சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 16, 2019

சத்ரபதி 90


சிவாஜி தந்தைக்குத் தந்த மரியாதையையே சிற்றன்னை துகாபாய்க்கும் கொடுத்து வணங்கினான். தம்பி வெங்கோஜியிடம் அன்பு பாராட்டினான். தந்தையுடன் வந்த பரிவாரங்களுக்கும் சகல சவுகரியங்களும் செய்து தரப்பட்டன. ஷாஹாஜி மகனுடைய அன்பும் அடக்கமும் பெருந்தன்மையும் நிறைந்த செயல்களால் மனம் நிறைந்து போனார். பூர்வ ஜென்மத்தில் அவர் நிறைய தர்மங்கள் செய்திருக்க வேண்டும் என்றே அவருக்குத் தோன்றியது. இல்லா விட்டால் இப்படி ஒரு மகன் அவருக்குக் கிடைத்திருக்க முடியாது.

மகனிடம் தான் வந்த விஷயத்தைப் பற்றி ஷாஹாஜி மெல்லச் சொன்னார். சுல்தான் அவன் எடுத்துக் கொண்ட கோட்டைகளையும், பகுதிகளையும் அவனுக்கே விட்டுத்தரத் தயாராக இருப்பதையும், அதற்குப் பதிலாக அவன் நட்பை எதிர்பார்ப்பதையும், இனியொரு ஆக்கிரமிப்பை சிவாஜி செய்யக்கூடாது என்ற சுல்தானின் நிபந்தனையையும் தெரிவித்தார். சிவாஜி சலனமே இல்லாமல் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். அதற்குப் பதில் எதையும் அவன் சொல்லவில்லை. மகனின் இன்னொரு பக்கம் இது என்று அவருக்குத் தோன்றியது.

சிவாஜியிடம் அவர் மென்மையாகச் சொன்னார். “மகனே. அலி ஆதில்ஷாவை நான் பீஜாப்பூர் சுல்தானாகப் பார்ப்பதைப் போலவே என்னிடம் நட்பு பாராட்டிய முகமது ஆதில்ஷாவின் மகனாகவும் நான் பார்க்கிறேன். சுல்தான் முகமது ஆதில்ஷா என்னிடம் பகைமை பாராட்டிய காலம் இருந்தது என்பதையும், அந்தச் சமயத்தில் என்னைச் சிறைப்படுத்தினார் என்பதையும் நான் மறக்கவில்லை. ஆனால் வஞ்சகத்தால் என்னைச் சிறைப்படுத்திய பாஜி கோர்ப்படே மீது எனக்கு வந்த கோபம் அவர் மீது என்றும் வந்ததில்லை. ஏனென்றால் அவர் நிலைமையில் நான் இருந்திருந்தாலும் அவர் செய்ததையே நானும் செய்திருப்பேன். அந்தக் காலம் தவிர அந்த மனிதர் மற்ற சமயங்களில் என்னிடம் அன்பும் நட்புமே பாராட்டினார் என்பதையும் நான் மறந்து விடவில்லை. நீ ஒரு சிறுவனாக இருந்த போது வணங்க மறுத்த செயலையும், பசுவதை குறித்த உன் அபிப்பிராயங்களால் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்ட செயல்களையும் அவர் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் விட்டார் என்பதை நான் உனக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். துரதிர்ஷ்ட காலங்கள் அரசர்களுக்கும் வருவதுண்டு மகனே. ஆனால் சாதாரண மனிதர்களை அந்தக் காலங்கள் பாதிப்பதை விட ஆயிரம் மடங்கு அரசர்களைப் பாதிக்கிறது என்பதே உண்மை.  சாதாரண மனிதர்கள் பலரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் பெற முடியும். ஆனால் அரசர்களுக்கு அந்தப் பாக்கியமும் வாய்ப்பதில்லை. பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷாவின் இன்றைய நிலைக்காக நான் இரங்குகிறேன் மகனே. அவர் நீட்டும் இந்தச் சமாதானக் கரத்தை நீ உதாசீனப்படுத்திவிடக் கூடாது என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்….”

