சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 28, 2009

அலட்சியத்தின் விலை அதிகம்!



லட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை.

அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.

அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.

ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.

முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.

எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.

எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.

'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

Friday, January 23, 2009

தோற்றம் எவ்வளவு முக்கியம்?


எட்டு கோணல்களாக உடல் திருகி இருந்ததால் அந்த ரிஷியை அஷ்டவக்கிரர் என்று அழைத்தார்கள். கோணிய உடல் தந்த வலியையும், மற்றவர்கள் செய்த கேலியையும் பொருட்படுத்தாமல் அஷ்டவக்கிரர் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து ஞானியாகத் திகழ்ந்தார்.

ஒரு முறை ஆன்மீகத்தில் மிகவும் ஆர்வம் இருந்த ஒரு சக்கரவர்த்தி வேதங்கள் பற்றி விவாதிக்க சபை ஒன்றைக் கூட்டியிருந்தார். பல வேத விற்பன்னர்கள் கூடியிருந்த அந்த சபையில் கலந்து கொள்ள அஷ்டவக்கிரரும் வந்தார். அஷ்டகோணலுடன் உடலை வித்தியாசமாக அசைத்துக் கொண்டு அவர் சபையில் நுழைய அங்கிருந்தவர்கள் பலரும் கேலியாகச் சிரித்தனர்.

கேலியையே கேட்டும் பார்த்தும் வளர்ந்திருந்த அஷ்டவக்கிரர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "அரசே நான் இது வேத விற்பன்னர்கள் கூடி இருக்கும் சபை என்று நம்பி வந்தேன். ஆனால் இது செருப்பு தைப்பவர்கள் கூடியிருக்கும் இடம் என்று அறியவில்லை. குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்" என்று அமைதியாகச் சொல்லி சபையை விட்டு வெளியேறத் தயாரானார்.

தங்களை அவமதித்ததற்கு பண்டிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சக்கரவர்த்தி அவர் கூறியதற்கு விளக்கம் கேட்டார்.

அஷ்டவக்கிரர் விளக்கம் சொன்னார். "அரசே செருப்பு தைப்பவர்கள் தான் ஒரு விலங்கினைப் பார்த்ததும் அது கோணல் மாணலாக வளர்ந்திருந்தால் இதன் தோல் தங்கள் வேலைக்கு ஆகாதே என்று அதைப் புறக்கணிப்பார்கள். வேத விற்பன்னர்கள் தோற்றத்தைக் கண்டு எடைபோடும் பாமரத்தனத்தை கடந்து, உள்ளே உள்ள அறிவின் ஆழத்தை அறிய முற்படுவார்கள். இங்கே இவர்கள் நடந்து கொண்டதைக் கண்டு தான் அப்படி முடிவு செய்தேன்"

அவர் சொற்களில் இருந்த உண்மை சுட சிரித்த வேத பண்டிதர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

தோற்றம் எப்படி இருக்கிறது என்பது அவரவர் கையில் இல்லை. அது இயற்கை தந்தது. தானாகத் தேர்ந்தெடுக்காத ஒன்றிற்காக ஒருவரைக் கேலி செய்வது அறிவீனம்.

தோற்றம் என்பது ஒரு பொருளைச் சுற்றிக் கட்டி இருக்கும் காகிதம் போன்றது. பொருளின் மதிப்பும், பயனும் அந்த சுற்றியிருக்கும் காகிதத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அறிவு உள்ளவர்கள் அந்தப் பொருளை வெளிப்புற காகிதத்தை வைத்து எடை போட மாட்டார்கள்.

உங்கள் உடையைத் தைக்க ஒரு தையல்காரரைத் தேர்ந்தெடுக்கும் போது நன்றாகத் தைப்பவரா என்று மட்டும் தானே பார்ப்பீர்கள். அவர் பார்க்க எப்படி இருக்கிறார் என்பதை வைத்தா தையல்காரரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுடைய டாக்டர், ஆசிரியர் ஆகியோரை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? அவர்கள் தோற்றத்தை வைத்தா, இல்லை அந்தந்த துறையில் அவர்களுக்கிருக்கும் திறமையை வைத்தா?

