என்னுடைய நூல்களைப் பெற பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்....

Monday, August 14, 2017

பக்தியா, ஞானமா?
லக்கிற்குப் பல வழிகள் இருக்கையில் எந்த வழி சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து அந்த வழியிலேயே செல்லலாமே என்கிற எண்ணம் அறிவுள்ள மனிதனுக்கு ஏற்படுவது இயற்கை. அர்ஜுனனுக்கும் அந்த எண்ணம் வந்தது. அவனை ஈர்த்த வழிகளான பக்தி, ஞானம் என்ற இரண்டு வழிகளில் எந்த வழி சிறந்தது, எந்த வழி ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்தது என்பதை அறிய விரும்பிய அவன் பகவத் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயமான பக்தி யோகத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கிறான்.

எப்பொழுதும் உன் மீது பக்தி கொண்டு உன்னையே வழிபடுபவர்கள் யோகத்தில் சிறந்தவர்களா? உருவமும், அழிவும் அற்ற பிரம்மத்தை வழிபடுபவர்கள் யோகத்தில் சிறந்தவர்களா? இருவகையினரில் யார் யோகத்தில் சிறந்தவர்கள்?

இந்தக் கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

என்னிடத்தில் மனதை ஒருமைப்படுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் எப்போதும் என்னையே வழிபட்டிருப்பவர்களே யோகிகளில் சிறந்தவர்கள் எனக் கருதுகிறேன்.

இரண்டுமே சிறந்த வழிகள் தான் என்றாலும் கூடத் தீர்மானமாக ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டது பகவானுக்குத் தர்மசங்கடமான கேள்வி என்று வினோபா கூறுகிறார். தாயிற்கு இரண்டு பிள்ளைகளும் இரு கண்களைப் போல இணையாக முக்கியமானவை. ஆனால் ஒரே ஒருவரைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் தன்னை விட்டு இருக்க முடிந்த பெரிய பிள்ளையை விட, தன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாத இளைய பிள்ளையைத் தான் சொல்வாள் அல்லவா? அதே போலத் தான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தியைச் சொல்வதாகக் கூறுகிறார்.

தன்னை வணங்குபவனே மேலானவன் என்று சொல்வது பகவானே ஆனாலும் அது ’ஈகோ’ எனப்படும் ‘நான்’ என்ற அகம்பாவம் சார்ந்த பதில் அல்லவா என்று சந்தேகப்பட்டால் அது முற்றிலும் தவறு என்றோ அடிப்படைக் காரணம் இல்லாதது என்றோ சொல்ல முடியாதல்லவா? அந்தச் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்தப் பதிலுக்கான காரணங்களை அடுத்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ஆனால் அழிவில்லாததும், குறிப்பற்றதும், வெளிப்படையாகத் தெரியாததும், எங்கும் பரவியிருப்பதும், நினைத்துப் பார்க்க முடியாததும், எல்லோருக்கும் பொதுவானதும், அசையாததும், நிலையானதுமான பரம்பொருளை யார் வணங்குகிறார்களோ, எவர்கள் புலன்களை அடக்கி, எல்லோரிடமும் சமநோக்குடையவர்களாய் , எல்லா உயிர்களின் நன்மைகளையும் கவனத்தில் கொண்டு இயங்குகிறார்களோ அவர்கள் என்னையே அடைகிறார்கள்.

ஆனால் உருவமில்லாத பிரம்மத்தை வழிபடுவதில் அதிக சிரமம் உண்டு. உடலில் பற்றுடையவர்களால் உருவமற்ற பரம்பொருள் பற்றிய எண்ணமாவது மிகுந்த சிரமத்துடனேயே உண்டாகிறது.

பரம்பொருள் அழிவில்லாதது, உருவமற்றது, புலன்களால் அறிய முடியாதது, எங்கும் பரவியிருந்தாலும் எண்ணத்தில் அடங்காதது, அனைவருக்கும் பொதுவானது (அதனால் தனிப்பட்ட உரிமையை யாரும் பரம்பொருளிடம் கொண்டாட முடியாது), நிலைத்திருப்பது, மாறாதது. இந்த விசேஷ குணாதிசயங்கள் அனைத்துமே சராசரி மனிதன் பற்றிக் கொள்ள முடியாதவை. உடல் சார்ந்து வாழும் மனிதனுக்கு இவற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாததால் வழிபடுவதும் சிரமமாகவே இருக்கும். ஏனென்றால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றை அவனால் எப்படி ஆத்மார்த்தமாய் வழிபட முடியும்? இந்தச் சிக்கல் ஞானத்தில் இருக்கிறது. அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் கூட ஆத்மார்த்தமாய் இந்த ஞான முறையில் வழிபட முடிவது மிகவும் கஷ்டமே.

ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தின் இன்னொரு பக்கத்தையும் சொல்கிறார். ஞானம் என்றால் பக்கம் பக்கமாய் தத்துவங்களைப் படித்துச் சொல்வது அல்ல. அதிலிருந்தும் இதிலிருந்தும் உதாரணம் சொல்வதும் அல்ல. உதாரணமாக வாழ்வது தான் ஞானம். ஞானியாக இருப்பவன் எப்படி வாழக்கூடியவன் என்பதையும் கூடவே ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பது சிறப்பு.

