நம்பீசன் சொன்னபடி காலை ஆறு மணிக்கே வந்து விட்டார். அவருடன் அவர்
உதவியாளர்கள் இரண்டு பேரும் வந்திருந்தனர். அரைகுறையாய் நரைத்த குடுமி, தாடி,
பருமனான சிவந்த தேகம், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு எல்லாமாகச் சேர்ந்து
நம்பீசனைப் பார்க்கும் போதே பாபுஜிக்கு அவரிடம் ஒரு தேஜஸ் இருப்பது போல்
தோன்றியது. வந்தவர் வெளி கேட்டிலேயே
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு நின்றார். பின் கேட்டார். “இங்கே ஒரு மந்திரக்
கவசம் போட்டு இருக்கீங்களே. யார் போட்டது?”
பாபுஜிக்கு
ஆச்சரியமாக இருந்தது. உதயன் சுவாமி பற்றியெல்லாம் இவருக்குச் சொல்ல வேண்டுமா என்று
அவர் யோசித்தார். நம்பீசன் சொன்னார். “எனக்கு ஒளிவு மறைவில்லாமல் நீங்கள் எல்லாத்தையும்
சொல்றதா இருந்தால் நான் உள்ளே வர்றேன். இல்லாட்டி இப்படியே போயிடறேன். ஏன்னா இங்கே
ரெண்டு விதமான பெரிய சக்திகள் ஒன்னுக்கொன்னு போட்டியா போராடிகிட்டு இருக்கற மாதிரி
இருக்கு. அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டு இங்கே அந்த ரெண்டு சக்திகளுக்கு மத்தியில
நான் சிக்கிக்க விரும்பலை....”
பாபுஜி ஜான்சனைப் பார்த்தார். ஜான்சன்
ஒருவர் தான் இப்போது அவருடன் இருக்கிறார். குருஜி போன சில மணி நேரங்களில் மகேஷும்
போய் விட்டான். தூங்காமல் நிறைய நேரம் விழித்திருக்கிறானே என்று பாபுஜி அவன் அறையை
எட்டிப் பார்த்த போது அவன் கையில் தூக்க மாத்திரை டப்பாவை வைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அவன் இங்கேயே தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்ற பயம் பாபுஜிக்கு வந்து விட்டது.
அதனால் சிறிது நேரம் கழித்து அவன் போவதாகச் சொன்ன போது அவர் உடனே அனுப்பி
வைத்தார். அவன் பின்னாலேயே இரு துப்பறியும் ஆசாமிகளை அனுப்பி வைத்து எங்கே
போகிறான், என்ன செய்கிறான் என்பதைக் கண்காணிக்க மட்டும் ஏற்பாடு செய்தார். மகேஷ்
ஏதோ ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியதாக தகவல் வந்தது. அங்கே போய் தற்கொலை
செய்து கொள்ளப் போகிறான் என்று புரிந்த போது பாபுஜிக்கு நிம்மதியாக இருந்தது.
‘விட்டது சனியன்’
அதனால் நம்பீசன்
சொன்ன போது, கூட இருந்த ஒரே ஆளிடம் அவருக்கு ஆலோசனை கேட்கத் தோன்றியது. ஜான்சன்,
சொல்லி விடுவது தான் நல்லது என்பது போல தலையசைத்தார்.
பாபுஜி சுருக்கமாகச்
சொன்னார். நம்பீசன் நீண்ட யோசனைக்குப் பின்பு தான் உள்ளே வந்தார். பாபுஜி தியான
மண்டபத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். நம்பீசன் தியான மண்டபத்திற்கு உள்ளே நுழைய
மறுத்தார். வெளியே இருந்தே விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தார். பின் வெளியே அந்த 23 ஏக்கர் நிலப்பரப்பில் மௌனமாக நடக்க
ஆரம்பித்தார். அவரை அவர் உதவியாளர்கள் பின் தொடர்ந்தனர். பாபுஜியும், ஜான்சனும்
கூடப் பின் தொடர்ந்தார்கள். அங்கங்கே நிற்பது, யோசிப்பது, பின் நடப்பதுமாக இருந்த
நம்பீசன் சில இடங்களில் சில குறியீடுகள் இடும்படி தன் உதவியாளர்களிடம் சொன்னார்.
