ஆனந்தவல்லி விஷாலி மட்டும் வீட்டிற்குள் நுழைவதை ஜன்னல் வழியாகப்
பார்த்தாள். விஷாலியின் முகம் மிகவும் வாடி இருந்ததையும், விஷாலியை விட்டு விட்டு உள்ளே
வராமல் வேறெங்கோ ஈஸ்வர் மறுபடி போய் விட்டதையும் கவனித்த அவளுக்கு ஈஸ்வர் அவ்வளவு
சுலபமாக விஷாலியிடம் இருந்த கோபத்தை முடித்துக் கொள்ள மாட்டான் என்பது புரிந்தது. ’இந்தப் பெண்
எதோ தப்பு செய்து அவனுக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும், அவன் ஈகோவை நிறையவே
பாதித்திருக்க வேண்டும்’
என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மீனாட்சி விஷாலியை வரவேற்றுப்
பேசிக் கொண்டிருக்கையில் மகன் அறையில் அமர்ந்து கொண்டிருந்த ஆனந்தவல்லி மகனிடம்
சொன்னாள்.
”இந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. புத்திசாலியான பொண்ணு. ஆனா
சில விஷயங்கள்ல சாமர்த்தியம் பத்தாது. ஈஸ்வர் மாதிரி ஆளை எல்லாம் கொஞ்சம் நாசுக்கா
தான் கையாளணும். இதுக்கு அது தெரியலை...” என்று மகனிடம் சொன்னாள்.
பரமேஸ்வரன் தாயைக்
கடிந்து கொண்டார். “ஆமா, உன் சாமர்த்தியம் யாருக்கும் வராது. நீயா இருந்தா என்ன
செய்திருப்பே?”
”ஈஸ்வர் ஒரு செண்டிமெண்ட் ஆசாமி. ஒரு காலத்துல உன் கிட்ட
எவ்வளவு கோபமா இருந்தான். உனக்கு மாரடைப்பு வந்து உன் உயிருக்கு ஆபத்துன்னு
தெரிஞ்சப்ப அவனோட அத்தனை கோபமும் காத்துல போச்சு. இன்னைக்கு உன் மேல எவ்வளவு பாசமா
இருக்கான். அந்தப் பொண்ணு அவன் உதாசீனப்படுத்தறத தாங்காமல் தற்கொலை செய்யப்
போறாள்னு வச்சுக்கோ. உன் பேரன் பாகாய் உருகிடுவான்....”
பரமேஸ்வரன் அதிர்ந்து போனார். ”என்ன கொடுமையான ஐடியா எல்லாம் சொல்றே....”
“தற்கொலை செஞ்சுக்கச் சொல்லலைடா. அப்படி
நடிக்க தான் சொல்றேன். பின் உன் பேரன் மாதிரி செண்டிமெண்ட் ஆள்களை எப்படித் தான்
வழிக்குக் கொண்டு வர்றது.”
பரமேஸ்வரன்
படபடத்தார். ”உன் வயசுக்கு இது எல்லாம் நல்லா இருக்கா? தயவு செஞ்சு
இதை எல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிடாதே. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்
போகுது....”
“உன் கிட்ட சும்மா சொன்னேண்டா. அவ கிட்ட
எல்லாம் சொல்லுவேனா?” என்ற ஆனந்தவல்லி யோசித்தாள். ஆனால் அவளுக்கு விஷாலி
அந்த மாதிரி ஏதாவது நாடகம் போட்டு ஈஸ்வரை மடக்கினால் தேவலை என்று இப்போதும்
தோன்றியது. அம்மாவின் எண்ணப் போக்கு போகும் விதம் பரமேஸ்வரனுக்கு விபரீதமாகத்
தெரிந்தது. அம்மா யோசிப்பதை பலத்த சந்தேகத்தோடு பார்த்தார். ’இனி என்ன பயங்கரமான
கற்பனை எல்லாம் வருமோ!’
