சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 27, 2023

சாணக்கியன் 54

லெக்ஸாண்டர் அடுத்ததாக எங்கே யார் மீது போர் தொடுப்பது என்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். இடது புறம் செல்வதா, வலது புறம் செல்வதா, இல்லை தெற்கு நோக்கிச் செல்வதா என்று அவர்கள் கருத்தை அறிய விரும்பினான். இது போன்ற ஆலோசனைகளில் எப்போதும் ஓரிரு புதியவர்களாவது இருப்பது வழக்கம். புதிதாக வென்ற பகுதிகளைச் சார்ந்தவர்களாகவோ, அந்தப் பகுதிகளுக்கு அடுத்துள்ளவர்களாகவோ அந்தப் புதியவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதற்கடுத்து உள்ள பகுதிகளின் நிதி, படை நிலவரங்களை நன்றாக அறிந்தவர்களாகவும், பலம், பலவீனங்களைச் சரியாக சொல்ல முடிந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அலெக்ஸாண்டர் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். இந்த முறை அப்படிப் புதியவராக அவர்களுடன் சேர்ந்திருந்தவன் ஒரு சிற்றரசனான பாகலன்.

 

பாகலன் அலெக்ஸாண்டரிடம் மகதத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். “... சக்கரவர்த்தி. ஏராளமான செல்வமும், எப்பகுதியையும் வெல்ல முடிந்த படைபலமும் கொண்ட பகுதியாக மகதம் இருக்கிறது. ஆனால் ஒரு உண்மையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். படைபலமென்று பார்த்தால் தங்களிடம் இப்போதிருக்கும் படைபலத்திற்கு ஐந்து மடங்காவது மகதத்தின் படைபலம் இருக்கும். பெரும்படையும், பெருஞ்செல்வமும் மகதத்தின் பலம் என்று சொன்னால் குடிமக்களின் கடும் அதிருப்தி மகத மன்னனின் பலவீனம் என்று சொல்லலாம்.  ஆனாலும் மகதத்தை வெல்வது சுலபமல்ல...”

 

பாகலன் சொன்ன விஷயங்கள் அலெக்ஸாண்டரின் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. சுலபமல்ல என்ற தகவல் இதுவரை அவனை எப்போதும் தடுத்து நிறுத்தியதில்லை. சுலபமாக எதையும் அவன் பெற்று விடவில்லை. சுலபமானதைச் செய்து முடிக்க அலெக்ஸாண்டர் தேவையில்லை... அவன் புருஷோத்தமனைப் பார்த்தான்.

 

புருஷோத்தமன் அலெக்ஸாண்டரிடம் சொல்ல ஆரம்பித்தார். “பாகலன் சொன்னதில் மிகைப்படுத்தல் இல்லை. மகதத்தில் பெருஞ்செல்வமும், பெரும்படையும், மக்களின் கடும் அதிருப்தியும் உண்மையே. தற்போது அரியணையில் இருக்கும் தனநந்தனின் தந்தை மகாபத்மநந்தன் முன்னொரு காலத்தில் மகத அரசனுக்கு நாவிதனாக இருந்தவன். தோற்றத்தில் அழகாய் இருந்த அவன் அரசிக்கு நெருக்கமாகி அரசனிடம் செல்வாக்கு பெற்றவன். பின் சிறிது காலத்தில் அரசனையே கொன்று அரசனின் இரண்டு பிள்ளைகள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் பெயரில் பாதுகாவலனாக ஆட்சி புரிகிறேன் என்று சொல்லி அரசாட்சியைக் கையில் எடுத்துக் கொண்டவன். மேலும் சில காலம் சென்ற பிறகு அந்தப் பிள்ளைகளையும் கொன்று விட்டு தானே முடிசூடிக் கொண்டவன். வஞ்சகனாக இருந்த போதிலும் சாமர்த்தியமும், அறிவும் கூட இருந்ததால் தன் நிலைமையை வலுப்படுத்திக் கொண்டு, அவன் ஆண்டு, இறந்து போன பின் அவன் மகன்கள் வரிசையாக அரசாண்டார்கள். இப்போதுள்ள தனநந்தன் அவனுடைய கடைசி மகன்.  தனநந்தன் ஆணவம் பிடித்தவன். தன் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பவன். அவனுடைய அதிர்ஷ்டம் அவனுக்குத் திறமையான அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் திறமையால் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவர்களாலும் தனநந்தன் பேராசையால் அத்து மீறி விதிக்கும் வரிகளையும், அதனால் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் கட்டுப்படுத்த முடியவில்லை…

 

அலெக்ஸாண்டர் யோசனையுடன் கேட்டான். ”பாகலன் சொல்வது போல மகதப்படையின் அளவு நம் படைகளைப் போல் ஐந்து மடங்கு இருக்குமா?”

 

புருஷோத்தமன் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “இருக்கலாம்.”

 

அலெக்ஸாண்டர் அந்தத் தகவலால் உற்சாகம் இழந்து விடவில்லை. அவன் புன்னகையுடன் சொன்னான். “போர்க்களத்தின் வெற்றி தோல்விகள் முதலில் நம் மன உறுதியால் தீர்மானிக்கப்படுகின்றன. மனம் உறுதியாகத் தீர்மானித்ததை நிறைவேற்ற நம் அறிவுகூர்மையும் உதவுமானால் தானாக வெற்றிக்கான வழி பிறக்கிறது. நம் பலம், எதிரியின் பலவீனம் இரண்டையும் முழுமையாகப் பயன்படுத்தி முழு உற்சாகத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயமாகிறது. இது தான் நான் இது வரை கற்ற பாடம். அதனால் படையின் எண்ணிக்கைகளுக்கு நாம் அளவுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை…”

 

கொய்னஸ் மகதம் மீது படையெடுக்கப் போகும்  செய்தியைக் கேள்விப்பட்டவுடன் உற்சாகம் இழந்தான். அவனைப் போலவே அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பல யவன வீரர்கள் உற்சாகம் இழந்ததையும் அவன் கண்டான். மகதத்தின் படை வலிமை பற்றி மற்றவர்கள் கதை கதையாய் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு படை வலிமை கொண்டதாக மகதம் இருக்கும் தகவல் தான் திரும்பத் திரும்ப பேசப்பட்டது.

