சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 19, 2019

இல்லுமினாட்டி 14



ஜான் ஸ்மித் இனி என்ன கேட்பது என்று யோசிக்கையில் இனி ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்பது போல் அந்த யோகி தன் குடிசைக்குள் திரும்பத் தயாரானார். இருந்த இடத்திலிருந்தபடியே எல்லாவற்றையும் அறிந்தவர் போலத் தெரிந்த அவரிடம் ஜான் ஸ்மித் அவசரமாகக் கேட்டார்.  ”அனர்த்தங்கள் உருவாகி விட்ட பின் அதற்குத் தீர்வு எப்படிக் காண்பது?”

யோகியின் கண்களில் மெலிதாய் புன்னகை மிளிர்ந்தது. “உலகத்தை உருவாக்கியவனுக்கு அதைப் பாதுகாப்பது எப்படி என்றும், அழிப்பது எப்போது என்றும் தெரியும். எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்.”

ஜான் ஸ்மித் மெல்லக் கேட்டார். “பொறுப்புள்ள மனிதர்கள் அப்படி அலட்சியமாக இருந்து விடக்கூடாதல்லவா?”

“பொறுப்பை உணரும் மனிதனுக்கு அதை நிறைவேற்றும் வழியும் தானாய்த் தெரியவரும்”

சொல்லி விட்டு அந்த யோகி போய் விட்டார்.

ஆராய்ச்சியாளர் திகைப்புடன் இருவரையும் பார்த்தார். இருவருக்கிடையே மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பித்த போது கேள்விகளும், பதில்களும் இயல்பாக இருந்தது போலத் தான் இருந்தது. ஆனால் போகப் போக இந்த உரையாடலில் ஏதோ ஒன்று விளங்காதது போன்றதொரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. கடைசியில் பேசியதோ சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் கேட்டு விளங்கிக் கொள்ள அவர் நினைக்கவில்லை.

இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


ம்யூனிக் விமானநிலையத்தில் இறங்கிய ஜான் ஸ்மித் தன் வீட்டுக்குக் கூடச் செல்லாமல் முதலில் எர்னெஸ்டோ வீட்டுக்குச் சென்றார். அவரைப் பார்த்த பிறகு தான் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பிதோவன் இசையை எர்னெஸ்டோ நிறுத்தினார். ஒரு கணம் அவரைப் பார்க்கையில் ஜான் ஸ்மித்துக்குப் பொறாமையாக இருந்தது. இல்லுமினாட்டியில் இணைந்த பிறகு பல ஆண்டுகள் எர்னெஸ்டோவை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். ஒரு முறை கூட அந்த மனிதர் பதற்றமாகவோ, பொறுமை இழந்த நிலைமையிலோ இருந்து அவர் பார்த்ததில்லை. எத்தனை கவலைக்குரிய சூழ்நிலைகளில் இருந்தாலும் இசையில் மூழ்கவும், ஓய்வாக இருக்கவும் முடிந்த அதிசய மனிதர் அவர். இந்த விசேஷத் தன்மை இல்லா விட்டால் இல்லுமினாட்டியின் தலைவராக இத்தனை ஆண்டு காலம் அவர் தாக்குப் பிடித்திருந்திருக்க முடியாது…

ஜான் ஸ்மித் ஆராய்ச்சியாளரிடம் பேசியதையும், யோகியிடம் பேசியதையும் ரகசியமாகப் பதிவு செய்து கொண்டு வந்திருந்தார். அந்தப் பேச்சுகளை எர்னெஸ்டோ கண்களை மூடிக் கொண்டு கேட்டார். கேட்டு முடித்த பின் எர்னெஸ்டோ சிந்தனையில் ஆழ்ந்தார்.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஜான் ஸ்மித் சொன்னார். “என்ன நடந்திருக்கிறது என்று அந்த யோகிக்கு யோகசக்தி மூலம் தெரியும் என்ற உணர்வே எனக்கு அவரிடம் பேசும் போது ஏற்பட்டது. ஒருவேளை விஸ்வத்தையே அந்த யோகிக்குத் தெரிந்திருக்கலாம் என்று கூட அங்கிருந்து திரும்பி வரும் போது எனக்குத் தோன்றியது. ஆனால் அவர் எதையும் தெரிந்ததாய்க் காட்டிக் கொள்ளவில்லை.”

எர்னெஸ்டோ புன்னகைத்தார். “இந்த விஷயத்தில் நீயும் உனக்கு இருக்கும் சம்பந்தத்தைச் சொல்லவில்லை. அதனால் அவரும் அவருக்குச் சம்பந்தம் இருந்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வது அவசியமில்லை என்று நினைத்திருக்கலாம்.. ஆனாலும் நீ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தெளிவாகவே பதில்களைச் சொல்லி இருக்கிறார். சரி இப்போது நடந்திருப்பது பற்றி உன் அபிப்பிராயம் என்ன?”

