சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, October 8, 2008

இருட்டைப் பரப்பாதீர்கள்


திரு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போராட்டம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. முந்தைய நாள் இரவு ஒரு பாலஸ்தீன கிராமமே வெடிகுண்டு தாக்குதலில் இரையாகி இருந்தது. ஆனால் மறு நாள் காலை பத்திரிக்கையைப் பிரித்த அப்துல் கலாம் திகைத்துப் போனார். காரணம் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும் இஸ்ரேலின் விவசாயி ஒருவர் செய்த சாதனையின் விளக்கங்கள் நிறைந்திருந்தன. குறுகிய இடத்தில் அபார விளைச்சல் செய்து சாதனை படைத்த விவசாயி அதை எப்படிச் செய்தார் என்று படங்களுடன் செய்தி முதல் பக்கம் வந்திருக்க மூன்றாவது பக்கத்தில் தான் அந்த கிராமத்தில் வெடிகுண்டு வெடித்து சேதமான செய்தி வெளிவந்திருந்தது.

இந்தியாவுக்குத் திரும்பிய அப்துல் கலாம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் இந்தத் தகவலைத் தெரிவித்து இது போன்ற நல்ல சாதனைக்கு அங்கு பத்திரிக்கைகளில் கிடைத்த முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி ஏன் நாமும் இது போன்ற நல்லவற்றைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார். நம் பத்திரிக்கைகள் எது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஊரறிந்த விஷயம். பத்திரிக்கைகளில் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட செய்திகள், கிளுகிளுப்பான செய்திகள், பரபரப்பான செய்திகள் என பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது போன்ற சாதனை செய்திகள், நம்பிக்கையூட்டும் நல்ல விஷயங்கள் எல்லாம் மக்களை சென்று அடைகிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

பத்திரிக்கைகளை விடுங்கள், தனி மனிதர்களான நாம் என்ன செய்கிறோம்? நாம் அறிந்து பரப்பும் செய்திகள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நாம் எதைக் காண்கிறோம்? காண்பதில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம்? எதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்? இந்தக் கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது.

காணும் நல்லவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் அவை நம்மால் காணப்படுதேயில்லை. கண்டாலும் அதை சீக்கிரத்திலேயே மறக்கவும் செய்கிறோம். நல்லதல்லாதவற்றையே அதிகம் காண்கிறோம். அதைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம். அதைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். இந்த வியாதி நம்மை அறியாமலேயே பலருக்கும் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் ஜன்னலோரம் இருக்கிற பெண்களின் கழுத்திலிருந்து நகைகளை இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுகள் பற்றி பக்கத்தில் இருந்த ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார். காலம் கெட்டு விட்டது, நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஓரிருவர் சொன்னார்கள். அதே சமயம் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சில புத்தகங்களை இடது தோளில் வைத்து, ஒரு கையால் அவை விழாதபடி இறுக்கமாக பிடித்துக் கொண்டு மறு கையால் இரு கால்களையும் நகர்த்திக் கொண்டு ரயிலில் புத்தகம் விற்றுக் கொண்டு வந்தார். சிலர் அவருக்காகவே புத்தகங்கள் வாங்கினோம். அவர் சென்று விட்டார்.

ஆனால் திருடர்கள் பற்றிய பேச்சே அங்கு தொடர்ந்தது. மற்றவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட திருட்டு அனுபவங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. காலிரண்டும் செயல்படாத போதும் பிச்சையெடுக்காமல் தொழில் செய்து பிழைக்கும் அந்த நபர் பற்றி பேச இருப்பதாக நேரில் பார்த்த பின்னும் அவர்கள் எண்ணவில்லை. ஆனால் திருடர்கள் பற்றி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கேள்விப்பட்ட மற்றவர்களின் அனுபவங்களையும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அப்படி பேசியது தவறு என்று சொல்ல வரவில்லை. இது போன்ற அனுபவப் பகிர்வுகள் மற்ற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் நல்லதைப் பார்க்கையில் மட்டும் நாம் ஊமையாகி விடுகிறோமே அது ஏன் என்பது தான் விளங்கவில்லை.

நம்மைச் சுற்றி நல்லது, கெட்டது இரண்டும் நடக்கிறது. அதில் ஒன்றை மட்டுமே காண்பது, பேசுவது என்பது ஒருவித வியாதியே அல்லவா? அதுவும் எத்தனையோ எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நல்லதைச் செய்பவர்கள், நல்லபடியாக இருப்பவர்கள் உண்மையில் பராக்கிரமசாலிகளே. எதிர்நீச்சல் கஷ்டம் தானே?

நல்லது எதுவும் தானாக நடந்து விடுவதில்லை. அதற்கு உயர்ந்த சிந்தனை, மன உறுதி, கட்டுப்பாடு எல்லாம் தேவைப்படுகிறது. பார்த்தீனியம் தானாக வளரும். நட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு ரோஜாச் செடி அப்படி வளராது. அதை வளர்க்க முயற்சி தேவைப்படுகிறது. அதிகமாக உள்ளது என்பதற்காக நம் முழுக் கவனத்தையும் பார்த்தீனியம் மீதே வைத்து, ரோஜாவைக் காண மறுப்போமா?

