தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Tuesday, November 29, 2016
Thursday, November 24, 2016
இருவேறு உலகம் – 5
அந்த வலிமையான காரணத்தை பத்மாவதி வாய் விட்டே மூத்த மகனிடம் சொன்னாள். “மத்த
சமயமா இருந்தா நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். அவனுக்கு இப்ப டைம் சரியில்லடா.
இதை அவன் பொறக்கறப்பவே இவரோட பணிக்கர் ஜோசியர் கணிச்சு, அவனுக்கு 23 வயசு முடியற
சமயத்துல பெரிய கண்டம் இருக்குன்னு
சொல்லியிருக்கார். அதான் பயமா இருக்கு....” சொல்லச்
சொல்ல பத்மாவதிக்குக் குரல் அடைத்தது.
உதய் சொன்னான்.
“அம்மா, போன வருஷம் டெல்லில ஒரு ஜோசியன் அப்படித்தான் என் ஜாதகம் பாத்து நடந்து
முடிஞ்சதை எல்லாம் சரியா சொன்னான். நானும் தாராளமா பணம் தந்தேன். ஆனா அவன் சொன்ன
எதிர்காலப் பலன் ஒன்னு கூட சரியாகல”
“அந்தப்பணிக்கர் மத்த ஜோசியர்
மாதிரியெல்லாம் கிடையாதுடா. அவர் இவருக்குச் சொன்னதுல இது வரைக்கும் எல்லாமே
பலிச்சிருக்கு....” என்று சொன்ன போது பத்மாவதிக்குக் கண்கள் ஈரமாயின.
கமலக்கண்ணனுக்கும் அதுவே
தான் உறுத்தலாக இருந்தது.... பரமேசுவரப் பணிக்கர் இன்று உயிரோடிருந்திருந்தால் அவரிடம்
மறுபடி ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால் அவர் இருபதாண்டுகளுக்கு முன்பே காலமாகி
விட்டிருந்தார். பரமேஸ்வரப் பணிக்கரின் மகன் முரளிதரப் பணிக்கர் இன்று நகரின்
பிரபல ஜோதிடர்களில் ஒருவர். ஆனால் அவரிடம் தந்தையின் வாக்குப் பலிதம் இல்லை.....
கமலக்கண்ணன் படிப்போ, வேலையோ, குறிக்கோளோ இல்லாமல் சுற்றித் திரிந்த
இளமைக் காலத்தில் தான் பரமேசுவரப் பணிக்கரை முதல் முதலில் சந்தித்தார். அவரது
நண்பன் ஒருவன் தன் ஜாதகத்தைக் காட்டச் சென்றிருந்த போது அவரும் அவன் கூடப்
போயிருந்தார். அப்போது பரமேசுவரப் பணிக்கருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். நண்பனின்
ஜாதகம் பார்த்து விட்டுப் பலன் சொன்ன பணிக்கரிடம் கமலக்கண்ணனின் ஜாதகத்தையும்
நண்பன் பார்க்கச் சொன்னான். கமலக்கண்ணனிடம் ஜாதகம் கூட இருக்கவில்லை. பிறந்த தேதி,
நேரம், இடம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஐந்தே நிமிடங்களில் பஞ்சாங்கம்
பார்த்து பணிக்கர் ஜாதகம் கணித்தார். பின் கமலக்கண்ணனின் ஜாதகப் பலன் பார்க்க
பரமேசுவரப் பணிக்கருக்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் தேவைப்படவில்லை. அவருடைய
ஜாதகம் ராஜயோக ஜாதகம் என்றும், மிக உயர்ந்த பதவிக்கு நிச்சயம் போவார் என்றும்
பணிக்கர் சொன்ன போது கமலக்கண்ணன் வாய் விட்டுச் சிரித்தார். “யோவ், உனக்கு டீ
வாங்கிக் குடுக்கக்கூட என்கிட்ட காசில்லைய்யா. சும்மா ரீல் விடாதே”
கமலக்கண்ணனின் பரிகாசம் பணிக்கரைச்
சிறிதும் பாதிக்கவில்லை. “நீ இப்ப காசே தர வேண்டாம். நல்ல நெலமைக்கு வந்த பிறகு
குடு போதும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஆனாலும் கமலக்கண்ணனின்
நண்பன் பணம் தர முன் வந்தான். அவனிடமும் மறுத்து விட்டு “அவன் கிட்டயே பெரிய
தொகையாய் இன்னொரு காலம் வாங்கிக்கறேன்” என்று அவர் சொன்ன போது கமலக்கண்ணனுக்கு அந்த
ஆள் பைத்தியம் என்று தான் தோன்றியது. ஏனென்றால் ராஜ யோகம் வருவதற்கான அறிகுறிகள்
எதுவும் இருப்பதாக அவருக்கு அப்போது தென்பட்டிருக்கவில்லை. தகுதி ஏதாவது
இருப்பதாகவும் அவரே நம்பியிருக்கவில்லை.
ஆனால் காலம் எதையும்
எப்படியும் மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. அது கமலக்கண்ணனை அப்போது தான் ஒரு
புதுக்கட்சி ஆரம்பித்திருந்த ராஜதுரை என்ற இளம் அரசியல்வாதியிடம் கொண்டு போய்
சேர்த்தது. ராஜதுரையின் அடியாட்களில் ஒருவனாகப் போய்ச் சேர்ந்த கமலக்கண்ணனின்
தைரியமும், சுறுசுறுப்பும் ராஜதுரையை மிகவும் கவர்ந்தது. செய்து கொடுத்த சில
வேலைகளில் கமலக்கண்ணனின் விசுவாசமும் உறுதிப்பட்டு விடவே ஆறு மாதங்களுக்குள்ளாகவே கமலக்கண்ணன்
ராஜதுரையின் உள் வட்டத்தில் இடம் பிடித்து விட்டார். இரண்டு வருடங்கள் கழித்து
நடந்த பொதுத்தேர்தலில் சட்டசபை உறுப்பினராக நிற்கும் வாய்ப்பை ராஜதுரை தந்த போது கமலக்கண்ணனுக்கே
நடப்பதெல்லாம் நிஜம் தானா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தத்
தேர்தலில் அவர் ஜெயிக்கவும் செய்தார். ஜெயித்தவுடன் முதலில் ராஜதுரையிடம் சென்று
வணங்கி ஆசிபெற்று விட்டு அவர் பார்க்கப் போனது பரமேசுவரப் பணிக்கரைத் தான். ஒரு
தங்க கைக்கடிகாரத்தை அந்த மனிதருக்குப் பரிசாக அளித்து விட்டு வணங்கி விட்டும்
வந்தார்.
பரமேசுவரப் பணிக்கர்
மீது கமலக்கண்ணனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால் அடுத்ததாக
திருமண காலம் வந்து பத்மாவதியை வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பும் அவர்
பரமேசுவரப் பணிக்கரின் ஆலோசனை கேட்டார். பத்மாவதியுடன் சகல சௌபாக்கியங்களும் அவர் வாழ்க்கையில்
நுழையும் என்று பணிக்கர் சொல்ல அதுவும் அப்படியே நடந்தது. பத்மாவதியின் ஜாதகம்
பார்க்கவும் பணிக்கர் மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. விரைவிலேயே
ராஜதுரை ஆட்சியமைத்து முதலமைச்சரான போது கமலக்கண்ணன் மந்திரியானார்.