எனவே தோற்றத்தைக் கண்டு யாரையும் எடை போடாதீர்கள். உங்களுடைய தோற்றத்திற்கும் மிக அதிக முக்கியத்துவம் தந்து விடாதீர்கள். இயற்கை அளித்த தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்வதிலும், மெருகேற்றிக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அந்தத் தோற்றம் தான் எல்லாம் என்று எண்ண முற்படும் போது அஷ்டவக்கிரர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். செருப்பு தைப்பவர் பார்வையாக உங்கள் பார்வை இருந்து விட வேண்டாம்.

- என்.கணேசன்

Monday, January 19, 2009

விதியா? மதியா?



ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.


- என்.கணேசன்

Monday, January 12, 2009

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?


முல்லா காய்கறி வாங்க சந்தைக்குப் போனார். புடலங்காய் வாங்கியவர் புடலங்காய் ஏன் வளைந்திருக்கிறது என்று காய்கறிக்காரரைக் கேட்டார். காய்கறிக்காரரும் "முதலிலேயே கல்லைக் கட்டியிருந்தால் அது நேராக வளர்ந்திருக்கும். அப்படிச் செய்யாமல் விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது" என்றார்.

இப்படிப் பொது அறிவை வளர்த்துக் கொண்ட முல்லா தன் வீட்டிற்குச் சென்றவுடன் வீட்டில் இருந்த குட்டி நாயின் வால் வளைந்திருப்பதைக் கவனித்தார். உடனே அவர் மூளையில் மின்னல் வெட்டியது. சமீபத்தில் பெற்ற ஞானத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த முல்லா உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டார். நாய் பாடு திண்டாட்டமாகி விட்டது. அது பரிதாபமாகக் கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்துக் கொள்ள முடியாமல் வந்து பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாருக்கு முல்லாவை நாயின் வாலில் இருந்து கல்லைக் கழற்ற வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.

இந்த முல்லாவின் செய்கை பைத்தியக்காரத்தனமானதாகவும் கேலிக்குரியதாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை நம் வாழ்க்கையில் செய்து கொண்டே செல்கிறோம்.

நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மாற்ற முடியாத மனிதர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள். சரிசெய்து தான் தீருவேன் என்று மல்லுக்கட்டி நின்றால் இந்த விஷயத்தில் நாம் வெற்றி காணப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இயற்கையை மாற்ற முடியாது.

ஏன் மாற்ற முடியாது? என்று கேட்டு மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பாடுபடும் பலரைப் பார்த்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் தேவையில்லாத ஈகோவைத் திருப்திப்படுத்துவதை விட வேறொரு பலனும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நாய் வாலில் கல்லைக் கட்டிய முல்லாவைப் போல் இவர்களும் அடுத்தவர் மீது திணிக்கும் அந்தக் கட்டாயம் அடுத்தவருக்கும் பிராண சங்கடம்.

ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப் போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.

எனவே இப்படி நாய் வாலை நிமிர்த்துவது போன்ற ஏதாவது ஒரு காரியத்தை நாம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வது உத்தமம். அப்படி இருக்குமானால் அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது. நாம் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் நிறையவே இருக்கின்றன. நமது கவனத்தை அந்தப் பக்கம் திருப்புவோமாக.

-என்.கணேசன்

Friday, January 9, 2009

டென்ஷனைக் குறைக்க நடை தியானம்


இன்றைய வாழ்க்கையில் டென்ஷன் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. யாருக்குத் தான் டென்ஷன் இல்லை என்கிறார்கள். அதிகாலையில் ஆரம்பித்து அன்று இரவு படுக்கையில் சாயும் வரை டென்ஷன் தான். தூக்கத்தில் கூட ஆழமும் அமைதியும் இல்லை.