ஆனந்தவல்லி அவரிடம் சொன்னாள். “உன்
மருமகளோட போன் நம்பர் குடுடா”
பரமேஸ்வரன் இன்னும் பயந்தார். “எதுக்கு?”
”ஊம்... அமெரிக்கால இப்ப க்ளைமேட் எப்படி இருக்குன்னு
கேக்க. போன் நம்பர் கேட்டா தர வேண்டியது தானடா... நீ தர்றியா இல்லை
உன் மகள் கிட்ட போய் கேட்கட்டுமா?”
பரமேஸ்வரன் தயக்கத்துடன் தந்தார்.
ஆனந்தவல்லி கண்களை சுருக்கிக் கொண்டு அந்த எண்களைத் தானே அழுத்த ஆரம்பித்தாள்.
“ஹலோ நான் ஆனந்தவல்லி பேசறேம்மா... எப்படிம்மா
இருக்கே?”
பரமேஸ்வரன் போன் செய்ததை விட ஆனந்தவல்லி
போன் செய்து பேசுவது கனகதுர்காவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம் அவள் கணவர் தன்
பாட்டியைப் பற்றி நிறையவே அவளிடம் சொல்லி இருக்கிறார்....
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி
இருக்கீங்க பாட்டி?”
”முன்ன மாதிரி இப்பவெல்லாம் உடம்புக்கு முடியறதில்லம்மா.
இனி எத்தனை நாள்னு தெரியல.... கண்ணை
மூடறதுக்குள்ள உன்னை ஒரு தடவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அதான் போன்
செஞ்சேன்... நீ எப்பம்மா வர்றே?”
“கிறிஸ்துமஸ் லீவுல வர்றேன் பாட்டி”
“அது வரைக்கும் நான் இருப்பேன்கிற
நம்பிக்கை எனக்கு இல்லம்மா துர்கா.. நீ உடனடியா ஏன் கிளம்பி வரக் கூடாது?”
கனகதுர்கா திகைத்தாள். ”உடனடியாவா?”
“திடீர்னு கிளம்பினா விமான செலவெல்லாம்
அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன். எத்தனை செலவானாலும் பரவாயில்லை. நான் அந்த செலவை
ஏத்துக்கறேன்... நீ ஒரு தடவை வந்துட்டு போயேன்ம்மா”
கனகதுர்காவிற்கு உடனடியாக என்ன சொல்வது
என்று தெரியவில்லை.
ஆனந்தவல்லி அடுத்த அஸ்திரம் விட்டாள்.
“ஏம்மா உன் மகன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான். அது தெரியுமாம்மா?”
கனகதுர்கா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“அப்படியா யார் பாட்டி?”
“இப்ப நம்ம வீட்டுல தான் இருக்கா அந்தப்
பொண்ணு.... நான் சொன்னேன்னு உன் பையன் கிட்ட தயவு செஞ்சு சொல்லிடாதே.
கோவிச்சுக்குவான்.... என்னவோ மூச்சடைக்குதும்மா.... வச்சுடறேன்.”
ஆனந்தவல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு கண்களை
மூடிக் கொண்டாள்.
பரமேஸ்வரன் சந்தேகத்துடன் கேட்டார்.
“உனக்கு என்னாச்சு...? உடம்பு சரியில்லையா”
“எனக்கு என்ன, நல்லாத் தான் இருக்கேன்” ஆனந்தவல்லி கண்களைத் திறந்து சாதாரணமாகச்
சொன்னாள்.
பரமேஸ்வரன் கோபத்துடன் கேட்டார். “பின்ன
எதுக்கு இப்படி டிராமா போடறே. மூச்சு முட்டுதுங்கறே. நாளை எண்ணறேங்கறே. இதை
எல்லாம் சொல்லி பாவம் அவளை ஏன் இங்கே இப்பவே வரவழைக்கப் பார்க்கறே”
ஆனந்தவல்லி சொன்னாள். “பின்ன என்ன பண்றது.
