சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 26, 2009

திருஷ்டி

"போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?" அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு" வருண் எரிச்சலுடன் சொன்னான்.

"சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை" அம்மா அலுத்துக் கொண்டாள்.

பக்கத்து வீட்டுப் பாட்டியைப் பார்த்தால் அவர்கள் எல்லோருக்கும் பயம். பார்ப்பதற்கு குள்ளமாக, ஒடிசலாக இருக்கும் அந்த விதவைப் பாட்டியின் கண்களில் முக்கியமான சில தருணங்களில் படுவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவது போலத் தான்.

வருண் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு முறை பாட்டி அங்கலாய்த்தாள். "இவ்வளவு சிரத்தையாய் நீ படிக்கிறாய். எங்க வீட்டுலயும் ஒரு அசடு இருக்கு. புஸ்தகம் எடுத்தவுடனே கொட்டாவியாய் விடுது" அன்று மாலை டைபாய்டு வந்து படுத்த வருண் அந்த பரிட்சைக்குப் போகவே இல்லை. அம்மா முதல் முதலில் அரக்கு கலரில் அழகான பட்டுப் புடவை கட்டிக் கொண்டு போன போது பாட்டி கண்களில் பட்டு விட்டாள். "புடவை ரொம்ப நல்லா இருக்கு' என்று பாட்டி சுருக்கமாய் தான் சொன்னாள். அந்த சேலையைக் கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போன போது ஊதுபத்தி நெருப்பில் சேலை ஓட்டையாய் போனதை அம்மா இப்போதும் சொல்லி சொல்லி மாய்கிறாள். இப்படி எத்தனையோ நிகழ்வுகள்....

ஊரிலிருந்து இன்று காலை தான் வந்திருந்த மாமா குளித்து விட்டு தலையைத் துவட்டியபடி வந்தார். "நேரம் ஆயிடுச்சு வருண். இண்டர்வ்யூவுக்கு கிளம்பாம இன்னும் ஏண்டா இங்கேயே நிற்கிறாய்?"

வருண் வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டி நிற்பதையும் அவள் பார்வை மிக மோசமானது என்பதையும் சொன்னான்.

"இது என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு. இருபத்தியோராம் நூற்றாண்டு வந்தாலும் நீங்க மாறவே மாட்டீங்களாடா. பூசணிக்காயை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறீங்க. எலுமிச்சம்பழத்தையும் மிளகாயையும் சேர்த்துக் கோர்க்கறீங்க. குங்குமத்தண்ணியை சுத்தி கொட்டறீங்க. ஆனா அப்படியும் உங்களையெல்லாம் விட்டு இந்த திருஷ்டி ஒழிய மாட்டேங்குதே"

"போங்க மாமா உங்களுக்கு அந்தப் பாட்டியைப் பத்தி தெரியாது" என்று வருண் சொன்னவுடன் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். இருவரும் சேர்ந்து கதை கதையாய் சொன்னார்கள்.

"போன தடவை நான் வந்தப்ப என் கிட்ட சினிமாவைப் பத்தி பேசிகிட்டு இருந்ததே அந்தப்பாட்டி தானே" மாமா நினைவுபடுத்திக் கொண்டு கேட்டார்.

"அதே பாட்டி தான்" என்றார்கள்.

பாட்டி மகா சினிமா ரசிகை. சில வருடங்கள் வட இந்தியாவிலும் இருந்ததால் ஹிந்தி சினிமா மேலும் அவளுக்கு மிகுந்த ஈடுபாடு. சென்ற முறை அவர் வந்திருந்த போது அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். ரஜனிகாந்த் பற்றியும் அமீர்கான் பற்றியும் (லகான் படம் வந்த சமயம் அது) பேசும் போது சொன்னாள். "பொறந்தா அந்த மாதிரி ராசியோடு பொறக்கணும். நாமளும் இருக்கோம். அது பக்கத்து தெருவுல இருக்கறவனுக்குக் கூட தெரியறதில்லை". அவள் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தது அவருக்கு நன்றாக நினைவிருந்தது.

