எங்கிருந்தோ ஒரு ஏலியன்
ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் கேஸ் போல தான் தெரியுது..... ஆரம்பத்துல நுரையீரலைத் தாக்குகிற இந்த வியாதி பெரும்பாலும் பெண்களுக்குத் தான் வருதுங்கறாங்க. கிட்டத்தட்ட கேன்சர் செல்கள் மாதிரி இந்த வியாதி செல்களும் செயல்படுது.....பெரிய அளவுல உற்பத்தி ஆயிட்டே போய் மத்த செல்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனைக் கிடைக்க விடாமத் தடுத்துடுது.... முதல்ல நுரையீரலைத் தாக்கற இந்த நோய் போகப் போக மற்ற உடல் பாகங்களையும் தாக்க ஆரம்பிக்குது..... இது ரொம்பவே முத்துனதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சதால எதுவும் செய்யறதுக்கில்லை.....சாரி...."
ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்து விட்டு டாக்டர் சூசகமாக நாளை காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு போவது நல்லது என்று சொன்னார். அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் மனதில் சூனியமே மிஞ்சியது. தலையை ஆட்டி விட்டு மௌனமாக வெளியே வந்தான். ஐ சி யூவிற்கு வெளியே இருந்த நாற்காலியில் ஒரு ஜடமாய் சிறிது நேரம் உட்கார்ந்தான்.
சென்ற மாதம் வரை அவன் வாழ்க்கை மிக ஆனந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. இளம் விஞ்ஞானியான அவனுக்கு அழகான மனைவி, படு புத்திசாலியான ஆறு வயது மகள், கை நிறைய பணம் என்று எல்லா வகைகளிலும் நிறைவாகவே வாழ்க்கை இருந்தது. ஆனால் திடீரென்று வைஷ்ணவி மூச்சுத் திணறலால் அவதிப்பட ஆரம்பித்த போது ஆஸ்துமாவாக இருக்கலாம் என்று தான் அவன் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டான். ஆனால் எந்த மருந்திலும் முன்னேற்றம் இல்லாமல் போகவே இந்த புகழ்பெற்ற ஆஸ்பத்திரியில் முழுமையாக பரிசோதனை செய்ய அழைத்து வந்தான். எல்லாப் பரிசோதனையும் முடிந்து தான் வாயில் நுழையாத பெயருடைய அந்த அபூர்வ வியாதி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்....
போன் செய்து தன் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும் தெரிவிப்பதற்கு முன்னால் அவனுக்கு யாருமில்லாத இடத்திற்குப் போய் தனியாக வாய் விட்டு அழத் தோன்றியது. கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி பத்தரை. எழுந்து வெளியே வந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். மனம் மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு கனக்க ஆரம்பித்தது. அரை மணி நேரம் நடந்து ஒரு விளையாட்டு மைதானத்தை எட்டிய பின் அங்கு ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. வாய் விட்டு அழ ஆரம்பித்தான்....
சில துக்கங்கள் அழுதும் குறைவதில்லை. பாட்டி வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கும் மகளை எண்ணுகையில் துக்கம் மேலும் கூடியது. 'நான் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லையே. கடவுளே, ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?'
துக்கம் குறையா விட்டாலும் அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் வைரங்களாய் வானத்தில் சிதறிக் கிடந்தன. மையிருட்டு வேளைகளில் மொட்டை மாடியில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே அவனும் வைஷ்ணவியும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இரவு நேர ஆகாயம் மிக ரம்யமானது. கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆகாயம் எத்தனையோ அழகு ஜாலம் காட்டுவதுண்டு. எப்போதாவது அபூர்வமாய் ஒளிக்கற்றைகளும் தோன்றி மறைவதுண்டு. அதில் சிலதை UFO ஆக இருக்கலாம், அதில் ஏலியன்ஸ் பயணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கற்பனை வளமுடைய வைஷ்ணவி சொல்வதுண்டு. எந்த நேரத்தில் அப்படி பார்த்தோம் என்று அவள் அப்போதே கடிகாரத்தைப் பார்த்து பிறகு தவறாமல் டைரியில் குறித்துக் கொள்வாள். அவன் வாய் விட்டுச் சிரிப்பான். விஞ்ஞானியான அவன் ஆதாரபூர்வமாக இல்லாத எதையும் நம்புவதில்லை. பேசிப் பேசி அப்படியே அங்கேயே அவர்கள் உறங்கிப் போவதும் உண்டு.... இனி என்றும் அவன் தனியனே.
