சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 14, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 46

 ந்த புத்த பிக்குவின் கோரிக்கையை ஏற்று அவர் ஓய்வறையில் தங்குவது நல்லது தானே என்று அக்‌ஷய் நினைத்த போதும் தன் நிபந்தனைகளை அவன் அவரிடம் வெளிப்படையாகவே தெரிவித்தான். 

“புத்த பிக்குவே. நாலாபக்கமும் மைத்ரேயருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல. இவரைப் பத்திரமாக திபெத்திலிருந்து அழைத்துப் போகும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். அதனால் நான் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்புகிறேன். எங்காவது ஒரு அறையில் தங்குவதாக இருந்தால் அது தனியறையாகவும் அதைத் தாளிட்டு நாங்கள் இருவர் மட்டுமே உள்ளே இருக்க முடிந்ததாகவும் இருந்தால் ஒழிய அங்கு தங்க நான் விரும்பவில்லை....

புத்த பிக்கு சிறிதும் தயங்காமல் சொன்னார். “அப்படியே தங்குங்கள் அன்பரே. என் ஓய்வறையில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள். அதற்கு வெளியே உள்ள வரவேற்பறையில் நான் தங்கிக் கொள்கிறேன். அதற்கும் வெளியே உள்ள வராந்தாவில் என் பிரதான சீடன் தங்கிக் கொள்வான். எந்த ஆபத்தும் எங்கள் இரண்டு பேரைத் தாண்டாமல் தங்களை நெருங்க முடியாது

அக்‌ஷய் அந்த புத்த பிக்குவுக்கு மனதார நன்றி தெரிவித்தான். “மிக்க நன்றி. அதிகபட்சம் இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவோம் பிக்குவே. இந்த இரண்டு நாட்களுக்கு அதிகமாக எங்கள் பொருட்டு நீங்கள் அசௌகரியத்தைச் சந்திக்க நேரிடாது.

எத்தனை நாட்கள் தங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் தங்க சம்மதித்ததற்காக நான் தான் தங்களுக்கும் மைத்ரேயருக்கும் நன்றி சொல்ல வேண்டும் அன்பரேஎன்று குரல் தழுதழுக்கச் சொன்ன புத்த பிக்கு இருவரையும் தலையைத் தாழ்த்தி வணங்கினார். அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் வழக்கம் போல தனக்குச் சம்பந்தமில்லாத பேச்சை பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அசுவாரசியமாய் நின்று கொண்டிருக்கும் சிறுவனைப் போல நின்று கொண்டு இருந்தான்.

“வாருங்கள் செல்லலாம்என்று சொன்ன புத்தபிக்கு டார்ச் விளக்குடன் முன்னால் செல்ல மைத்ரேயனைத் தனக்கு முன்னால் இருத்தி அக்‌ஷய் பின் தொடர்ந்தான். ஐந்தாம் தளத்தின் படிகளில் கீழ் இறங்குகையில் கீழே புத்தபிக்குவின் பிரதான சீடன் நின்று கொண்டிருந்தான். அவன் மைத்ரேயனை பிரமிப்பு நிறைந்த பார்வையில் பார்த்து வணங்கினான். அவன் கையிலும் சிறிய டார்ச் விளக்கு இருந்தது. புத்தபுக்கு, மைத்ரேயன், அக்‌ஷய் முன் செல்ல கடைசியாய் அவன் சென்றான். தங்கள் காலடி சத்தங்கள் அல்லாமல் வேறெதாவது சத்தம் கேட்கிறதா என்று மிகவும் கவனமாக அக்‌ஷய் காதுகளைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். நல்ல வேளையாக அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை.

புத்த பிக்குவின் ஓய்வறைக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். பிரதான சீடன் வெளியிலேயே நின்று கொண்டான். மற்றவர்கள் உள்ளே நுழைந்தார்கள். புத்த பிக்குவின் அறை ஓரளவு வசதியாகவே இருந்தது. குளிரைத் தடுக்க நெருப்பு மூட்டும் பகுதி, புனித நூல்கள் நிறைந்த ஒரு புத்தக அலமாரி, இரண்டு மரக்கட்டில்கள் இருந்தன.  நெருப்பு உள்ளே இன்னும் எரிந்து கொண்டிருந்ததால் அவர் அறையில் இதமான வெப்பம் நிறைந்திருந்தது.   