மூன்று மிக முக்கியமான அம்சங்களை ஞானத்தின் வெளிப்பாடாக இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அவை புலனடக்கம், சமநோக்கு, அனைத்துயிர்களின் நன்மை. மூன்றுமே சுலபமானவை அல்ல.

புலன்கள் எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றினாலும் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று தறிகெட்டு ஓடக்கூடும் என்பதே யதார்த்தம். அவற்றை சதா சர்வகாலம் அடக்கி வைக்க வேண்டுமென்றால் அதன் வழியாக வரும் கவர்ச்சிகள் சிறு சலனத்தையும் ஏற்படுத்த முடியாத உயரத்தை ஒருவன் எட்டியிருக்க வேண்டும்.

சமநோக்கும் எளிதில் வசப்படுகிற தன்மை அல்ல. அதே போல அனைத்துயிர்களின் நன்மையும் கருத்தில் கொண்டே இயங்குவது எல்லா நேரங்களிலும் ஒருவரால் கடைபிடிக்க முடிந்த தன்மை அல்ல. அனைத்தையுமே பரம்பொருளாகவும், பரம்பொருளின் அம்சங்களாகவும் காண முடிகிற போதே சமநோக்கும், அனைத்து உயிர்களின் நன்மைகளையும் கருத்தில் கொள்வது சாத்தியப்படும். ’நான்’ என்கிற அகம்பாவம் முழுமையாகக் களையப்பட்டால் ஒழிய இரண்டுமே சாத்தியம் இல்லை.

இப்படிப்பட்ட ஞானம் வருவதும் ஞான முறையிலேயே வாழ்வதும் எத்தனை பேருக்குச் சாத்தியம்? இந்தக் காரணங்களாலேயே இந்த ஞானத்தை விட பக்தி சுலபமானதும், சிறந்ததுமாக ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.

பக்தியில் பிடித்து நிலைத்து நிற்க உறுதியான இறைவன் உண்டு. மனம் லயிக்க அழகான உருவம் உண்டு. பெருமையாக நினைக்க ஆயிரம் அருமையான குணங்கள் உண்டு. காப்பாற்றுவான் என்ற பூரண நம்பிக்கை உண்டு. உடன் அவன் இருக்கிறான் என்ற அசைக்க முடியாத தைரியம் உண்டு. காதலால் கசிந்துருகி கண நேரமும் மறக்க முடியாத  உன்மத்த நிலை உண்டு. அதனால் பக்தி வழியில் ஆயிரம் வகைகளில் அவன் இறைவனை வழிபடுவான். இதனால் எளியவனுக்கும் பக்தி கைகூடும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அழகானதொரு சுலோகம் உண்டு. “பசுவிடம் பால் கறக்கும் போதும், தானியங்களை உரலில் குத்தும் போதும், தயிர் கடையும் போதும், வீடு மெழுகும் போதும், குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போதும், அழும் குழந்தையைத் தாலாட்டும் போதும், வீடு பெருக்கும் போதும்,  தண்ணீர் தெளிக்கும் போதும், பிற காரியங்களைச் செய்யும் போதும், அன்பு நிறைந்த உள்ளத்தோடு கண்களில் நீர் பெருகத் தழுதழுத்த குரலில் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிப் பரவசம் கொண்டு, எப்பொழுதும் ஸ்ரீகிருஷ்ணனிடம் லயித்தவர்களான அந்த விரஜப் பெண்மணிகள் பெரும்பேறு பெற்றவர்கள்.”

இப்படி எளிய வாழ்க்கையில் அடைந்து கிடக்கும் வீட்டுப் பெண்மணிகளுக்கும் கூட பக்தி மூலம் இறைவனிடம் மனதை நிறுத்துவது சுலபமாக இருக்கிறது. இப்படி வாழ்க்கையே இறைவன் மயமானால் அவனையே அடைவதும் முடிவான நிலையாக ஆகி விடுகிறது.

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். ஞானத்தின் மூலமாக அடையும் பரம்பொருளான பிரம்மமும் ஸ்ரீகிருஷ்ணரும் வேறல்ல. அதனால் தான் ஞான வழியை விளக்கிக் கொண்டு வந்த சுலோகத்தில் கூட அவர்கள் முடிவில் என்னையே அடைகிறார்கள் என்று கூறுகிறார்.

பாதை நீளும்….

என்.கணேசன்


Thursday, August 10, 2017

இருவேறு உலகம் – 42


கேட்டது குரல் அல்ல. காதிலும் விழுந்ததல்ல. மனதில் நேரடியாக இடைமறித்த வாசகம் அது.  உடனே நினைவு வந்தது. வேற்றுக்கிரகவாசி. அது நினைவுக்கு வந்தவுடன் அதனைத் தொடர்ந்து கடைசியாய் அமாவாசை இரவு நடந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன. அந்தப் பெரிய கரும்பறவை மலையை வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவன் டெலஸ்கோப்பில் அந்தப் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தப் பறவை மலையுச்சிக்கு இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாய் அவன் உணர்ந்தது வலதுகால் பெருவிரலில் சுளீர் என்ற வலியை. அடுத்த கணம் நினைவிழந்திருந்தான்... என்ன தான் நடந்தது?...

