என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, March 27, 2023
யாரோ ஒருவன்? 131
Thursday, March 23, 2023
சாணக்கியன் 49
அலெக்ஸாண்டர் தொலைவிலிருந்து வரும் புருஷோத்தமனைக் கூர்ந்து பார்த்தபடி நின்றான். மேருநாதனுடன் மிகுந்த தளர்ச்சியுடன் நடந்து வந்து கொண்டிருந்த போதும் புருஷோத்தமனிடம் ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. யவனப்படையும், காந்தாரப்படையும் அவர்களைச் சூழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.
ஆம்பி குமாரனுக்கு
புருஷோத்தமன் சரணடைந்து கைதியாக நடந்து வருவது பெருமகிழ்ச்சியைத் தந்தாலும் அவரைச்
சங்கிலியால் பிணைத்து இழுத்து வராமல் நடக்க வைத்துக் கூட்டிக் கொண்டு வருவது பெரிய
குறையாகவும் அவனுக்குத் தோன்றியது. பேச்சு வார்த்தைக்கு மேருநாதனை அனுப்பியிருக்க வேண்டியிருக்கவில்லை. அனுப்பியதால் அல்லவா தோற்றவனைக் கட்டி இழுத்து
வராமல் கௌரவமாக நடத்தி கூட்டிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஆனாலும் தன் மனதில் எழுந்த
எண்ணத்தை வாய்விட்டு அலெக்ஸாண்டரிடம் சொல்ல அவனால் முடியவில்லை.
ஆனால்
மேருநாதனுடன் வந்து கொண்டிருந்த புருஷோத்தமனின் மனமோ இப்படி வருவதையும் மிகுந்த அவமானமாக
உணர்ந்தது. சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்து எதிரிகள் படை சூழ கைதியாக நடந்து வருவது
சகிக்க முடிந்ததாய் இல்லை. எல்லாவற்றையும் விட அதிகக் கொடுமையாக அவர் உணர்ந்தது அலெக்ஸாண்டர்
அருகில் ஆம்பி குமாரனைக் கண்டது தான். இதற்குப் பதிலாக இறந்தே போயிருக்கலாமே என்று
அவர் மனம் ஒரு முறை ஓலமிட்டது. ஆனால் இப்போது எதுவும் செய்வதற்கில்லை…
தன்
எதிரில் வந்து நின்ற புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் சலனமில்லாமல் அமைதியாகக் கூர்ந்து பார்த்தான்.
ஆம்பி குமாரன் முடிந்த அளவு முகத்தில் ஏளன உணர்ச்சியைக் கொண்டு வந்து பார்த்தான். புருஷோத்தமன்
பார்வையோ ஆம்பி குமாரனின் பக்கமே திரும்பவில்லை. அந்த நீச்சனை அங்கீகரிக்கும் விதமாக
எதைச் செய்யவும் அவர் விரும்பவில்லை. கூர்ந்து
பார்க்கும் அலெக்ஸாண்டரை அவரும் நேர் பார்வை பார்த்து நின்றார்.
அலெக்ஸாண்டர்
அவர் தைரியத்தை மனதிற்குள் மெச்சினான். வெற்றி தோல்விகள் ஒரு வீரனுக்கு மிகவும் சகஜமே.
ஆனால் தோல்வியிலும் கூனிக் குறுகிப் போய்விடாமல் அடுத்தது என்ன என்கிற தோரணையில் அவர்
நின்ற விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. மாவீரர்களால் மட்டுமே முடிகிற தன்மை அது.
அலெக்ஸாண்டர்
தன் மனதில் ஓடிய எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டபடியே
புருஷோத்தமனைக் கேட்டான். “உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் புருஷோத்தமா?”
சற்று
தள்ளி நின்றிருந்த சசிகுப்தன் முன்னுக்கு வந்து புருஷோத்தமனை வணங்கும் பாவனையில் சற்று
பவ்யமாகத் தலையைக் கீழே சாய்த்து விட்டு “சக்கரவர்த்தி உங்களை எப்படி நடத்த வேண்டும்
என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார் கேகய மன்னரே” என்று மொழிபெயர்த்துச் சொன்னான்.
