க்ரிஷ் தன் கம்ப்யூட்டரில் அல்லது அறையில் முக்கியமான
இடத்தில் ரகசிய காமிரா ஏதாவது வைக்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்டான். அப்படியில்லா
விட்டால் அவன் படித்துக் கொண்டிருக்கும் நிகோலா டெஸ்லா பற்றி யாரோ ஒருவன்
அறிந்திருக்க முடியாது. யோசித்துப் பார்த்த போது அறையில் நுழைந்து யாரும் ரகசியக்
காமிரா வைத்து விட்டுப் போயிருக்க முடியாது என்று தோன்றியது. உதயின் அடியாட்கள்
இரண்டு மூன்று பேராவது வீட்டின் வாசலிலேயே எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள்.
அவர்களை மீறி யாரும் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் தன் அறைக்கு
வெளியாட்கள் வருவது அவனுக்குப் பிடிக்காது என்பதால் அந்த
அடியாட்கள் உட்பட அவன் வீட்டார் யாரையுமே அப்படி அனுமதிக்க
மாட்டார்கள்... வேவு பார்க்கும் காமிரா லாப்டாப்பில்
இருக்க வாய்ப்பு இருக்கிறது. கல்லூரியில் அதை அவன் வகுப்பில் வைத்து விட்டு
பேராசிரியர்களிடமோ, மற்றவர்களிடமோ சென்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பதும்
உண்டு. அந்த சமயத்தில் யாராவது இதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. உடனடியாக
க்ரிஷ் லாப்டாப்பை அணைத்து விட்டான். பின் லாப்டாப்பை அக்கு வேறு ஆணி வேறாகக்
கழற்றிப் பார்த்தான். காமிரா இல்லை. இணையத்தின்
மூலமாக இப்படி வேவு பார்க்க முடியுமா என்று நிறைய விதங்களில் யோசித்து சோதித்தும்
பார்த்தான்... அன்று பிறகு அவன் லாப்டாப்பை ஆன் செய்யவில்லை
மறுநாள் கல்லூரியில் வகுப்பில்
தான் அவன் லாப்டாப்பைத் திறந்தான். திறந்த இரண்டாவது நிமிடம் லாப்டாப் ஸ்கிரீனில்
வாசகம் மிளிர்ந்தது. “நேற்று நீ பயந்து விட்டாயா?”
இதென்ன, காத்துக்
கொண்டே இருந்தது போல் லாப்டாப் திறந்தவுடன் உடனடியாக இப்படி கேட்கிறானே என்று க்ரிஷ்
சிறிது பொறுமை இழந்தான். “யார் நீங்கள்?” என்று அந்த வாசகத்தின் கீழ் மறுபடி கேள்வி
எழுப்பினான்.
“நேற்றே
சொன்னேனே உன் நண்பன் என்று” என பதில் வந்தது.
“எனக்குப் பெயரில்லாத
நண்பர்கள் கிடையாது. ரகசியமாய் இருக்கும் நண்பர்களைப் பிடிக்கவும் பிடிக்காது” என்று அழுத்தினான்.
அந்த
சமயத்தில் வகுப்பில் ஒரு பேராசிரியர் நுழைய “சரி சரி உன் பேராசிரியர் வந்து
விட்டார். மாலை பேசுவோம்” என்று மிளிரிய வாசகங்கள் உடனே மறைந்தும் போயின. பேராசிரியர்
நுழைந்ததையும் உடனடியாகச் சொல்கிறானே... அதன் பின் அவனால் பேராசிரியர்கள் சொன்ன
எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
மாலை
வீட்டுக்கு வந்த பின் நிறைய நேரம் லாப்டாப்பை அவன் திறக்கவில்லை. யோகி ராமசாரகா
என்ற பெயரில் அழைக்கப்பட்ட வில்லியம் வாக்கர் அட்கின்சன் எழுதியிருந்த ராஜயோகா புத்தகத்தில் ஆழ்ந்து போனான்.
