என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label யோகி. Show all posts
Showing posts with label யோகி. Show all posts

Monday, July 13, 2026

யோகி 164

 


ஷ்ரவனும், ஸ்ரேயாவும் தங்கள் திருமண அழைப்பிதழைத் தர யோகாலயம் போயிருந்தார்கள்.  அவர்கள் முதல் முதலில் சந்தித்த இடம் என்பதால் அது அவர்கள் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு இடமாக இருந்தது.

 

யோகாலயம் இப்போது கல்பனானந்தா தலைமையில் நிறைய மாறியிருந்தது. அங்கே பழைய கெடுபிடிகள் இல்லை. பாண்டியனின் தடியர்கள் அனைவரும் போய்விட்டிருந்ததால் தீவிர கண்காணிப்பு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

 

சைத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படா விட்டாலும், ஒவ்வொருவரையும் கடவுளோ, கர்மாவோ, ஏவல்சக்தியோ வேறு வேறு விதங்களில் தண்டித்திருப்பதை நினைத்து ஷ்ரவன் ஆச்சரியப்படுகிறான். செல்வம் இப்போதும் ஒரு மனநல மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் தான் இருக்கிறார். யாராவது அவரை உற்றுப் பார்த்தாலோ, அவர் முன் காவியுடையுடன் போனாலோ  அவர்கள் மேல் அவர் பாய்ந்து விடுகிறார். 

 

டாக்டர் சுகுமாரன் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஒரு தனியறையில் தான் இருக்கிறார். அந்த அறையில் டாமியும் இருக்கிறது. டாமிக்கு அந்த அறையில் இருக்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சுகுமாரனுக்கு அங்கும் தீராத வயிற்று வலிப் பிரச்சினையும், மண்டை ஓடு தெரியும் பிரச்சினையும் இருக்கிறது. அவருடைய இரண்டு கைகளிலும் நிறைய தாயத்துக்கள் இருக்கின்றன. அதை யாராவது கழற்றப் போனால் அவர் ஆக்ரோஷமாகி விடுகிறார்.  வாரம் இரண்டு முறை அவர் மனைவி வந்து அவரை ஜன்னல் வழியே பார்த்து விட்டு, சிகிச்சையளிக்கும் டாக்டரைப் பார்த்து பேசி விட்டுப் போகிறாள். உள்ளே போய் சுகுமாரனைப் பார்த்தால், அவள் தாயத்து வெட்டியது அவருக்கு நினைவுக்கு வந்து வருவதால் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருகிறது.

 

பாண்டியனின் தற்கொலை ஷ்ரவன் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது. அச்சுறுத்தல் ஏவல் சக்தியிடமிருந்து அல்லாமல் மனிதர்களிடமிருந்தாக இருந்தால் அவர் கண்டிப்பாக அனாயாசமாய் எதிர்கொண்டு சமாளித்திருப்பார் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  அவர் உயிரோடிருந்திருந்தால் அவன் இப்படி யோகாலயத்தின் பக்கமே வந்திருக்க முடியாது என்பதையும் அவன் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். கண்ணனும், பாண்டியனின் மற்ற தடியர்களும் எங்கே போய் சேர்ந்து கொண்டார்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

பிரம்மானந்தாவின் தற்போதைய நிலைமையும், ஷ்ரவன் சற்றும் எதிர்பார்த்து இருக்காதது தான். பாண்டியனின் மரணம் அவரை இப்படி பாதிக்கும் என்று அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லை. அவர் இப்போதும் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரால் பேசக்கூட முடிவதில்லை. அவரைப் பார்க்க அவருடைய பக்தர்கள் கூட்டமாக யோகாலயத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் துறவிகள் அவருடைய உடல்நிலை நிலவரத்தைச் சொல்லி, அவருடைய சிறிய நூல் ஒன்றை ஆசிர்வாதமாகத் தந்து, அன்போடு திருப்பி அனுப்புகிறார்கள். பிரபலங்கள் உட்பட யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. 

 

பாண்டியனின் இருப்பிடம் இப்போது கல்பனானந்தாவின் இருப்பிடமாக இருக்கிறது. ஷ்ரவனையும், ஸ்ரேயாவையும் அவள் அங்கு தான் வரவேற்றாள். திருமணத்திற்குக் கண்டிப்பாக வருவதாக அவள் சொன்னாள். அவள் தலைமையில் யோகாலயத்தில் உண்மையான ஆன்மீக செயல்பாடுகளும், தர்ம காரியங்களும் அதிகரித்திருப்பதாக ஷ்ரவன் கேள்விப்படுகிறான். முன்பெல்லாம் பெயரளவில் இருந்த நல்ல திட்டங்களை எல்லாம் உண்மையான அக்கறை உணர்வுடன் நிறைவேற்றி வருவதுடன், அவற்றின் வளர்ச்சியை அவள் நேரடியாகவே கண்காணித்து வருவதாக அனைவரும் சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய சூழ்நிலையில் அத்தனை காலம் அவள் தாக்குப் பிடித்து நின்றதே பெரிய சாதனை தான். அதனால் தான் அவளிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பை பிரம்மானந்தா ஒப்படைத்தாரோ என்று  அவன் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 

அவன் முக்தானந்தாவையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதால் கல்பனானந்தா ஆளனுப்பி அவரை அங்கே வரவழைத்தாள். அவர் ஷ்ரவனைப் பார்த்ததும் பேரானந்தப்பட்டார். கண்கள் ஈரமாக அவனையும் ஸ்ரேயாவையும் ஆசிர்வதித்தார். கல்பனானந்தா இப்போது கண்ணனின் தனியறையை அவருக்கு ஒதுக்கி இருந்தாள். அதனால் அவரால் இரவு நேரங்களில் யார் தூக்கமும் கெடுவதில்லை என்று சொல்லிப் புன்னகைத்தார்.

 

அவர்களை வழியனுப்ப இரண்டாவது கேட் வரை வந்த அவர், யோகாலயம் அவர் ஒரு காலத்தில் கனவு கண்டபடி மாறி வருவதாக ஷ்ரவனிடம் நிறைந்த மனதுடன் சொன்னார். “பாண்டியன் இறந்தவுடன் அடுத்ததாய் கண்ணன் தான் அந்த இடத்துக்கு வருவான் என்று பயந்தேன். ஆனால் எத்தனையோ முட்டாள்தனமான வேலைகளைச் செய்த பிரம்மானந்தா வாழ்க்கையில் செய்த ஒரு பெரிய நல்ல காரியம் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தை ஒப்படைத்தது தான். அதனாலேயே எனக்கு அவர் மேல் இருந்த பழைய கோபம் எல்லாம் போய் விட்டது ஷ்ரவன்.”

 

அவர் ஸ்ரேயாவிடம் சொன்னார். “ஷ்ரவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற நீ மிகவும் அதிர்ஷ்டசாலிம்மா. நல்ல பையன்.” அவர் சொல்வது உண்மை என்று ஆமோதித்து அவள் புன்னகைத்தாள்.