புருஷோத்தமன்
சசிகுப்தனை நோக்கி நட்பின் பாவனையில் சிறு புன்னகை பூத்து விட்டு அலெக்ஸாண்டருக்கு
இணையாக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அலெக்ஸாண்டரை நேர் பார்வை பார்த்தவராகப்
பதில் சொன்னார். “ஒரு அரசன் இன்னொரு அரசனை எப்படி நடத்துவானோ அப்படியே நடத்த வேண்டும்
என்று எதிர்பார்க்கிறேன் அலெக்ஸாண்டர்”
சசிகுப்தனும்
ஆம்பி குமாரனும் திகைத்தார்கள். சக்கரவர்த்தி என்றழைப்பதற்குப் பதிலாக பெயர் சொல்லி
புருஷோத்தமன் பதிலுக்கு அழைத்தது அவர்கள் இருவருக்கும் சரியாகத் தோன்றவில்லை. அதுவும்
போரில் தோற்று சரணடைய வந்தவர் பேசும் பேச்சாக இல்லையே என்றே நினைத்தார்கள். சசிகுப்தன் மறு கணமே சுதாரித்துக் கொண்டு அதை மொழி
பெயர்த்து அலெக்ஸாண்டரிடம் சொன்னான்.
ஆம்பி
குமாரன் அலெக்ஸாண்டரிடம் கடுங்கோபத்தை எதிர்பார்த்தான். தோற்றவன் பேசும் பேச்சா இது
என்று அலெக்ஸாண்டர் ஆத்திரமடைந்து புருஷோத்தமனைத் தண்டிக்கும் கட்டளை ஏதாவது பிறப்பிப்பான்
என்றும் அது தான் சரியென்றும் அவன் நினைத்தான்.
ஆனால்
அலெக்ஸாண்டர் முகம் சிறிதளவும் மாறவில்லை. “தனிப்பட்ட முறையில் வேறென்ன எதிர்பார்க்கிறாய்
புருஷோத்தமா?” என்று கேட்டான்.
சசிகுப்தன்
அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் புருஷோத்தமன் சொன்னார். “என் முதல் எதிர்பார்ப்பிலேயே
எல்லாம் அடங்கி இருக்கிறது அலெக்ஸாண்டர்”
சசிகுப்தன்
அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் அலெக்ஸாண்டரால் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
போர் புரிந்த விதத்திலும் சரி, தோற்று சரணடைய வந்திருக்கும் இந்த வேளையிலும் சரி அந்த
மனிதர் ஒரு மன்னனாகவே கம்பீரமாக நடந்து கொள்ளும் விதம் எல்லோராலும் பின்பற்ற முடிந்ததல்ல.
“நீ
கேட்டாய் என்பதற்காக அல்ல, எனக்காகவும் உன்னை அப்படியே நடத்த விரும்புகிறேன் நண்பனே.
உன் வீரத்தை மெச்சி இந்த நாட்டை மறுபடி உனக்கே திரும்பத் தருகிறேன். என் பெயரில் நீயே
இதை ஆள்வாயாக” என்று அலெக்ஸாண்டர் சொல்ல சசிகுப்தன் மொழி பெயர்த்துச் சொல்ல அங்கிருக்கும்
அனைவருமே திகைத்தார்கள்.
ஆம்பி
குமாரன் தான் நிற்கும் பூமி பிளந்து அவனை உள்வாங்குவது போல் உணர்ந்தான். அவனை நண்பா
என்றழைத்த அலெக்ஸாண்டர் புருஷோத்தமனையும் நண்பா என்றழைக்கிறானே. வென்ற கேகய நாட்டை
அலெக்ஸாண்டரின் பெயரால் ஆள அவனுக்கே திருப்பித் தருவதாய் சொல்கிறானே. அப்படியானால்
ஆம்பி குமாரனுக்கும், புருஷோத்தமனுக்கும் இடையில் என்ன தான் வித்தியாசம் இருக்கிறது.
என்ன அநியாயம் இது? நட்புக்கரம் நீட்டியவனுக்கும் ஒரே மரியாதை, போர் தொடுத்து தோற்றவனுக்கும்
ஒரே மரியாதையா? அப்படி உயர்த்தி மரியாதை தர புருஷோத்தமன் என்ன செய்துவிட்டான்?
