விஸ்வம் கத்தியதும் அவன் இருந்த பகுதியில் ஒரு சிறு விளக்கும்
எர்னெஸ்டோ முன்னால் இருந்த மெல்லிய விளக்கும் எரிந்தன. அவர் அவனை அமரும்படி சைகை செய்தார்.
பிறகு பேச உனக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் கையால் சைகை செய்தார். வேறு வழியில்லாமல்
விஸ்வம் அமர்ந்தான். இரு விளக்குகளும் அணைந்தன.
க்ரிஷ்
விஸ்வத்தின் கத்தலால் பாதிக்கப்படாமல் அப்படி ஒரு குரலே கேட்கவில்லை என்பது போல் தொடர்ந்தான். ”…. பிறகு அந்த அகஸ்டின் தவசியின் சமாதியில் ஒரு
அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கருப்புப்பறவை அங்கே வந்தமர்ந்தது. சிறிது நேரம்
இருந்து விட்டுப் போனது. அது போகும் போது ஒரு முக்கோணக் கல் நடுவில் கண் இருப்பதை விட்டுப்
போனது. மாஸ்டர் ஆச்சரியப்பட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அந்தச் சிவன் சிலையில் பொருத்திப்
பார்த்தார். அது பொருந்தியிருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கும் உங்களுக்கு
இதை நம்பக் கஷ்டமாய் இருக்கலாம். ஆனால் யோகத்தின் உச்ச நிலையில் யோகிகள் சித்தர்கள்
பல வடிவங்கள் எடுக்க முடிவது சகஜம் என்பதையும் அது எப்படி என்பதையும் நம் நண்பர் உண்மை
பேசும் மனநிலையில் இருக்கும் போது கேட்டால் என்னைவிட நன்றாக அவர் சொல்லக்கூடும். ஏனென்றால்
இது போன்ற சக்திகளில் அவர் அறியாதது எதுவுமிருக்க வழியில்லை. அப்படிப் பறவை வழியில்
வந்தது அகஸ்டினே தானா, இல்லை வேறு எதாவது சித்தரா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால்
அந்த அற்புதம் நடந்திருக்கிறது…..” அவன் சொல்லி முடிக்கையில் நெற்றிக் கண் ஒளிர்ந்தது.
அது அவன் சொன்னதை ஆமோதிப்பதாக இங்கு சில பைத்தியங்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம்
விஸ்வத்தின் மனதை அரித்தது.
க்ரிஷ்
சொன்னான். “அங்கே அந்த நெற்றிக்கண்ணைப் பொருத்தியவுடன் மாஸ்டர் சக்தி வீச்சை நிறையவே
உணர்ந்ததால் அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். சக்தியின் உச்சமும்,
அமைதியின் உச்சமுமான நிலையை அடைந்திருக்கிறார். புதிய மனிதராக மாறியிருக்கிறார். அதன்
பாதிப்பு அவருக்கு எந்த அளவு இருந்ததென்றால் ஒரே ஒரு முறை அங்கிருந்து வந்து எங்கள்
எல்லோரிடம் இருந்தும் விடைபெற்றுத் திரும்பிப் போய் விட்டார். அந்தக் குகையில் இன்னொரு
தவம் தொடர்ந்து வருகிறது. அதே குகை, யோக நிலையில்
அதே சிவன், அந்த நெற்றிக் கண்ணும், அந்தத் தவசியும் மட்டும் வேறு வேறு….. உலக நன்மைக்காக,
அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நம் நண்பர் முட்டாள்தனம் என்று சொல்லும் தவம் அகஸ்டின்
விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது….”
விஸ்வத்துக்கு
க்ரிஷின் யுக்தி இப்போது புரிந்தது. யாரையோ விஸ்வம் அலட்சியப்படுத்தினான், ஏமாற்றினான்,
கொன்றான் என்றால் இல்லுமினாட்டிக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இல்லுமினாட்டியின்
மதிப்பிற்குரிய ஒரு தவசியை அவன் அதன் உறுப்பினராக
இருந்து கொண்டு அவமதித்திருக்கிறான் என்றால்….? விஸ்வத்தை இறக்கி மாஸ்டரை அகஸ்டினுக்கு
இணையாக உயர்த்தி க்ரிஷ் வார்த்தை ஜாலம் புரிகிறான்….. அவன் எண்ணத்தைப் படிக்க முடிந்தது
போல அந்தக் குகையில் இருந்த மாஸ்டர் அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைப் பார்த்து விஸ்வம்
ஆத்திரமடைந்தான்.