அடுத்த தவணையாக கண்ணீர் கண்களில் நிரம்புவதற்குள் ஆகாயத்தில் அபூர்வமான ஒரு ஒளிக் கற்றையை ஸ்ரீவத்ஸன் பார்த்தான். அது எப்போதையும் விடப் பிரகாசமாகவும் பெரியதாகவும் இருந்தது. வைஷ்ணவிஅவனுடன் இருந்திருந்தால் இதில் கண்டிப்பாக ஏலியன்ஸ் இருப்பதாக அடித்துச் சொல்லியிருப்பாள். அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. வைஷ்ணவியின் பழக்கம் அவனிடமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்தான். அந்த ஒளிக்கற்றை அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வர அவனையும் அறியாமல் ஸ்ரீவத்ஸன் தாவிக்குதித்தான்.
ஒளிக்கற்றை மறைந்து ஒரு மனிதன் அங்கே நின்றான். "சாரி நான் பயமுறுத்த நினைக்கவில்லை" என்று சொல்லி அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
தோற்றத்தில் அவன் இளமையாகவும், உயரமாகவும் இருந்தான். மற்றபடி உருவத்தில் சாமானியனாகத் தெரிந்தான். ஸ்ரீவத்ஸன் முதலில் பார்த்தது அவன் கால்களைத் தான். கால்கள் நிலத்தில் பட்டன. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போது வந்தவன் வாய் விட்டுச் சிரித்தான்.
"ஒரு விஞ்ஞானி பேய் இருக்கிறதாய் நம்பலாமா?"
ஒரு கணம் மறுக்க நினைத்த ஸ்ரீவத்ஸன் பின் மறுக்க முடியாமல் தானும் சிரித்தான். "லாஜிக், பகுத்தறிவு எல்லாம் வேலை செய்யறதுக்கு முன்னால் பயம் வேலை செய்துடுது".
தான் ஒரு விஞ்ஞானி என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வி பிறகு தான் ஸ்ரீவத்ஸனைத் தாக்கியது. 'உண்மையில் இவன் யார்? அந்த ஒளியிலிருந்து தான் வந்தானா, இல்லை இதெல்லாம் என் பிரமையா? பேய் அல்ல என்றால் ஏலியனா? மனிதனுடைய தோற்றம் இருப்பதால் ஏலியனாக இருக்க முடியாதே. அதுவும் நம்முடைய மொழியை இவ்வளவு நன்றாகப் பேசுகிறானே'.
"நீங்க யாரு?"
"நான் பக்கத்துல இருந்து தான் வர்றேன்" என்று அவன் ஆகாயத்தைக் கை காட்டினான்.
வந்தவன் ஏதோ மேஜிக் கலைஞன் என்று ஸ்ரீவத்ஸன் முடிவு செய்தான். 'கொஞ்சம் சூட்சுமமாக கவனித்திருந்தால் அவன் எப்படி அந்த எ·பக்டைக் கொண்டு வந்தான் என்று கண்டுபிடித்திருக்கலாம்.'
"என்ன ஆகாயத்தைக் காண்பிக்கிறீங்க. விட்டா ஏலியன்னு சொல்லிக்குவீங்க போல இருக்கே"
அவன் புன்னகையோடு சொன்னான். "உம்... உங்க பாஷையில அப்படியும் சொல்லிக்கலாம்"
"ஆனால் மனுஷ ரூபத்தில் அல்லவா எழுந்தருளியிருக்கீங்க?"