மேருநாதன்
முகத்தில் அளவில்லாத சந்தோஷம் தெரிந்தது. பேசி சரணடைய சம்மதிக்கச் சொல்ல அவரை அலெக்ஸாண்டர்
அனுப்பி வைத்த போது சரணடையும் புருஷோத்தமனுக்கு ஓரளவாவது அலெக்ஸாண்டர் மரியாதை தருவான்
என்று அவர் எதிர்பார்த்தாரே ஒழிய இந்த அளவு பெருந்தன்மையாக நடத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.
புருஷோத்தமனே இதை எதிர்பார்க்கவில்லை. இந்த யவனன் அவர் நினைத்த அளவுக்கு மோசமானவனில்லை. ஆம்பி குமாரனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன். லேசாக அவர் கண்கள் பனித்தன. அலெக்ஸாண்டருக்கு அவர் உணர்வுகளைப் படிக்க சசிகுப்தன் உதவி தேவைப்படவில்லை. புன்னகையுடன் அவன் இரு கைகளையும் விரிக்க புருஷோத்தமன் நன்றி உணர்வுடன் சென்று அவனை அணைத்துக் கொண்டார்.
அதன்
பின் நடந்தது எதிலும் ஆம்பிகுமாரனுக்கு உடன்பாடிருக்கவில்லை என்றாலும் அவனால் தன் மனக்கசப்பை
வெளிப்படுத்த முடியவில்லை. அலெக்ஸாண்டர் உடனடியாக புருஷோத்தமனின் வலது தோள் காயத்துக்கு
மருந்திடக் கட்டளையிட்டான். புருஷோத்தமன் முகாமுக்கு
மிகுந்த மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டார். போகும் போது சசிகுப்தன் புருஷோத்தமனிடம்
பேசிக் கொண்டே போவதைப் பார்த்த போது ஆம்பி குமாரனுக்குத் தாங்க முடியவில்லை. சிறிது
நேரம் கழித்து அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனையும் புருஷோத்தமனிடம் அழைத்துக் கொண்டு போனான்.
இருவரும் அவனுக்கு நண்பர்கள் என்பதால் இனி அவர்கள் தங்களுக்குள்ளும் நண்பர்களாக இருக்க
வேண்டும் என்றும் இரண்டு நாடுகளும் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் அவன் சொல்ல வேண்டாவெறுப்பாக
இரண்டு பேரும் தழுவிக் கொள்ள வேண்டி வந்தது.
புருஷோத்தமன்
தோல்விக்கும் மேலாக, சரண் அடைந்ததற்கும் மேலாக இந்த ஒரு கணத்துக்காக வருந்தினார். தந்தையையே
கொன்ற இந்த மகாபாவியை நண்பனாகத் தழுவும் தருணம் வரும் என்று அவர் சிறிதும் நினைத்துப்
பார்த்திருக்கவில்லை. ஆம்பி குமாரனும் ஒரு குஷ்ட ரோகியை அணைக்க வேண்டிய நிலைக்கு வந்தது போல கூனிக்
குறுகினான். யாரை வெற்றி கொண்டு அழிப்பதற்காக அவன் அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டினானோ
அந்த நபரிடமே நட்புக்கரம் நீட்ட வேண்டிய தருணம் அலெக்ஸாண்டர் மூலம் வந்து சேரும் என்பதை
அவனும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இதையே
எத்தனையோ முறை அவன் தந்தையும் அறிவுறுத்தியிருக்கிறார். ”என் நண்பரை நீ உன் நண்பராகவும்
நினைக்க வேண்டும். இரண்டு அண்டை நாடுகளும் நட்புறவில் இருப்பது இரண்டு நாடுகளுக்கும்
அனுகூலமானது…” என்றெல்லாம் சொன்னதற்காகவே ஆம்பி குமாரன் அவரை வெறுத்திருக்கிறான். இப்போது
அதே நிலைமை கட்டாயமாக அவன் மீது திணிக்கப்படுகிறது.