"ஏன் வருண். அப்போ ரஜனிகாந்த், அமீர்கான் ரெண்டு பேரோட அதிர்ஷ்டம் பத்திக் கூட பாட்டி சொன்னா. அது அவங்க ரெண்டு பேரையும் பாதிச்சுதா. ரெண்டு பேரும் இப்பவும் சினிமா ·பீல்ட்ல டாப்ல தானே இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் திருஷ்டியே கிடையாதா? உங்கள் திருஷ்டிக்கு ஒரு பாட்டி தான். அவங்க மாதிரி உயரத்துல இருந்தா திருஷ்டி போட எத்தனை பேர் இருப்பாங்க. கொஞ்சம் யோசிடா"

வருணுக்கு அவர் வாதம் யோசிக்க வைத்தது. "ஆனா எங்க வீட்டுல இப்படியெல்லாம் நடந்திருக்கே மாமா"

"ஒரு சிலது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி தற்செயலா நடந்திருக்கலாம்டா. மீதி எல்லாம் நீங்க உங்க பயத்துனாலயே வரவழைச்சிருப்பீங்க. "ஐயோ பாட்டி பார்த்துட்டா. ஏதோ சொல்லிட்டா. கண்டிப்பா ஏதோ நடக்கப் போகுது"ன்னு நெகடிவ்வாவே நினைச்சுட்டு இருந்தா எல்லாமே தப்பாவே தான் நடக்கும்டா. ஆழமா எதை நம்பறியோ, தொடர்ச்சியா எதை நினைச்சுகிட்டே இருக்கியோ அது தான் உன் வாழ்க்கைல நடக்கும். இது அனுபவ உண்மைடா"

மாமா சொன்னது மனதில் ஆழமாய் பதிய வருண் உடனடியாகக் கிளம்பினான். வெளியே நின்றிருந்த பாட்டியிடம் வலியப் போய் சொன்னான். "பாட்டி ஒரு நல்ல வேலைக்கு என்னை இண்டர்வ்யூவுக்கு கூப்பிட்டிருக்காங்க. போயிட்டு வர்றேன்"

பாட்டி ஒரு கணம் அவனையே பார்த்து விட்டு நெகிழ்ச்சியோடு சொன்னாள். "முக்கியமான வேலையா போறப்ப விதவை எதிர்படறதே அபசகுனம்னு நினைக்கிற உலகத்துல என்னையும் மனுஷியா மதிச்சு சொன்னாய் பார். உன் நல்ல மனசுக்கு இந்த வேலை கண்டிப்பா கிடைக்கும். வேணும்னா பாரேன்"

பாட்டியிடமிருந்து இது போன்ற ஆசியை வருண் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'நாம் மாறும் போது உலகமும் எப்படி மாறி விடுகிறது' என்று அவன் அதிசயித்தான். அங்கிருந்து நகர்ந்த போது இந்த வேலை தனக்கு உறுதியாகக் கிடைக்கும் என்று அவன் உள்மனம் சொன்னது.

-என்.கணேசன்

நன்றி:விகடன்

Thursday, March 19, 2009

வாழ்க்கை ஒரு விளையாட்டு


வாழ்க்கை ஒரு விளையாட்டு.

ஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.

ஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.

இந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.

நீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.

இறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

அதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.

இறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

மற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்?

-என்.கணேசன்

Monday, March 16, 2009

நியூட்டனும் ஆப்பிளும்


மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.

மரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அசாதாரணமான ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது?

இந்தக் கேள்விக்கு தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்பதை பதிலாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான பதில் நியூட்டன் தயாரான மனநிலையில் இருந்தார் என்பது தான். அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.

ஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.

சரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. தெரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.

எனவே ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள். வெற்றி தேவதை சந்தர்ப்பம் என்ற மாலையுடன் வருவாள். நிச்சயமாகத் தங்கள் கரம் பிடிப்பாள்.

- என்.கணேசன்

நன்றி : விகடன்

Wednesday, March 11, 2009

பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!