சாதாரணமா வரச் சொன்னா அவ வர மாட்டேன்கிறா”
“இப்பவே அவ வந்து என்ன உனக்கு ஆகணும்?”
“உன் பேரனுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம்
ஆகணும்... அவன் குழந்தையைப் பார்த்துக் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு நான் சாகணும்... இதை
எல்லாம் அவன் போக்கிலயே விட்டா சீக்கிரம் நடக்காது. அவனுக்கு எப்ப அந்தப் பொண்ணு
மேல கோபம் தணியறது. எப்ப மத்ததெல்லாம் நடக்கிறது. அவன் அம்மா வந்தால்
எல்லாத்தையும் கொஞ்சம் வேகப்படுத்திடலாம். அவன் நம்ம கிட்ட எல்லாம் நடிக்கலாம்.
அவன் அம்மா கிட்ட நடிக்க மாட்டான். எனக்குத் தெரியும்... அவ சொன்னா அவன் கேட்பான்...
துர்காவுக்கும் விஷாலியைப் பிடிக்காமல் போகாது. முடிஞ்சா கல்யாணத்தை முடிச்சுட்டே இங்கே இருந்து
அவங்க போகட்டும். என்ன சொல்றே?”
பரமேஸ்வரன் வாயடைத்துப் போய் தாயைப்
பார்த்தார்.
குருஜி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுக்க முயன்று கொண்டு
இருந்தார். முடியவில்லை. இது வரை எல்லாமே அவர்
எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே சாதகமாக நடந்து கொண்டு இருக்கிறது. சிவலிங்கம் அவர்
கட்டுப்பாட்டில். கணபதி அவர் கட்டுப்பாட்டில். உலகில் மிகத் திறமையான ஆழ்மன
ஆராய்ச்சியாளர் அவருடன் இருக்கிறார். மிகத் திறமையான ஆழ்மன சக்தியாளர்கள்
ஆராய்ச்சிக்கு உதவ வந்துள்ளார்கள். ஆராய்ச்சிகளைத் தடுக்க முடிந்த அக்னி நேத்திர சித்தர்
நெருங்க முடியாதபடி ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. ஆனாலும் கூட அவரால் திருப்தியுடன்
இருக்க முடியவில்லை.
தியான மண்டபத்தில் அந்த மூவரும் விசேஷ மானஸ
லிங்கத்துடன் தனியாக இருக்கிறார்கள். கணபதியை அவன் அறையிலேயே இருக்கும்படி சொல்லியாகி
விட்டது. அவர்களது ஆரம்பக் கணிப்புக்கு அவன் ஒரு இடைஞ்சல் தான். இன்று தியான
மண்டபத்தில் கருவிகளைக் கூடக் கண்காணிக்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் என்று முன்பே ஜான்சன்
சொல்லி இருந்தார். முழுமையாக விசேஷ மானஸ லிங்கத்தில் மூவர் கவனமும் இருக்கட்டும்
என்று அவர் நினைத்தார். அவர்கள் அபூர்வ சக்திகள் மூலம் விசேஷ மானஸ லிங்கத்தின் சக்திகள்
பற்றி கணிக்கும் கணிப்பு என்ன என்று அறிய அவரைப் போலவே குருஜியும் ஆவலாக
இருந்தார்.
அவர்கள் கருத்தை அறியும் வரை சும்மா இருக்க
முடியாமல் குருஜி முன்பு கிடைத்த ஓலைச்சுவடிகளின் வார்த்தைகளைத் தெளிவுபடுத்தி அந்த தமிழாராய்ச்சி வல்லுனர் எழுதி
இருந்ததை எடுத்துப் படித்தார். முதலாம் ராஜாதிராஜ சோழன் மற்றும் இரண்டாம்
ராஜேந்திரச் சோழன் சம்பந்தப்பட்ட கதைகளை அந்த ஓலைச்சுவடிகளில் தெளிவாகப் புரிந்து
கொண்ட அந்த தமிழாராய்ச்சி வல்லுனர் சிவலிங்கத்தின் தன்மை, அதனைப் பாதுகாப்பவர்கள்
யார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் தென்னரசுவிடம் சொல்லி இருந்தது இப்போதும்
குருஜியின் உதடுகளில் சிறு புன்னகையை வரவழைத்தது.