மூத்த பிள்ளை உதய்
பிறந்த போதும் ஜாதகம் பார்த்து பணிக்கர் சொன்னார். “பையன் தைரியசாலியாயும்,
அதிர்ஷ்டசாலியாயும் இருப்பான். சீக்கிரமே அரசியலுக்கு வருவான். மந்திரியுமாவான்”. அதைச் சொல்லவும் அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் சொன்னபடியே
தைரியசாலியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருந்த உதய் சீக்கிரமே அரசியலுக்கும் வந்து,
வளர்ந்து, இப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறான். மந்திரி பதவிக்கு இனி
அதிக தூரமில்லை. அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இரண்டாவது பிள்ளை க்ரிஷ்
பிறந்தவுடன் அவன் ஜாதகம் பார்க்க மட்டும் பரமேசுவரப் பணிக்கர் அதிக நேரம்
எடுத்துக் கொண்டார். பலன் சொல்ல மூன்று நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாத பணிக்கர்
ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்ட போது கமலக்கண்ணன் ஆபத்தை உணர்ந்தார். ”என்ன பணிக்கரே, ஜாதகத்துல எதாவது பிரச்னையா?”
பரமேசுவரப் பணிக்கர்
உடனடியாகப் பதில் சொல்லவில்லை. மேலும் சில கணக்குகள் போட்டுப் பார்த்து விட்டுத்
தலைநிமிர்ந்தவர் சொன்னார். “இது சாதாரண ஜாதகம் இல்லை, கமலக்கண்ணன். அசாதாரணமான
ஜாதகம். உங்க பையன் பெரிய ஜீனியஸா இருப்பான். ரொம்ப நல்லவனா இருப்பான். ஆயுளோட
இருந்தான்னா உலகப்புகழ் பெறுவான்.....”
மகன் ஜீனியஸா இருப்பான் என்கிற வார்த்தை
கமலக்கண்ணனை மனம் குளிர வைத்தது. ஆனால் ‘ஆயுளோட இருந்தால்’ என்கிற சொற்கள் பரமேசுவரப்
பணிக்கருடைய வாயில் இருந்து வந்தது அபசகுனமாகவும் பட்டது. கவலையில் ஆழ்ந்தவராக
கமலக்கண்ணன் கேட்டார். “என்ன பணிக்கரே இப்படிச் சொல்றீங்க?”
“இவனுக்கு இருபத்திமூணு வயசு முடியறப்ப ஒரு
பெரிய கண்டம் இருக்கு....”
”அதுக்குப் பரிகாரம் எதாவது இருக்கா?”
பரமேசுவரப் பணிக்கர் ஒரு பெரிய பட்டியலே போட
ஆரம்பித்தார். சில சிவன் கோயில்களுக்குச் செல்வது, சில ஹோமங்கள் செய்வது, சில தானங்கள்
செய்வது பற்றியெல்லாம் அவர் எழுத ஆரம்பித்த போது கமலக்கண்ணன் சொன்னார். “அதை ஏன்
இப்பவே எழுதறீங்க? நான் அந்த சமயத்துல வந்து கேட்டு வாங்கிக்கறேன்”
“எனக்கு ஆயுசு அது வரைக்கும் இருக்கணுமே.
இன்னும் மூணு வருஷத்துல நானே போய்ச் சேர்ந்துடுவேன்...” என்று
புன்னகையுடன் சொன்ன பரமேசுவரப் பணிக்கர் முழுவதும் எழுதிய பட்டியலை கமலக்கண்ணனிடம்
தந்தார்.
பணிக்கரே மூன்று
வருடங்களில் காலமாகி விடுவார் என்கிற தகவலும் கமலக்கண்ணனுக்கு வருத்தத்தைத் தந்தது.
எப்போதும் தருவதை விட இரட்டிப்பாய் பணம் அவர் கையில் தந்து வணங்கி விட்டுக்
கிளம்பினார். அதுவே பணிக்கருடனான அவருடைய கடைசி சந்திப்பாய் அமைந்து விட்டது. பரமேசுவரப்
பணிக்கர், தான் சொன்னது போலவே மூன்று வருடங்கள் முடிவடைவதற்கு முன் காலமானார்....
கமலக்கண்ணனின்
பழைய நினைவுகளை செல்போன் பாடிக் கலைத்தது. அவர் அழைப்பது யார் என்று பார்த்தார்.
அந்த மலையில் அவருடைய மகனைத் தேடிப் போயிருந்த அவருடைய ஆட்களில் முக்கியமானவன்
தான் அழைக்கிறான். அவசரமாக செல்போனை எடுத்துப் பேசினார்.
கேள்விப்பட்ட விஷயம்
அவருடைய அடிவயிற்றைக் கலக்கியது.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, November 21, 2016
முந்தைய சிந்தனைகள்-1
சில பொன்மொழிகளை அழகான அட்டைகளில் படிக்கையில் கூடுதலாக அவை மனம் கவர்வதாக நான் உணர்ந்திருக்கிறேன். நம் எழுத்துக்களையும் அப்படிச் செய்தால் என்ன என்று தோன்றியதால் சில வாசகங்களை என் படைப்புகளில் இருந்து எடுத்து அவ்வப்போது என் முகநூலில் பதிந்து வருகிறேன். அவற்றை வலைப்பூ வாசகர்களுக்கும் பகிரலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த முந்தைய சிந்தனைகள் பகுதி.
படித்ததில் பிடித்தது போலவே சொன்னதில் பிடித்ததை அவ்வப்போது தொகுத்து இங்கு பதிவிடுகிறேன்.
அன்புடன்
- என்.கணேசன்
Thursday, November 17, 2016
இருவேறு உலகம் – 4
அவனும் அதிர்ந்து போனான். இரண்டு பேரும் இசைக்கின்ற அந்த செல்போனையே
திகிலோடு பார்த்தார்கள். வாடகைக் கொலையாளி இறந்து போன பிறகு அவன் செல் போனிலிருந்து
அவரை அழைப்பவர் யாராக இருக்கும்?
கடைசியில் செல்போன் மௌனமாகியது. மறுபடி
அழைப்பு வரும் என்று இருவரும் எதிர்பார்த்தார்கள். வரவில்லை. யோசித்து விட்டு, பயத்திலிருந்து
முதலில் மீண்டவர் பஞ்சுத்தலையர் தான். சிந்தனைக்குப் பின் அவருக்குத் தன் மீதே
கோபம் வந்தது. ’இப்படிப்
பயந்து சாக என்ன இருக்கிறது?’ என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவர், வறட்டுச் சிரிப்பு
சிரித்து விட்டு அவனைத் தைரியப்படுத்தினார். ”
அவனுக்கு அந்தப் பாம்பு கடிச்ச இடம் தவிர இதுல ஏடாகூடமாக
எதுவும் நடக்கல. அந்தக் கொலைகாரத் தடியன் ராத்திரி குடிச்சுட்டு மட்டையாயிருப்பான்....
அஜாக்கிரதையாய் பாம்பு வச்ச பெட்டிய சரியா மூடாம வெச்சிருப்பான். அது வெளியே வந்து
அவனைக் கடிச்சுட்டுப் போயிருக்கு. செத்துட்டான். அது தெரியாம இவன் போன் எடுத்துப்
பேசலன்னு இவனயே சந்தேகப்பட்டுட்டோம் அவ்வளவு தான். இப்போ போன் செஞ்சது கூட அவன்
செல்லுல நம்ம இத்தன மிஸ்டுல கால்ஸப் பாத்த சொந்தக்காரங்களோ, நண்பர்களாவோ தான்
இருக்கும்....”