மறுபடி காலை ஆரம்பிக்கிற நாளில் முந்தைய நாளின் டென்ஷனும் சேர்ந்து கொள்கிறது. இப்படி சேர்ந்து கொண்டே போகும் டென்ஷன் கோபமாய், கத்தலாய், வியாதியாய், வெறுப்பாய், பல ரூபங்கள் எடுத்து நமக்கு உள்ள சிக்கல்களை மேலும் அதிகப்படுத்தி விடுகிறது.

ஒருசிலர் "எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்றுகிறது" என்று புலம்புவது உண்டு. ஓடிப் போனாலும் அங்கும் நமக்கு முன்னால் டென்ஷன் நின்று கொண்டு காத்திருக்கும். அப்படியானால் என்ன தான் வழி என்றால் அதற்கு மாமருந்து தியானம் தான்.

தியானத்தில் பல நூற்றுக் கணக்கான முறைகள் இருக்கின்றன. எல்லாமே உயர்ந்தவை தான் என்றாலும் பெரும்பாலான தியானங்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்வதில் இருந்து ஆரம்பிக்கின்றன. அப்படிப்பட்ட தியானங்கள் பலருக்கு கைகூடுவதில்லை. சிலரால் சில நிமிடங்கள் சேர்ந்தாற் போல அமர்ந்திருக்க முடிவதில்லை. முடிந்தவர்களிலும் சிலர் அப்படியே உறங்கி விடுவதும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் இந்த நடை தியானம் மிகவும் பயன்படும். இதை முதலில் உருவாக்கியவர் திச் நாட் ஹான் என்கிற வியட்நாமிய புத்தத் துறவி. பின்னர் அந்த நடை தியானம் சில கூட்டல் கழித்தல்களுடன் பலரால் பல அவதாரங்கள் எடுத்தது. அதில் சிலவற்றின் அம்சங்களைக் கலந்து நடை தியானம் ஒன்றைப் பயன்படுத்திப் பயன் பெற்றவன் நான். எனவே இதைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய முடிந்தால் கண்டிப்பாக நீங்கள் பெரும் மாற்றத்தை உங்களிடத்தில் காண்பீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

இது மிகவும் எளிமையானது. நடை தியானம் செய்யும் முறை இதோ -

1) முதலில் அதிக நெரிசலோ, கூட்டமோ இல்லாத அமைதியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு வாகன, மக்கள் போக்குவரத்து குறைவாக இருக்கிறதோ அந்தப் பாதை சிறந்தது.

2) காலை அல்லது மாலை அல்லது இரவு நேரங்கள் உத்தமம். ஆனால் தேர்ந்தெடுத்த பின் தொடர்ந்து அதே வேளையில் நடை தியானத்தை தினமும் செய்வது நல்லது.

3) நடக்கையில் கூட ஒருவர் இருப்பதைத் தியானம் கை கூடும் வரை தவிர்ப்பது நல்லது. செல் போன் இருந்தால் அதை ஆ·ப் செய்து விடுங்கள்.

4) நடக்க ஆரம்பிக்கும் முன் சிறிது அமைதியாக நில்லுங்கள். முதலில் உங்கள் உடலுடன் தொடர்பு கொள்ளுங்கள். இயந்திரத்தனமாக வாழ ஆரம்பித்து விட்ட நாம் பெரும்பாலான நேரங்களில் நம் உடலின் சின்னச் சின்ன உணர்வுகளைக் உணர்வதில்லை. மூச்சை மூக்கு வழியாக ஆழமாக உள்ளிழுத்து மெள்ள வெளிவிடுங்கள். மூச்சுக் காற்று உங்கள் உடலில் பயணம் செய்வதை உணருங்கள். காலடியில் செருப்பின் ஸ்பரிசம், வெளியே வீசும் காற்று/வெயில்/சீதோஷ்ணம் உங்கள் உடலைத் தொடும் விதம் போன்றவற்றை கண்களை மூடிக் கொண்டு அனுபவியுங்கள்.

