என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label சதுரங்கம். Show all posts
Showing posts with label சதுரங்கம். Show all posts

Thursday, September 10, 2026

சதுரங்கம் 35

 


ர்ஜுன் ராஜாராம் சொன்னதில் மனம் நெகிழ்ந்தான். இன்றைக்கு அவர் இருக்கும் உயரத்திற்கு அவர் அவனை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. உண்மையில் அவன் அவருக்கு யாருமல்ல. அவனுடைய தந்தை ஞானமூர்த்தி அவருக்கு உடன்பிறந்த சகோதரரும் அல்ல.. ஆனாலும் அவர் வாய் நிறைய ஞானமூர்த்தியை எங்கண்ணா என்று தான் சொல்கிறார். எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குஎன்கிறார். அவனை வாசுதேவன் குடும்பத்தின் ஒரே வாரிசு என்றும் அவன் கோபித்துக் கொண்டால் தாங்க முடியாது என்றும் சொல்கிறார். வாசுதேவனின் மகன் தான் அல்ல என்று ஞானமூர்த்தி தான் தெரிவித்திருக்கிறாரேயொழிய இப்போதும் ராஜாராமின் வாயில் இருந்து அந்த வாசகம் வரவேயில்லை. இன்றைய அரசியல் நிலவரத்திலும், மக்களின் முட்டாள்த்தனத்திலும் மனம் வெறுத்துப் போய் அவர் வழியில் அவரும் விவரமாக, தன் தனிப்பட்ட இலாபத்தைப் பார்த்துக் கொள்வதை ஒரு சாமானியனின் பார்வையில் யாரும் பெரிய தவறாகச் சொல்ல முடியாது

 

அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். ”நான் உங்க பிள்ளை சித்தப்பா. என் கோபத்தை எல்லாம் ஒரு பொருட்டா ஏன் நினைக்கறீங்க சித்தப்பா. என்னால உங்க மேல எத்தனை காலம் கோபமாய் இருக்க முடியும்? இருந்த கோபமும் உண்மையான கோபம் இல்லை சித்தப்பா? அப்படி உண்மையான கோபமாய் இருந்திருந்தால் எனக்கு என்ன வேலை ஆக வேண்டியிருந்தாலும் நான் உங்களைத் தேடி வந்திருக்க மாட்டேன்

 

அவன் சொன்னதைக் கேட்டு அவர் கண்கள் ஈரமாயின. அவர் பாசத்துடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “தேங்க்ஸ்டா. இனி என் கிட்ட உனக்கு ஏதாவது கேட்கறதுக்கு இருக்கா?”

 

அப்படி அவர் கேட்டு விட்டாரேயொழிய, வில்லங்கமான கேள்விகளைக் கேட்டு விடுவானோ என்று அவருக்கு படபடப்பாகத் தான் இருந்தது.

 

ஆனால் அவன் சொன்னான். “ஒன்னும் இல்லை சித்தப்பா. தேங்க்ஸ்

 

அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் இந்த அளவு மனம் விட்டுப் பேசியும் அவன் அதே போல் மனம் விட்டுப் பேசிவிடவில்லை.  அவராக எதையாவது பேசி அவனை இருத்திக் கொள்ளாவிட்டால் அவன் கிளம்பி விடுவான் என்று தோன்றியது. ”இந்த நேரத்துல கடல்பக்கத்துல இருந்து நல்லா காற்று வரும். அங்கே உட்கார்ந்துக்கலாமாஎன்று அவர் ஹாலின் பின்கண்ணாடிக் கதவைக் காட்டினார். அர்ஜுன் தலையசைத்தான்.

 

கண்ணாடிக் கதவைத் திறந்த போது அவர் சொன்னது போலவே சில்லென்று காற்று வீசியது. பின் பகுதியில் இருந்த நாற்காலிகளை இழுத்துப் போட்டு இருவரும் அமர்ந்து கொண்டனர்.

 

ராஜாராம் கேட்டார். “அண்ணா இப்பவும் தியானம் செய்யறானா?”

 

அர்ஜுன் புன்னகைத்தான். “உள்ளூரில் இருக்கறப்ப தினமும் செய்யறார்.”