அவர் சொல்வது சரியாகவே இருக்கும் என்று
அவனுக்கும் தோன்றியது. ஆனால் அவரே சொன்னது போல் பாம்பு கடித்த இடம் இயல்பாக
இல்லை....
அவர் தன் செல்போனை எடுத்து வாடகைக்
கொலையாளியின் எண்ணை அழுத்தினார். அவன் நண்பனோ, சொந்தக்காரனோ எவனோ ஒருவனிடம் பேசி
ஏன் போனில் அழைத்தோம் என்று ஏதோ ஒரு கதை சொல்லி, இறந்து விட்டான் என்று அவன்
சொல்லப் போகும் தகவலுக்குத் துக்கம் தெரிவித்து, தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக்
கொள்ள நினைத்தார்.
மறுமுனையில் மணியடிக்கும் சத்தம் கேட்டது.
ஆனால் போனை யாரும் எடுத்துப் பேசவில்லை. பொறுமையாக மீண்டும் முயன்றார். இப்போதும்
யாரும் எடுத்துப் பேசவில்லை. மூன்றாவது முறை முயன்ற போது பொறுமை போயிருந்தது. அடித்த
மூன்றாவது மணி ஓய்வதற்கு முன் போன் எடுக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட
பஞ்சுத்தலையர் “ஹலோ” என்றார்.
மறுபுறம் சத்தமில்லை.
அவர் மீண்டும் “ஹலோ” என்றார். இப்போதும் மறுபுறத்தில் மௌனமே. எரிச்சலோடு
அவர் “ஹலோ” என்று கத்தினார். இப்போது பேய்க்காற்று வீசும் ஒலியே
செல்போன் வழியாகப் பதிலாகக் கேட்டது. அந்த மலையடிவாரத்தில் அவர் கேட்ட அதே ஒலி.....
அதிர்ச்சியில்
உறைந்து போன அவர் சகல பலத்தையும் திரட்டி “யாருடா என் கூட விளையாடறீங்க” என்று கிறீச்சிட்ட குரலில் கத்தினார். அவருக்கே அவர் குரல் காதில்
நாராசமாகக் கேட்டது.
மறுபக்கத்தில்
பேய்க்காற்றின் ஓசையே மீண்டும் பதிலாக ஒலித்தது. கைகள் நடுங்க அவர் இணைப்பைத் துண்டித்தார். அவரால்
உடனடியாக சகஜ நிலைக்கு வர முடியவில்லை. அவரையே திகைப்புடன் பாத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஓடிப் போய் அங்கிருந்த
ஒரு வெள்ளிச்செம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதை வாங்கி மடமடவென்று
குடித்து முடித்த பின் மெள்ள அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.
உடனடியாகத் தன் வேலையாளுக்குப் போன் செய்து
அந்த மலையடிவாரத்திற்கு மறுபடி சென்று அங்கே புதிய நிலவரம் என்ன என்று கண்டு
தெரிவிக்கச் சொன்னார். ஒரு பட்டாளத்தையே அங்கு அவரால் அனுப்பி இருந்திருக்க
முடியும். ஆனால் அவர் ஆட்கள் பலரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடிந்தவர்கள்.
சிறிய சந்தேகம் கூடப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். அதை அவர் விரும்பவில்லை.
இந்த வேலையாள் பலரும் அறியாதவன். அதிகமாகக் களத்திற்கு வராதவன்...
அவன் திரும்பவும் போன் செய்யும் வரை இங்கே
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் யோசிக்க நிறைய இருந்தது.
அவன் போன் செய்தான். “ஐயா அவங்க ஆட்கள்
நிறைய பேர் வந்திருக்காங்க. மலை மேலயும் கீழயும் தீவிரமா தேடிகிட்டு
இருக்காங்க....”
அவருக்குச் சின்னதாய் ஒரு ஆறுதல்
ஏற்பட்டது. க்ரிஷ் பிழைத்து வீடு போய்ச் சேர்ந்து விடவில்லை.....
ஆனாலும் நடப்பது எல்லாமே வில்லங்கமாகத்
தோன்ற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருந்து ஏதோ ஒரு அபசுரம் இந்த விஷயத்தில்
இழையோடிக் கொண்டே வந்தது போல் ஒரு பிரமை.... கொலைகாரன் கொலையை முடித்துக் கொண்டு
வந்த அந்த கணத்திலிருந்து நடந்ததை எல்லாம் மனதில் மறு ஒளிபரப்பு செய்து
பார்த்தார்.
‘அவன் வேகமாக வந்தான்.... கவனமாக அட்டைப்
பெட்டியைக் காரின் பின்சீட்டில் வைத்தான்.... வேகமாக வண்டியை ஓட்டினான்.... அவன்
அவரிடம் பேச விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது..... மலை மேலே என்ன நடந்தது
என்பதை அவன் விவரிக்கவில்லை.... அவர்
கேட்ட கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தது ரத்தினச் சுருக்கமாக மட்டுமே.... அவன் இயல்பே குறைவாகப் பேசுவது தான் என்றாலும் அவன்
காரை ஓட்டிய வேகமும், அவரை இறக்கி விட்டதும் காற்றாய் பறந்து மறைந்த வேகமும்
கொஞ்சம் அதிகப்படியாகத் தான் இப்போது அவருக்குத் தோன்றியது. ஆளை விட்டால் போதும் என்ற
மனநிலையே அவனை விரட்டியது போல் இருந்தது. அந்த மனநிலைக்குக் காரணம் என்ன
என்பதற்கான பதில், மலையின் மேல் நடந்த சம்பவத்தில் இருக்கக்கூடும்.....
அதை விரிவாகக் கேட்டுத்
தெரிந்து கொள்ள விடாதபடி அந்த நேரமாகப் பார்த்துத் தன்னிடம் போன் செய்து பேசிய எதிரிலிருந்த
முட்டாள் மேல் அவருக்குக் கோபம் பொங்கியது. இப்போது வாயடைத்துப் போய் திகிலோடு
பார்த்தபடி எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த இளைஞன் நேற்றிரவு அந்த ஐந்து
நிமிடம் வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தால் இவ்வளவு குழப்பம் இருக்காது.... ஆனால்
வந்த கோபத்தை வெளியே காட்டாமல் புன்னகை பூக்க அவரால் முடிந்தது. இன்னேரம் க்ரிஷ்
வீட்டு நிலவரம் என்னவாக இருக்கும் என்று அவர் ஊகிக்க முயன்றார்.
க்ரிஷ் வீட்டில் கனத்த இறுக்கம் நிலவ ஆரம்பித்திருந்தது. அவன் தந்தையான
மந்திரி கமலக்கண்ணனிடம் அவர் மனைவி பத்மாவதி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை “போன்
போட்டுக் கேளுங்களேன்...” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அவள்
சொன்னபடி செய்த அவர், பின் சலித்துப் போய் “கொஞ்ச நேரம் சும்மா இரு. ஏதாவது தகவல்
இருந்தா அவனுகளே போன் பண்ணிச் சொல்லுவாங்க....” என்று
கடுகடுத்தார்.
அவள் அடுத்ததாக தன் மூத்த மகனும்,
பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமாரிடம் சொல்ல ஆரம்பித்தாள். “உதய் நீயாவது கேளுடா”
அவர்கள் மூவரில், க்ரிஷிற்கு எந்த ஆபத்தும்
நேர்ந்திருக்காது என்று முழு நம்பிக்கையோடு அலட்டாமல் அமர்ந்திருந்தவன் அவன் தான்.
