சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 2, 2019

சத்ரபதி 88


பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா ஷாஹாஜிக்கு உடனடியாக பீஜாப்பூர் வருமாறு அழைப்பு விடுத்திருந்தது ஷாஹாஜியின் இரண்டாம் மனைவி துகாபாய்க்கும், கடைசி மகன் வெங்கோஜிக்கும் பலத்த சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. வெங்கோஜி எதாவது காரணம் சொல்லி பீஜாப்பூர் செல்வதைத் தவிர்க்கும்படி தந்தையை மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.
ஷாஹாஜி மகனைக் கேட்டார். “காரணம் என்னவென்று சொல்வேன் மகனே. அழைப்பது அரசரல்லவா? போக மறுப்பது தவறல்லவா?”

வெங்கோஜி சொன்னான். “சென்ற முறை அவருடைய தந்தை உங்களைச் சிறைப்படுத்தியது போல உங்களை இப்போதைய சுல்தானும் கண்டிப்பாகச் சிறைப்படுத்தக்கூடும் தந்தையே.”

ஷாஹாஜி சொன்னார். “சென்ற முறையின் சூழல் வேறு. இப்போதைய சூழல் வேறு மகனே.”

வெங்கோஜி சொன்னான். “சென்ற முறையை விட இப்போதைய சூழல் மேலும் மோசமாக இருக்கிறது தந்தையே. சின்ன அண்ணன் பீஜாப்பூரின் பல கோட்டைகளை கையகப்படுத்தியிருக்கிறான். அவனை அடக்குவதற்கு சுல்தானுக்கு ஒரு வழியும் இல்லை. சென்ற முறை போலவே கடைசி அஸ்திரமாக உங்களைக் கைது செய்து அண்ணனைப் பணிய வைக்க அவர் முயற்சி செய்யக்கூடும்…”

ஷாஹாஜி மகன் தோளைப் பாசத்துடன் தட்டிக் கொடுத்துச் சொன்னார். “உன் சந்தேகமும் பயமும் அனாவசியம் மகனே. சுல்தானின் நிலைமை மோசமாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் சிவாஜியின் நிலைமை அன்றைய நிலைமையைப் போல இல்லை. அன்று என்னை வைத்து சிவாஜியை அடிபணிய வைக்கிற நிலைமை சுல்தானுக்கும், முகலாயப் பேரரசரிடம் சிவாஜி உதவி கேட்டு என்னைக் காப்பாற்றுகிற நிலைமை சிவாஜிக்கும், இருந்தது. ஆனால் இன்று சுல்தான் என்னைச் சிறைப்படுத்தினால் உன் சின்ன அண்ணன் நேரடியாகவே வந்து பீஜாப்பூரைத் தாக்கும் அளவுக்கு வலிமை பெற்றவனாக இருக்கிறான். அதனால் சுல்தான் அந்த முட்டாள்தனத்தைச் செய்ய மாட்டார்.”

துகாபாய் சொன்னாள். “ஆனாலும் எதற்கு விஷப்பரிட்சை? உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி அனுப்பினால் போதுமே! வயதானவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது இயல்பு தானே… அதைச் சொல்லி அனுப்பினால் அவருக்கும் அது பொய்யாய்த் தோன்றாது”
அதற்கு ஷாஹாஜி சம்மதிக்கவில்லை. “துகா! இப்போதைய சுல்தானின் தந்தை ஒரு சிறு குறுகிய காலத்தில் என்னிடம் கடும் பகைமை பாராட்டியவர் என்றாலும் மற்ற காலங்களில் என்னிடம் நட்பாகவும், மரியாதையாகவும் இருந்தவர். அதை நான் மறந்துவிட முடியாது. கடைசியாக நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது நண்பரே என்று மானசீகமாக அழைத்தவர். அதனால் அரசர் என்ற மரியாதை மட்டுமல்லாமல் நண்பரின் மகன் என்ற பிணைப்பும் எனக்கு இந்த சுல்தான் மீது இருக்கிறது. நான் போகத்தான் போகிறேன். நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம். எனக்கு ஒன்றும் நேர்ந்து விடாது.”

அவரது உறுதியான முடிவை மாற்ற முடியாமல் வெங்கோஜியும், துகாபாயும் அவரை அரைமனதுடன் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களால் ஷாஹாஜி அளவுக்குத் தைரியமாக இருக்க முடியவில்லை.