கட்டில்களில் பெரியதாக இருந்த கட்டிலை மைத்ரேயனுக்காக புத்த பிக்கு தயார்ப்படுத்தினார். துவைத்த புதிய படுக்கைத் துணிகளை எடுத்து பயபக்தியுடன் அவர் படுக்கையில் பரப்பியதைப் பார்க்கும் போது அக்‌ஷய் முகத்தில் சிறியதாய் புன்முறுவல் தவழ்ந்தது. அவரைப் பொருத்த வரை அக்‌ஷய் இரண்டாம் பட்சமே!

மைத்ரேயன் புத்தபிக்குவின் இடது கையில் விரல்கள் பெரிதாக வீங்கி இருந்ததைக் கவனித்து திடீரென்று கேட்டான். “ஏன் உங்கள் விரல்கள் வீங்கி இருக்கின்றன?

அவன் வாயிலிருந்து அவர் கேட்ட முதல் சொற்கள் அவை. அவன் கரிசனத்தோடு கேட்டதால் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேச்சு வராமல் சிறிது தடுமாறிப் பின் சொன்னார். ஒரு கட்டை கை மேல் விழுந்து விட்டது. அதனால் தான் வீக்கம் போதிசத்துவரே!

“வலிக்கிறதா?என்று கேட்டபடியே மைத்ரேயன் அவர் கைவிரல்களின் வீக்கத்தைத் தடவினான். புத்தபிக்கு அவன் தொட்டதில் சிலிர்த்துப் போனார். அவர் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அந்தக் கணத்தில் அங்கு பக்தனுக்கும், பக்தனது பகவானுக்கும் இடையில் அந்நியமாய் அக்‌ஷய் தன்னை உணர்ந்தான்.

மைத்ரேயனின் இன்னொரு முகமா இது என்று யோசிக்கையில் அவன் வீட்டில் தாய் கண்ணீரைத் துடைத்த காட்சியும் அக்‌ஷய் நினைவுக்கு வந்தது. மைத்ரேயன் தானாக மென்மையாக நடந்து கொண்ட அபூர்வ தருணங்கள் அவை. ஆனால் ஒரு கணம் தான் அந்த அசாதாரண தருணம் நீடித்தது. புத்த பிக்கு பரவசத்துடன் மறுபடி அவனை வணங்க, மைத்ரேயன் உடனடியாக வந்து அக்‌ஷய் அருகில் நின்று கொண்டான்.   

புத்த பிக்கு அவனைப் புன்னகையுடன் பார்த்து விட்டு அடுத்ததாக இன்னொரு கட்டிலையும் அக்‌ஷய் உறங்குவதற்காகத் தயார்ப்படுத்த ஆரம்பித்தார். பின் வெளியேறும் முன்பு இருவரைப் பார்த்தும் சொன்னார். “என்ன தேவைப்பட்டாலும் என்னை அழையுங்கள். நான் வெளியறையில் தான் இருப்பேன்.

அக்‌ஷய் மட்டும் தலையசைத்தான். அவர் சென்று விட்டார். அக்‌ஷய் அந்த அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். மைத்ரேயனை பெரிய கட்டிலில் படுக்க வைத்து விட்டு சிறிய கட்டிலுக்கு நகர யத்தனிக்கையில் மைத்ரேயன் அக்‌ஷயிடம் சின்ன புன்னகையுடன் சொன்னான். “நீங்கள் இங்கேயே என்னுடன் படுத்துக் கொள்ளுங்கள். அது தானே எனக்கு பாதுகாப்பு

மைத்ரேயனுக்குத் தன் பாதுகாப்பில் பெரிதாய் அக்கறை இருக்கவில்லை என்று அறிந்திருந்த அக்‌ஷய் அவனைப் புன்னகையுடன் பார்த்தான். சரி என்று அவனுடனேயே படுத்துக் கொண்டான். மைத்ரேயன் அவனை ஒட்டிப் படுக்கையில் அக்‌ஷய்க்கு மறுபடி அவனுடைய மகன்கள் நினைவுக்கு வந்தனர். அதற்கு மேல் அவனுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. அவனுக்கிருந்த கடும் களைப்பும், அப்போதைய பாதுகாப்பான சூழ்நிலையும் அவனை உடனடியாக உறங்க வைத்தன. ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனான்.

