சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 31, 2023

சாணக்கியன் 72

 

க்ளைக்டஸ் வாயுவேகத்தில் தட்சசீலம் வந்து சேர்ந்தான். ஆம்பிகுமாரனிடம் உடனடியாகப் பேச வேண்டும் என்று அவனுடைய காவலனை நிர்ப்பந்தித்து மதிய வேளையில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த ஆம்பி குமாரனை எழுப்பி வரவழைத்தான். ஆம்பி குமாரனுக்குக் கோபம் வந்தது.  அலெக்ஸாண்டரைப் போல பிலிப் நடந்து கொள்கிறான். பிலிப் போல் க்ளைக்டஸ் நடந்து கொள்கிறான். இப்படியே விட்டால் சாதாரண யவன வீரன் கூட அலெக்ஸாண்டர் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது போல் ஆகிவிடும் என்று தோன்றியதால் க்ளைக்டஸுக்கு அவன் இருக்கும் நிலையை உணர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தபடி வந்தான்.

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டுச் சொன்னான். “காந்தார அரசே. நிலைமை பல இடங்களிலும் விபரீதமாகிக் கொண்டே வருகின்றன. தட்சசீலத்தில் இருக்கும் சதிகாரர்கள் தூரப்பகுதிகளுக்கும் போய் சதியை விதைத்து விட்டு வந்திருக்கிறார்கள். பல இடங்களிலும் புரட்சி வெடிக்கிற நிலைமையில் இருக்கின்றது. அதனால் தான் கேகயத்தில் இருந்து இங்கு வரக் கிளம்பியிருந்த சத்ரப் பிலிப் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டு மாளவத்திற்குச் சென்று விட்டார். அந்தச் சதிகாரர்களை உடனே சிறைப்படுத்த வேண்டும் என்று தங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். இதில் சிறிது தாமதமும் கூடாது என்று எச்சரித்துள்ளார்”

 

ஆம்பி குமாரனுக்கு க்ளைக்டஸ் தட்சசீலத்தில் சதிகாரர்கள் என்று சொன்னதும், பிலிப் கட்டளையிட்டுள்ளார் என்று சொன்னதும் சிறிதும் பிடிக்கவில்லை. கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்டான். “யாரந்த சதிகாரர்கள்?”

 

“உங்கள் ஆசிரியர் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரும், அவரது மாணவர்களும்”

 

ஆம்பி குமாரனுக்கு உங்கள் ஆசிரியர் என்று சொன்னதும் பிடிக்கவில்லை. ஆச்சாரியர் அவனுக்கு மட்டுமா ஆசிரியர் எத்தனையோ பேருக்கு ஆசிரியர். சதிகாரர் என்றதும் அவனுடைய ஆசிரியர் ஆகி விட்டாரா அவர் என்று நினைத்து எரிச்சலடைந்த அவன் சொன்னான். “அவரை என் ஆசிரியர் என்று சொல்வது தவறு. அது அவருக்கும் பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை என்பதால் என்றோ படிப்பைப் பாதியில் விட்டு வந்தவன் நான்.”

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் சொன்னான். “அவரை உங்களுக்குப் பிடிக்காதது மிக நல்லதாகப் போயிற்று அரசே. அப்படியானால் அவரைச் சிறைப்படுத்துவதில் உங்களுக்குத் தயக்கமோ, தர்மசங்கடமோ ஏற்பட வழியில்லை. நீங்கள் அவரையும், சதியில் அவருக்கு ஒத்துழைத்த மாணவர்களையும் உடனடியாகக் கைது செய்யுங்கள்”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “அவர் தட்சசீலத்தில் இருந்திருந்தால் பிலிப்பின் கட்டளையை மிக மகிழ்ச்சியாக நிறைவேற்றியிருப்பேன் க்ளைக்டஸ். அவரும் அவர் சதிகார மாணவர்களும் முந்தாநாள் அதிகாலையில் இங்கிருந்து போய் விட்டார்கள். அவர்களைக் கண்காணித்து வந்த ஒற்றன் அந்தத் தகவலைச் சொன்னவுடன்,  ’விட்டது சனியன்’ என்று நான் இருந்து விட்டேன்.”

 

“அவர்களை ஏன் போக அனுமதித்தீர்கள் அரசே?”

 

“அவர்கள் பிரச்சினைக்காரர்கள் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது. ஆனால் சிறைப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில் தான் நான் இருந்தேன். அப்படிப்பட்ட பிரச்சினைக்காரர் இங்கிருந்து வெளியேறி வேறெங்காவது பிரச்சினை செய்யப் போகிறார் என்றால் நமக்கு நல்லதல்லவா? மேலும் அவருக்கு இங்கிருந்து வெளியேற என் அனுமதி எதற்கு க்ளைக்டஸ்?”

 

க்ளைக்டஸ் திகைத்தான். “அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பியிருக்கிறீர்களா இல்லையா?”

 

ஆம்பி குமாரன் கோபத்தோடு சொன்னான். “என்னிடம் இருக்கிற ஒற்றர் படையில் பாதி முன்பே எடுத்துக் கொண்டு விட்டீர்கள். மீதி இருப்பதில் நான் எத்தனை விஷயங்களைக் கண்காணிக்க முடியும். ஆனாலும் கூட அவர்கள் இங்கே இருக்கிற வரை அவர்களைக் கண்காணிக்க சிலரை நியமித்திருந்தேன். அவர்கள் போன பிறகு அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை இருக்கிற எனக்குத் தோன்றவில்லை.”

 

க்ளைக்டஸ் பொறுமையிழந்து சொன்னான். “காந்தார அரசே. அவர்கள் தான்  புரட்சிகளைப் பல இடங்களில் வெடிக்க வைக்கத் திட்டமிட்டு இயக்குகிறார்கள். அப்படி இருக்கையில் அந்தப் புரட்சிகளை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆச்சாரியரையும், அந்த மாணவர்களையும் சிறைப்பிடிப்பது முக்கியமல்லவா?”