 

ராஜாராமும் புன்னகைத்தார். பின் கடலைப் பார்த்துக் கொண்டே மிக நெகிழ்ந்த குரலில்  சொன்னார். ”கடவுள் குற்றங்குறையில்லாத ஒரு நிறைமனிதனைப் படைக்க ஆசைப்பட்டு அண்ணாவைப் படைச்சாரோன்னு நான் சில சமயங்கள்ல ஆச்சரியப்பட்டதுண்டு.... ஆனால் இந்தக் காலத்துக்கும் இந்த சமூகத்துக்கும் அவனைக் கொண்டாடற தகுதி இல்லை அர்ஜுன். ஒரு காலத்துல மார்கஸ் அரேலியஸ்ங்கற ரோமானியச் சக்கரவர்த்தி இருந்தார். வரலாற்றில் ஒரு தத்துவஞானி வெற்றிகரமாய் அரசாண்டதற்கு அவர் ஒருத்தர் தான் உதாரணம். அவர் தான் கடைசி உதாரணமாயும் இருப்பார்னு நான் நினைக்கிறேன்.... நம்ம இதிகாசத்தில் ஜனகனையும் சொல்றாங்கன்னாலும் ஜனகன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆள் அல்ல….  அண்ணா இப்பவும் வருஷத்துக்கு ஒரு தடவை இமயமலை பக்கம் போறானா?”

 

போறார் சித்தப்பா

 

அங்கே போகிறப்ப யாரோ ஒரு சித்தரையோ, மகானையோ அண்ணா சந்திக்கிறது உனக்குத் தெரியுமா அர்ஜுன்?”

 

அர்ஜுனுக்கு அது புதிய தகவல். “இல்லையே சித்தப்பா யார் அவர்?” என்று அவன் ஆர்வத்தோடு கேட்டான்.

 

அது யார்னு எனக்கும் தெரியலை. ஆனா அவரைச் சந்திச்ச பிறகு தான் அண்ணா தினமும் தியானம் செய்ய ஆரம்பிச்சான்.  அது மட்டும் தெரியும்.... முதல் தடவை அங்கே போய்ட்டு வந்த பிறகு அண்ணா ஒரு வாரம் யார் கிட்டயும் ஒன்னு ரெண்டு வார்த்தைக்கு மேல பேசலை. கோர்ட்டுக்குப் போகலை. சொல்லப் போனா ரூமை விட்டுக் கூட வெளியே வரலை...”

 

அந்தத் தகவல் அர்ஜுனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. “அது எப்போ சித்தப்பா?”

 

அப்போ உனக்கு ரெண்டு வயசு இருக்கும். அண்ணாவோட மாற்றத்தைப் பாத்து அப்பாவுக்கே பயம் வந்துடுச்சு. அவர் கேட்டும் அண்ணா சரியாய் பதில் சொல்லலை.  ஒரு வாரம் கழிச்சு தான் இயல்புநிலைக்கு வந்தான். நான் அவன் கிட்டஎன்ன ஆச்சுண்ணா போன வாரம்னு கேட்டேன்.” அவன் ஒன்னுமில்லைன்னு தலையை மட்டும் ஆட்டினான்.  அவன் ஒரு விஷயத்தைச் சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா, கடவுளே வந்தாலும் அவனைச் சொல்ல வைக்க முடியாது.... ஆனா அதுக்கப்பறம் அவன் வருஷா வருஷம் இமயமலைக்குப் போய்ட்டு வருவான். பிறகு எப்பவும் அப்படிப் பேசாம இருந்ததில்லை....”

 

அதைச் சொல்லச் சொல்ல எதோ ஒரு முக்கியத் தகவல் நினைவுக்கு வந்தது போல் ராஜாராமின் முகம் மாறியது. அவர் யோசனையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். நினைவுக்கு வந்த அந்தத் தகவல் அவரை அசௌகரியப்படுத்தியது போல் அர்ஜுனுக்குத் தோன்றியது. அவன் அவரைக் கேட்டான். “என்ன சித்தப்பா?’

 

அந்த மாதிரி ஒரு தடவை போயிட்டு வந்த பிறகு தான் அண்ணா அரசியலுக்கு வர முடிவு செஞ்சான். அவன் இமயமலைக்குப் போனதுக்கும், அரசியலுக்கு வந்ததுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு எனக்கு நிச்சயமாய் சொல்லத் தெரியலை. ஆனால் ஒன்னு, அவன் அப்படி ஒரு தடவை அங்கே போய்ட்டு வந்த அடுத்த நாள் தான் அரசியலுக்கு வர்றதை அறிவிச்சான். அது இப்போ நினைவுக்கு வருது..”

 

அப்படி நினைவுக்கு வந்தது அவரை ஏன் அசௌகரியப்படுத்துகிறது என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை.அதனால?”

 

ராஜாராம் மெல்லச் சொன்னார். “அண்ணா அரசியலுக்கு வந்தது கூட அந்த ரகசிய மகான் சொல்லித் தானோ என்னவோன்னு நினைக்கத் தோணுது.”

 

அவர் அப்படி ஒரு ரகசிய மகானைச் சந்திச்சார்ங்கறது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது சித்தப்பா?”