பிரதானப்படுத்துவதையே பெறுகிறீர்கள்!

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.

பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.

எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.

ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.

எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.

-என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, March 9, 2009

உள்ளே ஒரு எதிரி


உங்களுக்குள்ளே ஒரு எதிரி இருக்கிறான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளையும் அந்த எதிரி தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அது உண்மையே. அது மட்டுமல்ல, பெரும்பாலான கருத்துக்களை அந்த எதிரி தான் உங்கள் மேல் திணித்துக் கொண்டு இருக்கிறான். உங்கள் வாழ்க்கையின் லகானை அவன் தான் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறான். உண்மையில் அவன் உள்ளே இருக்கிறான் என்ற உணர்வே உங்களிடம் இல்லை. (இல்லாமல் அவன் பார்த்துக் கொள்கிறான்). அவனைக் கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கில்லை. ஆனால் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனுக்கு இருக்கிறது.

நான் சொல்வது சரிதானா இல்லை சற்று மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடும். யாராவது அப்படி ஒரு எதிரியைத் தனக்குள்ளே விட்டு வைத்திருப்பார்களா என்ற நியாயமான கேள்வியும் எழக்கூடும். சற்று ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையை நம்மால் உணர முடியும்.

ஒரு எதிரியை உங்களால் எப்படி அடையாளம் காண முடிகிறது? உங்கள் நலனை சிறிதும் விரும்பாது, உங்கள் நன்மை¨க்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடும் நபரை, உங்கள் மனநிம்மதியைக் கெடுக்கும் நபரைத் தான் நீங்கள் எதிரியாகக் காண்பீர்கள். இல்லையா?

சரி வாருங்கள். உங்கள் எதிரியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

நீங்கள் உங்கள் உடல்நலனில் இனி அக்கறை காட்ட வேண்டும் என்று சீரியஸாக முடிவெடுக்கிறீர்கள். நாளை முதல் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும் என்றோ அதிகாலையில் எழுந்து அரை மணி நேரம் வாக்கிங் போக வேண்டும் என்றோ உறுதி எடுத்துக் கொள்கிறீர்கள். மறுநாள் காலை எழுந்து அதைச் செய்தும் விடுகிறீர்கள். அன்றெல்லாம் உற்சாகமாக இருக்கிறீர்கள். ஒரு நல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்துவதை விட உற்சாகமான விஷயம் வேறு இருக்கிறதா என்ன?

இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ உங்கள் எதிரி அதை சகித்துக் கொள்ள மாட்டான். காலை எழும் போது மெல்ல சொல்வான். "இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". ஒருநாளில் என்ன கெட்டுப் போகிறது என்று நீங்களும் விழித்தவர்கள் மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். அது அடுத்த நாளும் தொடரும். சில நாள்களில் அந்த நல்ல பழக்கம் முழுவதுமாகக் கை விடப்படும். நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்கள் எதிரி ஜெயித்து விட்டான். ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட உங்கள் எதிரி அனுமதிக்க மாட்டான்.

சில பதார்த்தங்கள் சாப்பிடுவது உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆரோக்கியம் முக்கியம் என்று நீங்கள் உணர்கிறீர்கள். அதையெல்லாம் இனி சாப்பிடக் கூடாது என்று முடிவெடுக்கிறீர்கள். ஆனால் அதெல்லாம் ஓரிரு நாளைக்குத் தான். அவன் சொல்ல ஆரம்பிப்பான். "எல்லாமே இந்த அரைஜாண் வயிற்றுக்குத் தானே. கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. கொஞ்சம் லிமிட்டா இருந்துகிட்டா சரி". சரி என்று கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பிப்பீர்கள். கொஞ்சம் என்று ஆரம்பித்த எதிலும் மனிதன் கட்டுப்பாட்டோடு இருப்பது சுலபமல்ல. நீங்கள் பழையது போல் ஆகி விடுவீர்கள். உங்கள் எதிரி ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிடவும் உங்களை அனுமதிக்க மாட்டான்.