இப்போது இருப்பது அமேசான் காடுகளில் என்று வேற்றுக்கிரகவாசி சொல்கிறானே, விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை நிஜமாய் தான் சொல்கிறானா என்று யோசித்தவனாய் தன் புலன்களைக் கூர்மையாக்கினான்.  குளிரை உணர்ந்தான். தாவரங்களின் மணத்தைத் துல்லியமாக மூக்கு உணர்ந்தது. சிறு பூச்சிகள் எழுப்பிய வித்தியாசமான ஒலிகள் காதுகளை நிறைத்தது. இது அமாசான் காடுகளாகவே இருக்க வேண்டும். பார்வைக்கு மட்டும் இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. இரவு வேளை போலிருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டான்.

இந்த இடத்தில் இரவு பகலுக்குப் பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று தான். சூரிய ஒளி இங்கு ஊடுருவுவதில்லை....வேற்றுக்கிரகவாசி தெரிவித்தான்.

க்ரிஷுக்கு அமேசான் காடுகளின் பல பகுதிகளில் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. அந்த அளவு மிக நெருக்கமான மரங்கள், மற்றும் தாவர வகைகள் என்பது நினைவுக்கு வந்தது.

“இங்கே எப்படி வந்தோம்?க்ரிஷ் கேட்டான்.

“நான் தான் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்....

“ஏன்?

உன் உடம்பில் ஏறிய கடுமையான விஷத்தை இறக்க இங்கு ஒரு சக்தி வாய்ந்த மூலிகை இருக்கிறது. அதை உடனடியாக உன் உடம்பில் ஏற்றியிருக்கா விட்டால் நீ உயிர்பிழைத்திருக்க முடியாது

காலின் கட்டைவிரலில் கடித்தது கடுமையான விஷமுள்ள பாம்பு என்பது க்ரிஷுக்கு இப்போது தான் தெரிந்தது. வேற்றுக்கிரகவாசி தன்னைக் காப்பாற்றியிருக்கிறான் என்று புரிந்தவுடன் மனம் நெகிழ்ந்து சொன்னான். “தேங்க்ஸ்”.

கூடவே க்ரிஷுக்கு சந்தேகம் வந்தது. சென்னையில் பாம்பு கடித்ததற்கு மூலிகை பயன்படுத்த உடனடியாக அமேசான் காடுகளுக்கு எப்படி வர முடியும். அமேசான் காடுகளுக்கு வர எத்தனை நேரமானது?

இரண்டு நிமிடங்கள்

க்ரிஷ் திகைத்தான். சென்னையிலிருந்து அமேசான் காடுகள் சுமார் 15800 கிலோமீட்டர் இருக்குமே, இரண்டு நிமிடத்தில் இந்தத் தொலைவை எப்படிக் கடந்திருக்க முடியும்…

இதிலென்ன ஆச்சரியம். வினாடிக்கு 132 கிலோமீட்டர் தூரம் எல்லாம் எங்களுக்குப் பெரிய விஷயமல்ல

இவனுக்கு எதுவுமே பெரிய விஷயமில்லைஎன்று க்ரிஷ் நினைத்தான். ஆரம்பச் சந்திப்பிலிருந்து இப்போதைய கணம் வரை எத்தனை எத்தனையோ பிரமிப்புகளை இவன் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் எல்லாவற்றையும் சாதாரணமானதாகவே காட்டியிருக்கிறான். எதற்குமே க்ரிஷ் விளக்கம் கேட்காமல் இருந்ததில்லை. தெரிந்து கொள்ள ஒன்று இருந்து அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவனுக்கு இருப்பு கொள்ளாது என்பதால் ஏராளமான கேள்விகள் க்ரிஷ் கேட்டிருக்கிறான். சிலவற்றை வேற்றுக்கிரகவாசிக்கு ஒரு மானுடனுக்கு விளங்குமாறு விளக்க முடிந்ததில்லை. ஆனாலும் பொறுமையாக முடிந்த வரை விளக்கி இருக்கிறான்.

“வேகமாகப் பயணிக்க முடியாவிட்டால் நாங்கள் வேற்றுக்கிரகங்களுக்கு எப்படிப் பயணம் செய்து விட்டுத் திரும்ப முடியும்? யோசித்துப் பார். என்றான்.

அவன் சொல்வதும் உண்மை தான் என்று தோன்றியது. மனிதர்களால் போக முடிந்த வேகத்திலேயே அவன் செல்ல முடிந்தவனாக இருந்திருந்தால் இந்தப் பூமிக்கு வந்து சேர்வதற்கே அவன் வாழ்நாள் போதுமானதாக இருந்திருக்காது. பறவை வடிவத்தில் வந்த வேற்றுக்கிரகவாசி என்னை எப்படித் தூக்கிக் கொண்டு வந்திருப்பான் என்ற சந்தேகம் க்ரிஷுக்கு வந்தது.

அணிமாஎன்ற பதில் வேற்றுக்கிரகவாசியிடமிருந்து வந்தது.    

உடனடியாக க்ரிஷுக்கு விளங்கவில்லை. “என்னது?