 

முதல் தடவை போனப்போ இந்த மாதிரி வருஷா வருஷம் போகிற திட்டமெல்லாம் அண்ணாவுக்கு இருக்கலை. அண்ணாவும் அவனோட நண்பர்கள் நாலஞ்சு பேரும் சும்மா டூர் போகிற மாதிரி போனாங்க. வந்த பிறகு ஒரு வாரம் அண்ணா யார் கிட்டயும் எதுவும் பேசாதது பார்த்து அப்பாவும் பயந்துட்டார். அதனால நான் அண்ணா கூடப் போன நண்பர்களைப் பார்த்து பேசினேன். அவங்க அங்கே ஒரு நாள் ட்ரெக்கிங் போறப்ப ஒரு இடத்துல உக்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தாங்களாம். அப்போ அண்ணா மட்டும் தனியா கொஞ்சம் தூரம் போய்ட்டு வர்றேன்னு போனானாம். போய் ரொம்ப நேரம் திரும்பி வரலைன்னவுடனே அந்த நண்பர்களும் பயந்துட்டாங்க. அவங்கள்ல ரெண்டு பேர் அண்ணாவைத் தேடிட்டுப் போயிருக்காங்க. அப்ப தான் ஒரு பாறைல உட்கார்ந்துகிட்டு அண்ணா யார் கூடவோ ரொம்ப சீரியஸாய் பேசிகிட்டு இருக்கறதைப் பார்த்திருக்காங்க. அவங்களுக்கு அண்ணாவைப் பார்த்தவுடனே நிம்மதியாயிருக்கு. ஆனா ஆச்சரியம் என்னன்னா அவங்க ரெண்டு பேர் பார்த்த ஆள் அவங்க பக்கத்துல போறப்ப காணலையாம். அண்ணா மட்டும் தான் பாறைல இருந்து இறங்கி வந்தானாம். “யாருடா அவருன்னு கேட்டிருக்காங்க. “ஒரு மகான்னு மட்டும் அண்ணா சொல்லியிருக்கான். “எங்கேடா அவரு?”ன்னு கேட்டிருக்காங்க. “அவர் அந்தப் பக்கம் இறங்கிப் போயிட்டார்னு அண்ணா சொன்னானாம். அந்த ரெண்டு நண்பர்கள்ல ஒருத்தன் மெல்லப் போய் பாறைக்கு அந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்திருக்கான். பார்த்தா அந்தப் பக்கம் ஒன்னுமே இல்லையாம். அங்கேயிருந்து லேசா வழுக்கினா கூட பள்ளத்தாக்குல விழுந்து சாகத்தான் வேண்டியிருக்குமாம். அந்த நண்பனுக்குப் பகீர்னு ஆயிருக்கு. திரும்பி வர்றப்ப அவங்க கிட்டயும் அண்ணா அதிகமாய் பேசலையாம். ராத்திரி தூங்கலையாம். அவங்க முழிச்சுப் பார்க்கறப்ப எல்லாம் அண்ணா உட்கார்ந்து எதோ யோசனையாய் இருந்தானாம். அது சென்னை திரும்பி வர்ற வரைக்கும் தொடர்ந்திருக்கு.

 

அர்ஜுனுக்கும் அதைக் கேட்டு ஆர்வம் அதிகமானது. அவன் கேட்டான். “அவங்க பார்த்த அந்த மகான் எப்படி இருந்தாராம் சித்தப்பா?”

 

நானும் அதே கேள்வியை அவங்க கிட்ட கேட்டேன். ஆனா அவங்க சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்துச்சு. அந்த ஆள் பாக்க நம்மள மாதிரி தான் இருந்தாராம். பைஜாமா பேண்ட்டும், ஜிப்பா ஷர்ட்டும் போட்டுகிட்டு, கிராப்புத் தலையும், ஷேவ் செஞ்ச முகமுமாய் டிப்டாப்பாய் தெரிஞ்சாராம். பார்த்தால் யாரும் மகானுன்னு சொல்லத் தோணாது, ஆனா மகானைத் தவிர யாராலும் அந்த இடத்துல மாயமாக முடியாதுன்னு சொல்றாங்க.”


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, September 3, 2026

சதுரங்கம் 34


 

ர்ஜுனுக்கு அவர் எடுத்த முடிவில் இப்போது குற்றம் காண முடியவில்லை. ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தான். அவர் சொல்லும் எதையும் அவன் தந்தை அறியாதவர் அல்ல. அவர் அறிவு ஆழமானது, சூட்சுமமானது...

 

ராஜாராம் தொடர்ந்து சொன்னார். “அண்ணா ரொம்ப திறமையான வக்கீல். அண்ணா விரும்பினா கோர்ட்டில் வாதாட ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து லட்சமாவது வாங்க முடியும்னு என் கிட்ட ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒரு தடவை சொன்னார்.  அந்த அளவு திறமை இருக்கிற எங்கண்ணா இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறான் அர்ஜுன்?”