உங்களை நம்ப வைப்பது எப்படி என்று உங்கள் எதிரிக்குத் தெரியும். நீங்கள் மறுக்க முடியாத வாதங்களைச் சொல்வான். "எதிர்த்த வீட்டுத் தாத்தாவுக்கு ஹை பீபி. ஹை ஷ¤கர். ஆனா அவர் எதையாவது சாப்பிடாம விடறாரா பாரேன். எல்லாம் சாப்பிடுவார். கடைசியில் மாத்திரையும் போட்டுக்குவார். அவருக்கு இப்ப வயசு 75. நல்லா நடமாடிட்டு தானே இருக்கார்". உங்களுக்கு எதிர்வீட்டுத் தாத்தா ஆதர்ச புருஷர் ஆகி விடுவார்.

மேலே சொன்னது இரண்டும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சொன்ன சின்ன உதாரணங்கள். இப்படி எத்தனையோ அவன் லீலைகள். ஒவ்வொருவரிடமும் எதிரி ஒவ்வொரு விதமாக செயல்படுவான்.

உங்களுக்கு வரும் வருமானம் தாராளமாகப் போதும். அதை வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அவன் சொல்வான். "என்ன பிச்சைக்காசு. உன்னை விடக் கம்மியா மார்க் வாங்கின ரவி இப்ப என்ன சம்பளம் வாங்கறான் தெரியுமா? போன மாசம் கூட யூரோப் டூர் போயிட்டு வந்திருக்கான். உன் சம்பாத்தியத்தில் போக முடியுமா? உன் ·ப்ரண்ட் வர்கீஸ் கம்பெனில அவனுக்கு ·ப்ரீயா கார் கொடுத்து பெட்ரோல் அலவன்ஸ¤ம் தர்றாங்க. நீ இன்னும் ஸ்கூட்டர்லயே இருக்கிறாய்.". உங்கள் நிம்மதி போயிற்று.

குடும்பத்திலோ ஆபிசிலோ நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதை உணர்ந்து விடுகிறீர்கள். உங்கள் எதிரி சம்பந்தப்பட்டவர்களிடம் உங்களை மன்னிப்பு கேட்க விடமாட்டான். அது தப்பே இல்லை என்று சாதிப்பான். முடியாத போது "எவன் தப்பு செய்யல? அவன் கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும். அவன் உன் தலைக்கு மேல ஏறி உட்காரவா? அவன் என்ன தப்பே செய்யாதவனா?" சிறு மன்னிப்பால் முடிந்து விடக்கூடிய மனக்கசப்புகள் பெரிதாகி பகைகள் வளர்த்தப்படும். உறவுகளும் நட்புகளும் முறிந்து போகும்.

அடுத்தவர்களுடன் ஒப்பிடச் செய்வது உங்கள் எதிரி. உங்களிடம் என்னவெல்லாம் இல்லையென்பதை மறக்க விடாதிருப்பது உங்கள் எதிரி. சோம்பலை வளர்ப்பது உங்கள் எதிரி. எத்தனை வந்தாலும் போதாது என பேராசைப்பட வைப்பது உங்கள் எதிரி. கட்டுப்பாடில்லாமல் அலைய விடுவது உங்கள் எதிரி. அகங்காரம் கொள்ள வைப்பது உங்கள் எதிரி. அடுத்தவர்களின் குறைகளைப் பட்டியல் போட்டு பெரிதாக்கிக் காட்டுவது உங்கள் எதிரி. பொறுமையை கையாலாகாத்தனம் என்று நம்ப வைப்பது உங்கள் எதிரி. மன உறுதியைக் குலைத்து சஞ்சலப்படுத்துவது உங்கள் எதிரி.....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த எதிரியை எதிரியாகவே உங்களால் எண்ண முடியாததால் அவனுக்கு உங்களிடம் எதிர்ப்பே இருப்பதில்லை என்பது அவனுடைய மிகப்பெரிய பலம். அவனுடைய குரலை உங்கள் குரலாகவே நீங்கள் நினைக்க ஆரம்பித்து விடுவதால் அவன் இருப்பதும் செய்வதும் உங்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. முதலில் அவனைப் பிரித்து அடையாளம் காணுங்கள். அதுவே அந்த எதிரியை அழிக்க நீங்கள் எடுக்கக்கூடிய முதல் நடவடிக்கை.