”வார்த்தைகள் தெளிவாய் கிடைச்சாலும் பொருள் தெளிவாய்
விளங்கலை” என்று தமிழாராய்ச்சி வல்லுனர் சொல்லி இருந்தார். தத்துவ ஞானத்தில் கரை கண்டவர்களே அதன் பொருளை
விளங்கிக் கொள்ள முடியும். குருஜிக்கு அந்த
வார்த்தைகளின் பொருள் விளங்க சில முறைகள் படிக்க வேண்டி இருந்தது. படித்ததை மனதில்
ஊறப்போட வேண்டி இருந்தது. பிறகு புரிந்தது.
ஓலைச்சுவடிகளை
வைத்திருந்த ஜோதிடர் சுப்பிரமணியனின் தம்பி சொல்லும் வரை சிவலிங்கத்தைப்
பாதுகாக்கும் மூன்று நபர்களைக் கொண்ட ரகசியக்குழு பற்றி குருஜி
அறிந்திருக்கவில்லை. சிவலிங்கத்தைப் பூஜை செய்வது யார் என்று தீர்மானிக்கும்
விஷயம் ஓலைச்சுவடிகளில் இல்லை என்று தமிழாராய்ச்சி வல்லுனர் சொன்ன போதும்
பாதுகாக்கும் பொறுப்பு என்ற பொருளில் இருந்த சில சுவாரசியத் தகவல்களை ஓலைச்சுவடிகள்
தான் அவருக்கு அதைப் பின்பு தெரியப்படுத்தின.எல்லையில்லாத சக்திகளின் ஊற்றாக அந்த சிவலிங்கம்
இருப்பதையும் அந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆரம்பத்தில் மூன்று சித்தர்களிடம் இருக்கும் என்பதையும், அந்த
மூவர் பக்தி மார்க்கம், அறிவு மார்க்கம், ஞான மார்க்கம் என்று மூன்று
மார்க்கங்களில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதையும் ஓலைச்சுவடிகள் கூறின. பின்
காலப் போக்கில் இரண்டு சித்தர்கள், ஒரு சித்தரல்லாதவர் வசம் சிவலிங்கம் செல்லும்.
பின் ஒரு சித்தர், இரண்டு சித்தரல்லாதவர் வசம் செல்லும். கடைசியில் சித்தரல்லாத
மனிதர்களிடம் சிவலிங்கம் செல்லும். ஆனால் அந்த மூன்று மார்க்கங்களைச்
சேர்ந்தவர்களாகவே மனிதர்களும் இருப்பார்கள். ஆனால் அப்படி முழுவதுமாக சித்தரல்லாத
மனிதர்கள் வசம் சிவலிங்கம் செல்லும் காலம் மனித இனத்தின் மிகவும் மோசமான காலம்,
கலி முற்றிய காலம் என்று ஓலைச்சுவடிகள் சொல்லி இருந்தன. அந்தக் காலத்தைப் பற்றிய
நிறைய மோசமான விவரங்கள் அவற்றில் இருந்தன.
சித்தர்கள் முழுவதுமாக அந்த சிவலிங்கத்தின்
மீதிருக்கும் தங்கள் ஆதிக்கத்தை இழக்கும் அந்தக் கடைசி மாற்றம் நேர்வழியில் நடக்க வாய்ப்பில்லை
என்றும் குழப்பம் இருக்கும் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவித்தன. உண்மை தான் என்று
குருஜி நினைத்தார். ‘ஈஸ்வரை நியமித்த பசுபதி நேரடியாக சிவலிங்கத்தை அவனிடம்
ஒப்படைக்கவும் இல்லை, அவனை சந்திக்கவும் இல்லை. கணபதியை நியமித்தவரும் அவனை நேரில்
சந்திக்கவில்லை. அவர் யார் என்றே இன்னும் கணபதி அறிந்திருக்கவில்லை. மூன்றாவது
நபர் நியமனமாகவே இல்லை. அதற்கு முன் நான் இந்த சிவலிங்கத்தை என் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்து விட்டேன்....”
