என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 13, 2026

யோகி 164

 


ஷ்ரவனும், ஸ்ரேயாவும் தங்கள் திருமண அழைப்பிதழைத் தர யோகாலயம் போயிருந்தார்கள்.  அவர்கள் முதல் முதலில் சந்தித்த இடம் என்பதால் அது அவர்கள் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு இடமாக இருந்தது.

 

யோகாலயம் இப்போது கல்பனானந்தா தலைமையில் நிறைய மாறியிருந்தது. அங்கே பழைய கெடுபிடிகள் இல்லை. பாண்டியனின் தடியர்கள் அனைவரும் போய்விட்டிருந்ததால் தீவிர கண்காணிப்பு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

 

சைத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படா விட்டாலும், ஒவ்வொருவரையும் கடவுளோ, கர்மாவோ, ஏவல்சக்தியோ வேறு வேறு விதங்களில் தண்டித்திருப்பதை நினைத்து ஷ்ரவன் ஆச்சரியப்படுகிறான். செல்வம் இப்போதும் ஒரு மனநல மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார். யாராவது அவரை உற்றுப் பார்த்தாலோ, அவர் முன் காவியுடையுடன் போனாலோ  அவர்கள் மேல் அவர் பாய்ந்து விடுகிறார். 

 

டாக்டர் சுகுமாரன் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஒரு தனியறையில் தான் இருக்கிறார். அந்த அறையில் டாமியும் இருக்கிறது. டாமிக்கு அந்த அறையில் இருக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சுகுமாரனுக்கு அங்கும் தீராத வயிற்று வலிப் பிரச்சினையும், மண்டை ஓடு தெரியும் பிரச்சினையும் இருக்கிறது. அவருடைய இரண்டு கைகளிலும் நிறைய தாயத்துக்கள் இருக்கின்றன. அதை யாராவது கழற்றப் போனால் அவர் ஆக்ரோஷமாகி விடுகிறார்.  வாரம் இரண்டு முறை அவர் மனைவி வந்து அவரை ஜன்னல் வழியே பார்த்து விட்டு, சிகிச்சையளிக்கும் டாக்டரைப் பார்த்து பேசி விட்டுப் போகிறாள். உள்ளே போய் சுகுமாரனைப் பார்த்தால், அவள் தாயத்து வெட்டியது அவருக்கு நினைவுக்கு வந்து வருவதால் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருகிறது.

 

பாண்டியனின் தற்கொலை ஷ்ரவன் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது. அச்சுறுத்தல் ஏவல் சக்தியிடமிருந்து அல்லாமல் மனிதர்களிடமிருந்தாக இருந்தால் அவர் கண்டிப்பாக அனாயாசமாய் எதிர்கொண்டு சமாளித்திருப்பார் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  அவர் உயிரோடிருந்திருந்தால் அவன் இப்படி யோகாலயத்தின் பக்கமே வந்திருக்க முடியாது என்பதையும் அவன் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். கண்ணனும், பாண்டியனின் மற்ற தடியர்களும் எங்கே போய் சேர்ந்து கொண்டார்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

பிரம்மானந்தாவின் தற்போதைய நிலைமையும், ஷ்ரவன் சற்றும் எதிர்பார்த்து இருக்காதது தான். பாண்டியனின் மரணம் அவரை இப்படி பாதிக்கும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அவர் இப்போதும் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் பேசக்கூட முடிவதில்லை. அவரைப் பார்க்க அவருடைய பக்தர்கள் கூட்டமாக யோகாலயத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் துறவிகள் அவருடைய உடல்நிலை நிலவரத்தைச் சொல்லி, அவருடைய சிறிய நூல் ஒன்றை ஆசிர்வாதமாகத் தந்து, அன்போடு திருப்பி அனுப்புகிறார்கள். பிரபலங்கள் உட்பட யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

 