 

ஷ்ரவன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “இல்லை சுவாமிஜி. உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலி.”  காதலைக் கூட அதற்குரிய மென்மையுடன் சொல்லாமல், நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கூடக் கேட்காமல், அவனைக் காதலிப்பதில் இருக்கும் ஆபத்துகளையும் சொல்லி, ’திரும்பி நான் வரா விட்டால் எல்லாவற்றையும் மறந்து நீ வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்’ என்பது வரை சேர்த்துச் சொல்லி அவன் காதலைத் தெரிவித்த போதும் அவள் மறுக்காமல் சம்மதித்தது அவனுக்கு இப்போது யோசித்தாலும் பிரமிப்பாகத் தான் இருக்கிறது. மேலும், ஸ்ரேயா அவனோடு மட்டுமல்லாமல், அவனுடைய பெற்றோருடனும் நெருக்கமாக இருப்பதும், அன்பு காட்டுவதும் அவன் அதிர்ஷ்டம் என்றே தோன்றியது.

 

ஸ்ரேயாவை அவன் வாழ்க்கையில் வரவழைத்ததும் அவனுடைய மந்திர ஜபமாக இருக்கலாம் என்று ஷ்ரவன் எண்ணினான். அதைச் செய்ய ஆரம்பித்த பின் தான் அவன் வாழ்க்கையில் அவள் வந்தாள்.  அதனால் இப்போதும் அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த உபதேச மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறான். யோகாலயத்தில் இருக்கும் வரை தெரிந்த ஓநாய் இப்போது தெரிவதில்லை. அதற்குப் பதிலாக ஜபிக்கையில் தெய்வீக அலைகளை அவன் உணர்கிறான். கைப்பிடிக்கப் போகும் இந்த நல்ல பெண்ணை இறுதிவரையில் நான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று அவன் அந்த சமயத்தில் வேண்டிக் கொள்ள மறப்பதில்லை.  

 

பிரம்மானந்தாவிடம் கல்பனானந்தா அன்றைய யோகாலய முக்கிய நிகழ்வுகளைப் பற்றி உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரால் பேச முடியாவிட்டாலும் அவள் தினமும் வந்து, அவர் அருகே அமர்ந்து, அன்று என்ன வேலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்பதைச் சொல்லத் தவறுவதில்லை. அவருக்கு பாண்டியனின் நினைவு வந்தது. பாண்டியனும் இப்படித்தான் வந்து சொல்வார். ஆனால் அவர் சொல்வது பணக்கணக்காக இருக்கும். கல்பனானந்தா சொல்வது ஆன்மீகம் மற்றும் தர்மக் கணக்குகளை. இருவரும் இருவேறு துருவங்கள். ஆனாலும் இருவரும் அவர் உண்மையாக நேசித்த மனிதர்கள். இருவரும் அவரை உண்மையாக நேசித்த மனிதர்கள்.

இவர்களை விட அதிகமாய் அவரை மதிப்பவர்களும், துதிப்பவர்களும், அவர் மீது பக்தி கொண்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவரை அறியாதவர்கள். அவர் போட்ட வேடத்தில் மயங்கியவர்கள். அவர்கள் கற்பனையாக நம்பும் ஒன்றை அவராக பாவிப்பவர்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தால் அன்பும், பக்தியும், மதிப்பும் இல்லாமல் போய் விடும். ஆனால் இவர்கள் இருவரோ அவரை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். அறிந்தும் நேசித்தவர்கள்.

 

இருவரில் ஒருவனை அவர் இழந்து விட்டார். வாழ்ந்த போது அவரை உறுதியாகத் தாங்கியவன் அவன். சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டதன் மூலமாக மரணத்தில் மட்டுமே ஏமாற்றியவன் அவன். அது மரண வேதனையாக வலித்து இப்போது மரத்துப் போய் விட்டது. பாண்டியனை இழந்ததும், அசைய முடியாமல் யோசிக்க மட்டுமே முடிவதும், சைத்ரா சொன்னது போல் அவருடைய கர்மாவாக இருக்கக்கூடும். அப்படியானால் தினமும் அன்பு குறையாமல் வந்து கவனித்துக் கொள்வதோடு, யோகாலயத்துக் கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இவள் என்றோ அவர் செய்த புண்ணிய கர்மாவாக இருக்கலாம்…

 

யோசிக்க மட்டுமே முடிந்து, செயல்பட முடியாமல் இருக்கும் இந்த நிலைமையில் அவருக்கு அவ்வப்போது அந்த தோட்டக்கார யோகியின் நினைவு வருவதுண்டு. அப்போதெல்லாம் மனம் பாரமாகும். இனிக்கின்ற பொய்களில் தங்கி, கசக்கின்ற நிஜங்களைப் புறக்கணித்திருக்கக் கூடாது என்று தோன்றும். கண் கெட்ட பின்பு சூர்யநமஸ்காரம்…

 

கல்பனானந்தா அவள் சொல்லிக் கொண்டிருப்பதில் அவர் கவனம் இல்லை என்பதையும், வேறென்னவோ சிந்தனைகளில் அவர் சஞ்சரிக்கிறார் என்பதையும் உணர்ந்து, சொல்வதை நிறுத்தி அன்போடு அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். கயவனான அவளுடைய தந்தை அவளைக் கைவிட்ட போது அடைக்கலம் தந்த நல்ல மனிதராகவே இன்றும் அவள் அவரைப் பார்க்கிறாள். அன்றிலிருந்து எத்தனையோ தலைகீழ் மாற்றங்களை அவரிடம் அவள் கண்ட போதும், அவர் அவள் மீது காட்டிய அன்பில் மாற்றம் இருந்ததில்லை.

 

பாண்டியன் மரணத்திற்குப் பின் யோகாலயத்தின் பொறுப்பை அவளிடம் ஒப்படைப்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பின் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அந்த இரண்டு நாட்களில் கூட அவளை அழைத்து எந்த விளக்கமும் அவர் தரவில்லை. முடிவெடுத்த கணத்தில் அவருக்கு என்ன தோன்றியது என்று அவளுக்கு இதுவரை தெரியாது. ஆனால் சாதித்துக் காட்டுவேன் என்று உறுதியுடன், கற்பனை நம்பிக்கையுடன், காத்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவளுடைய எல்லாக் கனவுகளையும் நனவாக்க வல்லமை படைத்த யோகாலயத்தை அவள் கையில் ஒப்படைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் அவருடைய கனவாகவும் அது இருந்திருக்கிறது. பின் தான் அதைத் தொலைத்து விட்டார். பாண்டியனுக்குப் பின் யாரென்று முடிவு எடுக்கும் வேளையில் அது மறுபடியும் நினைவுக்கு வந்து தான் அவர் அவளிடம் யோகாலயத்தை ஒப்படைத்தாரோ என்று அவளுக்குச் சில சமயங்களில் தோன்றும். அதனால் தான் தினமும் அவள் அவரிடம் வந்து என்னவெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறாள். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் ஈரக் கண்களுடன் அவளைப் பார்ப்பார். அதன் உண்மையான அர்த்தம் அவளுக்குப் புரியாது. ஆனால் அவள் சேவை தொடர்கிறது…

 

சேதுமாதவன் ஷ்ரவனின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று தான் ஷ்ரவன் அதைத் தந்துவிட்டு கண்டிப்பாய் வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனான். கண்டிப்பாய் போக வேண்டும். நல்ல மனமும், கூர்மையான அறிவும் உள்ள இளைஞன் அவன். சைத்ரா கொலை பற்றிய உண்மைகளை அவன் வந்திரா விட்டால் சாவதற்கு முன் அவர் அறிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவன் வந்ததால், தவறு செய்தவர்கள் வேகமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவன் அதில் தன் பங்கை விட பரசுராமனின் பங்கு அதிகம் என்று அடக்கமாகச் சொல்லியிருந்தான். பரசுராமனையும் அவர் நன்றியுடன் நினைத்துப் பார்த்தார்.

