சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 12, 2009

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?


முல்லா காய்கறி வாங்க சந்தைக்குப் போனார். புடலங்காய் வாங்கியவர் புடலங்காய் ஏன் வளைந்திருக்கிறது என்று காய்கறிக்காரரைக் கேட்டார். காய்கறிக்காரரும் "முதலிலேயே கல்லைக் கட்டியிருந்தால் அது நேராக வளர்ந்திருக்கும். அப்படிச் செய்யாமல் விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது" என்றார்.

இப்படிப் பொது அறிவை வளர்த்துக் கொண்ட முல்லா தன் வீட்டிற்குச் சென்றவுடன் வீட்டில் இருந்த குட்டி நாயின் வால் வளைந்திருப்பதைக் கவனித்தார். உடனே அவர் மூளையில் மின்னல் வெட்டியது. சமீபத்தில் பெற்ற ஞானத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த முல்லா உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டார். நாய் பாடு திண்டாட்டமாகி விட்டது. அது பரிதாபமாகக் கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்துக் கொள்ள முடியாமல் வந்து பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாருக்கு முல்லாவை நாயின் வாலில் இருந்து கல்லைக் கழற்ற வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது.

இந்த முல்லாவின் செய்கை பைத்தியக்காரத்தனமானதாகவும் கேலிக்குரியதாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை நம் வாழ்க்கையில் செய்து கொண்டே செல்கிறோம்.

நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மாற்ற முடியாத மனிதர்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள். சரிசெய்து தான் தீருவேன் என்று மல்லுக்கட்டி நின்றால் இந்த விஷயத்தில் நாம் வெற்றி காணப்போவதில்லை. வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இயற்கையை மாற்ற முடியாது.

ஏன் மாற்ற முடியாது? என்று கேட்டு மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பாடுபடும் பலரைப் பார்த்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் தேவையில்லாத ஈகோவைத் திருப்திப்படுத்துவதை விட வேறொரு பலனும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நாய் வாலில் கல்லைக் கட்டிய முல்லாவைப் போல் இவர்களும் அடுத்தவர் மீது திணிக்கும் அந்தக் கட்டாயம் அடுத்தவருக்கும் பிராண சங்கடம்.

ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப் போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.

எனவே இப்படி நாய் வாலை நிமிர்த்துவது போன்ற ஏதாவது ஒரு காரியத்தை நாம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வது உத்தமம். அப்படி இருக்குமானால் அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது. நாம் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள் நிறையவே இருக்கின்றன. நமது கவனத்தை அந்தப் பக்கம் திருப்புவோமாக.

-என்.கணேசன்

7 comments:

 1. உங்களின் பதிவுக்கு ThamilBest இல் வாக்களியுங்கள்

  ReplyDelete
 2. *ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்கப் போகிற பலன் என்ன என்று கணக்கு போட்டுப் பார்ப்பது விவேகம்.*

  TRUE

  ReplyDelete
 3. சொல்றேன்னு தப்பா நினைக்ககூடாது,
  நீங்க கூட அதுக்கு தான் முயற்சி பண்றிங்க!

  ReplyDelete
 4. வால்பையன் உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு..வாழ்த்துக்கள்....தங்கள் மின் அஞ்சல் முகவரியை தயவு செய்து தெரியப் படுத்தவும்...(sabap@hotmail.com).

  ReplyDelete
 6. //ஆகவே நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பதைக் கேட்பதை விட்டு நாய் வாலை நிமிர்த்துவது தேவையா அவசியமா என்று முதலில் சிந்திப்பது தான் புத்திசாலித்தனம்.//

  நல்லாச் சொன்னீங்க.

  //சொல்றேன்னு தப்பா நினைக்ககூடாது,
  நீங்க கூட அதுக்கு தான் முயற்சி பண்றிங்க!//

  ரசித்தேன் :))

  ReplyDelete
 7. //நாய் வாலைப் போல் நம்மால் மாற்ற முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.//
  உண்மைதான்.

  ReplyDelete