 

அன்றிரவு மைனிகாவைச் சந்தித்த போது அவன் சிந்தனைவயப்பட்டிருந்தான். அவனை ஆரத்தழுவியபடி மைனிகா கேட்டாள். “அப்படி என்ன சிந்தனை?”

 

அவளிடம் அவன் உண்மையான காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை. “ஒன்றுமில்லை” என்று சொன்னான்.

அவனுடைய உற்சாகக்குறைவுக்குக் காரணத்தை மைனிகாவால் யூகிக்க முடிந்தாலும் அவள் அவனை வற்புறுத்தி எதுவும் கேட்கவில்லை. குரலில் பெரும் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு அவள் மெல்லச் சொன்னாள். ‘நானும் இன்று வருத்தமாகத் தான் இருக்கிறேன். நாம் பிரியும் காலம் வந்து விட்டது மாவீரரே”

 

கொய்னஸ் திடுக்கிட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

 

“உங்கள் படை மகதம் நோக்கி கிளம்பவிருப்பதாக நான் கேள்விப்பட்டேன்....”

 

“அதனால் என்ன?”

 

“மகதப்படைகள் அளவில் பிரம்மாண்டமானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். போர் கடுமையாகவே இருக்கும்....”

 

“அதனால்...?”

 

மைனிகா முதலில் பதில் எதுவும் சொல்வதைத் தவிர்த்தாள். பின் அவன் வற்புறுத்திய பிறகு சொன்னாள். “போரின் முடிவும், விளைவுகளும் உங்களுக்குச் சாதகமாக இருக்க வழியிருப்பதாகத் தோன்றவில்லை. அதைக் கண்டு சகிக்கும் மனபலமும் எங்களுக்கு இல்லை. அதனால் நீங்கள் மகதம் நோக்கிக் கிளம்பும் நாளில் நானும் என் தோழிகளும் திரும்பிச் செல்வதாகத் தீர்மானித்திருக்கிறோம் மாவீரரே”

 

கொய்னஸ் சொன்னான். “மைனிகா நீ எங்கள் சக்கரவர்த்தியின் திறமையையும், வலிமையையும் அறியாதவளாக இருப்பதால் போரின் முடிவை நீ சந்தேகிக்கிறாய்? தோல்வி காணாதவர்கள் நாங்கள். இனியும் தோல்வி காணப்போவதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது”

 

மைனிகா அவன் கண்களைப் பார்த்தபடி உணர்வுபூர்வமாகச் சொன்னாள். ”அந்த நம்பிக்கை பலிக்கட்டும் என்றே நான் பிரார்த்திக்கிறேன். ஆனால் எந்த நம்பிக்கையும் யதார்த்தத்திற்கு எதிர்மாறானதாக இருக்கக்கூடாது அல்லவா? உங்கள் படை வலிமைக்குச் சிறிதும் இணையில்லாத சிறிய படையான கத் படையுடன் போரிட்ட போதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நீங்கள் பறி கொடுத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் பல மடங்கு வலிமையுள்ள மகதப் படையுடன் போரிடுகையில் உங்கள் நம்பிக்கைக்கேற்ப நீங்கள் வெற்றியே பெற்றாலும் அதைக் கொண்டாட உங்களில் எத்தனை வீரர்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நான் வீரம் அறியேன். போர்த் தந்திரங்களும் அறியேன். ஆனால் தாசி குலத்தில் பிறந்தவள் என்ற போதும் நான் யதார்த்தம் புரிந்தவள். என் சிற்றறிவுக்கு மகதம் ஒரு மயான பூமியாகவே தெரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது பிரிய வேண்டியவர்கள் நாம். நல்ல நிலைகளில் இருக்கும் போதே நல்ல நினைவுகளுடன் பிரிவது உத்தமம் என்று தோன்றுகிறது....”

 

அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அன்று உடலுறவில் ஈடுபடும் மனநிலையும் இருவருக்கும் இருக்கவில்லை. அவனை அணைத்தபடியே அவள் உறங்கி விட்டாள். அவன் மனதில் பல எண்ணங்களும், உணர்வுகளும் போராடிக் கொண்டிருந்தன. அவன் வார்த்தைப்படுத்தாமல் மனதில் வலிமையாக உணர்ந்த ஒரு நெருடலுக்கு அவள் வார்த்தைகள் கொடுத்து தெளிவுபடுத்தியிருக்கிறாள்.   

 

அவள் கேட்ட கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனதில் எதிரொலித்தது. ”பல மடங்கு வலிமையுள்ள மகதப் படையுடன் போரிடுகையில் உங்கள் நம்பிக்கைக்கேற்ப நீங்கள் வெற்றியே பெற்றாலும் அதைக் கொண்டாட உங்களில் எத்தனை வீரர்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்?”    

 

வெற்றி எங்களுக்கே என்று வீரமுழக்கமிடும் அலெக்ஸாண்டரால் கூட இதற்குப் பதில் சொல்ல முடியாதே. எத்தனை வீரத்துடன் போராடினாலும் இருபக்கமும் கடுமையான உயிர்ச்சேதம் இருக்கப் போவது நிச்சயமே அல்லவா? இலாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு முடிவெடுத்து வாழும் வித்தை தெரிந்திருந்த இந்த தாசியே கூட இனி இவர்களுடன் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவெடுத்துப் பிரிய நினைக்கிறாள் என்பதே எல்லா வாதங்களையும் மீறி முகத்தில் அறையும் யதார்த்தம் அல்லவா? அவள் நேரடியாக நீ உயிரோடிருப்பாய் என்பது நிச்சயமா என்று கேட்கவில்லை. ஆனால் கேட்காத அந்தக் கேள்வியை அவன் உணராமல் இல்லை.  இந்தக் கேள்வி கேட்கும் எவனும் வீரன் அல்ல, கேட்டுக் கொண்டு இந்தத் தொழிலுக்கு வரவும் முடியாது என்ற போதும் அவனால் ஒருவித சலிப்பை உணராமல் இருக்க முடியவில்லை. இப்படித் தொடர்ந்து போரிட்டபடி போய்க் கொண்டே இருப்பதற்கு முடிவு தான் என்ன என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது. குடும்பத்தினர் நினைவுக்கு வந்தார்கள். முக்கியமாக மகள் நினைவுக்கு வந்தாள். அவள் முகம் இப்போது எப்படி இருக்கும் என்று கூட அவனால் யூகிக்க முடியவில்லை...