கவலையோடு அமர்ந்திருந்த தாய் அருகே
வந்தமர்ந்த உதய் “எதுக்கு பயப்படறே நீ. உன் பையன் என்ன சின்னக் குழந்தையா? 23
வயசுப் பையன். அவன் வேற எங்கயாவது போயிருப்பான். வந்துடுவான்....”
“அவன் பைக் அங்கேயே நிக்குதுன்னு சொல்றாங்களேடா.
பைக் இல்லாம எப்படிடா போயிருப்பான்?” அவள் கவலை குறையாமல் கேட்டாள்.
“நார்மலான ஆளுன்னா நீ சொல்றது சரி. உன்
பையன் தான் லூசாச்சே” என்று சொல்லி உதய் சிரிக்க பத்மாவதி மூத்த மகனை முறைத்தாள்.
“அவனை ஏண்டா
லூசுங்கற. அவன் ஜீனியஸ்”
“ரெண்டும் ஒன்னு தான். அந்த ஜீனியஸ் ஏதாவதை
ஆராய்ச்சி செஞ்சிட்டே நடந்தே போயிருப்பான்....”
அப்படியும் இருக்குமோ என்கிற எண்ணம்
அவளுக்கு நம்பிக்கை தந்தது. ஆனால் திடீரென்று இன்னொரு சந்தேகமும் வந்து தொலைத்தது.
”ஏண்டா, அவனை யாராவது கடத்திட்டு போயிருக்க
மாட்டாங்களே....”
ஒரு கணம் புருவங்களை உயர்த்தி தாயைப்
பார்த்த உதய் குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தான். பத்மாவதி கோபப்பட்டாள்.
“தோளுக்கு மேல வளர்ந்த பையன்னு பார்க்க மாட்டேன். ஓங்கி அறைஞ்சுடுவேன். ஏண்டா
இப்படி சிரிக்கறே”
“உன் பையனைக் கடத்திட்டு போகிற அளவு ஒரு
துர்ப்பாக்கியசாலி இருந்து அப்படிக் கடத்திட்டும் போயிருந்தா என்ன
நடந்திருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். அதான்....”
“என்னடா நடந்திருக்கும்?”
“கடத்தின ஒரு மணி நேரத்துல உன் பையன் கால்ல
விழுந்து “தம்பி என்னை நீ தயவு செஞ்சு மன்னிச்சுடு. ஆள் தெரியாம கடத்திட்டேன். உன்னை
எங்கே கொண்டு போய் விடணும்னு சொல்லு. அங்கேயே கொண்டு போய் விட்டுடறேன். இனி உன் வழிக்கு
வர மாட்டேன்”னு
கதறி அழுது தொழிலுக்கே முழுக்கு போட்டு கண் காணாத தேசத்துக்கு ஓடிப்போயிடுவான்” என்று உதய் சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான்.
கோபமும், சிரிப்பும்
சேர்ந்து வர, பத்மாவதி கணவரைப் பார்த்தாள். பயப்பட ஆரம்பித்திருந்தாலும் கூட
அவருக்கும் மூத்த மகன் சொன்னதைக் கேட்டுப் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. அப்படிப் புன்னகைத்தாலும் கூட அவருடைய
உள்ளுணர்வு இளைய மகனுக்கு ஆபத்து தான் என்று சொல்ல ஆரம்பித்தது. அதற்கு ஒரு
வலிமையான காரணமும் இருந்தது....
(தொடரும்)
என்.கணேசன்
Monday, November 14, 2016
ஏழு ஜாடித் தங்கம்
மனித மனம் விசித்திரமானது. பேராசை என்னும் பெரும் பேய் ஒருவனைப் பிடித்துக்
கொண்டால் பின் அவன் என்னவெல்லாம் செய்யக்கூடும் அல்லது எப்படி எல்லாம் தரம்
தாழ்ந்து விடக்கூடும் என்பதை யாராலும் ஊகிக்கவே முடியாது. இதை விளக்க ஸ்ரீ
ராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வதுண்டு.
ஒரு ஊரில் நாவிதன்
ஒருவன் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான். அவன் அரசனின் நாவிதனும்
கூட. எனவே போதுமான அளவு வருமானம் வந்து கொண்டு இருந்தது. அவன் அடிப்படைத்
தேவைகளும், அவசரத் தேவைகளும் நன்றாகவே நிறைவேறிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஊரின்
ஒதுக்குப்புறத்தில் அவன் நடந்து கொண்டு இருந்த போது அங்கிருந்த மரம் ஒன்றில்
இருந்து “உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா?” என்ற குரல் கேட்டது. நாவிதன் சுற்றும் முற்றும்
பார்த்தான். யாரும் தென்படவில்லை. தங்கம் வேண்டுமா என்று கேட்டால் யாராவது
வேண்டாம் என்று சொல்வார்களா என நினைத்தவனாக அவன் ”வேண்டும்” என்று சொன்னான்.
“நீ வீடு போய் சேரும் போது உன் வீட்டில் ஏழு ஜாடித் தங்கம் இருக்கும்” என்று மீண்டும் குரல் ஒலித்தது.
நாவிதனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. வேகமாக வீட்டுக்கு ஓடினான்.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கே உண்மையாகவே ஏழு ஜாடிகள் இருப்பதைக் கண்டான். அவனுக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை. அவற்றைத் திறந்து பார்த்தான். அவற்றில் தங்கக் காசுகள்
இருந்தன. ஆறு ஜாடிகள் நிறைய தங்கக் காசுகளும் ஏழாவது ஜாடியில் முக்கால் பாகம்
தங்கக் காசுகளும் இருந்தன.
ஆரம்பத்தில் பெருமகிழ்ச்சி தோன்றினாலும் ஏழாவது ஜாடியில் கால் பாகம் குறைவாக
இருப்பது ஒரு குறையாக நாவிதனுக்குத் தோன்றியது. அந்த ஏழாவது ஜாடியையும்
நிரப்பினால் மட்டுமே தன் அதிர்ஷ்டம் முழுமையானதாக இருக்கும் என்று அவன்
நினைத்தான். தன்னிடம் இருந்த வெள்ளி, தங்க நகைகளை எல்லாம் உருக்கி தங்கக் காசுகளாக
மாற்றி அந்த ஏழாவது ஜாடியில் அவன் போட்டான். ஆனாலும் அந்த ஜாடி நிரம்பவில்லை.
தன்னுடைய வேறு பல உடமைகளையும் விற்றுத் தங்கக் காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில்
போட்டான். அப்போதும் அந்த ஜாடி நிரம்பவில்லை.
மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தவன் தன் வீட்டாரை அரைப்பட்டினி இருக்கச்
செய்து தானும் பட்டினி கிடந்தான். தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தங்கக்
காசுகளாக மாற்றி அந்த ஜாடியில் போட ஆரம்பித்தான். ஆனாலும் அந்த மாய ஜாடி
நிரம்பியபாடில்லை.
அரசனுக்கும் அவன் தான் நாவிதன் என்பதால் அரசனிடம் சம்பளத்தை இரட்டிப்பாக்கிக்
கேட்டான். குடும்பத்தை நடத்தப் பணம் போதவில்லை என்று அவன் உருக்கமாகச் சொல்லவே
மனம் இரங்கிய அரசன் அவன் சம்பளத்தை இரட்டிப்பாக்கினான். அப்படி கிடைத்த பணத்தையும்
தங்கக் காசுகளாக்கி அந்த ஜாடியில் போட்டான். ஜாடி அப்போதும் நிரம்பவில்லை.