“உங்கள் சித்தர்கள் அறிந்த அஷ்டமகாசித்திகளில் முதல் சக்தி... எதையும் அணு அளவுக்குச் சிறிதாக்க முடிவது. என்னையும் அப்படி ஆக்கிக் கொண்டேன். உன்னையும் அப்படி ஆக்கி விட்டேன். அப்படித்தான் உன்னை சுமந்து கொண்டு இங்கு வரை வந்தேன்.....

அவன் பெருமூச்சு விட்டான். எத்தனையோ சக்திகள் கடலளவு சூழ்ந்திருக்க, அந்தக் கடலின் சக்திகளையும், அதன் ஆழத்தையும் உணராமலேயே கரையில் அலைகளில் விளையாடிக் கொண்டிருப்பது போல அல்லவா நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

நேற்று இங்கே வந்தோமா?க்ரிஷ் கேட்டான்.

“இங்கே வந்து ஆறு நாட்களாகின்றன. நீ ஆறு நாட்களாய் மயக்கமாய் இருக்கிறாய்...”

’ஆறு நாட்களா?க்ரிஷ் கவலையில் ஆழ்ந்தான். வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பார்களே!

வேற்றுக்கிரகவாசி தெரிவித்தான். “உன் அண்ணன் மொபைலுக்கு நீ நலமாய் இருப்பதாக நீயே அனுப்புவது போல் தகவல் தெரிவித்து விட்டேன்.....  

இவனுக்கு நிறையவே தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக க்ரிஷுக்குத் தோன்றியது. அவன் உயிரைக் காப்பாற்றியதற்கு மட்டுமல்ல, முதல் சந்திப்பு முதல் இன்று வரை காட்டிய அக்கறைக்கும், அன்புக்கும் நன்றியை வாய்விட்டுத் தெரிவிப்பது கூட சம்பிரதாயமாய் இருந்து விடுமோ என்று க்ரிஷ் அதைத் தெரிவிக்காமல் இருந்தான்.  

க்ரிஷ்

“என்ன?

“உனக்கு இன்னும் நிறைய ஆபத்து காத்திருக்கிறதுவேற்றுக்கிரகவாசி மிகுந்த அக்கறையுடன் சொன்னான்.

“இப்போது ஒரு ஆபத்தில் இருந்து நான் தப்பி விடவில்லையா? நீ இருக்கிற வரை நான் பயப்பட என்ன இருக்கிறது?

“நான் சீக்கிரமே போய் விடுவேன். இனி நீ தனியாகவே எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும். நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் உன் எதிரியைச் சந்தித்து விடவில்லை....  


தாசிவ நம்பூதிரிக்கு அந்த இருட்டில் அதிக நேரம் நிற்க முடியவில்லை. அவரை இரண்டு விழிகள் துளைத்து விடுவது போல் இருட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவர் தொடர்ந்து உணர்ந்தார். தன்னிடம் இருக்கும் இரண்டு ஜாதகங்களுக்கும் இப்போது தன்னைக் கவனிப்பவனுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்கிற எண்ணம் மேலும் வலுவடைந்த போது மூளையில் ஏதோ ஒரு பொறி தட்டியது.... உடனே விறுவிறுவென்று உள்ளே வந்தவர் நேரத்தைப் பார்த்தார். மணி 1.13. இது அல்ல ஆரம்பம். ஆரம்பம் தான் முக்கியம்....

உடனே அவர் ஒரு தாளை எடுத்து 12.46 என்று எழுதினார். ஆரம்பத்தில் அவர் தன்னை யாரோ கவனித்தது போல் தோன்றிய முதல் கணம் அது.  அவர் காலத்தின் குறிப்பை மிகச் சரியாக உணர்ந்தவர். எதுவுமே தன்னுடைய காலம் வராமல் எங்கும் வருவதில்லை. இதில் விதிவிலக்குகள் கிடையாது. எதுவுமே தனக்குரிய காலத்திலேயே வருவதால், அந்தக் காலம் பற்றிய நுணுக்கங்கள் அறிந்தால் அந்தக் காலத்தில் வருபவன் பற்றிய தகவல்களையும் அறிய முடியும்.

உடனடியாகக் கட்டங்கள் போட்டவர் யோசித்து, கணக்குப் போட்டு, மறுபடி யோசித்து உறுதிப்படுத்திக் கொண்டு அந்தக் கட்டங்களில் கிரகங்கள் பெயர்களை எழுத ஆரம்பித்தார். இப்போதும் அவர் போடும் கட்டங்களை உன்னிப்பாக வேறு இரண்டு கண்கள் கவனிப்பது போல உணர்வு தொடர்ந்து அவருக்கு இருந்து கொண்டிருந்தது.   ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை.

மர்ம மனிதன் நின்ற இடத்தில் இருந்தபடியே அவர் போடும் கட்டங்களையும், கணக்குகளையும் தன் சக்தியால் கண்ணாடியில் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். நிமிட முட்கள் நகர நகர சதாசிவப் பணிக்கரின் கணிப்பும் ஒரு வடிவத்தை எட்டிக் கொண்டிருந்தது. மனிதர் கிட்டத்தட்ட அவன் ஜாதகத்தையே  கணித்து விட்டிருந்தார்.