காலையில் அவன் கண் விழிக்கையில் மைத்ரேயன் அருகில் இருக்கவில்லை. அதிர்ந்து போய் அவன் எழுந்து பார்க்கையில் மைத்ரேயன் அந்த அறையின் மத்தியில் ஆழமான தியானத்தில் அமர்ந்திருந்தான். வெளியே இருந்து சூரிய கிரணங்கள் அவன் மீது விழுந்து கொண்டிருந்தன. எப்போது இவன் எழுந்தான்? எத்தனை நேரமாய் இப்படி தியானத்தில் இருக்கிறான் என்று யோசித்தபடி அக்‌ஷய் அவனையே கூர்ந்து பார்த்தான். இந்த உலகையே மறந்து வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து விட்டவனாய் மைத்ரேயன் தெரிந்தான். அசாதாரண அமைதியும் சாந்தமும் அந்த முகத்தில் பரவி இருந்தன.  

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த அக்‌ஷய்க்கு மைத்ரேயன் தீட்டா அல்லது டெல்டா அலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றியது. இந்தச் சின்ன வயதிலேயே இது சாத்தியமாவது சாதாரணமானவர்களுக்கு வாய்க்கக் கூடியதல்ல. அந்த சிந்தனையில் அவன் இருக்கையில் ஜன்னல் வழியே புத்த பிக்கு தெரிந்தார். அவர் மைத்ரேயனைப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  

அவருடைய அறையை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அவர் வெளியே இருந்து அப்படி பார்ப்பது அவனுக்கே பாவமாக இருந்தது. அக்‌ஷய் உடனடியாக எழுந்து சென்று கதவைத் திறந்தான். தாழ்ந்த குரலில் அவருக்குக் காலை வணக்கம் சொன்னான். புத்த பிக்கு அவனிடம் தன் இடது கை விரல்களைக் காண்பித்தார். நேற்றிரவு விரல்களில் அதிகமாய் தெரிந்த வீக்கம் இப்போது சுத்தமாய் இருக்கவில்லை. அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்தான். உணர்ச்சி வசப்பட்டிருந்த அவருக்குப் பேச முடியவில்லை. பயபக்தியுடனும் பரவசத்துடனும் உள்ளே சென்று மைத்ரேயன் முன் மண்டியிட்டு வணங்கினார். அவன் கண் விழித்துப் பார்க்கும் வரை எழவில்லை.

சில நிமிடங்கள் கழித்து கண் விழித்த மைத்ரேயன் அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “எனக்குப் பசிக்கிறது



ட்லாண்டா விமான நிலையத்தை இன்னும் இருபது நிமிடங்களில் அடைந்து விடுவோம் என்று விமானத்தில் அறிவித்தார்கள். மாரா சோம்பல் முறித்து நிமிர்ந்து உட்கார்ந்தான். திபெத்திலிருந்து கிளம்பி அமெரிக்கா வந்து  விட்டாலும் மனம் என்னவோ திபெத்திலும், மைத்ரேயன் மீதுமே இருந்தது. இப்போதும் அவன் அங்கேயே இருப்பானா, இல்லை வேறெங்காவது சென்றிருப்பானா? சம்யே மடாலயத்தில் இருக்கும் அவனுடைய ஆட்கள் மைத்ரேயன் மடாலயத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை மட்டும் சில மணி நேரங்களுக்கு முன் தான் உறுதிப்படுத்தினார்கள்.

“முடிந்தால் அவன் உடனடியாக உங்களை நெருங்க முடியாத தூரத்தில் இருந்து கண்காணியுங்கள். முடியா விட்டால் அதுவும் வேண்டாம்.....என்று அவன் சொல்லி இருந்ததைப் பின்பற்றிய அவர்களுக்கு மைத்ரேயனின் பாதுகாவலன் நெருங்க முடியாத தூரம் எது என்பதை யூகிக்க முடியவில்லை. அதனால் மைத்ரேயனைப் பின் தொடராமல் விட்ட அவர்கள் நள்ளிரவு நேர தங்கள் சிறப்பு வழிபாட்டின் போது மேல் தளங்களில் நடமாடும் சத்தம் லேசாகக் கேட்டது என்று மாராவுக்குத் தெரிவித்திருந்தார்கள்.

மாரா தன் ஆளிடம் கேட்டான். “உங்கள் இன்றைய பூஜையின் போது வழக்கமான நம் அலைகளை மட்டும் உணர்ந்தீர்களா? இல்லை எதிரலைகளையும் உங்களால் உணர முடிந்ததா?

