சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 15, 2010

அன்பால் இணைவோம்





செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito) என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென் Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.

சுமார் இருபது வருடங்களுக்கு ஒருநாள் முன் பரிஸ்மினா என்ற நதியில் படகை ஓட்டிச் செல்லும் போது குற்றுயிராகக் கிடந்த அந்த முதலையை சிடோ கண்டார். அதன் இடது கண்ணில் யாரோ துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள். படுகாயமுற்றிருந்த அந்த முதலை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவருக்கு விலங்குகள் மீது தனி அன்பு உண்டு. அதுவும் காயமுற்று உள்ள விலங்குகள் மீது அன்புடன் இரக்கமும் அதிகம். எனவே சிடோ இரக்கப்பட்டு அந்த முதலையைக் காப்பாற்ற நினைத்தார். அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொள்ள அவர் ஒருவரால் முடியவில்லை. நண்பர்களின் உதவியுடன் அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொண்டார்.

அதற்கு சிகிச்சை தந்து உணவும் தந்து ஆறு மாத காலம் சிடோ நன்றாகப் பார்த்துக் கொண்டார். அது பலவீனமாக இருந்த சமயங்களில் இரவு அதனுடனே படுத்துக் கொண்டார். ”அதற்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று உணர்த்த ஆசைப்பட்டேன். எல்லா மனிதர்களும் அதற்கு எதிரிகள் அல்ல என்று தெரியப்படுத்த விரும்பினேன்”

அந்த முதலைக்கு போச்சோ ( Pocho) என்று பெயரிட்டு அதன் காயம் குணமாகி உடல்நலம் முன்னேறும் வரை சிடோ அதனுடையே இருந்தார். பின் அதனை அவர் வீட்டருகே இருந்த குளத்தில் கொண்டு போய் விட்டார். அதை விட்டு விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவர் சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப்பார்த்த போது அந்த முதலையும் அவர் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து போனார். சிறிது நாட்களில் அவர் அதனைப் போச்சோ என்று அழைத்தவுடன் அது உடனே அவரருகே வரக் கண்டார். சிறிது சிறிதாக அதனுடன் உள்ள நட்பு அதிகமாகியது. அதனுடன் நெருக்கமாக விளையாட்டுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.


சில நாட்களில் அவர் சொன்ன படியெல்லாம் அதைச் செய்ய வைக்கும் அளவு பழக்கினார். சாராபிகி (Sarapiqui) என்ற நகரில் வசித்து வரும் அவருக்கும் அந்த முதலைக்கும் இடையே உள்ள நட்பு பலர் கவனத்தைக் கவர ஆரம்பித்தது. இப்போது சிடோவையும் போச்சோ என்ற அந்த முதலையையும் சுற்றுலாப் பயணிகள் வந்து அவர்களுடைய விளையாட்டுகளைப் பார்த்து விட்டுப் போகும் அளவு பிரபலமாகி உள்ளது.

”போச்சோ எனது நண்பன். அவனை நான் அடிமை போல நடத்த விரும்பவில்லை” என்று சொல்லும் சிடோ அந்த முதலையிடம் பாராட்டும் அந்த அன்பு காண்பவர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தனை நெருக்கமாக இருந்தும் அந்த சக்தி வாய்ந்த முதலையும் தன் நண்பனுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும் அதிசயமே அல்லவா?

அந்தக்காலத்தில் முனிவர்கள் காடுகளில் தவமிருக்கச் சென்று அங்கேயே வசித்தாலும் அந்தக் காட்டின் கொடிய விலங்குகள் அந்த முனிவர்களுக்குத் தீங்கு செய்வதில்லை என்பார்கள். காரணம் அந்த முனிவர்கள் அஹிம்சையைப் பின்பற்றுபவர்கள், அன்பு மயமானவர்கள் என்பதனால் தான். அந்த அன்பு அலைகளை அந்த விலங்குகளும் உணர முடிந்ததா தான்.