 

எல்லாவற்றிற்கும் முதல் காரணமான அருணாச்சலம் அவருக்குப் பேருதவி செய்திருக்கிறார். ”உன் உதவிக்கு நான் எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வேன் அருணா? பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும்” என்று சேதுமாதவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்ன போது, “வாரம் ஒரு முறையாவது வந்து பேசி விட்டுப் போ” என்று அருணாச்சலம் சொன்னார். இப்போதெல்லாம் சேதுமாதவன் தவறாமல் வாரம் ஒரு முறை போய்ப் பேசி விட்டுத் தான் வருகிறார்.

 

அமீர்பாயும், மைக்கேலும், குற்றவாளிகள் கடவுளால் தண்டிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். கடைசியிலாவது நண்பரின் நல்ல மனதிற்குக் கடவுள் உதவியிருக்கிறார் என்று அவர்களுக்கு மகிழ்ச்சி. சேதுமாதவனுக்கு மகனுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிய திருப்தியே ஒழிய இந்த தண்டனையில் பெரிதாக மகிழ்ச்சியில்லை. அவருடைய வருத்தமெல்லாம் ஏன் இது மாதிரியான தவறுகள் நடக்கின்றன என்பதில் தான் இருந்தது. யோசிக்கும் போது எல்லாத் தவறுகளும், அறியாமையாலும், பேராசையாலும் தான் நடக்கின்றன என்று தோன்றியது. அதைச் செய்தால் மகிழ்ச்சி, இது கிடைத்தால் மகிழ்ச்சி என்று தப்புக்கணக்கு போடுவதால் ஆரம்பிக்கின்ற தவறுகள்….

 

தன்னைக் கொன்றவர்களைப் பற்றிக் கூடச் சொல்லாமல், கீதையில் அவர் படித்த யோகியை நேரிலும் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டது போல் சைத்ராவின் ஆவி ரகுராமனைப் பார்க்கச் சொன்னது நினைவுக்கு வர அவர் மனம் லேசானது….  ஷ்ரவன் சொன்ன பிறகு அவர் அமீர்பாய், மைக்கேல் இருவரையும் அழைத்துக் கொண்டு ரகுராமனைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மூவருமே அந்த யோகியின் முன்னிலையில் அமைதியையும் அன்பையும் உணர்ந்தார்கள். ரகுராமன் அவர்களிடம் அதிகம் பேசவில்லை. ஆனால் அவருடன் பேச்சே தேவையிருக்கவில்லை. சாந்தமும், மலர்ச்சியும் குறையாத அவருடன் இருப்பதே அவர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது.  எல்லாவற்றையும் இறைவன் தந்ததாய் ஏற்றுக் கொண்டு, செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இறைவன் செய்ய வைப்பதாய் பாவித்து வாழ்கின்ற வாழ்க்கையின் நிறைவை அவர்களால் நேரில் பார்க்க முடிந்தது.

 

இரண்டு வாரங்கள் கழித்து அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றுகிறது என்று அமீர் பாய் சொன்னார். அதனால் மீண்டும் அவரைச் சந்திக்க அவர்கள் போன போது ரகுராமன் அங்கிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அவர் போய் விட்டதாகச் சொன்னார்கள்.  அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

இப்போது சேதுமாதவனின் மனம் அந்த யோகியை நினைக்க ஆரம்பித்தது. இப்போது அந்த யோகி எங்கிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இறைவன் இருத்தியிருக்கும் இடமாக நினைத்து அவர் அங்கும் நிறைவாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த யோகியைப் பார்த்ததிலிருந்து ஒரே ஒரு ஆசை தான் சேதுமாதவன் மனதில் இருந்து வருகிறது. அதன் பின் அதை அடிக்கடி அவர் நினைவுபடுத்திக் கொள்வது போல் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்கிறார். ’மீதமிருக்கும் வாழ்க்கையையாவது அப்படி வாழ வேண்டும்!’

 

முற்றும்.

என்.கணேசன்


(அடுத்த திங்கட்கிழமையிலிருந்து ரட்சகன் நாவல் வாரா வாரம் வெளியாகும். அமானுஷ்யனின் வரவுக்காகக் காத்திருங்கள்)




Monday, July 6, 2026

யோகி 163

 


பிரம்மானந்தாவுக்கு அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு தான் இரண்டு நாட்களாக இருந்து வருகிறது. இன்னும் பாதாள அடித்தளத்தை எட்டி விடவில்லை. எட்டினால் சுக்கு நூறாக உடைந்து விடலாம். வீழ்ச்சியின் விளைவு இன்னது தான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கும் விதி கருணை காட்டவில்லை. பாண்டியனின் மரணத்தை ஜீரணிப்பது அவருக்கு எளிதாக இல்லை. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் உடனடியாக ஒரு தீர்வைக் குறுக்கு வழியில் வேகமாக எட்டுபவர் பாண்டியன். மலை போல் தோன்றிய எத்தனையோ பிரச்சினைகளை எல்லாம் அவர் பாண்டியனிடம் சொல்லிக் கவலைப்பட்டதுண்டு. சிலவற்றுக்கு உடனடியாகத் தீர்வு சொல்லும் பாண்டியன் சிலவற்றுக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க ஒரு நாள் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் பிரம்மானந்தாவுக்கு, திரும்பவும் அந்தப் பிரச்சினையை பாண்டியனிடம் சொல்ல வேண்டி வந்ததில்லை. காரணம், தீர்வு அவருக்குக் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட பாண்டியன் தனக்குக் கடைசியாக வந்தப் பிரச்சினைக்குக் குறுக்குவழித் தீர்வாக தற்கொலையை நினைத்தது பிரம்மானந்தாவுக்கு ஜீரணிக்க முடியவில்லை. விஸ்வகீர்த்தியின் தாயத்து வேலை செய்யா விட்டால் இன்னொரு ஆளைக் கண்டுபிடிப்பதா கஷ்டம்? அப்படியும் சரியான ஆளைக் கண்டுபிடிக்க முடியா விட்டால் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியுமே. பின் என்ன பிரச்சினை? கோழைகள் தற்கொலையைத் தீர்வாக நினைக்கலாம். ஆனால் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துப் போராட என்றுமே தயங்காத பாண்டியனுக்கு எப்படி தற்கொலையைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது? திரும்பத் திரும்ப அதே கேள்வி தான் அவரை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. அதல பாதாளத்தில் இன்னமும் போய்க் கொண்டே இருக்கிறார். பாண்டியன் இல்லாமல் எதையும் சமாளிக்க அவர் பழகவில்லை. அது பாண்டியனுக்கும் தெரியும். அது தெரிந்தும் ஏன் பாண்டியன்….