விஸ்வம்
தனிமனிதர்களின் மனங்களையும், கூட்ட மனிதர்களின் மனங்களையும் ஆழமாய் அலசி ஆராய்ந்தவன். ஸ்டீபன் தாம்சனின் நூலைப் படித்ததோடு அல்லாமல் அவருடன்
மணிக்கணக்கில் அதைப் பற்றி விவாதித்து அறிந்தவன். அந்த மனோதத்துவத்தை வைத்து தான் அவன்
தன் உரையைத் தயாரித்திருந்தான். இல்லுமினாட்டியிடம் க்ரிஷ் பேசக்கூட எதுவுமே இல்லை
என்னும் அளவுக்குக் கச்சிதமாக அவன் உரையும் அமைந்திருந்தது. ஆனால் க்ரிஷும் ஸ்டீபன்
தாம்சன் படித்தவன். அவனும் எதிலும் ஆழமாய்ப் போக முடிந்தவன்….. இல்லுமினாட்டியைக் கவரும்படி
எதுவுமே பேச விஷயமில்லாதவன் அகஸ்டின் என்ற ஒற்றைக் கிளையை வைத்து உயர எழும்பிக் கொண்டிருக்கிறான்.
இந்த முட்டாள்களும் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…. சதாசிவ நம்பூதிரியின்
ஒரு விதைக்குள் எத்தனை மரம், எத்தனை காடுகள் உதாரணம் நினைவு வந்து தொலைத்தது…..
க்ரிஷ்
தொடர்ந்தான். “நான் நம் நண்பர் சொன்ன ஒரு விஷயத்தை நூறு சதம் ஒத்துக் கொள்கிறேன். அவனவன்
நலத்தை அவனவனே அதிகம் விரும்ப வேண்டும். அவனே அதற்கு அதிகம் உழைக்க வேண்டும். அது தான்
சரி. ஆனால் அடுத்தவன் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளை நினைப்பீர்களா,
உங்கள் உயிருக்குயிரானவர்களை நினைப்பீர்களா? அவர்களுக்காக நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா?
அப்படியானால் அகஸ்டின் உங்கள் இயக்கத்துக்காக தவமிருந்ததை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
முட்டாள்தனமா? உங்களைச் சோம்பேறிகளாகக் குறைக்கும் முயற்சியா? உங்கள் மீது அக்கறையும்
அன்பும் இருந்ததாலும், இந்த உயர்வு மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று நினைத்ததாலும்
அல்லவா அவர் இவ்வளவு காலம் தன்னுடைய வாழ்வை அதற்காக அர்ப்பணித்தார்?”
“நம்
நண்பர் மனதில் அக்னியோடு பிறந்து ஒவ்வொன்றையும் கற்றதையும், மேலும் மேலும் உயர்ந்து
வளர்ந்ததையும் சொன்னார். இந்த விஷயத்தில் அவரை இனி என் உதாரண புருஷனாக நான் வைத்துக்
கொள்வேன். அந்த அக்னி, அந்த உழைப்பு, அந்தத் தீவிரம் எல்லாம் தான் எந்த வெற்றிக்கும்
தாரக மந்திரம். ஆனால் எல்லா வளர்ச்சியிலும் நோக்கம் அல்லவா முக்கியம். நோக்கம் நன்றாக
இருந்தால் அல்லவா எல்லா வளர்ச்சியும் பயன் அளிக்கும். வெறும் சக்திக்குவிப்பு உங்களுக்குப்
பாதுகாப்பு தருமா? அணுகுண்டின் சக்தி எல்லையில்லாதது. அதைப் பார்த்து நாம் வியக்கலாம்.
அதன் சக்தியை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தலையணைக்கு அடியில் வைத்து நிம்மதியாக
நீங்கள் உறங்க முடியுமா?”