மர்ம மனிதன் கிழவரின் திறமையைக் கண்டு ஒரு கணம் அசந்து போனான். இது போன்ற திறமைகள் அடிக்கடி ஒருவருக்குக் காண முடிவதில்லை. சராசரிகளில் தங்கி அதிலேயே சாதித்து விட்டதாய் திருப்தியடைந்து விடும் மனிதர் கூட்டத்தின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பெருந்திறமைகள் அபூர்வமாய் மின்னுகின்றன. அதைக் காணும் சிரமத்தையும் அந்த சராசரிப் பொதுஜனங்கள் எடுத்துக் கொள்வதில்லை. கண்டும் காணாமலும் தாண்டிப் போய் விடுகிறார்கள்....

மர்ம மனிதன் கிழவரின் ஜோதிடத் திறனுக்கு மனதில் சபாஷ் போட்டான். அதே நேரத்தில் அவனுடன் பல காலம் பழகியும் அவனைப் பற்றி முற்றிலும் அறிந்தவர்கள் யாரும் இல்லாமல் இருக்கையில் ஒரு முறை கூட சந்திக்காமல் இந்தக் கிழவர் இந்த அளவு எட்டியது அவனுக்குள் அபாயச் சங்கை ஊதியது.....

காத்திருக்கும் ஆபத்தை உணராதவராய் சதாசிவ நம்பூதிரி அந்த ஜாதகத்தில் மூழ்கிப் போயிருந்தார்....

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, August 9, 2017

எனது வலைத்தமிழ் வானொலிப் பேட்டியின் காணொளி!

அன்பு வாசகர்களே வணக்கம்!

வாசக அன்பர்கள் கேட்டுக்கொண்டபடி வலைத்தமிழ் வானொலிக்கு நான் அளித்த பேட்டியை காணொளியாக்கி பதிவு செய்துள்ளேன்.

சித்தர்கள் இப்போதும் இருக்கிறார்களா? சந்தித்திருக்கிறீர்களா?
இருவேறு உலகம் நாவலில் சொல்வது போல் எண்ண அலைகள் மூலமாக காட்சியாகக் காண்பது சாத்தியமா?
அமானுஷ்யன் நாவல் எப்படி உருவாயிற்று?
பரமன் ரகசியத்திற்கு முன்பு உத்தேசித்திருந்த முடிவு என்ன?
நீ நான் தாமிரபரணி நாவல் போன்ற காதல் இன்று சாத்தியமா? ஆழ்மனசக்திகளின் தேடல் உங்களுக்கு எப்படி உதித்தது?
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

போன்ற மைதிலி தியாகு அவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு நான் கூறிய பதில்களை நீங்களே இங்கு கேட்டுக் கொள்ளுங்கள்.என்.கணேசன்

Monday, August 7, 2017

முந்தைய சிந்தனைகள் - 19

என் எழுத்துக்களில் இருந்து சில சிந்தனைத்துளிகள்....


என்.கணேசன்

Friday, August 4, 2017

வலைத்தமிழ் வானொலியில் என் பேட்டி!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் வலைத்தமிழ் வானொலியில் என் பேட்டி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒலிபரப்பாகிறது.  பேட்டி எடுத்த சகோதரி மைதிலி தியாகுவின் பல கேள்விகளில்  சில இதோ-

ஆழ்மன சக்திகளின் தேடல் உங்களுக்குள் எப்படி, எப்போது உதித்தது?

இன்றும் சித்தர்கள் இந்த பூவுலகில் வாழ்கிறார்கள் என்று நம்புறீங்களா? ஆம் என்றால் அவர்களை சந்தித்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

பரமன் ரகசியத்தில் பாட்டி, கணபதி, ஈஸ்வர், குரு போன்ற என்னைக் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் நிறைய உண்டு. உங்கள் மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த கதாப்பாத்திரங்கள் எவை ? ஏன்?

 நீ நான் தாமிரபரணி போன்ற வாழ்க்கை இவ்வுலகில் சாத்தியமா? 

 
 இருவேறு உலகில் சொல்லுவது போல் எண்ண அலைகள் மூலம் நடந்தவற்றை ஒன்று விடாமல் காண்பது என்பது நடைமுறையில் சாத்தியமா?

இன்றைய இளைஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து? அத்துடன் அனைவரும் வாழ்நாளில் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்களாக நீங்கள் எதையெல்லாம் கூற விரும்புறீங்க?

இந்தக் கேள்விகளுக்கும் அவரது மற்ற பல கேள்விகளுக்கும் நான் அளித்த பதில்களை இந்தப் பேட்டியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதன் மறு ஒலிபரப்பு ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

http://radio.valaitamil.com/

அன்புடன்
என்.கணேசன்

ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 91ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

4.8.2017 முதல் 15.8.2017 வரை ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 91 ல் என் நூல்கள் அனைத்தும் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அருகில் உள்ள வாசகர்களும், அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் வாசகர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேரம் : தினசரி காலை 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

இடம்: ஈரோடு வ.உ.சி மைதானம் (பஸ் நிலையம் அருகில்)

பதிப்பாளர் அலைபேசி: 9600123146

அன்புடன் 
என்.கணேசன்

Thursday, August 3, 2017

இருவேறு உலகம் – 41ங்கரமணியின் முகத்தில் இருந்த ரத்தம் ஒரேயடியாக வழிந்து போனது. அவர் பேச்சிழந்து செந்தில்நாதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

செந்தில்நாதன் தொடர்ந்து சொன்னார். “....அதான் அங்கே வித்தியாசமா நீங்க எதாவது பார்த்தீங்களான்னு உங்க கிட்ட கேட்டுகிட்டு போலாம்னு வந்தேன்.

