சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 25, 2012

கர்மம்-விகர்மம்-அகர்மம்



கீதை காட்டும் பாதை 16
கர்மம்-விகர்மம்-அகர்மம்

ஞான யோகத்தில் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை. அவற்றின் பலன்களிலும் எனக்குப் பற்றில்லை. இவ்விதம் என்னை யார் அறிகிறானோ அவன் என்றும் செயல்களால் கட்டுண்டிருப்பதில்லை.

பலனில் பற்று வைக்காமல் செயல்களைச் செய்யச் சொன்னதன் காரணமே அந்த செயல்களால் நாம் கட்டுண்டு இருந்து விடக்கூடாது என்பதால் தான். அதை விரிவாகவே கர்மயோகத்தில் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு எப்படி முன்னுதாரணமாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் பார்த்தோம். போதித்த படியே இருந்து காட்டிய அவர் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர் வழியை அறிந்து உணர்ந்தவர்களும் செயல்களால் கட்டுண்டு இருப்பதில்லை என்கிறார்.

உடல், மனம், அறிவு என்ற அடையாளங்களுக்குள் புகுந்து கொண்டு விடும் போது தான் நாம் இன்ப துன்ப அலைகளில் அலைக்கழிக்கப்படுகிறோம். அளவில்லாத, அழிவில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத ஆன்மாவாக நாம் தெளிவு பெற்று நம்மைக் காண்கையில் எந்த நிலையும், எந்த செயலும் நம்மைப் பாதிப்பதில்லை.

தெளிவான நீரிலும், அழுக்கான நீரிலும், அலைபாயும் நீரிலும் சூரியன் பிரதிபலிக்கிறது என்றாலும், பிரதிபலிப்புகள் ஒரு போலவே இருப்பதில்லை. தெளிவான நீரில் தெளிவாகவே சூரியன் தெரிகிறது. சேற்று நீரிலோ சூரியன் பிம்பம் மங்கித் தெரிகிறது. அலைபாயும் நீரிலோ சூரியனும் அலைபாய்வது போலத் தெரிகிறது. ஆனால் இந்தப் பிரதிபலிப்புகள் நீரின் தன்மைக்கேற்ப மாறுகிறதே ஒழிய சூரியனின் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை.
நீருக்கு சூரியனின் தன்மையை மாற்றுகிற சக்தி அணுவளவும் கிடையாது.

அதே போல ஆத்மாவும் குடிபுகும் மனிதர்களின் உடல், மனம், அறிவுக்கேற்ப வெளிப்படும் தன்மை மாறி மாறித் தெரிகிறதே ஒழிய அதன் உண்மைத் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை. தன் உண்மைத் தன்மைக்கு எதனாலும், எப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்பதை என்னேரமும் நினைவில் வைத்திருக்கும் மனிதனை எது தான் கட்டுப்படுத்தவோ, பாதிக்கவோ முடியும்?

அடுத்ததாக கர்மயோகத்திலும் சொல்லாத கர்மயோகத்தின் மிகப்பெரிய சூட்சுமத்தை இந்த ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆழமாக விளக்குகிறார். 

எது கர்மம்? எது கர்மமல்ல? இதை அறிந்து கொள்வதில் அறிஞர்களும் குழப்பமடைந்து விடுகிறார்கள். அதனால் கர்மத்தை உனக்கு விளக்கப் போகிறேன். இதை அறிந்து விட்டால் நீ இந்தப் பிறவியின் தீமைகளில் இருந்து விடுபடுவாய்.

நீ உண்மையான கர்மத்தைப் பற்றி அறிய வேண்டும். அதே போல விகர்மத்தைப் பற்றியும், அகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஏனென்றால் கர்ம மார்க்கம் ஆழமானது. அதை சரியாகப் புரிந்து கொள்வது சுலபமல்ல.

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்.

யாருடைய ஒவ்வொரு கர்மமும் ஆசையிலிருந்தும் சுயநல நோக்கத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறதோ, யார் தன் கர்மங்கள் அனைத்தையும் ஞானம் என்ற தீயில் எரித்து விட்டானோ, அத்தகைய ஒருவனைத் தான் பண்டிதன் என்று விவேகிகள் கூறுகிறார்கள்.

இந்த கர்மம், விகர்மம், அகர்மம் என்ற சொற்களில் மனிதனின் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் செய்ய வேண்டிய செயல்கள் செய்வது கர்மம். செய்யக் கூடாத செயல்கள் செய்வது விகர்மம். செயலற்று இருப்பது அகர்மம். இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது, இதைப் புரிந்து கொள்வது சுலபமல்ல என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறக் காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம்.

இந்த மூன்றையும் பார்வையால் அறிந்து கொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியமே. ஏனென்றால் பார்வைக்கு ஒன்று இன்னொன்றாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவனைப் பார்த்தால் அவன் செயல் புரிகிறான், அதனால் அது கர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் செய்வது அவனுக்குத் தேவையும் பயனும் அற்ற வேலையாக இருந்தால் அது உண்மையில் விகர்மம். அதனால் எந்த மாற்றமும் ஏற்படாமல் முன்னிருந்த நிலைமையே தொடர்ந்து இருக்குமானால் அது செயல் புரிந்ததே அல்ல என்பதால் அது அகர்மம்.

அதே போல் ஒருவன் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பார்வைக்கு அவன் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறான், எனவே அது அகர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் மனதில் ஓராயிரம் எண்ணங்கள் ஓடுமானால் அது அகர்மம் அல்ல. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அவனை நல்வழிப்படுத்துவதாகவும், செய்ய வேண்டிய செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் இருக்குமானால் அது கர்மமே.  அந்த எண்ணங்கள் பயன் இல்லாதவையாகவும், அவனுக்குத்  தேவை இல்லாதவையாகவும் இருந்தால் அது விகர்மமே.