எனவே வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லதையும் காணவும், கண்டதைப் பாராட்டவும் மறந்து விடாதீர்கள். நீங்கள் காணும் நல்லவர்களைப் பற்றியும், அவர்களது நல்ல செயல்களைப் பற்றியும் கூட நாலு பேருக்குச் சொல்லுங்கள். எதை அதிகம் காண்கிறோமோ, எதை அதிகம் சிந்திக்கிறோமோ, எதை அதிகம் பேசுகிறோமோ அதுவே நம் வாழ்வில் மேலும் அதிகம் பெருகும் என்று ஞானிகள் சொல்கிறார்கள். எனவே எது உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியும் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அதிக கவனம் கொடுக்க ஆரம்பியுங்கள்.

தீயதையே கண்டு தீயதையே பேசி தீயதையே பரப்புவது இருட்டைப் பரப்புவது போன்றது. ஏற்கெனவே பெருகி இருக்கும் இருட்டை அதிகப்படுத்துவது போலத்தான் அது. இப்படிச் செய்து நம்மை சுற்றி நிறையவே இருட்டடிப்பு செய்து விட்டோம். அவநம்பிக்கை, அச்சம் போன்ற வியாதியைப் பரப்பும் ஊடகமாகி விட்டோம். போதும் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

நல்லதைத் தேடிக் கண்டுபிடிப்போம். அடையாளம் காட்டுவோம். பாராட்டி மரியாதை செய்வோம். மற்றவர்கள் அதற்குத் தகுந்தவர்களாக ஊக்குவிப்போம். இதுவே இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்துவது போன்ற உயர்ந்த, தேவையான செயல். இதை நம்மில் பெரும்பாலானோர் செய்ய முடிந்தால், நமக்குப் பின்வரும் தலைமுறை ஒரு ஒளிமயமான, ஆரோக்கியமான உலகில் அடி எடுத்து வைக்கும் என்பது உறுதி.

- என்.கணேசன்

6 comments:

  1. //முந்தைய நாள் இரவு ஒரு பாலஸ்தீன கிராமமே வெடிகுண்டு தாக்குதலில் இரையாகி இருந்தது. ஆனால் மறு நாள் காலை பத்திரிக்கையைப் பிரித்த அப்துல் கலாம் திகைத்துப் போனார். காரணம் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும் இஸ்ரேலின் விவசாயி ஒருவர் செய்த சாதனையின் விளக்கங்கள் நிறைந்திருந்தன. குறுகிய இடத்தில் அபார விளைச்சல் செய்து சாதனை படைத்த விவசாயி அதை எப்படிச் செய்தார் என்று படங்களுடன் செய்தி முதல் பக்கம் வந்திருக்க மூன்றாவது பக்கத்தில் தான் அந்த கிராமத்தில் வெடிகுண்டு வெடித்து சேதமான செய்தி வெளிவந்திருந்தது//
    முக்கிய செய்தியை இருட்டடிப்பு செய்து மூன்றாம் பக்கத்துக்குத் தள்ளி பத்திச் செய்தியாக வெளியிட்டதா சாதனை?
    வேறொரு இடத்தில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டிருந்தால் கூட அது முதல் பக்கத்து தலைப்புச் செய்திகளில் கொட்டை எழுத்துகளில் இடம் பெற்றிருக்கும்.
    இவ்விடயத்தில் விபரமில்லா கலாம் ஐயர்.

    ReplyDelete
  2. இஸ்ரேல் மற்ற நாடுகளின் கருத்தைப் பற்றி கவலைப்படாத நாடு. அதனால் அவர்கள் அந்தக் கிராமத்தை தாங்கள் அழிக்க முடிந்ததை பெருமையாக பறைசாற்றிக் கொண்டிருக்கக் கூட முடியும். அதைத் தங்கள் வெற்றியாக சொல்லிக் கொள்ள முடிந்தாலும், அதை விடப் பெரிய வெற்றியாக அந்த விவசாய சாதனையைக் கருதியதால் தான் திரு.அப்துல் கலாம் அவர்கள் அப்படி பிரசுரித்ததைப் பாராட்டினார் என்று தோன்றுகிறது.
    -என்.கணேசன்

    ReplyDelete
  3. //இவ்விடயத்தில் விபரமில்லா கலாம் ஐயர்.//
    சொல்லப்பட்டிருக்கும் கருத்தின் ஆழத்தையோ, அதன் நேர்மையையோ புரிந்து கொள்ளாமல், இனத் துவேஷத்தில் இறங்கும் இவர்களைப் போன்றவர்களுக்காவே எழுதப்பட்ட பதிவாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நல்லதை நாமே தேடிப்போய் கொள்ள வேண்டும். அல்லதை, அதுவாக நாடி வந்தாலும், போவெனத் துரத்த வேண்டும்.
    அதற்கு வலிமை கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

    ReplyDelete
  5. நல்ல பதிவு. சில சமயம் விபத்தோ வெடிகுண்டு சம்பவங்களோ நடந்தால் விஷேச படங்கள் என விளம்பரம் செய்கின்றன நாளிதழ்கள். துக்ககரமான செய்தியை கூட விஷேஷ செய்தியென்றா விளம்பரம் செய்வார்கள்? முழு விபரம் என்று போட கூடவா இவர்களுக்கு தெரியாது? அப்துல் கலாம் அவர்களின் கருத்து நியாயமானதே.

    ReplyDelete
  6. THANKS FOR GOOD ARTICLE.

    ReplyDelete