சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, September 9, 2008

என்றேனும் ஓர் நாள்

பெரும்பாலானவர்கள் பல முக்கியமான செயல்களை ஒரு நாள் செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அவற்றை என்றாவது ஒருநாள் செய்வார்கள். அதற்கு முன் அவர்கள் செய்ய வேண்டிய மற்ற பல காரியங்கள் இருக்கின்றன. அல்லது எடுக்க வேண்டிய ஓய்வும், ஈடுபட பல பொழுதுபோக்குகளும் நிறைய அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த வேலைகளை அவர்கள் சுத்தமாக மறந்து விடவில்லை. அவ்வப்போது அது பற்றி சொல்வார்கள். ஒரு நாள் செய்வார்கள்.

ரிடையர் ஆனவுடன் படிப்பேன் என்று வேலையில் இருக்கும் போதே எத்தனையோ புத்தகங்களை வாங்கி வைத்த ஒருவரை எனக்குத் தெரியும். நல்ல நல்ல புத்தகங்கள் அவை. அதெல்லாம் மேலோட்டமாய் படிக்கக் கூடிய புத்தகங்கள் அல்ல என்றும் ஆழ்ந்து படிக்க வேண்டிய அந்த புத்தகங்களை ரிடையர் ஆனவுடன் படிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார். ரிடையரானவுடன் மறுநாளே அவர் அந்தப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கவில்லை. பி.எ·ப் க்ரேடியுட்டி வரக் காத்திருந்தார். பிறகு மகள் ஒருத்தி பிரசவத்துக்கு வந்தாள். பேரன் பிறந்து கொஞ்சி விளையாடினார். பேரன் போய் வீடு வெறிச்சென்று இருப்பதாய் நினைத்தார். தானே மகள் வீட்டுக்குப் போய் சில மாதங்கள் இருந்தார். பிறகு காசி யாத்திரை போனார்.... காலம் போய்க் கொண்டே இருந்தது. அவர் வீட்டு அலமாரியில் அந்த புத்தகங்கள் இன்னும் திறக்கப்படாமல் தான் இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் நாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் பரண்கள் எல்லோருடைய வீட்டிலும் இருக்கின்றன. அதற்கென்று நாம் ஒரு குறிப்பிட்ட நாள், நேரம் ஒதுக்கி, அந்த நாள், நேரத்தில் அதை செய்தே தீர்வது என்று உறுதியாக இல்லாத வரை நமது பரண் சுத்தம் செய்யப்படப் போவதில்லை. அதைச் செய்யாமல் அந்தப் பரணைப் பார்க்கிற போதெல்லாம் 'இதை ஒரு நாள் சுத்தம் செய்யணும்' என்று சொல்லிக் கொண்டே இருப்பதெல்லாம் சும்மா தான்.

ஒரு குறிப்பிட்டு சொல்லாத காலத்தை நாம் சந்திக்கப் போவதேயில்லை. 2010ல் இதை செய்து முடித்திருப்பேன் என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி அதற்காகத் திட்டமிட்டு செயல்படுபவன் அக்காரியத்தை செய்து முடிக்க சாத்தியமுண்டு. கொஞ்சம் பணம் சேர்த்து பேங்கில் போட்டு விட்டு பிறகு இதைச் செய்ய நினைத்திருக்கிறேன் என்பவன் என்றுமே அதை செய்து முடிக்கப் போவதில்லை. 'கொஞ்சம் பணம்' என்ற தொகை எவ்வளவு என்பது நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகும். தெளிவில்லாத இலக்குகள் அடையப்படுவதில்லை.

அதே போல யதார்த்தத்திற்கு ஒத்துவராத இலக்குகளும் கைகூடுவதில்லை. ஒரு வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி வந்த இன்னொரு நபரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாயிற்கு வீடு வாங்க முற்பட்டவர் தான் வாங்க இருக்கும் வீட்டில் பத்து லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள வசதிகளை எதிர்பார்த்தார். நடப்பு நிலவரம் பற்றிக் கவலைப் படாமல் வீடு பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் தொடக்கத்தில் வாங்கியிருக்கக்கூடிய வீடுகளுக்கு எல்லாம் தற்போது மும்மடங்கு மதிப்பு உள்ளது. இன்று அவரால் நிலம் மட்டுமே அவருடைய பணத்துக்கு வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இதுவரை சொன்ன செயல்கள் எல்லாம் தலை போகிற விஷயங்கள் அல்ல என்பது உண்மை. இது போன்ற விஷயங்கள் நாம் தினமும் சந்திக்கக் கூடிய விஷயங்கள். என்றேனும் ஓர் நாளில் செய்வோம் என்று சிறிய, மற்றும் பெரிய விஷயங்களில் நம்மை நாமே எப்படி ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

உண்மையாகவே ஒரு காரியம் உங்களுக்கு முக்கியம் என்றால் அதை என்றேனும் ஒரு நாள் செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். நாம் யாரும் சிரஞ்சீவிகள் அல்ல. அந்த என்றேனும் ஓர் நாள் வரை யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. "ஏதாவது செய்யணும்", "ஒரு நாள் செய்யணும்" என்று மொட்டையாக சொல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் ஒழிய எதையும் எப்போதும் நீங்கள் செய்யப் போவதேயில்லை.

என்.கணேசன்

5 comments:

  1. "ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்" என்று சும்மாவா சொன்னார்கள்...

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க. "நாளை நாளை என்றிருந்தேன்" என்கிற பாடல் வரி நினைவு வருது.

    ReplyDelete
  3. நீங்க ரொம்ப நல்லா எலுதரிங்க

    ReplyDelete
  4. அருமையான வரிகள் , விளக்கங்கள் நன்றி

    ReplyDelete
  5. ஹா....ஹா....ஒரு நாள் செய்யனும் லிஸ்ட் எனக்கும் இருக்கு....சின்ன சின்ன விஷயங்கள்... ஒன்று செய்து முடித்தால், அடுத்தது சேர்ந்து விடுகிறது....லிஸ்டில்....
    Never ending என்று நினைக்கிறேன்....

    ReplyDelete