“விஸ்வத்தின் ஆவி தான் அந்தப் போதை மனிதனின் உடலில் புகுந்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை தலைவரே”

“முதலில் விஸ்வம் ஏன் இறந்தான், எப்படி இறந்தான் என்பது பற்றி உனக்கு ஏதாவது அனுமானம் இருக்கிறதா?”

”அந்த யோகி சொன்ன எலக்ட்ரிக் வயர் உதாரணம் வைத்துப் பார்த்தால் அவன் உடல் தாங்க முடியாத ஏதோ சக்தி அவன் உடலில் பாய்ந்து தான் அவன் உடல் கருகி அவன் இறந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. அந்தச் சக்தியை அவன் உடம்பில் பாய்ச்சியது எது யார் என்று தெரியவில்லை.  இல்லுமினாட்டி சின்னமாகக்கூட இருக்கலாம்…”

“அந்த இல்லுமினாட்டி சின்னம் விஸ்வத்திடம் சில நாள்கள் இருந்தன. அது அவனிடம் இருக்கும் போது அவ்வப்போது மின்னியும் இருக்கிறது. ஆனால் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.” எர்னெஸ்டோ நினைபடுத்தினார்.

ஜான் ஸ்மித்துக்கும் அது சரியென்றே தோன்றியது. அவர் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் கடைசி நேரத்தில் ஏதாவது சக்தியை விஸ்வம் முயற்சி செய்து பார்த்திருக்கலாம். அது அவன் தாங்க முடியாத அளவு சுட்டிருக்கலாம்….”

எர்னெஸ்டோ சொன்னார். “அவன் எதிலும் முழுத் தேர்ச்சி பெறாமல் அரைகுறையாய் கற்றுக் கொண்டு விட்டதில்லை. அதனால் அவன் கற்ற சக்தியாய் இருக்காமல் அது வேறு எதாவது சக்தியாக இருக்கலாம்….”

ஜான் ஸ்மித் புன்னகைத்தார். இந்தக் கிழவரின் அறிவுக்கூர்மைக்கு எட்டாத விஷயங்கள் குறைவு. ஜான் ஸ்மித் தலையசைத்து விட்டுத் தன் அனுமானத்தைத் தொடர்ந்தார். “அவன் உயிரை விட்ட போது பக்கத்து ஆஸ்பத்திரியில் போதை மனிதனின் உடலில் இருந்து உயிர் போய்க் கொண்டிருந்தது. விஸ்வத்தின் ஆவி அந்த உடலில் புகுந்திருக்கலாம்….”

ஒரு விஞ்ஞானியான அவருக்கு இந்த வகை அனுமானங்கள் வேறு சந்தர்ப்பங்களில் பழைய அரேபியக் கதைகளின் கற்பனையாகவே தோன்றி இருக்கும் என்றாலும் நடந்திருப்பதை எல்லாம் ஆழமாக யோசித்துப் பார்க்கையில்  இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகவே தோன்றியது.

“அந்தக் கிதார் இசை… அவனை அழைத்துப் போகக் காரில் வந்தவர்கள்…” எர்னெஸ்டோ கேட்டார்.

ஜான் ஸ்மித் சொன்னார். “விஸ்வத்திற்கு உதவ யாரோ ஒருவர் அல்லது சிலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நமக்குத் தெரிந்த வரை விஸ்வத்துடன் ம்யூனிக் வந்தவர்கள் யாருமில்லை அல்லவா?”

எர்னெஸ்டோ சொன்னார். “விஸ்வத்தைப் பற்றி நவீன்சந்திர ஷா நம்மிடம் சொன்னதில் இருந்து அவனை நாம் கண்காணித்தே வந்திருக்கிறோம். ஒருசில சமயங்களில் நம் ஆட்களின் கண்காணிப்புக்கு அவன் குறுகிய காலம் தப்பிப் போனதும் இருக்கிறது. ஆனால் அவனுடன் யாரும் தொடர்பு கொண்டிருந்ததோ, கூட்டாளி ஒருவன் இருந்ததோ இல்லை என்பதில்  சந்தேகமே இல்லை….”

“ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்கள் விஸ்வத்துக்கே தெரியாமல் ம்யூனிக் வந்திருக்கலாம்….” ஜான் ஸ்மித் சொன்னார்.

எர்னெஸ்டோ அந்த அனுமானத்தில் அபாயத்தை உணர்ந்தார். ஆனால் அது சாத்தியம் தான் என்பதில் அவருக்கும் சந்தேகம் இல்லை. அந்த நபர் அல்லது நபர்கள் ஏதாவது ரகசிய விதங்களில் விஸ்வத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும் கூட அது இல்லுமினாட்டியின் கவனத்திலிருந்து தப்பி இருக்காது. ஆனால் அவர்கள் விஸ்வத்துக்கே தெரியாமல் வந்திருந்தாலும் எச்சரிக்கையுடன் தொலைவிலேயே இருந்திருந்தாலும் இல்லுமினாட்டி அதைக் கண்டுபிடித்திருக்க வழியில்லை...