 

ஆம்பி குமாரனுக்கு க்ளைக்டஸ் பொறுமையிழந்து குரலை உயர்த்திப் பேசியது பிடிக்கவில்லை. அவனும் குரலை உயர்த்திக் கேட்டான். “புரட்சி புரட்சி என்று சொல்கிறாயே க்ளைக்டஸ், அது எங்கே இது வரை வெடித்து இருக்கிறது? நம்மிடம் இப்போது இருப்பது எல்லாமே அனுமானங்களே அல்லவா? அப்படியே வெடித்தாலும் கட்டுப்படுத்தத் தானே நம்மிடம் வீரர்கள் இருக்கிறார்கள்? சர்வ வல்லமையுள்ள நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ”

 

க்ளைக்டஸ் வாயடைத்துப் போனான். அவன் வார்த்தைகளை விட அவன் வாயடைத்து நின்ற விதம் ஆம்பி குமாரனுக்கு வரவிருக்கும் பிரச்சினைகளை உணர்த்துவது போல் இருந்தது. அவன் க்ளைக்டஸிடம் பொறுமையாகச் சொன்னான். “ஆச்சாரியரைச் சிறைப்படுத்துவது பற்றி நீங்கள் யோசிக்கும் முன்பே அவரை இந்த உலகத்தை விட்டே அனுப்புவதற்கு நான் திட்டமிட்டு இருந்தேன் க்ளைக்டஸ். பிலிப்பிடம் கூட நான் தெரிவித்திருக்காத ரகசியத்தை நான் இப்போது உன்னிடம் தெரிவிக்கிறேன். நாம் ஒன்றைச் செய்யத் திட்டம் போடுவதற்குள் ஆச்சாரியர் அதில் பத்து படிகள் கடந்து யோசிக்கக்கூடிய அறிவாளி என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதோ, அவருக்கு மேல் சிந்திப்பதோ கஷ்டம் எனக்குத் தெரிந்திருந்தது. அதனால் நான் அவரை ஒரேயடியாக ஒழிக்கத் திட்டமிட்டு என்ன செய்தேன் தெரியுமா...”

 

ஆம்பி குமாரன் தன் புத்திசாலித்தனமான திட்டத்தையும் அது சாம்பலான விதத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.  அவன் சொல்லி முடித்த பின்பும் க்ளைக்டஸ் பேச்சிழந்து அமர்ந்திருந்தான்.

 

“ஆச்சாரியரே பிலிப் மாளவம் நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.”

 

சந்திரகுப்தன் சாணக்கியரிடம் தகவலைத் தெரிவித்தான். வனப்பகுதியில் ஒரு பாறை மீது நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டிருந்த அவர் புன்னகைத்தார். அவர் எதிர்பார்த்தது தான் நடந்திருக்கிறது. எந்தத் தகவல் யாருக்குப் போய் சேர வேண்டுமோ, அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டுக் காத்திருந்த அவருக்கு எல்லாம் திட்டப்படி நகர ஆரம்பித்த திருப்தி ஏற்பட்டது.  


சந்திரகுப்தன் அந்தப் பாறையில் சாய்ந்து நின்றிருக்க மற்ற சில மாணவர்களும், பல வீரர்களும், தரையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய முகத்திலும் வியப்பு தெரிந்தது. ஏனென்றால் சாணக்கியர் பிலிப் மாளவத்திற்கு வருவான் என்று முன்பே தன் யூகத்தைச் சொல்லி இருந்தார்.

 

சாரங்கராவ் கேட்டான். “ஆச்சாரியரே. நீங்கள் எப்படி நிச்சயமாக பிலிப் மாளவம் வருவான் என்று சொல்லியிருந்தீர்கள்?”

 

சாணக்கியர் சொன்னார். “சாரங்கராவ். தலைவன் எவ்வழி அவ்வழி தான் அவன் தேர்ந்தெடுக்கும் மனிதர்களும் இருப்பார்கள். தலைவன் தன்னைப் போலவே செயல்படுகிறவனைத் தான் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பான். அலெக்ஸாண்டரின் மிகப்பெரிய பலம் அவன் தைரியமும், எதிலும் முன்சென்று நிற்கும் குணமும் தான். அவன் தன் தற்காப்பையோ, பாதுகாப்பையோ  பற்றி என்றும் கவலைப்பட்டவனல்ல. ஆபத்திலிருந்தோ, பொறுப்பில் இருந்தோ தூர ஓடுபவனல்ல அவன். மாளவத்தில் அவன் காயப்பட்டது கூட அதனால் தான். அப்படிப்பட்டவன் தனக்குப் பிறகு தான் வென்ற பாரதப் பகுதிகளின் சத்ரப் ஆக ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் அவனும் ஓரளவாவது அப்படிப்பட்டவனாகத் தான் இருக்க வேண்டும். பிலிப் மாளவத்தில் தான் புரட்சி வெடிக்கப்போகிறது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் அதை அடக்கிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கண்டிப்பாக நினைப்பதும், அங்கிருந்து அதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் தான் தலைமைப் பண்பு. ஏனென்றால் அவன் அலெக்ஸாண்டருக்குப் பதில் சொல்ல வேண்டியவன். அதனால் தான் கேள்விப்பட்டவுடனேயே கிளம்பி வருவான் என்று நான் எதிர்பார்த்தேன்.”

 

வியப்புடனும் உற்சாகத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து சந்திரகுப்தன் மெல்ல எச்சரித்தான். “நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்து விடுகிறது என்று நாம் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நம் முதல் திட்டத்தில் நாம் வெற்றியடைய வேண்டியது மிக முக்கியம். நம் சிறு கவனக்குறைவும், அலட்சியமும் முதல் திட்டத்தை மட்டுமல்லாமல் நம் அடுத்தடுத்த திட்டங்களையும் பாதித்து விடும்...”