5) மூன்று முறை முன்பு சொன்னது போல் மூச்சு விட்டு விட்டு நடக்க ஆரம்பியுங்கள். நிதானமாக நடக்க ஆரம்பித்து பின் இயல்பாக சீராக ஒரே வேகத்தில் நடந்து செல்லுங்கள். மூச்சையும் இயல்பாக விட்டால் போதும். ஆனால் உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் விடும் மூச்சில் இருக்கட்டும். நடக்க நடக்க உங்கள் மூச்சு தானாக ஆழப்படும்.

6) நடக்கையில் உங்கள் மூச்சில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். மனம் ஆயிரத்தெட்டு விஷயங்களை அவசரமாக உங்களுக்குச் சொல்ல ஆசைப்படும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனம் மூச்சில் இருந்து வேறு விஷயங்களுக்கு சஞ்சரிக்கும் போது அமைதியாக அதை மறுபடி மூச்சுக்கே கொண்டு வாருங்கள். திரும்பத் திரும்ப அது அலையும். சலிக்காமல் அதை உங்கள் மூச்சுக்கே கொண்டு வாருங்கள். சிறிது சிறிதாக மனம் தாவும் வேகம் குறைந்து போகும். மனம் அமைதியடைய ஆரம்பிக்கும்.

7) நீங்கள் சீராக மூச்சு விட்டபடி தாளலயத்தோடு அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திகளை மூச்சுக் காற்றோடு அமைதியாக உங்களுக்குள் இழுத்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளையும், டென்ஷனையும், பலவீனங்களையும் வெளிமூச்சு வழியாக வெளியே விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

8) சுமார் பதினைந்து நிமிடங்களாவது இப்படிக் கற்பனையோடு மூச்சு விட்டு நடந்தீர்களானால் சிறிது சிறிதாக உங்களுக்குள் அமைதியும் சக்தியும் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்.

9) நீங்கள் உங்கள் நடை தியானத்தின் முடிவுக்கு வரும் போது மறுபடி உங்கள் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்துங்கள்.

அவ்வளவு தான். இதைத் தினந்தோறும் செய்ய அரை மணி நேரத்திற்கு மேல் நமக்குத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து செய்தால் மன அமைதி, உடல் நலம் இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.

-என்.கணேசன்

Monday, January 5, 2009

மணல் கோட்டையும், மனிதக் கோட்டையும்



ஒரு சிறுவன் கடற்கரை மணலில் ஒரு மணல் கோட்டையைக் கட்டிக் கொண்டு இருந்தான். அவன் கொண்டு வந்திருந்த வாளி மற்றும் சில உபகரணங்கள் கொண்டு ஆலோசித்து ஆலோசித்து அவன் அந்தக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்து நிறைய நேரம் ஆகியிருந்தது. கோட்டை, வாயில், மதில் சுவர்கள் என ஒவ்வொன்றையும் பேரழகுடன் உருவாக்கிக் கொண்டு இருந்தான். அந்தக் கோட்டை கட்டும் ஆர்வத்தில் அவன் தன் சுற்றுப்புறத்தையே மறந்து விட்டிருந்தான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சிரிப்புச் சத்தம், கடலை, பட்டாணி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களின் விற்பனை சத்தம், அங்கு வந்து போய்க் கொண்டிருந்தவர்களின் பேச்சுச் சத்தம் எதுவுமே அவன் கவனத்தைத் திருப்பவில்லை. அந்தக் கோட்டை அழகுருவம் பெறப் பெற அவன் மனதில் எல்லையில்லாத சந்தோஷம். 'இந்த அழகுக் கோட்டை நான் உருவாக்கியது.....'