சங்கரமணி தன்னை மெள்ள சுதாரித்துக் கொண்டார். “பார்த்தவனுக்குப் பார்வைக்கோளாறு இருந்திருக்கும். யாரையோ பார்த்துட்டு நானுன்னு நினைச்சிருக்கான் பாவம்

மனிதரின் ஆரம்ப அதிர்ச்சியை மனதில் அடிக்கோடிட்ட செந்தில்நாதன் ஒன்றும் சொல்லாமல் அவரையே கூர்ந்து பார்த்தார்.

சங்கரமணி நட்புத் தொனியில் சொன்னார். “முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னால் எல்லாம் வாரம் ரெண்டு நாளாவது செகண்ட் ஷோ போயிடுவேன். அப்படி ஒரு சினிமாப் பைத்தியம். இப்ப எல்லாம் ராத்திரி ஒன்பதரை ஆச்சுன்னா கண்ணு தானா மூடிக்குது. வயசாயிடுச்சுல்லியா.... அதனால நான் ராத்திரி எங்கயும் போறதில்லை

செந்தில்நாதன் அவருடைய மலரும் நினைவுகளில் அக்கறை காட்டவில்லை. யோசனையில் ஆழ்ந்தவர் போலக் காட்டிக் கொண்டு சத்தமாகவே முணுமுணுத்தார். “ நீங்க கார்ல வந்ததாகவும், டிரைவருக்குப் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருந்ததாகவும்  அந்த ஆள் உறுதியா சொன்னாரே

சங்கரமணி முகத்தில் திகில் எட்டிப்பார்த்து மறைந்தது. “சொன்னது யாரு?கோபத்தோடு கேட்டார்.

செந்தில்நாதன் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவரையே சில வினாடிகள் பார்த்து விட்டு எழுந்தார். “சரி சார். பார்க்கலாம்  

சங்கரமணி முடிந்த வரை நிதானத்திற்கு வர முயன்றார். செந்தில்நாதன் அங்கிருந்து  நிதானமாக வெளியேறினார்.

ங்கரமணிக்கு செந்தில்நாதன் போனவுடன் ஒரு கணம் கூட வீட்டில் இருக்க இருப்பு கொள்ளவில்லை. பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட அவர் காரில் ஏறி டிரைவரை உச்சக்கட்ட வேகத்தில் மருமகன் வீட்டுக்குப் போகச் சொன்னார். வந்து சேர்ந்தவுடன் காரிலிருந்து தாவிக்குதித்து வெளிவந்து மாணிக்கத்தின் வீட்டினுள் நுழைந்தவர் செந்தில்நாதன் வந்து போன விவரங்களை மருமகனிடம் படபடப்புடன் தெரிவித்தார்.

மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு மாணிக்கம் சலிப்புடன் சொன்னார். “நீங்க அந்த மலைக்கு வாடகைக்கொலையாளியோட ஏன் போனீங்க. அதனால் தானே இத்தனை பிரச்னையும்?

அதை அப்போதும் ஏற்றுக் கொள்ளாத சங்கரமணி மருமகனிடம் சொன்னார். “நான் போகாம இருந்திருந்தா இன்னும் அதிகமாய் தான் குழப்பம் இருந்திருக்கும். யோசிச்சுப் பார். மலையடிவாரம் வரைக்கும் போன நான்  மலை மேல் போகாததால, மேல என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை. நான் அவன் கூட மலையடிவாரம் வரை கூட போகாம இருந்திருந்தா அவன் அங்கே வரைக்கும் போனான்கிறதுக்குக் கூட நமக்கு ஆதாரம் இருந்திருக்காது.  போகறதுக்கு முன்னாடியே பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டான்னு கூட நினைச்சிருப்போம். உண்டா இல்லையா?... போன இடத்துல என்னை எந்த நாசமா போனவனோ பார்த்திருக்கான்னு செந்தில்நாதன் சொல்றான்.... மலைக்குப் போற தெருவோட ஆரம்பத்துலயே தடுப்பு போட்டிருந்ததால அதைத்தாண்டி வந்து யாரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் திரும்பி வர்றப்ப தடுப்பு தாண்டி வந்த பிறகு யாராவது என்னைப் பார்த்திருக்கலாம். ஆனா அப்படி பக்கத்துல யாரும் பார்த்திருந்தா என் கவனத்துக்கு வராம போயிருக்காது...   என்ன நடந்திருக்கும்னு இந்த விஷயத்துலயும் எனக்கு ஒரு எழவும் புரியல.....