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற புகழ்பெற்ற இங்கிலாந்து தத்துவஞானி இந்தியாவிற்கு வந்த போது தமிழகத்தில் திருவண்ணாமலையில் ரமணாசிரமத்தில் சில மாதங்கள் தங்கினார். அப்போது அவர் தங்கியிருந்த குடிசையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் புகுந்து விட்டது. அதைக் கொல்லப் பலரும் கம்புகளை எடுக்கையில் யோகி ராமையா என்பவர் அவர்களைத் தடுத்து அந்த நாகத்தைத் தன் கையில் பிடித்து தடவிக் கொடுத்து பிறகு அதனைக் கீழே விட அந்த நாகம் அவர் முன் தலை தாழ்த்தி விட்டு அங்கிருந்து யாரையும் உபத்திரவிக்காமல் சென்று விட்டது.

வியப்பின் உச்சத்திற்கே சென்ற பால் ப்ரண்டன் பின்னொரு சமயம் ‘எப்படி பயமில்லாமல் அந்த கொடிய நாகத்தைக் கையில் எடுத்தீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு யோகி ராமையா சொல்லியிருக்கிறார். “நான் அன்பு நிறைந்து அதைத் தொடுகையில் அது எப்படி எனக்கு தீங்கு செய்யும்?”. (நம்மைப் போன்ற மனிதர்களுக்கு நம் அன்பு அதற்குப் புரியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்து விடும். ஆனால் அப்படி பயமில்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த அன்பு எவ்வளவு ஆணித்தரமாகவும், சந்தேகத்திற்கிடமில்லாமலும் இருந்திருக்க வேண்டும் பாருங்கள்)


மதம், மொழி, இனம், நாடு கடந்தும் அன்பு அனைவராலும் உணரப்படும் மொழியாகவும் மனிதர்களைப் பிணைக்கும் மேன்மையான பந்தமாகவும் இருக்கிறது. அது மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல் முதலை, நாகம் போன்ற கொடிய விலங்குகளைக் கூட மனிதர்களுடன் பிணைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பதற்கு உதாரணங்களைக் கண்டோம்.

தீவிரவாதம், கலவரம், சண்டை சச்சரவு, போர், பிரிவினைகள் முதலான எல்லா சமூக நோய்களும் பெருகி வரக் காரணமே அதற்கெல்லாம் அருமருந்தான அன்பு நம்மிடையே குறைந்து வருவது தான். கொடிய விலங்குகளைக் கூட நம்முடன் இணைந்து வாழ வைக்க முடியுமென்றால் மனிதர்களாகிய நாம் பிரிந்து நின்று இந்நோய்களுக்கு இரையாகி மடிவதேன்?

சிந்திப்போமா?


என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

6 comments:

  1. பாம்ப நாம் ஏன் தொடணும்?
    நம்மோடு நாளும் பழகும் ஆறறிவு மனிதர்களே சில நேரம் குணம் திரிந்து பேசுகின்றனர்.
    மற்ற உயிர்கள் எப்போதும் அன்புடன் இருக்கும் என எதிர்பார்ப்பது அறியாமை.
    ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். உயிருக்கு பயமில்லாதவன் பாம்பைக் கையில் பிடிக்கலாம்,
    பாம்பாட்டி போல.

    ReplyDelete
  2. பாம்பு பிடிப்பவர் ஒருவர் என்னிடம் சொன்னார் - நீங்களெல்லாம் பாம்பைப் பார்த்தால் "பாம்பூ..." என்று பார்ப்பீர்கள். அந்த பய உணர்வு அதற்கும் பூமி வழியே போய் இவன் நம்மை ஏதோ செய்யப் போகிறான் என்று நினைத்து தற்காத்துக் கொள்ள முயலும். ஆனால் நான் பாம்பைப் பார்த்தால் "பாம்பு" என்று பார்த்து தூக்குவதால் ஒன்றும் செய்வதில்லை.

    ReplyDelete