இரண்டு நாட்களாக அவரிடம் யார் யாரோ வந்து ஏதேதோ ஆறுதல் சொல்லி விட்டுப் போகிறார்கள். காதில் எதுவும் விழுந்த வார்த்தைகள் அவருடைய அறிவில் பதியவில்லை. எல்லாம் வெறும் சத்தங்களாகத் தான் இருக்கின்றன.

அவரிடம் வக்கீல் எதையோ மூன்றாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருப்பதும், ஆடிட்டர் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதும் பிரம்மானந்தாவின் கவனத்தை பலவந்தமாக எண்ணங்களின் உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வந்தது. பிரம்மானந்தா சொன்னார். “மன்னிக்கணும். நீங்க சொன்னதை கவனிக்கலை. என்ன சொன்னீங்க?”

“யோகாலயத்து நிர்வாகத்தை இவ்வளவு நாள் பாண்டியன் பார்த்துட்டு இருந்தார். அதை இனி யார் கிட்டே நீங்க ஒப்படைக்கப் போகிறீங்கன்னு உடனே தீர்மானிக்கறது நல்லதுன்னு சொன்னேன். அதிகாரபூர்வமாய் அதை நீங்க பதிவு பண்ணி வெச்சுட்டா உங்க பாரம் குறையும். இல்லாட்டி உங்க கிட்டயே ஒவ்வொன்னுக்கும் வருவாங்க… எல்லாத்தையும் நீங்களே பார்க்க வேண்டியிருக்கும்…” என்று வக்கீல் அழுத்தமாகச் சொன்னார். ஆடிட்டர் திவாகரனும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

கண்ணன் இதயம் படபடக்க இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் பிரம்மானந்தாவை கவனித்து வருகிறார். யோகிஜி இனி அதிக நாள் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று கண்ணனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. பிரம்மானந்தா பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருப்பதும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வெறித்த பார்வை பார்ப்பதும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமலிருப்பதும் கண்ணனுக்கு அபாயத்தின் அறிகுறிகளாகத் தோன்ற ஆரம்பித்தன. பாண்டியனைத் தொடர்ந்து இந்த முதியவரும் போய்ச் சேர்ந்து விடுவார் என்று கண்ணனின் உள்ளுணர்வு சொன்னது. இந்த நிலைமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பாண்டியனின் இடத்தை இங்கே அவர் பிடித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவர் எண்ண ஆரம்பித்தார். பல்லாயிரம் கோடிகள் சொத்து மதிப்புள்ள யோகாலயத்தின் நிர்வாகம் கைக்குக் கிடைக்குமானால் அதன் பின் வேறொரு அதிர்ஷ்டம் தேவையே இல்லை. மீதமிருக்கும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாகவே அமைந்து விடும். 

பிரம்மானந்தா இறந்து போய் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. சட்டம் ஒரு குழு அமைத்து அதிகாரத்தை சமமாகப் பிரித்து விட வாய்ப்பிருக்கிறது. பிரம்மானந்தா உயிரோடு இருக்கும் போதே யாரையாவது நியமித்து விட்டால் பின் அந்த நபருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. பாண்டியனுக்கு அடுத்தபடியாக திறமையான ஆள் என்றால் அது தான் தான் என்பது கண்ணனின் கர்வம் கலக்காத அபிப்பிராயமாக இருந்தது. பாண்டியனின் வலது கரமாய் இருந்து கண்ணன் செயல்பட்டு வந்ததை பிரம்மானந்தா பார்த்தவர். அதனால் இந்த நியமனத்தில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த எண்ணிய கண்ணன் சற்று முன் வந்த ஆடிட்டர், வக்கீல் இருவரிடமும் பிரம்மானந்தாவின் கவலைக்கிடமான நிலைமையையும், யோகாலயம் நிர்வகிக்க தலைமை இல்லாமல் இருக்கும் குழப்பமான நிலைமையையும் நாசுக்காகத் தெரியப்படுத்தினார். 

திவாகரனுக்கும் வக்கீலுக்கும் பிரம்மானந்தாவின் நிலைமையைப் பற்றி கண்ணன் சொன்னது மிகச்சரியே என்று தோன்றியது. அவர்கள் இருவரும் பேசும் போது கூட பிரம்மானந்தா வேறு ஏதோ ஒரு உலகில் இருப்பது போல் தோன்றியது. அதனால் தான் பாண்டியனுக்கு அடுத்தபடியாக யார் என்று முடிவெடுக்கும்படி அவர்கள் பிரம்மானந்தாவை வற்புறுத்தினார்கள்.

கண்ணன் பிரம்மானந்தாவுக்கு சேவை செய்யும் சாக்கில் மிகுந்த பணிவுடன் அந்த அறையிலேயே இருந்தார். அடுத்தது யார் என்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வரும்படியாக பிரம்மானந்தாவின் பார்வை விழும் இடத்திலேயே முன்னாலேயே கைகட்டியபடி அவர் நின்றிருந்தார்.  

பிரம்மானந்தாவுக்கு இந்த நிர்வாக பாரம் என்றுமே பிடிக்காத சுமையாகத் தான் இருந்தது. இனி அந்தத் தலைவலியை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை…. அவர் பார்வை எதிரேயிருந்த கண்ணன் மேலேயும் விழுந்தது. கண்ணன் ஆவலோடு காத்திருந்தார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த பிரம்மானந்தா பின் கண்களைத் திறந்து சொன்னார். “கல்பனானந்தாவை நியமிச்சுடலாம். திறமைசாலி. யோகாலயம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கிறவள்….” 

கண்ணனின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. ‘இந்த ஆளுக்கு நல்ல காலத்துலயே மூளை வேலை செய்யாது. லூசுத்தனமாய் உளற மட்டும் தெரியும். அதையே தன்னோட புத்திசாலித்தனம்னு நினைச்சுக்கும். இப்ப மூளை வேலை செய்யறதே நின்னு போச்சு போலருக்கு. யோவ் நாங்க எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் உன் வண்டவாளம் எல்லாம் எப்பவோ தண்டவாளம் ஏறியிருக்கும்யா…’ என்று கண்ணன் மனதுக்குள் புலம்பினார். பாண்டியனால் முடிந்தது, கல்பனானந்தாவால் முடியாது என்பதை வக்கீலோ, ஆடிட்டரோவாவது அந்தக் கிழவரிடம் சொன்னால் தேவலை என்று அவர் மனம் பரபரத்தது. அவர்கள் இருவரும் அப்படி எதுவும் சொல்லாமல் தலையசைத்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் அவருக்கு இருந்தது. அதற்கு வேண்டிய சட்டபூர்வமான வேலைகளை உடனே செய்வதாய் உறுதி அளித்து விட்டு வக்கீலும், ஆடிட்டரும் சென்றார்கள்.