அவர்கள் அந்த இடங்களில் அந்தக் குறிகளை வரைந்தார்கள். கடைசியில் அந்த இடங்களில்
ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்த அவர் அங்கு நின்று கொண்டு சொன்னார். “இந்த இடத்துல ஒரு
அஷ்டமங்கல ப்ரஸ்னம் வச்சுப் பார்த்தால் தான் இருக்கிற நிலைமை என்ன, என்ன
செய்யலாம்னு தெரியும். அதுக்கு ஒரு நாள் வேண்டி வரும்”
பாபுஜிக்கு இருந்த அவசரத்தில் அதெல்லாம்
அனாவசியம் என்று தோன்றியது. உடனடியாக செயல்பட வேண்டிய நேரத்தில் நிலைமை என்ன, என்ன
செய்யலாம் என்று கண்டுபிடிக்கவே தாமதமாவது அவருக்கு சகிக்க முடியாததாக இருந்தது. அந்த
அறுவரும் கூட இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் தயக்கத்துடன் சொன்னார்.
“நமக்கு அவ்வளவு நேரம் இல்லை. உடனடியாய் ஏதாவது செய்தாகணும்”
நம்பீசன் சொன்னார். “அவசரமாய் சாக எனக்கு
ஆசை இல்லை. நீங்க வேற ஆளைப் பார்த்துக்கலாம்”. சொன்ன நம்பீசன் ‘கிளம்பலாம்’ என்பது போல தன்
உதவியாளர்களுக்கு சமிக்ஞை செய்ய பாபுஜி பதறிப் போனார். “என்ன சுவாமி. இப்படி நீங்க
சொன்னா எப்படி?”
”இங்கே வந்தப்பறம் தான் சிக்கல் அதிகமாய் இருக்குன்னு
புரிஞ்சுது. இது சாதாரணமாய் சூனியம் வச்சதை எடுக்கற காரியமோ, மந்திரத்தை
முறியடிக்கிற காரியமோ அல்ல. மகாசக்திகளோட ஆட்டம் இது. கவனமா ஆடலைன்னா நம்மளை
அழிச்சுடும். பிணமானதுக்கப்பறம் பணத்தோட உபயோகம் என்ன சொல்லுங்க?”
பாபுஜிக்கு கிலி கிளம்பியது. ”கொஞ்சம்
பொறுங்க” என்று சொன்னவர் தனதறைக்குப் போய் அறுவருடன் பேசினார்.
அந்த அறுவரும் அதற்கு முன்பே நம்பீசன் பற்றிய எல்லா விவரங்களும்
சேகரித்திருந்தார்கள். ஆள் விஷயம் தெரிந்தவர் என்று தான் எல்லா தகவல்களும்
சொல்லின. அவர்களில் மூவர் ஒத்துக் கொள்ளச் சொன்னார்கள். மூவர் இரண்டு மடங்கோ,
மூன்று மடங்கோ பணம் தந்து உடனடியாக ஏதாவது செய்ய முடியுமா என்று முயற்சிக்கச்
சொன்னார்கள். குழம்பிய பாபுஜி கடைசியில் தன் தந்தைக்குப் போன் செய்தார். அவருடைய
தந்தை குருஜி அங்கிருந்து போய் விட்டார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே நடக்கின்ற
ஆராய்ச்சிகளில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்திருந்தார். இவர்கள் ஆழம் தெரியாமல் காலை
விடுகிறார்களோ என்ற பயம் அவரை ஆக்கிரமித்திருந்தது.
அதனால் பாபுஜி போன்
செய்த போது அவர் உடனே சொன்னார். “நம்பீசன் சொல்ற மாதிரி நிலவரம் என்ன, என்ன
செய்யலாம்னு தெரிஞ்சுக்கோ பாபுஜி. அவசரப்படாதீங்க. ஒரு நாள்ல ஒன்னும் குடி
முழுகிடாது.”
பாபுஜி நம்பீசனிடம் போய் சம்மதம்
தெரிவித்தார். நம்பீசன் அஷ்டமங்கல ப்ரஸ்னம் பார்க்க முகூர்த்தம் கணிக்க
ஆரம்பித்தார்....
மகேஷ் தூக்க மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே தந்தைக்குப் போன் செய்தான்.
“அப்பா... சாரிப்பா... அம்மாவுக்காவது
ஈஸ்வர் இருக்கான். உங்களுக்குத் தான் என்னை விட்டால் யாரும் இல்லை...”