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, April 24, 2023

யாரோ ஒருவன்? 135



கோயமுத்தூரில் கடைசி நாள் அதிகாலை வாக்கிங் போக நாகராஜ் கிளம்பிய போது சுதர்ஷன் வரவில்லை என்று சொன்னான். இரவு உறங்க நேரமாகி விட்டதால் களைப்பாக இருக்கிறதென்றும் சிறிது நேரம் தூங்க விரும்புவதாகவும் அவன் சொன்ன போது நாகராஜ் மேற்கொண்டு ஒன்றும் கேட்காமல் தனியாக வாக்கிங் கிளம்பினான். வழக்கமான இடத்தில் முன்பே வந்து தீபக் நின்று கொண்டிருந்தான்.

குட் மார்னிங்என்று தீபக் சொன்ன போது அந்தக் குரலில் வழக்கமான உற்சாகம் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக வார்த்தைப்படுத்த முடியாத மற்ற பல உணர்ச்சிகள் நிறைந்திருந்தன. நாகராஜ்குட் மார்னிங்என்று சொல்லியபடி நடக்க அவனுடன் இணைந்து தீபக் நடக்க ஆரம்பித்தான்.

நாகராஜின் விரல்களில் தன் விரல்களை இணைத்துக் கொண்டபடி தீபக் கரகரத்த குரலில் கேட்டான். “இந்த வாக்கிங் முடியற வரைக்கும் மட்டும் நான் உங்க கிட்ட உங்க மகனாய் பேசலாமா?”

மாதவனாய் ஒரு அரைமணி நேரம் மாறுவதும் நாகராஜுக்குச் சுலபமாயில்லை. கசப்புகளும், வருத்தங்களும் நிறைந்த அந்த அடையாளத்திற்குள் நுழைவது குறுகிய காலமானாலும் கண்ணீருடன் அல்லாமல் திரும்பி வர முடியாது. ஆனால் ரஞ்சனியின் உறுதியும், மாதவனின் துடிப்பும் நிறைந்த அவர்கள் மகன் தீபக்கின் மிகச்சிறிய கோரிக்கையை அவனால் மறுக்க முடியவில்லைநாகராஜ் தலையசைத்தான்.

என்னை முதல்ல பாக்கறப்பவே உங்களுக்கு தெரியும். இல்லப்பா. என் பிறந்த தேதி கேட்டது கூட கணக்கு சரியான்னு பார்த்துக்க தான் இல்லையா?”

அதற்கும் நாகராஜ் தலையசைத்தான். சிறிது நேரம் தீபக் ஒன்றும் சொல்லவில்லை. பின் மறுபடி கேட்டான். “அந்தக் கனவை வரவழைச்சது, பிறகு நிறுத்தினது, கொடிவேரி நீர்வீழ்ச்சில அந்தக் காட்சியை வரவழைச்சது, சத்தியமங்கலத்துல உங்கம்மா அப்பாவை பார்க்க வெச்சது எல்லாம் நீங்க தான். இதையெல்லாம் சுத்தி வளைச்சு செஞ்சு, உண்மையை போகற கடைசி நேரத்துல சொல்லாம ஆரம்பத்துலயே சொல்லியிருந்தா இந்த சில நாள்களாவது நான் உங்க மகனாய் இருந்திருப்பேனில்லையாப்பா

ஆனா உனக்கு அதை நம்ப முடிஞ்சிருக்காது. ஜீரணிக்கறதும்  சுலபமாயிருந்திருக்காது தீபக்நாகராஜ் மென்மையாகச் சொன்னான்.

அது உண்மை. இப்போதும் தீபக்கால் நடந்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.... குறுகிய நேரத்தில் நாகராஜிடம் பேச ஏராளமான விஷயங்கள் அவனுக்கு இருக்கின்றன. ஆனால் எதை எப்படிப் பேசுவது, சொல்வது என்று தீபக்குக்குத் தெரியவில்லை. எப்போதும் வாய் மூடாமல் எதாவது சொல்லிக் கொண்டே வரும் தீபக் அப்படி வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவது நாகராஜின் மனதை நெகிழச் செய்தது. நாகராஜ் அறிவான். இதெல்லாம் திடீரென்று எந்த மனிதனும் சுமக்க முடிந்த சுமை அல்ல....

மிக முக்கியமான விஷயங்களையாவது இன்று பேசி விட வேண்டும் என்று நினைத்த தீபக் மெல்லச் சொன்னான். “நான் பிறந்ததிலிருந்தேஅவரைதான் அப்பான்னு நினைச்சுட்டிருந்தேன். அவரும் என் மேல ஆரம்பத்திலிருந்தே பாசமாய் தான் நடந்திருக்கார். நேத்திலிருந்து அம்மா அவங்க கிட்ட இருந்து மனசளவு விலகிட்டாங்க. அதை வெளிப்படையா தெரிவிச்சுட்டாங்க. நானும் வெறுத்து ஒதுக்கினால் அவருக்கு வேற யாரும் இல்லை. அதனால அவர் செஞ்சது தப்புன்னாலும் என்னால யாரோ ஒரு ஆளா அவரை நினைச்சு ஒதுக்க முடியல.... அதுல உங்களுக்கு வருத்தமில்லையே...”

நாகராஜ் சொன்னான். “வருத்தமில்லை

தீபக் சொன்னான். “உங்களைக் கொல்ல முயற்சி பண்ணினவர் பொண்ணை நான் காதலிச்சுட்டிருக்கேன். கல்யாணமும் அவளைத்தான் செய்யணும்னு நினைச்சிருக்கேன். நடந்த உண்மையெல்லாம் தெரிஞ்சும் என் காதலை என்னால மாத்திக்க முடியலை. அதுலயும் உங்களுக்கு வருத்தமில்லையே

அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.” நாகராஜ் சொன்ன போது கண்கலங்கிய தீபக்தேங்க்ஸ்ப்பாஎன்றான்.

சிறு மௌனத்திற்குப் பின் கேட்டான். “கல்யாணத்துக்கு வருவீங்களா?”

