சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 29, 2011

ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5

ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!

ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு.

இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று கூறுவதுண்டு. அதே போல உடல் வலிமையிலும், போரிடும் திறமையிலும் கூட இராமனையே வியக்க வைத்தவன். வேதங்களாகட்டும், கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் கரைத்துக் குடித்தவன். கடைசியில் காமம் என்ற பலவீனத்தால் அவன் அழிந்து போனான். அவனுக்கு இருந்த அத்தனை பெருமைகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க சிறிய துளை போதும். அது போல சில சமயங்களில் ஒரு மனிதனை அழிக்க அவனது ஒரு பலவீனம் போதும். எத்தனையோ திறமையாளர்கள், நாம் வியந்து போகிற அளவு விஷய ஞானம் உள்ளவர்கள் ஒரு பலவீனத்தால் ஒன்றுமில்லாமல் அழிந்து போவதை நாம் நம்மைச் சுற்றிலும் பார்க்கலாம்.

ரு இசைக் கலைஞர் நல்ல குரல் வளமும், கர்னாடக இசை ஞானமும் உள்ளவர். வயலின், கீ போர்டு ஆகிய இசைக்கருவிகளிலும் மிக அருமையாக வாசிக்கக் கூடியவர். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு இணையான மாணவனை தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று அவருடைய குருவால் பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட அவர் தன் குடிப்பழக்கம் அத்துமீறிப் போனதால் இன்று வறுமையால் வாடுகிறார். பலர் கச்சேரிகளுக்கு ஆரம்பத்தில் அழைத்துப் பார்த்தனர். முன்பணம் வாங்கிக் கொண்டு அதில் குடித்து கச்சேரி நாளில் எங்காவது விழுந்து கிடப்பாராம். பின் எல்லோரும் அவரைக் கூப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார்கள். இன்று தெரிந்தவர்களிடம் ஐம்பது நூறு என்று வாங்கிக் குடித்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பெண் முடிகிற வரை தாக்குப் பிடித்து விட்டு ஒரே குழந்தையை எடுத்துக் கொண்டு அவரை விட்டுப் போய் விட்டாள். ஒரு மாபெரும் இசைக்கலைஞராக உலகிற்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய ஒரு நபர், புகழோடு பணத்தையும் சேர்த்துக் குவித்து வெற்றியாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இன்று அடையாளமில்லாமல், ஆதரவில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறார். காரணம் ஒரே ஒரு மிகப்பெரிய பலவீனம் கட்டுப்பாடில்லாத குடிப்பழக்கம்.

அதே நபருடன் சேர்ந்து வயலின் மட்டும் கற்றுத் தேர்ந்த ஒரு கலைஞர் இன்று கச்சேரிகளுக்கும் போகிறார், வீட்டில் குழந்தைகளுக்கும் வயலின் டியூஷன் சொல்லித் தருகிறார். நல்ல வருமானத்துடன் கௌரவமாக தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு நபர் மிக நல்லவர். நன்றாகப் படித்தவர். நல்ல புத்திசாலி. அரசாங்க வங்கியில் வேலையில் இருந்தார். சொந்தமாய் வீடு, வாகனம் எல்லாம் இருந்தது. ஒரு சமயம் இரண்டு கம்பெனிகளின் ஷேர்கள் வாங்கி விற்று பெரிய லாபம் சம்பாதித்தார். அந்த லாபம் அவரை ஒரேயடியாக மாற்றி விட்டது. இப்படி ஒரே நாளில் சம்பாதிக்க முடியும் போது மாதாமாதம் உழைத்து சம்பாதிக்கும் இந்த வருமானம் அவருக்குத் துச்சமாகத் தோன்ற ஆரம்பித்தது. வங்கியில் எல்லாக் கடன்களும் வாங்கி ஷேர்களில் போட்டு நஷ்டமடைந்தார். எல்லா வங்கிகளிலும் க்ரெடிட் கார்டுகள் வாங்கி அதில் பணம் எடுத்து ஷேர்களில் போட்டார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிவுரையைக் கேளாமல் அடுத்ததாக தன் பைக்கை விற்று அதில் போட்டார். பிறகு வீட்டையும் விற்று வந்த பணத்தை அதில் போட்டார். எல்லாப் பணத்தையும் இழந்தார். கடைசியில் உடல்நலம் காரணம் சொல்லி வங்கிப்பணியையும் ராஜினாமா செய்தார். வந்த ப்ராவிடண்ட் ஃபண்டு, கிராடியுட்டி எல்லாவற்றையும் கூட அதில் போட்டார். எல்லாம் போய் விட்டது. கடன்காரர்கள் தொல்லை தாளாமல் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடிப்போனார். இன்று தூர ஏதோ ஒரு ஊரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒரு சிறிய வேலையில் இருக்கிறார். மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்பான அரசாங்க உத்தியோகம், நல்ல சம்பளம், வீடு வாசல், வாகனம் என்றிருந்த ஒருவரை ஒரு பலவீனம் எப்படி அழித்து விட்டது பாருங்கள்.