எர்னெஸ்டோ சொன்னார். “இது பற்றி நாம் க்ரிஷிடமும் பேசலாம். விஸ்வத்தின் இப்போதைய அவதார நிலைமை என்ன என்று நீ நினைக்கிறாய்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “யோகி சொன்னதை வைத்துப் பார்க்கும் போது விஸ்வம் பழைய சக்திகளுடன் சௌகரியமாக அந்த உடலில் இருக்க வாய்ப்பில்லை. மூளையில் சாஃப்ட்வேர் அனைத்தும் சேர்க்கப்பட்டு விட்டதாகத் தான் தெரிகிறது. ஆனால் ஹார்டுவேர் - அந்தப் போதை மனிதனின் உடம்பு - எந்த அளவு ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறி தான். ஆனால் அந்த யோகி சொல்வதைப் பார்த்தால் ஓரளவு அவன் அந்த உடம்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்”

எர்னெஸ்டோ சொன்னார். “அவனை அழைத்துக் கொண்டு போன ஆட்கள் யார், அவர்கள் உத்தேசம் என்ன, அவர்களிடம் இருக்கும் சக்திகள் என்ன என்று நமக்குத் தெரியவில்லை….”

ஜான் ஸ்மித்துக்கும் அது உறுத்தலாகவே இருந்தது. அந்தக் கிதார் ஒலி வூடூ சடங்கில் ஆவியை ஒரு உடலில் வரவழைக்கும் இசை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு அந்த இசையை ஒலிக்கச் செய்தவர்கள் இந்தச் சக்தி விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. எர்னெஸ்டோ சொல்வது போல் அவர்கள் சக்திகள் என்ன, உத்தேசம் என்ன என்பதை அனுமானிக்கவும் எதுவும் தோன்றவில்லை. அவர் மெல்லக் கேட்டார். “அந்தக் காரைக் கண்டுபிடிக்க முடிந்ததா?”

எர்னெஸ்டோ சொன்னார். “அந்த மாடல் கருப்புக் கார் ம்யூனிக்கில் குறைந்தது ஆயிரமாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். அதில் இருந்த நம்பர் ப்ளேட் போலி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்… மூன்று கிலோ மீட்டர் வரை அந்தக் காரின் ஓட்டத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். அதற்குப் பின் அது மாயமாகி விட்டது. அந்த நம்பர் ப்ளேட்டை அதற்குப் பிறகு மறுபடி எங்கோ ஒரு இடத்தில் மாற்றி இருக்கலாம் என்று போலீஸ்காரர்கள் நினைக்கிறார்கள்…”

அங்கு சில நிமிடங்கள் மௌனம் நிலவியது. இனி விஸ்வமும், அவனை அழைத்துச் சென்றவர்களும் என்ன செய்வார்கள், இல்லுமினாட்டியின் பாதையில் குறுக்கிடுவார்களா இல்லை மாட்டார்களா என்பதை இருவராலும் அனுமானிக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

9 comments:

  1. Interesting. Dialogues between the yogi and john smith are sharp and intelligent.

    ReplyDelete
  2. வாரா வாரம் சுவாரசியமும் டென்ஷனும் கூடிக் கொண்டே போகிறது.

    ReplyDelete
  3. ஜான் ஸ்மித் சிந்தித்து உண்மையை கணிக்கும் விதமும்...அதில்,எர்னெஸ்டோ குறுக்கிட்டு அதை சரி செய்யும் விதமும்... அருமையாக இருந்தது... எர்னெஸ்டோ உண்மையில் திறமையான ஆள் தான்...

    கிரிஷின் காதுகளுக்கு இந்த விசயம் சென்றால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என நினைக்கிறேன்...

    பாகம் இரண்டிலும் விஸ்வம் மர்மத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்கிறான்....

    ReplyDelete
  4. I just wonder whether it is a real or creative story. While reading this story, that 5 - 10 minutes drags me into this story as a real life situation and that makes my heart beat fast.

    Oh my God! What a story writing with wonderful dialogues, can only be written by you and you only. Sir, you're a God sent. There can be only one N Ganeshan.

    ReplyDelete
  5. So who were they???
    Viswam sent money to some terrorist organisation... are they part of them...

    But how do they know viswam died... n played voodoo music? Do they have people inside illuminati too?

    ReplyDelete
  6. Very nice epi.
    Krish ullae ebtry aagum scene ka ga aavalodu waiting.
    Yappa!viswam madhiri oru villain parthadhe illai.irandhum aattuvikkiraane??!!

    ReplyDelete
  7. “உலகத்தை உருவாக்கியவனுக்கு அதைப் பாதுகாப்பது எப்படி என்றும், அழிப்பது எப்போது என்றும் தெரியும். எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்.”

    “பொறுப்பை உணரும் மனிதனுக்கு அதை நிறைவேற்றும் வழியும் தானாய்த் தெரியவரும்”

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  8. Awesome sir.... story oh my god vera level....

    ReplyDelete