அவர் எழுதியிருந்த கருத்துகளும், நிகோலா டெஸ்லா எழுதியிருந்த கருத்துகளும் எவ்வளவு
ஒத்துப் போகின்றன என்று அடிக்கடி வியந்தான். மெய்ஞானமும், விஞ்ஞானமும் சந்திக்கும்
இடங்கள் அவனுள் விவரிக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்தின.
காலம்
மறந்து அந்த நூலில் ஆழ்ந்திருந்த அவனை அம்மா வந்து தட்டினாள். ‘என்ன’ என்பது போல் அவன் நிமிர்ந்து பார்க்க பத்மாவதி நாற்காலியை இழுத்துப்
போட்டு அவனருகில் உட்கார்ந்தாள். இனி சிறிது நேரம் அங்கிருக்காமல் அம்மா நகர
மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட க்ரிஷ், காரணத்தை சுற்றும் முற்றும் தேடினான்.
சாயங்காலம் அவள் கொண்டு வந்து வைத்திருந்த காபியும், உப்புமாவும் அப்படியே
இருந்தது தெரியவர அம்மாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். அம்மா எதையும்
பொறுப்பாள், அவன் சாப்பிடாமல் இருந்தால் பொறுக்க மாட்டாள்..
“ஏண்டா
இத்தனை படிக்கிறாய், பல பேருக்கு புத்தி சொல்றாய், நேரா நேரத்துக்குச்
சாப்பிடணும்னு தெரியாதாடா? நீ படிச்ச புஸ்தகம் எதிலயும் அதைச் சொல்லலியா” பத்மாவதி சலிப்பு கலந்த கோபத்துடன் கேட்டாள்.
“சாரிம்மா.
ரொம்ப சுவாரசியமா இருந்தது. நேரம் போனதே தெரியல....”
”இது என்ன நாவலா?” என்று பத்மாவதி கேட்டாள். அவளைப் பொருத்தவரை
கதைப்புத்தகங்கள் மட்டுமே சுவாரசியமானவை. அவள் இப்போதும் தமிழ் நாவல்களை ரசித்துப்
படிப்பாள். இப்போதெல்லாம் நாவல்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்பதில் அவளுக்கு
வருத்தம். பழைய நாவல்களையே மறுபடி மறுபடி படிப்பாள்.
”இல்லை. இது ராஜ யோகா பத்தின புஸ்தகம்...” என்றான் அவன்.
அவளுக்கு
ராஜ யோகா என்றால் என்ன என்று தெரியாது. ஜோதிடர்கள் ராஜ யோகம் பற்றிச் சொல்வதைக்
கேட்டிருக்கிறாள். அதனால் அது ஜோதிட சம்பந்த புத்தகமாக இருக்கலாம் என்று
அனுமானித்தவள் அவனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. அந்த ஆறிய உப்புமாவை
எடுத்து மகனுக்கு ஊட்டி விட ஆயத்தமானாள். அவள் ஊட்டிய ஒருவாய் உப்புமாவை விழுங்கிய
க்ரிஷ் எச்சரிக்கையுடன் பின்னால் திரும்பி உதய் தெரிகிறானா என்று பார்த்தான்.
அம்மாவிடம் வாய்விட்டுச் சொன்னான். “சும்மா இரும்மா. அண்ணன் பார்த்தா சின்ன பாப்பா
அப்படி இப்படின்னு இதை வெச்சே என்னை ஓட்டுவான்....”
அடுத்த கவளத்தை
எடுத்தபடியே பத்மாவதி சொன்னாள். “அவன் கிடக்கிறான் தடியன். அவனுக்கும் எத்தனை தடவை
ஊட்டியிருக்கேன்....”
அண்ணனுக்கும்
அம்மா ஊட்டி விடுவதைக் கற்பனை செய்த போது க்ரிஷுக்கு வேடிக்கையாக இருந்தது. “அவன்
ஒன்னும் சொல்ல மாட்டானா?”
இளைய மகனுக்கு அடுத்த
கவளத்தையும் ஊட்டி விட்ட பத்மாவதி சிரித்தபடியே ஒரு ரகசியத்தைப் போட்டுடைத்தாள்.