உடலால் நடக்கும் செயல்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. மனதிலும், அறிவிலும் கர்மம் அல்லது விகர்மம் நடந்து கொண்டே இருக்கின்றது. எந்த அளவு மனிதன் கர்மத்தை சிரத்தையுடன் செய்து, விகர்மத்தை தவிர்க்கிறானோ அந்த அளவு நன்மை அடைகிறான். அதற்கு எதிர்மாறாக இருக்கும் போதோ தீமையை சம்பாதிக்கிறான்.

இதனைத் திருவள்ளுவர் ரத்தினச்சுருக்கமாகச் சொல்வார்:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்.

(ஒருவன் செய்யத்தகாத செயலைச் செய்தாலும் கெடுவான். செய்ய வேண்டிய செயலைச் செய்யா விட்டாலும் கெடுவான்.)

உண்மையில் செயலற்று இருக்கும் அகர்மம் எளிதில் சாத்தியமல்ல. சும்மா இருப்பது சுகம் என்று பலருக்கும் தோன்றினாலும் அது தான் மிகவும் கஷ்டமான காரியம். பலருக்கும் அசையாமல் இருப்பதே முடியாத காரியம். கை கால்களையாவது ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். அசையாமல் இருக்க முடிந்தாலும் மனதினுள் நடக்கும் செயல்களோ ஓராயிரம் கோடி. ஆழ்ந்த உறக்க நிலையில் தான் ஓரளவாவது அகர்மம் அவர்களுக்கு சாத்தியமாகிறது. முழுமையாக அகர்மம் சாத்தியமாவது என்பதோ மரணத்தில் தான்.

எனவே தோற்றத்தை வைத்து செயல் செயலின்மையை சாதாரணமாக யாரும் கண்டுபிடித்து விட முடியாது. செயலில் செயலின்மை இருக்கலாம், செயலின்மையில் செயலும் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க ஞானியாலேயே முடியும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

கரையிலிருந்து பார்க்கையில் தூரத்தில் கப்பல் சென்று கொண்டிருந்தாலும் அது அப்படியே நிற்பது போலத் தான் தோன்றும். இது செயல் செயலின்மையாகத் தெரிவது. அதே போல ஆழ்ந்த சிந்தனையில் ஒரு ஞானியோ, விஞ்ஞானியோ இருப்பது செயலற்ற நிலை போலத் தோன்றினாலும் அது வீரியமுள்ள செயல்நிலை என்றே சொல்ல வேண்டும். பின்னால் வரும் பல தலைமுறைகள் வாழ்க்கை முறைகள் அவர்கள் சிந்தனைகளால் மாறக்கூடும்.

(தியானத்தின் போது யோகிகளும், ஆராய்ச்சிகளின் போது ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும் வேகம் குறைந்த, அதிக செயல்பாடுகள் இல்லாத ஆல்ஃபா மன அலைகளில் இருப்பதை ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடரில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

ரயிலில் பயணம் செய்கையில் பார்க்கின்ற மரம், செடி, கொடி எல்லாம் வேகமாக நம்மைக் கடந்து செல்வது போலத் தோன்றும். ஆனால் அவை எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியே தானே இருக்கின்றன. இது தான் செயலின்மை செயலாகத் தெரிவது. அதே போல சில மனிதர்களின் சுறுசுறுப்பும் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் ஒன்றை செய்து அதற்கு எதிர்மாறாக இன்னொன்றை செய்து விளைவைப் பூஜ்ஜியமாக்கி விடுவார்கள். பார்வைக்கு நிறைய செயல்கள் நடப்பது போலத் தோன்றினாலும் அத்தனையும் வீண் தான்.

எனவே தான் எதையும் பார்வைக்குத் தெரிகிற மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஒரு ஞானியின் பார்வையில் காணச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நாமும் நிறைய செயல்கள் புரிகிறோம். அப்படி செயல்புரிந்து பல சந்தர்ப்பங்களில் களைத்தும் போகிறோம். அவையெல்லாம் பெரிய விஷயங்கள் என்று எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ஸ்ரீகிருஷ்ணரின் இந்த வகைப்படுத்தலில் எந்த வகையில் வருகிறது என்பதை நாம் சிந்தித்து அறிய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ள வேண்டிய சுயபரிசோதனை இது. அப்படி செய்தால் தான் சரியான பாதையில் தான் நம் வாழ்க்கை முன்னோக்கிப் போகிறதா என்பதை நம்மால் உணர முடியும்.  அவ்வப்போது இப்படிப் பார்க்கா விட்டால் பாதை மாறி நாம் சற்றும் நினைத்திராத, நம் இலக்கில்லாத வேறு ஏதோ ஒரு இடத்திற்குப் போய் சேர வேண்டி இருக்கும்.
மறுபடியும் நம் இலக்கை அடைய திரும்பவும் அதே அளவு தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதால் அவ்வப்போது நம் செயல்களை சோதித்துப் பார்ப்பது தேவையில்லாத அலைச்சலையும், அதனுடன் சேர்ந்து வரும் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.

பாதை நீளும்...

-என்.கணேசன்
நன்றி: விகடன்

3 comments:

  1. பல உண்மைகளை உணர வைக்கிறது ...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. சுந்தரம்January 25, 2012 at 9:08 PM

    மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக விளக்குகிறீர்கள். அழகாக மனதில் பதிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிக மிக எளிமையான விளக்கம். மனதில் குழப்பமில்லாமல் புரிகிறது. நன்றி.

    ReplyDelete