பெரிய அதிகாரம் எதுவும் இல்லாத போதே கல்பனானந்தா அவர்களை எல்லாம் மதித்து நடக்காதவள். இத்தனைக்கும் பாண்டியன் மிக வலிமையான ஒரு நிலையில் இருந்தவர். அவருக்கு ஓரளவாவது மரியாதை காட்டிய அவள், அவருடைய அடியாட்களான அவர்களிடம் அலட்சியமாகத் தான் நடந்து கொள்வாள். அதுவும் வாய்விட்டு புகார் சொல்கிறபடி இருக்காது. அப்படி நாசுக்காக அலட்சியப்படுத்தும் திறமை படைத்தவள் அவள். அப்படிப்பட்டவள் அதிகாரத்தில் அமர்ந்தால் பின் கேட்கவே வேண்டாம். மேலும் பாண்டியன் அவர்களுக்குத் தாராளமாய் பணம் தருவார். பல தவறான வேலைகளைச் செய்ய வைப்பதும் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் கையில் பணம் தாராளமாய் புழங்கியது. கல்பனானந்தா தலைமையில் அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை… கண்ணன் இனி யோகாலயத்தில் இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தார். 

அடுத்த இரண்டு நாட்களில் கல்பனானந்தாவிடம் யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானவுடனேயே கண்ணனும், பாண்டியனின் மற்ற அடியாட்களும் யோகாலயத்திலிருந்து வெளியேறினார்கள். அதன் பின் இரண்டு நாட்கள் பிரம்மானந்தா நடைப்பிணம் போல் இருந்தார். மூன்றாவது நாள் பக்கவாதம் வந்து படுத்த படுத்த படுக்கையானார்.  தீவிர சிகிச்சை அவருக்குத் தரப்பட்டது என்றாலும் அவரைப் பழைய நிலைமைக்கு மருத்துவர்களால் கொண்டுவர முடியவில்லை. தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் யோகசக்தி அவரிடம் இருந்தும், யோகாலயத்தில் நிகழ்ந்த தவறான நிகழ்வுகள் அவரை விரக்தி வைராக்கியத்தில் தள்ளி விட்டதென்றும், அதனால் அவர் குணப்படுத்திக்கொள்ள எந்த முயற்சிகளும் எடுக்காமல் விதி விட்ட வழி என்று இருக்கிறார் என்றும் அவருடைய தீவிர பக்தர்கள் சொன்னார்கள். பலரும் அது சரியாக இருக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டார்கள்…    

(தொடரும்)

என்.கணேசன்


Monday, June 29, 2026

யோகி 162


 

பாண்டியனுக்கு விஸ்வகீர்த்தி மேலும் முழு நம்பிக்கை வரவில்லை. விஸ்வகீர்த்தி புகழ் பெற்றவராக இருந்தார். அவருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் அவரைப் பெரிதாகக் கவரவில்லை. பிரம்மானந்தாவும் புகழ் பெற்றவர், அவருக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். இறைவனின் அவதாரம் என்றும் சொல்கிறார்கள். அதில் தான் அவர்கள் வியாபாரம் நடக்கிறது. ஆனால் ஒரு யோகியின் காலடி மண் தேவைப்பட்ட போது அவர்களே வேறிடத்தில் அல்லவா தேடவேண்டி வந்தது. பிரம்மானந்தா யோகியாய் சொல்லப்படுவது போல் விஸ்வகீர்த்தி மந்திரவாதியாய் சொல்லப்படுகிறாரோ என்ற சந்தேகம் பாண்டியனுக்கு வந்து தொலைத்தது.

 

விஸ்வகீர்த்தியிடம் அவர் அலைபேசியில் ஹிந்தியில் பேசிய போது பீடிகை எல்லாம் பெரிதாக இருந்தது. அவர் சொன்ன தொகை இரண்டு லட்சமாக இருந்தது. அவருக்கு மாகாளி அருள் இருப்பதாகவும், மாகாளி அவருக்கு அடிக்கடி காட்சி தருவாள் என்றும் அவர் சொன்னது பாண்டியனுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையைக் குறைத்தது. இன்னொரு பிரம்மானந்தாவை இங்கே வரவழைக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. கூடுதலாக விசாரித்ததில் சிலர் உயர்வாகவும், சிலர் குறைவாகவும் அபிப்பிராயம் சொன்னார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்று பாண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை. தகுந்த ஆள் இருந்தால் அவர் கோடிக் கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார். பணம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் தகுதி வாய்ந்த ஆட்கள் அரிதாகவும், போலிகள் மலிவாகவும் காணக்கிடைப்பது இக்காலத்தின் சாபக்கேடு என்று அவருக்குத் தோன்றியது.

 

வியாழக்கிழமை காலையில் விஸ்வகீர்த்தி தன் சீடர்கள் இருவருடன் யோகாலயம் வந்து சேர்ந்தார். விஸ்வகீர்த்தியைப் பார்த்தவுடன், பாண்டியனுக்கு தேவானந்தகிரி மேல் வந்த நம்பிக்கை அவர் மேல் வரவில்லை. விஸ்வகீர்த்தி தேவானந்தகிரி போல் அவராக எந்த விஷயத்தையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. “மகாகாளி ஏவல் சக்தி இங்கே பீடித்திருக்கிறது என்று சொல்கிறாள்” என்று பொதுவாகச் சொல்ல, அதற்கே அந்தச் சீடர்கள் இருவரும் பெரியதொரு அருள்வாக்கு கிடைத்து விட்டது போல் வியப்புடன் பார்த்தார்கள். பாண்டியனாகவே ஏவல்சக்தியின் தொந்தரவுகளைச் சொன்னார். விஸ்வகீர்த்திக்குக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டாலும், பிரச்சினை இதுவென்று தெளிவாகச் சொன்னால் அதற்கு பூஜை செய்து சரியாக மந்திரித்து தாயத்து கட்டி பிரச்சினை வராத மாதிரி பார்த்துக் கொண்டால் போதும் என்று அவருக்குத் தோன்றியது.

 

விஸ்வகீர்த்தி செய்த பூஜைகள் வேறு விதமாக இருந்தன. வரைந்த படங்களும் யந்திரங்களும் கூட வித்தியாசமாய் இருந்தன. அர்த்த ஜாமத்தில் பூஜை செய்து இனி ஒரு மண்டலம் முடியும் வரை பிரச்சினை இல்லை என்று அவர் உறுதியாகச் சொல்லி தாயத்தைக் கட்டினார். பழைய தாயத்தை கழற்றி விடலாம் என்று அவர் தைரியம் சொன்னாலும் பாண்டியன் பழைய தாயத்தைக் கழற்றவில்லை.