“கைகழுவ சோம்பல் பட்டுட்டு அவனே ஊட்டி விடச் சொல்வான்.... ஆனா அதுக்கும் முன்னாடி
நீ எங்கயாவது தெரியறியான்னு பார்த்துக்குவான்.....”
’ஓ
அவனுக்கும் அந்தப் பயம் இருக்கு’ என்று எண்ணித் திருப்தியுடன் அவளது அடுத்த கவள உப்புமாவையும் விழுங்கிய க்ரிஷ்
“போதும்மா.... இனியும் இத சாப்டா ராத்திரி எதையும் சாப்ட முடியாது....” என்று உறுதியாய் சொன்னான்.
அவன்
குரலில் இருந்த உறுதி இனி சாப்பிட மாட்டான் என்பதை உணர்த்தியதால் பத்மாவதி அரை
மனதோடு எழுந்தாள். “இவ்வளவு கம்மியா சாப்பிட்டா எப்டிடா? அதான் நோஞ்சானாவே
இருக்கே. உன் அண்ணன் எப்படி கரெக்டா உடம்ப வச்சிருக்கான் பாரு. அப்படி
இருக்கணும்....”
“அவனைத் தான் நீ
தடியன்னு சொல்றியே” என்றபடி லாப்டாப்பை க்ரிஷ் திறந்தான்.
“அது
சும்மா செல்லமா கூப்பிடறது....” என்ற மென்மையாகச் சொன்ன பத்மாவதி, “கரெக்டா எட்டரை
மணிக்கு டைனிங் டேபிளுக்கு நீ வந்துடணும். இல்லாட்டி இந்த ஜோசிய புஸ்தகத்தை எடுத்துட்டுப்
போயிடுவேன்....” என்று மிரட்டி
விட்டுப் போனாள். அம்மா
இதை ஏன் ஜோசிய புஸ்தகம் என்று சொல்கிறாள் என யோசித்த கிரிஷுக்கு விளங்கிய போது
புன்னகை வந்தது. “ஸோ ஸ்வீட்”
’தாய்ப்பாசத்துக்கு இணையானது எதுவுமேயில்லை, இல்லையா?” என்ற கேள்வி அவன் லாப்டாப்பில் மின்னியது. அப்போது தான் க்ரிஷுக்கு அந்த
வினோத தொடர்பு கொள்ளும் நபர் நினைவு வந்தது. உடனே திகைப்பும் ஏற்பட்டது. இது வரை
இந்த லாப்டாப் மூலம் தான் அந்த நபர் எல்லாவற்றையும் அறிவதாக நினைத்திருந்தான்.
ஆனால் இப்போதைய நிகழ்வை இது வரை அணைக்கப்பட்டிருந்த லாப்டாப்பில் இருந்து அந்த நபர் நடந்ததைப் பார்த்திருக்க வழியே
இல்லை. இப்போது தான் அவன் லாப்டாப்பைத் திறந்திருப்பதால் அம்மா போவதை வேண்டுமானால்
அந்த நபர் பார்த்திருக்கலாம். ஒருவேளை யூகத்தில் அப்படிக் கேட்டிருந்தால்.....?
அந்த யூகத்தையும் தகர்க்கும்படியாக ”யோகி ராமசாரகா, நிகோலா டெஸ்லா ரெண்டு பேர் எண்ண
அலைகளும் ஒத்துப் போகிறது. இல்லையா?” என்ற வாசகம் லாப்டாப் திரையில் மின்னிய போது க்ரிஷ்
அதிர்ந்தான். இன்று அவன் யோகி ராமசாரகாவின் புத்தகம் படித்ததை மட்டுமல்ல, அவன்
மனதில் நினைத்ததையும் எப்படி அந்த ஆள் கண்டுபிடித்தான்.... இங்கு நடப்பதைப்
பார்க்க முடிகிறது போல் மனதையும் படிக்க முடிகிறது….