நாகராஜ் சொன்னான். “வர மாட்டேன். அதுக்குன்னு இல்லை. உன் பாட்டி தாத்தா செத்தாலும் நான் வரப் போகிறதில்லை. மாதவன்னு பழைய அடையாளம் என்னைக் கொஞ்சமாவது ஒட்டிகிட்டிருக்கிற கடைசி நிமிஷங்கள் நீ கேட்டுகிட்ட இந்த நிமிஷங்கள் தான்....”

தீபக் ஏமாற்றத்தையும் பெருந்துக்கத்தையும் உணர்ந்தான். சிறிது நேரம் அவனால் பேச முடியவில்லை. ”நானும் அம்மாவும் எப்பவாவது அந்த ஆசிரமத்துக்கு வரலாமா?”

மாதவனைத் தேடி வர்றதானா வராதீங்க. இனிமே நீங்க அவனை எப்பவுமே பாக்க முடியாது..”

உங்களுக்கு மாதவனா என் கிட்ட சொல்ல எதாவது இருக்காப்பா....”

ஒரு நிமிடம் யோசித்து விட்டு நாகராஜ் சொன்னான். “உங்கம்மாவை நீ நல்லா பார்த்துப்பே அது எனக்குத் தெரியும். ஏன்னா நீ ரொம்ப அவளை நேசிக்கறே. அதே மாதிரி எங்கம்மா அப்பாவையும் நல்லா பார்த்துக்கோ. ரொம்ப அன்பானவங்க. தங்கமானவங்க. அவங்கள ரொம்ப நல்லா வெச்சு பார்த்துக்கணும்னு ஒரு காலத்துல எப்பவுமே ஆசைப்பட்டிருக்கேன். அந்த ஆசைல விதி விளையாடிடுச்சு. முடிஞ்சா என் மகனா நீ எனக்காக அதைச் செய்.” சொல்லச் சொல்ல நாகராஜின் குரலுடைந்தது.

தீபக் தலையசைத்து விட்டுக் கேட்டான். “அவங்க காலம் முடியற வரைக்குமாவது நீங்க மாதவனாய் இருக்கலாமில்லைப்பா. நீங்க உயிரோடிக்கீங்கன்னு தெரிஞ்சா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க....”

நாகராஜ் மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னான். “சந்தோஷத்தை விட துக்கப்படறதுக்கான வாய்ப்பு தான் அதிகம் தீபக். முதலாவது இந்த நாகராஜ் கிட்ட மாதவனோட எந்த சாயலும் இல்லை. பழைய மாதவனாய் நான் முழுசா மாறவும் முடியாது. அதை எல்லாம் ஏத்துக்கறது அவங்களுக்கு சுலபமா இருக்காது. அது மட்டுமில்லாம, நான் மாதவனா வந்தா நடந்த எல்லாத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். நடந்திருக்கறத ஜீரணம் பண்றது அவங்களுக்கு சுலபமாய் இருக்காது. நடக்கப் போகிறதை ஜீரணிக்கறதும் சுலபமாய் இருக்காது. நடந்த உண்மை எல்லாம் தெரிஞ்சதுக்கப்பறம் நீ சரத்தை அப்பான்னு சொல்றதையும், கல்யாணோட மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதையும் அவங்களுக்கு ஏத்துக்க சுலபமாயிருக்காது. அதனால மாதவனோட பழைய சரித்திரம், புதிய முகம் அவங்களுக்கு துக்கம் தர்ற மாதிரி தான் முடியும். அதனால யோசிச்சு தான் இந்த முடிவை நான் எடுத்தேன் தீபக்.”

அவன் சொன்னதும் தீபக்குக்குச் சரியாகவே தோன்றியது. தந்தையின் விரலை இறுக்கிப்பிடித்தபடியே மௌனமாக நடந்த அவனுக்கு ஐந்து நிமிடங்களில் வீடு வந்து விடும் என்கிற தொலைவில் ஒரு புல்வெளியைக் கடக்கையில் ஒரு ஆசை தோன்றியது. மெல்லக் கேட்டான். “அப்பா எனக்கு ஒரே ஒரு ஆசை. இந்தப் புல்வெளில அஞ்சு நிமிஷம் உட்கார்றீங்களா? நான் உங்க மடியில அஞ்சே அஞ்சு நிமிஷம் படுத்துக்கட்டா?”

நாகராஜனால் பேச முடியவில்லை. மௌனமாக அவன் அந்தப் புல்வெளியில் அமர்ந்தான்.  தீபக் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். அவன் தலைமுடியைக் கோதியபடி நாகராஜ் அவன் முகத்தையே பார்க்க, அவனும் தந்தையின் முகத்தையே பார்த்தபடி படுத்திருந்தான். ஓரிரு நிமிடங்களில் நீர்த்திரை இருவர் பார்வையையும் மறைத்தது.

மெல்ல நாகராஜ் சொன்னான். “நேரமாயிடுச்சு தீபக்….”

தீபக் எழுந்து கொள்ள இருவரும் நாகராஜின் வீடு வரும் வரை மௌனமாகவே நடந்தார்கள். வீடு நெருங்கியதும் வார்த்தைகள் இல்லாமலேயே இருவரும் கைவிரல்களை விடுவித்துக் கொண்டார்கள். ஏதாவது சொல்லி விடைபெறுவது தான் பொருத்தமாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளை மனமுடையாமல் சொல்ல முடியுமா என்பது இருவருக்குமே நிச்சயமில்லை. தீபக் தந்தையின் கையை முத்தமிட்டுத் தலையாட்டினான். நாகராஜ் மகன் தலையைத் தொட்டு கண்களை மூடி குருஜியைப் பிரார்த்தித்துக் கொண்டு மனதார ஆசிர்வதித்தான்.

பின் தலையசைத்து விட்டு அவன் வீட்டு கேட்டைத் திறக்க தீபக் பின்னாலேயே வந்தான். “நான் சுதர்ஷன் அங்கிள் கிட்டயும் பை சொல்லிடறேன்

சுதர்ஷன் உள்ளேயிருந்து கண்கலங்க தந்தையும் மகனும் விடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தீபக் இப்படிச் சொன்னதும் கண்களைத் துடைத்துக்  கொண்டு சுதர்ஷன் வெளியே வந்தான். நாகராஜ் உள்ளே போய் விட்டான்.