மாரா தன் ஆட்களிடம் என்றுமே ஒன்றை மட்டுமே எதிர்பார்ப்பவன். அது உண்மை. உண்மை எவ்வளவு கசப்பாகவும், கடூரமாகவும் இருந்தாலும் சரி அதையே தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவன் உண்மை அல்லாத தகவல்களைத் தெரிவிப்பவர்களை தண்டிக்கும் விதம் கொடூரமானது. அதனால் அவன் ஆள் தயக்கத்துடன் சொன்னான். “எதிரலைகள் மட்டும் அங்கு பரவலாக இருந்தன. நம் சக்தி அலைகளைத் தொடர்பு கொள்வதற்கே நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வேண்டி இருந்தது.... அது முடிந்த போதும் நம் அலைகள் பலவீனமாகவே இருந்தன

அந்தச் சிறுவன் தான் மைத்ரேயன் என்பதில் கொஞ்ச நஞ்சமாய் இருந்த சில்லறை சந்தேகமும் மாராவுக்கு விலகின.  அரை மணி நேரத்திற்கும் குறைவாய்  அங்கிருந்த போதும் அங்கே பல காலம் நிலவிய பழைய அலைகளை பலவீனமாக்கி எதிரலைகளைப் பரப்ப முடிந்த அவன் மைத்ரேயனே! ஆனால் அவனால் முழுவதுமாக அவர்களது அலைகளை ஒழித்து விட முடியவில்லை. அவர்களது அலைகள் பலவீனமாக இருந்த போதும் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் தொடர்பு கொள்ள முடிகிறதென்றால் மைத்ரேயனும் தன் சக்திகளின் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறான் என்று அர்த்தம். மாராவுக்கு அது நல்ல செய்தியாகவே தோன்றியது.

அட்லாண்டா விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அவன் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போன் கால் வந்தது. மாராவைப் போலவே அந்த ஆளும் அவன் குரலைக் கேட்டவுடனே எந்த பூர்வாங்கமும் இல்லாமல் விஷயத்தைச் சொன்னான்.

“அவன் உங்கள் தேசத்து ஆள். மும்பையில் பெரிய தாதாவாக ஒரு காலத்தில் இருந்த நாகராஜனின் மகன். அவன் சித்தர்களிடமும், சாவலின் கோயிலிலும், திபெத்திலும் பல வித்தைகள் கற்றுக் கொண்டவன். காற்றைப் போல வேகமாக இயங்கக்கூடியவன், மின்னலைப் போல தாக்கக்கூடியவன் என்றெல்லாம் மும்பையின் கடத்தல்காரர்களில் பழைய ஆட்கள் நினைவுபடுத்திச் சொல்கிறார்கள். அமானுஷ்யன் என்ற பட்டப்பெயரும் அவனுக்கு இருப்பதாகத் தெரிகிறது. வர்மக்கலையில் அவன் நிபுணன் என்கிறார்கள். நம் ஆளைத் தாக்கியது போல அவன் அக்காலத்தில் பலரைத் தாக்கி கோமாவில் ஆழ்த்தி இருக்கிறான். இது அவனது சிறப்பு முத்திரையாகத் தெரிகிறது. தாக்கியவர்களில் சிலரை அனாயாசமாக சரி செய்தும் இருக்கிறான். திடீரென்று சுமார் பத்து பன்னிரண்டு  வருடங்களுக்கு முன் மும்பையில் இருந்து மாயமாக மறைந்திருக்கிறான்....

மாரா கடைசியில் “சரிஎன்று சுருக்கமாகச் சொல்லி அலைபேசியை அணைத்தான். அடலாண்டா விமான நிலையத்தை விட்டு அவன் வெளியேறுகையில் மைத்ரேயனுடன் சேர்ந்து அமானுஷ்யன் என்ற அந்தப் பொருத்தமான வித்தியாசமான பெயருடையவனும் அவன் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்
  

5 comments:

  1. சுஜாதாMay 14, 2015 at 6:19 PM

    மைத்ரேயன் கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வருவதும் எதிராளிகள் அதே போல கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிப்பதும் கதையை மிக சுவாரசியமாக கொண்டு செல்கிறது. வியாழன் காலையில் இருந்தே ஏற்படும் பரபரப்பான காத்திருப்புக்கு சுவையான தீனி போடுகிறீர்கள். தொடருங்கள். தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. Excellent as usual. I loved when Maithreyan said "enakku pasikkirathu". Very natural.

    ReplyDelete
  3. This story is picking up speed. Fantastic!
    Keep it coming.

    ReplyDelete
  4. அண்ணா அவன் உங்கள் தேசத்து ஆள் என்பதருக்கு பதிலாக அவன் உங்கள் தேசத்து நாள் என்று அச்சுப் பிழை ஆகி உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. பிழை திருத்தி விட்டேன். நன்றி.

      Delete