விஸ்வநாதன் திடுக்கிட்டார். “என்னடா
சொல்றே?”
”எனக்கு வாழப் பிடிக்கலப்பா. இனி நான் வாழ்றதுல
அர்த்தமில்ல... நான் சாகறதுக்கு முன்னாடி மன்னிப்பு கேட்டேன்னு விஷாலி கிட்ட
சொல்லிடுங்க அப்பா....”
விஸ்வநாதன் பதறினார். “மகேஷ் என்னடா
சொல்றே? முட்டாள்தனமாய் எதுவும் செஞ்சுக்காதேடா...”
”இனிமே நான் வாழ்றது தான் முட்டாள்தனம்ப்பா. சாகறதில்லப்பா.
நான் இப்போ ஓட்டல் சிட்டி பாரடைஸ்ல ரூம் நம்பர் 305ல இருக்கேன்ப்பா.. என் பிணத்தை
கலெக்ட்... செய்துக்கோங்கப்பா..... ” அவன் குரல் குழற ஆரம்பித்தது. விஸ்வநாதன் இடிந்து
போனார்.
குருஜி காரை
ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தச் சொல்லி இறங்கினார். டிரைவரிடம் இரண்டு
உறைகளைக் கொடுத்து தன் உதவியாளனிடம் தரச் சொன்னார். ஒன்றில் அவரது டிரஸ்டுகள் இனி
யார் பொறுப்பில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை மிகவும் தெளிவாகவும்,
விரிவாகவும் எழுதி இருந்தார். இன்னொன்று அவரது உயில். அவரது தனிப்பட்ட சொத்துக்களை
கணபதியின் பெயரில் அவர் எழுதி இருந்த உயில். கார் டிரைவரைப் போகச் சொன்னார்.
கார் டிரைவருக்குத்
தயக்கமாக இருந்தது. ஆனால் குருஜியை மறுத்துப் பேசி அறியாத அவர் மறுவார்த்தை
பேசாமல் காரை ஓட்டிக் கொண்டு போனார். கார் பார்வையில் இருந்து மறையும் வரை நின்று
பார்த்துக் கொண்டிருந்த குருஜி இருட்டில் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார். அவர் அணிந்து
கொண்டிருந்த உடையையும், சட்டைப்பையில் இருந்த நூறு ரூபாயையும் தவிர அவருக்கு என்று
அவர் எதையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை.
நீண்ட தூரம் நடந்து
சென்ற பிறகு ஒரு சலூன் கடையைப் பார்த்தார். அந்தக் கடைக்காரன் கதவைச் சாத்திக்
கொண்டிருந்தான். அவனிடம் போய் கெஞ்சிக் கேட்டு கதவை மீண்டும் திறக்க வைத்து மொட்டை
அடித்துக் கொண்டார். தன்னிடம் இருந்த கடைசி பணமான நூறு ரூபாயை அவனிடம் தந்து
விட்டு வெளியே வந்த குருஜியை இப்போது யாருமே அடையாளம் கண்டு விட முடியாது. இனி
யாரும் பழைய குருஜியைப் பார்க்கவும் முடியாது.
மறுபடி நடக்க
ஆரம்பித்தவர் களைத்துப் போகும் வரை நடந்தார். நள்ளிரவில் தனியாக நடந்து போய்க்
கொண்டிருந்த அவரைப் பார்த்து நாய்கள் குரைத்தன. அவர் லட்சியம் செய்யவில்லை. மனம் மட்டும்
நடந்தவைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. குருஜி என்ற சகாப்தம் முடிந்து விட்டாலும் ஞான
தாகத்தோடு பாரதத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்த ராமகிருஷ்ணன் என்ற
தனிமனிதனின் கதை முடியவில்லை. சுயபச்சாதாபத்தோடு தன் வாழ்க்கையின் பல மைல்கல்களை
எண்ணிப் பார்த்த போது கடைசியில் அவருக்கு வாய்விட்டு அழத் தோன்றியது.
ஆளே இல்லாத ஒரு பஸ்
ஸ்டாப்பில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். “என்னைக் கடவுள்
கைவிட்டது கூட எனக்கு தப்பாய் தெரியலை. ஏன்னா நான் நிறைய தப்புகள் செய்திருக்கேன்.