பை அங்கிள். என்னை ஞாபகம் வெச்சுக்கோங்கஎன்று சொன்ன தீபக்கை கண்கலங்க ஆரத்தழுவிக் கொண்டான் சுதர்ஷன்.

உன்னை எப்பவுமே என்னால மறக்க முடியாது தீபக்என்று அவன் மனதாரச் சொன்னான்.

கண்கலங்கியபடியே தீபக் “அப்பா கூட நீங்க தான் இருக்கப் போறீங்க. அவரை நல்லா பார்த்துக்கோங்க அங்கிள்என்று சொன்னபோது சுதர்ஷன் அழுது கொண்டே சொன்னான். “அதை நீ சொல்ல வேண்டியதேயில்லை தீபக். மகராஜ் எங்களுக்கு உயிர்…”



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, April 20, 2023

சாணக்கியன் 53


 மைனிகாவும் மற்ற தாசிகளும் தங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் மிகவும் கவனமாக இருந்தார்கள். அவர்கள் தினமும் உடலுறவு, கேளிக்கைகளுக்கு இடையே ஓரிரு கேள்விகள், சில நினைவூட்டல்கள் என்கிற அளவில் மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் அவை மிக முக்கியமான சமயங்களிலும், யவன வீரர்கள் மிக உணர்வுபூர்வமான மனநிலைகளில் இருக்கையிலும் கேட்கப்பட்டன, அல்லது சொல்லப்பட்டன. அதற்கு மேல் அவற்றைத் தொடரவோ, விரிவாகப் பேசவோ தாசிகள் முற்படவில்லை. ஆனால் பிறகு அவற்றை மறக்கவோ, கடந்து செல்லவோ யவன வீரர்களால் முடியவில்லை. தாயகமும், குடும்பமும் தொடர்ந்து நினைவுபடுத்தப்படவே யவன வீரர்கள் தங்களுக்குள்ளும் அதிகமாக அதுகுறித்து பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

 

தன் வீரர்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்த உணர்வு நிலைகளை அறியாத அலெக்ஸாண்டர் பாரதத்தின் உள் நோக்கி அவர்களை நடத்திச் சென்றான். சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி காத்திருந்தது. சில பகுதிகள் போர் இல்லாமலேயே சரணடைந்தன, சில பகுதிகள் போரிட்டு தோல்வி கண்டு சரணடைந்தன.

 

அலெக்ஸாண்டர் சிந்து மகாநதியின் கிளை நதியான ரவியைக் கடந்து வந்த போது கத் பகுதியைச் சேர்ந்த மாவீரர்கள் தங்கள் பகுதியைக் காத்துக் கொள்ள மிகுந்த மன உறுதியுடன் திறமையாகப் போராடினார்கள். அலெக்ஸாண்டரும் புருஷோத்தமனும் சேர்ந்து தங்கள் படைகளுடன் தீவிரமாகப் போராடிய பிறகே அவர்களால் அந்தப் பகுதியை வெல்ல முடிந்தது. இரண்டு பக்கமும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் மரணமடைந்தார்கள். 


போர் முடிந்த பின்பு நள்ளிரவு தாண்டியும் பல இடங்களில் குவிக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை வேதனையோடு பார்த்துக் கொண்டு மைனிகா தொலைவில் நின்று கொண்டிருந்தாள். கத் மாவீரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விடப் புகழையும், கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டு பிரகாசிப்பதாக அந்தச் சடலங்கள் எரிவதை மைனிகா பார்த்தாள். இப்போது அவளுக்கு கேகய வீரர்களை விட கத் வீரர்கள் சிறந்தவர்களாகத் தோன்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் இறந்தாலும் தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் எதிரிகளைக் கொன்று விட்டுத் தான் இறந்திருக்கிறார்கள்...

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கூறியது போல அன்னியர் ஆதிக்கத்தில் நம் மண்ணின் மக்களுக்கு நன்மை விளைய முடியாது என்பதை அவள் இப்போது அழுத்தமாக உணர்கிறாள். அலெக்ஸாண்டர் இப்போது அவளுக்கு எமதூதனாகவே தோன்றினாள். அவள் மாபெரும் வீரராக மனதில் ஆராதித்திருந்த புருஷோத்தமன் தனது தோல்விக்குப் பின் சரணடைந்து அலெக்ஸாண்டரை அனுசரித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தன் மண்ணின் மக்களுக்கே எதிராகச் செயல்பட ஆரம்பித்ததையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

 

தோல்வியுற்ற புருஷோத்தமனிடம் காண்பித்த பெருந்தன்மையை அலெக்ஸாண்டர் மற்ற யாரிடமும் காட்டவில்லை என்பதையும் அவள் கவனித்தாள். குறிப்பாக மஸ்காவதி என்ற சிற்றரசின் மன்னர் அலெக்ஸாண்டருடனான போரில் மரணமடையவே கைக்குழந்தையோடு இருந்த இளம் அரசி வேறு வழியில்லாமல் சரணடைந்தாள். அந்த அரசின் வீரர்களில் கணிசமான பகுதியினர் யவனப்படையுடன் இணைய மறுத்ததால் அவள் அலெக்ஸாண்டரிடம் ஒரே ஒரு கோரிக்கையை தான் வைத்தாள். இணைய விரும்பாத வீரர்கள் தங்கள் வழியில் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.  அலெக்ஸாண்டர் அதற்குச் சம்மதித்து மறுநாள் அதிகாலைக்குள் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுப் பின்னர் நகரை விட்டு சென்று விட வேண்டும் என்று ஆணையிட்டான்.

 

அவன் ஆணையிட்டபடியே நூற்றுக் கணக்கான வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் நகரை விட்டு வெளியேறினார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களைத் தொடர்ந்து சென்ற யவனப்படை அவர்களைக் கொன்று குவித்தது. அது அவனைப் போன்ற ஒரு சக்கரவர்த்திக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.  நம்பிக்கைத் துரோகம் வீரத்தில் சேர்ந்ததல்ல என்று அவள் அதை எண்ணி மனம் குமுறினாள்.  அன்று மஸ்காவதி வீரர்கள், இன்று கத் வீர்ர்கள், நாளை.. ? வீரமிகுந்த இம்மண்ணின் மைந்தர்கள் இப்படித்தான் மடிந்து தீர வேண்டுமா?        