அலெக்ஸாண்டர்
அவனிடம் கருத்து கேட்பவனாக இல்லை; மாறாக கட்டளையிடுபவனாக இருக்கிறான். புருஷோத்தமனும்,
அவனும் அலெக்ஸாண்டரை அனுசரித்துப் போக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விதி தங்களை
இப்படி இணைத்துக் கட்டிப்போடும் என்று இருவருமே சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இனி
அலெக்ஸாண்டர் என்ன செய்யப் போகிறான் என்று தெரியாமல் இருவரும் குழம்பினார்கள். ஏனென்றால்
அவன் எடுக்கப் போகும் தீர்மானத்திலேயே அவர்கள் இருவர் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது…
(தொடரும்)
என்.கணேசன்
Monday, March 20, 2023
யாரோ ஒருவன்? 130
Thursday, March 16, 2023
சாணக்கியன் 48
ஆம்பி குமாரன் தன் கண்களை நம்ப முடியாமல் திகைத்தான். திடீரென்று யவன காந்தாரப் படைகள் புருஷோத்தமன் முன்னிலையிலிருந்து பின் வாங்க அவன் படைத் தலைவர்களில் மூத்தவரான மேருநாதன் ஆயுதங்கள் எதுவுமில்லாமல் குதிரை மீதேறி புருஷோத்தமனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். பொதுவாக பேச்சு வார்த்தை நடத்த உத்தேசிக்கும் போது தான் இவ்வாறு நடப்பது வழக்கம். தோற்றுக் கொண்டிருக்கும் புருஷோத்தமனிடம் பேச்சு நடத்த என்ன இருக்கிறது? மன்னன் அவன் இருக்கையில் மேருநாதனுக்கு ஆணை பிறப்பித்தது யார்? ஆம்பி குமாரன் தனக்குள் எழுந்த கடுங்கோபத்தைப் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.
மேருநாதன் அவன்
தந்தை காலத்திலிருந்தே படைத்தலைவராக இருப்பவர். அவன் தந்தையின் பெருமதிப்பைப் பெற்றவர்.
தந்தையின் ஆட்களில் பலரைக் கழற்றி விட்டிருந்தாலும் மேருநாதன் பிரச்சினை இல்லாத நபர்
என்பதாலும் சிறந்த போர் வீரர் என்பதாலும் தான் அவன் அவரைத் தக்க வைத்திருந்தான். அவர்
புருஷோத்தமனிடம் நட்பு கொண்டவர் என்ற தகவல் இப்போது தான் ஆம்பி குமாரனின் நினைவுக்கு
வருகிறது....
ஆம்பி குமாரன் கோபத்துடன்
சசிகுப்தனை நெருங்கிக் கேட்டான். “என்ன நடக்கிறது இங்கே? மேருநாதன் எதற்கு புருஷோத்தமனிடம்
பேசப் போகிறார்? அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?”
சசிகுப்தன் அமைதியாகச்
சொன்னான். “சக்கரவர்த்தி”
ஆம்பி குமாரன் திகைத்தான்.
அவனுக்கு என்ன நினைப்பது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பலவீனமாகக் கேட்டான்.
“ஏன்?”
“புருஷோத்தமன் இறப்பதை
விட இருப்பது இலாபகரமானது என்று சக்கரவர்த்தி நினைக்கிறார்”
ஆம்பி குமாரனால்
இதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் மனத்தாங்கலுடன் சொன்னான். “புருஷோத்தமன் நம் காலில்
விழுந்து கெஞ்ச ஆரம்பித்த பிறகு வேண்டுமானால் இந்த அபிப்பிராயத்துக்கு சக்கரவர்த்தி
வந்திருக்கலாம். அதற்கு முன்பே சரிசமமானவர்களிடம் பேசுவது போல் புருஷோத்தமனிடம் நாம்
பேச ஆளனுப்புவதற்கு அவசியமே இல்லையே...”
சசிகுப்தன் சொன்னான்.
“சக்கரவர்த்தி நம்மிடம் ஆலோசனை கேட்டால் நாம் நம் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலாம்.
அவரே முடிவெடுத்த பிறகு நாம் என்ன சொல்ல முடியும்?”