பாண்டியனின் இருப்பிடம் இப்போது கல்பனானந்தாவின் இருப்பிடமாக இருக்கிறது. ஷ்ரவனையும், ஸ்ரேயாவையும் அவள் அங்கு தான் வரவேற்றாள். திருமணத்திற்குக் கண்டிப்பாக வருவதாக அவள் சொன்னாள். அவள் தலைமையில் யோகாலயத்தில் உண்மையான ஆன்மீக செயல்பாடுகளும், தர்ம காரியங்களும் அதிகரித்திருப்பதாக ஷ்ரவன் கேள்விப்படுகிறான். முன்பெல்லாம் பெயரளவில் இருந்த நல்ல திட்டங்களை எல்லாம் உண்மையான அக்கறை உணர்வுடன் நிறைவேற்றி வருவதுடன், அவற்றின் வளர்ச்சியை அவள் நேரடியாகவே கண்காணித்து வருவதாக அனைவரும் சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய சூழ்நிலையில் அத்தனை காலம் அவள் தாக்குப் பிடித்து நின்றதே பெரிய சாதனை தான். அதனால் தான் அவளிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பை பிரம்மானந்தா ஒப்படைத்தாரோ என்று  அவன் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 

அவன் முக்தானந்தாவையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால் கல்பனானந்தா ஆளனுப்பி அவரை அங்கே வரவழைத்தாள். அவர் ஷ்ரவனைப் பார்த்ததும் பேரானந்தப்பட்டார். கண்கள் ஈரமாக அவனையும் ஸ்ரேயாவையும் ஆசிர்வதித்தார். கல்பனானந்தா இப்போது கண்ணனின் தனியறையை அவருக்கு ஒதுக்கி இருந்தாள். அதனால் அவரால் இரவு நேரங்களில் யார் தூக்கமும் கெடுவதில்லை என்று சொல்லிப் புன்னகைத்தார்.

 

அவர்களை வழியனுப்ப இரண்டாவது கேட் வரை வந்த அவர், யோகாலயம் அவர் ஒரு காலத்தில் கனவு கண்டபடி மாறி வருவதாக ஷ்ரவனிடம் நிறைந்த மனதுடன் சொன்னார். “பாண்டியன் இறந்தவுடன் அடுத்ததாய் கண்ணன் தான் அந்த இடத்துக்கு வருவான் என்று பயந்தேன். ஆனால் எத்தனையோ முட்டாள்தனமான வேலைகளைச் செய்த பிரம்மானந்தா வாழ்க்கையில் செய்த ஒரு பெரிய நல்ல காரியம் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தை ஒப்படைத்தது தான். அதனாலேயே எனக்கு அவர் மேல் இருந்த பழைய கோபம் எல்லாம் போய் விட்டது ஷ்ரவன்.”

 

அவர் ஸ்ரேயாவிடம் சொன்னார். “ஷ்ரவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற நீ மிகவும் அதிர்ஷ்டசாலிம்மா. நல்ல பையன்.” அவர் சொல்வது உண்மை என்று ஆமோதித்து அவள் புன்னகைத்தாள்.

 

ஷ்ரவன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “இல்லை சுவாமிஜி. உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலி.”  காதலைக் கூட அதற்குரிய மென்மையுடன் சொல்லாமல், நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கூடக் கேட்காமல், அவனைக் காதலிப்பதில் இருக்கும் ஆபத்துகளையும் சொல்லி, ’திரும்பி நான் வரா விட்டால் எல்லாவற்றையும் மறந்து நீ வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்என்பது வரை சேர்த்துச் சொல்லி அவன் காதலைத் தெரிவித்த போதும் அவள் மறுக்காமல் சம்மதித்தது அவனுக்கு இப்போது யோசித்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது. மேலும், ஸ்ரேயா அவனோடு மட்டுமல்லாமல், அவனுடைய பெற்றோருடனும் நெருக்கமாக இருப்பதும், அன்பு காட்டுவதும் அவன் அதிர்ஷ்டம் என்றே தோன்றியது.

 

ஸ்ரேயாவை அவன் வாழ்க்கையில் வரவழைத்ததும் அவனுடைய மந்திர ஜபமாக இருக்கலாம் என்று ஷ்ரவன் எண்ணினான். அதைச் செய்ய ஆரம்பித்த பின் தான் அவன் வாழ்க்கையில் அவள் வந்தாள்.  அதனால் இப்போதும் அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த உபதேச மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறான். யோகாலயத்தில் இருக்கும் வரை தெரிந்த ஓநாய் இப்போது தெரிவதில்லை. அதற்குப் பதிலாக ஜபிக்கையில் தெய்வீக அலைகளை அவன் உணர்கிறான். கைப்பிடிக்கப் போகும் இந்த நல்ல பெண்ணை இறுதிவரையில் நான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று அவன் அந்த சமயத்தில் வேண்டிக் கொள்ள மறப்பதில்லை.  