 

மறுநாள் இரவு கொய்னஸிடம் சென்ற போது மைனிகா அவர்களது வெற்றியில் பெருமகிழ்ச்சி அடைந்தவளாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள். கொய்னஸை ஆரத்தழுவிக் கொண்டு சொன்னாள். “இங்கும் மகத்தான வெற்றி கண்டு விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்

 

கொய்னஸ் அவளை இறுக்கி அணைத்தபடி சொன்னான். “நன்றி மைனிகா. எங்களுக்கு வெற்றி புதிதல்ல. நாங்கள் சென்ற இடமெல்லாம் அதைத் தான் கண்டிருக்கிறோம்.”

 

ஆனால் இந்த முறை வெற்றி அத்தனை சுலபமாக கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்     

 

உண்மை தான் மைனிகா. நாங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைப் பறிகொடுக்க நேர்ந்து விட்டது. என்னுடைய படைப்பிரிவில் மிகநல்ல வீரர்கள் முப்பது பேரை இழந்து விட்டேன். கத் வீரர்கள் முட்டாள்கள். தோல்வி நிச்சயம் என்று தெளிவாகத் தெரிந்தும் போரிட்டு மடிந்து எங்கள் பக்கத்திலும் கடும் சேதம் விளைவித்து விட்டார்கள்...”

 

நீங்கள் முட்டாள்தனம் என்று சொல்வதை அவர்கள் வீரம் என்று நினைத்து இருக்கலாம்...”

 

கொய்னஸ் வாய்விட்டுச் சிரித்தான். “பெண்களை வாதத்தில் வெல்வது கஷ்டம் தான். ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் அலெக்ஸாண்டருடன் போர் என்றால் தோல்வி நிச்சயம் என்பது தான் வரலாறு. அப்படி இருந்தும் சரணடையாமல் போரிடத் துணிவது முட்டாள்தனம் அல்லவா?”

 

மைனிகா தலையசைத்தாள். அன்று அவர்களது கூடல் முடிந்த பின் கொய்னஸ் அலெக்ஸாண்டரைப் பற்றி பேசும் மனநிலையில் இருந்தான். கொய்னஸுக்கு அலெக்ஸாண்டர் மீதிருக்கும் பெருமதிப்பை அவள் அறிந்தே இருந்தாள். கொய்னஸைப் பொருத்த வரை அலெக்ஸாண்டர் கடவுள் போலத் தான். அலெக்ஸாண்டரால் முடியாதது எதுவுமே கிடையாது என்று அவன் உறுதியாக நம்பினான். அலெக்ஸாண்டரின் வீரமும், அறிவும், தைரியமும் வேறொரு மனிதனிடம் இருக்கவே முடியாது என்று கருதுபவன் அவன். அலெக்ஸாண்டர் உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவாளியான அரிஸ்டாட்டிலின் மாணவன் என்று அடிக்கடி கொய்னஸ் சொல்வான். அரிஸ்டாட்டில் என்ற பெயரையே மைனிகா அவன் மூலமாகத் தான் கேள்விப்படுகிறாள். அந்த அறிவாளி தன் மாணவனுக்கு இன்னமும் கற்றுத் தரவேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று மைனிகா தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

 

அன்றும் அரிஸ்டாட்டிலின் பெயரை கொய்னஸ் சொன்னான். அவரால் தான் அலெக்ஸாண்டர் மெய்ஞானத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவனாக இருப்பதாக அவன் சொன்னான். “.... அந்த ஈடுபாடும், மரியாதையும் அலெக்ஸாண்டரிடம் இல்லாமல் இருந்திருந்தால் அவரை அவமதித்துப் பேசிய துறவி தண்டராயன் இன்னேரம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை மைனிகா. யோசித்துப் பார். சர்வ வல்லமையுள்ள சக்கரவர்த்தியாக இருந்த போதும் அவமதிப்புக்குப் பிறகும் அந்தத் துறவியை மன்னித்து, ஆழமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க வேறொரு மனிதரால் முடிந்திருக்குமா?”

 

மைனிகா சொன்னாள். “உண்மை தான். நானும் அதை யோசித்து வியந்திருக்கிறேன். அது மட்டுமல்ல கேகய மன்னர் போரில் தோற்ற போதும்எப்படி நடத்த வேண்டும்?” என்று கேட்டுஒரு அரசன் இன்னொரு அரசனை எப்படி நடத்துவானோ அப்படியே நடத்த வேண்டும்என்று பதில் அளித்ததை அவமரியாதையாக எடுத்துக் கொள்ளாமல் சொன்னபடியே நடத்தி நண்பராக ஏற்றுக் கொண்டதையும் நினைத்துப் பார்த்து பிரமித்திருக்கிறேன்..... ஆனால் ஒரு விஷயம் தான் முரண்பாடாகத் தோன்றுகிறது.”

 

எந்த விஷயம்?” கொய்னஸ் கேட்டான்.

 

மஸ்காவதி வீரர்களிடம் ஆயுதங்கள் ஒப்படைத்து விட்டுத் தங்கள் வழியில் போகலாம் என்று அவர் அனுமதியளித்து விட்டு பின் தன் படையினரை அவர்கள் பின்னால் அனுப்பிக் கொன்று குவித்தது சரியாகப் படவில்லை. இந்தப் பேதை தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள். மனதில் நினைத்ததை உங்களிடம் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.”

 

கொய்னஸ் அதிலும் அலெக்ஸாண்டரிடம் குற்றம் காண முடியாதவனாக இருந்தான். அவன் பொறுமையாக அவளிடம் சொன்னான். “மைனிகா. பிரிந்து செல்லும் வீரர்கள் எப்போது எதிராகத் திரும்புவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. தீயில் மிச்சம் வைப்பது போல பகைமையில் பாக்கி வைப்பதும் புத்திசாலித்தனம் அல்ல. அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார். எதிரிகளிடம் வீரத்துக்கு இணையாக தந்திரத்தையும் பிரயோகப்படுத்த வேண்டும் என்பது தான் அரசியலில் முதல் பாடம்…”

 

அவள் பேருண்மையைக் கேட்டு உணர்ந்தவள் போல் முகபாவனை காட்டி மெல்லத் தலையாட்டினாள். சிறு மௌனத்திற்குப் பிறகு அவனிடம் அவள் மெல்லக் கேட்டாள். “உங்கள் மகளுக்கு எத்தனை வயதாகிறது?”