 

சாணக்கியர் சொன்னார். “உண்மை தான்”

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, August 28, 2023

யோகி 11

கிருஷ்ணமூர்த்தியின் தற்கொலை சேதுமாதவனுக்குத் தாங்க முடியாத பேரிடியாக இருந்தது. மகன் மரணத்தோடு அவரில் ஒரு பகுதியும் இறந்து விட்டதாகவே தோன்றியது. ஆனாலும் உறவினர்கள், நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவரையும் முடிந்த அளவு திடமனதுடனேயே அவர் சந்தித்தார். நண்பர்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் மகனின் தற்கொலைக்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அன்றிரவு அவரைத் தனியாக விட்டுச் செல்ல அமீர் பாயும், மைக்கேலும் தயங்கினார்கள். அவர்கள் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் காரணத்தைப் புரிந்து கொண்ட அவர் விரக்தி கலந்த புன்னகையுடன் சொன்னார். “பயப்படாதீங்க. நானும் தற்கொலை செய்துக்க மாட்டேன். கடவுளாய் எப்ப என்னைக் கூப்பிட்டுக்கறானோ அது வரைக்கும் நான் இருந்து என் கர்மாக்களை முடிச்சுகிட்டு தான் போவேன்.”

 

அவர்களிருவரும் கண்கலங்கினாலும் அவருடைய மனதிடத்தை மெச்சியபடி சற்று நிம்மதியுடன் போனார்கள். அன்றிரவு உறங்குவதற்கு முன் சேதுமாதவன் வழக்கமாய் படிக்கும் பகவத் கீதையைப் படிக்க எடுத்த போது அதனுள் அவர் மகன் எழுதிய இன்னொரு கடிதம் இருந்தது.

 

அன்பு அப்பாவுக்கு,

சைத்ரா இறந்த கணத்திலேயே நானும் உயிரை விட ஆசைப்பட்டாலும், உங்களை நினைத்து என்னால் முடிந்த வரை நான் தாக்குப் பிடித்தேன். உங்களுக்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதால், நீங்கள் இருக்கும் வரையாவது நானும் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை அப்பா. நான் இறந்து எனக்கு நீங்கள் கொள்ளி வைப்பது, உங்கள் வயதில் உங்களுக்குக் கொடுமையான விஷயம் என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் என் மகள் இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை அப்பா. மன்னிக்க முடியாத குற்றத்தை நான் செய்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாகவே உணர்கிறேன். ஆனாலும் என் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த நீங்கள், உங்கள் இயல்பான பெருந்தன்மையின் காரணமாக, இந்தக் கோழையை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களை விட்டுப் பிரிகிறேன்.

உங்கள்

கிருஷ்ணமூர்த்தி

பி.கு. முடிந்தால் என் கடைசி வேண்டுகோளை மட்டும் நிறைவேற்றுவீர்களா அப்பா?”

 

சேதுமாதவன் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு, தேற்றக் கூட யாருமில்லாத தனிமையில் நிறைய அழுதார். பின் வெறுமையே மிஞ்சியது. 

 

தொடர்ந்த நாட்களில் இனி என்ன செய்யப் போறீங்க?” என்று பலரும் சேதுமாதவனிடம் கேட்டார்கள். அவர் யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவருக்கே இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. துக்கம் விசாரிக்க வந்த தூரத்து உறவினர்களும், நண்பர்களும் அவரை இரக்கத்துடன் பார்த்தார்கள். சைத்ரா இறந்த சமயத்தில் கொரோனா உச்சத்தில் இருந்ததால் அவர்கள் துக்கம் விசாரிக்க வரவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு எல்லாம் திரும்புவதால் அவர்கள் ஒவ்வொருவராக தினமும் வந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் உதவி ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கச் சொன்னார்கள். அவர் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. அவர்கள் செய்ய முடிந்த உதவி எதுவும் இருக்கவில்லை. அமீர் பாயும், மைக்கேலும் முடிந்த நேரங்களில் எல்லாம் வந்து உடனிருந்தது தான் அவருக்குச் சிறிதாவது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவர்களும் போன பின் வெறுமையே மிஞ்சியது.

 

ஒரு வாரம் கழித்து அவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாள் வந்தது. சென்ற வருடம் வரை அவருடைய பிறந்தநாட்களில் பேத்தி  சைத்ரா தான் முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பாள். அடுத்ததாக அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து சொல்வார். இந்தப் பிறந்த நாளில் வாழ்த்து சொல்ல அவர்களிருவரும் உயிருடன் இல்லை...

 

காலையிலிருந்தே பழைய நினைவுகளின் கனத்தோடு வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவர் அந்த நாளின் வெறுமை சகிக்க முடியாமல் போன போது, எழுந்து போய் தொலைக்காட்சியை இயக்கினார். அதில் விளையாட்டுச் செய்திகள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தச் செய்திகளில் அவர் மனம் தங்கவில்லை என்றாலும் அந்தச் சத்தம் நிசப்தத்தின் கொடுமையை ஓரளவு குறைத்தது... 

 

“.... மீண்டும் தலைப்புச் செய்திகள். அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மூன்று மாதங்கள் கழிந்து இன்று சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு தமிழக கவர்னரும், அமைச்சர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.....”

 

சேதுமாதவன் நிமிர்ந்து உட்கார்ந்தார். விமானத்திலிருந்து தளர்ச்சியுடன் இறங்கும் முதலமைச்சரையும், வரவேற்ற கவர்னர் மற்றும் அமைச்சர்களையும் தொலைக்காட்சி சில வினாடிகள் காட்டியது. அவருக்கு அடுத்த செய்திகள் எதுவும் கவனத்தில் பதியவில்லை. சில நிமிடங்களுக்கு முன் தேவைப்பட்ட சத்தம் இப்போது இடைஞ்சலாகத் தோன்ற தொலைக்காட்சியை அணைத்தார்.