 

வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வகீர்த்தியும், அவருடைய சீடர்களும் போய் விட்டார்கள். பாண்டியனுக்கு அந்தத் தாயத்து தேவானந்தகிரியின் தாயத்து போலவே சக்தி வாய்ந்ததாய் இருக்கும் என்ற நம்பிக்கை பத்து சதவீதமே இருந்தது.  விஸ்வகீர்த்தியைப் பற்றி உயர்வாய்ச் சொன்ன பக்தர்கள் வாக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அந்த அதிசயம் சம்பவிக்கலாம் என்று தோன்றியது.

 

ஆனால் பிரம்மானந்தா நம்பிக்கையோடு இருந்தார். நான்கைந்து பேர் பெயரைச் சொல்லி அந்தப் புத்திசாலிகள் எல்லாம் காரணமில்லாமல் விஸ்வகீர்த்தியைப் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்று சொன்னார். அதில் பாண்டியனுக்கு நம்பிக்கையில்லை. புத்திசாலிகளும், விருப்பு வெறுப்பு இல்லாமல் கூர்ந்து கவனித்து அலசினால் தான் எந்த உண்மையையும் புரிந்து கொள்ள முடியும். நம்பி விட்டுக் கவனித்தால், நல்லது மட்டுமே அவர்களுக்கும் தெரியும்.

 

தன் அளவு பாண்டியன் நம்பிக்கையோடு இருக்காதது பிரம்மானந்தாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது.    ”ஏன் பாண்டியன் சந்தேகப்படுகிறாய்?”

 

“எல்லாத்துக்கும் தயாராய் இருக்கறது தான் சரி யோகிஜி” என்று சொன்ன பாண்டியன் தனதறைக்குச் சென்று விட்டார். யோசிக்க அவருக்குத் தனிமை தேவைப்பட்டது. நிறைய யோசித்தார். நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பலவற்றுடன், அவரால் இறந்தவர்கள் நினைவுக்கு வந்தார்கள். யார் வம்புக்கும் அவராகப் போனதில்லை. வம்புக்கு வந்தவர்களுக்கு அவர் தயவு தாட்சணியமும் காட்டியதில்லை. அது தவறென்று இப்போதும் தோன்றவில்லை.  சைத்ராவை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்போதைய நிலைமைக்குக் கூட அவள் தான் மூலகாரணம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. “என்னை மாதிரி நீயும் மரணத்துக்குக் காத்துகிட்டிருக்கற நாள் வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லை.” என்று அவள் ஆணித்தரமாய் சொன்ன போது அவர் ஏளனமாய் சிரித்தார். அறிவாளியான அவருக்கு, அவள் சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பிருப்பது போல அப்போது தெரியவில்லை.

 

ஆனால் வாழ்க்கை மிக விசித்திரமானது. அது சிறிதும் எதிர்பார்க்க முடியாத சூழல்களையும் கண நேரத்தில் உருவாக்கி விடக்கூடியது. அந்த சமயங்களில் ஒருவன் சேர்த்த செல்வமும், பெற்றிருக்கும் பேரறிவும்,  இருக்கின்ற உயர்ந்த நிலைமையும் கூட அவனுக்கு உதவாமல் போய் விடலாம். அதை இந்தக் கணத்தில் அவர் உணர்கிறார். அவரிடம் எல்லாம் இருக்கிறது. எதற்கும் குறைவில்லை. நள்ளிரவு வரை எதை வேண்டுமானாலும் செய்ய அவருக்கு அவகாசம் இருக்கிறது. ஆனாலும் அவரால் திருப்திகரமாய் ஒன்றும் செய்ய முடியவில்லை. உண்மை நிலவரம் என்னவென்று அவருக்கு, முந்தைய மண்டல காலம் முடியக்கூடிய இன்றைய நள்ளிரவில் தான் தெரியும். புதிய தாயத்து வேலை செய்யா விட்டாலும் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியும் என்றாலும், அந்தச் சில நாட்களுக்குள் அவர் நிலைமை சரிசெய்ய முடியாத நிலைமைக்குப் போயிருக்கும். அவர் சுகுமாரன் நிலைமையையே உதாரணமாய் பார்த்திருக்கிறார்…. அப்படியொரு நிலைமை வந்தால் அவர் உயிர் வாழ விரும்பவில்லை.

 

அவர் இறந்து விட்டால் பிரம்மானந்தாவைத் தவிர அதிகமாய் வருத்தப்படுபவர்கள் யாருமில்லை… அதனால் பிரம்மானந்தாவிடம் போய் தன் முடிவைச் சொல்லி விடைபெற்று வர வேண்டும் என்று ஆரம்பத்தில் பாண்டியனுக்குத் தோன்றியது. ஆனால் பிரம்மானந்தா கசப்பான நிஜங்களை ஏற்றுக் கொள்ள முடிந்தவர் அல்ல. அதிகமாக கற்பனைகளில் வாழ்பவர் அவர். வருத்தமானாலும், புரிதலோடு விடைகொடுப்பதற்குப் பதிலாக, முடிவை மாற்றிக் கொள்ள வைக்க அவர் மன்றாடலாம். ஒருவேளை, நள்ளிரவு வரை உள்ள காலம், பாண்டியனின் கடைசி காலமாக இருந்தால் அதில் துக்கம், புலம்பல், வேதனையை பிரம்மானந்தாவுடன் இருந்து நிரப்பிக்கொள்ள பாண்டியன் விரும்பவில்லை.

 

திடீரென்று அந்த நிஜ யோகியின் நினைவு வந்தது. பணமோ, வாழ்க்கை சௌகரியங்களோ இல்லா விட்டாலும் ஒவ்வொரு கணமும் மலர்ச்சியோடும் நிறைவோடும் அந்தக் கிழவர் வாழ்வது நினைவுக்கு வந்தது. கணக்கெடுத்தால் அது போன்ற நிறைவான கணங்கள் தன் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். பெரிதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேறு யோசனைக்கு கவனத்தைத் திருப்புகையில் ஷ்ரவன் அவர் நினைவுக்கு வந்தான். அவரையே ஏமாற்றிய வெகுசிலரில் அவனும் ஒருவன்… இன்னொரு நபர் இங்குள்ள கருப்பு ஆடு. அனேகமாக அந்தக் கருப்பு ஆடு கல்பனானந்தாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியும் உயிரோடிருந்தால் முதல் வேலையாக அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அப்படி உயிரோடிருக்கா விட்டால் அவர்களை இப்போது நினைப்பதே வீண் தான்.