சிவாஜி சிறிது மௌனம் சாதித்து விட்டுச் சொன்னான். “தந்தையே. அலி ஆதில்ஷாவின் துரதிர்ஷ்டம் குறித்து வருத்தப்படுகிறீர்கள். அவன் கை ஓங்கி இருந்தால் அவனுக்குப் பதிலாக நான் துரதிர்ஷ்டசாலியாக ஆகியிருந்திருப்பேன் என்ற உண்மையை நீங்கள் மறந்து விட்டீர்கள். அப்படி நான் துரதிர்ஷ்டசாலியாக ஆகிவிட்டிருந்தால் எனக்காக நீங்கள் கூடுதலாக வருத்தப்பட வேண்டி இருந்திருக்கும். எங்கள் இருவரில் ஒருவர் துரதிர்ஷ்டசாலியாக ஆகியே தீர வேண்டும் என்ற நிலையில் அவனுடைய துரதிர்ஷ்டத்தையே நாம் தேர்ந்தெடுத்திருப்போம் அல்லவா? சுல்தான்களின் ஆட்சியும், முகலாயர்களின் ஆட்சியும் இந்த மண்ணில் இருந்து நீங்க வேண்டும் என்று கனவு கண்ட என்னிடம் அவனுக்காக நீங்கள் பரிந்து பேசுவது எனக்கு விசித்திரமாகவே இருக்கிறது தந்தையே….”

மிக அமைதியாகவும், உறுதியாகவும் சிவாஜி அவரிடமே பேசியதில் இருந்த உண்மை ஷாஹாஜியை வாயடைக்க வைத்தது. அவன் சொன்னது போல நிலைமை தலைகீழாக மாறியிருந்தால் அலி ஆதில்ஷா இப்படி நேசக்கரத்தை நீட்டியிருக்க மாட்டான் என்பதும், சிவாஜி ஓடி ஒளிந்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதும் உண்மையே….

சிவாஜி அமைதியாகவே தொடர்ந்தான். “பீஜாப்பூர் சுல்தானுக்கு என்னால் சாதகமான பதிலைத் தர முடியாது தந்தையே. ஆனால் என் தந்தைக்கு என்னால் பாதகமான பதிலையும் தர முடியாது. அதனால் இப்போதைக்கு நான் பீஜாப்பூர் சுல்தானின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். அலி ஆதில்ஷா பேச்சு மாறி வஞ்சகமாகவோ, இரட்டை வேடம் போட்டோ என்னிடம் நடந்து கொள்ளாத வரையில், உங்களுடைய வாழ்நாள் உள்ள வரையில்,  என்னுடைய தாக்குதலோ, ஆக்கிரமிப்போ அவனுக்கெதிராக நடக்காது என்று உறுதி கூறுகிறேன் தந்தையே.”

ஷாஹாஜி மகன் பதிலில் நெகிழ்ந்து போனார். அவன் சொன்னது போல அவரது கோரிக்கை அவன் கனவுக்கு எதிரானது. அப்படியிருந்தும் இந்த அளவு அவன் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். ”இது போதும் மகனே” என்று விஷயத்தை அத்துடன் விட்டார்.

அடுத்த சில நாட்களில் சிவாஜி அவரைத் தன் கோட்டைகளுக்கு அழைத்துப் போய் காண்பித்தான். ஒவ்வொரு கோட்டையிலும் அவன்  செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் விவரித்தான். அவற்றில் ஏதாவது சிறு குறை இருந்து அவர் தெரிவித்தால் அதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டு அதைச் சரி செய்ய உடனடியாக ஆணை பிறப்பித்தான். எந்த ஒரு கர்வமும் இவனை எட்டி விடவில்லை என்பதைக் கவனித்த அந்தத் தந்தையின் மனம் கர்வப்பட்டது. இவன் என் மகன்!

வெற்றியின் இலக்குகளை அவன் எப்படி இந்தக் குறுகிய காலத்தில் சாதித்தான் என்பதை அவனுடைய பண்புகள் அவருக்குத் தெரிவித்தன. அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் பெரும்பாலான நேரங்களில் தவறாகக் கடிந்து கொள்கிறோம் என்று அவருக்குத் தோன்றியது. சில விதிவிலக்குகள் தவிர எல்லாம் அவரவர் பண்புகளிலேயே உதயமாவதாக அவருக்குத் தோன்றியது.

சில நாட்கள் கழித்து அவர் கிளம்புவதாகத் தெரிவித்த போது சிவாஜி வருத்தப்பட்டான். “தந்தையே. இனியாவது நீங்கள் இங்கேயே இருந்து விடக்கூடாதா? இது உங்கள் மண். நீங்கள் பிறந்து வளர்ந்த இடம். வயோதிகத்தில் இங்கு இருப்பதல்லவா உங்களுக்கு நல்லது?”

ஷாஹாஜி மகனிடம் அன்பு மேலிடச் சொன்னார். “நீ சொல்வது உண்மையே சிவாஜி. என்னில் ஒரு பகுதி அதையே விரும்புகிறது. ஆனால் நான் இங்கேயே இருந்து விட்டால் இப்போது என் வசம் இருக்கும் கர்நாடகப்பகுதிகள் என் கையை விட்டுப் போய் விடும். வெங்கோஜி சிறியவன்.  அவனுக்குத் தர என்னிடம் அந்தப்பகுதிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனாலேயே தான் நான் அங்கு திரும்ப விரும்புகிறேன். தயவு செய்து என்னை நீ தடுக்காதே…..”