"ஏலியன்ஸ்ன்னு நீங்க சினிமாக்களில் காண்பிக்கற மாதிரி வரணுமாக்கும். அதென்ன கற்பனையில் கூட கண், வாய் இதெல்லாம் இல்லாத ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடியாதா? மனிதன், விலங்கு ரெண்டையும் கூட்டி சில மாற்றங்கள் செய்து ஒரு உருவத்தைக் காண்பிக்கற அளவு தான் உங்க கற்பனை விரியுமா?" அவன் கிண்டலடித்தான்.
"நாங்க ஏலியன்ஸை மனுஷ ரூபத்திலிருந்து கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காண்பிக்க முயற்சி செய்திருக்கோம். அவ்வளவு தான். ஆனால் ஏலியன்னு சொல்லிக்கிற நீங்க அச்சா எங்க மாதிரியே இருக்கீங்களே அது எப்படின்னு கேட்டேன்"
"வேற ரூபத்தில் வந்திருந்தா நீங்க என்னைப் பார்த்தவுடன் ஓடியிருப்பீங்க"
"நல்லா பேசறீங்க. உங்க சுய உருவம் என்னவோ?"
"நிலையான உருவம் இல்லை. உண்மையில் நாங்கள் சக்தி. தேவைப்படும் போது வடிவுகள் எடுப்போம். மீதி நேரங்களில் சக்தியாகவே வடிவமில்லாமல் இருப்போம். அணுவைப் பிளந்து பார்த்த உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச பல சங்கதிகள் எங்களுக்கும் பொருந்தும்"
அணுவைப் பிளந்து பார்த்த போது பெரும்பாலும் வெட்டவெளியாக இருந்ததையும், அதனுள் இருந்த துகள்கள் சில சமயங்களில் அலைகளாக மாறிக் காணாமல் போவதையும், ஆனால் அணுவில் இருந்து பலவிதமான சக்தி வெளிப்பாடுகள் எப்போதும் இருந்ததையும் இன்றைய விஞ்ஞானம் சொல்வதைப் படித்து விட்டு வந்து இவன் தன்னைக் குழப்புகிறான் என்று ஸ்ரீவத்ஸன் நினைத்தான்.
"பூமிக்கு எதுக்கு வந்தீங்க?"
"பூமியில் சில ஆராய்ச்சிகள் செய்ய வந்திருக்கேன். ஜோடியா நீங்க ரெண்டு பேரும் ஆகாயத்தைப் பார்த்துட்டு பேசறதைப் பல தடவை கவனிச்சிருக்கேன். இப்ப தனியா அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்தப்ப பேசிகிட்டு போகலாம்னு தோணிச்சு."
ஸ்ரீவத்ஸனுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'ஜோடியாக ஆகாயத்தைப் பார்த்து பேசறது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது. சிலரால் மனசுல நினைக்கிறதைப் படிக்க முடியும். இவனும் அப்படி ஏதோ வித்தை தெரிந்தவன் போல தெரியுது. அதனால தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததைப் படிச்சுட்டு சொல்றான்'
"அதுசரி எப்படி எங்க மொழியில் பேசறீங்க?"
"நான் எங்கே உங்க மொழியில் பேசறேன். நாம உண்மையில் நம்ம எண்ணங்களை வார்த்தைகள் இல்லாமல் பரிமாறிகிட்டிருக்கிறோம். Direct Thought Transference. அவ்வளவு தான்"
ஸ்ரீவத்ஸனுக்குக் கோபம் வந்தது. "தமாஷ் செய்யறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. சில மேஜிக் கத்துகிட்டு வந்துட்டு, சில குழப்பல் வார்த்தைகளைச் சொல்லிகிட்டு என் கிட்ட விளையாடாதீங்க. ப்ளீஸ். நான் ரசிக்கிற மூட்ல இல்லை. என் மனைவி மரணத்தை நெருங்கிகிட்டுருக்கா. தனியா வாய் விட்டு அழ இங்கே வந்திருக்கேன்....... அது சரி இத்தனை பேச்சு பேசறீங்களே உங்களுக்கு Lymphangioleiomyomatosis ன்னா என்னன்னு தெரியுமா?"