 

மகளைப் பற்றி அவள் கேட்டவுடன் அவன் முகம் மென்மையாகியது. மகள் பிறந்த வருடத்தை வைத்து மனதில் கணக்கிட்டு அவன் சொன்னான். அவள் பதினான்கு வயதை எட்டி விட்டாள்

 

அவள் பார்க்க சாயலில் உங்களைப் போலவா இல்லை உங்கள் மனைவியைப் போலவா?”


அவன் பெருமையோடு சொன்னான். “அவள் என் சாயல் தான்? அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது கிளம்பி வந்து விட்டேன். இப்போது வளர்ந்திருப்பாள்….”

 

சொல்லி முடித்த போது அவன் குரலில் மெல்லிய சோகம் இழையோடியது. அதற்கு மேல் அவள் ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. அவள் உறங்க ஆரம்பித்து விட்டாள். அவன் உறங்காமல் நீண்ட நேரம் விழித்திருந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, April 17, 2023

யாரோ ஒருவன்? 134



பீம்சிங் போவதற்கு ஒரு  அடி எடுத்து வைத்திருப்பான். நாகராஜ் கேட்டான். “ஏன் உனக்குப் பயம் பீம்சிங்? மூன்று நாழிகை நேரம் என்னால் பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. ஏன், இதை விட என் குரலையும் நான் அதிகப்படுத்திக் கொள்ள முடியாது. நான் உன்னிடம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசவும் போவதில்லை. அப்படி இருக்கையில் என்னிடம் பேச உனக்கென்ன பயம்?”

பீம்சிங் நாகராஜ் திரும்பத் திரும்ப ஏன் பயம், என்ன பயம் என்று கேட்பதை ரசிக்கவில்லை. “பயமெல்லாம் இல்லை. என்ன விஷயம் சொல்லுங்கள்?”

நீ இப்போது எடுத்து வைத்துக்கொண்ட ரத்தினக்கல் என்ன, அதன் சக்தி என்ன என்று உனக்குத் தெரியுமா?” நாகராஜ் மறுபடியும் கேட்டான்.

அதெல்லாம் எனக்குத் தெரிய வேண்டியதில்லை. நான் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் அதற்கான வேலை செய்து கொடுப்பது தான் என் தொழில்பீம்சிங் கறாராய் சொன்னான்.

உனக்கு பத்து லட்சம் ரூபாய் தந்து அணுகுண்டு எடுத்து வரச் சொன்னால் பணம் வாங்கிக் கொண்டு அதை எடுத்துக் கொடுக்கக் கிளம்பி விடுவாயா?”

அதற்கு நான் என்ன பைத்தியமா?”

நீ ஒத்துக் கொண்டு வந்த வேலை அதற்குக் குறைந்தது அல்ல. நீ இப்போது மஞ்சள் துணியில் மடித்து எடுத்து வைத்துக் கொண்ட ரத்தினக்கல் தவறான ஆளிடம் கிடைத்தால் உலகத்தையே சில நாட்களில் சுடுகாடாக மாற்றி விடலாம்.”

காளிங்க சுவாமி அவனை உடனடியாக அங்கிருந்து கிளம்பும்படி எச்சரித்தார். நாகராஜ் பேச்சைக் கேட்பது அவனுக்கு நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல.

அவர் எச்சரித்தவுடன் பீம்சிங்கும் அங்கிருந்து உடனே கிளம்புவதே நல்லது என்று எண்ணி இரண்டடி எடுத்து வைத்தவுடன் நாகராஜ் சொன்னான். “பாவம் உன் அனுமான்

அனுமான் பெயரைச் சொன்னவுடன்  ஏன் அப்படிச் சொன்னான் என்று நாகராஜைக் கேட்காமல் போக பீம்சிங்கால் முடியவில்லை. கேட்டான்.

நாகராஜ் சொன்னான். “ஒவ்வொரு திருட்டுக்கும் முன்னால் அனுமாரைக் கும்பிட்டு விட்டு திருடப் போவாய். உனக்கு அனுக்கிரகம் பண்ணி அனுமார் அந்தப் பாவத்தில் பங்கெடுத்துக் கொண்டார்…”

பீம்சிங் கோபத்தோடு சொன்னான். “இது வரைக்கும் நான் ஏழையிடமிருந்தும், பாவப்பட்டவனிடமிருந்தும் எதையும் திருடியதில்லை. அளவுக்கு அதிகமாய் இருப்பவனிடமிருந்தும், ஏமாற்றி சேர்த்து வைத்தவனிடமிருந்தும் தான் திருடியிருக்கிறேன். அதை பாவமில்லை

நாகராஜ் சிரித்துக் கொண்டே சொன்னான். “நீ சினிமா அதிகம் பார்க்கிறவன் என்று தெரிகிறது

பீம்சிங்கும் புன்னகைத்தான். ”சரி அது சினிமா வசனமாகவே இருக்கட்டும். அது முழுவதும் சரியென்று தான் நினைக்கிறேன். இப்போதே இதை எடுத்துக் கொண்டு போய் கொள்ளைக்காரனிடம் தரப்போவதில்லை. உங்களை மாதிரி நாகசக்தி இருக்கும் ஒரு நல்ல சுவாமிஜியிடம் தான் தரப்போகிறேன்.” சொன்னதுடன் அங்கே வெள்ளித் தட்டில் இருந்த மற்ற ரத்தினக்கல்களைக் காட்டி விட்டுச் சொன்னான். “இதையும் எடுத்துக் கொண்டு வர வேண்டுமா என்று கேட்டதற்கும் வேண்டாம் என்று சொன்னவர் அந்த சுவாமிஜி. அதனால் சரியான கைக்குத் தான் போகிறது இது. அது மட்டுமல்ல இது உங்களிடமிருந்து விலகிப் போகும் காலம் நெருங்கி  விட்டதென்று மாகாளியே சுவாமிஜியிடம் சொல்லி இருக்கிறாளாம். அதனால் உலகத்தையும், அனுமாரையும் பற்றிக் கவலைப்படுவதை நீங்கள் விட்டு விடலாம்...