 

ஞானமூர்த்தி இப்போது ஒரு மாதத்திற்குக் கூட அந்த அளவு சம்பாதிப்பதில்லை.  அவர் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் ஓரிரு வழக்குகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். அதிலும் கட்சிக்காரன் பக்கத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்த வழக்கையும் அவருடைய வாதத்திறமையால் அவரால் வெல்ல முடியும் என்றாலும், பிழைப்புக்காகக்கூட நியாயமில்லாத பக்கம் நிற்க அவர் சம்மதித்ததில்லை. நியாயமிருந்தும் வழக்கிற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிற ஏழைகளிடம் அவர்களுக்குத் தர முடிந்த தொகையைத் தான் அவர் வாங்குகிறார். நியாயமிருந்தும் சில சட்டச்சிக்கல்களால் நீதி கிடைக்க முடியாத நிலையில் இருக்கும் பணக்காரர்களிடம்  மட்டும் அவர் அதற்குரிய தொகையை வாங்குகிறார். அவர் செய்யும் தியாகத்தையும், பெருந்தன்மையையும் எத்தனை பேர் நினைவு வைத்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியே! காரியம் முடிந்ததும் கடவுளையே கூட மறக்கும் மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை!

 

அர்ஜுன், நான் எங்கண்ணாவுக்கு இணையான அறிவாளியை இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆனால் ஆனால் அந்தப் பேரறிவு அவனோட சொந்த வாழ்க்கைக்குப் பயன்பட்ட மாதிரி தெரியலை. வாதாட வேண்டியது தான் வக்கீலோட வேலை. தீர்ப்பு சொல்றது நீதிமன்றத்தோட வேலை. ஆனா அண்ணா என்ன செய்யறான்னா, அவனே நீதிபதியா இருந்து ஒரு வழக்கைப் பார்த்துட்டு தான் அதை ஏற்கிறான், இல்லை மறுக்கறான். ஒருவிதத்துல இது முட்டாள்தனமில்லையா? அரசியல்லயும் அப்படித் தான் செய்யறான். அவன் கட்சில மோசமான ஆட்களைச் சேர்த்துக்கறதில்லை. அவனோட அரசியல் கொள்கைகள்லயும் கூட அவன் சமரசம் செய்துக்கறதில்லை. இன்றைக்கிருக்கற சூழ்நிலையில் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியாது அர்ஜுன். போன தேர்தல்ல அண்ணா தோற்றதும், பத்தே பத்து தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்கள்லயும் டெபாசிட் இழந்ததும் அரசியல் களத்துல அண்ணா எங்கே நிற்கறான்னு தெரிவிக்கலையா அர்ஜுன்?

 

அர்ஜுன் சொன்னான். “நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சித்தப்பா. ஆனால் குறுகிய காலத்துல அவர் ஐம்பது தொகுதிகள்ல மூனாவது இடத்தில் இருக்கார். அது சின்ன விஷயமில்லையே?”

 

நீ ஓட்டு சதவீதத்தைப் பார்த்தா தான் உனக்கு சரியான நிலவரம் தெரியும் அர்ஜுன். ஒரு வகுப்புல ஐந்து மாணவர்கள் இருக்காங்கன்னு வெச்சுக்கோ. முதல் மார்க் 80 இரண்டாவது 50 மூன்றாவது 8 நான்காவது 5 ஐந்தாவது 3. இதில் 8 மார்க் வாங்கியவன் மூன்றாவது இடத்தில் இருக்கறதா சொல்ற நிலையில தான் அண்ணாவும் இருக்கான் அர்ஜுன். அந்த ஐம்பது தொகுதிகள்ல ஆளும் கட்சி 41.38% இருக்கு. எதிர்க்கட்சி 27.32% இருக்கு. அண்ணா கட்சி 6.28% இருக்கு. எதிர்க்கட்சிக்கு இணையாக வரவே நாலுமடங்கு ஓட்டு வேண்டியிருக்கு.”

 

அவர் சொல்வது நிஜம் தான். ஆனால் நிஜம் கசந்தது.  அது என்றைக்கு இனித்திருக்கிறது?