"பேர் வைக்கிறதுல தான் மனுஷங்க கெட்டிக்காரங்களாச்சே. என்ன அது வியாதி தானே"
அவன் யூகித்து தான் சொல்கிறான் என்பதில் ஸ்ரீவத்ஸனுக்கு சந்தேகமேயில்லை. "ஆமாம். என் மனைவிக்கு வந்திருக்கிற அபூர்வமான வியாதியின் பெயர். குணப்படுத்த முடியலை. காலம் கடந்து போயிடுச்சுன்னு டாக்டர் சொல்றார்"
"காலம்னு ஒண்ணு இருக்கிறதை உங்க ஐன்ஸ்டீனே சந்தேகப்பட்டு எழுதினார் தெரியுமா?"
மறுபடி அவன் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறான் என்று தோன்ற சலிப்புடன் ஸ்ரீவத்ஸன் அவனைப் பார்த்தான்.
"அப்படிப் பார்க்க வேண்டாம். சிம்பிளா சொல்றேன். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் கனவு காண்கிற நேரம் ஒருசில நிமிஷங்கள் தான்னு உங்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா?. ஆனா அந்த ஒருசில நிமிஷங்கள்ல எத்தனையோ நாள் நடக்கிற மாதிரி நிகழ்ச்சிகளைக் கனவு காண முடியுது. கனவு கலைஞ்சா தானே அது கனவுன்னு தெரியுது. ஒரு வேளை கனவே கலையலைன்னா அத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சதாத் தானே நினைக்கத் தோணும். ஆனா உங்க ஆராய்ச்சிப்படி அது ஒருசில நிமிஷங்கள் தான். கனவு கண்டுகிட்டு இருக்கிறவனோட நாள் கணக்கு சரியா, ஆராய்கிறவன் நிமிஷக் கணக்கு சரியா?"
ஸ்ரீவத்ஸனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன லாஜிக்கில் தவறில்லை என்று தோன்றியது. "சரி அதை விடுங்க. அந்த வியாதிக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலையாம். சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இன்னும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்கலாம். உங்களுக்கு ஏதாவது மருந்து தெரியுமா?"
"ரொம்ப சிம்பிள். அந்த பிரச்சினைக்குரிய செல்களை அழிச்சிடணும். அவ்வளவு தான்"
"அது தான் எப்படி? உங்களால முடியுமா?"
"ஏன் முடியாம, என்னோட ஒரிஜினல் சக்தி அலைகளாய் மாறி உங்க மனைவி உடலுக்குள்ளே நுழைஞ்சு அதை சுலபமா செஞ்சுடலாம்"
இதுவரை விளையாட்டாகவே பேசிக் கொண்டு வந்த ஸ்ரீவத்ஸனுக்கு உண்மையில் இதை நம்ப முடியவில்லை என்றாலும் மனைவியைக் குணப்படுத்த முடியும் என்கிற கற்பனையே இனித்தது.
"சார், ஏதோ தமாஷாய் பேசிகிட்டு தேவையில்லாம என் மனசுல நம்பிக்கையை வரவழைச்சுடாதீங்க. நான் இப்ப தான் அழுது முடிஞ்சு யதார்த்த உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்துகிட்டிருக்கேன். நம்பி ஏமாந்து இன்னொரு தடவை உடைஞ்சு போக எனக்குத் திராணியில்லை"
"நான் தமாஷ் செய்யலை. இந்த சிகிச்சையில் நாங்க எப்பவோ முன்னேறி விட்டிருக்கிறோம். உங்க முன்னோர்களில் யோகிகள் கூட இந்த வித்தையைத் தெரிஞ்சு வச்சுகிட்டிருந்தாங்க. உங்க முனிவர்கள் அப்படி குணப்படுத்தினாங்க, ஜீசஸ் குணப்படுத்தினாருன்னு எல்லாம் படிக்கிறீங்களே அது எல்லாமே கற்பனைன்னு சொல்லிட முடியாது"
"சார் அப்படி மட்டும் நடந்துட்டா உலகத்துல என்னை விட அதிகமா யாராலும் சந்தோஷப்பட முடியாது. ஏன்னா... நான் அவளை அந்த அளவுக்கு நேசிக்கிறேன்". அவன் கண்கள் சொல்லச் சொல்ல நிறைந்தன. "ஆனா அதை வாய் விட்டு அவள் கிட்ட இது வரை நான் சொன்னது கூட இல்லை. இனிமே சொல்ல முடியுமான்னும் தெரியலை...." அதற்கு மேல் அவனுக்குப் பேச முடியவில்லை. அவன் உடைந்து போனான்.
