சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 9, 2012

கோபத்தையும் பயன்படுத்தலாம்!



சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஎன்று திருவள்ளுவர் கூறுவார். பொதுவாக, கோபம் எங்கே எல்லாம் சேர்கிறதோ அங்கேயெல்லாம் அழிவு தான். முக்கியமாய் அழிந்து போவது மன நிம்மதி. அதன் பின் கோபத்தால் உந்தப்பட்டு செய்யும் செயல்கள் எல்லாமே மேலும் அதிக அழிவை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கி விட்டே தணியும். இது பொது விதி. ஆனால் கோபம் கூட முறையாகப் பயன்படுத்தப்பட்டால் நல்ல மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது. அது எப்படி என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

1943ல் ஒரு நாள் அமெரிக்க கருப்பர் இனத்தலைவரான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), டூப்ளின் நகரில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அட்லாண்டாவிற்கு பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவருடைய ஆசிரியை ஒருத்தியும் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சில வெள்ளையர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் போகவே பஸ் டிரைவர் மார்ட்டின் லூதர் கிங்கையும், அவரது ஆசிரியையும் எழுந்து அந்த வெள்ளையர்களுக்கு உட்கார இருக்கையை விட்டுத் தரச் சொன்னார். மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அது அநியாயமாகவும், அவமானம் தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அது அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்ச்சி ஆனதால் அவருடைய ஆசிரியை உடனடியாக எழுந்து விட்டார். மார்ட்டின் லூதர் கிங் வேறு வழி இல்லாமல் தயக்கத்துடன் எழுந்தார். அவர் எழத் தாமதமானதால் பஸ் டிரைவர் அவரைக் கடும் வார்த்தைகளால் திட்டினார். அது அவரை மேலும் கோபமூட்டியது. 90 மைல் தூரத்தை அவர் பஸ்ஸில் நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி தன் சுயசரிதையில் பிறகு எழுதிய போது மார்ட்டின் லூதர் கிங் இப்படி குறிப்பிட்டார். “என் வாழ்வில் நான் மிக அதிக கோபம் கொண்ட நாள் அது. அந்த இரவை என்னால் என்றுமே மறக்க முடியாது”. ஒடுக்கப்படும் கருப்பு இன மக்களுக்காக அவர் குரல் கொடுக்க அந்த நிகழ்ச்சி ஒரு விதையாக அமைந்தது என்றால் அது தவறாகாது.

அந்தக் கோபத்தை அவர் தணித்துக் கொள்ள அவர் பலரும் நாடும் வழிகளை மேற்கொள்ளவில்லை. தானும் கண்டபடி திருப்பி அந்த டிரைவரைத் திட்டவோ, தாக்கவோ முனையவில்லை. ஒரு மத போதகராக வாழ்க்கையை ஆரம்பித்த அவருக்கு அந்த வழிகளில் மனம் செல்லவில்லை. தனிப்பட்ட விதத்தில் அதை எடுத்துக் கொள்ளாமல் கருப்பர்களுக்கு தொடர்ந்து நிகழும் அவமானமாகக் கண்ட அவர் கோபம் அந்த தவறான அநீதியான முறையையே ஒழிக்க வழிகளைத் தேடியது. 1955ல் மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தைத் தலைமை தாங்கி பெருமளவில் நடத்திய அவர் பல எதிர்ப்புகளைக் கண்டார். அரசாங்கம் சின்ன சின்ன வழக்குகளிலும் அவரை சிக்க வைத்து தடை செய்யப்பார்த்தது. அவருடைய சக கருப்பர் தலைவர்களோ அவரது அறப்போராட்டம் பிடிக்காமல் அவரை எதிர்த்தனர்.

இரண்டு பக்கங்களிலும் எதிர்ப்பு அதிகமாக இருந்தது போதாது என்று வெள்ளைத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். 1956 ஆம் ஆண்டு அவர் வீட்டிலேயே வெடிகுண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவரும் அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பினார்கள் என்றாலும் அவர் கோபம் அதிகரித்தது. கருப்பர்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராக அவரும் மாறி விடும் படியான மனநிலைக்குத் தானும் வந்து விடுமோ என்று கூட சந்தேகப்பட்டதாக அவர் தன் சுய சரிதையில் சொன்னார்.

ஆனால் அந்தக் கோபத்தையும் தனிப்பட்ட விதத்திலும், தனிப்பட்ட மனிதர்கள் மீதும் எடுத்துக் கொள்ளாமல் அப்போதிருந்த சமூக முறையிலேயே குற்றம் கண்ட அவர் அந்த முறையை சமூகத்திலிருந்து அகற்ற போராட்டத்தில் இறங்கினார். அதில் கடைசியில் வெற்றியும் கண்டார். 1964 ஆம் ஆண்டு சத்தியாகிரக வழியில் அவர் அந்த சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி கண்டதற்காக சமாதான நோபல் பரிசு பெற்றார். 1968 ல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதும் அவர் தான் எடுத்துக் கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றதை வரலாறு இன்றும் பாராட்டுகிறது.