 

ஒரு காலத்தில் ஊழல்ங்கறது மக்கள் கிட்ட அதிர்ச்சியை உண்டுபண்ணுச்சு. ஆனால் இன்னைக்கோ ஊழல் இல்லைன்னா தான் மக்களுக்கு அது ஆச்சரியத்தை உண்டுபண்ணுது. அந்த அளவு ஊழல், மக்களே ஏற்றுகிட்ட ஒரு விஷயமாயிடுச்சு. எவன் வந்தாலும் ஊழல் தான்னு மக்கள் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தயாராயிட்டாங்க. ஒரு காலத்தில் விதிமுறைகளுக்குப் பொருந்தாத வேலைகள் ஆக வேண்டி தான் மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாங்க. இப்ப. விதிமுறைகளுக்குப் பொருந்தியிருந்தாலும் சரி எந்த வேலை அரசாங்க அலுவலகத்தில் ஆக வேண்டியிருந்தாலும் லஞ்சம் தராமல் வேலை ஆவதில்லைன்னு ஆயிடுச்சு. இப்ப எல்லாம் மக்களே லஞ்சம் எவ்வளவுன்னு கேட்டுத் தர்ற நிலைமை உருவாயிடுச்சு. லஞ்சம் தந்தாலும் சீக்கிரம் வேலையானால் அதுவே பெரிய விஷயம்னு நினைக்கிற நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்க. இப்ப யாரும் உத்தமனைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கறதில்லை. எத்தனை வேணும்னா சம்பாதிச்சுக்கட்டும், எங்களுக்கும் கொஞ்சமாவது நல்லது செஞ்சா போதும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவு மக்கள் ஊழலை ஏற்றுகிட்டாங்க. ஊழல் எதிர்ப்புங்கறது வெறும் மேடைப் பேச்சு சமாச்சாரமாயிடுச்சு. பேசறவனும் அதை சீரியஸா நினைச்சு பேசறதில்லை. கேட்கறவனும் அதை சீரியஸாய் எடுத்துக்கறதில்லை. இப்படி எல்லாருமே ஊழலை சீரியஸாய் நினைக்கற காலம் போன பிறகும் அண்ணா மேடைப்பேச்சையும் தாண்டி அதை சீரியஸாய் எடுத்துகிட்டுருக்கான்….” ராஜாராமின் குரலில் ஆழ்ந்த வருத்தம் இழையோடியது.

 

அவர் ஒரு கணம் நிறுத்தி அவன் ஏதாவது கருத்து தெரிவிக்கிறானா என்று பார்த்தார். ஆனால் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தானேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார். “இப்போதெல்லாம் எதிர்க்கட்சி கூட ஆளும் கட்சி கூடப் பேரம் படியாத போது தான் வெளிப்படையாய் புகார் சொல்லுது. ரகசியப் பேச்சு வார்த்தைல பேரம் படிஞ்சுதுன்னா அவங்களும் சத்தமில்லாமல் இருந்துடறாங்க அர்ஜுன். மாநிலமானாலும், மத்திய அரசானாலும் இது தான் வெளிப்படையாய் சொல்லிக்காத விதி அர்ஜுன். இதுலயும் அண்ணா தான் விதிவிலக்கு. சரி இத்தனை நேர்மையாய் நியாயமாய் இருந்து அவன் மக்களுக்காகப் போராடறான். அதற்காவது மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பாங்களான்னா அதுவும் கிடையாது. தேர்தல் நேரத்துல ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எண்ணிக் கொடுக்கற ரூபாய் நோட்டுகளுக்குத் தர்ற முக்கியத்துவத்தை மக்கள் அவனுக்கோ, அவனோட கட்சிக்கோ, தர மாட்டாங்க. மக்கள் ஊழலை மறந்துடுவாங்க, மோசமான நிர்வாகத்தை மறந்துடுவாங்க, நிறைவேற்றாத வாக்குறுதிகளை மறந்துடுவாங்க, கடந்த ஆட்சில ஏமாற்றப்பட்டதை மறந்துடுவாங்க. தேர்தல் நேரத்துல தர்ற காசை மட்டுமே பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. இப்ப சொல்லு, ஏமாறுறது மக்களா, எங்கண்ணாவா?”

 

பேரறிவு இருந்தும் இன்றைய அரசியல் களத்தில் ஞானமூர்த்தி அடிமுட்டாள் ஆகத் தான் இருக்கிறார் என்பதைப் பார்க்கையில் அர்ஜுனுக்கு வேதனையாகத் தான் இருந்தது. ராஜாராம் அலசிச் சொன்ன அளவுக்கு அவன் யோசித்திருக்கா விட்டாலும் மேலெழுந்தவாரியாக கிட்டத்தட்ட இந்த நிலவரம் அவனுக்குப் புரிந்துதானிருந்தது.  

 

கடைசியாக ராஜாராம் சொன்னார். “இந்தக் காரணங்களுக்காகத் தான் நான் எங்கண்ணாவை ஆதரிக்கலை. கடைசில அவன் எல்லாராலயும் கோமாளி ஆக்கப்படறத என்னால சகிக்க முடியல அர்ஜுன். என் குடும்பத்துல இன்னொரு பலிக்கடா உருவாகறதை நான் விரும்பலை.”