ஆனால் குருவே நீங்கள் என்னைக் கை விட்டது எனக்கு அதிகமாய் வலிக்கிறது. என்ன
இருந்தாலும் உங்களிடம் சில காலமாவது சீடனாய் நான் இருந்தவன் அல்லவா? என்னைத்
திட்டி புத்தி சொல்லக் கூடிய அதிகாரம் இருப்பவர் தானே நீங்கள். ஒரே ஒரு தடவையாவது
அதை நீங்கள் செய்திருக்கலாமே! நான்
முன்பே திருந்த ஒரு வாய்ப்பை எனக்குத் தந்திருக்கலாமே. எனக்கிருந்த தலைக்கனத்துக்கு
நான் அப்ப திருந்தியிருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் நீங்கள் முயற்சி செய்து
பார்த்திருக்கலாமே... கணபதியால் முடிந்தது உங்களால் முடிந்திருக்காதா? எத்தனையோ
குருக்கள் எனக்கு இருந்திருந்தாலும் மத்தவங்களை எல்லாம் நான் மிஞ்சி
விட்டிருந்தேன். அதனால் அவர்கள் எனக்கு பின்னால் தேவைப்படலை. நான் மிஞ்சாத ஒரே
குரு நீங்கள் தான். எனக்கு இப்பவும் தேவைப்படறவரும் நீங்கள் தான்.... நான் எல்லாமே
வேண்டாம்னு உதறிட்டு வந்துட்டேன். உலகத்தால தர முடிஞ்சது எனக்கு எதுவுமே வேண்டாம்.
நான் ஒருகாலத்துல தீவிரமாய் தேடின ஆத்மஞானத்துக்காக தான் மறுபடி ஏங்கறேன். எல்லாம்
தெரிஞ்ச எனக்கு இன்னும் எதோ பிடிபடாததால அல்லவா கர்வமே உள்ளே நுழைஞ்சது. என்னை
திசை திருப்பிச்சு. இனிமேலாவது நீங்கள் ஒரு வழி காட்டக் கூடாதா?”
அந்த நள்ளிரவில் தனிமையில் அழுது
கொண்டிருந்த முதியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நாய்கள் அனுதாபத்தோடு குரைப்பதை
நிறுத்தின. அதிகாலை சூரிய கிரணங்கள் எழும் வரை அதே சிந்தனைகளோடும், துக்கத்தோடும்
அப்படியே குருஜி அமர்ந்திருந்தார். திடீரென்று ஒரு கை அவர் தோளைத் தொட்ட போது
மின்சாரம் தாக்கியது போல் இருக்க அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார். அவருடைய
குரு அக்னிநேத்ர சித்தர் நின்றிருந்தார். அவர் கை நீட்ட அந்தக் கையை நன்றியுடனும்,
பிரமிப்புடனும் குருஜி பிடித்துக் கொண்டு எழுந்தார். பெரும் துக்கத்தோடு
குருஜியிடம் இருந்து வார்த்தைகள் வெளி வந்தன. “ஏன் குருவே இவ்வளவு தாமதம்?”
”நீ இது வரைக்கும் என்னை இப்படி வற்புறுத்திக் கூப்பிட்டதே
இல்லையே ராமகிருஷ்ணா. அது மட்டுமில்லாம தப்பான வழியிலே போய் யாரும் சரியானதை
சாதிச்சுட முடியாதுன்னு நீ உணரணும்னு தான் நான் காத்துகிட்டிருந்தேன். வா. போகலாம்...” கனிவான குரலில் சித்தர் சொன்னார்.
குருஜி அக்னி நேத்ர சித்தரின் கைகளைப்
பிடித்து பேரழுகையோடு கண்களில் ஒற்றிக் கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சித்தர்
நடக்க ஆரம்பித்தார். ஆனந்தக் கண்ணீருடன் குருவுடன் குருஜி நடக்க அவர்கள் முன்
அமைதியானதொரு பாதை நீண்டிருந்தது!....