ஆறறிவையும் பயன்படுத்தி, நியாய அநியாயத்தை உணர்ந்து, நல்லது கெட்டது இதுவெனத் தெளிந்து நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்யும் போது தான் அந்த எதிரியை அடையாளம் காண முடியும். (இதையே நம் முன்னோர் ஆத்ம விசாரம் என்று சொன்னார்கள்.)

அடுத்த நடவடிக்கை அவன் குரல் உங்கள் குரலல்ல என்று உணர்ந்து அலட்சியப்படுத்துவதே. மேலே சொன்ன உதாரணங்களையே எடுத்துக் கொள்வோம்.

"இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". என்று சொல்லச் சொல்ல அதை ஒரு கணமும் பொருட்படுத்தாமல், "இது என் ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்று எழுந்து உடற்பயிற்சி செய்வதையோ, வாக்கிங் போவதையோ நடைமுறைப்படுத்துங்கள். அந்தக் குரல் காணாமல் போகும்.

அந்த எதிரி வர்கீஸையோ, ரவியையோ உதாரணம் காட்டுகையில் "சும்மா இரு. உண்மையான சந்தோஷத்துக்கு காரோ, யூரோப் டூரோ வேண்டும் என்று யார் சொன்னது?" என்று உண்மையைச் சொல்லி எதிரியை வாயடைக்க வையுங்கள்.

மன்னிப்பு கேட்க வேண்டாம் என்பதற்கு எதிரி காரணங்கள் கூறும் போது, "தப்பு என்று உணர்ந்த பின் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவானேன்" என்று உறுதியாக எண்ணி அப்போதே மன்னிப்பு கேட்டு உறவுகளையும், நட்பையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் எதிரியின் மிகப்பெரிய சித்தாந்தம் இது தான். "விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போது அனுபவி. பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது செய்து சரி செய்து விடலாம்". அதன்படி நடந்தால் பிறகு பார்க்கவும், சரி செய்யவும் எந்த நல்லதும் மிஞ்சாது என்பதே உண்மை. அப்போதெல்லாம் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். "எண்ணித் துணிக கருமம். துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு". அந்த எதிரியின் சித்தாந்தத் தூண்டிலுக்கு இரையாகாதீர்கள்.

இதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் விழிப்புணர்வும், உறுதியும் இருந்தால் இது முடியாததும் அல்ல. எதிரியின் குரல் மெல்ல ஒலிக்கையில் அதை உங்கள் குரலென்று குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் நலம் எது என்று தெளிவாக உணருங்கள். அதைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். உங்களை உயர்த்த உதவும் எதையும் செய்யாமலும் இருக்காதீர்கள். உங்கள் எதிரிக்கு அந்த இரண்டுமே உயிர்க்கொல்லிகள். அவன் உங்களுக்குள் வசிக்க மாட்டான்.

என்.கணேசன்

Friday, March 6, 2009

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்


வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கிறோம். அந்த உயரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மிக அழகான மலர்ச்செடிகளைப் பார்க்கிறோம். அதன் அழகு நம்மை மெய் மறக்க வைக்கிறது. அதையெல்லாம் புகைப்படம் எடுத்து அழகு பார்க்கிறோம். கவிதைகள் எழுதி ஆராதிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள், செடிகொடிகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ள வேர்கள் நம்மால் காணப்படுவதில்லை. நம்மால் அதிகம் பேசப்படுவதும் இல்லை. ஆனாலும் அந்த வேர்கள் இல்லாமல் மரங்கள் இல்லை, மலர்கள் இல்லை, கனிகள் இல்லை, காய்கள் இல்லை. ஏன், சொல்லத்தக்க எதுவுமே இல்லை.

மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சிவாஜியின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்தது அவர் அன்னை ஜீஜாபாய் தான் என்பது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். மகாத்மா காந்தியின் ஒப்பற்ற நற்குணங்களுக்கு அஸ்திவாரம் போட்டது அவருடைய தாய் புத்லிபாய் என்பதில் சந்தேகமில்லை. பழைய சரித்திரங்களை உதாரணம் காட்டுவானேன். இன்று இசையில் இரண்டு ஆஸ்கர் விருது வாங்கி சரித்திரம் படைத்த ஏ.ஆர்.ரஹ்மானே கூட அந்த விழா மேடையில் இறைவனுக்கும் தனது தாயார் கரீமா பேகத்திற்கும் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். தரித்திரத்திலிருந்து சரித்திரத்துக்கு வந்த அந்த சாதனை நாயகன் தன் நெடும்பயணத்தில் தன் தாயின் பங்கை உணர்ந்தே அப்படிச் சொன்னதாகத் தோன்றுகிறது.

அடிமட்ட மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் குடும்பத்தலைவிகளின் பங்கு அளவிட முடியாதது. கணவர் மட்டுமே சம்பாதிக்கிறவர் என்றால் அந்த வருமானத்தில் பார்த்துப் பார்த்து குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. தானும் வேலைக்குப் போகிறவர் என்றால் வீடு ஆபிஸ் இரண்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைகளை வளர்த்து, கல்வியைக் கொடுத்து பெரிதாக்க அவர்கள் படும் கஷ்டங்களும், தியாகங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் குடும்பங்களில் இருந்து உயர்நிலைக்கு வருபவர்களின் வேர்கள் அந்தப் பெண்மணிகள் என்பதில் சந்தேகமில்லை.

வெற்றிகரமான சந்தோஷமான குடும்பங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் பார்த்திருப்பீர்களேயானால் அந்த வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் ஆணிவேராக இருப்பது அந்த குடும்பத்தலைவி தான் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு குடும்பத்தில் குழந்தைகளிடம் நற்பண்புகள் பூத்துக் குலுங்குகின்றனவா? அதன் வேர் அவர்களின் தாயாகத் தான் இருக்க முடியும். பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் குடும்பத்தலைவன் ஏற்படுத்தித் தர முடியும். ஆனால் குணத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது அந்தக் குடும்பத் தலைவியைப் பொறுத்தே இருக்கிறது.

இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த குடும்பத்தலைவிகள் பெரும்பாலானோரிடம் இன்றைய காலகட்டத்தில் ஒரு அலட்சியத்தை அல்லது குறைபாட்டைக் காணமுடிகிறது. குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் அவர்கள், அதற்காக எத்தனையோ தியாகங்கள் செய்யும் அவர்கள் குழந்தைகளின் நற்குணங்களுக்கு முக்கியத்துவம் தரத் தவறிவிடுகிறார்கள். மகனோ, மகளோ பரீட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கினால் சீறுகிற அவர்கள், தங்களின் பிள்ளைகளின் ஒழுக்கக் குறைபாட்டையும், தவறான குணாதிசயங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். கண்டிக்கத் தவறிவிடுகிறார்கள். பிள்ளைகளின் மதிப்பெண்கள் அளவுக்கு, பண்புகள் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது இல்லை. உணர்வதும் இல்லை.

மகனோ மகளோ பெரிய இஞ்சீனியராக வேண்டும், டாக்டராக வேண்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும், பெரும் சம்பாதனை செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பவர்கள், எல்லாவற்றிற்கும் முன்னால், அடிப்படையாக நல்ல மனிதனாக வேண்டும் என்று வலியுறுத்தத் தவறிவிடுகிறார்கள். அதன் விளைவாய் தான் அவர்கள் நினைத்தபடியெல்லாம் பதவி பெறும் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு
அனுப்புவதில் எந்த உறுத்தலும் இல்லாதிருக்கிறார்கள். நல்ல மனிதர்களாக இருக்கத் தவறிவிடுகிறார்கள். சமுதாயத்தின் நோய்க் கிருமிகளாக மாறி விடுகிறார்கள். அவர்கள் பெற்றோருக்கும் உபயோகமாக இருப்பதில்லை. நாட்டுக்கும் உபயோகமாக இருப்பதில்லை.