”என்னை
சித்தர்களோ மனிதர்களோ யாரும் நியமிக்கவில்லை. விதி தான் என்னை நியமித்து இருக்கிறது. சித்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்து
சிவலிங்கம் விடுபடும் போது ’தெரிய
வேண்டியவர்களுக்குத் தெரியும்’ என்று
புனித கங்கையில் நின்று கொண்டு அந்த அகோரி சாது சொன்னது சரி தான். எனக்குத் தெரிய
வந்ததும் விதியின் தீர்மானம் தான்....”
நினைக்கும் போதே குருஜிக்குப்
பெருமிதமாக இருந்தது. கணபதி வீட்டுக்குச் சென்று அரக்கு வைத்து மூடிய உறையில்
வைத்து அந்த ஜோதிடர் தந்து விட்டுப் போன கடிதத்தைப் படித்த போது அவருக்கு
அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை தான். அவனை அவர் தேர்ந்தெடுத்ததாக நினைத்துக் கொண்டு
இருந்த போது முன்பே வேறொரு நபரால் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்ததை அவரால்
சகிக்க முடியவில்லை. விதியின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறோமோ என்று கூட
சந்தேகம் அவரை அரித்தது. ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது எல்லாம் சரியாகத்
தான் முடிந்திருக்கிறது என்று தோன்றியது.
’சித்தர்கள்
சக்தி கற்பனைக்கு அடங்காதது தான். ஆனால் அக்னி நேத்ர சித்தர் ஏதோ ஒரு
காரணத்திற்காக மூன்றாவது ஆளைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் செய்து விட்டார். நல்ல
முகூர்த்தத்திற்காகக் காத்திருந்தாரா சரியான மனிதனிற்காக அவர் காத்திருந்தாரா
என்று தெரியவில்லை. அதுவே அவருக்கு வினையாகி விட்டது. அதுவே சிவலிங்கத்தின் புதிய
விதியாகி விட்டது. நான் அவரை முந்திக்கொண்டு விட்டேன். வேகமாக செயல்பட்டு
விட்டேன்... கணபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தைக் காற்றில் பறக்க வைத்து தீயில்
எரித்தது, சிவலிங்கத்திற்கு இமயமலைப்பக்கம் பூக்கும் பூக்களைக் கொண்டு வந்து
அலங்கரித்தது போன்ற சித்து வித்தைகளில் காட்டிய தன் சக்தியை மூன்றாவது
பாதுகாவலனைக் கண்டுபிடிக்க அவர் பயன்படுத்த முடியாமல் போனது விதியே. விதியின்
சக்திக்கு முன் சித்தர் சக்தியும் எம்மாத்திரம்?’
ஓலைச்சுவடிகளின் விளக்கங்களை மறுபடியும்
ஒருமுறை குருஜி புரட்டினார். ஓலைச்சுவடிகளின் கடைசியில் இருந்த செய்யுள் போன்ற இரு
வரிகளை எழுதியிருக்கும் விதம் மற்ற வரிகளை எழுதிய விதத்தில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது
என்றும் அதற்கு ஏதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கலாம் என்றும் தமிழாராய்ச்சி
வல்லுனர் சொல்லி இருந்தார்.
அந்த வரிகளை மீண்டும் குருஜி படித்தார்.
தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும்
மெய்ஞானம்
மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம்
அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்
‘தூய
உள்ளமும், அறிவும் சேர்ந்து தூங்காமல் தேடினால் மெய்ஞானம் பெற முடியும். உள்ளம்,
அறிவு, ஞானம் மூன்றும் சேர்ந்து காத்தால் பூவுலகம் அழியாமல் மிஞ்சும். இல்லையேல்
சிவஞானம் என்ற இறைஞானம் கூட அழிக்கும் விஷமாக மாறி விடும்’ என்று பொருள் சொல்லலாம். இங்கே தூங்காமல்
என்பதற்கு சோம்பல் இல்லாமல், தளராமல் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். அது தான்
பொருத்தமாக இருக்கும்.