பீம்சிங்கின் பதிலை காளிங்க சுவாமி மிகவும் ரசித்தார். ”சபாஷ்” என்று அவர் சொல்வதை பீம்சிங் உணர்ந்தான்.

நாகராஜ் சொன்னான். “என்னிடமிருந்து இந்த ரத்தினக்கல் விலகும் காலம் வந்து விட்டது என்று சொன்ன மாகாளியிடம் சுவாமிஜி அவரிடம் அது வந்து சேருமா, அப்படி வந்து சேர்ந்தாலும் எத்தனை நாளைக்கு அது இருக்கும் என்று கேட்டிருக்கிறாரா என்று கேள் பீம்சிங்

பீம்சிங் திகைத்தான். என்ன இது? அங்கிருந்து அந்த சுவாமிஜி என் மூலமாக இவர் பேசுவதைக் கேட்கிறார். அதைத் தெரிந்து கொண்டு இவரும் அவரைக் கேள்வி கேட்கிறார். இருவருக்கும் இடையே நான் என்ன டெலிபோனா?

காளிங்க சுவாமி நாகராஜின் கேள்வி கேட்டு துணுக்குற்றார். அவன் கேட்டது மிகச்சரி. அவர் காளியிடம் அதைக் கேட்கவில்லை. கேட்டால் அவளிடமிருந்து எதாவது கசப்பான பதில் வந்து விட்டால் என்ன செய்வதென்ற பயத்தால் அவர் கேட்டிருக்கவில்லையா என்பதை இது வரை யோசித்ததில்லை.

நாகராஜ் சொன்னான். “காலப் பெட்டகத்திலிருந்து சில காட்சிகளை எடுத்துக் காண்பிக்க எனக்கு சாதாரண நாகரத்தினக்கற்கள் போதவில்லை. இந்த விசேஷ நாகரத்தினத்தின் சக்தி தேவைப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு விட்டு இப்போது இதற்கு விடை தந்து விட்டேன்.  இந்த விசேஷ நாகரத்தினம் போகப் போகும் பாதையை நான் அறிவேன் சுவாமிஜி. அந்தப் பாதையை யார் வழி மறித்து எடுத்தாலும் அவர்களைக் கொன்று விட்டு அது தான் நிர்ணயித்த பாதையைத் திரும்பத் தொடரும். எச்சரிக்கையாக இருங்கள் சுவாமிஜி. உங்களிடம் வந்து சேர்ந்தால் அது உங்களிடமிருந்து இடம் மாறி உங்கள் சீடர்களிடம் போய்ச் சேர அதிக காலம் ஆகாது. அதை வைத்திருக்கத் தகுதியானவர் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் மாகாளி உங்களிடம் அதைக் கொண்டு சேர்க்காததற்குக் காரணம் உங்கள் தகுதிக்குறைவல்ல. உங்களைக் காப்பாற்றும் அருளைத் தான் மாகாளி காட்டியிருக்கிறாள். அந்த அருளால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்...”

காளிங்க சுவாமி திகைத்தார். நாகராஜ்  பீம்சிங்கிடம் சொன்னான். “இனி நீ போகலாம் பீம்சிங். கடவுளுக்கு நான் செய்யும் தொழில் பிடிக்கவில்லை என்றால் இந்த அளவு வருமானமிருக்கிற வழியை எனக்குக் காட்டட்டும் என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாய். உண்மையிலேயே அப்படி ஒரு வழி காட்டச் சொல்லி அவரிடம் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?”

பீம்சிங் ஒரு கணம் பேச்சிழந்து போய் நாகராஜைப் பார்த்தான். நாகராஜ் புன்னகையுடன் சொன்னான். “திருட்டு வேலைக்குக் கூட உனக்கு அனுக்கிரகம் செய்யும் கடவுள் நீ வேண்டினால்  நல்ல வழிக்கு அனுக்கிரகம் செய்ய மாட்டாரா. எதற்கும் அனுமாருக்கு ஒரு வாய்ப்பு தந்து பார் பீம்சிங்”

சொல்லிவிட்டு நாகராஜ் தன் கண்களை மூடிக் கொள்ள, பீம்சிங் தன்னையுமறியாமல் அவனைக் கைகூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து கிளம்பினான். ஏனோ காளிங்க சுவாமியும் எதுவும் சொல்லாமல் அவனுக்குள் மௌனம் சாதித்தார்.


ஜீம் அகமது கடிகாரத்தைப் பார்த்தான். இரவு பன்னிரண்டரை.  பீம்சிங் வேலையைச் செய்து கொண்டிருக்கலாம், அல்லது முடித்தும் இருக்கலாம். அவனை நேரடியாக அழைத்துத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும் காளிங்க சுவாமி அதற்கு அனுமதிக்கவில்லை. மந்திரக் கவசம் போட்டு அனுப்பியிருப்பதால் அப்படிக் கூப்பிட்டு பேசுவது மந்திரக் கவசத்தைப் பலவீனப்படுத்துவது போலாகி விடும் என்று சொல்லியிருந்தார். எப்படியும் ஒரு நாளில் தெரிந்து விடும். இத்தனை பொறுத்திருந்து விட்டு இப்போது அவசரப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் எங்கிருந்தோ ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

ரகசியப் போனில் அவன் ஆளை அழைத்து அஜீம் அகமது கேட்டான். “மகேந்திரன் மகனுக்கு ரா பலத்த பாதுகாப்பு தந்திருக்கிற மாதிரி அவன் வீட்டுக்கும் தந்திருக்கிறதா என்ன?”

“நரேந்திரன் வீட்டிலிருக்கும் போது தான் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு இருக்கிறது. அவன் இல்லாத போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதாக இல்லை”

“அப்படியானால் தனியாக இருக்கும் அவன் தாய்க்குப் பாதுகாப்பு பலமாக இல்லை. சரிதானே”

“சரி தான்”

அஜீம் அகமது இந்தத் திட்டத்தில் மகன் கிடைக்கா விட்டால் அந்தத் தாயைக் குறி வைப்பதும் கூட முக்கியமானது என்று நினைத்தான். மகனுக்கு வலிக்க வேண்டும். அஜீம் அகமது பெயரைக் கேட்டாலே அவன் அலற வேண்டும். அஜீம் அகமதை வெல்ல இதுவரை ஆள் எவனும் பிறக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)
என்.கணேசன்