 

பிரம்மானந்தாவிடம் கல்பனானந்தா அன்றைய யோகாலய முக்கிய நிகழ்வுகளைப் பற்றி உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரால் பேச முடியாவிட்டாலும் அவள் தினமும் வந்து, அவர் அருகே அமர்ந்து, அன்று என்ன வேலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதைச் சொல்லத் தவறுவதில்லை. அவருக்கு பாண்டியனின் நினைவு வந்தது. பாண்டியனும் இப்படித்தான் வந்து சொல்வார். ஆனால் அவர் சொல்வது பணக்கணக்காக இருக்கும். கல்பனானந்தா சொல்வது ஆன்மீகம் மற்றும் தர்மக் கணக்குகளை. இருவரும் இருவேறு துருவங்கள். ஆனாலும் இருவரும் அவர் உண்மையாக நேசித்த மனிதர்கள். இருவரும் அவரை உண்மையாக நேசித்த மனிதர்கள்.

இவர்களை விட அதிகமாய் அவரை மதிப்பவர்களும், துதிப்பவர்களும், அவர் மீது பக்தி கொண்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவரை அறியாதவர்கள். அவர் போட்ட வேடத்தில் மயங்கியவர்கள். அவர்கள் கற்பனையாக நம்பும் ஒன்றை அவராக பாவிப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தால் அன்பும், பக்தியும், மதிப்பும் இல்லாமல் போய் விடும். ஆனால் இவர்கள் இருவரோ அவரை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். அறிந்தும் நேசித்தவர்கள்.

 

இருவரில் ஒருவனை அவர் இழந்து விட்டார். வாழ்ந்த போது அவரை உறுதியாகத் தாங்கியவன் அவன். சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டதன் மூலமாக மரணத்தில் மட்டுமே ஏமாற்றியவன் அவன். அது மரண வேதனையாக வலித்து இப்போது மரத்துப் போய் விட்டது. பாண்டியனை இழந்ததும், அசைய முடியாமல் யோசிக்க மட்டுமே முடிவதும், சைத்ரா சொன்னது போல் அவருடைய கர்மாவாக இருக்கக்கூடும். அப்படியானால் தினமும் அன்பு குறையாமல் வந்து கவனித்துக் கொள்வதோடு, யோகாலயத்துக் கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இவள் என்றோ அவர் செய்த புண்ணிய கர்மாவாக இருக்கலாம்

 

யோசிக்க மட்டுமே முடிந்து, செயல்பட முடியாமல் இருக்கும் இந்த நிலைமையில் அவருக்கு அவ்வப்போது அந்த தோட்டக்கார யோகியின் நினைவு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனம் பாரமாகும். இனிக்கின்ற பொய்களில் தங்கி, கசக்கின்ற நிஜங்களைப் புறக்கணித்திருக்கக் கூடாது என்று தோன்றும். கண் கெட்ட பின்பு சூர்யநமஸ்காரம்

 

கல்பனானந்தா அவள் சொல்லிக் கொண்டிருப்பதில் அவர் கவனம் இல்லை என்பதையும், வேறென்னவோ சிந்தனைகளில் அவர் சஞ்சரிக்கிறார் என்பதையும் உணர்ந்து, சொல்வதை நிறுத்தி அன்போடு அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். கயவனான அவளுடைய தந்தை அவளைக் கைவிட்ட போது அடைக்கலம் தந்த நல்ல மனிதராகவே இன்றும் அவள் அவரைப் பார்க்கிறாள். அன்றிலிருந்து எத்தனையோ தலைகீழ் மாற்றங்களை அவரிடம் அவள் கண்ட போதும், அவர் அவள் மீது காட்டிய அன்பில் மாற்றம் இருந்ததில்லை.

