சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 27, 2015

எல்லாம் இழந்த போதும் முயற்சி இழக்காதவர்!

சிகரம் தொட்ட அகரம்-3
வெற்றியின் உச்சத்தை அடைய வேண்டும் என்றால் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும், விதி ஒத்துழைக்க வேண்டும் என்றெல்லாம் அபிப்பிராயம் கிட்டத்தட்ட எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராத உயரங்களுக்குச் சென்ற மனிதர்களில் பெரும்பாலானோர் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தவர்களே என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதிர்ஷ்டம் வருவதற்கு முன் துரதிர்ஷ்டத்தின் விடாத துரத்தல், விதி ஒத்துழைப்பதற்கு முன் அது செய்யும் சதி- இதில் எல்லாம் நிலைகுலைந்து விடாதவர்களையே பிற்காலத்தில் அதிர்ஷ்டம் வரவேற்று உதவுகிறது, விதி ஒத்துழைக்கிறது. ஒரு நல்ல உதாரணத்தைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் என்கிற கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1973ல் பிறந்தவர் பிரேம் கணபதி.  ஏழு குழந்தைகளில் ஒருவர் அவர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவருக்கு பிரத்தியேகத் திறமைகள் எதுவும் கூட இருக்கவில்லை.  வறுமை அந்தக் கிராமத்தில் இருந்து அவரைச் சென்னைக்குத் துரத்தியது. மாத வருமானம் சுமார் ரூ 250/- மட்டுமே கிடைக்க முடிந்த சில்லறை எடுபிடி வேலைகள் செய்து பிழைத்து வந்தார். அதையும் முடிந்த வரை சேமித்து கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு அனுப்பி வைப்பார்.

அப்போது பழக்கமான ஒருவன் மும்பையில் ரூ1200/- மாத வருமானத்தில் வேலை தயாராக இருக்கிறது என்று சொல்ல வீட்டுக்குக் கூடத் தெரிவிக்காமல் அந்த ஆளுடன் ப்ரேம் கணபதி 1990ல் மும்பைக்கு ரயிலில் பயணமானார். மும்பையில் பாந்த்ரா ரயில்நிலையத்தில் அவருடைய சட்டைப்பையில் இருந்த முழு சேமிப்பான ரூ 200/-ஐ திருடிக் கொண்டு கூட வந்தவன் மாயமாய் மறைந்து விட்டான். அப்போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற உண்மையை ப்ரேம் கணபதி உணர்ந்தார். 17 வயதில் கையில் நயாபைசா இல்லாமல், பாஷையும் தெரியாமல், தெரிந்தவர்களும் யாருமில்லாமல் ஆனாதரவாய் நிற்பது கடுமையான துர்ப்பாக்கியம் அல்லவா?

ப்ரேம் கணபதி மேல் பரிதாபப்பட்ட ஒருவர் திரும்பி சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொடுக்க முன் வந்தார். ஆனால் தோற்ற மனிதனாய் சென்னைக்குத் திரும்ப ப்ரேம் கணபதிக்கு மனம் வரவில்லை. மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது.  மாதம் ரூ150/- தான் சம்பளம் என்றாலும் இரவு அந்தப் பேக்கரியிலேயே தூங்க இடம் கொடுத்ததால் அந்த வேலைக்குச் சேர்ந்து கொண்டார் ப்ரேம் கணபதி.

சில மாதங்களில் டீக்கடையில் டீ விற்கிற பையனாய் முன்னேறினார். சுறுசுறுப்பும், முகமலர்ச்சியுடன் பழகுகிற தன்மையும் கொண்ட ப்ரேம் மற்ற டீ விற்கும் பையன்களை விட மூன்று மடங்கு அதிகமாக டீ விற்று வியாபாரத்தைப் பெருக்கினார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளவு தான் ஒருவரே டீக்கடைக்குச் சம்பாதித்துக் கொடுத்தார். ஒரு வாடிக்கையாளர் அதைப் பார்த்து விட்டு ஒரு டீக்கடைக்குத் தான் முதல் போடத் தயார் என்றும் ப்ரேம் கணபதி டீக்கடையை நடத்தினால் வரும் இலாபத்தில் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். ப்ரேம் கணபதி ஒத்துக் கொள்ளவே புதிய டீக்கடையைத் துவக்கினார்கள். ப்ரேமின் திறமையால் வியாபாரம் மிக நன்றாக நடந்தது. இலாபம் அதிகமாகிக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் இத்தனை பணத்தை இவனுக்குத் தர வேண்டுமா என்று முதல் போட்டவருக்கு பொறாமை ஏற்பட்டது. அவர் ப்ரேம் கணபதியை டீக்கடையில் இருந்து விலக்கி விட்டு சம்பளத்துக்கு இன்னொருவரை வைத்துக் கொண்டார்.  