 

அர்ஜுன் மெல்லக் கேட்டான். “நீங்க இதையெல்லாம் எங்கப்பா கிட்ட சொல்லியிருக்கீங்களா சித்தப்பா?”

 

ராஜாராம் இல்லையென வருத்தத்துடன் தலையசைத்து விட்டுச் சொன்னார்.சொல்லிப் பிரயோஜனம் இல்லை அர்ஜுன். இந்த விஷயத்துல எங்கப்பாவை விட அண்ணா இரண்டு மடங்கு பிடிவாதக்காரன். ”எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குங்கறதை நான் பல தடவை உணர்ந்திருக்கேன். எங்கப்பா உயிரோட இருந்திருந்தா அவரோட முழு ஆதரவும் அண்ணாவுக்குத் தான் இருந்திருக்கும். ஆனால் நான் அவராகவோ, அண்ணாவாகவோ இருக்க விரும்பலை அர்ஜுன். இன்றைய அரசியல் ஒரு செஸ் விளையாட்டு மாதிரி தான். தாக்கறதும், தாக்குப்பிடிக்கறதும் தான் இதை விளையாடறவங்களோட குறிக்கோள். அடுத்தவங்க பலவீனத்தைப் பயன்படுத்திக்கறதும், அவங்கள பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்கறதும் ரொம்ப முக்கியம். மறைமுகமாய் நானும் அரசியல்வாதியாகி இந்த விளையாட்டுல சேர்ந்துட்டேன். எங்கப்பா மாதிரியோ, எங்கண்ணன் மாதிரியோ எனக்கு கொள்கை எல்லாம் கிடையாது. மக்களைப் பற்றியோ, மற்றவங்களைப் பற்றியோ நான் கவலைப்படறதில்லை. எனக்கு நிரந்தர நண்பர்களோ, நிரந்தரப் பகைவர்களோ கிடையாது. என்னை அனுசரிச்சுப் போறவங்களுக்கு, அவங்க அனுசரிச்சுப் போய்கிட்டிருக்கற வரைக்கும் நான் ஆதரவு தர்றேன்.  பின்னணியில் இருக்கறதால எனக்கு எப்பவும் நஷ்டமோ, தோல்வியோ இல்லை. நான் இதுவரைக்கும் இந்த அளவு வெளிப்படையாய் இதை யார் கிட்டயும் சொன்னதில்லை அர்ஜுன். உன் கிட்ட தான் சொல்றேன். வாசுதேவன் குடும்பத்தோட ஒரே வாரிசு நீ.  நீ எங்க கிட்ட கோவிச்சுகிட்டு இருந்தால் எங்களால தாங்க முடியாதுடா.” சொல்கையில் ஒரு கணம் அவர் குரல் உடைந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, August 27, 2026

சதுரங்கம் 33


 

ர்ஜுன் தன்னை சித்தப்பா இவ்வளவு சீக்கிரம் பேச அழைப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பத்திரிக்கைத் துறையில் அவன் இருப்பதால் அவர் எவ்வளவுபிசியானவர் என்பதை அறிவான். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், மற்ற பிரபலங்களும் அவரைச் சந்தித்துப் பேச மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறான். அதனால் தனக்கு இந்த அளவு சித்தப்பா முக்கியத்துவம் தந்து பேச அழைத்திருப்பது அவர் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அவனுக்குத் தோன்றியது. அவன் இதுவரை அவரை வீட்டில் மட்டுமே சந்தித்துப் பேசி இருக்கிறான். ஆனால் அவர் இம்முறை மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள அவருடைய பங்களாவிற்கு அழைத்திருக்கிறார். பல முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் அந்தப் பங்களாவில் நடந்திருப்பதை அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். வரலாற்று திருப்புமுனைகளைத் தந்திருக்கும் அந்த இடத்தில் அவனுடன் பேச அவர் அழைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அந்தப் பங்களாவிலும் பலத்த போலீஸ் காவல் இருந்தது. அவன் அவர் சொல்லியிருந்த நேரத்தில் அங்கு சென்று சேர்ந்த போது அவர் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மிகுந்த மரியாதையுடன் அங்கிருந்த அவனை வரவேற்று அமர வைத்த ஒரு போலீஸ் அதிகாரி, அவர் பத்து நிமிடங்களில் வந்து விடுவாரென்றும், அது வரை காத்திருக்கும்படியும் சொல்லி விட்டுப் போனார். அவன் அங்கு செல்வது முதல் முறை என்பதால், அவன் சும்மா அமர்ந்திருக்காமல், அந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்த்தான். பரப்பளவில் சிறியதாக இருந்தாலும், வீடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போல் மிக அழகாகவும் ஆடம்பரமாகவும்  இருந்தது. பகட்டான மின் விளக்குகளும், சோபாக்களும், அலங்காரப் பொருள்களும் கண்களைக் கவர்ந்தனஹாலில் இருந்த பெரிய திரையை விலக்கிய போது கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி சற்று தொலைவில் கடல் தெரிந்தது. நித்யாவை ஒரு முறை இங்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. சலிக்காமல் கடலைப் பார்த்து ரசிக்கும் ரசிகை அவள்….   