உலகில் எந்த ஒரு தகப்பனுக்கும் இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது
என்று விஸ்வநாதன் எண்ணினார். சிட்டி
பாரடைஸ் ஓட்டலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகனை தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்
அவர் சேர்த்தாகி விட்டது. அங்கு அவரையோ மகேஷையோ யாருக்கும் அடையாளம் தெரியாது. எதையும்
24 மணி நேரம் கழித்துத் தான் சொல்ல முடியும் என்று டாக்டர் தெரிவித்த போது அவர்
உடைந்து போன விதத்தைப் பார்த்த டாக்டர் வீட்டில் வேறு யாரும் இல்லையா என்று இரக்கத்தோடு
கேட்டார்.
விஸ்வநாதன் மனைவியிடம் கூடத் தகவலைத்
தெரிவிக்கவில்லை. சொன்னால் அவளால் கண்டிப்பாகத் தாங்க முடியாது. பரமேஸ்வரனிடமும்
சொல்ல முடியாது. பின் வேறு யார் இருக்கிறார்கள்? மனம் ஏனோ ஈஸ்வரை நினைத்தது. அவன்
பரமேஸ்வரனுக்கு மாரடைப்பு வந்த போது அதை சமாளித்த விதம் அவருக்கும் இப்போது
நினைவிற்கு வந்தது. அவன் இப்போது கூட
இருந்தால் பெரிய ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் ஏதோ ஆராய்ச்சியில்
இருக்கிறான். அவனுக்கு அவரிடமோ, மகேஷிடமோ சிறிதும் அன்பிருக்க வாய்ப்பில்லை. அதை
அவர்கள் சம்பாதித்தும் வைத்திருக்கவில்லை.... ஆனாலும் அவன் நல்லவன்... சங்கரின்
மகன்.... பரமேஸ்வரனை மன்னித்தவன்... கருணை காட்டலாம்...
விஸ்வநாதன் தயக்கத்துடன் அவனுக்குப் போன்
செய்தார். அவர் அழைத்த போது அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். எதிரிகள் புதிதாக
யாரையோ வரவழைக்கிறார்கள், அவர் மறு நாள் அதிகாலை வருவார் என்று தகவல் கிடைத்த
பிறகு அவனுக்கு அப்போது தான் இளைப்பாற நேரம் கிடைத்திருந்தது. ஏதாவது ஆபத்து
என்றால், தான் தெரிவிப்பதாக ஹரிராம் உறுதி அளித்திருந்தார். அவருக்கு இயல்பாகவே
அப்படி தொடர்பு கொள்ளும் சக்தி இருந்ததால் கண்காணிக்கும் வேலையை விட்டு விட்டு ஒரு
மணி நேரத்திற்கு முன்பு தான் அவன் உறங்க ஆரம்பித்திருந்தான். அவனை விஸ்வநாதனின்
போன் எழுப்பியது. குரலடைக்க அழுகையோடு
விஸ்வநாதன் சொன்ன தகவல் ஈஸ்வரை அதிர வைத்தது. உடனே மீனாட்சியும், பரமேஸ்வரனும்
அவன் நினைவுக்கு வந்தார்கள். எப்படி தாங்குவார்கள்? “நீங்க அத்தை கிட்டயும்,
தாத்தா கிட்டயும் சொல்லலையே?”
“இல்லை ஈஸ்வர்.”
“நல்லதாச்சு. எந்தக் காரணம் வச்சும்
சொல்லிடாதீங்க. எந்த ஆஸ்பத்திரி?” அவர் சொன்னார். அவன் கிளம்பி விட்டான். இப்போதைக்கு
தியான மண்டபத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விட சாத்தியமில்லை. ஏதாவது தேவை
இருந்தால் ஹரிராம் கூப்பிடுவார்.
பார்த்தசாரதி அவனைத்
தனியாக அனுப்ப பயந்தார். அவனைக் கொல்ல வந்த
ஆட்கள் இனியும் முயற்சி செய்யலாம். வெளியே பொது இடத்தில் அவனைப்
பாதுகாப்பது கஷ்டம்... ஆனால் ஈஸ்வர் போகாமல் இருக்க சம்மதிக்கவில்லை. வேறு
வழியில்லாமல் தானும் கூட கிளம்பினார். சற்று இடைவெளி விட்டு தங்களைப் பின் தொடர
இரண்டு திறமையான போலீஸ்காரர்களிடம் சொன்னார்....