 

அருணாச்சலம் சென்னை வந்து சேர்ந்த செய்தி கிடைத்த இந்தக் கணம் வரை அவர் ஒரு ஜடம் போலவே இருந்தார். ஜடத்தன்மையிலிருந்து இப்போது அவரை எழுப்பி விட்டது, மகனின் கடைசி கோரிக்கை தான். இனி என்ன செய்யப் போறீங்க?”  என்று எல்லாரும் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி சொன்னது போல மகனுக்காகவும், பேத்திக்காகவுமாவது அவர் அருணாச்சலத்தைச் சந்திக்க வேண்டும்.

 

கிருஷ்ணமூர்த்தியின் கடைசி வேண்டுகோளையும், பகவத்கீதையில் வைத்து விட்டுப் போயிருந்த கடிதத்தையும் பற்றி அவர் அமீர் பாய் மற்றும் மைக்கேல் இருவரிடம் தவிர வேறு யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.   முதலமைச்சரின் வருகையை அறிந்த அவர்களிருவரும் அன்று பரபரப்புடன் அவர் வீட்டுக்கு வந்தார்கள். மூவருமாகச் சேர்ந்து மீண்டும் முதலமைச்சர் குறித்த செய்திகளை மாறி மாறி ஒவ்வொரு சேனலிலும் பார்த்தார்கள். முதல்வருக்கு ஓய்வு மிக அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அதனால் குறைந்த பட்சமாக ஓரிரு மாதமாவது அவருடைய நிர்வாகச் சுமைகளை அவருடைய அமைச்சர்களே தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தான் எல்லா சேனல்களிலும் செய்திகள் சொல்லப்பட்டன. நாளையும், நாளை மறுநாளும், பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும் அவருடைய உடல்நலம் விசாரிக்க மரியாதை நிமித்தம் வரவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

 

அன்றிரவு ஆளுங்கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. “முதல்வருக்கு ஓய்வு மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் இரண்டு மாதங்கள் முடியும் வரை கட்சித் தலைவர்கள் உட்பட கட்சிக்காரர்கள் யாரும் அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.”

 

மைக்கேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் செக்ரட்டரியேட்டில் ஒரு உயர்பதவியில் இருந்தார். அவர் மூலம் விசாரித்த போது முதல்வரின் மருத்துவரும், முதல்வருக்கு நெருங்கிய இரண்டு அமைச்சர்களும், தலைமைச் செயலரும் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்தது. இதையெல்லாம் கேட்டு அவர்களது நம்பிக்கையும், உற்சாகமும் தானாகக் குறைந்திருந்தன. முதல்வரின் இளம் காரியதரிசியின் தொலைபேசி எண் மட்டுமே அந்த உறவினர் மூலம் பெற முடிந்தது.

 

விதி இந்த விஷயத்திலும் தனக்கு அனுகூலமாக இல்லை என்று விரக்தியுடன் சேது மாதவன் எண்ணிக் கொண்டார். சாதாரண காலங்களிலேயே முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கிடைப்பது சுலபமல்ல. அப்படி இருக்கையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்விலிருக்கும் போது அவரைச் சந்திக்க, ஐம்பது வருட காலம் தொடர்பில் இல்லாமல் இருந்த ஒரு பால்ய நண்பனுக்கு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாகத் தான் இருக்கும் என்பது புரிந்தது. ஆனாலும் அவர் முயன்று தானாக வேண்டும்பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும் வந்து போகிற வரை காத்திருந்து விட்டு அடுத்த நாளே முயன்று பார்ப்பதாக சேதுமாதவன் சொன்ன போது, அமீர் பாயும், மைக்கேலும் வெறுமனே தலையசைத்தார்கள்.

 

அவர்களுக்கு முதல்வரை சேதுமாதவன் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. காரணம், சேதுமாதவனுடன் முதல்வருக்கு இருக்கும் நட்பு உண்மையானதாக இருக்குமானால், இத்தனை வருட காலத்தில் முதல்வர் தானாகவாவது அவரைச் சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். சேதுமாதவன் மத்திய அரசுப் பணியில் இருந்ததால் முதல்வருக்கு அவருடைய விலாசத்தைக் கண்டுபிடிப்பதோ, தொடர்பு கொள்வதோ சிரமமாக இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர் முயற்சி செய்யாதது, அரசியலில் உயர ஆரம்பித்த பின் இந்த நல்ல மனிதருக்கு அவர் அந்த அளவு முக்கியத்துவம் தந்திருக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே அவர்கள் நினைத்தார்கள். அப்படி இருக்கையில் உடல்நலக்குறைவால் ஓய்வு கட்டாயம் என்கிற நிலையில் முதல்வர் இருக்கையில், சேதுமாதவனுக்குச் சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் இதைச் சொல்லி அந்த நல்ல மனிதரை, இப்போது அவரிருக்கும் மனநிலையில் மேலும் புண்படுத்த அவர்கள் விரும்பவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்






Thursday, August 24, 2023

சாணக்கியன் 71


ற்றன் புருஷோத்தமனையும், இந்திரதத்தையும் பணிவுடன் வணங்கி விட்டுச் சொல்ல ஆரம்பித்தான். ”கேகயத்தில் குடிமக்கள் பலர் இப்போது நம் வீரர்கள் வீடுகளுக்கு அடிக்கடிச் செல்கிறார்கள். யவனர்களை என்றைக்கும் நம்பி விடாதீர்கள். அவர்கள் உங்களைப் பலிகடாக்களாக்கி விடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள். மஸ்காவதி வீரர்களைப் பிரிந்து செல்ல அனுமதித்து வஞ்சகமாகப் பின்னால் சென்று யவனர்கள் கொன்று குவித்ததைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாப் பகுதிகளிலும் யவனர்களுக்குத் தீவிர எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் வீதிகளுக்கு வந்து புரட்சி செய்யும் நாள் தொலைவில் இல்லை என்றும், அந்தச் சமயத்தில் யவன வீரர்களுக்குப் பதிலாக அப்பகுதி வீரர்களையே அனுப்பி அவர்களைப் பலிக்கடாக்களாக்க யவனர்கள் திட்டமிட்டு வருவதாகவும் எச்சரிக்கிறார்கள்.தாய் நாடும், உங்கள் மக்களும் உங்களுக்கு முக்கியமா, இல்லை, யவனர் ஆதிக்கம், யவன வீரர்களின் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியமாஎன்று கேட்கிறார்கள். இப்படித் தொடர்ந்து பல இடங்களில் நடந்து வருகிறது. இதைக் கேட்டு நம் வீரர்கள் மனம் குழம்பி வருவது நன்றாகவே தெரிகிறது” 