நடப்பதை
எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு “மேட்ரிக்ஸ்” ஆங்கிலப்படம்
நினைவுக்கு வந்தது. அதிலும் கதாநாயகன் நியோவை இப்படி கம்ப்யூட்டரில் தான் அந்த
ரகசிய இயக்கம் தொடர்பு கொள்ளும். அந்தப் படம் பார்த்த பாதிப்பில் யாரோ அவனுடன்
விளையாடுகிறார்களோ? தொழில் நுட்பம் அவனை வேவு பார்க்க உதவலாம். அவன் மனதையும் வேவு
பார்க்க வைக்க முடியுமா என்ன?
அவன்
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அடுத்த வாசகம் லாப்டாப் திரையில் வந்தது. “நான்
எந்த ரகசிய இயக்க ஆளும் அல்ல. நான் நீ நினைக்கும் ’மேட்ரிக்ஸ்’ சினிமாவைப் பார்த்ததும் இல்லை.”
திகைத்த
க்ரிஷ் படபடக்கும் இதயத்துடன், லாப்டாப்பில் கேள்வியை அழுத்தினான். “அப்படியானால் யார்
நீங்கள்?”
“நேற்றே சொன்னேனே, உன்
நண்பன்....”
“எனக்கு இந்த
விளையாட்டு சலிப்பாக இருக்கிறது. சரி, இதையாவது சொல்லுங்கள்- நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை எல்லாம் நீங்கள் எப்படிக்
கண்டுபிடிக்கிறீர்கள்?”
“நிகோலா டெஸ்லா அன்றைக்கே சொல்லி விட்டுப் போன அதே வழியில் தான்....
உன் அலைவரிசையை என்னால் படிக்க முடிகிறது....”
க்ரிஷ் திகைத்தான். நிகோலா டெஸ்லாவின் அந்த வலிமையான வாக்கியம்
நினைவுக்கு வந்தது. ”பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய
வேண்டுமானால் சக்தி, அலைவரிசை, அதிர்வுகள் மூலமாக சிந்தித்துப் பார்.”
“நீங்கள் இப்போது
எங்கே இருக்கிறீர்கள்?”
“உன் வீட்டிலிருந்து 16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன்.....”
க்ரிஷுக்குத்
தலைசுற்றியது நடந்து கொண்டிருப்பதெல்லாம் நிஜம் தானா இல்லை கனவா? 16000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஒருவன் இப்படித் தொடர்பு கொள்ள முடியுமா?
அவனுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. எழுந்து நின்று
சோம்பல் முறித்தான். திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தான். இப்போதும் அவன்
லாப்டாப்பில் அதே பதில் மின்னிக் கொண்டிருந்தது. “16000 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறேன்.....”
நடப்பது கனவோ,
கற்பனையோ அல்ல. நிஜம் தான்....
“சரி சொல்லுங்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும்?”
“உன்னைச் சந்திக்க
வேண்டும்”
“எதற்கு சந்திக்க
விரும்புகிறீர்கள்”
“நேரில் சந்திக்கும்
போது சொல்கிறேனே!”
“சரி வீட்டுக்கு
வாருங்கள்”
“நீயே என்னைச்
சந்திக்க வந்தால் நன்றாயிருக்கும்”
“உங்களைச் சந்திக்க என்னால்
16000 கிலோமீட்டர் எல்லாம் பயணம் செய்ய முடியாது”
“தேவையில்லை. நான் நீ வர முடிந்த அளவு தூரத்திற்கே வருகிறேன். அங்கு வந்து சந்தித்தால் போதும்....”
க்ரிஷ் யோசித்தான்.
அந்த நபரைச் சந்தித்து தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் போனால்
நிம்மதியாக இருக்க முடியாது என்று அவனுக்கும் தோன்றியது. “சரி விலாசம்
சொல்லுங்கள். நானே வருகிறேன்”
அப்போது தான் அந்த
மலையின் பெயர் க்ரிஷின் லாப்டாப்பில் வந்தது.
(தொடரும்)
என்.கணேசன்