 

பாண்டியன் மரணத்திற்குப் பின் யோகாலயத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைப்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பின் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அந்த இரண்டு நாட்களில் கூட அவளை அழைத்து எந்த விளக்கமும் அவர் தரவில்லை. முடிவெடுத்த கணத்தில் அவருக்கு என்ன தோன்றியது என்று அவளுக்கு இதுவரை தெரியாது. ஆனால் சாதித்துக் காட்டுவேன் என்று உறுதியுடன், கற்பனை நம்பிக்கையுடன், காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவளுடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க வல்லமை படைத்த யோகாலயத்தை அவள் கையில் ஒப்படைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் அவருடைய கனவாகவும் அது இருந்திருக்கிறது. பின் தான் அதைத் தொலைத்து விட்டார். பாண்டியனுக்குப் பின் யாரென்று முடிவு எடுக்கும் வேளையில் அது மறுபடியும் நினைவுக்கு வந்து தான் அவர் அவளிடம் யோகாலயத்தை ஒப்படைத்தாரோ என்று அவளுக்குச் சில சமயங்களில் தோன்றும். அதனால் தான் தினமும் அவள் அவரிடம் வந்து என்னவெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறாள். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் ஈரக் கண்களுடன் அவளைப் பார்ப்பார். அதன் உண்மையான அர்த்தம் அவளுக்குப் புரியாது. ஆனால் அவள் சேவை தொடர்கிறது

 

சேதுமாதவன் ஷ்ரவனின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று தான் ஷ்ரவன் அதைத் தந்துவிட்டு கண்டிப்பாய் வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனான். கண்டிப்பாய் போக வேண்டும். நல்ல மனமும், கூர்மையான அறிவும் உள்ள இளைஞன் அவன். சைத்ரா கொலை பற்றிய உண்மைகளை அவன் வந்திரா விட்டால் சாவதற்கு முன் அவர் அறிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவன் வந்ததால், தவறு செய்தவர்கள் வேகமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவன் அதில் தன் பங்கை விட பரசுராமனின் பங்கு அதிகம் என்று அடக்கமாகச் சொல்லியிருந்தான். பரசுராமனையும் அவர் நன்றியுடன் நினைத்துப் பார்த்தார்.

 

எல்லாவற்றிற்கும் முதல் காரணமான அருணாச்சலம் அவருக்குப் பேருதவி செய்திருக்கிறார். ”உன் உதவிக்கு நான் எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வேன் அருணா? பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும்என்று சேதுமாதவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்ன போது, “வாரம் ஒரு முறையாவது வந்து பேசி விட்டுப் போஎன்று அருணாச்சலம் சொன்னார். இப்போதெல்லாம் சேதுமாதவன் தவறாமல் வாரம் ஒரு முறை போய்ப் பேசி விட்டுத் தான் வருகிறார்.

 

அமீர்பாயும், மைக்கேலும், குற்றவாளிகள் கடவுளால் தண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். கடைசியிலாவது நண்பரின் நல்ல மனதிற்குக் கடவுள் உதவியிருக்கிறார் என்று அவர்களுக்கு மகிழ்ச்சி. சேதுமாதவனுக்கு மகனுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிய திருப்தியே ஒழிய இந்த தண்டனையில் பெரிதாக மகிழ்ச்சியில்லை. அவருடைய வருத்தமெல்லாம் ஏன் இது மாதிரியான தவறுகள் நடக்கின்றன என்பதில் தான் இருந்தது. யோசிக்கும் போது எல்லாத் தவறுகளும், அறியாமையாலும், பேராசையாலும் தான் நடக்கின்றன என்று தோன்றியது. அதைச் செய்தால் மகிழ்ச்சி, இது கிடைத்தால் மகிழ்ச்சி என்று தப்புக்கணக்கு போடுவதால் ஆரம்பிக்கின்ற தவறுகள்….