புருஷோத்தமனும், இந்திரதத்தும் உண்மையாகவே திகைத்தார்கள். ஆனால் அவர்கள் முகங்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பிலிப் அதை நடிப்பென்று நினைத்தான். புருஷோத்தமன் அதிர்ச்சியுடன் சொன்னார். “இது நான் இதுநாள் வரை கேள்விப்படாத ஒரு செயலாக இருக்கிறதே. குடியரசு நாடுகளிலாவது குடிமக்களின் தன்னிச்சையான போக்கைக் கவனித்திருக்கிறேன். என் மக்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்லவே.”

 

பிலிப் சொன்னான். “தட்சசீலத்தின் கல்விக்கூட மாணவர்களும், அவர்களுடைய ஆசிரியரான ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரும் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வந்திருக்கிறது.”

 

புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். இந்திரதத் பிலிப்பும் அவரைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்தார். அவர் சொன்னார். “குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கேகயத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் தண்டனைக்குரியவர்கள் தான்.”

 

புருஷோத்தமன் கேட்டார். “ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரோ அவருடைய மாணவர்களோ கேகயத்தில் இப்போது நடமாடிக் கொண்டிருக்கிறார்களா?”

 

ஒற்றன் சொன்னான். “இல்லை. இப்போது அவர்கள் தட்சசீலத்தில் தான் இருக்கிறார்கள்”

 

புருஷோத்தமன் நிம்மதி அடைந்தவராகச் சொன்னார். “அப்படியானால் அவர்களைச் சிறைப்படுத்தி தண்டிக்க ஆம்பி குமாரன் தான் ஆவன செய்ய வேண்டும்”   

 

பிலிப் உடனே கேட்டான். “அப்படியானால் உங்கள் குடிமக்கள் இங்கே வீரர்களிடம் சென்று செய்யும் விஷமப் பிரசாரத்திற்குத் தண்டனை தேவை இல்லையா?”

 

இந்திரதத் சொன்னார். “குடிமக்கள் எத்தனை பேரைச் சிறைப்படுத்த முடியும். அத்தனை பெரிய சிறைச்சாலை இங்கே எங்கே இருக்கிறது? மேலும் அவர்கள் போராட்டம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது சரி…. ஆனால் தங்கள் கருத்துகளைச் சொல்வதற்காக மக்களைத் தண்டிப்பது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பது எனது தாழ்மையான கருத்து.”

 

பிலிப் சொன்னான். “இதையே அல்லவா உங்கள் நண்பர் விஷ்ணுகுப்தரும் அவரது மாணவர்களும் தங்களுக்கும் சொல்வார்கள்? கருத்துகளைத் தானே சொல்கிறோம்., போராட்டமா நடத்தினோம் என்று கேட்பார்கள் அல்லவா? அவர்களையும் அப்படியே விட்டு விடலாமா?”

 

இந்திரதத் இதற்கென்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த சமயத்தில் பிலிப்பின் காவலன் அங்கு வந்து பிலிப்பின் காதுகளில் தாழ்ந்த குரலில் என்னவோ சொன்னான். பிலிப் புருஷோத்தமன் பக்கம் திரும்பிச் சொன்னான். “புருஷோத்தமரே. போரில் தோல்வியுற்ற உங்களிடம் எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டு அரசனைப் போலவே நடத்தியவர் அலெக்ஸாண்டர்.  அவர் உங்களை நம்பி நிர்வாகப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். நாளை இங்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அவர் உங்களைத் தான் கேட்பார். இப்போதும் அவர் திரும்பி வர முடியாத தூரத்தில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர் திரும்பி வரலாம். அதை நினைவில் வைத்து எச்சரிக்கையுடன் ஆட்சி நடத்துங்கள்.   நான் நாளையே இங்கிருந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்வதற்கு முன் உங்களை எச்சரிக்கும் கடமையை நான் செய்து விட்டேன். நீங்கள் மூவரும் செல்லலாம்….”

 

யார் மூவர்  என்று யோசித்த புருஷோத்தமனுக்கு தங்களோடு ஒற்றனையும் சேர்த்துச் சொன்னது மெள்ளப் புரிந்து அவமானம் கூடியது. அவர் எழுந்து கைகூப்பி விட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பினார். இந்திரதத்தும் அவர் பின்னால் செல்ல ஒற்றனும் கிளம்பினான்.

அரண்மனைக்குத் திரும்பியவுடனே புருஷோத்தமன் இந்திரதத்திடம் பொரிந்து தள்ளினார். “பார்த்தாயா இந்திரதத், பிலிப் எப்படி நம்மை நடத்துகிறானென்று. இன்றைய அவனுடைய கோபத்திற்குக் காரணம் உன் நண்பர் விஷ்ணுகுப்தர். அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு மற்ற வேலைகளை எல்லாம் ஏன் செய்கிறார்?”  