பின்னர் அவன் வேலையற்ற நேரங்களில் பிச்சை எடுக்கவும் துணிந்தான். அப்படிப்
பிச்சை எடுத்து சம்பாதித்ததையும் அவன் தங்கக் காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில்
போட ஆரம்பித்தான். அப்போதும் அந்த மாயஜாடி நிரம்பாமலேயே இருந்தது. இப்படியே பல
காலம் செல்ல நாவிதன் நிலைமை படுமோசமாகிக் கொண்டே சென்றது.
அவன் நிலைமையைக் கண்ட அரசன் ஆச்சரியத்துடன் கேட்டான். “உனக்கு என்ன ஆயிற்று?
இப்போது பெறும் சம்பளத்தில் பாதி சம்பளம் பெற்று வந்த காலத்தில் கூட நீ
திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். இப்போது
இரு மடங்கு சம்பளம் பெற்றாலும் நீ வாடிய முகத்துடனும், துன்பம் நிறைந்தவனாகவும்,
தரித்திரவாசியாகவும் ஏன் இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கத்தை வாங்கிக் கொண்டாயா
என்ன?”
நாவிதனுக்கு
தூக்கிவாரிப் போட்டது. தான் ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை அரசன் எப்படி அறிந்து
கொண்டான் என்று எண்ணியவனாக ”அரசே உங்களுக்கு இந்தச்
செய்தியைத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டான்.
அரசனுக்கு விஷயம் விளங்கி விட்டது. அவன் சொன்னான். “ஊரின் ஒதுக்குப் புறத்தில்
உள்ள ஒரு மரத்தில் யட்சன் ஒருவன் இருக்கிறான். யாரிடம் அவன் செல்வம் செல்கிறதோ
அவன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்து விடுவான் என்பது உனக்குத் தெரியாதா? இதை முன்பே
அறிந்திருந்த நான் அவன் என்னிடமும் ஏழு ஜாடித் தங்கம் தர முன் வந்த போது
சிரித்துக் கொண்டே மறுத்து விட்டேன். அந்த யட்சன் செல்வத்தை யாராலும் செலவழிக்க
முடியாது. அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தூண்டும்.
நிம்மதியாக ஒருவனை வாழ விடாது. அதனால் போய் அந்த யட்சனிடம் அந்த ஜாடிகளை
எடுத்துக் கொண்டு போகச் சொல்”
நாவிதனுக்குப் புத்தி
வந்தது. அவன் உடனடியாக அந்த யட்சன் வாழும் மரத்தடிக்குச் சென்று ”உன் ஏழு ஜாடித் தங்கம் எனக்கு
வேண்டாம். அதை நீயே திரும்ப எடுத்துக் கொள்” என்று கூறினான். ”சரி” என்று யட்சனின் குரல் வந்தது.
நாவிதன் வீடு வந்து
பார்த்த போது ஏழு ஜாடித் தங்கமும் மாயமாகிப் போய் விட்டிருந்தன. ஏழாவது ஜாடியில்
அவன் அரும்பாடு பட்டு சேர்த்துப் போட்டிருந்த தங்கக் காசுகளும் சேர்ந்து போயிருந்ததால்
அவன் பெரும் வேதனை அடைந்த போதும் நாளா வட்டத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி
வந்தான்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர்
கூறிய இக்கதையில் மனித இயல்பு மிக அழகாக விளக்கப் பட்டுள்ளது. உண்மையான தேவைகளை
நிறைவேற்ற, உழைத்து சம்பாதிப்பது அந்த நாவிதனுக்குப் போதுமானதாக இருந்தது. அவன் வீட்டில்
அனைவரும் வயிறார சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து
கொண்டிருந்தான். ஆனால் பேராசை அவன் மனதில் புகுந்து விட்ட பின் அவன் படிப்படியாக
தரம் தாழ்ந்து கொண்டே வந்திருக்கிறான். அவன் நிம்மதியையும் அது போலவே கொஞ்சம்
கொஞ்சமாக இழந்து கொண்டே வந்திருக்கிறான். அடுத்தவர் பார்த்து பரிதாபப்படும்
நிலைக்கு அவன் தள்ளப் பட்டும் விட்டான். ஏழு ஜாடித் தங்கம் வந்த பின் அவன் மிக
சுபிட்சமாக வாழ்ந்து வந்திருக்க வேண்டும். அவன் மட்டுமல்ல அவன் தலைமுறைகளே வசதியாக
வாழ அந்தச் செல்வம் போதுமானதாக இருந்தது. ஆனால் மாறாக அவனோ பிச்சை எடுக்கக் கூடத்
தயங்காத ஒரு பரிதாப நிலைக்குத் தான் தள்ளப்பட்டான்.
தேவைகளுக்காகப் பணம்
என்று இருக்கும் போது பணம் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கிறது. ஆனால்
பணத்திற்காகவே பணம் என்று மாறும் போது எல்லாமே மாறிப் போகிறது. உள்ளதை
அனுபவிப்பதைக் காட்டிலும் மேலும் அதிகம் சேர்ப்பது முக்கியமாகிப் போகிறது. அவன்
நல்ல தன்மைகளை எல்லாம் அழித்து பணமே பிரதானமாக அவனை ஆட்சி செய்ய ஆரம்பித்து
விடுகிறது. ஒரு நல்ல மனிதன் செய்யக் கூசும் செயல்களை எல்லாம் அது அவனை செய்ய
வைக்கிறது.
மனசாட்சியும்,
தெளிந்த அறிவும் ஆட்சி செய்யும் போது மனிதன் மனிதனாக இருக்கிறான். அவன் தானும்
நலமாகி சமூகத்திற்கும் நன்மை தருபவனாக விளங்குகிறான். பணம் அவனை ஆள ஆரம்பித்தால்
அவன் மிருகமாகவோ அற்பப் புழுவாகவோ தாழ்ந்து போக ஆரம்பித்து விடுகிறான். பணத்தைத்
தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தனை இல்லை என்றாகி விடுகிறது. அப்படித்தான் சேர்த்த
பணத்திலாவது மகிழ்ச்சியுடன் இருக்கிறானா என்றால் அதுவுமில்லை. இன்னும் சேர்க்க
வேண்டிய பணம் குறித்த கவலையே அவனை அதிகம் ஆட்கொள்கிறது. பணத்திற்காக எதுவும்
செய்யத் துணிபவனாகவும், அதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத தீயவனாகவும்
கூட மாறி விடுகிறான். இந்த உண்மைக்கான உதாரணங்களை இக்காலத்தில் நம்மால் வேண்டிய
அளவு காண முடியும்.
எனவே நீங்கள் பணத்திற்கு
என்றும் எஜமானாக இருங்கள். பணத்தை உங்கள் எஜமானாக்கினால் அது அந்த நாவிதனைப்
பாடாய் படுத்தியது போல உங்களையும் பாடாய் படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்!.