"தாராளமா சொல்லலாம். சேர்ந்து ஆகாயத்தைப் பார்த்துட்டே பேசலாம். அப்படிப் பார்க்கிறப்ப கிடைக்கிற ஏதாவது நகர்கிற ஒளியில் நான் கூட இருக்கலாம்...குட்பை"
அடுத்த கணம் அவன் அங்கு இருக்கவில்லை. ஸ்ரீவத்ஸனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. அந்த ஒளிக்கற்றையைப் பார்க்கும் போதும் இதே நேரம் தானே இருந்தது. கடிகாரம் நின்று விட்டதா என்று பார்த்தான். இல்லை, ஓடிக் கொண்டு தான் இருந்தது. இத்தனை நேரம் பேசியதற்கு நேரமே ஆகவில்லையா? எல்லாம் பிரமையா? நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து விட்டோமா? அவன் Thought Transference பற்றி சொன்னதும் கனவைப் பற்றிச் சொல்லி காலத்தை சந்தேகித்ததும் நினைவுக்கு வர ஸ்ரீவத்ஸனுக்கு தலை சுற்றியது.
மீண்டும் யதார்த்த உலகிற்கு வந்தவன் எழுந்து ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் மனம் அந்தக் கற்பனை மனிதனுடன் நடந்த கற்பனைப் பேச்சுக்களையே சுற்றி வந்தன. ஐந்து நிமிடத்தில் அவன் செல் போன் அடித்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தான் அழைத்தார்கள். "சார் எங்கே இருக்கீங்க. சீக்கிரம் வாங்க".
எல்லாம் முடிந்து விட்டது போலிருக்கிறது. கடைசியில் அவளிடம் சொல்லாமல் விட்டது எத்தனையோ இருக்கிறது. அழுது கொண்டே ஓடி ஆஸ்பத்திரியை அடைந்தான்.
ஆஸ்பத்திரியில் ஐசியூவில் இருந்து டாக்டர் அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் பரபரப்புடன் சொன்னார். "என்னாலே நம்பவே முடியவில்லை. மெடிக்கல் ஹிஸ்ட்ரியில் இதை மிரகில்னு தான் சொல்லணும். உங்க மனைவி உடம்பில் அந்த நோயோட அறிகுறிகள் மாயமா மறைஞ்சு போயிடுச்சு....எழுந்து உட்கார்ந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. நான் தான் கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்ல வச்சுருக்கச் சொல்லி இருக்கேன்.... எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"
நர்ஸ் ஒருத்தி டாக்டரிடம் ஓடி வந்தாள். "டாக்டர் சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இருந்து உங்களுக்கு போன்"
"பேஷண்டுக்கு நாம கடைசியா குடுத்த மருந்து லிஸ்ட்டை அவங்க கேட்டுருக்காங்க. அதுல ஏதோ ஒரு காம்பினேஷன் மிரகுலஸா வேலை செய்திருக்குன்னு அவங்க நம்பறாங்க......" டாக்டர் சொல்லிக் கொண்டே வேகமாக தனதறைக்குப் போனார்.
ஸ்ரீவத்ஸனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவல்ல நிஜம் தான். கண்களில் அருவியாய் நீர் வடிய வெளியே ஓடினான். ஆகாயத்தைப் பார்த்து அழுது கொண்டே"தேங்க்ஸ்" சொன்னவனை ஆஸ்பத்திரி வாட்ச்மேன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
-என்.கணேசன்
நன்றி: வல்லமை