அடுத்த முக்கால் மணி
நேரத்தில் ஈஸ்வர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்தான். உடனடியாக அவன் வருவான் என்று
எதிர்பார்த்திராத விஸ்வநாதன் அவனைப் பார்த்ததும் அழுது விட்டார். ”அழாதீங்க மாமா... விபரீதமா எதுவும் நடந்துடாது”
விஸ்வநாதனின் செல்போன் இசைத்தது.
விஸ்வநாதன் அழுகையுடன் சொன்னார். “உன் அத்தை தான் கூப்பிடறா... இது ஏழாவது
தடவை.... ராத்திரி நேரத்தில் நான் ஒன்னும்
சொல்லாம கிளம்பிட்டதால கவலைப்படறா போல இருக்கு. ஆனா நான் அவ கிட்ட என்னன்னு
சொல்வேன்... அதான் நான் எடுக்கலை....”
“பேசாமல் இருந்தா தான் அவங்களுக்கு
டென்ஷனாகும் மாமா...” என்ற ஈஸ்வர் அவருடைய செல்போனை எடுத்து தானே பேசினான்.
“அத்தை நான் ஈஸ்வர் பேசறேன்... மாமா என் கூட தான் இருக்கார்... என் ஆராய்ச்சிக்கு
மாமா உதவி கொஞ்சம் தேவைப்பட்டுது.. அதனால தான் மாமாவைக் கூப்பிட்டுகிட்டேன்....
ஆராய்ச்சிக்கு தொந்திரவாகும்னு ஸ்விட்ச் ஆஃப் செய்து வச்சிருந்ததால கேட்கல. சாரி
அத்தை...”
மீனாட்சி நிம்மதியடைந்தாள். “உன் கூட தான்
இருக்காரா? அப்ப பரவாயில்லை.... ராத்திரி நேரத்துல அவர் என் கிட்ட ஒன்னுமே
சொல்லாமல் அவசரமா போனாரா... அதான் நான் ரொம்பவே பயந்து போயிட்டேன்...”
மீனாட்சியை சமாளித்த விதமும், பின்
டாக்டரிடம் போய் பேசிய விதமும், பேசி வந்த பிறகு மறுபடியும் தைரியம் சொன்ன விதமும்
ஒரு மகனுடைய செய்கைகளாக இருந்தன. அவருக்கு ஒரு மூத்த மகன் இருந்திருந்தால் இப்படி
செய்திருக்கலாம்... யாரை அவரும் அவர் மகனும் ஆழமாக வெறுத்தார்களோ அவன் இத்தனையும்
அவர்களுக்காக செய்கிறான். அவன் அவர்களைப் புரிந்து கொள்ளாத முட்டாள் அல்ல...
ஆனாலும் அவன் அதைப் பெரிதுபடுத்தவில்லை போல் இருந்தது. அவன் முகத்தில் பெரும்
களைப்பு தெரிந்தது. சரியாக உறங்காத களைப்பு அது... ஆனால் ஒரு சலிப்பு கூட அந்த
முகத்தில் தெரியவில்லை... “சங்கர் எப்படி ஒரு மகன் உனக்கு கிடைச்சிருக்கான்.... நீ
எவ்வளவு புண்ணியம் செய்தவன்....”
அந்த நேரத்தில் தென்னரசுவின் பிணம் ரயில்வே
டிராக் அருகில் சிதறிக் கிடப்பதாக பார்த்தசாரதிக்குத் தகவல் வந்தது.
அஷ்ட மங்கல ப்ரஸ்னம் நடந்து கொண்டிருந்த போது பொறுமை இல்லாமல்
பாபுஜியும், சுவாரசியத்தோடு ஜான்சனும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு
சின்னச் சின்ன சகுனத்தையும் கூட நம்பீசன் கணக்கில் எடுத்துக் கொண்டார். மரத்தில்
இருந்து உதிரும் இலை, பறவையின் சத்தம், சுற்றி உள்ளவர்களின் வித்தியாசமான அசைவுகள்
என எல்லாமே அவருக்கு ஏதோ தகவல்களைத் தந்து கொண்டிருந்தது போலத் தெரிந்தது.
கடைசியில் நம்பீசன் சொன்னார். “நீங்கள்
நினைக்கிற மாதிரி உங்களுக்கு ஒரு எதிரி வெளியே மட்டும் இல்லை. உள்ளேயும் இரண்டு
எதிரிகள் இருக்கிறார்கள்.....”
பாபுஜியும் ஜான்சனும் அதிர்ந்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்