- - என்.கணேசன்
Thursday, November 10, 2016
இருவேறு உலகம் – 3
அவர் என்ன ஆகியிருக்கும் என்பதை ஊகிக்க முயன்றார். அந்த வாடகைக்
கொலையாளி ஏமாற்றி விட்டானா என்ற சந்தேகம் தான் முதலில் வந்தது. அவனுக்கு
முழுப்பணமும் முன்கூட்டியே தந்தாகி விட்டது என்றாலும் பணத்தை வாங்கிய பிறகு
ஏமாற்றுகிற ரகம் அல்ல அவன். அந்தத் தொழிலிலும் அவர்களுக்கென்று ஒரு தர்மம்
இருக்கிறது. தொழிலை முறையாக நடத்துகிறவர்கள் பொதுவாக ஏமாற்றுவதில்லை. ஏமாற்றவில்லை
என்றால் காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை பிணத்தை ஏதாவது விலங்கு கொண்டு
போயிருக்குமோ? இருக்கலாம் என்றது மனம். அந்த மலையின் பின்புறம் ஒரு பள்ளத்தாக்கு
இருக்கிறது. அங்கு விலங்குகள் கொண்டு போயிருந்தால் இந்த வேலைக்காரன் பார்வைக்குச்
சிக்க வாய்ப்பில்லை....
அப்படி இருக்கலாம் என்று நம்பி அவரை
நிம்மதியாக இருக்க விடாமல் இருந்தது கொலைகாரன் அலைபேசியை எடுத்துப் பேசாமல்
இருந்தது தான்.
அவரைப் போலவே இருப்பு கொள்ளாத ஆள் அவருக்கு
மறுபடி போன் செய்தான். ’இவன்
வேற....” என்று மனதில் சலித்துக் கொண்டு அவர் பேசினார். “ஹலோ”
“அவன் போன்ல கிடச்சானா”
“போன் அடிக்குது. எடுக்க மாட்டேன்கிறான்.
நைட்ல நல்லா தண்ணி போட்டுட்டு மொபைல
சைலண்டில் வச்சு தூங்கியிருப்பான் தடியன்...”
“டபுள் கேம் ஆடியிருக்க மாட்டானில்ல”
தன் சந்தேகம்
அவனுக்கும் வந்திருக்கிறது என்று நினைத்தாலும் புரியாதது போல் கேட்டார். ”என்ன சொல்ற நீ?”
“நம்ம திட்டத்த
க்ரிஷ் கிட்ட சொல்லி அவனைக் கொல்லாம இருக்க அவன் கிட்ட பேரம் பேசியிருந்தா?”
“க்ரிஷ் உயிரோட இருந்தா பைக்கில்
போயிருப்பானே. பைக் அங்கேயே தான் இன்னும் இருக்கு... அதை மறந்துட்டியா?”
“ஒரு வேளை அந்தக் கொலைகாரன் மறுபடி கார்ல
அங்கே போய், க்ரிஷ்ஷை தன்னோட கார்லயே கூட்டிகிட்டுப் போயிருந்தா?...”
அவருக்கு அவன் கற்பனை பீதியைக் கிளப்பியது.
அது கற்பனையா, நிஜமா என்பது பிறகு தான் தெரிய வரும் என்றாலும் இப்போதைக்கு அதைக்
கற்பனையாகவே நினைக்கத் தோன்றியது. அவனிடம் சொன்னார். ”சும்மா என்னென்னவோ
கற்பனை பண்ணாதே.... க்ரிஷுக்குப் போன் பண்ணிப் பேசு. சந்தேகத்தை உடனே நிவர்த்தி பண்ணிக்கலாம்...”
“ம்ம்ம்... அதுவும் சரி தான்...” என்றவன் இணைப்பைத் துண்டித்தான். ஐந்து நிமிடம் கழித்து அவன் மறுபடி
அவரிடம் பேசினான். “அவனுக்குப் போன் பண்ணினா ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான்
வருது....”
அவர் சிறிது நிம்மதியை உணர்ந்தார். ”அப்படின்னா நீ பயப்பட்ட மாதிரி இருக்காது... அவன் பிணத்தை எதாவது விலங்கு
எடுத்துட்டுப் போயிருக்கலாம்...”
“அந்த மலையில அந்த மாதிரி விலங்கெல்லாம்
கிடையாதே....”
அவனும் நிறையவே தகவல்கள் சேகரித்து
வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. “எதுக்கு அனாவசியமான சந்தேகம்... அந்தக் கொலைகாரன்
வீட்டுக்கே ஆளனுப்பி விசாரிச்சுட்டு சொல்றேன்” என்றவர் உடனடியாக
அந்த வேலையாளுக்குப் போன் செய்து விசாரித்துத் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.
வேலையாள் திரும்பவும்
போன் செய்து தகவல் தெரிவிக்கும் வரை அமைதியாக இருக்க முடியாத அவர் மனம் பல
யூகங்களை யோசித்தது. அந்த வாடகைக்
கொலையாளி ஏமாற்றி இருந்தால் வீட்டிலிருக்க மாட்டான், கண்டிப்பாகத் தப்பி
ஓடியிருப்பான். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இப்போதும் அவர்
உள்ளுணர்வு சொன்னது. அந்தப் பாம்பு கடித்ததாக வாடகைக் கொலையாளி நினைத்தது தவறாக
இருந்திருக்கலாம். ஆனால் கொலையையே தொழிலாகக் கொண்ட ஒருவன் அந்தத் தவறைச்
செய்திருப்பான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை. அதுவும் அந்த வாடகைக்
கொலையாளி பாம்பு கடித்த இடத்தையும் கூடத் தெளிவாகச் சொன்னான். செத்து விட்டான் என்பதையும்
உறுதியாகச் சொன்னான். உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அந்தத் திறமைசாலியான வாடகைக் கொலையாளி
அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் என்ன
நடந்திருக்கும்? எத்தனையோ கற்றிருந்த அந்த அறிவுஜீவியான க்ரிஷ் பாம்பு விஷத்தை
முறியடிக்கும் வித்தையையும் கற்றிருந்திருப்பானோ? செத்தது போல நடித்துப் பின்
தப்பி இருப்பானோ? சேச்சே... இதெல்லாம் அதிகப்படியான கற்பனை! தப்பியிருந்தால் பைக்
அங்கிருக்க வாய்ப்பில்லை. காற்றிலா அவன் பறந்திருக்க முடியும்? வேலைக்காரன் போன்
செய்யத் தாமதமாக, தாமதமாக மனம் என்னென்னவோ கற்பனைகளைச் செய்து அவரை திகிலடைய வைத்தது.
பாழாய் போன வேலைக்காரன் போகிற வழியிலேயே செத்து விட்டானா என்ன, இன்னும் போன்
செய்யாமல் இருக்கிறான்.....!
அடுத்த அரை மணி நேரத்தில்
அவரது வேலையாள் போன் செய்தான். பேசும் போது அவன் குரல் நடுங்கியது. “ஐயா அவன்
செத்துட்டான்யா.....”
அவருக்குக் கோபம் வந்தது. “என்ன உளர்றே” என்று கடுமையாகக் கேட்டார்.
“உண்மை தானுங்கய்யா. அவனை பாம்பு
கடிச்சுடுச்சாம்.....”
அவர் அதிர்ந்து போனார். அவர் கரகரத்த குரல்
பதற்றத்துடன் கேட்டது. “அவன் பிணத்த நீ பாத்தியா?”
“ஆமாங்கய்யா. கூட்டத்தோட கூட்டமா நின்னு
பாத்தேன். உடம்பெல்லாம் விஷம் ஏறி கருப்பாயிடுச்சு........” அவன் குரலில்
இருந்த நடுக்கம் இன்னமும் நீங்கவில்லை.