நகரத்தின் இன்னொரு பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் ஒரு மனிதன் தொலைபேசியில் பேசிக் கொண்டும், கம்ப்யூட்டரின் கீ போர்டை அழுத்திக் கொண்டும் இன்னொரு விதமான கோட்டையை அமைத்துக் கொண்டிருக்கிறான். அது அவனுடைய வியாபாரக் கோட்டை. அவன் வாய் வார்த்தைகளில் வியாபார அஸ்திவாரங்கள் போடப்படுகின்றன. அவன் விரல்நுனிகளில் பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. அவனும் தான் உருவாக்கிக் கொண்டிருந்த கோட்டையில் உலகையே மறந்து விட்டுருந்தான். ஒன்றுமில்லாமல் ஆரம்பித்து அவனுடைய தீவிர முயற்சிகளால் நன்றாக வளர்ந்திருந்த அதன் வளர்ச்சியைப் பார்க்கையில் அவனுக்கும் பேரானந்தம். 'இது நான் உருவாக்கியது...'

இந்த இரண்டு கோட்டைகளும் அவரவர் கடும் உழைப்பால் உருவானவை. அவர்கள் திட்டமிட்டு உருவாக்கியவை. அவர்களில்லா விட்டால் அந்தக் கோட்டைகள் இல்லை. அவர்களுடைய முழுக் கவனத்தையும் பெற்று அவர்கள் எண்ணப்படி உருவானவை. கடலலையும், விதியலையும் எந்த நேரத்திலும் வந்து அழித்து விடக்கூடிய கோட்டைகள் அவை. இதோடு இருவருக்குமுள்ள ஒற்றுமைகள் முடிந்து விடுகின்றன. இனி வரும் வேற்றுமைகள் தான் நம்மை சிந்திக்கத் தூண்டுபவை.

மாலை நேரம் நெருங்க நெருங்க கடலலைகள் கரையில் அதிக தூரம் வர ஆரம்பிக்கின்றன. அவனது கோட்டையை அலைகள் நெருங்க நெருங்க சிறுவன் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறான். தான் கட்டிய கோட்டை அலைகளால் அழியப்போகிறதே என்ற வருத்தம் அவனிடம் இல்லை. பயம் இல்லை. ஏனென்றால் அவன் ஆரம்பத்திலிருந்தே இதை அறிவான். சிறிது சிறிதாக அவனது கோட்டையை கடலலைகள் கபளீகரம் செய்ய சில நிமிடங்களில் அவன் கட்டிய கோட்டை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகிறது. வாளியில் தன் மற்ற உபகரணங்களைப் போட்டுக் கொண்டு அந்த வாளியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையால் தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பும் அந்தச் சிறுவன் மனதில் துளியும் துக்கம் இல்லை. எல்லாம் விளையாட்டு. அன்றைய பொழுது ஆனந்தமாய் கழிந்ததில் ஒரு நிறைவு.

ஆனால் இன்னொரு கோட்டை கட்டியிருந்த மனிதனின் மனோபாவமோ வேறு விதமாக இருக்கிறது. அவனுடைய கோட்டைகள் விதியலைகளால் தீண்டப்படும் போது அவனுள் பீதி கிளம்புகிறது. இது நான் கஷ்டப்பட்டுக் கட்டிய கோட்டை, இதற்காக நான் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன், தியாகம் செய்திருக்கிறேன் என்றெல்லாம் புலம்புகிறான். விதியலைகளில் இருந்து அந்தக் கோட்டை அழியாமல் காக்க முடிந்த மட்டும் போராடுகிறான். ஒவ்வொரு பகுதியாய் கோட்டை அழியும் போதும் கண்ணீர் வடிக்கிறான். இயற்கை அவன் புலம்பலையும், கண்ணீரையும் பொருட்படுத்தவில்லை. கடைசியில் அந்தக் கோட்டை இருந்த இடம் தெரியாமல் தகர்ந்து போகும் போது அவனிடம் சொல்லொணா துக்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை அவன் அறிய முடியாதவன் அல்ல. ஆனாலும் தன் சொந்த விஷயங்களில் அந்த உண்மையை உணர்ந்து தெளியும் பக்குவம் அவனுக்கு இல்லை. தினமும் மரணங்களைப் பார்த்து வாழ்ந்தும், தான் சாசுவதமானவன் என்பது போல் நடந்து கொள்ளும் சராசரி மனிதர் கூட்டத்தைச் சார்ந்தவன் அவன். தன்னுடைய கோட்டை மட்டும் இந்த இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று பொய்யான நம்பிக்கையில் இருந்து வந்ததால் தான் அவனால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அந்தச் சிறுவனைப் போல் இயற்கையை அறிந்து, புரிந்து, உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆனந்தமயமானதாக இருக்கலாம். அந்த மனிதனைப் போல் பொய்யான மாயையில் வாழ்ந்தால் வாழ்க்கை துக்ககரமானதாகவே முடியும்.