 

பீரோவில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து தன் இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார். ஒரு காகிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை இப்படி எழுதினார். “என் நிர்வாகத்தின் கீழ் யோகாலயத்தில் தவறுகள் நடந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குற்றவாளிகள் பிடிபட்டாலும், என் கவனக்குறைவின் காரணமாக யோகாலயத்திற்குக் கிடைத்திருக்கும் அவப்பெயர் என்னை வேதனைப் படுத்துகிறது. தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் எந்த விதத்திலும் காரணமல்ல. யோகிஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று எழுதிக் கையெழுத்திட்டார். இனி தேவையில்லாத விசாரணையோ, கேள்விகளோ, தேடலோ இங்கிருக்காது. காகிதத்தை மடித்து டைரியில் வெளியே தெரிகிற மாதிரி சொருகி வைத்து விட்டு, அவர் கடிகார முள்ளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 

பழைய தாயத்து அணிந்ததிலிருந்தான  மண்டல காலம் முடிந்த பிறகு அவர் ஜன்னல் வழியே பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் வாசலில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் தெரிந்தது. புதிய தாயத்து வேலை செய்யவில்லை என்பது தெரிந்து விட்டது. அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.  துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொண்டார்.


(தொடரும்)

என்.கணேசன்

Monday, June 22, 2026

யோகி 161

ஷ்ரவன் சொன்னதைக் கேட்டு தேவானந்தகிரி சற்று தைரியம் அடைந்தார். கத்த முற்படாமல், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்க அவர் தீர்மானித்தார். ஷ்ரவன் சுருக்கமாக சைத்ரா கொலை வழக்கைப் பற்றிச் சொன்னான். வாசுதேவன் கொலை, கிருஷ்ணசாமி தற்கொலை பற்றி எல்லாம் சொல்லி விட்டு விசாரணைக்கு அவனை அரசு நியமித்ததாய் சொன்னான். விசாரணையில் முதல்வரின் பங்கை அவன் சொல்லவில்லை. அதே போல் பரசுராமன் பெயரைச் சொல்லாமல் அவனுக்குத் தெரிந்த ஒரு சுவாமிஜி மாந்திரீகத்தில் பூஜை செய்து ஏவல் சக்திகளை ஏவி விட்டதைச் சொன்னான். அதன் பின் அவன் அங்கு துறவியாய் சென்று கண்டுபிடித்ததையும், அந்தக் கொலையைக் கூட அவர்கள் அடியாட்களின் மேல் போட்டு தப்பித்து, குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருப்பதையும் சுருக்கமாகச் சொன்னான்.

 

முடிவில் ஷ்ரவன் சொன்னான். “ஏவல்சக்தி அனுப்பி எனக்கு உதவி செஞ்ச சுவாமிஜி நல்லவங்க பாதிக்கக்கூடாதுங்கறதுல மட்டுமில்லாமல். கெட்டவங்களும் செஞ்ச தவறுக்குத் தகுந்த தண்டனையை மீறி அனுபவிச்சுடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப கவனமாய் இருந்தார் சுவாமிஜி. தப்பான கர்மா தன் கணக்குல வந்துடக்கூடாதுன்னு சொல்வார். இப்ப இந்தக் கொலைகாரங்க லட்சக் கணக்குல தர்றாங்கன்னு அவங்களுக்குப் பாதுகாப்பு தர்ற வேலைகளைச் செய்ய நீங்க போறீங்க. உங்க பேங்க் அக்கவுண்ட்ல வர்ற பணத்தை மட்டும் பாக்கறீங்க. உங்க கர்மா அக்கவுண்ட்ல சேர்றதைப் பத்தி நீங்க ஏன் சுவாமிஜி யோசிக்க மாட்டேங்கறீங்க? நீங்க காப்பாத்தற ஆள்கள் இனியும் எத்தனையோ தப்புகளைச் செய்வாங்க. இதுவரைக்கும் நீங்க செஞ்சதை, அவங்க தப்பானவங்கன்னு தெரியாமல் செஞ்சதாய் எடுத்துக்கலாம். ஆனால் அயோக்கியங்க, கொலைகாரங்க, படுபாவிங்கன்னு தெரிஞ்சதுக்கப்பறமா கூட நீங்க அவங்களுக்கு உதவினா உங்க பாவக்கணக்குல அதெல்லாம் வரவு ஆயிடாதா?”

 

அவன் சொல்லச் சொல்ல தேவானந்தகிரியின் பேத்தி நொண்டி விளையாடிக் கொண்டே அவர்களைக் கடந்து போனாள். ஷ்ரவன் சொன்னான். “நீங்க குடும்பஸ்தர். இவங்களுக்கெல்லாம் பணத்தோட சேர்ந்து பாவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஆயிடாதா? எங்க சுவாமிஜி மாதிரி நீங்களும் நிறைய தெரிஞ்சவர். உண்மையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன். இனி முடிவு எடுக்கறது உங்க கைல. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இனி எங்க பக்கத்துல இருந்து சின்ன அசௌகரியம் கூட உங்களுக்கு வராது.”

 

தேவானந்தகிரி சிலை போல் அமர்ந்திருந்தார். ஷ்ரவன் பரசுராமனின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவனுக்கு உதவியது பரசுராமன் தான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. யோகாலயத்தில் செய்த பூஜைகளின் போதே அந்த அளவு ஏவல்சக்தியை பரசுராமனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஷ்ரவன் சொன்ன குற்றங்கள் அவரை அதிர வைத்தன. மூன்று கொலைகளைச் செய்த பின்னும் குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், திமிர் அடங்காமல். அலட்சியமாய்  இருந்த குற்றவாளிகள் பக்கம் இது  வரை நின்றதே அவரைக் கூச வைத்தது. இந்த இளைஞன் சொல்வது போல இதுவரை செய்தது அறியாமையால் என்ற கணக்கில் சேர்த்தலாம். ஆனால் இனியும் அவர்களுக்கு உதவுவது இவன் சொல்வது போல பாவக்கணக்கிலேயே அல்லவா சேரும்? குடும்பத்திற்குப் பணத்தைச் சேர்த்து வைத்துப் போகா விட்டாலும் பாவத்தைச் சேர்த்து வைத்து விட்டுப் போவது, குடும்பத்திற்குச் செய்யும் துரோகம் என்ற உண்மையும் அவரைச் சுட்டது.

 

அவர் பரிதாபமாகச் சொன்னார்.  “யோகாலயம் பத்தின புகார்கள் வந்து அங்கே முன்னாடி கூட்டம் கூடினப்ப நானே விலகணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்பறம் அவங்களே தோண்டிப் பார்க்கச் சொன்ன பிறகு அது எனக்கு நியாயமான அணுகுமுறையாய் தோணுச்சு. ஆள்கள் கைதானவுடனே, வேலைக்காரங்க செய்யற தப்புக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்கன்னு நினைச்சுட்டேன். நான் அவங்க கிட்ட பணம் வாங்கியாச்சு. வர்ற வியாழக்கிழமை வர்றதாய் வாக்கும் கொடுத்துட்டேன். இனி போகலைன்னா அந்த அயோக்கியங்க என்னை சும்மா விடுவாங்கன்னு எனக்குத் தோணலை…. என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

 

ஷ்ரவன் சொன்னான்.