மேருநாதன் வருவதையும், அவர் வருவதற்கு வழி விட்டு யவன காந்தாரப்
படைகள் பின்வாங்கியதையும் கவனித்த புருஷோத்தமன் தன் படையினருக்கும் விலகி நிற்க சைகை
செய்தார். வருவது மேருநாதனாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் நெருங்க அவர் அனுமதித்திருக்க மாட்டார். வாய் பேசுவதற்குப்
பதிலாக அவர் வாள் பேசியிருக்கும். ஆனால் மேருநாதன் அவர் நண்பர். நல்ல மனிதர்... செயலற்று ஒரு கணம் அமைதியாக இருக்கையில் தான் புருஷோத்தமன்,
தான் அதிகமாகக் களைத்துப் போயிருந்ததை உணர்ந்தார். வலது தோள்பட்டையில் வலி மிக அதிகமாக
இருந்தது. தாகமும் அவரை வாட்டியது...
புருஷோத்தமனை மேருநாதன்
நெருங்குவதைக் கவனித்த இந்திரதத் தானும் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து மன்னரை
நெருங்கினார். மேருநாதன் குதிரை மீதிருந்து இறங்கி தலைவணங்கி நிற்க புருஷோத்தமனும்
சற்று சிரமப்பட்டு யானை மீதிருந்து இறங்கி கைகூப்பினார்.
“கேகய மன்னருக்கு
மங்களமும், கீர்த்தியும் உண்டாகட்டும் என்று மேருநாதன் வாழ்த்துகிறேன்” என்று கைகளைக் கூப்பியபடியே மேருநாதன் சொல்ல புருஷோத்தமன்
வறண்ட குரலில் சொன்னார். “மேருநாதா வீரமரணம் வாய்க்கட்டும் என்று வாழ்த்துவது இப்போதைய
சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக இருக்கும்”
மேருநாதன் பணிவும்
அன்பும் கலந்த குரலில் சொன்னார். “மரணத்தினால் சாதிக்க முடிவது ஏதாவது இருந்தால் அதை
வரவேற்பது சரியாக இருக்கும் மன்னரே. ஆனால் அது சாதிக்க முடிவது ஏதுமில்லை என்கிற போது
அதை விரும்புவதில் அர்த்தமில்லை.”
புருஷோத்தமன் சொன்னார்.
“நான் உயிரோடு இருக்க என் இரண்டு மகன்கள் இறந்திருக்கிறார்கள். நான் இறந்த பின் எனக்கு
ஈமச்சடங்குகள் செய்ய வேண்டியவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஈமச்சடங்குகள்
செய்ய வேண்டிய நிலையில் இந்த வயதானவனிருக்கிறேன். நீங்கள் முதலில் கூறிய மங்களம் என்பக்கம்
இல்லை. அடுத்ததாய்ச் சொன்ன கீர்த்தி வீரமரணத்தின் மூலமாகவே எனக்கு வந்து சேர வேண்டும்...
சரி வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்”
மேருநாதன் சொன்னார்.
“போரின் போக்கு தங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் கேகய மன்னரே.
இதை மேலும் சில காலம் உங்களால் நீட்டிக்க முடியும் என்றாலும் முடிவை மாற்றக்கூடிய நிலையை
நீங்கள் எப்போதோ கடந்து விட்டீர்கள். சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தங்கள் வீரத்தை மெச்சுகிறார்.
நீங்கள் சரணடைந்து அவர் தலைமையை ஏற்றுக் கொண்டால் மேற்கொண்டு இழப்புகளை நீங்கள் தடுக்கலாம்...”
புருஷோத்தமன் முகம்
கடுமையாகியது. “இந்த வார்த்தையை உங்களைத் தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும் என் வாளுக்கிரையாகியிருப்பார்கள் நண்பரே.
வெற்றிக்கு அடுத்ததாய் எந்த வீரனும் விரும்புவது வீரமரணத்தையே. சரணாகதி அடைந்து மானமிழந்து
வாழ்வது உங்கள் மன்னன் ஆம்பி குமாரனுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம். இந்த புருஷோத்தமன்
என்றும் அந்த வழியை நாட மாட்டான்….”
மேருநாதன் கைகளைக் கூப்பியபடி பணிவாகச் சொன்னார். “என்னை மன்னிக்க வேண்டும்
கேகய மன்னரே. சில உண்மைகள் கசப்பானதாய் இருக்கலாம். ஆனால் அவற்றை மறுப்பது அறிவுடைமை ஆகாது. போரைத் தொடர்ந்து
தாங்களும் இறக்கலாம். தங்கள் படைவீரர்கள் பலரும் இறக்கலாம்.