அவர் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்தவராக சிறிது யோசித்து விட்டு மாணிக்கம் சொன்னார். அப்படித் திரும்பி வந்தப்ப தூரத்துல இருந்து யாராவது உங்களை பார்த்திருக்கலாம். அதுவும் நீங்கன்னு தெளிவா சொல்லாம, உங்க முடியை மட்டும் சொல்லியிருக்கலாம். செந்தில்நாதன் ஒரு யூகத்துல வந்து தான் உங்க கிட்ட பேசியிருக்கார்னு நினைக்கிறேன்

மணீஷ் சொன்னான். “இருக்கலாம். தாத்தா முடி எந்த இருட்டுலயும் பளிச்சுன்னு தெரியும்

தலையைக் கோதியபடியே சங்கரமணி யோசித்தார். அவர்கள் இருவரும் சொல்வது சரியென்றே தோன்றியது. “அப்படின்னா அவன்  யூகத்துல தான் வந்து அந்தப் போடு போட்டானா பாவி? அவனை இப்படியே விடறது நமக்கு நல்லதில்லையே!

மாணிக்கம் சொன்னார். “இந்தக் கேஸுக்கு சி எம் நியமிச்ச ஆளு அவரு.  மறந்துடாதீங்க. நாம எச்சரிக்கையா இருக்கறது நல்லது. சந்தேகம்னு வந்துடுச்சுன்னா அந்த ஆள் சும்மா விட மாட்டார். நம்மள கண்காணிச்சுட்டு தான் இருப்பார்.

செந்தில்நாதனால் தொடர்ந்து கண்காணிக்கப்படலாம் என்கிற எண்ணமே சங்கரமணிக்குக் கசந்தது. அவர் மனம் நொந்து போய் பெருமூச்சு விட்டபடி சொன்னார். “இவ்வளவு பிரச்னைய உண்டாக்கிட்டு எங்கிருக்கானோ க்ரிஷ் மகராசன்


தாசிவ நம்பூதிரியின் ஆராய்ச்சி மறுநாள் நள்ளிரவு வரையும் கூட நீண்டது. அவரைச் சுற்றி ஏராளமான தாள்கள், சில பழைய ஜோதிட நூல்கள் கிடந்தன. அவ்வப்போது மாடிக்கு வந்து எட்டிப்பார்த்த அவர் மகன் சங்கர நம்பூதிரிக்கு இரண்டு நாட்கள் அலச இரண்டு ஜாதகங்களில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. அவருக்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஒரு ஜாதகத்தைப் பார்க்க முடிவதில்லை. அப்பா இந்த அளவு ஆழமாய் பார்க்கக்கூடியவர் என்று தெரிந்து தான் அந்த ஆள் நாற்பதாயிரம் ரூபாய் தந்து விட்டுப் போனானோ....

மகன் அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்ததை சதாசிவ நம்பூதிரி கவனிக்கவில்லை.  அவர் மனதில் இரண்டு ஜாதகர்களும் இப்போது உயிர் உருவம் பெற்று விட்டிருந்தார்கள். அவர் இருவரையும் மிக நெருங்கியவர்கள் அறிந்திருப்பது போல் அறிந்திருந்தார்.  மிக நல்ல மனிதர்கள், பேரறிவாளர்கள், தற்போது ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள், இப்போது உயிரோடு இருந்தாலும் இன்னும் சில நாட்கள் மரணத்தின் விளிம்பிலேயே நின்று கொண்டிருக்கக் கூடியவர்கள், விளிம்பைத் தாண்டிப் போனாலும் கூடப் போகலாம்.....

திடீரென்று அவரை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் அவர் உணர்ந்தார்.  பலமான உணர்வு. வெளியே இருந்து தான் யாரோ அவரை கவனிக்கிறார்கள். கடிகாரத்தை அவர் பார்த்தார்.  மணி நள்ளிரவு 12.46. மெல்ல எழுந்து மாடி வராந்தாவில் நின்று பார்த்தார். எப்போதும் எரியும் தெரு விளக்கு இன்று ஏனோ எரியவில்லை. அதனால் வெளியே கும்மிருட்டு. அந்தக் கும்மிருட்டில் இருந்து தான் யாரோ அவரைப் பார்க்கிறார்கள். இப்போது அந்த இருட்டில் யாராவது நின்று கொண்டிருந்தால் அவரை நேரடியாகப் பார்க்க முடிவது இயல்பான விஷயமே. ஆனால் வீட்டின் உள்ளே அமர்ந்திருக்கும் போதும் அவர் அந்தப் பார்வையை உணர்ந்தாரே....

வெளியே கும்மிருட்டில் மறைவாய் நின்றபடியே அவரை அந்த மர்ம மனிதன் பார்த்துக் கொண்டிருந்தான். அவருடைய எண்ண அலைகளை அவன் படிக்க முயன்று கொண்டிருந்தான். சதாசிவ நம்பூதிரி உள்ளுணர்வால் உந்தப்பட்டவராக உள்ளே இருந்த விளக்கை அணைத்து விட்டு மறுபடி வந்து வராந்தாவில் இருட்டில் நின்றார்.  அவரும் இருட்டில் நின்றால் வெளியே இருட்டில் நிற்பவனும் அவரைப் பார்க்க முடியாது. ஒருவேளை அவனுக்குப் பார்க்க முடிந்தால் அவருக்கும் அவனைப் பார்க்க முடியும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

