சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 5, 2012

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13
ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.

மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.

ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.

தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.

எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.

தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமேஎன்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.

இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.

இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.

அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய  கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-

ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.

“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?

“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்..... மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில்  சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”

“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.

“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.

“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?

“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....

“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?

“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன்  பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்

உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.... உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?” 


உண்மை தானே!

நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.

(தொடரும்)

51 comments:

 1. காண கிடைக்காத அறிய விஷயத்தை எழுதி இருக்கிறீர்கள் கணேசன் அவர்களே.

  உங்களை போல மாற்று மதத்தினர் இஸ்லாத்தை பற்றி எழுதும் பொது தான் அதன் வலிமை இன்னும் கூடிகிறது.
  எங்களை போல உள்ளவர்களுக்கு மேலும் தகவல் கிடைகிறது.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 2. சலாம் சகோ....அருமையான கட்டுரை

  ReplyDelete
 3. ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். தொழுகை

  இப்பதிவில் கூறப்பட்டுள்ளவற்றை காணொளில் (VIDEO களில்) காண்பதற்கு….

  சொடுக்கி >>> அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். “ தொழுகை” அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். காணுங்கள். <<<<<<

  .
  .

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி சகோ.கணேசன்

  ReplyDelete
 5. “நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....”//

  நின்றும், இருந்தும், கிடந்தும்,நடந்தும் , நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் என்று அபிராமி பட்டர் சொல்வது போல்
  படுத்த நிலையிலும் இறைவனை வணங்கலாம் என்று இஸ்லாம் தொழுகை கூறுவது மந்துக்கு பிகவும் பிடித்து இருக்கிறது.

  அவர்கள் ரயில் நிலையத்தில் , ரயில் பயணத்தில் அவர்கள் தொழுவதைப் பார்த்து வியந்து இருக்கிறேன்.


  ”இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமே” என்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.//

  என்ன ஒரு கம்பீரம்! உறுதி! முகமது நபி குரலில்!

  அற்புதங்களை நிகழ்த்தினால் தான் தான் இறை தூதர் என்ற எண்ணம் வேண்டாம் என்று எவ்வளவு உறுதியுடன் இருந்து இருக்கிறார்.

  “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.”

  இறைவன் வழங்கும் நீதி வழுவாது.

  அருமையான் பகிர்வு.

  ReplyDelete
 6. இது என் முதல் வருகை.பால் ப்ரண்டன் என்றால் என் நினைவுக்கு வருவது ரமணருடனான சந்திப்புதான்.அவரை ப்பற்றி இது வரை 17 பதிவுகளா?நன்று.இனி தொடர்ந்து வருவேன்.

  ReplyDelete
 7. //மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது.//

  இறைவன் ஒருவனே மிகப் பெரியவன் என்பதற்குச் சான்றாக தினமும் ஐந்து வேளை தொழுகை திகழ்கிறது. உலகில் எந்த ஒரு சூழ்நிலையில் வேண்டுமானாலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் நிலை மனித மனங்களினால் ஏற்படலாம். ஆனால் தொழுகையின் போது வாய்ப்பே இல்லை. இதை உலகின் ஒவ்வொரு மூலையிலும் தொழுகை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது, மேலும் (இன இழிவு நீக்கி) வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஐந்து முறை மனித சமுதாயத்தை அழைத்துக் கொண்டும் இருக்கிறது இந்தத் தொழுகை.

  நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
 8. Hi Ganesan, Hope you remember me. I’ve worked with you in HCL Technologies Ltd.(V&V team). It is a very good post, I like it very much. Thanks for sharing. Keep up the good work.

  ReplyDelete
 9. நல்ல கட்டுரை ! தொடருங்கள் சார் ! அருமையா இருக்கு !

  ReplyDelete
 10. you are real hindu

  ReplyDelete
 11. எனது ஹிந்து நண்பர் சொன்ன தகவல் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு அறிமுகமான ஒரு முஸ்லிம் அன்பரும் ஏறி இருக்கிறார்.எதிரெதிர் இருக்கைகளில் இருந்து, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த முஸ்லிம் அன்பர் "மன்னிக்கனும்.. ஒரு ஐந்து நிமிடம் இருங்க.. தொழுது விட்டு உங்களோடு பேசுகிறேன்" என்றவுடன், எனது நண்பர் ஓடும் ரயிலில் எங்கே போய் தொழப் போகிறார் என்று யோசிக்கும் போதே, அந்த முஸ்லிம் தனது இருக்கையில் இருந்தபடியே தொழ ஆரம்பித்துள்ளார். இரு கைகளையும் காதருகே கொண்டு சென்று பின் நெஞ்சில் கட்டிக்கொண்டும், பின் லேசாக தலையை கவிழ்தும், இறுதியாக இடமும் வலமும் திரும்பி விட்டு தொழுகையை முடித்துக்கொண்டாராம். அதன் பிறகு அவரோடு இயல்பாக பேச முடியவில்லையாம் எனது நண்பருக்கு ஏனென்றால் அவர் சிந்தனையை முழுவதும் ஆக்ரமித்து விட்டது இஸ்லாம். ஆச்சரியம் என்றால் அப்படி ஒரு ஆச்ச்சர்யம் என் நண்பருக்கு. இஸ்லாமிய வாழ்வியல் நெறியைப் பற்றி இப்போது கூட, பேச சொன்னால் மணிக்கணக்காய் பேசக்கூடிய அளவிற்கு அவரை இஸ்லாம் ஈர்த்துள்ளது.

  ReplyDelete
 12. சிறந்த பகிர்வு நண்பரே!

  ReplyDelete
 13. Fantastic post brother...

