என்னைப் போன்ற தனி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று பலரும் பல சமயங்களில் நினைப்பதுண்டு. எதையும் மாற்றி அமைக்கும் சக்தி தனக்கு இல்லை என்பதே பல தனி மனிதர்களின் வாதம். சமீபத்தில் நான் இணையத்தில் படித்த குட்டிக் கதையில் இதற்கு பதில் இருந்ததாக எனக்குப் பட்டது.
ஒரு சிறு பறவை காட்டுப் புறாவிடம் கேட்டது. "ஒரு பனித் துகளின் எடை என்ன?"
யோசித்து விட்டு புறா சொன்னது. "இல்லவே இல்லை என்றே சொல்லக் கூடிய அளவு எடை தான் அதற்கு"
"அப்படியானால் நான் சொல்லும் இந்த சம்பவத்தைக் கேள். நான் ஒரு பனி விழும் இரவில் ஒரு மரத்தருகே ஒதுங்கி இருந்தேன். பனி பலமாக விழாமல் லேசாக விழுந்து கொண்டிருந்ததது. எனக்கு பொழுது போகாததால் நான் அந்த மரத்தின் கிளை ஒன்றில் விழும் பனித்துகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். சரியாக 37,41,952 பனித்துகள்கள் விழும் வரை அந்தக் கிளை அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தது. அடுத்த ஒரு துகள், நீ சொன்னாயே இல்லவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு எடை உள்ள ஒரு துகள், விழுந்தவுடன் அந்த மரக்கிளை பாரம் தாங்காமல் முறிந்து கிழே விழுந்து விட்டது."
பழங்காலத்தில் இருந்து அமைதிக்கும், மாற்றத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்ட புறாவை சிந்திக்க வைத்து விட்டு அந்த சிறிய பறவை பறந்து சென்று விட்டது. நிறைய நேரம் சிந்தித்த புறா தனக்குள் சொல்லிக் கொண்டது. "அதே போல் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படக்கூட ஒரு தனி மனிதனின் முயற்சி மட்டும் தேவையாய் இருக்க வாய்ப்புண்டு."
இந்தக் குட்டிக் கதை சொல்வது போல உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படத் தயாராக இருக்கலாம். ஒரு தனி மனிதனின் முயற்சி அந்த மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் கடைசி உந்துதலாக இருக்கலாம். அதே போல எல்லா மாற்றங்களும் முதலில் மனித மனதிலேயே கருவாக ஆரம்பிக்கின்றன. இப்படி ஆரம்பக் கருவானாலும் சரி கடைசி விளைவானாலும் சரி தனி மனிதர்களால் தான் நிகழ்கின்றன. எத்தனையோ எண்ணற்ற தனிமனிதர்களின் பங்கு எல்லா மாற்றத்திலும் உண்டு. அதில் எந்தத் தனி மனிதனின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஒரு மரக்கிளையை வெட்டி முறிக்க நூறு சம்மட்டி அடிகள் தேவைப்படலாம். கடைசி அடியில் தான் கிளை முறிகிறது என்றாலும் அந்த நூறாவது அடியைப் போல் முதல் 99 அடிகளும் கூட சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.
எனவே இனி எப்போதும் என்னைப் போன்ற தனி மனிதன் என்ன செய்து விட முடியும் என்று எப்போதும் எண்ணி விடாதீர்கள். மாற்றத்தின் ஆரம்பமானாலும், முடிவிலானாலும், இடைப்பட்ட நிலையில் ஆனாலும் தனி மனிதனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
-என்.கணேசன்