லி ஆதில்ஷா தன் அரண்மனையில் சகல மரியாதைகளுடன்  ஷாஹாஜியை வரவேற்றான். அவரை இருக்கையில் அமர வைத்து விட்டுத் தான் தானமர்ந்தான். “தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது ஷாஹாஜி அவர்களே. என் தந்தையே நேரில் வந்திருந்தால் எப்படி உணர்வேனோ அப்படி நான் உணர்கிறேன்…”

ஷாஹாஜி அந்த மரியாதையிலும் வார்த்தைகளிலும் நெகிழ்ந்து போனார்.
அலி ஆதில்ஷா அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தான். 

ஷாஹாஜி சொன்னார். “வயோதிகத்தின் சில பாதிப்புகள் இருக்கின்றன அரசே. மற்றபடி நான் நலமாகவே இருக்கிறேன்…. தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

அலி ஆதில்ஷா சொன்னான். “நலமாக இருக்கிறேன் என்று நான் சொன்னால் அது பொய்யாக இருக்கும் ஷாஹாஜி அவர்களே. நான் நன்றாக உறங்கி நீண்ட காலம் ஆகி விட்டது. எங்கெங்கு திரும்பினாலும் பிரச்னைகளே கண்களுக்குத் தெரிகின்றன. ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் நான்கு பிரச்னைகள் உருவாகின்றன…. நான் அரியணை ஏறிய கணத்திலிருந்து இந்தக் கணம் வரை இந்த நிலைமை தான் இருக்கிறது,…”

ஷாஹாஜி அலி ஆதில்ஷாவை இரக்கத்துடன் பார்த்தார். பல்வேறு பிரச்னைகளை நாலாபக்கமும் பார்த்து வாழ்ந்தவர் அவர். அதனால் அந்தச் சூழலில் பாதிக்கப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று பரிபூரணமாக அவர் அறிவார்….. சுல்தானுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று அவருக்கு விளங்கவில்லை.

அலி ஆதில்ஷா சொன்னான். “தெற்கில் கர்நாடகத்தில் உங்கள் எல்லைகளைத் தாண்டிய பகுதிகளில் அங்கங்கே கிளர்ச்சிகள் நடந்து வருவது உங்களுக்குத் தெரியும். அவற்றை அடக்கப் படைகளை அனுப்பி இருக்கிறேன். அதைச் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனால் வடக்கில் உங்கள் மகன் எனக்குப் பெரிய தலைவலியாக உள்ளான் ஷாஹாஜி அவர்களே. அவன் எந்த நேரத்தில் எங்கே வருவான், எந்தக் கோட்டையை எடுத்துக் கொள்வான் என்பதை அவனும் அல்லாவும் மட்டுமே அறிவார்கள்... ”

ஷாஹாஜி தர்மசங்கடத்துடன் மெல்லச் சொன்னார். “சிவாஜி மீதும் அவன் செயல்கள் மீதும் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அரசே!....”

அலி ஆதில்ஷா சொன்னான். “நான் தங்களைக் குற்றம் சாட்டவில்லை ஷாஹாஜி அவர்களே. என்னுடைய நிலைமையைச் சொன்னேன். அவ்வளவு தான். ஆனால் நான் தங்களை அழைத்தது அவன் விஷயமாகத் தான்…”

ஷாஹாஜி கேள்விக்குறியோடு அலி ஆதில்ஷாவைப் பார்த்தார்.

அலி ஆதில்ஷா சொன்னான். “வயதில் அவனை விட நான் இளையவன் என்றாலும் அவனுடன் போராடி நான் களைத்து விட்டேன். இதை என் தந்தையைப் போன்ற தங்களிடம் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. அவனுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன். தாங்கள் என் சார்பாக அவனிடம் தூது செல்ல வேண்டும். அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொண்ட பகுதிகளும், கோட்டைகளும் அவனுடையதாகவே நான் அங்கீகரிக்கத் தயாராக இருக்கிறேன். அதை மீட்க எப்போதும் நான் போர் தொடுக்க மாட்டேன் என்று உறுதியும் கூறுகிறேன். அதற்கு அவனிடம் நான் கேட்பதெல்லாம் இனி பீஜாப்பூரின் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்க அவன் முயற்சி செய்யக்கூடாது என்ற நிபந்தனையைத் தான்….”

