய்ந்ததாகிறது.
வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.
அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள். அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.
இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் தோதான ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.
ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி.
இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்.
-என்.கணேசன்