 

இந்திரதத் பதில் எதுவும் சொல்லவில்லை. புருஷோத்தமனைப் போலல்லாமல் அவர் மனதிற்குள் தன் நண்பனை மெச்சினார். தனிமனிதனாக ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்ன செய்து விட முடியும் என்று பலமுறை அவர் தனக்குள் கேட்டிருக்கிறார். தனிமனிதர் சாதாரண மனிதர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது இப்போது புரிகிறது. பிலிப் போன்றவனே அவரால் அமைதியிழந்து தவிக்கிறான் என்பதை நேரிலேயே பார்க்க முடிந்தது. கேகய அமைச்சராகவும், புருஷோத்தமனுக்குப் பதில் சொல்ல வேண்டியவராகவும் அவர் சிறிது தர்மசங்கடப்பட வேண்டியிருந்த போதும் நண்பர் யவனர்கள் பார்த்து பயப்படும் நிலைக்கு உயர்ந்தது திருப்தியைத் தந்தது. ஆனால் யவனர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள், கடுமையாக எதிர்வினைகள் புரிவார்கள் என்பது நிச்சயம். அப்போது விஷ்ணுகுப்தர் என்ன செய்வார், இந்தக் குடிமக்களை எவ்வளவு தூரம் அவர் நம்ப முடியும். படையோடு வந்தால் குடிமக்கள் எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கையில் நண்பனுக்காகப் பயப்படவும் தோன்றியது.

 

”ஏன் பேச்சிழந்து நிற்கிறாய் இந்திரதத்? கேகயத்தில் சாதாரண குடிமக்களையும் தூண்டி விட்டு அவர் பிரச்சினை ஏற்படுத்துவது சரி தான் என்று நினைக்கிறாயா?” புருஷோத்தமனின் குரல் இந்திரதத்தின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.

 

இந்திரதத் சொன்னார். “குடிமக்கள் நம் வீரர்களிடம் போய்ப் பேசுவது இயல்பானதல்ல என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் அரசே. ஆனால் அவர்கள் சிந்திக்கச் சொன்ன விஷயங்களில் இருக்கும் உண்மை தான் பிலிப்பின் கோபத்தை அதிகப்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த உண்மையை நம் வீரர்களும்  யோசிக்க ஆரம்பித்து விடுவார்களோ என்று தான் அவன் பயப்படுகிறான் என்று தோன்றுகிறது”

 

புருஷோத்தமன் கடுங்கோபத்துடன் சொன்னார். “போதும் இந்திரதத். நீ இதற்கு மேல் எதுவும் சொல்லாதே.  விஷ்ணுகுப்தரின் நண்பனாக யோசிக்காமல் கேகயத்தின் அமைச்சராக யோசி, பேசு. அது போதும்.”

 

பிலிப் முன் அடுத்த ஒற்றன் வந்து நின்றான். “மாளவத்திலும் ஷூத்ரகத்திலும் பிரச்சினைகள் தீவிரமாக ஆரம்பித்திருக்கின்றன பிரபு. அங்கு மக்கள் எந்த நேரத்திலும் புரட்சி செய்யலாம் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளுக்காகவோ, அல்லது யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருப்பது போலத் தெரிகிறது. ஆகவே எந்த நேரத்திலும் அங்கே புரட்சி வெடிக்கலாம். அங்கிருக்கும் படைபலம் அந்தப் புரட்சியைச் சந்திக்கப் போதுமானதாக இல்லை “

 

பிலிப் திகைத்தான். தட்சசீலத்திற்குத் திரும்பப் போகலாம் என்று சற்று முன் வரை நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு மாளவத்தில் அவன் இருக்க வேண்டியது மிக அவசியம் என்பது புரிந்தது.  பல இடங்களில் பிரச்சினைகள் முளைக்க ஆரம்பித்திருக்கிற இந்த வேளையில் அவன் சிறிது அசந்தாலும் அதன் இழப்புகள் அதிகமாகவே இருக்கும் என்பதையும் உணர்ந்தான். மிகவும் யோசித்து தெளிவான முடிவுகளை உடனடியாக அவன் எடுக்கா விட்டால் ஆபத்து என்று உள்ளுணர்வும் எச்சரிக்க வேகமாக யோசித்து பிலிப் ஒரு முடிவுக்கு வந்தான்.

 

“க்ளைக்டஸை உடனடியாக வரச் சொல்” என்று காவலனுக்கு உத்தரவிட்ட பிலிப் க்ளைக்டஸ் வந்தவுடன் உத்தரவு பிறப்பித்தான். “நீ உடனடியாக தட்சசீலம் திரும்பிப் போக வேண்டும் க்ளைக்டஸ். ஆம்பி குமாரனிடம் உடனடியாக ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரையும், அவரோடு சதிச்செயலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களையும் சிறைப்படுத்தச் சொல். இது சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் பெயரால் நான் இடும் ஆணை என்று தெரியப்படுத்து.”

 

க்ளைக்டஸ் “அப்படியே தெரிவிக்கிறேன் சத்ரப்” என்று சொல்லி விட்டு வேகமாகக் கிளம்பினான்.  

 

பிலிப்பும் மாளவத்திற்கு உடனடியாகக் கிளம்பினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்


Monday, August 21, 2023

யோகி 10

வாசுதேவன் முகத்தில் அதிர்ச்சியைத் தொடர்ந்து குழப்பமும், தெளிவும், வருத்தமும் வரிசையாகத் தெரிந்தன. வருத்தத்துடனே மெல்ல தண்ணீர் பாட்டிலை மேசையில் வைத்தபடிசாரி கிருஷ்ணாஎன்று தாழ்ந்த குரலில் அவர் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு இன்று காலை வீட்டை விட்டுக் கிளம்பிய போது உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்திருக்கவில்லை. சைத்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்குக் கிடைத்திருந்தாலாவது  ஏதாவது முயற்சி செய்யும் வாய்ப்பிருந்தது. சாம்பல் கிடைத்து அதையும் கடலில் கரைத்து விட்ட பின்பு எதையும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. மரணச் செய்தி கிடைத்தவுடனேயே சந்தேகம் இருக்கிறது என்று ஆர்ப்பாட்டம் செய்து பிரேத பரிசோதனைக்கு முயற்சி செய்திருக்கலாமோ என்று நேற்றிரவு தான் அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. மகளின் மரணம், அதனால் ஏற்பட்ட தாங்க முடியாத துக்கம், அதிர்ச்சி எல்லாமாகச் சேர்ந்து அந்தக் கணத்தில் எதையும் யோசிக்கும் நிலைமையில் அவரை வைத்திருக்கவில்லை. இப்போது யோசித்துப் பயனில்லை என்று புரிந்தாலும் எதற்கும் விசாரித்துப் பார்ப்போம் என்று தான் காலையில் அவர் கிளம்பி வந்திருக்கிறார். இங்கு நண்பனைப் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை துளிர் விட்டது.