வெறும் கையுடன் வந்தோம். வெறும் கையோடு போகப்போகிறோம். இந்த உண்மையை இடைப்பட்ட வாழ்க்கையில் நினைவு வைத்து வாழ்ந்தால் உண்மையில் இங்கு இழக்க நமக்கு ஒன்றுமில்லை என்பதை தெளிவாக நாம் உணர முடியும். கோட்டைகளைக் கட்டுவதில் தவறில்லை. அதில் ஆனந்தமடைவதும் தவறில்லை. உண்மையில் அந்த செயல்களில் தான் ஜீவத்துவமே இருக்கிறது. ஆனால் எல்லாம் முடிந்து இறுதியில் கோட்டைகளை விதியலைகள் வீழ்த்தும் போதும் இதுவும் இயற்கையே என்று அந்த சிறுவனின் பக்குவத்துடன் வருத்தமில்லாமல் விடைபெற முடிந்தால் அந்த வாழ்க்கையின் நிறைவுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

- என்.கணேசன்

Thursday, January 1, 2009

பொருள் பொதிந்த பிரார்த்தனை


பிரார்த்தனையின் மகத்துவம் அதன் நீளத்திலோ, காலத்திலோ இல்லை. மணிக்கணக்கில் செய்யும் பிரார்த்தனை வெறும் வார்த்தை ஜாலமாக இருந்து விடுவதுண்டு. 'நான் தினமும் அரைமணி நேரம் பிரார்த்தனை செய்வேன்' என்று பிடிவாதமாக பூஜையறையில் உட்கார்ந்து கொண்டு மனதை மட்டும் ஊர்சுற்ற அனுப்பி விடுவதுண்டு. நமக்குத் தேவையென நினைப்பவற்றின் பட்டியலாக நீள்வதுண்டு (அப்புறம் முக்கியமானதை விட்டு விட்டால் என்ன செய்வது?). அப்படியும் எதை எதையோ கேட்டு மிக முக்கியமானதைக் கேட்க மறந்து விடுவதுண்டு.

ஆனால் வாழ்வில் எல்லா சிறப்புகளையும் பெறத் தேவையான ஒரு சிறிய பொருள் பொதிந்த பிரார்த்தனை உண்டு. உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்ட இது "சாந்தி மந்திரம்" என அழைக்கப்படுகிறது. இது மனிதன் மகத்தான, உபயோகமான மாமனிதனாக வாழத் தேவையான அம்சங்களை பரம்பொருளிடம் வேண்டுகிறது.

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(உண்மை அல்லாதவற்றில் இருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக
இருட்டில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக
அழிவில் இருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச் செல்வாயாக
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: )

அஸதோ மா ஸத் கமய

தற்கால மனிதன் உண்மை, பொய் இரண்டையும் பகுத்தறியும் திறன் பெற்றிருந்தாலும் அந்தத் திறமையைப் பயன்படுத்த பெரிதாக முயற்சி எடுத்துக் கொள்வதில்லை என்பதை சமூகத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குப் புரியும். உண்மை எதுவென அறிவதில் அவன் காட்டும் அலட்சியம் தான் எத்தனையோ தீமைகளுக்கு அஸ்திவாரமாக உள்ளது.