ஷாஹாஜி தன் காதுகளை நம்ப முடியாமல் திகைத்தார். அதற்கு மேல் அலி ஆதில்ஷா சொன்னதெல்லாம் அவர் காதுகளில் விழவில்லை. முன்னொரு காலத்தில் பீஜாப்பூரின் படைப்பிரிவில் சேர்ந்து கொள், உன் எதிர்காலத்திற்கு அது அல்லது முகலாயப் படையில் சேர்வது தான் நல்லது என்று அவர் இதே பீஜாப்பூரில் சிவாஜிக்கு அறிவுரை வழங்கியது நினைவுக்கு வந்தது. ’சில நூறு வீரர்களையும் சகாயாத்ரி இளைஞர்களையும் நம்பி நீ பீஜாப்பூர், முகலாய மலைகளோடு மோத முடியாது மகனே’ என்று எச்சரித்துமிருக்கிறார். சிவாஜி அவரிடம் சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவர் காதில் ரீங்காரம் செய்தது.

“என்னுடன் இறைவன் இருக்கிறான் தந்தையே. நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் என்னுடன் இறைவனை உணர்ந்து வருகிறேன். இப்போது இருக்கும் படைகளும் வீரர்களும் பெருகவும் கூடும், விலகவும் கூடும். ஆனால் என்னிடமிருந்து இறைவனை யாரும் விலக்கி விட முடியாது. அவனையே அசைக்க முடியாத வழித்துணையாக நம்பி நான் என் பாதையைத் தீர்மானிக்கிறேன். ஆசி மட்டும் வழங்குங்கள் தந்தையே. எனக்கு அது போதும்”

இன்று சிவாஜியுடன் மோதி பீஜாப்பூர் மலை சுக்குநூறாக உடைந்திருக்கிறது. அவர் மகனிடம் சமாதானம் செய்து கொள்ள அலி ஆதில்ஷா விரும்புகிறான்… அன்று மகனுக்கு ஆசிகள் வழங்கிய போதும் கூட இப்படியொரு சக்தி வாய்ந்த நிலையை மகன் ஒருநாள் எட்டுவான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

ஜீஜாபாயின் வார்த்தைகளும் அவர் காதுகளில் ஒலித்தன. “நாம் தான் நம் கனவுகளைத் தொலைத்து விட்டோம். அவனிடமாவது அந்தக் கனவுகள் தங்கட்டும். அவனுக்காவது அவற்றை நிஜமாக்கும் பாக்கியம் வாய்க்கட்டும்” அவளுடைய நம்பிக்கையும் பிரார்த்தனையும் அதுவாகவே இருந்தது. அதன்படியே அவர்கள் மகன் சாதித்து விட்டான்…..

“என்ன ஷாஹாஜி எதுவுமே சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” அலி ஆதில்ஷாவின் வார்த்தைகள் ஷாஹாஜியை நிகழ்காலத்திற்கு வரவழைத்தன.

“மன்னிக்க வேண்டும் அரசே. ஏதோ பழைய நினைவுகள் இடையே குறுக்கிட்டு விட்டன. என்ன சொன்னீர்கள்?”

அலி ஆதில்ஷா தான் முன்பு சொன்னதை மறுபடி சொன்னான். ஷாஹாஜி கவனமாகக் கேட்டுக் கொண்டார். முடிவில் சிவாஜியிடம் தூது போக அவர் சம்மதம் தெரிவித்தார்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் வெளியேறிய பின் ராஜமாதா திரைச்சீலையின் பின்னிருந்து முன்னுக்கு வந்தாள். ஷாஹாஜி வந்ததிலிருந்து போகும் வரை நடந்த எல்லா சம்பாஷணைகளையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு வெளிப்பட்ட அவள் மகனிடம் சந்தேகமாகக் கேட்டாள். “மகனே இந்த ஷாஹாஜியும் சென்று சிவாஜியுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது?”


அலி ஆதில்ஷா களைப்புடன் சொன்னான். “தாயே.  என் தந்தை தன் கடைசி காலத்தில் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.  நானும் இவரை நம்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். இன்றாவது நிம்மதியாகத் தூங்க முயற்சிக்கிறேன்.”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Superb. Sivaji's success and Shahaji's recollections are neatly explained. I pity Ali adhil shah

    ReplyDelete
  2. ஷாஹாஜியின் சமாதான தூது வேலைக்கு ஆகுமா..? சிவாஜி ஏற்றக்கொள்வானா..?

    ReplyDelete
  3. இறைவன் துணை ஒன்றுதான் என்றும் நிலைத்து நிற்கின்றது
    மற்றது வலிமை தந்திரம் அறிவு போன்றவையெல்லாம் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்கின்றன
    ஒரு புதிய கதைக்களத்தில் சிவாஜி வாழ்க்கையை வாசிப்பதற்கு கணேசன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி



    ReplyDelete