(அவருக்கு சத்தியாகிரக வழியில் வழிகாட்டியாக இருந்தவர் நம் மகாத்மா காந்தி. இதை மார்ட்டின் லூதர் கிங் பல முறை குறிப்பிட்டு உள்ளார். மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அதில் பயணித்த போது வெள்ளையரான ஒரு ரயில்வே அதிகாரியால் இறக்கி விடப்பட்டது நினைவிருக்கலாம்.  தன் அறப்போராட்டத்தை தென்னாப்பிரிக்கையில் தொடங்கியதற்கு அந்த நிகழ்ச்சி தான் விதையாக இருந்தது.)

பஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்க வைத்த டிரைவரை வாயிற்கு வந்தபடி திட்டியோ, இறங்கிய பிறகு கல்லெடுத்து எறிந்தோ, பிறகு எதாவது ஒரு வெள்ளையருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தோ தன் கோபத்தை அவர் தீர்த்துக் கொண்டிருந்தால் தனிமனித கோபத்தைத் தீர்த்துக் கொண்ட ஒரு சராசரி மனிதனின் செய்கையாய் போயிருந்திருக்கும். அமெரிக்க கருப்பர்களுக்கு சம உரிமை கிடைத்த சரித்திரம் உருவாகி இருக்காது.

கோபம் நம்முள் பெரியதொரு சக்தியை உருவாக்க வல்லது. உறுதியாகச் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்தது. கோபம் இருக்கும் நேரத்தில் செயல்படாமல் இருப்பது தான் மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால் அந்தக் கோபமும் நல்ல சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.


இது பெரும் தலைவர்களுக்குத் தான் முடியும் என்பதல்ல, சாதாரண மனிதர்களுக்கும் முடிந்தது தான். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர். அவருக்கு உதவி செய்து வந்தவருடைய மகன் ஒருமுறை அவரிடம் பலர் முன்னிலையில் “எங்கள் தயவில்லாமல் நீங்கள் இருக்க முடியாதுஎன்று சொல்லிக் காட்ட அவருக்கு அது  ரோஷத்தைக் கிளப்பி விட்டது. உங்கள் தயவில்லாமல் உங்களை விட உயர்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுச் சென்றவர் பத்து வருடங்களில் அப்படியே சாதித்தும் காட்டினார். அவருக்குள்ளே சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற  ஒரு வேகத்தை அந்தக் கோபம் கிளப்பி விட்டது போல இருந்தது. சிறிது காலத்தில் அவர் வாழ்க்கை முறையே மாறிப் போனது.  

பல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா?

- என்.கணேசன்

8 comments:

  1. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அருமையான பதிவு பாஸ். அன்று நிறவெறி போல இப்போது சாதிவெறி எமது மக்களிடையே இருக்கிறது. இங்கும் பல மார்ட்டின் லூதர் கிங்குகள் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களது கோபங்களும் வெற்றிபெறவேண்டும்.

    ReplyDelete
  3. பல சமயங்களில் கோபம் இது போல் பெரிய உந்து சக்தியாக அமையக்கூடும். பெரிய மாற்றங்களுக்கான பிள்ளையார் சுழியை அது போடக் கூடும். அதனால் அர்த்தமில்லாத கோபங்களை அவ்வப்போதே விட்டுத் தள்ளுங்கள். அர்த்தமுள்ளதாய் கோபம் வரும் போது அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தீர்வையோ, நல்ல மாற்றத்தையோ உருவாக்க முடிந்தால் கோபமும் நல்லதே அல்லவா?//

    நீங்கள் சொல்வது சரியே. கோபமும் நல்லது தான்.
    ரெளத்திரம் பழகு என்று பாரதியும் சொல்லி இருக்கிறாரே!
    பதிவு மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு...நிறைய நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்திருக்கிறது ,,நன்றி!

    ReplyDelete
  5. இனி என‌து கோப‌ங்க‌ளையும் ஆக்க‌ப்பூர்வ‌மான‌ முன்னேற்ற‌த்துக்கு திசைதிருப்ப‌ உறுதி கொண்டேன்... ப‌திவினைப் ப‌டித்த‌தும்.

    ReplyDelete
  6. கோபத்தால்..... நல்லது நடந்தால் நன்மை ! ஆனால் அது அரிதே ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  7. miga miga arumai ganesen sir........

    ReplyDelete
  8. உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்

    நன்றி
    குணா

    ReplyDelete