அடுத்தவர்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்து உண்மையா இல்லையா என்று பெரும்பாலும் நாம் ஆராயப் போவதில்லை. கேள்விப்பட்டதையும், படித்தவற்றையும் அடுத்தவரிடம் சொல்வதற்கு முன் உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நம் மனதினுள்ளும், நாம் வெளியே தெரிவிப்பதிலும் பொய்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றை நம்பவும் ஆரம்பித்து செயல்படும் போது விளையும் அனர்த்தங்களுக்கு அளவேயில்லை.

மேலும் பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு நடக்கும் எதுவும் நீண்டகால நற்பலனைத் தருவதில்லை. எனவே இந்தப் பிரார்த்தனையின் முதல் வரி மிகவும் பொருள் பொதிந்தது. ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உண்மையில்லாததை அகற்றி உண்மைக்கு முக்கியத்துவம் தர உறுதி பூணுவோம். நம் கவனமும், வாழ்க்கையும் உண்மையை நோக்கி செல்வதாக இருக்கட்டும்.

தமஸோ மா ஜ்யோதிர் கமய

அறியாமை, மூடநம்பிக்கை, வெறுப்பு, பொறாமை, பயம் எல்லாமே வாழ்க்கையில் பேரிருட்டை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தான் இன்றைய உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம், வசதிகள் அதிகரித்திருந்தும் தனிமனித வாழ்க்கையில் பெரும்பாலும் இருள் மண்டியே கிடக்கிறது. ஏதோ ஒரு இருட்டில் அழுந்திப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்த இருட்டில் இருந்து மீண்டு தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை என்ற ஒளிபடைத்த, அறிவார்ந்த வாழ்க்கை வாழ ஒவ்வொரு தினமும் பிரார்த்தனை செய்வோம். மேலே சொன்ன இருள்கள் நம்மை நெருங்கும் போதெல்லாம் அவற்றை விரட்டும் கவசமாக இந்தப் பிரார்த்தனை நம் மனதில் இருக்கட்டும்.

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

நமது சொல்லும் செயலும் அழிக்கும் விஷமாக இருக்கிறதா, இல்லை உயிரூட்டி நிறுத்தும் அமிர்தமாக இருக்கிறதா? தீமையையும், வெறுப்பையும் உண்டாக்குகையில் அவை அழிவை ஏற்படுத்தும் விஷமாகிறது. நன்மையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்படி அவை இருக்கையில் அவை நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்கும் அமிர்தமாகிறது.

இந்த இரண்டையும் செய்யும் சக்தி நம்மிடம் இருக்கிறது. பெரும்பாலானோர் மாறி மாறி நம் மனநிலைக்கேற்ப இரண்டையும் செய்கிறோம். ஆனால் ஆக்குவதில் தான் சிறப்பு இருக்கிறது, அழிப்பதில் இல்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக நம்மை நடத்த அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்போம். அழிவுபூர்வமான பாதையை மூடி வைப்போம்.

ஒவ்வொரு நாளையும் இந்தச் சிறிய பிரார்த்தனையுடன் ஆரம்பிப்போம். காலை, மதியம், மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் இந்தப் பிரார்த்தனை செய்து நம்மை நிலைப்படுத்திக் கொள்வோம். உண்மை, ஒளி, ஆக்கம் ஆகியவற்றை நோக்கியே நம் சிந்தனை சொல், செயல் எல்லாம் இருக்கட்டும். இனிமையான சூழல்களில் மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் அப்படியே வாழ இறைவன் நமக்கு உறுதுணையாக இருப்பானாக!

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:




- என்.கணேசன்