அதே நேரத்தில் இன்னொரு நபரைப் பற்றியும் பார்ப்போம். அவர் எனக்கு உறவினரும் கூட. படிப்பு கிடையாது. பரம சாது. சூட்சுமமான விஷயங்கள் அவர் தலையில் ஏறாது. சமையல்காரர்களுக்கு எடுபிடியாகப் போவார். மாவாட்டுவார், காய்கறி நறுக்குவார், சப்ளை செய்வார். பல வருடங்கள் இதையே செய்து வந்த அவர் தனியாக சமைக்கவெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மனிதர் தன் சம்பாத்தியம் அப்படியே வீட்டுக்குக் கொண்டு போய் மனைவியிடம் கொடுத்து விடுவார். அந்த சம்பாத்தியத்தில் ஒரே மகளை டீச்சருக்குப் படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்து, தங்களுக்காக ஒரு சிறிய வீட்டையும் கட்டிக் கொண்டு ஓரளவு சேமிப்பையும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறுபது வயதைத் தாண்டியும் இன்னும் அந்த வேலைக்குப் போய் கொண்டிருக்கிறார். எந்தத் திறமையும் இல்லா விட்டாலும் உழைத்து சம்பாதித்து கௌரவமாக அவர் வாழ்கிறார்.

எத்தனையோ திறமையாளர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும் ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து அழிந்து போகிற போது பிரத்தியேக திறமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை அழிக்கக் கூடிய பலவீனங்கள் இல்லாதவர்கள் உழைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மனிதனுக்கு பலம், பலவீனம் இரண்டும் இருப்பது இயல்பே. பலவீனமே இல்லாதவனாய் இருந்து விடுதல் சுலபமும் அல்ல. ஆனால் அந்த பலவீனம் அவன் வாழ்க்கையையே அழித்து விடும் அளவு வளர்ந்து விடக்கூடாது. அவனுடைய எல்லா நன்மையையும் அழித்து விடக் கூடடிய தீமையாக மாறி விட அவன் அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்தில் அந்த பலவீனம் பெரிய விஷயமல்ல என்றும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அதில் ஏமாந்து விடக்கூடாது. மூன்றடி மண் கேட்ட வாமனன் கடைசியில் மூவுலகும் போதவில்லை என்றது போல ஒரு சாதாரணமாகத் தோன்றும் தீய பழக்கமோ, பலவீனமோ விஸ்வரூபம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

நன்றி: வல்லமை

9 comments:

  1. எளிமையான வார்த்தைக‌ள்
    வ‌லிமையான வாழ்க்கைக்கு.

    ReplyDelete
  2. ஒரு நபர் மிக நல்லவர். நன்றாகப் படித்தவர். நல்ல புத்திசாலி. அரசாங்க வங்கியில் வேலையில் இருந்தார். சொந்தமாய் வீடு, வாகனம் எல்லாம் இருந்தது. ஒரு சமயம் இரண்டு கம்பெனிகளின் ஷேர்கள் வாங்கி விற்று பெரிய லாபம் சம்பாதித்தார். அந்த லாபம் அவரை ஒரேயடியாக மாற்றி விட்டது இது பலவீனம் என்று சொல்வதை விட அறியாமை என்று சொல்லுவது சரியாக இருக்கும்

    ReplyDelete
  3. உதாரணங்கள் சிறப்பாக இருந்தன...

    ReplyDelete
  4. "ஆரம்பத்தில் அந்த பலவீனம் பெரிய விஷயமல்ல என்றும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அதில் ஏமாந்து விடக்கூடாது" good finishing and it has to be always kept in mind.

    ReplyDelete
  5. இதை படிக்கும்போது என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. நானும் சின்ன பலவீனத்தால் நஷ்டமடைந்து பிறகு விழித்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் அது ஒரு பலவீனமாக கூட எனக்கு தெரியவில்லை. புரிவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  6. பதிவர் தென்றல் மாத இதழுக்காக உங்களை மெயிலில் தொடர்புகொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  7. என்னுடைய மின்னஞ்சல் முகவரி-
    nganezen@gmail.com

    ReplyDelete
  8. அருமையான பதிவு

    ReplyDelete