ஆனால் முடிவில் இந்தப் போரின் மூலம் உங்கள் கேகய நாடும், மக்களும் பெறும் நன்மை தான் என்ன? இரண்டு மகன்களை இழந்தாலும் இன்னொரு மகன் பிஞ்சு வயதில் இருக்கிறான்.
அவன் எதிர்காலம் என்ன? தங்களுக்கு மகளொருத்தி இருக்கிறாள். திருமண பிராயத்தில் இருக்கும் அவள் கதி என்ன? வென்றவர்கள்
தோற்றவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. சரணடைந்து அலெக்ஸாண்டர் தலைமையை ஏற்றுக் கொள்வதால் அர்த்தமில்லாத உயிர்ப்பலிகளைத்
தடுப்பதோடு தங்கள் மகளுக்கும், மகனுக்கும்,
தங்கள் மக்களுக்கும் தேவையான நன்மைகளைச் செய்ய ஒரு வாய்ப்பைத் தக்க வைத்துக்
கொள்ள முடியும் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்… தயவு செய்து யோசியுங்கள்”
புருஷோத்தமன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுத் தளர்ச்சியுடன்
தன் வலது தோளைச் சுட்டிக் காட்டிச் சொன்னார்.
“இந்த ரணத்தை விட தங்கள் ஆலோசனை எனக்கு அதிக வேதனையைத் தருகிறது மேருநாதா.”
மேருநாதன் சொன்னார்.
“மேலான நன்மைகளுக்காக நாம் சில வேதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது
கேகய மன்னரே. நம் அன்பிற்கும்
மதிப்பிற்கும் உரிய காலஞ்சென்ற காந்தார மன்னர் இறந்த பின் அவரது மகனை மன்னராக ஏற்றுக்
கொள்வது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் மறுத்து நான்
எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை இருக்கும் போது ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பணியில்
இருப்பதன் மூலமாக என் காந்தாரத்திற்கு ஏதாவது சிறிய வகையிலாவது என்னால் கண்டிப்பாக
நன்மை ஏற்படுத்த முடியும் என்று தோன்றியதால் தான் தங்கி விட்டேன் கேகய மன்னரே.
மறுத்து ஒதுங்கியிருப்பது கௌரவமாக இருந்திருக்கலாம். ஆனால் என் கௌரவத்தால் என் மக்களும், மண்ணும் பெறப்போகும்
நன்மை என்ன என்ற ஒரே ஒரு கேள்வி தான் ஒரு முடிவை எடுக்க எனக்கு உதவியது. நீங்களும் அப்படியே உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பழைய நட்பின் காரணமாக
நான் வேண்டிக் கொள்கிறேன் கேகய மன்னரே. தங்கள் வீரம் அலெக்ஸாண்டரை
மிகவும் கவர்ந்து விட்டிருப்பதால் தங்களை அவமானப்படுத்தும் சிறுபுத்தி அவரிடம் இருக்காது
என்று நான் நம்புகிறேன். அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு வாய்ப்பைத்
தரும் விதத்தில் என்னைத் தங்களிடம் அனுப்பியிருக்க மாட்டார்….”
புருஷோத்தமன் தளர்ச்சியுடன் கண்களை மூடிச் சிறிது நேரம் யோசித்தார். சரணடைவது அவருக்குப் பிடிக்கவில்லை.
சரணடைந்து வாழ்வது வெறுப்பாகத் தான் இருந்தது. ஆனால் சகோதரர்களை இழந்திருக்கும் அவர் மகளுக்கும், இளம் மகனுக்கும்
இப்போது அவர் மட்டும் தான் இருக்கிறார். அவரும்
இறந்து விட்டால் அவர்கள் கதி என்னவாக இருக்கும்? அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் மக்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்ய முடியும்.
தோல்வி நிச்சயம் என்றறிந்த பின்னரும் போரைத் தொடர்ந்து இன்னும் எத்தனையோ
உயிர்களைப் பலி கொடுப்பது சரி தானா?
புருஷோத்தமன்
திரும்பிப் பார்த்து இந்திரதத்தைக் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய் இந்திரதத்?”
இந்திரதத்
சொன்னார். “உடைவதை விட வளைவது நல்லது மன்னரே”
(தொடரும்)
என்.கணேசன்