 

தன்னைக் கொன்றவர்களைப் பற்றிக் கூடச் சொல்லாமல், கீதையில் அவர் படித்த யோகியை நேரிலும் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது போல் சைத்ராவின் ஆவி ரகுராமனைப் பார்க்கச் சொன்னது நினைவுக்கு வர அவர் மனம் லேசானது….  ஷ்ரவன் சொன்ன பிறகு அவர் அமீர்பாய், மைக்கேல் இருவரையும் அழைத்துக் கொண்டு ரகுராமனைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மூவருமே அந்த யோகியின் முன்னிலையில் அமைதியையும் அன்பையும் உணர்ந்தார்கள். ரகுராமன் அவர்களிடம் அதிகம் பேசவில்லை. ஆனால் அவருடன் பேச்சே தேவையிருக்கவில்லை. சாந்தமும், மலர்ச்சியும் குறையாத அவருடன் இருப்பதே அவர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது.  எல்லாவற்றையும் இறைவன் தந்ததாய் ஏற்றுக் கொண்டு, செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இறைவன் செய்ய வைப்பதாய் பாவித்து வாழ்கின்ற வாழ்க்கையின் நிறைவை அவர்களால் நேரில் பார்க்க முடிந்தது.

 

இரண்டு வாரங்கள் கழித்து அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது என்று அமீர் பாய் சொன்னார். அதனால் மீண்டும் அவரைச் சந்திக்க அவர்கள் போன போது ரகுராமன் அங்கிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அவர் போய் விட்டதாகச் சொன்னார்கள்.  அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

இப்போது சேதுமாதவனின் மனம் அந்த யோகியை நினைக்க ஆரம்பித்தது. இப்போது அந்த யோகி எங்கிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இறைவன் இருத்தியிருக்கும் இடமாக நினைத்து அவர் அங்கும் நிறைவாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த யோகியைப் பார்த்ததிலிருந்து ஒரே ஒரு ஆசை தான் சேதுமாதவன் மனதில் இருந்து வருகிறது. அதன் பின் அதை அடிக்கடி அவர் நினைவுபடுத்திக் கொள்வது போல் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்கிறார். ’மீதமிருக்கும் வாழ்க்கையையாவது அப்படி வாழ வேண்டும்!’

 

முற்றும்.

என்.கணேசன்


(அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ரட்சகன் நாவல் வாரா வாரம் வெளியாகும். அமானுஷ்யனின் வரவுக்காகக் காத்திருங்கள்)




17 comments:

  1. நன்றி. அருமை.

    ReplyDelete
  2. நன்றி. புதிய உயரங்களை கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  3. அற்புதம்.
    அமானுஷ்யனைச் சந்தித்து பல நாட்களாகி விட்டன. மறுபடியும் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. நிஜ உலகத்தில் வாழும் பிரம்மானந்தா நல்லவரா? கெட்டவரா?? என்ற குழப்பம் ஏற்படும்.இந்த நாவலை படித்த பின் அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  5. ஹரி ஓம் சார். கதை மிகவும் அருமை. உங்கள் எழுத்துக்களுக்கு யாரால் மதிப்பிட முடியும் அது கடவுள் தந்த வரம் உங்களுக்கு. ஒரு ஒரு பொதுவான கேள்வி கேள்வி சார் அறியாமையும் பேராசையும் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை நல்லவர்களையும் பாதிப்பு அடையச் செய்கிறது ஏன் நல்லவர்கள் பாதிப்பு அடைய வேண்டும் யாரோ ஒருவருடைய பேராசையால் ஏமாற்றப்படுகிறார்கள் இது வினை என்று சொல்லி முடிக்காதீர்கள் கடவுளுடைய சிஸ்டமே அப்படித்தான் இருக்கிறது இதற்கு வேறு பதில் ஏதாவது இருக்கிறதா அவசியம் உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்கள் தெளிவு படுத்துங்கள் நன்றி சார் நமஸ்காரம் 🙏

    ReplyDelete
  6. நன்றி. உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. Many thanks for the story. Around three years have gone so fast. Your super novel Ratchagan will be a real treat for the readers.Thanks

    ReplyDelete
  8. Superb story sir, sometimes I use the points mentioned in this story for my life during tough times, you are a gem

    ReplyDelete
  9. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  10. Great Sir. Every Monday I am waiting for this. Really Good and Pandiyan's twist is unexpected.

    ReplyDelete
  11. மிளிர்வன்July 14, 2026 at 12:00 PM

    புதிய அர்த்தங்கள்.. புதிய பார்வைகள்..
    அழகாக அறிமுகப்படுத்துவதற்கு இலேசான மன நிலையில் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. Thank you sir, superb story..

    ReplyDelete
  13. Sir give 2 episodes for a week sir. Humble request

    ReplyDelete