அவர் சிறிது அமைதி
காத்தார். மேற்கொண்டு அவனாக எதுவும் சொல்லாதது எரிச்சலைக் கிளப்பியது. “ஏண்டா தவணை
முறையில தான் எதுவும் சொல்லுவியா?”
அவன் அவசர அவசரமாய் சொன்னான். “அவன்
பக்கத்து வீட்டுக்காரன் காலைல ஒம்பதரை மணிக்கு எதோ பேசப் போன் செஞ்சிருக்கான்.
இவன் போன் எடுக்கலைன்னதும் நேர்லயே பேசப்போயிருக்கான். அப்ப தான் இவன்
செத்துக்கிடந்தத பாத்திருக்கான்.... டாக்டரக் கூப்டுருக்கான். வந்து பாத்த டாக்டர்
அவன் செத்து அஞ்சாறு மணி நேரம் ஆயிருக்கும்னு சொன்னாராம்.... கடிச்சது சாதாரண
பாம்பா இருக்காது, கடுமையான விஷப்பாம்பா இருக்கும்னும் சொன்னாராம்”
அந்தப் பாம்பு கடுமையான விஷப்பாம்பு
என்பதைக் கொலைகாரனே அவரிடம் சொல்லி இருக்கிறான். கடித்து சில நிமிடங்களிலேயே உயிர்
போவது உறுதி என்றும், பலரை அப்படிக் கொன்றிருப்பதாகவும் பெருமையாக அவரிடம்
சொல்லியிருக்கிறான். அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டே
செத்திருக்கிறான் முட்டாள். இப்படி யாராவது அஜாக்கிரதையாய் இருப்பார்களா?...
“பாம்பு கிடச்சுதா? யாராவது பார்த்தாங்களா?” அவர் ஆர்வத்துடன் கேட்டார்.
“இல்லை.... அந்த வட்டாரமே நடுங்கிட்டிருக்கு....
எல்லாரும் அவன் காலக் கடிச்ச மாதிரி நம்மளயும் கடிச்சுடுமோன்னு இன்னும்
பயத்தோட தேடறாங்க.....”
’அவன்
காலக் கடிச்ச மாதிரி’
என்ற தகவல் திகைப்பை ஏற்படுத்தியது. நேற்றிரவு காரில் வரும் போது அந்த வாடகைக்
கொலையாளியிடம் கேட்ட கேள்வியை அவரையும் அறியாமல் கேட்டார். “பாம்பு அவனை எங்கே
கடிச்சுதாம்?”
“வலது கால் கட்டை விரல்லங்கய்யா”
அவர் கையிலிருந்து செல் போன் நழுவிக் கீழே
விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவருக்கு
என்ன நினைப்பது, நடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
அந்த நேரத்தில் தான் அவருடைய கூட்டாளி
நேரிலேயே அவரைப் பார்த்துப் பேச அங்கு வந்தான். அவர் உட்கார்ந்திருந்த நிலை அவனை
திகைக்க வைத்தது. அவரை அவன் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்தவன். அவருக்கு
அடுத்தவரை அதிர வைத்து தான் பழக்கமே ஒழிய அதிகமாய் அதிர்ந்து பழக்கமில்லை. அவரே
இப்படி அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அந்த வாடகைக் கொலையாளி
‘டபுள் கேம்’ ஆடியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டது சரியாகவே இருந்திருக்கும்...
அவன் அவரருகில் வந்தமர்ந்து கேட்டான்.
“என்னாச்சு. அவன் ஏமாத்திட்டானா....”
அவர் பெருமூச்சு விட்டார்.
“ஏமாந்துட்டான்....”
அவன் புரியாமல் விழித்தான். “எப்படி?”
அவர் சொன்னார். “அவனே செத்துட்டான்.....”
இப்போது அதிர்ந்து போனது அவன். மறுபடி அவன்
பலவீனமாய் கேட்டான். “எப்படி?”
சற்று முன் வேலையாள் சொன்னதை எல்லாம் அவர்
சொன்னார். அவன் விழிகள் பிதுங்க அவரைப் பார்த்தான். நேற்று க்ரிஷ்ஷைப் பாம்பு
கடித்ததாகச் சொன்ன இடமான வலது கால் கட்டைவிரலிலேயே இவனும் பாம்பு கடித்துச்
செத்திருப்பது அவனுக்கும் வில்லங்கமாகத் தெரிந்தது.
தரையில் விழுந்திருந்த அவர் செல்போன்
திடீரென்று இசைத்தது. அவன் தான் சுதாரித்துக் கொண்டு குனிந்து அழைக்கின்ற ஆளின்
பெயர் என்ன என்று பார்த்து விட்டுச் சொன்னான். “ V K
”
இப்போது அவரது முட்டை விழிகள் பிதுங்கின.
அவன் கேட்டான். “V Kன்னா
யார்?”
சப்த நாடியும் ஒடுங்கிப் போய் வெறும்
காற்றாய் திகிலுடன் வந்தது அவர் பதில். “வாடகைக் கொலையாளி”
(தொடரும்)
என்.கணேசன்
Monday, November 7, 2016
அஞ்ஞான இருளை அகற்ற வழியென்ன?
கீதை காட்டும் பாதை 43
பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தில் பரம்பொருளின்
விசேஷ தன்மைகள் விவரிக்கப்படுகின்றன. ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
என்னுடைய பெருமையையும், யோகத்தையும் உள்ளதை
உள்ளபடி எவன் அறிகிறானோ அவன் அசைக்க முடியாத பக்தி யோகத்துடன் கூடியவனாக ஆகிறான்.
இதில் சந்தேகமில்லை.
நானே இவ்வுலகத்தின் தோற்றத்திற்குக்
காரணம். என்னிடம் இருந்தே எல்லாம் இயங்குகின்றன என்று அறிந்து என்னிடம்
பற்றுகொண்டு ஞானிகள் என்னைத் துதிக்கிறார்கள்.
கீதோபதேசத்தின் போது ஸ்ரீகிருஷ்ணர்
துவாரகையின் மன்னனாகவோ, அர்ஜுனனின் நண்பனாகவோ, ஏன் மகாபாரத காலத்தின் அவதாரமாகவோ
கூடப் பேசவில்லை. அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஆதியந்தமில்லாத மகாசக்தியின்
கருப்பொருளாகவே லயித்து, அந்த மகோன்னத நிலையிலிருந்தே பேசுகிறார். அதை மனதில்
இருத்திக் கொண்டு படித்தால் மட்டுமே இந்த சுலோகங்களின் உண்மைப் பொருளை ஒருவரால்
விளங்கிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் இது சுயதம்பட்டமாகவே தெரியும்.
சுயதம்பட்டமடித்துக் கொள்ளும் ஒருவர் அர்ஜுனனுக்குத்
தேரோட்டியாக வந்திருக்க மாட்டார். முன்பே கர்மயோக விளக்கங்களில் குறிப்பிட்டது போல
குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவிட்டு, நட்பு பாராட்டி போர்க்களத்திற்குக் கூட்டி
வந்து, தேரோட்டி, அர்ஜுனனின் கால்களில் உதைகள்பட்டிருக்க மாட்டார். இங்கு பேசுகிற
பரம்பொருளிடம் சிறுமை இல்லை. இறைநிலையின் உச்சத்திலேயே நின்று உண்மையை உரத்துச்
சொல்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம் தனிமனித அடையாளம் இல்லை. இதை நினைவு வைத்துக் கொண்டு
மேலே சொன்ன சுலோகங்களின் பொருளை ஆய்வு செய்வோம்.