நல்ல தத்துவார்த்தமான விஷயம் என்பதால்
வித்தியாசப்படுத்தி எழுதி இருக்கிறார்களா இல்லை வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்குமா
என்று குருஜி பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் தத்துவம் விட்டால்
வேறு ஒரே ஒரு அர்த்தம் தவிர மற்ற அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த
ஒரு அர்த்தமும் மகா அபத்தமாகத் தோன்றியது.
இன்னும் நியமிக்கப்படாத ஞானவழி ஆளை அறிவு, பக்தி
மார்க்க ஆட்கள் சேர்ந்து தேடினால் கண்டுபிடிக்கலாம் என்ற அர்த்தமும் கொள்ளலாம். அந்த மூன்று
பேரும் சேர்ந்தால் உலகத்தைக் காப்பாற்றலாம், இல்லா விட்டால் சிவலிங்கம் உலக
அழிவிற்கான விஷமாகி விடும் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படி இருந்தால் அது
நகைப்பிற்குரிய விஷயம் தான்.... இது வரை நியமன முறையில் நடந்த ஞானவழி ஆள் தேடிக்
கண்டு பிடிக்க வேண்டிய நபராக ஆள் என்றாகி விடும்.
குருஜி எண்ணப் போக்கு
இப்படியாக இருந்தது. ’அப்படி
இருக்க வாய்ப்பே இல்லை.... அறிவு வழி நியமனமான ஈஸ்வரும், மனம்-பக்தி வழி நியமனமான
கணபதியும் இனி சேர வாய்ப்பே இல்லை.... அதனால் அவர்கள் ஞானவழி ஆளைக் கண்டுபிடிக்க
வாய்ப்பே இல்லை.... ஞான வழி ஆள் என்று வேறு ஒருவன் எங்கோ இருந்தால் கூட அவர்களுடன் சேரவும் வாய்ப்பே இல்லை... உண்மையான
ஞானம் நான் தான்... சித்தர்கள் கட்டுப்பாட்டிலிருந்து விசேஷ மானஸ லிங்கம் எப்போது
விலகியதோ அப்போதே சித்தர்கள் கடைபிடித்த நியமன வழிமுறையும் மாறி விட்டது. இனி
ஞானம் தான் மற்ற இரண்டு வழி மனிதர்களைத் தீர்மானம் செய்யும். நான் அப்படித்தான்
செய்திருக்கிறேன்..... கணபதியை நான் தீர்மானித்து இருந்தேன். ஆச்சர்யமாக அவர்களும்
அவனையே நியமித்து இருக்கிறார்கள்.... ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த ஈஸ்வருக்குப்
பதிலாக நான் ஜான்சனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உதயன் சொன்னது போல இந்த மண்ணின்
மைந்தனாக ஜான்சன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அறிவைப் பொருத்த வரை அது அவசியமும்
இல்லை. ஞானத்திற்கு மட்டும் தான் இந்த மண்ணின் மகான்கள் பேர் போனவர்கள்.... அறிவு
உலகமெல்லாம் பரவிக் கிடக்கிறது.... கணபதியை நான் இனி மெல்ல மாற்றுவேன். ஜான்சனை
வழி நடத்துவேன்.... இனி என்ன நடக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன்... இனியொரு
விதி செய்வேன்....”
அவர் எண்ண ஓட்டத்தை கர்ணகடூரமான ஒரு அலறல்
நிறுத்தியது. யார் இப்படி அலறுகிறார்கள் என்று அவர் திகைத்தார். யாரோ தலை தெறிக்க
ஓடி வரும் சத்தம் கேட்டது....
(தொடரும்)
-
என்.கணேசன்