 

பாண்டியன் ஷ்ரவன் யாரென்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவனைக் கைது செய்ய வந்த ஹைத்ராபாத் போலீஸாரின் புகைப்படங்களை தெலுங்கானா போலீஸில் உள்ள, பிரம்மானந்தாவின் பக்தர் ஒருவருக்கு அனுப்பி அவர்கள் பெயர்களைக் கேட்டார். இவர்கள் எங்கள் போலீஸ் அதிகாரிகளே இல்லை என்ற பதில் உடனடியாக வந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு அத்தகவலை பாண்டியன் அனுப்பி வைத்தார். அசிஸ்டெண்ட் கமிஷனர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார். போலீஸையே அவர்கள் ஏமாற்றியிருப்பது அவருக்குப் பொறுக்கவில்லை என்பதைத் தெரிவித்த அவர், யோகாலயாவும் ஒரு மோசடி புகார் மனு தந்தால் விசாரணைக்கு இன்னும் அழுத்தம் கிடைக்கும் என்றும் சொன்னார்.

 

அதை சனிக்கிழமை அனுப்பி வைப்பதாக பாண்டியன் அவருக்கு உறுதியளித்தார். வெள்ளியோடு அவர் தாயத்தின் சக்தி முடிகிறது. முன்னெச்சரிக்கையாக ஒரு நாள் முன்பே மாற்று தாயத்துக்கு அவர் ஏற்பாடு செய்து விட்டார். வியாழன் அன்று தேவானந்தகிரி வருகிறார். வியாழன் இரவே பூஜை முடிந்து தாயத்தும் போட்டுக் கொண்டால் பின் நிம்மதியாக அடுத்த மண்டலம் முடியும் வரை அவர் செயல்படலாம். அதற்குள் ஷ்ரவனையும், அவர்களுடைய முக்கிய எதிரியையும் பற்றி எல்லாவற்றையும் கண்டுபிடித்து தண்டித்து அழித்து விட்டால் பின் பழையபடி நிம்மதியாக இருக்கலாம். அதனால் பூஜை முடிந்து தேவானந்தகிரி திரும்பப் போகும் வரை மற்ற வேலைகளை நிறுத்தி வைக்க பாண்டியன் தீர்மானித்திருந்தார். சுகுமாரனின் நிலைமை அவரை மிகவும் பயமுறுத்தி விட்டது.

 

நேற்று சுகுமாரனைப் பார்க்க அவர் சென்றிருந்தார். சுகுமாரன் இரண்டு நிமிடங்கள் அவரிடம் இயல்பாய் பேசினார். ஆனால் மூன்றாவது நிமிடம் மண்டை ஓட்டு பீதி சுகுமாரனை ஆட்கொண்டது. இடையிடையே வயிற்று வலியாலும் அவர் துடித்தார். குடிகாரன் கல்லெடுத்து எறிந்த காயங்கள் ஆறி விட்டன. ஆனால் பீதியும், வயிற்று வலியும் அவரைச் சித்திரவதை செய்வதை பாண்டியன் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அந்த ஒரு நிலைமை தனக்கு வருவதை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை.

 

செவ்வாய்க்கிழமை அன்று பாண்டியன் தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். அலைபேசியை தேவானந்தகிரியின் சீடன் ஒருவன் தான் எடுத்தான். “சுவாமிஜி ஆஸ்பத்திரியில் இருக்கார். காலைல தான் போய் சேர்ந்தார்.” என்றான்.

 

“என்ன ஆச்சு?” பாண்டியன் சந்தேகத்தோடு கேட்டார்.

 

”வலது கால் கட்டை விரல்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி காயமாயிருந்துச்சு. குணமாயிட்டு வந்துகிட்டும் இருந்துச்சு. நேத்து ராத்திரியில் இருந்து அவருக்கு வலி ஜாஸ்தியாயிடுச்சு…”

 

அவன் சொன்னதில் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். உடனடியாக கண்ணனையும், கூட இரண்டு தடியர்களையும் காசர்கோடு அனுப்பி வைத்தார். ”உண்மையான்னு பாருங்க. பொய்யின்னா பேசாம அந்த ஆளைத் தூக்கிட்டு வந்துடுங்க.”

 

உடனடியாக விமானத்தில் சென்ற அவர்கள் காசர்கோடு போய் அவரை அழைத்தார்கள்.  ”ஆள் ஆஸ்பத்திரியில் தான் இருக்கார். அந்தக் காயம் செப்டிக் ஆயிருக்காம். விரலே எடுக்க வேண்டிய நிலைமைன்னு டாக்டர் சொல்றாங்களாம். பெருசா மாவுக்கட்டு போட்டுருக்காங்க.”

 

“நீங்க அவர் கிட்ட பேசினீங்களா?”

 

“பேசினோம். அவர் வருத்தம் தெரிவிச்சார். பத்து லட்சத்தை திருப்பி அனுப்பறாராம்.”

 

சொன்னது போல் பத்து லட்சம் ரூபாய் பாண்டியனுக்குத் திரும்பி வந்தது. பாண்டியன் நிலைமை பூதாகரமாய் வளர்வதை உணர்ந்து உடனடியாக பிரம்மானந்தாவிடம் பேசினார். நிலைமையைச் சொன்னார். “தேவானந்தகிரி மாதிரி வேற யாரையாவது நாம கண்டுபிடிச்சு சீக்கிரம் வரவழைக்கணும் யோகிஜி.”

 

தேவானந்தகிரிக்கு இணையாக இன்னொரு மாந்திரீக விற்பன்னரை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை விட மேலான நிலையில் இருக்கும் பரசுராமன் ‘நமக்கு ஆகாத நபர்’ என்று பிரம்மானந்தா சொன்னாலும் அவரை வரவழைக்க பாண்டியன் தயாராய் இருந்தார். விஷயமுள்ளவன், வெற்றுவேட்டு இந்த இரண்டு ரகம் தான் அவர் கணக்கில் இருக்கிறார்கள். விஷயமுள்ளவனுக்கு எத்தனை தரவும் அவர் தயார். விஷயமுள்ளவனை அவர் ’ஆகாத நபராய்’ நினைப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் வெளிநாட்டில் இருக்கும் பரசுராமன் இந்தியா திரும்பி வரவே இரண்டு மாதங்கள் ஆகும் என்ற தகவல் கிடைத்தது.

 

பிரம்மானந்தா தனக்கு நெருக்கமான ஆட்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவில் இரண்டு மந்திரவாதிகளை ‘இருப்பவர்களில் பரவாயில்லை’ என்ற ரகமாகக் கண்டுபிடித்தார். ஒருவர் நாகப்பட்டிணத்து ஆசாமி. இன்னொருவர் ஹரித்வாரில் இருப்பவர்.  இருவரில் யார் மேல் என்று மறுபடியும் பலரிடமும் விசாரித்து ஹரித்வாரில் இருக்கும் மந்திரவாதி விஸ்வகீர்த்தி என்பவரை அவர்கள்  தேர்ந்தெடுத்தார்கள்.   


(தொடரும்)

என்.கணேசன்

 

புதிய நாவல் ச(க்)தி!