தாய்மார்களே, குழந்தைப் பருவம் தான் விதைக்கும் பருவம். அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மனதில் நீங்கள் எதையும் விதைக்க முடியும். அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் நீங்கள் எதையும் எழுத முடியும். அந்த சமயத்தில் அவர்களிடம் நல்லதை விதைக்க முடிந்தால், பிற்காலத்தில் எந்த சேர்க்கையும் அவர்களை தீயதாக மாற்றி விட முடியாது.

பிஞ்சுப்பருவத்தில் நற்குணங்கள் முக்கியம் என்பதை அவர்கள் மனதில் பதியுங்கள். கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம் என்பதைப் பதியுங்கள். முக்கியமாக அதற்கெல்லாம் உதாரணமாக இருந்து காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் நடவடிக்கைகள் அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். சுற்றிலும் உள்ளதில் இருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்கள் குழந்தைகளுக்குப் புரியும்.

ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்வில் தன்னைச் சுற்றிலும் அன்பும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போதெல்லாம் அன்பைத் தேர்ந்தெடுத்ததால் அந்த நிலைக்கு வந்ததாய் சொன்னார். அப்படித் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை, தாய்மார்களே, உங்கள் குழந்தைகளிடம் ஏற்ப்படுத்துங்கள். முக்கியம் என்று சிறுவயது முதல் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்களை உங்கள் குழந்தைகள் என்றும் அலட்சியம் செய்வதில்லை.

மகிழ்ச்சியாகவும், நற்குணங்களுடனும் வளரும் குழந்தைகள் தீவிரவாதிகள் ஆவதில்லை. அடுத்தவர்களுக்கு உபத்திரவம் செய்வதில்லை. தங்கள் திறமைகளையும், அறிவையும் கண்டிப்பாக சமூக நன்மைக்காகவே பயன்படுத்துவார்கள். எனவே குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலைகளை ஏற்படுத்துங்கள். நல்லதை உங்கள் குழந்தைகள் செய்யும் போதெல்லாம் பாராட்டி ஊக்குவியுங்கள். தைரியப்படுத்துங்கள். அவர்களது பள்ளி மதிப்பெண்களை மட்டுமே பார்த்து வாழ்க்கையில் மதிப்பெண்களை இழந்து போக விட்டுவிடாதீர்கள்.

பெண்களே நீங்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து விட்டீர்கள். ஒரு கால கட்டத்தில் சமையலறையில் முடங்கிக் கிடந்த நிலை இன்று இல்லை. இன்று உங்கள் எல்லைகளை உலகளவு விரித்து விட்டீர்கள். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் வகித்த, வகிக்கிற, வகிக்கப்போகிற எல்லாப் பதவிகளிலும் மிக முக்கியமான பதவி தாய்மை. பெற்றால் தான் என்று இல்லை. ஒரு குழந்தையை வளர்த்தாலும் நீங்கள் தாயே. அந்தத் தாய்மைப் பொறுப்பில் கவனமாக இருங்கள். நீங்கள் வேர்கள், நீங்கள் அனுப்புவதைத் தான் உங்கள் கிளைகளும் கொடிகளும் பெறுகின்றன. எதைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறீர்கள் என்பதில் மிகக் கவனமாக இருங்கள். உலகத்தின் எல்லா நன்மைகளும் உங்களை நம்பியே இருக்கின்றன.

(குடும்பங்களின் ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவியருக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்)

-என்.கணேசன்

நன்றி : விகடன்
சக்தி 2009 சிறப்பு மலர்
http://www.vikatan.com/vc/2009/wmalar/ganesanarticle050309.asp

Tuesday, March 3, 2009

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.

ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.

வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.

இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

-என்.கணேசன்

நன்றி: யூத்·புல் விகடன்