“நம்
நண்பர் தன் வாழ்நாள் கதையைச் சொன்னார். அருமையான வெற்றிக் கதை தான். ஆனால் அந்தக் கதையில்
அவர் நன்றியோடிருந்த காட்சியும், நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருந்த காட்சியும் இல்லவே
இல்லையே. அவர் ஒரு குருவையாவது நினைவு வைத்து பூஜித்திருக்கிறாரா? யாரையாவது வழிகாட்டியாய்
ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறாரா? எல்லாம் நான்…. நான்….. நான்…… அது போகட்டும். அவரையே
முழுவதுமாய் நம்பி தங்கள் கஜானாவையே ஒப்படைத்திருந்த ஒரு இயக்கத்தை வஞ்சித்து விட்டு
உங்களிடம் வந்திருக்கிறார். அவரை நீங்கள் நம்பி ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுவனத்தை
ஒருவன் ஏமாற்றி விட்டு வந்திருப்பது தெரிய வந்தால் வேறெந்த நிறுவனமும் அவனைச் சேர்த்துக்
கொள்ளாது. அந்த சாதாரண அறிவை இல்லுமினாட்டி எப்படித் தவற விட்டது? அதில் திருடிய பணத்தில்
பாதி வந்து சேர்ந்ததாலா? அந்த ஆன்மிக இயக்கத்தை ஏமாற்றியது போல் இல்லுமினாட்டியையும்
ஏமாற்ற மாட்டார் என்பது எப்படி நிச்சயம்? ஏமாற்றிய பின் எத்தனையோ காரணம் சொல்லலாம்.
இந்தியாவின் ஆன்மிக இயக்கத்தை முட்டாள்தனம், சோம்பேறித்தனம் என்று சொன்னது போல உங்களையும்
பதவி வெறியர்கள், அகங்காரிகள் என்றெல்லாம் கூட வேறொரு இயக்கத்தில் சொன்னால் அவர்களுக்கு
எதிராக இல்லாத வரையில் அவர்களும் நம்பக்கூடும் அல்லவா?”
விஸ்வம்
இந்தப் பேச்சு போகும் போக்கை வெறுத்தான். ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸின்
பேச்சைப் பாராட்டிப் பாராட்டிப் பேசியே மார்க் ஆண்டனி கழுத்தறுப்பது போல் அல்லவா இவன்
பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அவன் எத்தனை
அழகாய் இவர்கள் மனதில் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி விட்டிருந்தான். இவன் அதன் அஸ்திவாரத்தையே
அல்லவா தகர்த்துக் கொண்டிருக்கிறான். இல்லுமினாட்டி மேடையில் அவர்களே முட்டாள்தனமாகவும்,
சுயநலமாகவும் அவனை நம்பிச் சேர்த்திருக்கிறார்கள் என்றல்லவா வெளிப்படையாகச் சொல்கிறான்.
இந்த இல்லுமினாட்டி மடையர்களும் மகுடி முன் பாம்பாக அல்லவா அதை மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவன் க்ரிஷை வெறுத்தான். அகஸ்டினை வெறுத்தான். க்ரிஷ் தொடும் போதெல்லாம் மின்னும் அந்தச்
சின்னத்தை வெறுத்தான். அது மின்னி மின்னிக் கழுத்தறுத்து விட்டது. இவன் பேச்சையாவது
ஏதாவது விதத்தில் கடைசியில் மறுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக
அடையாளம் காட்ட முற்பட்டிருக்கும் இந்த ஒளிரும் சின்னத்தை யோக சக்தியால் அணைத்து விட
வேண்டும். அந்தச் சின்னத்திலிருந்து தான் அவனுக்குப் பேச விஷயங்கள் கிடைப்பது போல அவனுக்குத்
தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்தச் சின்னம் இருப்பதால் தான் அதன் மூலமாக மாஸ்டர் அங்கிருந்து
இங்கு நடப்பதைத் தொலைக்காட்சி பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம்
இனி மின்னாதபடியாகவாவது பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து….. பிறகு
அது ஒளிர நிறுத்தியதை மையமாக வைத்து விஸ்வம் பிறகு பேசலாம்…… விஸ்வம் தன் சக்திகளைக் குவிக்க ஆரம்பித்தான்.
க்ரிஷ்
சொன்னான். “ஐந்து தீவிரவாத இயக்கங்களுக்குத் திருட்டுப்பணம் தந்து, அவர்களுக்குத் தகுந்த
மாதிரி பேசி ஏமாற்றி என் பிடியில் வைத்திருக்கிறேன் என்று நம் நண்பர் பெருமை பேசினார்.