 

வாசுதேவன் சொன்னார். “இறந்த சன்னியாசி உன் மகள்னு எனக்கு இப்ப தான் தெரியும். நீ கேஸ் போட்ட விஷயம் தொடர்ந்து டிவிலயும், பத்திரிக்கைகள்லயும் வந்துட்டு இருந்ததால அப்ப தெரிஞ்சிருந்துது. அப்பறமா நானும் மறந்துட்டேன். இங்கே அட்மிட் ஆனபிறகும் என்னோட பேஷண்ட்டா இருந்திருந்தா பெயரைப் பார்த்து நான் கண்டுபிடிச்சிருப்பேன்....” அதற்கு மேல் சொல்ல விரும்பாதவர் போல் வாசுதேவன் நிறுத்திக் கொண்டார். 

 

கிருஷ்ணமூர்த்தி நண்பனிடம் ஆழ்ந்த துக்கத்துடன் சொன்னார்என் மகள் எப்படிச் செத்தான்னு நான் தெரிஞ்சுக்க வந்திருக்கேன் வாசு. உன்னைப் பார்க்கற வரைக்கும், உண்மையைத் தெரிஞ்சுக்க முடியும்னு எனக்குப் பெருசா நம்பிக்கை இருக்கலை. உன்னைப் பார்த்த பிறகு நம்பிக்கை வந்துருக்கு...”

 

வாசுதேவனுக்கு நண்பனின் முகத்தில் தெரிந்த துக்கத்தையும், வேதனையையும் பார்க்க முடியவில்லை. அவர் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார். ”கிருஷ்ணா. நீ என்ன செஞ்சாலும் உன் மகள் உயிரோட திரும்பி வரப் போகிறதில்லை. உண்மையைத் தெரிஞ்சுகிட்டா கூட உன்னால எதையும் நிரூபிக்க முடியாது. உன்னால அவங்கள ஒன்னும் செய்யவும் முடியாது. அவங்க நீ நெருங்க முடியாத உயரத்துல இருக்காங்க கிருஷ்ணா. பணம், செல்வாக்கு, ஆள்பலம் எல்லாமே அவங்க கிட்ட எக்கச்சக்கமா இருக்கு. யாரையும் பயமுறுத்தியோ, விலைக்கு வாங்கியோ அடிபணிய வைக்க அவங்களால முடியும்.... இந்த வீண் முயற்சியை விட்டுடு கிருஷ்ணா

 

கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல் சோகமாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அவசரமாக உள்ளே நுழைந்த நர்ஸ் வாசுதேவனிடம் சொன்னாள். “... ரூம் 125 பேஷண்ட் பழையபடி மூச்சு விடறதுக்கு சிரமப்படறார் டாக்டர்

 

வாசுதேவன் மெல்ல எழுந்தார். “சாரி கிருஷ்ணா. இன்னொரு நாள் சாவகாசமாய் சந்திப்போம்.... நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.... டேக் கேர்

 

கிருஷ்ணமூர்த்தி விரக்தியுடன் வீடு வந்து சேர்ந்தார். வாசுதேவனை மருத்துவமனையில் சந்தித்ததையும் அவர் சொன்னதையும் தந்தையிடம் துக்கம் பொங்கச் சொன்னார். கடைசியில் சேதுமாதவனிடம் கேட்டார். “அப்பா, நிஜமாவே கடவுள்னு ஒருத்தர் இருக்கிறாராப்பா

 

சேதுமாதவன் சிறிதும் யோசிக்காமல் சொன்னார். “இருக்கிறார் கிருஷ்ணா

 

பின்ன ஏம்ப்பா இப்படியெல்லாம் நடக்குது? இதையெல்லாம் அவர் எப்படிப்பா அனுமதிக்கிறார்? நாம யாருக்கும் எந்த துரோகமும் செஞ்சதில்லையேப்பா...”

 

சேதுமாதவன் மகனிடம் கனிவாகச் சொன்னார். “இந்தப் பிறவில நாம தப்பாய் எதுவும் செய்யாம இருக்கலாம். போன பிறவிகளோட கணக்கு யாருக்கு கிருஷ்ணா தெரியும்? என்னென்ன கர்மங்களை நாம சம்பாதிச்சு வெச்சிருக்கோமோ? சைத்ராவைக் கொன்னவங்களும் கண்டிப்பா அதன் பலனை ஒரு நாள் அனுபவிப்பாங்க. தெய்வம் நின்று கொல்லும்...”

 

ஆனாலும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் அமைதியடைய மறுத்தது. “இப்படி எல்லாம் சொல்லி நம்மளை நாம தேத்திக்க வேண்டியிருக்கேயொழிய, நிஜம்னு எனக்கு தோணலைப்பா. கர்மா தியரி தான் சரின்னா கடவுளோட பங்கு என்னப்பா? அவரு ஏன் இதையெல்லாம் அனுமதிக்கணும்? நீங்க படிச்சுகிட்டிருக்கிற தத்துவ புஸ்தகங்கள் எல்லாம் என்ன சொல்லுது?”