  ReplyDelete
 14. அருமையான பதிவு நன்றி.நண்பா

  ReplyDelete
 15. சகோதரர் கணேசன்,

  உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

  மிக அருமையான கட்டுரை. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 16. நல்ல பதிவு. இஸ்லாம் பின் பற்றுவதற்கு நல்ல மதம்தான். ஆனால் இஸ்லாமியர் என்றால் தீண்ட தகாதவர்கள் என்ற மாயை ஏற்படுத்தி விட்டனர்.

  ReplyDelete
 17. அருமையான பதிவு. நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 18. அருமையான கட்டுரை.தொடருங்கள்...

  ReplyDelete
 19. எலலாப் புகழும் இறைவனுக்கே!

  ReplyDelete
 20. கணேசன்,

  நான் உங்களது பதிவுகளை கடந்த் 3 வருடமாக படித்து வருகிறேன், உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது.

  //”ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?”
  “குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை.//

  குர்ஆனில் இறைவன் எந்த் ஒரு விசயத்தை பற்றி குறிப்பிடும் பொழூதும் அதை மனிதர்கள் ஆராய வேண்டும் என்று விரும்பியவனகாக அதை பற்றி கோடிட்டு காட்டியவனாகவே கூறுகிறான்: இறைவன் ஆத்மாவை பற்றி:

  (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (குர்ஆன் 17:85)

  இறைவன் மனிதர்களுக்கு ஆத்மாவை பற்றி சிறிதளவே ஞானம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான்.

  ReplyDelete
 21. நீங்கள் மாற்று மதத்தினை பின்பற்றுவராக இருந்தாலும் - இஸ்லாம் குறித்த உண்மைகளை - நிறைய எழுதுங்கள் தோழரே!
  எல்லோரையும் அரவணைக்கும் மார்க்கமாகிய இஸ்லாம், அதனுடைய எளிய நடைமுறைகள் மூலம் தான் பரவியதே தவிர வாளால் பரப்பப்படவே இல்லை!
  உங்களின் பதிவுக்கு வாழ்த்துகள்.
  --- அன்புடன் உங்கள் சகோதரன்:
  பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
  My BLOG: http://pnonazim.blogspot.com/

  ReplyDelete
 22. உங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் உண்மையை உணர்த்துபவைகள். உங்கள் மனதிற்கு எது சரியானதாகத் தெரிவதையே சிந்தித்து எழுதுவதைப் பார்க்கின்றேன். இந்த கட்டுரை பெரிய உதாரணம்.

  பெயர் பெற எதை எதையோ எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் உண்மையான நேர்மையான உங்களை பெருமையாகக் கருதுகிறேன்.

  இஸ்லாம் சம்பந்தப்பட்ட விசயத்தை மொழிபெயர்த்து எழுதும் போது பிரபலமான பத்திரிக்கைகள் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளைச் செய்கின்றனர்.

  ஆனால் தாங்கள் மிகவும் சரியாக பொருளணர்ந்து உண்மையை எழுதியுள்ளது உங்களது நேர்மையையும் துணிவையும் உணர்த்துகிறது.

  எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லவற்றை தருவானாக! நேரிய சிந்தனையையும வழியையும் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சாதி இல்லை மதம் இல்லை சித்தர் இல்லை முனிவர் இல்லை தேவர் இல்லை
   உயிர்கள் மட்டுமே உள்ளது.

   உயிர்கள் இன்பமாக வாழ வழி என்ன?

   Delete
 23. From the ocean of islam you have to search for pearls and not the garbage.Search with love not with hatred.

  ReplyDelete
 24. நல்லவற்றை எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நல்லோர்களுக்கு மட்டுமே இருக்கும். ஒரு நல்ல பதிவரை கண்டதில் மகிழ்ச்சி சகோதரரே!

  ReplyDelete
 25. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லவற்றை தருவானாக! நேரிய சிந்தனையையும வழியையும் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. Well Done Brother.... Keep going!!!

  ReplyDelete
 27. thangalidam neenda naatkalaaha ethirpaarthathu

  ReplyDelete
 28. All the religion in this world talk about PEACE even in ISLAM too...ISLAM is a peaceful Religion I agree....

  Good write up ..the God is one....That's it...

  ReplyDelete
 29. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லவற்றை தருவானாக

  ReplyDelete
 30. நல்லவற்றை எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நல்லோர்களுக்கு மட்டுமே இருக்கும். ஒரு நல்ல பதிவரை கண்டதில் மகிழ்ச்சி சகோதரரே!எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லவற்றை தருவானாக! நேரிய சிந்தனையையும வழியையும் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. Fantastic Post. Thanks man.
  It should reach every person, insha allah.

  -thanks
  NOOR

  ReplyDelete
 32. super ungaladhu padaippukkal anaithumae nandraga ulladhu vaazhthukkal sir

  ReplyDelete
 33. நல்ல பதிவு இறைவன் நல்லருள் பாலிப்பானாக

  ReplyDelete
 34. Islam patriya pala ariya thagavalgalai thoguthu aliththarku Thiru.Ganesha avargalukku Nandri.

  ReplyDelete
 35. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்லவற்றை தருவானாக! நேரிய சிந்தனையையும வழியையும் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 36. Really superb Sir.

  ReplyDelete
 37. எல்லாம் இறைவன் செயல்

  சித்தர் உண்மை, முனிவர் உண்மை,தேவர் உண்மை
  நாம் அறியாதவைகளை பொய் என்கிறோம்
  நீர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்

  ReplyDelete
 38. Nice article Sir!!!

  ReplyDelete
 39. Your style of writing is excellent as the subject.

  ReplyDelete
 40. இன்னும் அதிகமாக இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள் தோழரே !

  ReplyDelete
 41. Though I am a Muslim I understand my religion better after reading your post sir. Thanks a lot and God bless you.

  ReplyDelete