 

சித்தப்பாவின் குரல் கேட்டது. “எப்படிடா இருக்கு வீடு?”

 

அர்ஜுன் திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான். “சூப்பர் சித்தப்பா. ரொம்ப அழகாயிருக்கு.”

 

ராஜாராம் புன்னகைத்தார். அவனுடைய பாராட்டு அவருக்குத் திருப்தியைத் தந்தது. “வாடா. உட்கார். எதாவது சாப்பிடறயாடா. ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. எதாவது வரவழைக்கட்டா?”

 

வேண்டாம் சித்தப்பா.” என்றபடி அவன் அவர் அருகில் வந்தமர்ந்தான்.

 

அப்பறம் என்னடா? எதாவது விசேஷம் உண்டா?”

 

ஒன்னுமில்லை சித்தப்பா

 

அவன் அத்திவாக்கம் போய் வந்ததைப் பற்றி, தனியாகச் சந்திக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது சொல்வான் அல்லது மகுடபதி பற்றி ஏதாவது கேட்பான் என்று ராஜாராம் எதிர்பார்த்திருந்தார். இருவர் மட்டுமிருப்பதால் அவன் தயக்கமில்லாமல் கேட்கும் சூழ்நிலை தான் இருக்கின்றது. அல்லது அவனுடைய காதல் பற்றியும் திருமணம் பற்றியும் கூட எதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தார். எனவே அவன் ஒன்றுமில்லை என்று சொன்னது அவரை ஏமாற்றமடையச் செய்தது. அழுத்தக்காரன் என்று நினைத்துக் கொண்டாலும் அவர் முகத்திலிருந்த புன்னகை குறையவில்லை.

 

அவன் அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தான். எதற்காக என்னை அழைத்தீர்களோ அதைச் சொல்லுங்கள் என்பது போலிருந்தது அவன் பார்வை. இது அவருடைய அண்ணாவின் குணாதிசயம். தேவையில்லாமல் சுற்றி வளைத்துப் பேசுவதை விரும்பாதவர் அவர். அவருடைய சில விசேஷ குணங்கள் அவனுக்கும் அப்படியே வந்திருக்கின்றன.

 

ராஜாராம் மனதில் ஒரு பாரத்தை உணர்ந்தார். பின் மெல்ல பேச ஆரம்பித்தார். “உனக்கு என் மேல கோபம் இருக்குங்கறது எனக்குத் தெரியும் அர்ஜுன். அரசியல்ல நான் என் அண்ணாவை ஆதரிக்காமல், ஆளும் கட்சியை ஆதரிக்கிறது தப்புன்னு நீ நினைக்கிறாய்னும் தெரியும். எதனால நான் அதைச் செய்யறேன்னு உனக்கு நான் சொல்லணும்னா காரணத்தை நான் உன் தாத்தா கிட்ட இருந்து தான் ஆரம்பிக்கணும்….”

 

அவன் ஆர்வத்துடன் கவனமானான். அவர் தொடர்ந்தார். “இந்த உலகத்தில் நான் ரொம்ப நேசிச்ச மனுஷன், அதிகமாய் மதிச்ச மனுஷன் யாருன்னா அது என் அப்பா தான் அர்ஜுன். ஆனால் அவர் பிழைக்கத் தெரியாதவராகவே கடைசி வரைக்கும் இருந்துட்டார். ஆட்சிக்கு வர்றதே சம்பாதிக்கறதுக்காகங்கறது இந்தக் காலத்துல சின்னப் பசங்களுக்குக் கூட புரிஞ்ச உண்மை. ஆனால் உன் தாத்தா ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியும் சம்பாதிக்கலை. ஆட்சிக்கு வந்த பின்னாடியும் சம்பாதிக்கலை. ஆனாலும் கூட, எந்த மக்களுக்காக அவர் எல்லாத் தியாகங்களையும் செஞ்சு வாழ்ந்தாரோ, அந்த மக்களுக்கு அவர் வாழ்ந்த வரைக்கும் அவரோட அருமை முழுசா தெரியலை. அவருக்கு சாகற காலத்தில் தான் முதல்வராகவே முடிஞ்சுது. மூன்றரை வருஷங்கள் தான் ஆட்சி செஞ்சார்.”