இறைவனின் மகாசக்திகளை முற்றிலும் உள்ளபடியே
அறிந்து கொள்கிற போது, அந்த சக்தியைத் தவிர இங்கு வேறொன்றுமில்லை என்பதையும்
ஒருவரால் உணர முடியும். அரைகுறையாய் அறிந்தவனுக்கு இருக்கும் குழப்பங்கள், பலவீனங்கள்
முற்றிலும் அறிந்தவனிடம் இல்லை. எந்தப் பரம்பொருளை அறிந்த பின் வேறெதையும் அறிய
வேண்டிய அவசியம் இல்லையோ, எந்தப் பரம்பொருளை அறிந்த பின் வேறெதன் மீதும் ஆசை கொள்ள
முடியாதோ அந்தப் பரம்பொருளை அறிந்த பின் தவறான எண்ணங்கள் ஒருவர் மனதில் தோன்றுமா? பாவங்கள்
செய்யும் தூண்டுதல் தான் இருக்குமா?
தவறான எண்ணங்களும், பாவச் செயல்களும்
அறியாமையால் வரும் துன்பங்கள் அல்லவா? அவற்றின் அடிப்படையில் இருப்பது அறியாமையே
அல்லவா? பரம்பொருளை அறியும் போது அவன் சக்தியின் அங்கமென நம்மை நாம் உணரத்
தவறுவோமா? அப்படி அறிந்த பின் ஒருவரால்
இந்த அழுக்குகளை சகித்துக் கொள்ள முடியுமா? அவை எல்லாம் உயர்ந்த நிலைக்கு எட்டிய
ஆத்மாவிற்கு அருவருப்பே அல்லவா? அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் அத்தகைய மனிதன் சகல
பாவங்களில் இருந்தும் விடுபடுவதாகச் சொல்கிறார்.
இறைவனை அறிந்தவன், அறிந்து துதிப்பவன், பாவம் செய்து விட்டுத்
தப்பிக்க முடியும் என்கிற பொருள் கொண்டால் அது அறிவுப்பிழை. இறைவனை அறிந்தவனுக்கு
பாவம் செய்ய முடியாது, அவன் மனம் அவனை அனுமதிக்காது. அதனாலேயே அவன் பாவங்களைத்
தவிர்த்து அதிலிருந்து விடுபட்டிருக்கிறான் என்று தான் இதன் மெய்ப்பொருள்.
இறைவனை முழுமையாக அறிந்து கொள்ளும் போது,
அவன் அருமை பெருமைகள் விளங்கும் போது அவன் மீது பக்தி ஏற்படுவது இயற்கை. உண்மையான
பக்தி அவ்வப்போது வந்தும், மறைந்தும் போகிற சமாச்சாரம் அல்ல. அப்படி வந்து போவது
பக்தியுமல்ல. உண்மையான பக்தி உறுதியானது. காலங்களும், கோலங்களும் மாறினாலும்
மாறாமல் இருப்பது. எல்லாப் பற்றுகளையும் நீக்கிய பின் அந்தப் பரமன் மேல் மட்டும்
பற்று வைக்க ஞானம் வேண்டும்.
இதைத் தான் திருவள்ளுவரும் சொல்கிறார்-
”பற்றுக
பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
(பற்றுகள் இல்லாதவனாகிய இறைவன் மீது பற்று
வைக்க வேண்டும். அந்தப் பற்றையும் பற்றுவது மற்றெல்லாப் பற்றுகளையும்
விட்டொழிப்பதற்காகவே!)
பரம்பொருளாகிய இறைவனைப் பற்றிக்
கொண்டவர்கள் பெறுவது என்னென்ன? ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
என்னிடம் மனத்தைச் செலுத்தியும், என்னிடம்
உயிரை அர்ப்பணித்தும், ஒருவருக்கொருவர் போதித்துக் கொண்டும், என்னைப் பற்றியே
எப்போதும் பேசிக் கொண்டும், மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகிறார்கள்.
இவ்வாறு அன்புடன் என்னிடம் எப்போதும்
ஈடுபட்டவர்களுக்கு நான் புத்தி யோகத்தை அளிக்கிறேன். அதனால் அவர்கள் என்னை
அடைகிறார்கள்.
அவர்களுக்குக் கருணை புரிவதற்காகவே நான்
அவர்களின் உள்ளத்தில் தங்கி ஒளிமிக்கதான ஞானவிளக்கினால் அவர்களின் அஞ்ஞானமென்னும்
இருளை அழித்து விடுகிறேன்.
இறைவனை ஒரு கணமாவது உணர முடிந்த
பாக்கியசாலிகள் பின் எப்போதும் வேறெதிலும் முழுத்திருப்தி அடைய மாட்டார்கள். உயர்ந்ததிலும்
உயர்ந்ததை ஒரு கணமேனும் உணர்ந்தவனுக்கு அதை விடக் குறைவான மற்ற அனைத்திலும்
திருப்தி ஏற்படுமா? அதனால் ஒரு கணம் உணர்ந்த அந்த பவித்திரத்தை, பரம்பொருளைப்
பற்றிப் பேசியும், போதித்தும், கேட்டும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறும் சுபாவம்
வந்து விடும்.
அப்படி இறையுணர்வைப் பல வழிகளில் தக்க
வைத்துக் கொள்பவன் தான் உண்மையான அறிவாளி. அந்த ஈடுபாடு இருப்பவனுக்கு
புத்தியோகத்தை அளிப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அந்தப் புத்தியோகத்தால்
அவர்கள் இறைவனையே அடைவதாகவும் கூறுகிறார். அவர்கள் உள்ளத்தில் ஒளிமிக்க ஞான
விளக்கை ஏற்றி அவர்களுடைய அறியாமையென்னும் அக இருளை அழித்து விடுவதாகவும்
உறுதியளிக்கிறார்.
கால காலமாக நமது இதயங்களில்
மண்டிக்கிடக்கும் காரிருள் எத்தனை துன்பங்களில் நம்மைத் தள்ளியிருக்கிறது.
அறியாமையால், அக இருளால் எத்தனை கோடி வழிகளில் தவறிழைத்து அதன் விளைவுகளில் சிக்கி
வேதனைப்பட்டிருக்கிறோம். ஜென்ம ஜென்மங்களாக நம்மை ஆட்சி புரிந்து துக்கத்தின்
பிறப்பிடமாகவே நம்முள் மண்டி இருக்கும் அறியாமைக் காரிருளைத் துரத்த எத்தனையோ
வழிகள் தேடித் தேடித் தோல்வி அடைந்திருக்கிறோமே! இந்த இருள் விலக ஆத்ம ஞான ஒளியல்லவா
வேண்டும்? அதை இறைவனால் அல்லவா ஏற்ற முடியும்?
அந்தப் பரம்பொருளின் உண்மைத் தன்மை
அறிந்து, அதன்மூலம் பக்தி உருவாகப் பெற்று, அந்தப்பக்தியால் அவனையே பற்றிக் கொண்டு
அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பவன் மனதில் ஞான ஒளிவிளக்கை இறைவன் ஏற்றி வைப்பதாக
உறுதியளிக்கிறார். இதை விட ஒருவன் அடைய வேண்டிய பேறென்ன இருக்க முடியும்?
பாதை நீளும்....
என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)