மறுபடியும் ஏமாற்றப்பட்டாலும் மனம் தளராத ப்ரேம் கணபதி ஒரு கைவண்டியை நாள் ஒன்றுக்கு ரூ150/- வாடகைக்கு எடுத்து அது வரை சேர்த்திருந்த ரூ 1000/-ல் ஸ்டவ்வும், பாத்திரங்களும் வாங்கி வாஷி ரயில் நிலையம் எதிரில் இட்லி தோசை விற்க ஆரம்பித்தார்.  மிக சுத்தமாக இடத்தை வைத்துக் கொண்டு மிக ருசியாக இட்லி தோசைகளை சமைத்துக் கொடுத்த அவருடைய அந்த சிறிய கைவண்டி தோசைக்கடை நாளடைவில் பிரபலமாகியது. பிறகு கைவண்டியை விட்டு ஒரு கடையையே வாடகைக்கு ப்ரேம் எடுத்துக் கொண்டார். அதற்கு தோசா ப்ளாசா என்று பெயரிட்டார். அவருடையை தோசா ப்ளாசாவைத் தேடி நாளடைவில் தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தார்கள். மிக நல்ல வருமானம் வர ஆரம்பிக்கவே சைனீஷ் உணவு வகைகள் செய்யும் கடை ஒன்றையும் பக்கத்தில் வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அது தோல்வி அடைந்தது. அதனால் அதை விட்டு விட்டு தோசையிலேயே பல பல வகைகளை அறிமுகப்படுத்தி கடையை விரிவுபடுத்தினார்.  அவருடைய மெனுவில் 108 வகை தோசைகள் இருந்தன.

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் ருசி, சேவை, விதவிதமான தோசை வகைகள், சுத்தம் இருந்ததாலும் தரத்தை எப்போதும் உயர்வாகவே தக்க வைத்திருந்ததாலும் அவர் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் 45க்கும் மேலான தோசா ப்ளாசாக்கள் ப்ரேம் கணபதிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் துபாய், நியூசிலாந்து முதலான பத்து வெளி நாடுகளில் கூட கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முப்பது கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகவும் ப்ரேம் கணபதி இருக்கிறார் என்ற செய்தியைப் படிக்கையில் முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவன் சொன்னது முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறதல்லவா?

ப்ரேம் கணபதிக்கு துரதிர்ஷ்டம் ஆரம்பத்தில் குடும்ப வறுமையில் வந்தது. அடுத்தது மும்பைக்கு அழைத்துப் போனவனால் வந்தது. அடுத்தது லாபத்தில் பாதி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய ஒரு வியாபாரியால் வந்தது. ஒவ்வொரு முறையும் எல்லாம் இழந்து போக நேர்ந்தது. ஏமாற்றப் பட்டதையே வருவோர் போவோரிடம் சொல்லி அனுதாபம் தேடிக் கொண்டு நிற்காமல், புலம்பாமல், அடுத்ததாக என்ன செய்து மீள்வது என்று சிந்தித்து, அதற்கு ஏற்றபடி புத்திசாலித்தனத்தோடு சலிக்காமல் உழைத்து அதிர்ஷ்டத்தைப் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொண்ட ப்ரேம் கணபதியின் வாழ்க்கை பல பேருக்குப் படிப்பினை!

விதி கூடத் தன் சதியால் கதிகலங்கிப் போகாதவனை ஒரு கட்டத்திற்குப் பின் சிலாகித்து உயர்த்தியே விடுகிறது. அதனால் விதி சதி செய்யும் போது தளராமல் தாக்குப்பிடியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். ஒன்று சரிப்படா விட்டால் பாடம் படித்துக் கொண்டு வேறு விதமாக முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள். ஒரு நாள் விதியும் உங்கள் விசுவாசியாக மாறும். எல்லாம் உயர்வாய் அமையும்!

-       என்.கணேசன்


4 comments:

  1. அடுத்து என்ன...? அடுத்து என்ன...? உயர்வை கண்டிப்பாக ஒருநாள் அடையலாம்... 100% உண்மை...

    ReplyDelete
  2. Arumaiyana padipinai sir....! Thalaraamal muyarchi seithaal... Vetri nichayam... Enpatharku nalla uthaaranam

    ReplyDelete
  3. Ganesan Sir, ungal ezhuthukkum Prem Ganapathi avargalin Vida Muyarchikkum Thalai Vanangukiraen.

    ReplyDelete