 

அர்ஜுன் சொன்னான். “ஆனாலும் தாத்தா மக்கள் மனசுல நீங்காத இடத்தைப் பிடிச்சிருக்கார் இல்லையா சித்தப்பா. இன்னைக்கும் மக்கள் அவரைப் புகழ்றாங்க.”

 

இப்ப அவரை ஆஹா ஓஹோன்னு புகழ்கிற மக்கள் அவரைப் புகழ்ந்த வாயாலேயே அவருக்கு கொஞ்சமும் இணையில்லாத தலைவர்களையும் புகழறாங்க. அதையும் நீ பார்க்கணும் அர்ஜுன். அந்தத் தலைவர்கள் அவரை மாதிரியே செத்துப் போனவர்கள்ங்கறதைத் தவிர வேறெந்த விதத்திலும் சரிசமமானவங்க அல்ல. தரம் தாழ்ந்தவங்களுக்கு இணையாய் உயரத்தில் இருக்கிறவங்களையும் புகழறது, தாழ்த்தறதுக்கு சமமல்லவா?”

 

அவர் சொன்ன இதே விஷயத்தை அர்ஜுனும் பல முறை நினைத்திருக்கிறான். இப்போது ஆளும்கட்சி சுவரொட்டிகளிலும், அறிவிப்புகளிலும், வாசுதேவனும், தணிகாச்சலமும் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் தலைவர் சரவணன் என்ற வாசகம் அடிக்கடி வருகின்றது. வாசுதேவன் கண்ட கனவு தமிழக மக்களின் முன்னேற்றமும் சுபிட்சமுமாக இருந்தது, ஆனால் தணிகாச்சலத்தோட கனவோ கூடுமான அளவு சம்பாதிப்பதாகத் தான் இருந்தது. இருவரின்  கனவும் ஒன்றே என்று சொல்வதே வாசுதேவனைக் கீழே இறக்குவது போலத் தான். ஆனால் அந்த ஆளுங்கட்சிக்குத் தான் இப்போது ராஜாராம் ஆதரவு தந்து வருகிறார். அவர் ஆதரவு தருவது ஒருவகையில் ஆளுங்கட்சி விளம்பரத்தை அங்கீகரிப்பது போலத் தான் என்று எண்ணிய அர்ஜுனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

அதைக் கவனித்த அவருக்கு அவனுடைய புன்னகைக்குப் பின்னாலிருந்த எண்ண ஓட்டமும் புரியாமலில்லை. அவர் லேசாகச் சிரித்தபடி சொன்னார். “என் நிலைப்பாட்டை நான் கடைசில சொல்றேன். முழுசாய் கேட்டு முடியற வரைக்கும் தீர்ப்பு எழுதாதே.”

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. அவனுடைய எண்ணத்தை எவ்வளவு சீக்கிரம் அவர் படித்து விட்டார்

 

ராஜாராம் தொடர்ந்தார். “எங்கப்பா செஞ்ச முட்டாள்தனத்தை இப்ப எங்கண்ணா ஆரம்பிச்சிருக்கான். எங்கப்பாவாவது கடைசி காலத்துல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானார். அவரோட கடைசி காலத்திலாவது அதற்கு சாதகமான சூழல் வந்துச்சு. ஆனால் எங்கண்ணன் அதிகபட்சமா எப்பவாவது ஒரு எம்.எல்.ஏ ஆகலாம். அதுக்கும் மேல முன்னேறப் போறதில்லை அர்ஜுன். ஏன்னா இப்போதைய அரசியல் சூழலும் சரியில்லை, மக்களும் முட்டாள்கள்.”

 

கிட்டத்தட்ட அர்ஜுனின் அபிப்பிராயமும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் அதை சித்தப்பா வாயால் கேட்கும் போது அவனுக்கு வலித்தது. அதை உணர்ந்த அவர் அவனிடம் மென்மையாகச் சொன்னார். “கண்டிப்பாய் வெற்றியடையப் போறதில்லைன்னும், இந்த அரசியல் களத்துல கஷ்டப்படத் தான் போறான்னும் எனக்கு உறுதியாய் தெரிஞ்ச பிறகு நான் ஏன் அண்ணாவை ஆதரிக்கணும் அர்ஜுன்? மக்கள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க. தந்திரமான பேச்சால் அவங்களை யாரும் எப்பவும் சுலபமாய் ஏமாற்றவோ, திசை திருப்பவோ முடியும். நல்லதையும், கெட்டதையும் சீக்கிரமே மறந்துடற வியாதியும் அவங்களுக்கு இருக்கு. இந்த மாதிரி மக்களுக்காக, என் அண்ணன் தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டு அழியறதை என்னால பார்க்க முடியலை அர்ஜுன். அதனால தான் நான் அரசியல்ல எங்கண்ணாவை ஆதரிக்கலை.”


(தொடரும்)

என்.கணேசன்