ஆனால் அது தப்புக்கணக்காக இருந்தது. மர்ம மனிதனுக்கு இருட்டின் மீது இருந்த ஆதிக்கம் அபாரமானது. இருட்டில் அவன் பார்வை மிகத் துல்லியமானது. அவன் இருட்டை விரும்புபவன். இருட்டில் பல காலம் இருந்தவன். இப்போதும் தனித்திருக்கும் சமயங்களில் எல்லாம் விளக்கை ஒரு இடைஞ்சலாக நினைத்து அணைத்து விட்டு இருட்டிலேயே இருக்கப் பிரியப்படுபவன்.... அப்படி இருட்டில் மிக நீண்ட காலம் இருந்து பழக்கப்பட்டதால், அவனுடைய  இயல்பான சக்திகள் அவன் கண்களை மேலும் கூர்மைப்படுத்தியதால் அவனால் வெளிச்சத்தில் அவரைப் பார்ப்பது போலவே இருட்டிலும் பார்க்க முடிந்தது. ஆனால் அவரால் அவனை அப்படிப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பார்க்கப்படுகிறோம் என்கிற எண்ணம் மிக வலுவாகவே தங்கியதால் உடனடியாக அவர் உதடுகள் சில மந்திரங்களை உச்சரித்தன.....  

அவன் புன்னகைத்தான். கிழவர் மந்திரங்களால் தன்னைக் காத்துக் கொள்ள நினைக்கிறார். மந்திரங்கள் புனிதமான ஆத்மாக்களால் உச்சரிக்கப்படும் போது மாபெரும் கவசமாக ஒருவனைக் காக்கக்கூடியவை. கிழவர் புனிதமான ஆத்மா. அதனால் புதுடெல்லி அதிகாரியை சர்ச்சில் ஆக்கிரமித்தது போல அவர் மனதை அவனால் ஆக்கிரமிக்க முடியவில்லை. ஆனால் அவனது அபார சக்தியால் அவருக்கு எந்தக் கெடுதலையும் விளைவிக்காமல் அவர் மன இடுக்கில் நுழைந்து அவருடைய சமீபத்திய எண்ணங்களைப் படிக்க முடிந்தது. இரண்டு ஜாதகங்கள் குறித்து அவர் இது வரை அவர் கணித்திருந்ததை அவனால் அறியவும் முடிந்தது. இனியும் அவர் முடிவை எட்டவில்லை. இன்னும் சில கணக்குகள் அவருக்குப் போட வேண்டியிருந்தது....

சதாசிவ நம்பூதிரிக்கு அதிக நேரம் அந்த இருட்டில் நிற்க முடியவில்லை. மெல்ல உள்ளே வந்தார். வெளியே யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. இந்த வீட்டில் திருட விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாதது ஊருக்கே தெரியும் என்பதால் வெளியே கண்காணிப்பவன் திருடனாக இருக்க வாய்ப்பில்லை. பின் யார்? இந்த ஜாதகர்கள் சம்பந்தப்பட்ட யாரோவாகத் தான் இருக்க வேண்டும்...... அதை உணர்கையிலேயே ஏனோ அவர் உடல் ஒரு கணம் சில்லிட்டது....  


தே நேரத்தில் அமேசான் காடுகளின் எல்லைக் காடு ஒன்றில் மயங்கியிருந்த க்ரிஷ் மெல்ல கண் விழித்தான். சுற்றிலும் கும்மிருட்டாக இருந்தது. இது வரை இடையிடையே அரை மயக்கத்தில் அவன் கண்விழித்து இருக்கிறான். அப்போதெல்லாம் கூட இதே போன்ற கும்மிருட்டைத் தான் அவன் உணர்ந்திருக்கிறான். இறந்து போய் இன்னொரு உலகில் விழித்திருக்கிறோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. இந்த இருட்டைப் பார்த்தால் இது நரகமாகவே இருக்கும் என்று தோன்றியது. சொர்க்கம் ஒளிமயமானது என்று அறிஞர்கள் சொன்னதாக நினைவு. ஹரிணி மனதை அவன் நோகடித்ததைத் தவிர நரகத்திற்கு வந்து சேரும்படியான பெரிய  தீமைகளை அவன் செய்ததாய் நினைவில்லை. அவள் முகத்தில் தெரிந்த வலி, அதிர்ச்சி, திகைப்பு, துக்கம் எல்லாம் இன்னும் அவனுக்கு மிக நுட்பமான அளவில் நினைவிருந்தது. அன்றே அவன் நரகத்தை அனுபவித்து விட்டான். அது நினைவுக்கு வந்த கணங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப தொடர்ந்த நாட்களிலும் அனுபவித்து விட்டான். இப்போது நினைவுபடுத்திக் கொள்ளும் போதும் வலிக்கிறது. இங்கிருந்து உலகத்தைப் பார்க்க முடியுமானால், ஹரிணி அந்த வலியிலிருந்து மீண்டு பழைய ஹரிணியாக மாறிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகளையாவது அவனால் பார்க்க முடியுமானால், இந்த நரகத்தில் கூட அவன் சந்தோஷப்படுவான்.....

“ஏய் சும்மா கதை வசனம் எழுதிகிட்டே போகாதே. இது நரகம் அல்ல.... அமேசான் காடுகள்

க்ரிஷ் திடுக்கிட்டான்.       

(தொடரும்)


என்.கணேசன்

4.8.2017 முதல் 15.8.2017 வரை நடைபெறும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 91 ல் என் நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.