சிவாஜியால் அதற்கு மேல் அவரைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. இனி நீண்ட காலம் அவர் வாழப்போவதில்லை என்று அவர் வயோதிக உடல்நிலை அவனுக்குத் தெரிவித்தது. இதுவே கடைசி சந்திப்பாக இருக்கலாம் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவர் சொன்னதிலும் உண்மை இருந்ததால் அவன் மன வருத்தத்துடனேயே அவர் செல்லச் சம்மதித்தான்.

ஷாஹாஜி ஜீஜாபாயிடம் விடைபெற வந்தார். அவளிடம் அவர் நிறைய சொல்ல வேண்டியிருந்தது. கணவன் மனைவி என்ற உறவில் அவர்களிடையே இருந்த விரிசல் நிரந்தரமானது என்றாலும் பிள்ளைகள் என்ற ஒரு புள்ளியில் அவர்கள் இணைந்தே இருந்தார்கள். பிள்ளைகளில் மூத்தவனை அவர் அவளிடம் இருந்து பிரித்து அழைத்துப் போய் அவன் கடைசி வரை திரும்பாமலேயே போகும் சூழல் ஏற்பட்டு விட்டதில் அவர் மனதில் மாபெரும் குற்றவுணர்ச்சி இருந்தது. சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் அவளிடம் மன்னிப்பு கூடக் கேட்டு எழுதியிருந்தார். இப்போது சிவாஜி மட்டுமே அவர்கள் இணையும் புள்ளியாக இருக்கிறான். அவன் வளர்ச்சியில், அவன் அடைந்த உயரங்களில் அவர் பங்கு என்று எதுவுமே இல்லை. அவள் மட்டுமே அவன் வாழ்க்கையில் சூத்திரதாரியாக இருந்திருக்கிறாள். அதற்கு அவர் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது என்று தோன்றியது. அந்த வகையில் இன்று அவர் பெற்றிருக்கும் அத்தனை மரியாதைக்கும் அவளே காரணம். அவள் அவ்வளவு தைரியமாகவும் உறுதுணையாகவும் இருந்திரா விட்டால் சிவாஜி என்றோ மங்கிப் போயிருக்கலாம்….

நேரடியாக அவளிடம் மன்னிப்பு கேட்கவும், நன்றி சொல்லவும் மனம் அவரைத் தூண்டினாலும் அவற்றை முறையாக வார்த்தைப்படுத்திச் சொல்ல முடியாமல் ஏதோ அவர் தொண்டையை அடைத்தது.

ஜீஜாபாய் பேச்சிழந்து தன் முன் நிற்கும் கணவனைப் பார்த்தாள். அவள் மனமும் பழைய நினைவுகளில் சில கணங்கள் தங்கின. அவர்கள் இருவரும் அன்பாய் ஆனந்தமாய் இணைந்திருந்த ஒரு குறுகிய காலம் அவள் நினைவில் வந்தது. குறுகியதே ஆனாலும் அவள் மனதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த காலம் அது. அவள் கணவன் அந்த அன்பு பந்தத்திலிருந்து என்றோ விலகிப் போயிருந்தாலும் ஒரு பெண்ணாய், ஒரு மனைவியாய் அவள் பொக்கிஷமாய் நினைவுகூரும் காலம் அது. அது அவள் மனதை ஒரு கணம் லேசாக்கி மறு கணம் கனக்க வைத்தது. அவளும் பேச்சிழந்து அவரைப் பார்த்தபடி மௌனமாக நின்றாள்.

(தொடரும்)

என்.கணேசன்

(தொடரும்)
என்.கணேசன்

8 comments:

  1. Touching and very emotional chapter. I felt as if you have entered into the souls Sivaji's parents and explaining their feelings. Hats off sir.

    ReplyDelete
  2. ஷாஹாஜி ஜீஜாபாய் எண்ணங்கள் வெகு யதார்த்தம். உரையாடல்கள் மிக அருமை.

    ReplyDelete
  3. அற்புதம் ... உணர்வுகளை எழுத்தில் விவரிக்கும் உங்களின் ஆற்றல் வியக்கவைக்கிறது ...

    ReplyDelete
  4. All dialogues in this Episode are extraordinary!!

    ReplyDelete
  5. அருமை... உணர்வுகளை தாங்கள் எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் அற்புதம்... படிக்கும்போது நெகிழச் செய்கிறது....

    ReplyDelete
  6. //ஒரு கணம் லேசாக்கி மறு கணம் கனக்க வைத்தது.// excellent!!

    ReplyDelete