இப்போது அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால்
தீவிரவாதிகளின் தேவைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும். தொடந்து அவர்களைத் திருப்திப்படுத்த
யாராலும் முடியாது. ஒரு தீவிரவாதக்கூட்டத்தையே தொடர்ந்து சமாளிக்க முடியாத நிலை வரும்
என்ற யதார்த்த நிலை இருக்கையில் இவர் ஐந்து எதிரெதிர் இயக்கங்களை தொடர்ந்து திருப்திப்படுத்த
முடியவே முடியாது.. தீவிரவாதிகளைப் பயன்படுத்திக்
கொண்டு அவர்களை வளர்த்த தலைவர்கள் காலப்போக்கில் அவர்களாலேயே செத்து மடிந்த வரலாறு
வேண்டுமளவு இருக்கிறது. சம்பந்தப்படும் அனைவரையும் தீவிரவாதம் அழித்தே தீரும். பணம்,
அதிகாரம், சாமர்த்தியம் எல்லாம் எத்தனை இருந்தாலும் அது ஏற்படுத்த முடிந்த அழிவில்
இருந்து தப்பிக்கப் போதவே போதாது. செய்து விட்டுத் தான் சொல்வேன் என்று பெருமை பேசிய
நண்பர் சிந்தித்து விட்டுத் தான் செய்வேன் என்று சொல்லியிருந்தால் மெச்சியிருப்பேன்….
முட்டாள்தனத்தைச் செய்து விட்டுத் தெரிவிப்பது படுமுட்டாள்தனம்.”
விஸ்வத்துக்கு
பேச்சு நாராசமாகக் காதில் விழுந்தது. இவனை இப்படிப் பேச விட்டு உட்கார்ந்து கேட்கும்
நிலைமை வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. விஸ்வத்தின் பேச்சை அரை மணி
நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அதில் சொல்லியிருந்த ஒவ்வொன்றிலும் இருக்கும் ஓட்டைகளை
இப்படி எடுத்துக் காட்டி காட்டி கிழித்து வீசுகிறானே. தலைவனாக உயர்ந்து கொண்டிருந்தவனை
திருடனாகக் காட்டி இப்போது கோமாளி போலவும் காட்ட ஆரம்பித்து விட்டானே….. இந்த எண்ணங்கள்
எல்லாம் அலைமோதி அவன் மனம் ஒருநிலையில் குவிய மறுத்தது. இத்தனை காலம் தேவையான நேரத்தில்
நினைத்தபடியெல்லாம் ஒத்துழைத்த மனம் அவன் வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் க்ரிஷ் பேச்சால்
நிலை குலைந்து குவிய மறுப்பதை அவனால் சகிக்க முடியவில்லை.
இது
க்ரிஷ் தயாரித்துக் கொண்டு வந்த பேச்சாய் தோன்றவில்லை. ஏன் என்றால் விஸ்வம் என்ன பேசுவான்
என்று பெரிதாய் அவன் யூகித்திருக்க வழியில்லை. இதை எல்லாம் அவனுக்கு எடுத்துத் தருவது
அவன் தொடும் போதெல்லாம் மின்னும் அந்த பிரமிடு கண் சின்னமாகவே இருக்க வேண்டும் என்பது
இப்போது அவனுக்கு உறுதியாகவே தெரிந்து விட்டது. எல்லாம் இந்தச் சின்னத்தின் சித்து
வித்தை தான். இனி இந்தப் பேச்சு தொடரக்கூடாது. தீர்மானித்த விஸ்வம் சகலமும் மறந்து
தீவிர உறுதியோடு மனதை ஒருமைப்படுத்தினான். தன் சகல சக்திகளையும் ஒருமுனைப்படுத்திக்
குவித்தான். அந்தச் சின்னத்தைச் சுற்றி சக்தி வாய்ந்த ஒரு அரணை ஏற்படுத்தி அதன் எந்த
சக்தியும் அந்த அரணைத் தாண்டிப் பரவாதபடி சிறைப்படுத்த முடிவு செய்து, குவித்த சக்திகளை அந்த பிரமிடு நெற்றிக்கண்
சின்னத்தில் விஸ்வம் பிரயோகித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்