 

எல்லாமே நாடகம் அல்லது கனவுன்னு சொல்லுது. கனவுல நீ பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறேன்னு வெச்சுக்கோ. கனவுல வேணும்னாகடவுளே, எனக்கு ஏன் நீ கஷ்டங்களுக்கு மேல கஷ்டங்கள் தர்றே? இது நியாயமான்னு நீ கேட்கலாம். ஆனா முழிச்சதுக்கப்பறம் நீ கேட்க மாட்டாய் இல்லையா? ஏன்னா எதுவுமே நிஜத்துல உன்னை பாதிக்கலை. அதே மாதிரி தான் இதுவும். கனவுல துக்கப்படற மாதிரி தான் நாம துக்கப்படறோம். உண்மைல நம்ம ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்புமில்லை...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு சேதுமாதவன் சொன்ன தத்துவங்கள் மனதைத் தேற்றவில்லை. இந்தக் கஷ்டங்கள் நிஜம். அவர் மகள் சைத்ரா கொல்லப்பட்டது நிஜம். கொன்றவர்கள் இன்று எந்தப் பாதிப்புமில்லாமல் இருக்கிறார்கள் என்பது நிஜம். அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது நிஜம். பாதிக்கப்படாத ஆத்மா அவருக்கு அறிமுகம் ஆகவில்லை.

 

இரண்டு நாட்கள் கழித்து செய்திகளில் செவென் ஸ்டார் மருத்துவமனையில் டாக்டர் வாசுதேவன் கொரோனா தொற்றால் மரணமடைந்த செய்தியும் வந்தது. கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் பேரதிர்ச்சி அடைந்தார்கள். சிறிது நேரம் பேச்சிழந்து அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

 

பின் அப்பா வாசுவையும் அவங்க கொன்னுட்டாங்கன்னு தான்ப்பா நான் நினைக்கிறேன்.” என்று கண்கலங்கிய கிருஷ்ணமூர்த்தியை எப்படித் தேற்றுவது என்று சேதுமாதவனுக்குப் புரியவில்லை.

 

ஆஸ்பத்திரில என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். அவன் என் நண்பன்னு தெரிஞ்சவுடனே அவனை உயிரோடு விடறது ஆபத்துன்னு அவனையும் கொன்னுட்டாங்கப்பா. பாவம் அவன். லேட்டாய் தான் கல்யாணம் பண்ணிகிட்டான். அவன் மகன் இன்னும் படிச்சே முடிச்சிருக்க மாட்டான். என் நண்பன்கிறதே வாசுவுக்கு எமனாயிடுச்சு…” கிருஷ்ணமூர்த்தி புலம்பினார்.

 

அன்றிலிருந்து கிருஷ்ணமூர்த்தி நடைப்பிணமானார். வாழ்க்கையில் இருந்த எல்லாப் பற்றுகளையும் அவர் இழக்க ஆரம்பித்தார். க்ளினிக்குக்கு அவர் செல்வதும் மெல்ல மெல்லக் குறைந்தது. கைபேசியில் நேரம் செலவழிப்பது கூட முற்றிலும் நின்று விட்டது. அது எங்கோ இருக்கும். அவர் எங்கோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பார். சேதுமாதவன் ஏதாவது பேசினால் கூட தந்தி வாசகம் போலத் தான் பதில் வரும். மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்லி, பழைய கிருஷ்ணமூர்த்தியாக மாற்றுவது என்று சேதுமாதவனுக்குப் புரியவில்லை.

 

ஒரு நாள் தொலைக்காட்சியில்அமெரிக்காவிலிருந்து விமானப் போக்குவரத்து  இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் முதலமைச்சர் அருணாச்சலம் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு வந்த பின்னரும் அவர் சில மாதங்களாவது பூரண ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது...” என்று செய்தி வாசிக்கப்பட்ட போது மட்டும் கிருஷ்ணமூர்த்தி முகத்தில் சிறிது ஒளி வந்தது.

 

முதலமைச்சர் அப்பவே இங்கே இருந்திருந்தா நாம ஏதாவது செஞ்சிருக்கலாம். இல்லையாப்பாஎன்று அவர் கேட்டார்.

 

ஆமா கிருஷ்ணா

 

அவர் அமெரிக்கால இருந்து வந்த பிறகு நீங்க கண்டிப்பாய் அவரைப் போய்ப் பார்க்கணும். நம்ம சைத்ராவைக் கொன்னவங்க கண்டிப்பா தண்டிக்கப்படணும். நீங்க போய் சொன்னா அவர் கண்டிப்பா செய்வார், எனக்காகவும், உங்க பேத்திக்காகவும் நீங்க அவரைப் போய்ப் பார்க்கணும். சரியா?”

 

சரி கிருஷ்ணா

 

அன்றிரவு கிருஷ்ணமூர்த்தி சாப்பிடவில்லை. சேதுமாதவன் வற்புறுத்திய போது அவர் சொன்னார். “சாப்பிடப் பிடிக்கலப்பா

 

நான் மட்டும் பிடிச்சா சாப்பிடறேன். யாரோடயும் நம்ம வாழ்க்கை முடிஞ்சுடறதில்லை கிருஷ்ணா. நம்ம வேலைகள் முடியற வரைக்கும் நாம இந்த பூமில இருந்தாகணும். அதுக்கு நாம சாப்பிட்டாகணும்…”

 

எனக்கென்னவோ சைத்ரா கூடவே என் வாழ்க்கையும் முடிஞ்ச மாதிரி தான் தோணுதுப்பா.”

 

அது தான் கிருஷ்ணமூர்த்தி தந்தையிடம் கடைசியாகப் பேசிய வார்த்தைகள். சேதுமாதவன் சொன்னதற்காக ஏதோ சிறிது சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற அவர் மகன் உறங்கிய அந்த உறக்கம் கடைசி உறக்கமாக இருந்தது. மறுநாள் காலை சேதுமாதவன் மகனை எழுப்பப் போன போது கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டு இறந்திருந்தார். அவர் உடல் அருகில்என் மகள் மரணத்திற்குப் பின் நான் வாழ விரும்பாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்என்று எழுதியிருந்த கடிதத்தின் மேல், காலி செய்யப்பட்டிருந்த தூக்க மாத்திரை பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. 


(தொடரும்)

என்.கணேசன்